ஆட்டிசக் குழந்தையை வளர்க்கும் ஒரு தாயின் அனுபவப் பதிவே இந்த புத்தகம். இதில் சிறப்பு என்னவெனில் அவர் ஒரு சிறப்பு ஆசிரியர்.(Special Teacher)
ஒரு ஆட்டிசக் குழந்தை தன் அன்றாட வாழ்வியல் வேலைகளை செய்வதில் தொடங்கி பேச, பழக, எழுத, படிக்க என எல்லாவற்றையும் பழக்கும் முயற்சியில் ஒரு தாய் எதிர் கொண்ட இடர்கள், அனுபவங்கள், சவால்கள் மற்றும் துன்பங்கள் எல்லாவற்றையும் தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.
எல்லா பிள்ளைகளையும் போல தன் புள்ளியையும் பொதுப் பள்ளியில் சேர்க்க முயற்சித்தது. நீச்சல்,இசை என பல துறைகளில் ஈடுபடுத்தி சிறப்பு பயிற்சிகள் கொடுத்து அவனை தேற்ற நினைத்தது என எல்லாவற்றையும் முயற்சித்து தோற்று பின் மீண்டும் முயற்சித்து தோற்று என தன் மகனுக்காய் அவர் எடுத்த முயற்சிகளை எல்லாம் மிகச்சிறந்த அனுபவமாய் பதிவு செய்திருக்கிறார்.
நூல் துவங்கும் முன்பே இது என்னை போன்ற பெற்றோர் எவருக்கேனும் பயன்படும் என்பதாலேயே எழுதுகிறேன் என்று குறிப்பிடுகிறார். மேலும் இதை தன் மகன் பெயரில் (கனிவமுதன்)பதிப்பகப் பெயரிட்டு (கனி புக்ஸ்) வெளியிட்டுள்ளார்.
பெற்றோராகவோ ஆசிரியராகவோ இருக்கும் நாம் எல்லோரும் குழந்தைகளை கண்டு, பழகி அவர்களிடம் கற்று-கற்பித்து அவர்களோடு இருந்து அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு எழும் குறைபாடுகளை அறிந்து கையால இந்த புத்தகம் எல்லா வகையிலும் உதவுமா என்பது ஐயமே எனினும் அவரின் அனுபவமும், அணுகுமுறையும் நமக்கு நல்ல படிப்பினையாக இருந்து ஓரளவுக்கேனும் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.
——
புத்தகம்: எழுதாப் பயணம்.
ஆசிரியர்: லஷ்மி பாலகிருஷ்ணன்.
வெளியீடு: கனி புக்ஸ்
கார்த்தி, புதுச்சேரி