அ.சீனிவாசன் எழுதிய “எழுத்தறிவித்தவள்” ஆசிரியர் தின கதை | Ezhutharivithaval Tamil Teachers Day Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “எழுத்தறிவித்தவள்” ஆசிரியர் தின கதை

“எழுத்தறிவித்தவள்” ஆசிரியர் தின கதை

கீற்றுக் கொட்டகையின் சந்து வழியே எட்டிப் பார்க்கும் காலைச் சூரியனின் மெல்லிய ஒளிக்கீற்று, மணல் தரையில் வட்டமடித்துக் கிடக்கும். ஐம்பது பைசா சிலேட்டும், விரல் இடுக்கில் நொறுங்கிப் போகும் பலப்பமும், கரும்பலகையின் ஓரங்களில் உதிர்ந்து விழும் சாக்பீஸ் துகள்களும்தான் என் முதல் உலகம். இன்றும் ‘அ’ என்ற முதலெழுத்தை உற்று நோக்கும்போதெல்லாம், அந்த எழுத்தின் வளைவுகளுக்குள்ளிருந்து மெல்லிய புன்னகையோடு உங்கள் முகம்தான் மெல்ல எட்டிப் பார்க்கிறது.

​பசித்து அழுதபோது வாய் பிடித்துப் பாலூட்டி வளர்த்தாள் அன்னை. தள்ளாடி விழுந்தபோதெல்லாம் தன் முரட்டுத் தோள்களைப் பிடித்து நடக்கப் பழக்கினார் தந்தை. ஆனால், உலகத்தை அடையாளம் காண என் பிஞ்சு விரல் பிடித்து, ‘அ’னா, ‘ஆ’வன்னா என மொழி காட்டியவர் நீங்கள். என் மழலை வாயிலிருந்து வெளிவந்த வெறும் அர்த்தமற்ற ஓசைகளுக்கெல்லாம், உயிரும் பொருளும் கொடுத்து மனிதனாக்கிய சிற்பி நீங்கள்.

​உங்கள் உயரம் இப்போதும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. உங்கள் நிறம், சேலையின் முந்தானையை இடுப்பில் செருகிக்கொண்டு அன்போடு அதட்டிய அந்தப் பார்வை… எல்லாமே என் கண்முன்னே நிழலாடுகின்றன.

ஆனால், நெஞ்சைப் பிசைந்து யோசித்து யோசித்துப் பார்க்கிறேன், உங்கள் பெயர் மட்டும் ஏனோ நினைவுக்கு வரவே மாட்டேன் என்கிறது. என் பெயரை முதன்முதலில் அழகாக எழுதக் கற்றுக் கொடுத்த என் முதல் தெய்வத்தின் பெயர் என் நினைவில் இல்லாமல் போனது எவ்வளவு பெரிய விந்தை!

​ஆனால், பெயரில் என்ன இருக்கிறது? பல நூறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் முழுமுதற் கடவுள் ஒருவர்தானே. நீங்களும் எனக்கு அப்படித்தான்.

​காலத்தின் சுழற்சியில் பள்ளி முடிந்து, கல்லூரி கடந்து, கால்நடை மருத்துவராகிவிட்டேன். அரசாங்கப் பணி, ஊர் ஊராகச் சுற்றும் அவசரம் என ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் நடுவே, உங்கள் இருப்பையே நான் வசதியாக மறந்து போயிருந்தேன் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

​அன்று ஒரு கிராமத்து வீட்டின் கொல்லைப்புறத்தில் நின்றிருந்த ஒரு சினை மாட்டிற்கு மருத்துவம் பார்க்க அழைக்கப்பட்டிருந்தேன்.
​ஸ்டெதாஸ்கோப்பும் மருந்துப் பெட்டியுமாய் மாட்டின் அருகே நின்றபோது, வீட்டு வாசற்படியிலிருந்து தளர்ந்த நடையுடன் ஒருவர் வெளியே வந்தார். சுருக்கம் விழுந்த முகம், நரைத்த கூந்தல், தளர்ந்துபோன தோற்றத்திலும் கம்பீரம் குன்றாத நடை.
​என் நெஞ்சு ஒரு கணம் நின்று துடித்தது. அது நீங்கள்!

​என் நாடி நரம்புகளெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு சிலிர்ப்பு. மருத்துவர் என்ற பெருமிதமும் அதிகாரமும் அந்த ஒரு நொடியில் சுக்குநூறாக உடைந்து போயின.

“டீச்சர், நான்தான் உங்கள் மாணவன்… இன்று பெரிய டாக்டராக உங்கள் முன்னே நிற்கிறேன்!” என்று மார்தட்டிச் சொல்லிக் கொள்ளும் அகந்தை எனக்குள் எழவே இல்லை.

உங்களை விட ஏதோ ஒரு தகுதியால் உயர்ந்துவிட்டதாகக் காட்டிக்கொண்டு, விலகி ஒதுங்கி நிற்க என் மனசாட்சி இடமளிக்கவில்லை.

​அமைதியாக அந்த மாட்டுக்கு மருத்துவம் செய்து முடித்தேன். மருந்துச் சீட்டை எழுதிக் கொடுக்கும்போது என் கைகள் லேசாக நடுங்கின. நீங்கள் வழக்கம்போல ஒரு பெரிய மனுஷியாக, என்னை ஒரு அரசு மருத்துவராக மதித்து நன்றியோடு பார்த்தீர்கள்.

ஆனால், எனக்குள்ளோ காலம் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
​அந்தக் கணத்திலும், இப்போதும் சரி… என் அந்தஸ்தோ, பட்டங்களோ, நரை விழுந்த என் மீசையோ உங்கள் முன்னே எடுபடாது. உங்களை நினைக்கும் ஒவ்வொரு கணமும் நான் அந்தப் பழைய கீற்றுக் கொட்டகையின் மணல் தரையில் உட்கார்ந்திருக்கும் அதே ஒண்ணாங்கிளாஸ் மாணவன்தான்.

நீங்கள் என்றும் என் அதே ஒண்ணாங்கிளாஸ் டீச்சர்!

​முழுமுதற் கடவுளான விநாயகனை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கியதற்குச் சமம் என்பார்கள்.

அதுபோல, என் வாழ்க்கையின் அஸ்திவாரத்தை அமைத்த என் முதல் ஆசிரியை ஆகிய உங்களுக்குச் செலுத்தும் இந்த முதல் வணக்கமும் வாழ்த்தும், எனக்குப் பாடம் கற்பித்த, என்னோடு பயணிக்கும் அனைத்து ஆசிரியர் உள்ளங்களுக்கும் போய்ச் சேரட்டும்.

​எங்கிருந்தாலும் வாழ்க உங்கள் பாதம்!

முதல்முறையாக,
என் முதல் ஆசிரியரான உங்களுக்கு
என் நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் டீச்சர்!

எழுதியவர் : 

✍🏻 – அ.சீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *