Fake impersonation in the name of democracy (Joe Biden America Rule). ஜனநாயகம் என்ற பெயரில் போலி வேடம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி

ஜனநாயகம் என்ற பெயரில் போலி வேடம் – தமிழில்: ச.வீரமணிஅமெரிக்க ஜனாதிபதி, ஜோ பைடன், டிசம்பர் 9-10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த “ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு”, மேம்போக்காகப் பார்க்குங்கால், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒன்று போன்றும், ஜனநாயகத்தை அரித்துவீழ்த்திட “எதேச்சாதிகாரிகளால்” மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்கான ஒன்று போன்றும் தோன்றும். இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள்களாகக் கூறப்பட்டவை, மூன்று. அவை, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துதல், ஊழலுக்கு எதிராகப் போராடுதல் மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பையும், மரியாதையையும் மேம்படுத்துதல் என்பனவாகும்.

இணையம் வழியாக நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டிற்கு 100 அரசாங்கங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 89 பேர் பங்கேற்றனர். இவ்வாறு பங்கேற்றவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இந்த உச்சிமாநாடு, “ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவோ, எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற் காகவோ” கூட்டப்பட்ட ஒன்று அல்ல என்பதும், மாறாக இது, அமெரிக்கா, “ஜனநாயக உலகத்தின்” மீதான தன் மேலாதிக்கத்தைப் பேணிப் பாதுகாத்திடவும், சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுக்குள் வைத்திடுவதற்கான தன் போர்த்தந்திரத் திட்டங்களை விரிவாக்கிடுவதற்குமானது என்பதும் நன்கு தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதி பைடன், “எதேச்சாதிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளுவது” பற்றி பேசியபின், மாநாட்டில் அவர் சென்று அமர்ந்த இடத்தில் அவர் அருகில் அமர்ந்திருந்தவர்கள் யார் தெரியுமா? தங்கள் நாடுகளில் எதேச்சாதிகார ஆட்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் பிரேசில் நாட்டின் ஜனாதிபதி ஜயில் பொல்சனாரோ (Jair Bolsonaro)வும், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே (Rodrigo Duterte)யும் ஆவார்கள். பொல்சனாரோ, தங்கள் நாட்டின் பூர்வகுடியினரின் உரிமைகளை ஒடுக்குவதன் மூலமும், அமேசான் மழைக்காடுகளை அழிப்பதன்மூலமும், மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அத்தொற்றின் ஆபத்து குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாததன் மூலமும் மக்களால் மிகவும் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் நபராவார். ரொட்ரிகோ துதெர்த்தே, போதை மருந்துக்கு எதிராகப் போராடுகிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவிக்கும் ஆட்சியை நடத்துவதாலும், இதழாளர்கள் மீதும், மனித உரிமை ஆர்வலர்கள் மீதும் அடக்குமுறையை ஏவி, அவர்களைச் சிறையில் அடைத்திருப்பதன் மூலமும் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பவர்.

மேலும அமெரிக்காவின் நலன்களுக்கு சேவகம் செய்திடும் நபர்கள் அழைக்கப்பட்டிருப்பதும் நன்கு தெரிந்தது. தன்னுடைய சொந்தக் கொள்கையான “ஒரே சீனம்” கொள்கையை மீறிச் செயல்படும் தைவான் பிரதிநிதிகளுக்கும், வெனிசுலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மதுராவின் அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்க ஆதரவுடன் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் ஜூன் குவைடோ (Juan Guaido)விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த உச்சிமாநாட்டிற்கு தெற்கு ஆசியாவில் உள்ள அரசாங்கங்கள் எவை எவை அழைக்கப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தால், அமெரிக்காவில் சூழ்ச்சித் திட்டங்கள் நன்கு விளங்கும். பாகிஸ்தானை அழைத்திருந்த அதே சமயத்தில் (பாகிஸ்தான், அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது), வங்க தேசத்தையோ அல்லது இலங்கையையோ அது அழைக்கவில்லை. இந்தியா, நேபாளம் மற்றும் மாலத்தீவுகள் ஆகியவை அழைக்கப்பட்ட இதர நாடுகளாகும். பாகிஸ்தானைக் காட்டிலும் வங்க தேசம் ஜனநாயகத்தில் கீழான நாடா? அமெரிக்காவிற்கு, ஆப்கானிஸ்தானத்திற்குச் செல்ல பாதை தேவை. அதற்கு பாகிஸ்தானின் தயவு தேவை. இதுதான் அமெரிக்காவிற்கு, பாகிஸ்தானை அழைப்பதற்கான தீர்மானகரமான காரணியாக இருந்தது.

File:The Prime Minister, Shri Narendra Modi addressing at the 1st  Uttarakhand Investors Summit, at Dehradun, Uttarakhand on October 07, 2018  cropped.jpg - Wikimedia Commons

பிரதமர் மோடி உச்சிமாநாட்டுக்கு அனுப்பியிருந்த அறிக்கையில், தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், “எங்கள் நாகரிக சமுதாயத்தின் அடிப்படைக்கூறுகளுக்கு, ஜனநாயக உணர்வு என்பது பிரிக்கமுடியாது பின்னிப்பிணைந்த ஒன்று என்றும்” அறிவித்தார். இவ்வாறான சுய-தம்பட்ட உரையில், அவர் இந்தியாவில் ஜனநாயக அமைப்புமுறைக்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தல்கள் அல்லது பிரச்சனைகள் குறித்து எதுவும் இல்லை.

பைடன், மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றுகையில், அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டுவரும் அரசு சாரா நிறுவனமான, ஃப்ரீடம் ஹவுஸ் (Freedom House) அளித்திருந்த அறிக்கையானது 2020இல் உலகத்தில் சுதந்திரம் என்பது தொடர்ந்து 15 ஆவது ஆண்டாக பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். இதே ஃப்ரீடம் ஹவுஸ் 2021இல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவை “சுதந்திரமாக இருந்த நாடு” (“free”) என்ற நிலையிலிருந்து “ஒரு பகுதி சுதந்திரமாக உள்ள நாடாக” (“partially free”) மாறியிருப்பதாகத் தரம் தாழ்த்தி இருக்கிறது.

ஜனநாயகத்தின் வீழ்ச்சி குறித்து, பைடன் தாக்கல் செய்துள்ள மற்றுமொரு அறிக்கையானது, ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிலையம் (International Institute for Democracy and Electoral Assistance) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலிருந்து கையாளப்பட்டிருக்கிறது. இந்த நிலையமானது, ‘2021 ஜனநாயகத்தின் உலக நிலைமை’ (‘The Global State of Democracy, 2021) என்ற தன்னுடைய அறிக்கையில், “ஜனநாயகம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையை, இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் … போன்ற நாடுகளில் பளிச்செனத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பது குறித்து மிகவும் மோசமாக அறிக்கைகள் வெளிவந்திருந்தாலும், அதனையெல்லாம் அமெரிக்கா பொருட்படுத்தாது என்பது தெளிவாகவே தெரிகிறது. ஏனெனில் அதற்கு அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாக இந்தியாவை அது கருதுகிறது. அதனால்தான் அது, மோடி அரசாங்கமானது குடிமக்களின் உரிமைகளைப்படிப்படியாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது பற்றியோ, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது பற்றியோ, அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும், இதழாளர்களுக்கும் எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகங்கள் மிரட்டப்பட்டு வருவது குறித்தோ பொருட்படுத்தவில்லை. அதைப் பொருத்தவரைக்கும், அமெரிக்காவின் திரித்துக்கூறப்படும் தர்க்கங்களின்படி நரேந்திர மோடியைவிட வங்க தேசத்தின் ஷேக் ஹசினா அதிக எதேச்சாதிகாரியாவார்.

அமெரிக்காவில் ஜனாதிபதிகள் மாறியபோதிலும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அதன் போலி வேடம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1980களில் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் காலத்தில், ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (NED-National Endowment for Democracy) ஒன்று நிறுவப்பட்டது. அதன் குறிக்கோள் வாசகம் (motto), “ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக சுதந்திரச் சந்தைகள்” என்பதாகும். இதைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்கா, தனக்கு எதிரான நாடுகள் எனக் கருதிய நாடுகளில் செயல்பட்டுவந்த எதிர்க்கட்சிகளுக்கு ஏராளமான நிதியை அளித்து வந்தது.

இதனைக் கிளிண்டன் அரசாங்கமும் தொடர்ந்தது. இப்போது அந்த மேடையானது “ஜனநாயகங்களுக்கான சமூகம்” (CoD-“Community of Democracies”) என மாற்றப்பட்டது. அதன்கீழ் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வந்தன. அந்த சமயத்தில் 1999-2000இல் இந்தியாவில் ஆட்சி செய்த வாஜ்பாயி அரசாங்கம் இதில் மிகவும் ஆர்வத்துடன் தன்னை இணைத்துக்கொண்டது. இந்த அமைப்பின் சார்பாக 2000 ஜூனில் வார்சாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டை நடத்திட உதவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

பின்னர், ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக வந்தபின்னர், 2005இல் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்காவின் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷூம் இணைந்து, “உலகளாவிய ஜனநாயகத்திற்கான முன்முயற்சி” (“Global Democracy Initiative”) என்னும் கூட்டு அறிக்கையை அறிவித்து, இந்தியா, அமெரிக்காவுடன் தன்னை இணைத்துக் கொண்டது.

