கார்ல் மார்க்ஸ் 1848இல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ஐரோப்பாவை கம்யூனிச பூதம் ஆட்டுகிறது என்று தொடங்குவார். அமெரிக்காவில் சரியாக நூறாண்டுகள் கடந்து 1950களில் கம்யூனிச பயம் கவ்வியது. அதை ஜோசப் மெக்கார்த்தி என்ற செனட்டர் ஊதிப் பெரிதாக்கினார். இந்த பயத்தினால் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பெரிதும் கண்காணிக்கப்பட்டனர். கருத்துரிமையின் மீதான தாக்குதல் கடுமையாக இருந்தது. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டது. புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. இதிலிருந்தே இத்தகு கெடுபிடி நடவடிக்கைகளைக் குறிப்பிடுவதற்கு ‘மெக்கார்த்தியிசம்’ என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.
அமெரிக்காவில் நிலவிய இந்நிலைமைகளை பகடி செய்து ரே பிராட்பரி (1920-2012) எழுதிய ’ஃப்ரென்ஹீட் 451’. நாவல் ’டிஸ்டோப்பியா’ என்றழைக்கப்படுகிறது. ஒரு படைப்பாளியின் கற்பனையில் உருவாகும் பொன்னுலகம் ’உடோப்பியா’ என்றும், அதேபோல் படைப்பாளியின் கற்பனையில் உருவாகும் மோசமான உலகம் ’டிஸ்டோப்பியா’ என்றும் அழைக்கப்படுகின்றன. 1953இல் எழுதப்பட்ட இந்நாவலில் புத்தகங்களைத் தேடித்தேடி எரித்திடும் ஒரு நகரை ரே பிராட்பரி சித்தரிக்கிறார். மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்நாவல் இருமுறை திரைப்படமாக (1966 மற்றும் 2018) எடுக்கப்பட்டு வெற்றி கண்டது.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல், வன்முறையுடன் எதிர்ப்பது; அல்லது தடைசெய்யக் கோருவது எனும் போக்கு இன்று இந்தியாவில் பரவலாகி வருகிறது. தமிழின் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலைத் தடைசெய்யக் கோரிய ஒரு சாதிச்சங்கத்தின் நெருக்கடிகளுக்குப் பயந்தும், பணிந்தும் அவர் மன்னிப்புக் கேட்டது எழுத்துச் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய களங்கமாகும். “ஆண்டாள்! தமிழை ஆண்டாள்’ என்று ஆண்டாளுக்குப் புகழாரம் சூட்டி எழுதிய கட்டுரைக்காக கவிஞர் வைரமுத்து நெருக்கடிக்கு உள்ளானார். மத வெறியர்களின் எதிர்ப்பின் பொருட்டு அமெரிக்க வரலாற்றாசிரியர் வெண்டி டொனிகர் எழுதிய ’இந்து மதம்: ஒரு மாற்று வரலாறு’ நூல் பிரதிகள் அனைத்தையும் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் கூழாக்கியது.
ரொஹிங்டன் மிஸ்டிரி எழுதிய ‘சச் எ லாங் ஜெர்னி’ என்ற நாவலை சிவசேனா எதிர்த்த காரணத்தால் பம்பாய் பல்கலைக்கழகம் பாடப் புத்தகப் பட்டியலில் இருந்து நீக்கியது. அறிஞர் ஏ.கே.ராமானுஜன் எழுதிய ‘முந்நூறு ராமன்கள்’ கட்டுரையை ஏபிவிபி விரும்பவில்லை என்பதற்காக டில்லி பல்கலைக்கழகம் பாடப் பகுதியிலிருந்து விலக்கியது. புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்கச் சொல்லி எழுந்த நெருக்கடிக்கு சென்னை பல்கலைக்கழகமும் பணிந்தது. மராட்டிய மன்னன் சிவாஜியின் உண்மை வரலாற்றை ‘யார் இந்த சிவாஜி’ என்ற தலைப்பில் எழுதியமைக்காக கோவிந்த் பன்சாரே தன் உயிரையே பலி கொடுத்தார். சல்மான் ருஷ்டியின் ’சாத்தானின் கவிதைகள்’ என்ற நூலும் மதவெறியர்களின் நிர்ப்பந்தங்களால் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
நிறைய திரைப்படங்களும் தங்களைக் ’கலாச்சாரக் காவலர்கள்’ என்று அழைத்துக் கொள்ளும் கும்பல்களால் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளன. தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ திரைப்படக் காட்சிகளை வாரணாசியில் படம்பிடிக்கவிடாமல் தடுத்தனர். ராஜபுத்திரப் பெண்களைத் தவறாகச் சித்தரித்துள்ளனர் என்று சொல்லி ‘ஜோதா அக்பர்’. மற்றும் ‘பத்மாவத்’ திரைப்படங்களைத் தடைசெய்யக் கோரி வழக்கு தொடுத்தனர். டான் பிரௌனின் ’டா வின்சி கோட்’ திரையிடலுக்கும் எதிர்ப்பிருந்தது. இச்சூழலில் ரே பிராட்பரி எழுதியுள்ள ’ஃபாரென்ஹீட் 451’ நாவல் இந்தியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இடம்பெறுகிறது.
ஃப்ரென் ஹீட் 451 என்பது காகிதத்தை எரிப்பதற்குத் தேவைப்படும் அதிகபட்ச வெப்பமாகும். எரிப்பான்கள் பயன்படுத்தி இந்த அளவு வெப்பத்தில் புத்தகங்களை எரிக்கும் ஒரு நகரத்தை நம்முன் நாவல் காட்சிப்படுத்துகிறது. நகரின் தீயணைப்புத்துறை இந்த தீ எரிப்புச் செயலைச் செய்வது நகைமுரண். அமெரிக்க ஆட்சியாளர்களின் சகிப்புத் தன்மையற்ற போக்கினையும், அமெரிக்க மக்களின் நுகர்வுக் கலாச்சாரத்தையும் நாவலாசிரியர் பகடி செய்கிறார். வானொலி, தொலைக்காட்சி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் மலிவான, தரமற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி மக்களின் உணர்வுகளை மழுங்கடிப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். குடிமக்களைச் சிந்திக்கும் திறன்களற்ற நுகர்வோர்களாக மாற்றும் முயற்சி என்கிறார்.
மக்களைச் சமூகப் பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவிடாமல் தடுக்கும் வெகுஜனக் கலாச்சாரம் ஆபத்தானது என்பது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல எல்லா நாடுகளுக்குமே பொருந்தும். அரசின் தொடர்ந்த கண்காணிப்பு கருத்துரிமைகளைப் பாதிக்கும். ஜனரஞ்சகமான மூன்றாம்தர கேளிக்கை நிகழ்ச்சிகளால் சமுதாயத்தை ஓரங்குலம்கூட உயர்த்திட முடியாது என்பதை ரே பிராட்பரி தெளிவாக்குகிறார். நாம் பார்க்க விரும்பும் படங்கள், கேட்க விரும்பும் பாடல்கள் இவற்றை நொடிப் பொழுதில் அடைந்திட இன்றைய தொழில்நுட்பம் சாத்தியப்படுத்துவதால், புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் அரிதாகி வருகிறது. தொலைக்காட்சி பெட்டி எனும் ’இடியட் பாக்ஸ்’ முன் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சரணடைந்து புத்தகங்கள் இல்லாத சமூகத்தை நோக்கி நகர்கிறோமோ என்ற பயம் கவ்வியுள்ளது
நாவலின் நாயகன் மோண்டாக் புத்தகங்கள் எரிக்கும் வேலையை ஆழ்ந்த ஈடுபாடுடன் செய்கிறான். பியாட்டி என்பவரின் தலைமையில் சலமாண்டர் என்று பெயரிடப்பட்ட ஆரஞ்சு வண்ண டிரக்கில் மோண்டாக்குடன் இன்னும் இரண்டு தீயணைப்பவர்களும் நகரை வலம் வருகிறார்கள். சலமாண்டர் எவ்வளவு உக்கிரமான வெப்பத்தையும் தாக்குப்பிடிக்கும் பல்லி போன்ற ஒரு கற்பனை ஜந்து. இவர்களின் வேலையை எளிதாக்கிட ’வேட்டை நாய்’ எனப்படும் ரோபோ உதவி செய்கிறது. இந்த ராட்சச இயந்திரம் புத்தகங்களை மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிடும். இந்தப் பறக்கும் படை நகரமெங்கும் சுற்றிவந்து புத்தகங்களை நெருப்பிலிட்ட வண்ணமே இருக்கிறது.
ஒரு நாள் மோண்டாக் இரவில் வேலை முடிந்து வீடு செல்லும் நேரத்தில் க்லாரிஸ் எனும் பதினேழு வயது துடிப்பான பெண்ணை தன் வீட்டருகில் சந்திக்கிறான். இவளின் சுதந்திரச் சிந்தனையும், வெளிப்படையான பேச்சும் மோண்டாக்கைச் சற்று சலனப்படுத்துகிறது. மோண்டாக் தினமும் இரவு வீடு திரும்பும் போது க்லாரிஸ்சிடம் சிறிது நேரம் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தான். அவளின் பேச்சில் உற்சாகமடைந்தான். அவள் வீட்டில் உள்ளவர்களின் உரையாடலை ஒட்டுக்கேட்டும் பரவசமடைந்தான். வாசிப்பை நேசிக்காமல் வீணே பொழுதைக் கழிக்கும் மக்களைப் பற்றி இளக்காரமாக அவர்கள் பேசுவது அவன் மனதை மேலும் அசைக்கிறது.
மோண்டாக்கின் மனைவி மில்ரெட் தூக்க மாத்திரைகளுக்கும், டிவியில் ஒலிபரப்பாகும் மெகா சீரியல்களுக்கும் அடிமையானவள். பிள்ளை பெற்றுக்கொள்ளாததால் மோண்டாக் – மில்ரெட் தம்பதிகள் பொறுப்புகள் ஏதுமின்றி வாழ்ந்தனர். திருமதிகள் ஃப்ல்ப்ஸ் மற்றும் பௌல்ஸ் இருவரும் மில்ரெட்டின் நெருங்கிய சிநேகிதிகள். ஃப்ல்ப்ஸ் மூன்று முறை திருமணம் செய்து கொண்டும் பிள்ளைகள் பெறவில்லை. பிள்ளைகள் தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தாள்.
திருமதி பௌல்ஸ் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் அவர்களை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு பொறுப்புகளிலிருந்து விடுபட்டிருந்தாள். குழந்தைகள் வீட்டுக்கு வரும் நாட்களிலும் டிவியை போட்டுவிட்டு அறையைப் பூட்டிவிடுவாள். டிவி குழந்தைகளைச் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் என்பது அவள் நம்பிக்கை. இவர்கள் மூவரும் மோண்டாக் வீட்டில் சந்தித்து டிவியில் சீரியல்கள் பார்த்தும், வெட்டி அரட்டைகள் அடித்தும் பொழுதைக் கழிக்கின்றனர்.
மோண்டாக் சகபணியாளர்களுடன் புத்தகங்கள் எரிக்கும் பணி நிமித்தம் ஒரு வீட்டிற்குச் செல்கிறான். வீட்டிலிருந்த பெண்மணி புத்தகங்களை எரிப்பதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள். அவளையும் சேர்த்து எரித்து தங்களின் கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறது எரிப்புக் குழு! மற்றவர்கள் புத்தக எரிப்பில் கவனத்துடன் இருந்தபோது மோண்டாக்கின் கண்கள் ஒரு புத்தகத்தால் ஈர்க்கப்படுகின்றன. யாருக்கும் தெரியாமல் அந்த அரிய பைபிள் பிரதியை சட்டைப் பைக்குள் ஒளித்துவைத்துக் கொள்கிறான். அன்று தொடங்குகிறது புத்தகங்கள் மீதான அவனின் காதல். கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்குகிறான். பரணில் அவன் புத்தகங்களை அடுக்குவதைப் பார்த்து மனைவி மில்ரெட் அவனை எச்சரிக்கிறாள்.
வேட்டை நாய் அவனைக் கவ்விப் பிடித்துவிடும் இதனால் வீடே அழியப்போகிறது என்று புலம்புகிறாள். அடுத்த நாள் அவளின் அரட்டைக் கச்சேரியில் மோண்டாக் சேர்ந்துகொண்டான். பெண்கள் மூவரும் ஓரணியாகச் சேர்ந்துகொண்டு மோண்டாக்கை கேலி செய்கிறார்கள். அதிலும் புத்தகங்கள் குறித்து தரக் குறைவாகப் பேசுகிறார்கள். மோண்டாக் அவர்களுக்கு கவிதைகளின் அருமையை உணர்த்த விரும்புகிறான். ஆங்கிலக் கவிஞர் மாத்யு ஆர்னால்ட் எழுதிய ’டோவர் பீச்’ என்ற அற்புதமான கவிதையை வாசித்துக் காட்டுகிறான்.
நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் இடையிலான போராட்டத்தில் இறுதியில் நம்பிக்கையே வெற்றி பெறும் என்ற உண்மையை உணர்த்திடும் அழகான கவிதையை அந்தப் பெண்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. வெகுஜன கலாச்சாரத்தின் ஆழமற்ற, தட்டையான விஷயங்களுக்கு மட்டுமே பழக்கப்பட்ட அவர்களால் கவிதைகளின் உன்னதங்களைத் தொடமுடியவில்லை. இதை மோண்டாக் உணர்த்தியதும் கோபித்துக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். புத்தகங்கள் மேலிருந்த ஆசையினால் மோண்டாக் தனக்கு தெரிந்த ஆங்கிலப் பேராசிரியர் ஃப்பர் என்பவரை பார்க்கச் செல்கிறான். முதலில் தீ அணைப்பாளனான மோண்டாக்கைக் கண்டு திடுக்கிடுகிறார்.

அவன் மனந்திருந்தி புத்தகங்களை நேசிப்பவனாக மாறியவன் என்று அறிந்ததும் நண்பனாகிறார். புத்தகங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு எந்நேரமும் அவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். அவருடன் மோண்டாக் எப்போதும் தொடர்பில் இருப்பதற்காக காதில் பொருத்திக்கொள்ளும் ஒரு நுண்கருவியைக் கொடுத்து உதவுகிறார். ஒரு நாள் மோண்டாக் காய்ச்சலில் விழுகிறான். அவனை நலம் விசாரிக்க வரும் பியாட்டி புத்தகங்களின் தேவையின்மை பற்றி நீண்ட சொற்பொழிவாற்றுகிறான். இன்றைய சமூகத்திற்கு புத்தகங்கள் தேவையில்லை என்றும்; இவைகளின் இடத்தை தொழில்நுட்பம் நிறைவு செய்துவிட்டதால் புத்தகங்களை முற்றிலும் அழித்துவிடுவதுதான் பொருத்தமானது என்றும் வாதிடுகிறான். புத்தகங்கள் தேவையில்லாத சர்ச்சைகளையும், குழப்பங்களையும் சமூகத்தில் விளைவிப்பதால் அவைகள் நெருப்பிற்கு இரையாவதுதான் சரியாக இருக்கும் என்கிறான்.
வேண்டுமென்றால் ஒரு சில வணிகம் தொடர்பான கையேடுகள், செக்ஸ் பத்திரிக்கைகள் மட்டும் அனுமதிக்கலாம் என்று கருதுகிறான். கடைசியில் விடை பெறும்போது மோண்டாக்கை கவனமாக இருக்கச் சொல்லி எச்சரிக்கிறான். தீ அணைப்பாளர்கள் வீட்டில் புத்தகங்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டனை பயங்கரமாக இருக்கும் என்பது தெரியுமா என்று கேட்கிறான். ”24 மணி நேரத்தில் புத்தகங்களை அவர்கள் அழிக்கத் தவறினால், அவர்களைக் கொண்டே அவர்கள் வீடு எரிக்கப்படும்” என்ற விதியை நினைவுபடுத்திச் செல்கிறான். உடல் நலம் சரியானதும் மோண்டாக் தீ அணைக்கும் அலுவலகம் செல்கிறான். அலுவலகத் தலைவர் பியாட்டியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு அவசர அழைப்பு வருகிறது. உடனே அனைவரும் டிரக்கில் புறப்படுகிறார்கள். டிரக் வந்து சேருமிடம் மோண்டாக் வீடு! மோண்டாக் அதிர்ந்து போகிறான்.
வேட்டை நாய் சகிதம் தீ அணைப்பாளர்கள் வந்ததும் மில்ரெட் ஓடிவிடுகிறாள். அவனைக் காட்டிக்கொடுத்தது மில்ரெட்டும் அவளின் சிநேகிதிகளும்தான் என்பதை அறிந்து மோண்டாக் வருத்தப்படுகிறான். பியாட்டி வீட்டை எரிக்கச் சொல்லி மோண்டாக்கிடம் கட்டளையிடுகிறான். வீடு கொழுந்துவிட்டு எரிகிறது. மோண்டாக் தீ அணைப்பானைப் பியாட்டியின் பக்கம் திருப்பி அவனை எரித்துக் கொன்றுவிடுகிறான். தன் அன்பிற்கினிய பேராசிரியர் ஃப்பரைச் சந்திக்கச் செல்வதுதான் பாதுகாப்பானது என்று நினைக்கிறான். அவனைத் துரத்திப் பிடிக்க தீ அணைப்பாளர்கள் படை விரைகிறது. வேட்டை நாய் தரைவழியாகவும், ஹெலிகாப்டர்கள் வான்வழியாகவும் மோண்டாக்கைப் பிடிக்கச் சுற்றி வருகின்றன. பேராசிரியர் ஃப்பர் உதவியுடன் மோண்டாக் நகரை விட்டு வெளியேறுகிறான்.
நகருக்கு வெளியே பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் ஒளிந்து வாழும் ஒரு முகாமுக்குப் போகும்படி அவனை ஆற்றுப்படுத்துகிறார். புத்தகங்களின் ஆதரவாளர்களான இவர்கள் கிராஞ்சர் என்பவரின் தலைமையில் ஊருக்கு வெளியே ஒளிந்து வாழ்கின்றனர். மோண்டாக் இந்த அறிவு ஜீவிகளின் முகாமில் மன நிம்மதி அடைகிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு புத்தகத்தை மனப்பாடம் பண்ணி வைத்திருக்கிறார்கள். புத்தகங்களை எல்லாம் தீ அணைப்பாளர்கள் எரித்துவிட்டாலும் தங்களின் நினைவிலிருந்து புத்தகங்களை மீண்டும் எழுதிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழும் நல்ல உள்ளங்கள். ஆங்கிலக் கல்வியாளரும், அறிஞருமான மெக்காலேயின் பெருமைகளில் ஒன்று அவருக்கிருந்த அபாரமான ஞாபகசக்தி.
”ஏதேனும் ஒரு விபத்தில் மில்டன் எழுதிய ’பாரடைஸ் லாஸ்ட்’ காவியம் முழுவதும் அழிய நேரிட்டாலும் கவலையில்லை; நான் என்னுடைய நினைவிலிருந்து அதை மீண்டும் எழுதிவிடுவேன்” என்று இறுமாப்புடன் கூறியவர். அப்படியான ஒரு நம்பிக்கையில் இந்த அறிஞர் கூட்டமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மோண்டாக், ”எனக்கு பைபிலின் ’புக் ஆஃப் எக்கிலிசியாஸ்டஸ்’ முழுவதும் மனப்பாடமாகத் தெரியும். என் நினைவிலிருந்து அதனை முற்றிலும் மீண்டும் எழுதிவிடுவேன்”, என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறான்.
அவர்களும் அவனை ஆரத் தழுவி ஏற்றுக்கொள்கிறார்கள். அன்று புத்தகங்களை எரிப்பதில் மகிழ்ச்சி அடைந்த மோண்டாக், இன்று புத்தகங்களை மீட்டுருவாக்கும் பணிக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான். மோண்டாக்கிடம் ஏற்படும் இந்த மனமாற்றத்துடன் நாவல் நிறைவடைகிறது. புத்தகங்களுக்கு என்றென்றும் அழிவில்லை என்று வாசகர்களும் நிம்மதி அடைகிறோம்.
—-பெ.விஜயகுமார்.
இந்த பாமர உலகத்தை சந்தைப் பொருளாதாரம் மட்டுமே நிரந்தரம் என்ற ஒரு மாய மனநிலையை இந்த கார்பொரேட் ஆளுமைகள் உருவாக்கிவிட்டார்கள். எதிலும் லாபம் ஈட்டுவது மட்டுமே குறிக்கோள் என்ற அந்த மனநிலைதான், ஒரு அரசாங்கத்தின் நலத்திட்டங்களிலும் சுய லாபம் என்ன என்ற மனக்கணக்கு போட வைக்கிறது – ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும். இதில் வியப்பான உண்மை என்னவென்றால் மேற்சொன்ன அனைவரையும் மெத்தப் படித்தவர்களாகத்தான் இந்த பாமர உலகம் உற்று நோக்குகிறது. ஆனால், உண்மையான கல்வி என்பதும், வாசித்தல் என்பதும் சக மனிதனிடமும், அனுபவசாலிகள் எழுதி வைத்த புத்தகங்களிலும் இருக்கிறது என்பதை மறந்தவர்களின் பிம்பமாகத்தான் புத்தகங்களை எரிக்கும் அந்த மனோநிலை எனக்குத் தோன்றுகிறது. புத்தகங்களை வாசிப்பதோடு நின்று விடாமல், அவற்றின் மேல் காதல் கொண்டவர்களால்தான் புத்தகம் எரிக்கப்பட்டாலும் அதை மீண்டும் எழுத முடியும். புத்தகத்தின் விமரிசனத்திலேயே அதன் கதையை சுருக்கமாகச் சொன்ன விதம் பேராசிரியர் விஜயகுமாரின் நயம். அதோடு, தற்கால ‘கலாச்சாரக் காவலர்கள்’ கருத்துரிமையை நசுக்கும் போக்கையும் எடுத்துரைத்த விதம் நன்று.