“எல்ராய்’ஸ் 30 டேஸ் ஆஃப் மே”- நூல் திறனாய்வு
எனக்கு எப்போதும் தமிழ் இலக்கியத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு குறை ஆங்காங்கு இருப்பது போலவே தென்படும். அது என்னவென்றால் ஆங்கிலத்தில் நாம் படித்து வியப்புற்று, ஒவ்வொரு நாளும் நாமும் அதைப்போல் சாகசம் செய்ய மாட்டோமா என்று எண்ணி ஏக்கப்பட வைக்கும் கதைகள் ஏராளம் உண்டு.
உதாரணமாக எல்லோரும் குறிப்பிடுவது போல ஹாரிபாட்டரை எடுத்துக் கொள்ளலாம். அதைப் போல தமிழில் ஏதாவது ஒரு நாவல் வருமா? ஏதாவது ஒரு கதை நான் படித்து விடமாட்டேனா? என்று ஏங்கியதுண்டு. ஆனால் தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடாக அப்படிப்பட்ட அறிவியல் புனைவுகளிலும் தங்கள் ஜாதியை, மத, மொழிக் கலப்புகளை மேற்கொண்டு அதைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது கட்டமைக்கப்பட்ட கதையாக மாற்றி விடுவார்கள். இதில் சில புகழ்வாய்ந்த எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல.
தமிழ் இலக்கியத்தில் அதிகமாக பிரச்சனைகளே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன, கதைகளை விட. அது சுவாரசியத்தைக் கொல்கிறது.
ஆனால் அதெல்லாம் இல்லாமல் ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு நாவலாக நான் சமீபத்தில் படித்தது தான் எல்ராய்’ஸ் 30 டேஸ் ஆஃப் மே. முதலில் நான் இதை புகழ்பெற்ற ஏதோ மொழிபெயர்ப்பு நாவல் என்று நினைத்தேன்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் பரிந்துரையின் பெயரில் புத்தகம் வாங்குபவன் அல்ல நான். ஏனென்றால் மற்றவர்களின் பரிந்துரைகள் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்தமானவர்களாக மட்டும் தான் இருக்கும். எதார்த்தமாக இந்த கடைக்குள் சென்று நான் பார்த்தபோது, அங்கிருந்த ஒரு பெண்மணியால் இந்த புத்தகத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டேன். அந்த புத்தகத்தின் அட்டையே மிக சிறப்பாக இருக்க, என்னையறியாமல் எனக்குள் ஒரு ஆர்வம்! அதை வாங்க வைத்தது.
ஆனால் எழுத்தாளர் கோபித்துக் கொள்ளக் கூடாது. புத்தகத்தில் எழுத்துப் பிழைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அதற்காக என்று நான் குறை கூற மாட்டேன். காரணம் எஸ் ராமகிருஷ்ணனே எழுதியுள்ளார். எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பிழைகள் வரத்தான் செய்யும். ஆனால் பதிப்பாளர்கள் தான் புரூப் கரெக்ஷன் பார்க்க வேண்டும். ஆனால் ஃவாஹிமின் புத்தகத்திற்கு புரூப் கரெக்ஷன் பதிப்பாளர் பார்க்கவில்லை என நினைக்கிறேன். அது மட்டும் இன்றி பல புத்தகங்கள் கௌரா பதிப்பகத்தில் பிழை திருத்துதல் இல்லாமலே வருகின்றது. இதனால் அங்கே எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். இதைக் கொஞ்சம் கௌரா குழுமம் பரிசீலிக்க வேண்டும்.
எல்ராய்’ஸ் 30 டேஸ் ஆப் மேயின் கதையை நான் உடைக்க விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு அதிபுனைவு என்றே நான் குறிப்பிடுவேன். எழுத்தாளர் முன்னுரையிலேயே தன்னைப் பற்றி மிகச் சிறப்பாகக் கூறி இருந்தார். அது என்னை மிகவும் கவர்ந்தது.
அதைத் தாண்டி அவரது கற்பனைச் சக்திக்கு நான் தலை வணங்குகின்றேன்! கிட்டத்தட்ட ஒரு ஆங்கிலப் படம், ஹாலிவுட் படம் பார்த்தது போன்ற ஒரு உணர்வை எனக்குத் தந்தது எல்ராய்’ஸ் 30 டேஸ் ஆஃப் மே! பொதுவாக நான் வேலை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் தான் ஏதாவது புத்தகம் படிப்பது வழக்கம். வேள்பாரி கூட நான் முடிக்க இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டேன். இந்த புத்தகம் வேள்பாரியளவு பெரிது அல்ல. மிகவும் சொற்பமான பக்கங்கள் தான்.
ஆனால் சொற்பமான பக்கங்களில் ஒரு பெரிய அதிசயத்தையே அடக்கி விட்டார் எழுத்தாளர் ஃவாஹிம்!
அவர் கதாபாத்திரங்களை கட்டமைத்த விதம், கதையின் நகர்வு, எல்லோருக்கும் வாசிக்க ஏதுவாக இருந்த அவருடைய எழுத்து நடை, மேற்கத்திய தரத்தில் இருந்த அந்த அம்சங்கள்… கிட்டத்தட்ட பாப்புலர் ரைட்டிங் என்று தான் சொல்ல வேண்டும். அது அவருடைய முதல் புத்தகம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் ஒரு மெச்சூரான ரைட்டரின் எழுத்துக்கள் எந்த அளவிற்கு இருக்குமோ, அந்த அளவு இல்லை என்றாலும் படிக்கப் படிக்க சுவாரசியமாக இருந்தது நிஜம்!
வெறும் ஒரு மணி நேரத்தில் நான் அந்தப் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். இந்த புத்தகத்தை வாங்கிக் கொள்ளுமாறு சொன்ன அந்த பெயர் தெரியாத சகோதரிக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நான்காவது முறையாக நான் இப்போது அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கிறேன்.
இந்தக் கதையை வைத்து கண்டிப்பாக ஒரு சினிமாப் படம் எடுக்கலாம். அந்த அளவுக்கு எல்ராய்’ஸ் 30 டேஸ் ஆஃப் மே என்ற இந்த நாவலின் கதை வலிமையானது. மிக மிகப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு நாவலாக நான் இந்த புத்தகத்தை தமிழ் இலக்கியத்தில் பார்க்கின்றேன்.
எழுத்தாளரின் இந்த அசாதாரணமான முன்னெடுப்பு நிச்சயமாக ஒரு மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்று நம்புகின்றேன். ஏனென்றால் இனிவரும் காலத்தில் இளைஞர்கள் எல்லோரும் புத்தகம் படிக்க ஆரம்பிக்கப் போகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களின் தாகத்திற்கு தண்ணீர்ராக மட்டுமில்லாமல், அமிர்தமாக வந்து சேர்ந்தவர் தான் இந்த எழுத்தாளர் ஃவாஹிம் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
இந்த புத்தகத்தின் புனைவு அபரிவிதமானது. அசாத்தியமானது. இவருடைய இன்னும் சில நூல்கள் உள்ளன. அவற்றையும் தேடிப் படித்து விமர்சனம் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டேன். மொத்தத்தில் ஒரு அதிபுனைவு பேண்டஸி படத்தை ஒரு நாவலாக படிக்க வேண்டும் என்று எண்ணினால், விறுவிறுப்பாக ராக்கெட்டின் வேகம் போன்று நிற்காமல் உங்களை அழைத்துச் சென்று, நீங்களும் இந்த எல்ராயைப் போன்று இருந்து விட மாட்டீர்களா என்று ஏங்க வைத்து, லேசாக கண்ணீரையும் வரவைத்து, நரகத்திலும், அதிசய உலகங்களிலும் நேரில் நிற்க வைத்து, இதன் தொடர்ச்சியாக கதை உள்ளது என்று கிளிப் ஹாங்கரோடு முடித்து வைத்து…… இப்படி என் மனதை இந்த எல்ராய்’ ஸ் 30 டேஸ் ஆஃப் மே புத்தகம் ஆட்கொண்டுவிட்டது.
இவரும் மதுரைக்காரர் என்று கேள்விப்பட்டேன். பொதுவாக மதுரையிலிருந்து வரும் எல்லோரும் ஏதாவது ஒரு திறமையுடன் தான் வருகின்றார்கள் என்பதை நினைக்கும் போது, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு கொஞ்சம் பொறாமையாக உள்ளது.
புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்ட கதைகள் தான் பாமரனையும், படித்தவனையும் ஒருங்கிணைக்கும். அது இந்த புத்தகத்தில் உண்டு. மேற்கத்திய பிக்ஷன்கள் தான் சிறப்பு என்றால், இதோ உங்களுக்காக இங்கே ஒருவர் உருவாகிவிட்டார்.
ஃவாஹிம்! (எழுத்தாளரே ஏன் இந்த அக்கண்ணா என்று உங்களிடம் நேரில் கேட்க ஆசை)
தமிழில் புதுவிதமான முயற்சி செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர் ஃவாஹிமுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | எல்ராய்’ஸ் 30 டேஸ் ஆஃப் மே (2025) நாவல் |
| ஆசிரியர்: | ஃவாஹிம் |
| வெளியீடு: |
கௌரா பதிப்பகக் குழுமம் (எம் ஜெ பப்ளிகேஷன் ஹவுஸ்)
|
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻சரோஜ் ரமணன் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
