”இவனை எழுதவைக்க பூமாதேவியை விடப் பொறுமை வேண்டும். சுகமுனிவரைவிட ஒரு
முகப்பட்ட சிந்தனையோடும், வீடே நம்முடையதில்லை என்ற பற்றற்ற மனதோடும்
இருக்க வேண்டும்.”
லக்ஷ்மி பாலகிருஷ்ணன் தன் முனைப்பு குறைபாடு கொண்ட குழந்தையை வளர்த்த தாயின் குரல்தான் மேலே
உள்ளது. அதென்ன தன் முனைப்பு குறைபாடு. தானே முயன்று அறிந்து செல்படும் திறன்
குறைந்தவர்கள் அவர்கள்தான். இவர்களுக்கு மற்றொரு பெயர் தான் ஆட்டிஸம்.
தன்முனைப்பு குறைபாடு கொண்ட ஒரு குழந்தையை வளர்ப்பதில் தனக்கு ஏற்பட்ட
அவமானங்கள், கோபங்கள், விரத்திகள், பணவிரயம், நிம்மதியின்மை இப்படி என்னற்ற
உணர்வுகளின் தொகுப்புதான் ”எழுதாப் பயணம்”. இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தில்
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலம் ” என்று
கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஓர் அன்னையின் வாழ்வில் ஆட்டிஸ உலகம்
என்றியிருந்தால் இது பொருத்தமாக இருக்கும்.
நான் பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாக தன்முனைப்பு குறைபாடு கொண்ட ஒரு
சில குழந்தைகளோடு பயணித்துள்ளேன். முதல் மாணவன் பாண்டியராஜன்,
இரண்டாவது சோனி, மூன்றாவது சிரிப்பழகி (பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளன)
நான்காவதாக ராஜன். பாண்டியராஜனை தவிற மூன்று பேரையும் எழுத, படிக்க
வைப்பதில் பெரும் முயற்சியில் சாத்தியமாயிற்று. ஆனால் அது அந்த அந்த காலத்தில்
நடைபெறவில்லை. நீண்ட காலம் எடுத்துக் கொண்டது.
ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில் எல்லாம் தெரிந்தும் பூவைமட்டுமே வரைந்து
வைத்த சோனி இன்றைக்கு எம்பிஏ முடித்துவிட்டு எல்ஐசியில் பணியாற்றி வருகிறார்.
நாங்கள் என்னசொன்னாலும் திரும்ப அதையே சொல்லும் சிரிப்பழகி இன்றைக்கு
பத்தாம் வகுப்பு படித்துவருகிறாள். ஆனால் தற்போது எங்களோடு பயணிக்கும் ராஜன்
இதுவரை நாங்கள் அவனை பெஞ்சில் 5நிமிடத்திற்கு மேல் உட்காரவைக்க
முடியவில்லை. ஆனால் படிப்பில். எழுத்தில் கெட்டியக்காரன். லட்சுமி சொல்லுவது
போல ஐந்து எழுத்தக்கு ஒரு பக்கமாக இருந்து வார்த்தைக்கு வார்த்தை இடம்விட்டு
எழுதும் அளவிற்கு வளரந்துவிட்டார்.
தன்முனைப்பு குறைபாடு உள்ளவர்கள் ஒவ்வொரு நாள் விடியலிலும்
புதியவர்களாக இருப்பார்கள். இதை உணர்ந்தவர்களே அவர்களோடு பயணிக்க முடியும்.
இதை உணர லட்சுமி பட்ட பாடுகள்தான் இந்த புத்தகம் முழுவதும்.
ஆனாலும் இது ஒரு புதிய தம்பதியருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமையும்.
காரணம் தன் குழந்தை பிறந்தவுடன் அதன் செயல்பாடுகளை எவ்வாறு கவனிக்க
வேண்டும் என்பதை வழிகாட்டும் நூலாகவும் இருக்கிறது.
ஒரு வேளை நம் குழந்தை தன்முனைப்பு குறைபாடு கொண்ட குழந்தையாக
இருப்பதை அறிந்து கொண்டபின்னர் என்ன செய்ய வேண்டும்? இந்த நூல் உங்கள்
கைகளை பிடித்துக் கொண்டு நல்ல வழியில் இட்டுச் செல்லும். அது மட்டுமல்ல உங்கள்
குழந்தையை வீட்டில், பள்ளியில், பொது இடத்தில், பயணத்தில் எவ்வாறு நடத்தை
மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது. எல்லாம் சும்மா
இல்லைங்க. எல்லாம் தன்னுடைய அனுபவத்திலிருந்து வழிகாட்டுகராங்க. அதுதான்
இங்கே முக்கியமானது.
இது முழுக்க முழுக்க ஒரு அம்மாவின் அனுபவ பதிவுதான். இங்கே மற்றொரு பதிவு
பதிவு செய்யவில்லை. அது அப்பாவின் அனுபவம். லட்சுமி இத்தோடு சேர்ந்து பாலாவின்
உணர்வையும் சில சில இடங்களில் சொல்லாமல் இல்லை. ஆனால் அது போதாது.
இங்கே அப்பாக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இருந்திருந்தால் இந் நூல்
ஒரு குடும்பத்திற்கு வழிகாட்டியிருக்கும் என்பது எனது கருத்து.
ஒவ்வொரு முறையும் பள்ளிக்கு சென்று வருவது என்பது பெரும்
வேதனையாகதான் தாய் உணர்கிறார். பல பள்ளிகளுக்கு மாற்றுகிறார். தன்முறைப்பு
குறைபாடு உள்ள குழந்தைகளை அறிந்து கொள்ள முடியாத ஆசிரியர்களால் அவர்களை
கட்டாயம் கவனித்துக் கொள்ள முடியாது. இப்போது மேல சொல்லப்பட்ட வாக்கியத்தை
வாசித்துப் பாருங்கள். அவ்வாறு ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே இவர்களை புரிந்து
கொண்டு வழிநடத்த முடியும். இதெற்கென்று பள்ளிகளில் அதற்கான பயிற்சி உண்டு.
அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் கட்டாயம், முக்கியமாக படிக்க வேண்டிய, வாசிக்க
வேண்டிய, விவாதிக்க வேண்டிய புத்தகம் இது. இந்த நூலை ஒவ்வொரு
அரசுப்பள்ளிகளில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கட்டயாம் வாசிக்க அரசுக்கு யாரேனும்
பரி்ந்துரை செய்யலாம். நானும் பரிந்துரைக்கிறேன்.
ஏனென்றால் லட்சுமி, பாலா போன்ற நன்கு படித்தவர்களின் குழந்தைகளை
பொதுப் பள்ளியில் சேர்பதற்கும் பள்ளியில் படிக்கவைப்பதற்கும் படாத பாடு என்றால்,
கிராமபுறங்களில், நகரின் ஒதுக்குப்புறத்தில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய
நிலையில், விழிம்பு நிலை மக்களின் குழந்தைகளின் நிலையை சற்று யோசித்துப்
பாருங்கள். அன்றாட வேலைக்குச் சென்றால்தான் உணவு என்ற நிலையில் இருக்கும்
பெற்றோரின் நிலையிலிருந்து பார்த்தால் ஏன் ஆசிரியர்கள் படிக்க வேண்டும் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆக மொத்தமாக இந்த சமூகத்தில் கல்வியில் பணி செய்கின்ற பெற்றோர்
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய
மிக முக்கியமான புத்தகம் ”எழுதாப் பயணம்”.
நூலின் தகவல்கள்:
நூல் : எழுதாப் பயணம் (ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிஸம் உலகம்)
ஆசிரியர் : லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
பதிப்பு : கனி புக்ஸ், சென்னை
பக்கங்கள்: 111
விலை : ரூ. 100
நூலைப் பெற : 9176613437
நூலறிமுகம் எழுதியவர்:
மொ. பாண்டியராஜன்
மதுரை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

