எழுத்தே வாழ்க்கை – எஸ்.ராமகிருஷ்ணன் | நூல் மதிப்புரை கார்த்திகேயன் வெங்கட்ராமன்

எழுத்தே வாழ்க்கை – எஸ்.ராமகிருஷ்ணன் | நூல் மதிப்புரை கார்த்திகேயன் வெங்கட்ராமன்

இந்தக் கட்டுரைத் தொகுப்பின் பின்னட்டையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று எஸ்.ராமகிருஷ்ணன் எனும் இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும், எழுத்துலக அனுபவங்களையும் , சந்தித்த மனிதர்களையும் எதிர்கொண்ட சூழ்நிலைகளையும் குறுக்குவெட்டில் ஓர் ஆவணப்படம் போல இந்நூல் விவரிக்கிறது.
பெரும்பாலான கட்டுரைகள் அவரது தளத்தில் வெளியானவை. ஐந்தாறு கட்டுரைகள் தமிழ் இந்து நாளிதழில் வெளியானவை. முன்னரே தனித்தனியாக வாசித்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக சேர்த்து வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவம் தனியான அலாதியான ஒன்று.
அவரது வாசிப்பு முறைமை, நூல் தேர்வுகள், எழுதும் முறை எனப் பல்வேறு விஷயங்களை நிறைய கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்.  அத்துடன் சென்னை வாழ்க்கையின் ஆரம்ப தினங்கள் மற்றும் புத்தகங்களின் மீதான தீராப் பெருங்காதலும் அநேக கட்டுரைகளில் வெளிப்படுகிறது.  முதல் நாவலான ‘உப பாண்டவம்’ வெளியானதற்கு முன்பான தருணங்கள் குறித்த பதிவில் அத்தனை நெகிழ்வு!
இருந்தாலும் புத்தகத்தில் இருந்து மனதிற்கு நெருக்கமான ஒரு சில விஷயங்கள் மட்டும் இங்கே: எஸ்ராவின் திருமண சமயத்தில் ஊடகவியலாளராரும், இயக்குநர் பாலச்சந்தரின் மகனுமான மறைந்த பால கைலாசம் அவர்களின் “அன்புப் பரிசு”, கல்லூரி படிப்பு முடிந்து ஒரு தருணத்தில் வட இந்தியாவில் சுற்றித் திரியலாம் என எஸ்ரா நினைத்திருந்த ஒரு தருணத்தில், விகடன் அலுவலகத்தில் ‘ஹாய்’ மதன் மூலம் அவர்தம் எழுத்துலக வாழ்வில் நிகழ்ந்த இனிய திருப்பம், மறைந்த ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குநர் ஜீவாவுடனான எஸ்ராவின் நட்பு, அவரது கதையில் ஜீவா இயக்கத்தில் அமிதாப் நடிக்கவிருந்த படம், எழுத்தாளர் சுகாவின் முதல் படமான படித்துறையில் இளையராஜா இசையில் எஸ்ரா எழுதிய பாடல், கல்லூரிக் காலத்தில் மதுரை திருமங்கலம் முதல் தூத்துக்குடி வரையிலான அவரது கூட்ஸ்ரயில் பயணம் என அத்தனை இனிய தருணங்கள்.
முத்தாய்ப்பாக ஒரு விஷயம் மட்டும். தன்னை எழுத்தாளனாக உருவாக்கிய கவிஞர் தேவதச்சனுடனான உரையாடல்கள் குறித்து அத்தனை ஆத்மார்த்தமாக எழுத்தில் சிலாகிக்கிறார்.  அதேபோல் எழுத்தாளர் கோணங்கியுடனான அவரது நட்பும் உரிமையும் குறித்தும் இந்நூலில் எழுதியுள்ளார். இவை இரண்டு குறித்தும் வாசகசாலை அமைப்பின் முதலாம் ஆண்டுவிழாவிற்கு அவரை அழைக்க வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த எங்கள் நண்பர்களுடான உரையாடலில் அவர் குறிப்பிட்டுப் பேசிய அந்த இனிமையான தருணத்தை இப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன். 🙂
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *