உலகம, கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று நோயால் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையிலும், இந்தியாவில் அதற்கெதிரான போராட்டத்திலும் கூட, மதவெறித் தீ விசிறிவிடப்பட்டுக் கொண்டிருப்பதால், இதற்கெதிரானப் போராட்டம் மிகவும் கடினமாகவே இருக்கும்போல் தோன்றுகிறது. தப்லிகி ஜமாத் கூட்டம் சம்பந்தமாகவும், முஸ்லீம்களுக்கு எதிராகக் குறிவைத்தும் பொய்ச் செய்திகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. துப்புதல், தும்முதல், நக்குதல், இடித்தல் அல்லது எறிதல் போன்ற செயல்கள் அனைத்தையும் செய்து கொண்டிருப்பது முஸ்லீம்கள் போன்றும் இதே போன்று மேலும் பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கின்றன.
கொரானா வைரஸ் தொற்றைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பவர்கள் ஊகித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மனிதர்கள் ஸ்பூன்களை நக்கிக் கொண்டிருப்பது போன்று ஒரு வீடியோ. ஒருவன் விற்பனைக்குரிய பழங்கள் மீது எச்சில் துப்புவதுபோன்றும், அதனை வாங்குபவர்களுக்கு தொற்றைப் பரவச் செய்வதுபோலவும் ஒரு வீடியோ. ஒரு முஸ்லீம் போலீஸ்காரர், ஓர் இந்து மதகுருவை அடித்துக்கொண்டிருப்பதுபோன்று ஒரு வீடியோ. இவ்வாறு பொய்ச்செய்திகளுக்கு அளவே இல்லை. இவ்வாறு மோசமான அளவில் பொய்ச் செய்திகள் அனைத்தும் மின் ஊடகங்களில்தான் ஏராளமாகக் காணப்படுகின்றன.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இதுபோன்றவற்றை ஒளிபரப்புவதில் மிகுந்த உற்சாகம் கொண்டிருக்கிறது. இவற்றின் விளைவாக, இத்தகைய வீடியோக்கள் மற்றும் செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து பெரிய அளவில் குழப்பம் ஏற்படுவது மட்டுமல்ல, மனிதகுலத்திற்கு மாபெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் மத நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கும் பெருமளவில் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. “தப்லிகி ஜமாத் நிகழ்வு ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வெகுகாலமாகவே குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது” என்று ஆக்ஸ்போர்ட்பல்கலைக் கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் முகமது தலிப் கூறியுள்ளார்.

கொரானா வைரஸ் தொற்று நம் நாட்டில் தெரியத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே முஸ்லீம்கள் பாத்திரங்களை நக்கிக்கொண்டிருப்பது போன்று ஆத்திரமூட்டும் வீடியோக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஒருசில மணி நேரத்திற்குள்யே இந்த வீடியோ ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டன அல்லது “விரும்பப்பட்டன”. மத்தியதர குடியிருப்போர் வசிக்கும் இடங்கள் பலவற்றில் இவை வாட்சப் குழுக்களால் ‘கொரானா பரவிக்கொண்டிருக்கிறது’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டன. “விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், கொரானா வைரஸ் இந்தியாவில் பரவிக்கொண்டு இல்லை, ஆனால் அது நாட்டில் பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, நிசாமுதீன்,” என்று சிலர் எழுதினார்கள்.
ஆல்ட்நியூஸ் (AltNews) என்னும் உண்மையைச் சரிபார்த்திடும் இணையதளம், இவர்கள் பரவவிட்ட வீடியோ நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய ஒன்று என்றும், அதில் உணவு வீணாவதைத் தடுப்பதற்காக ஸ்பூன்களையும், பாத்திரங்களையும் தாவூதி போராஸ் என்பவர் நக்கியது காட்டப்பட்டது என்றும் கண்டுபிடித்து உறுதி செய்திருந்தது. அதே காலத்திலேயேதான் ஒரு விற்பனையாளர் பழங்கள் மீது துப்புவது போன்ற வீடியோவும் வந்தது. அந்த வீடியோ பிப்ரவரியிலிருந்து இருக்கிறது. அதற்கும், வைரஸ் “வேண்டுமென்றே” பரவுவதாகச் சொல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனினும் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 21 அன்று, 45 வினாடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ வந்தது. அதில் முஸ்லீம் போன்று ஒருவர், வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதற்கு முன்பு உணவு மீது துப்புவது போன்று காட்டியது. போஸ்ட்கார்ட் நியூஸ் நிறுவனர், மகேஷ் விக்ரம் ஹெக்டே, போய்ச் செய்திகளை அடிக்கடி சுற்றுக்கு விடுபவர், இதனைப் பகிர்ந்து, அதனுடன் எழுதியிருந்ததாவது: “இதுபோன்று துன்புறுத்தி இன்பம் காணும் சாடிஸ்டுகளைப் பெற்றிருக்கையில், ‘மக்கள் ஊரடங்கால்’ என்ன பயன்? இந்தக் கிறுக்கனை உடனடியாகக் கைது செய்க,” என்று கேட்டிருந்தார். ஆல்ட்நியூஸ் குறிப்பிட்டிருப்பதைப் போன்று, இது 2000 தடவை மறுட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. இதன் நம்பகத்தன்மையைப் பற்றிக் கவலைப்படாது வலதுசாரி பிரச்சாரகர்கள் உடனடியாகத் தங்கள் ட்விட்டுகள் மூலம் பகிர்ந்தார்கள்.

ரூப் தாராக், பாஜக இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தெலங்கானா செய்தித் தொடர்பாளர், இந்த வீடியோவை ட்விட் செய்து, “இதுபோன்ற” கடைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். சோனம் மகாஜன் என்கிற ஒரு பாஜக ஆதரவாளரும் இதை மறுட்வீட் செய்தபின்னர், இதேபோன்று முன்பு ஒருதடவை சோமாடோ (Zomato) நிறுவனம் ஒரு முஸ்லீம் விற்பனையாளர் மூலம் பொருள்களை அனுப்பியிருந்ததை ஏற்க மறுத்த ஒருவரின் நிகழ்வை நியாயப்படுத்தியும் இருந்தார். இவருடைய ட்விட்டும் 1200 தடவைகள் மறுட்வீட் செய்யப்பட்டிருந்தன.
மகேஷ் விக்ரம் ஹெக்டே, கோவித்-19 தொற்றுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத, வெகு காலத்திற்கு முன்பே, வெளிநாட்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்த வீடியோவை, பொறுக்கி எடுத்து இவ்வாறு பதிவேற்றம் செய்து பரப்பியிருந்தார். ஆல்ட்நியூஷ் இது குறித்து ஆழமாக சோதனை செய்து இது தொடர்பாக தன் இணைய தளத்தில் வெளியிட்டிருந்ததாவது:
“இது 2019 ஏப்ரல் 27இல் யூ ட்யூபில் வெளியாகி யிருந்த வீடியோ, மாற்றியமைக்கப்பட்டு இவ்வாறு ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ, கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டபின்னர், பல நாடுகளில் சுற்றுக்கு விடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.” 2020 மார்ச் 22 அன்று, கல்ஃப் நியூஸ் (Gulf News)இல் வெளியான செய்தியானது, அபு தாபி பொது விசாரணை அமைப்பு, ஒரு வீடியோ வைரலாக, ‘ஒரு தொழிலாளி ஓர் உணவுப் பையை வீசுதல் போன்ற ஒரு வீடியோ ‘ஆசிய நாடு’ ஒன்றிற்குச் சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது,’ என்றும் அதுரதான் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது என்றும் உறுதி செய்திருக்கிறது.
இதே வீடியோ குறித்து ஆய்வு செய்த சிங்கப்பூர் உணவு ஏஜன்சி, 2020 மார்ச் 19 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “இந்த வீடியோ ஒன்றும் புதிதல்ல. இது சென்ற ஆண்டு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.” பின்னர் சிங்கப்பூர் அந்த சமூக ஊடகப் பதிவை நீக்கிவிட்டது.
இவ்வாறு இந்த வீடியோ தங்கள் நாட்டைச் சேர்ந்ததல்ல என்று ஐக்கிய அரசு நாடுகளும், சிங்கப்பூரும் மறுத்துள்ளன. மேலும் இதே வீடியோ சென்றஆண்டு மலேசியாவிலும் வைரலாக இருந்திருக்கிறது.
இதேபோன்று மற்றொரு வீடியோ. இதில் முழங்காலிட்டு அமர்ந்துள்ள முஸ்லீம்கள் தப்லிகி ஜமாத்தில் தொழுது கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியானது. இதில் இவர்கள் வேகமாக தும்முவது போன்றும், இது கொரானா வைரஸ் தொற்றைப் பரப்புவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டதுபோன்றுட்ம விரிவான அளவில் பரப்பப்பட்டது.
எதார்த்தத்தில், இது சுஃபி முஸ்லிம்களின் அமர்வு ஒன்றில் எடுக்கப்பட்டதாகும். அதில் அல்லாவின் பெயரால் மூச்சை நன்கு இழுத்து, வெளியே விடுவார்கள். பொதுவாக இவர்கள் இதனை தர்காவில் செய்வார்கள் என்பதால், இது போன்று எங்கே வேண்டுமானாலும் பதிவு செய்திட முடியும். ஆனால் நிச்சயமாக இது நிசாமுதீன் மசூதி கிடையாது என்று ஆல்ட்நியூஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்து, மெய்ப்பித்திருக்கிறது.

ரேவா என்னும் இடத்தில் ராம நவமி அன்று ஒரு முஸ்லீம் போலீஸ்காரர், ஒரு இந்து சாமியாரை அடிப்பதுபோன்று ஒரு வீடியோ. இதுவும் ஜோடனை செய்யப்பட்ட ஒன்றேயாகும். அந்த வீடியோவுடன் குறிப்பிடப்பட்டிருந்ததுபோன்று அவர் காவல் கண்காணிப்பாளர் அபித் கான் அல்ல. மாறாக அவர், ராஜ்குமார் மிஷ்ரா என்னும் ஒரு காவல் நிலைய அலுவலர். மேலும் அந்த சாமியார் தனியாக பூசை செய்யவில்லை. ஏராளமான பெண்களுடன் பூசை செய்து கொண்டிருந்தார். இவ்வாறு அவர் சமூக முடக்கத்தையும் மீறி அவர்களை அழைத்திருந்தார்.
இவற்றைத் தொடர்ந்து ஏஎன்ஐ ஒரு செய்தியை ஒளிபரப்பியது. கராச்சியில் இந்து சமூகத்தினருக்கு மளிகைப் பொருட்கள் மறுக்கப்படுவதாக அது தெரிவித்தது. இது பொய்ச் செய்தி என்று தெரிய வந்தது. இந்த செய்தி தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தி நியூஸ் நிறுவனம், அந்தப் பகுதியில் இந்துக்கள் மக்கள்தொகையே கிடையாது என்றும், இருக்கின்ற சில இந்துக்களும் தங்கள் சொந்த கடைகளை வைத்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது. சந்தோஷ் மகாராஜ் என்னும் உள்ளூர் துப்புரவு ஆய்வாளர், “இந்துக்கள் ரேஷன் பொருட்கள் பெறவில்லை என்று கூறுவது சரியல்ல, ஏனெனில் ரெஹ்ரி கோத்தில் இந்துக்கள் எவரும் கிடையாது,” என்று கூறியுள்ளார்.
அண்மையில் இந்தித் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைத் தூக்கிப்பிடிக்கும் பேர்வழி, ஒரு வீடியோ ட்விட் செய்திருந்தார். அதில் ஒரு வீட்டின் மேல்தளத்தில் முஸ்லீம்கள் நமாஸ் செய்துகொண்டிருப்பார்கள். ‘இந்தியாவில் சமூக முடக்கக்காலத்தில் ஏராளமான முஸ்லீம்கள் ஒன்றாக இவ்வாறு நமாஸ் செய்கிறார்கள்’ என்று பரப்பவேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். ஆனால் உண்மையில் இது துபாயில் எடுக்கப்பட்டது என்று ஆல்ட்நியூஸ் கண்டுபிடித்திருக்கிறது. இந்த வீடியோ, துபாயில் எடுக்கப்பட்டது என்பதை மறைப்பதற்காக அக்னி ஹோத்ரி இதில் ஏராளமான மாற்றங்களைச் செய்திருந்தார்.

ஆரம்பத்தில் கொரானா வைரஸ் தொற்றுக்குப் பரிகாரமாக பூண்டு, இஞ்சி போன்றவற்றைப் பயன்படுத்தக்கோரி எண்ணற்ற வீடியோக்கள் வலம் வந்தன. பின்னர் ஜனதா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின், வெளிநாட்டு வீடியோக்கள் பல நிலைமைகள் உலகம் முழுவதும் எப்படி மோசமாகிக் கொண்டிருக்கின்றன என்று காட்டின. உலகம் பூராவும் நிலைமைகள் மோசமாகத்தான் இருந்தன. ஆனால் அதே சமயத்தில் இவர்கள் பரப்பிய வீடியோக்கள் பொய்யானவைகளாகும். மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இவை பரப்பப்பட்டன.
மார்ச் 31 அன்று தப்லிகி நிகழ்வு நடைபெற்றது. அதன்பின்னர், மதவெறி அடிப்படையில் தவறான செய்திகள் ஏராளமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இவை சமூக ஊடகங்களோடு மட்டும் இல்லை, நாட்டின் பிரதான தொலைக்காட்சி நிறுவனங்களும் இவற்றைச் செய்தன. ஒட்டுமொத்த சமுதாயத்தின் மத்தியிலும் பயத்தை உண்டாக்கிவிட்டோமானால், தவறான தகவல்களை அவர்கள் மத்தியில் திணிப்பது என்பது எளிதாகிவிடும். உங்களிடம் ஏற்கனவே ஒருவிதமான ஒருசார்புத்தன்மை இருக்கும்பட்சத்தில் இத்தகைய பொய்ச் செய்திகள் உங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.
இத்தகைய பொய்ச் செய்திகளுக்கு எதிராக ஜமியாத் உலேமா-இ-இந்து என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுபோன்று பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஊடகங்களுக்குக் கட்டளையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆயினும், உச்சநீதிமன்றம் இந்த மனுவை ஏற்க மறுத்தது. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவை அணுகுமாறு அறிவுறுத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியில் தலைமையிலான அமர்வு இதில் கூறியிருந்ததாவது: “நாங்கள் பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது.”
நன்றி: ப்ரண்ட்லைன்,
தமிழில்: ச.வீரமணி