அமெரிக்க ஜனநாயக நிறுவனம் உலகில் உள்ள பல நாடுகளைக் கவிழ்ப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் உதவுவதேயாகும். இவ்வாறு அது, 1950களிலிருந்தே லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகியவற்றிலிருந்த கௌதமாலா, பிரேசில், சிலி, கிரேனேடா, ஈரான், தென் கொரியா, இந்தோனேசியா ஆகியவற்றில் ஆட்சி செய்த அரசாங்கங்களைக் கலைத்திடவும், பலவீனப்படுத்திடவும் உதவி இருக்கிறது.

அமெரிக்கா மேற்கொண்ட மற்றொரு முறையானது, “ஜனநாயகத்தை விதைப்பதற்காக” சில நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகவே தாக்குதல்களைத் தொடுப்பதும், அவற்றை ஆக்கிரமித்துக்கொள்வதுமாக இருந்து வந்திருக்கிறது. இவற்றுக்குச் சமீபத்திய எடுத்துக்காட்டுகள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானமாகும்.

File:President of the United States Joe Biden (2021).jpg - Wikimedia Commons

பைடன், இப்போது நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், ஜனநாயகத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஜனநாயகத்திற்கான திட்டத்திற்கான கூட்டுப்பங்காண்மைக்காக ஒரு நிதியம் (Fund for Democratic Renewal and a Partnership for Democracy programme) 424 மில்லியன் டாலர்களில் உருவாக்கப்படும் என்றும், இந்த நிதியம் அமெரிக்கா அரசாங்கத்தாலும், அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்கா ஏஜன்சி (USAID-United States Agency for International Development) மூலமாகவும் நிர்வகிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் புவிசார்அரசியல் நலன்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிடும் விதத்தில் இதன் நிதிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படும் என்பதைப் புரிந்துகொள்வதில் அதிகம் சிரமப்பட வேண்டிய தேவையில்லை.

ஜனாதிபதி பைடன், உலக ஜனநாயகத்திற்காகப் போராடும் வீரனாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்குப் பதிலாக, அமெரிக்காவில் ஜனநாயக அமைப்பு முறைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று கவனம் செலுத்துவது நல்லது. பைடன் பேசும்போது, “வாக்குச்சீட்டின் புனித உரிமை” குறித்தும், எப்படி சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்கான உரிமை குறித்தும், அவ்வாறு அறிந்துகொள்வதே “ஜனநாயகத்திற்கான சுதந்திரத்தின் நுழைவாயில்” என்றும் தன்னுடைய நிறைவுரையில் பூசிமெழுகி யிருக்கிறார். இவர் கூறியுள்ள இந்த சுதந்திரமான வாக்களிக்கும் உரிமை என்பது அமெரிக்காவில் கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டும், சுருக்கப்பட்டுக்கொண்டுமிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும், அமெரிக்காவின் 19 மாநிலங்களில் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களில், மக்களின் வாக்குரிமைகளுக்கான சட்டங்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கருப்பின மக்களுக்கும், ஒருசில குறிப்பிட்ட மக்கள்தொகை பிரிவினருக்கும் வாக்குரிமைகள் அளிக்கப்பட்டிருந்தது இதன்மூலம் பறிக்கப்பட்டிருக்கின்றன.

பைடன், ஜனநாயகம், ஊழல் ஒழிப்புக்கு எதிரான போர் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய மூன்று அம்சங்கள் தொடர்பாகவும் நடந்துள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக, அடுத்த ஆண்டு அனைவரும் நேரில் பங்குகொள்ளக்கூடிய விதத்தில் ஓர் உச்சி மாநாடு நடத்தப்படும் என உறுதி அளித்திருக்கிறார். இவற்றின்மீது தாங்கள் சாதித்தது என்ன என்பது குறித்து கலந்து கொள்ளும் தலைவர்கள் கூறுவார்கள் என அவர் எதிர்பார்த்துள்ளார். இந்த விசயத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்து மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் அது அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருப்பது என்பதே வேறுசில விஷயங்களை நிறைவேற்றுவதற்காக என்பது அதற்கு நன்கு தெரியும்.

(டிசம்பர் 15, 2021)

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *