கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்)….!

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (பிரெடெரிக் எங்கெல்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

1892-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின்1 சிறப்பு முன்னுரை

தற்போதைய இச்சிறு நூல், தொடக்கத்தில் முழுமையான ஒரு பெரிய நூலின் பகுதியாக இடம்பெற்றதாகும். 1875-ஆம் ஆண்டுவாக்கில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் [சம்பளத்துக்குப் பதிலாக, மாணவர்களிடம் நேரடியாகக் கட்டணம் பெற்றுக் கொண்டு] விரிவுரையாளராகப் பணிபுரிந்த டாக்டர் இ.டூரிங், தாம் சோஷலிசத்தைத் தழுவிய செய்தியைத் திடீரெனச் சற்று ஆரவாரத்தோடு அறிவித்தார். ஜெர்மன் மக்களுக்கு ஒரு விரிவான சோஷலிசக் கோட்பாட்டை மட்டுமின்றி, சமுதாயத்தின் மறுசீரமைப்புக்கு ஒரு முழுமையான செயல்முறைத் திட்டத்தையும் முன்வைத்தார். எதிர்பார்த்தவாறே, அவரின் முன்னோடிகளோடு முரண்பட்டார். அனைவரையும்விட மார்க்சின்மீது தம் கடுங்கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்து, மார்க்சுக்குப் பெருமை சேர்த்தார்.

Image result for ஜெர்மனி சோசலிஸ்ட் கட்சி

அப்போது ஜெர்மனியில் சோஷலிஸ்டுக் கட்சியின் இரு பிரிவுகளான எய்ஸெனாஹர்களும் லாசலியர்களும்2 தமக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதன்மூலம் தம் பலத்தைப் பெருமளவு அதிகரித்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி, அதைவிட முக்கியமாக அந்தப் பலம் முழுவதையும் தங்களின் பொதுப் பகைவர்க்கு எதிராகப் பயன்படுத்தும் ஆற்றலையும் பெற்றனர். [மேலே சொன்ன] டூரிங்கின் பிரவேசம் ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது. ஜெர்மனியில் சோஷலிஸ்டுக் கட்சி வெகுவேகமாக ஒரு சக்தியாய்ப் பரிணமித்து வந்தது. ஆனால், புதிதாக வென்றெடுக்கப்பட்ட ஐக்கியத்தை ஆபத்துக்கு உள்ளாக்காமல் பாதுகாப்பது, சோஷலிஸ்டுக் கட்சியை ஒரு சக்தியாக ஆக்குவதற்கான முதலாவது நிபந்தனையாக இருந்தது. டாக்டர் டூரிங் தம்மைச் சுற்றி, வருங்காலத் தனிக்கட்சி ஒன்றின் கருவாக விளங்கக்கூடிய ஓர் உட்குழுவை அமைத்திடப் பகிரங்கமாகவே செயலாற்றினார். இதனால், நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எங்களுக்கு விடுக்கப்பட்ட இந்தச் சவாலை ஏற்றுப் போராட்டக் களம் புகுவது அவசியமாகி விட்டது.

இது மிகவும் கடினமானதாக இல்லாமல் இருக்கலாம். என்றாலும் நீண்ட நெடிய பணி என்பது தெளிவு. ஜெர்மானியர்களாகிய நாங்கள் [எதிலும் எப்போதும் முழுநிறைவுத் தன்மையை விரும்பும்] மிகமிகக் கனத்த முழுநிறைவுவாதிகள் (Grundlichkeit) என்பது அனைவரும் அறிந்ததே. இதை நீங்கள் தீவிரமான ஆழ்ந்த சிந்தனை என்றோ, ஆழமான தீவிர சிந்தனை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். எங்களில் எவரேனும் ஒருவர் புதிய கோட்பாடு எனத் தாம் கருதும் ஒன்றை எடுத்துரைக்க விரும்பினால், அவர் முதலில் அதை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தத்துவ அமைப்பாக விரித்துரைக்க வேண்டும். தர்க்கவியலின் மூலமுதல் கோட்பாடுகளும் பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகளும் ஊழிக்காலந்தொட்டு நிலவி வந்ததெல்லாம், இறுதியில், மணிமுடியாகத் திகழும், புதிதாய்க் கண்டறியப்பட்ட இந்தக் கொள்கையை நோக்கி இட்டுச் செல்வதற்கே அன்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் இல்லை என்பதை அவர் நிரூபித்தாக வேண்டும். இந்த வகையில் டாக்டர் டூரிங் தேசியத் தரத்துக்குக் குறைந்தவரில்லை.

சிந்தனை, அறநெறி, இயற்கை, வரலாறு இவற்றின் வழிப்பட்ட சற்றும் குறைவில்லாத ஒரு முழுநிறைவான “தத்துவக் கருத்தமைப்பு”, ஒரு முழுநிறைவான “அரசியல் பொருளாதார, சோஷலிசக் கருத்தமைப்பு”, முடிவாக, “அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சன ரீதியான ஒரு வரலாறு”; எட்டாக மடிக்கப்பட்ட தாள் அளவில், உருவிலும் உள்ளடக்கத்திலும் கனமான மூன்று பெரிய தொகுதிகள்; பொதுவாகத் தமக்கு முற்பட்ட அனைத்துத் தத்துவவாதிகளுக்கும், பொருளாதார அறிஞர்களுக்கும், குறிப்பாக மார்க்சுக்கும் எதிராக முப்பெரும் படையணிகளாய்த் திரட்டப்பட்ட வாதங்கள்; உண்மையில், “விஞ்ஞானத்தில் ஒரு முழுமையான புரட்சியை” உண்டாக்கும் ஒரு முயற்சி. இவற்றையெல்லாம் நான் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. காலம், விண்வெளி ஆகியன பற்றிய கருத்துருக்கள் தொடங்கி, இரட்டை உலோக நாணயமுறை3 வரையில், பருப்பொருள், இயக்கம் ஆகியவற்றின் அழியாத் தன்மை தொடங்கி, அறநெறிக் கருத்துகளின் அழியும் தன்மை வரையில், டார்வினுடைய இயற்கைத் தேர்வுமுறை தொடங்கி, வருங்காலச் சமுதாயத்தில் இளைஞர்களின் கல்வி வரையில், ஒன்று விடாமல் சாத்தியமான அனைத்து விவாதப் பொருள்கள் குறித்தும் நான் விளக்கியுரைக்க வேண்டியிருந்தது.

என்றாலும், என்னுடைய எதிராளியின் முறைப்படுத்தப்பட்ட முழுதளாவிய அணுகுமுறை, மிகப் பல்வகைப்பட்ட இந்த விவாதப் பொருள்கள் குறித்து மார்க்சும் நானும் கொண்டிருந்த கருத்தோட்டங்களை, இதற்குமுன் செய்யப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிக ஒருங்கிணைந்த வடிவில், அவருக்கு எதிராக முன்வைக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தது. அதுவே இப்பணியை நான் மேற்கொள்வதற்கு முதன்மையான காரணம். மற்றபடி இது பலனேதும் இல்லாத பணியே ஆகும்.

என்னுடைய பதில் முதலில் சோஷலிஸ்டுக் கட்சியின் தலைமை ஏடான லைப்சிக் வோர்வார்ட்ஸ் (Leipzig Vorwarts) இதழில் தொடர் கட்டுரைகளாகவும், பிறகு திரு. ஒய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி (Herr Eugen Duhrings Umwalzung der Wissenchaft) என்னும் நூலாகவும் வெளிவந்தது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1886-இல் ஜூரிச்சில் வெளிவந்தது.

தற்போது ஃபிரெஞ்சுப் பிரதிநிதிகள் சபையில் லீல் (Lille) நகரின் பிரதிநிதியாக இருக்கும் என் நண்பர் பால் லஃபார்க்கின் (Paul Lafargue) வேண்டுகோளுக்கு இணங்க இந்நூலின் மூன்று அத்தியாயங்களை ஒரு [தனிப்] பிரசுரமாக நான் ஒழுங்கமைத்தேன். அதனை அவர்  கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (Socialisme utopique et Socialisme scientifique) என்ற பெயரில் 1880-இல் [ஃபிரெஞ்சு மொழியில்] மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த ஃபிரெஞ்சுப் பதிப்பிலிருந்து ஒரு போலிஷ் பதிப்பும், ஒரு ஸ்பானியப் பதிப்பும் தயாரிக்கப்பட்டன. 1883-இல் நம்முடைய ஜெர்மன் நண்பர்கள் இந்தப் பிரசுரத்தை அதன் மூல மொழியில் [ஜெர்மனியில்] வெளிக்கொணர்ந்தனர். அதன்பிறகு ஜெர்மன் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, இத்தாலிய, ருஷ்ய, டேனிஷ், டச்சு, ருமேனிய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. இவ்வாறு, இச்சிறு நூல் தற்போதைய இந்த ஆங்கிலப் பதிப்பையும் சேர்த்து 10 மொழிகளில் வினியோகமாகி வருகிறது. வேறு எந்த சோஷலிச நூலும், 1848-ஆம் ஆண்டின் எங்களுடைய கம்யூனிஸ்டு அறிக்கை அல்லது மார்க்சின் மூலதனம் நூலேகூட இவ்வளவு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்நூல் ஜெர்மனியில் ஏறத்தாழ மொத்தம் 20,000 பிரதிகள் கொண்ட நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது.

Image result for Maksim Kovalevsky

மாக்சிம் கோவலேவ்ஸ்கி

[இந்த நூலின்] பின்னிணைப்பான மார்க் (The Mark)4 என்பது ஜெர்மனியில் நிலவுடைமையின் வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய சிறிதளவு அடிப்படை அறிவை ஜெர்மன் சோஷலிஸ்டுக் கட்சியினரிடையே பரப்பும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாகும். நகரங்களின் உழைக்கும் மக்களை இக்கட்சி தனக்குள் ஈர்த்துக் கொள்வது ஏறத்தாழ முழுமைபெற்ற நிலையிலும், விவசாயத் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டும் பணி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் இருந்த ஒரு காலகட்டத்தில் இது அனைத்தையும்விட அவசியமானதாகத் தோன்றியது. இந்தப் பின்னிணைப்பும் இந்த [ஆங்கில] மொழிபெயர்ப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. காரணம், டியூட்டானிக் இனக்குழுக்கள் அனைத்துக்கும் பொதுவான நிலவுரிமையின் மூல வடிவங்கள் பற்றியும்  அவை சிதைந்துபோன வரலாறு பற்றியும் ஜெர்மனியைவிட இங்கிலாந்தில் இன்னுங்கூட குறைவாகவே தெரிந்திருக்கிறது. மாக்சிம் கோவலேவ்ஸ்கி (Maxim Kovalevsky) அண்மையில் தொடங்கி வைத்திருக்கும் கருதுகோளைப் பற்றி குறிப்பிட்டுக் காட்டாமலே, மூலத்தில் உள்ளவாறு அப்படியே விட்டுவிட்டேன்.

கோவலேவ்ஸ்கியின் கருத்துப்படி, சாகுபடி நிலங்களும் மேய்ச்சல் நிலங்களும் மார்க்கின் உறுப்பினர்களிடையே பிரிவினை செய்யப்படுவதற்கு முன்பாகப் பல தலைமுறைகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தந்தைவழிக் குடும்பச் சமூகம் கூட்டுக் கணக்கில் அவற்றைச் சாகுபடி செய்துவந்தது. (இப்போதும் எடுத்துக்காட்டாக நிலவிவரும் தெற்கு ஸ்லாவிய ஸாட்ருகா இனத்தைப்போல). காலப்போக்கில் கூட்டுக் கணக்கு மூலம் நிர்வகிக்க முடியாத அளவுக்கு இச்சமூகம் வளர்ந்து பெருகியபோதுதான் மேற்சொன்ன பிரிவினை நடைபெற்றது. கோவலேவ்ஸ்கியின் கருதுகோள் முற்றிலும் சரியானதாகவே இருக்கலாம். ஆனால் இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருந்து வரும் வழக்காகும். [எனவே அதுபற்றிக் கருத்துக் கூறலாகாது].

இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரவியல் கலைச்சொற்கள், அவற்றுள் புதியனவற்றைப் பொறுத்தவரை, மார்க்சின் மூலதனம் நூலின் ஆங்கிலப் பதிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களோடு ஒத்துப் போகின்றன. பண்டங்கள் அவற்றின் உற்பத்தியாளர்களுடைய பயன்பாட்டுக்கு மட்டுமின்றி பரிவர்த்தனை நோக்கத்துக்காகவும், அதாவது பயன்-மதிப்புகளாக இல்லாமல் [பரிவர்த்தனைச்] சரக்குகளாக உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளாதாரக் கட்டத்தை நாங்கள் “சரக்குகளின் உற்பத்தி” என அழைக்கிறோம். இந்தக் கட்டம் பரிவர்த்தனைக்கான உற்பத்தியின் ஆதித் தொடக்கம்தொட்டு நம்முடைய இன்றைய காலம்வரையில் தொடர்ந்து வருகின்றது.  [எனினும்] முதலாளித்துவ உற்பத்தியின் கீழ்தான், அதாவது, உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளரான முதலாளி, தம் சொந்த உழைப்புச் சக்தியைத் தவிர பிற உற்பத்திச் சாதனங்கள் எதுவும் சொந்தமில்லாத தொழிலாளர்களைக் கூலிக்காக வேலைக்கு அமர்த்தி, [உற்பத்தி செய்த] பொருள்களின் விற்பனை விலையில் தன் செலவுகள் போக எஞ்சும் தொகையைத் தனதாக்கிக் கொள்ளும் நிலைமைகளில்தான் இக்கட்டம் தன் முழு வளர்ச்சியை எட்டுகிறது. மத்திய காலத்துக்குப் பிந்தைய தொழில்துறை உற்பத்தியின் வரலாற்றை நாங்கள் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறோம்:

(1) கைவினைத் தொழில்: சிறு தலைமைக் கைவினைஞருடன் சில உதவியாளர்களையும் பழகுநர்களையும் கொண்டது. [இங்கே] ஒவ்வொரு தொழிலாளரும் முழுமையான ஒரு பண்டத்தை உற்பத்தி செய்கிறார்.

(2) பட்டறைத் தொழில்: அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் குழுவாகச் சேர்ந்து, உழைப்புப் பிரிவினைக் கோட்பாட்டு அடிப்படையில், ஒரு முழுமையான பொருளை உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளியும் பணியின் ஒருபகுதியை மட்டுமே செய்கிறார். அடுத்தடுத்து அனைவருடைய கைகளுக்கும் சென்ற பிறகுதான் அப்பொருள் முழுமை பெறுகிறது.

(3) நவீனத் தொழில்துறை: விசையாற்றலால் இயக்கப்படும் எந்திர சாதனங்கள் மூலம் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிலாளரின் வேலை என்பது எந்திரங்களின் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல், சரிசெய்தல் என்கிற வரம்புக்குள் அடங்கிவிடுகிறது.

Image result for Historical Materialism

இந்நூலின் உள்ளடக்கம் இங்கிலாந்து மக்களின் கணிசமான பகுதியினருடைய ஆட்சேபத்தை எதிர்கொள்ளும் என்பதை நான் நன்றாகவே அறிவேன். ஆனால் [ஐரோப்பியக்] கண்டத்தவரான நாங்கள் இங்கிலாந்துக் “கௌரவத்தின்” தப்பெண்ணங்களைச் சற்றே கவனத்தில் கொண்டிருந்தாலும், இப்போது இருப்பதைக் காட்டிலும் நாங்கள் இன்னும் மோசமான நிலையைத்தான் அடைந்திருப்போம்.  இந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) என நாங்கள் கூறுவதை நிலைநாட்டுகிறது.  பொருள்முதல்வாதம் என்னும் சொல் இங்கிலாந்து வாசகர்களில் மிகப் பெரும்பான்மையோரின் செவிகளில் நாராசமாய் ஒலிக்கும். இவர்களுக்கு அறியொணாவாதம் (Agnosticism)5 வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம், ஆனால் பொருள்முதல்வாதம் முற்றிலும் ஏற்புடையதன்று.

இருந்தபோதிலும், இங்கிலாந்துதான் 17-வது நூற்றாண்டு முதற்கொண்டே நவீன பொருள்முதல்வாதம் அனைத்தின் மூலத் தாயகமாகும்.

“பொருள்முதல்வாதம் என்பது இங்கிலாந்து வயிற்றில் பிறந்த பிள்ளையாகும். இங்கிலாந்தின் மதச் சித்தாந்தி டன்ஸ் ஸ்காட்டஸ் (Duns Scotus) ஏற்கெனவே “பருப்பொருளால் சிந்தனை செய்ய முடியாதா, என்ன?” என்று வினவினார்.

“இந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டும் பொருட்டு அவர் கடவுளின் சர்வ வல்லமையில் புகலிடம் தேடிக் கொண்டார் – அதாவது, அவர் இறையியல், பொருள்முதல்வாதத்தைப் போதிக்கும்படி செய்தார். தவிரவும் அவர் ஒரு பெயர்ப்போலிமைவாதி6. பொருள்முதல்வாதத்தின் தொடக்க வடிவமான பெயர்ப்போலிமைவாதம் பெருமளவு ஆங்கில மதச் சித்தாந்திகளிடையே காணப்படுகிறது.

“பேக்கன்தான் (Francis Bacon) ஆங்கிலப் பொருள்முதல்வாதத்தின் உண்மையான முன்னோடி ஆவார். அவருக்கு இயற்கைத் தத்துவம் மட்டுமே மெய்யான தத்துவம் ஆகும். அவருக்குப் புலன்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்பியல்தான் இயற்கைத் தத்துவத்தின் அதிமுதன்மையான பகுதியாகும். அனக்சாகோரசையும் (Anaxagoras) அவருடைய ஹோமியோமெரியாக்களையும் (homoiomeriae7, டெமாக்கிரீடசையும் (Democritus) அவருடைய அணுக்களையும் பேக்கன் அடிக்கடி தன்னுடைய ஆதாரமாகக் குறிப்பிடுகிறார். பேக்கன் கருத்துப்படி, புலன்கள் பிழைபடாதவை, அனைத்து அறிவுக்கும் மூலமாக விளங்குபவை. விஞ்ஞானம் அனைத்தும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை.

புலன்கள் அளிக்கும் விவரங்களைப் பகுத்தறிவு முறையிலான ஆய்வுக்கு உட்படுத்துவதில்தான் விஞ்ஞானம் அடங்கியுள்ளது.  தொகுப்பாய்வு, பகுப்பாய்வு, ஒப்பீடு, கூர்ந்த கவனிப்பு, பரிசோதனை ஆகியவைதாம்  இந்தப் பகுத்தறிவு முறையின் பிரதான வடிவங்கள் ஆகும். பருப்பொருளின் உள்ளார்ந்த பண்புகளுள் இயக்கம்தான் முதலாவதும் முதன்மையானதும் ஆகும். இந்த இயக்கம் எந்திரவியல், கணிதவியல் இயக்க வடிவத்தில் மட்டுமன்றி, பிரதானமாகப் பருப்பொருளின் உந்துசக்தி, உயிர்நாடியான ஆன்மா, இழுவிசை அல்லது ஜேக்கப் போமேயின் (Jakob Bohme) சொற்களில் கூறுவதெனில் ‘வதை’ (‘qual’)8 வடிவிலும் அப்பண்பினைக் காணலாம்.

“பொருள்முதல்வாதமானது, அதன் முதலாவது படைப்பாளியான பேக்கனின் கருத்துகளில், பன்முக வளர்ச்சிக்கான வித்துகளை இப்போதும் தனக்குள்ளே நிரப்பி வைத்துள்ளது. ஒருபுறம், பருப்பொருளானது ஓர் உணர்வுபூர்வமான கவித்துவ வசீகரத்தால் சூழப்பெற்று, வெற்றி கொள்ளும் புன்னகையால் மனிதனை முழுமையாக ஆட்கொண்டு கவர்ந்திழுப்பதாகத் தோன்றுகிறது. மறுபுறம், ரத்தினச் சுருக்கமாக வகுக்கப்பட்டுள்ள இந்தப் போதனையில் இறையியலிருந்து தருவிக்கப்பட்ட ஒவ்வாத கூறுகள் அரும்பிக் கிடக்கின்றன.

Image result for Hobbes

ஹாப்ஸ்

“அதன் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சியில் பொருள்முதல்வாதம் ஒருபக்கச் சார்புடையதாக ஆனது. பேக்கனியப் பொருள்முதல்வாதத்தை முறைப்படுத்திய மனிதர் ஹாப்ஸ் (Hobbes) ஆவார் . புலன்களை அடிப்படையாகக் கொண்ட அறிவு அதன் கவித்துவ மலர்ச்சியை இழந்து, கணிதவியலாளரின் கருத்தியல் அனுபவமாக மாறுகிறது. வடிவ கணிதம் விஞ்ஞானங்களின் அரசியாகப் பிரகடனம் செய்யப்படுகிறது. பொருள்முதல்வாதம் மனிதகுல விரோதப் பாதையிலே பயணிக்கிறது. பொருள்முதல்வாதம் அதன் எதிராளியான மனிதகுல–விரோத, சதையில்லா ஆன்மீகவாதத்தை வெற்றி கொள்ள, அதுவும் ஆன்மீகவாதத்தின் கோட்டையிலேயே அதை வெற்றி கொள்ள, தன் உடலைத் தானே தண்டித்துக் கொண்டு, துறவியாக மாற வேண்டியதாகிறது. இவ்வாறாக, புலனுணர்வு சார்ந்த கருத்துருவாக இருந்த பொருள்முதல்வாதம் அறிவாற்றல் சார்ந்த கருத்துருவாக மாற்றம் காண்கிறது. ஆனால் அதிலும் பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அறிவாற்றலின் தன்மையாகிய முழு அளவிலான ஒத்திசைவினை வளர்த்தெடுக்கிறது.

“பேக்கனின் வழிவந்தவராக நின்று ஹாப்ஸ் இவ்வாறு வாதாடுகிறார்: மனித அறிவு அனைத்தும் புலன்களால் தருவிக்கப்படுகிறது எனில், பிறகு நம் கருத்துருக்களும் கருத்துகளும், அவற்றின் புலனுணர்வு வடிவங்கள் நீங்கப் பெற்ற, எதார்த்த உலகின் பொய்த் தோற்றங்களே அன்றி வேறல்ல. தத்துவத்தால் இந்தப் பொய்த் தோற்றங்களுக்குப் பெயர்கள் சூட்ட மட்டுமே முடியும். [வேறு ஒன்றும் செய்ய முடியாது]. ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட பொய்த் தோற்றங்களுக்குச் சூட்டலாம். பெயர்களுக்குங்கூட பெயர்கள் இருக்கலாம். ஒருபுறம் அனைத்துக் கருத்துகளும் புலனுணர்வின் உலகிலிருந்து பிறப்பவை என்று கூறிக்கொண்டு. மறுபுறம் ஒரு சொல் சொல்லைவிடக் கூடுதலானது என்றும், நம் புலன்கள் நமக்குத் தெரியப்படுத்துகின்ற, ஒன்றாகவும் தனித்தனியாகவும் நிலவும் உயிர்ஜீவிகளையன்றி, தனிப்பட்ட தன்மை கொண்டிராத, பொதுத் தன்மை கொண்ட உயிர்ஜீவிகளும் இருக்கின்றன என்றும் கூறுவோம் எனில் அது ஒரு முரண்பாட்டையே குறிக்கும்.

உருவமில்லா உருவம் என்பது எவ்வளவு அபத்தமோ, அதே அளவுக்கு உருவமில்லாப் பொருள் என்பதும் அபத்தமானதே. உருவம், இருத்தல், பொருள் இவையனைத்தும் ஒரே எதார்த்தத்தைச் சுட்டும் வெவ்வேறு சொற்களே அன்றி வேறல்ல. சிந்திக்கும் பருப்பொருளிலிருந்து சிந்தனையைத் தனியே பிரிக்க முடியாது. இந்தப் பருப்பொருள்தான் உலகில் நடைபெற்றுவரும் அனைத்து மாற்றங்களுக்கும் அடிநிலைக் கூறு. வரம்பிலி (infinite) என்னும் சொல், நம் மனம் [கணிதத்தில்] முடிவின்றித் தொடர்ந்து கூட்டிச் செல்லும் திறன்கொண்டது என்பதைக் குறிக்க வேண்டும். இல்லையேல் அச்சொல் பொருளற்றது ஆகும். பருப்பொருளான தன்மை கொண்டவற்றை மட்டுமே நம்மால் கண்டுணர முடிவதால், கடவுள் இருக்கிறாரா என்பதுபற்றி நாம் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. நான் இருக்கிறேன் என்பது மட்டுமே நிச்சயம். மனித உணர்ச்சி ஒவ்வொன்றும் ஓர் எந்திரவியல் இயக்கம் ஆகும். அது தொடக்கமும் முடிவும் கொண்டது. உந்துசக்திக்கான புறப்பொருள்களை நாம் நல்லவை என்கிறோம். இயற்கையைப் போன்று மனிதனும் அதே விதிகளுக்குத்தான் உட்பட்டுள்ளான். ஆற்றலும் சுதந்திரமும் வேறுபாடில்லாத ஒத்த கூறுகளே.

“பேக்கனின் கோட்பாடுகளை ஹாப்ஸ் முறைப்படுத்தினார். என்றாலும், அனைத்து மனித அறிவுக்கும் புலனுணர்வின் உலகே மூலம் என்கிற பேக்கனின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு ஹாப்ஸ் நிரூபணம் அளிக்கவில்லை. லோக் (Loke) என்பார் தாம் எழுதிய மனிதப் புரிதல் பற்றிய கட்டுரை (Essay on the Human Understanding) என்ற நூலில் இந்த நிரூபணத்தை அளித்தார்.

“பேக்கனியப் பொருள்முதல்வாதத்தின் ஆத்திகத் தப்பெண்ணங்களை ஹாப்ஸ் தகர்த்தெறிந்தார். அதுபோல, காலின்ஸ் (Collins), டாட்வெல் (Dodwell), கோவார்டு (Coward), ஹார்ட்லி (Hartley), பிரிஸ்ட்லி (Priestley) ஆகியோர், லோக் முன்வைத்த புலனுணர்வுவாதத்தின் விளிம்பில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் கடைசி இறையியல் தடைவரம்புகளைத் தகர்த்தெறிந்தனர். எப்படியும் நடைமுறைப் பொருள்முதல்வாதிகளுக்கு, [இயற்கைமத] இறையுண்மைக் கோட்பாடு9 மதத்திலிருந்து விடுபட ஓர் எளிய வழிமுறை ஆகும்.”

(கார்ல் மார்க்ஸ், “புனிதக் குடும்பம்”, பக்கம் 201-204)

Image result for கார்ல் மார்க்ஸ், “புனிதக் குடும்பம்”

இங்கிலாந்தில் நவீனப் பொருள்முதல்வாதத்தின் தோற்றம்பற்றி கார்ல் மார்க்ஸ் மேற்கண்டவாறு எழுதினார். ஆங்கிலேயர்கள், அவர்தம் முன்னோர்களுக்குக் கார்ல் மார்க்ஸ் வழங்கிய பாராட்டுரைகளை இப்போதெல்லாம் அப்படியொன்றும் விரும்பவில்லை எனில், அது பரிதாபத்துக்கு உரியதே. ஆனாலும் பேக்கன், ஹாப்ஸ், லோக் ஆகியோரே உயர்சிறப்புக்குரிய ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்  தத்துவ மரபுக்கு முன்னோடிகள் என்பது சற்றும் மறுக்க முடியாத உண்மையாகும். தரையிலும் கடலிலும் நடைபெற்ற அனைத்துப் போர்களிலும் ஜெர்மானியரும் ஆங்கிலேயரும் ஃபிரெஞ்சுக்காரர்களை வெற்றிகொண்ட போதிலும், ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்  தத்துவ மரபுதான், 18-ஆம் நூற்றாண்டை ஒப்புயர்வற்ற ஃபிரெஞ்சு நூற்றாண்டாக ஆக்கியது. அதுவும் அந்நூற்றாண்டின் மணிமகுடமாகத் திகழும் ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பே அவ்வாறு ஆக்கியது. இந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகளுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் வாழும் வெளியாட்களான நாம் இன்னும்கூட முயன்று வருகிறோம்.

இதை மறுப்பதற்கு இயலாது. இந்த [19-ஆம்] நூற்றாண்டின் நடுப்பகுதிவாக்கில், இங்கிலாந்தில் வசிப்பிடம் அமைத்துக் கொண்ட ஒவ்வொரு பண்பட்ட வெளிநாட்டவரையும் துணுக்குறச் செய்தது எதுவெனில், அன்றைய நிலையில், ஆங்கிலக் கவுரவ நடுத்தர வர்க்கத்தின் மதவெறியையும் மூடத்தனத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்ததே ஆகும். அக்காலத்தில் நாங்கள் அனைவருமே பொருள்முதல்வாதிகளாக இருந்தோம். அல்லது குறைந்தது மத நம்பிக்கைகளுக்கு ஆட்படாத முன்னேறிய சிந்தனையாளராக இருந்தோம். இங்கிலாந்திலுள்ள படித்த மக்களில் அனேகமாக அனைவருமே அனைத்து வகைப்பட்ட சாத்தியமில்லா அதிசயங்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

பக்லாண்டு (Buckland), மான்டெல் (Mantell) போன்ற புவியியல் அறிஞர்களுங்கூட, விவிலிய நூலில் காணப்படும் கட்டுக்கதைகளுக்கு அளவுக்கு அதிகமாக முரண்பட்டுவிடாமல் இருக்கும்பொருட்டு தங்களின் விஞ்ஞான உண்மைகளைத் திரித்துக் கூற வேண்டியிருந்தது. இவையெல்லாம் எங்களுக்கு எண்ணிப் பார்க்க முடியாதனவாகத் தோன்றின. மத விவகாரங்களைப் பொறுத்தமட்டில் தம் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்தத் துணிந்த மக்களைக் காண வேண்டுமெனில், படிப்பறிவில்லாத மக்களிடையே, “பாமரர் கூட்டம்” என்று அன்றைக்கு அழைக்கப்பட்ட உழைக்கும் மக்களிடையே, குறிப்பாக ஓவனிய சோஷலிஸ்டுகளிடையே செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் அதன்பிறகு இங்கிலாந்து “நாகரிகம்” அடைந்திருக்கிறது. 1851-ஆம் ஆண்டுக் கண்காட்சி [1851 மே முதல் அக்டோபர் வரை லண்டனில் நடைபெற்ற உலக தொழில், வணிகத்துறை கண்காட்சி], தனித்து ஒதுங்கி நின்ற ஆங்கிலக் குறுகிய மனப்பான்மைக்குச் சாவுமணி அடித்தது. உணவுமுறையிலும், நடையுடை பாவனைகளிலும், கருத்துகளிலும், இங்கிலாந்து படிப்படியாகச் சர்வதேச மயமானது. [ஐரோப்பியக்] கண்டத்தின் பழக்க வழக்கங்கள் இங்கே எந்த அளவுக்குப் பரவியுள்ளனவோ அந்த அளவுக்குச் சில ஆங்கில நடையுடை பாவனைகளும், மரபுகளும் [ஐரோப்பியக்] கண்டத்தில் பரவியிருந்தால் நன்றாயிருக்குமே என்று இப்போதெல்லாம் நான் ஆசைப்படுவதுண்டு. என்றபோதிலும், சாலடு எண்ணெய் இங்கு அறிமுகம் ஆகி (1851-க்கு முன்பு இது பிரபுக் குலத்தோருக்கு மட்டுமே தெரிந்திருந்தது), [அதன் பயன்பாடு] பரவியதைத் தொடர்ந்து, கூடவே மத விவகாரங்களில் [ஐரோப்பியக்] கண்டத்தவருக்கு உரித்தான ஐயுறவுவாதமும் (Scepticism) தவிர்க்க முடியாதபடி பரவியது.

தற்போது எந்த அளவுக்கு வந்துள்ளது என்றால், கண்ணியவான் மனப்பாங்கைப் பொறுத்தவரை, அறியொணாவாதம் (Agnosticism) இங்கிலாந்து திருச்சபையைப்போல அந்த அளவுக்குச் “சமூக அளவில் ஏற்புடையதாக” இன்னமும் கருதப்படவில்லை. என்றாலும், இப்போதும் கவுரவத்தில் பாப்டிசத்துக்கு (Baptism) ஏறத்தாழ நிகரானதாகவும், நிச்சயமாக ரட்சண்ய சேனைக்கு (Salvation Army)10 மேம்பட்டதாகவும் கருதப்படுகிறது. மதத்தின் மீதான அவநம்பிக்கை இவ்வாறு வளர்ந்து வருவது கண்டு பலரும் உண்மையிலேயே மனம் வருந்தி இந்தப் போக்கினைக் கண்டிக்கின்றனர். ஆனால் இவர்கள், இந்தப் “புதுப்பாணி எண்ணப் போக்குகள்”, வெளிநாட்டுச் சரக்குகள் அல்ல, “ஜெர்மனித் தயாரிப்புகளும்” அல்ல. அன்றாடப் பயன்பாட்டில் இருந்துவரும் எத்தனையோ பிற பண்டங்களைப் போல அவை ஐயத்துக்கு இடமின்றிப் பழைய ஆங்கில (Old English) மூலம் கொண்டவை; அவற்றின் இங்கிலாந்து மூலவர்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பேயே இன்று அவர்களின் சந்ததியர் செல்லத் துணிவதைக் காட்டிலும் இன்னும் நெடுந்தொலைவு சென்றனர் என்கிற உண்மைகளை அறிந்து கொள்வார்கள் எனில், அது மேற்கூறிய நிலைமைகளில் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்குமென நான் நம்புகிறேன்.

அறியொணாவாதம் என்பது, பொருள்பொதிந்த லங்காஷயர் (Lancashire) வழக்கில் சொல்வதெனில், உண்மையிலேயே “இலைமறை காயான” பொருள்முதல்வாதமே அன்றி வேறென்ன? இயற்கை பற்றிய அறியொணாவாதியின் கருத்தோட்டம் முழுக்கவும் பொருள்முதல்வாதத் தன்மை கொண்டதாகவே உள்ளது. இயற்கை உலகம் ஒட்டுமொத்தமும் [அகநிலை] விதிகளால் ஆளப்படுகிறது. வெளியிலிருந்து வரும் செயலின் தலையீட்டுக்குச் சிறிதும் இடமில்லை. ஆனால் அறியொணாவாதியோ இதோடு நில்லாமல், நமக்குத் தெரிந்த இப்பிரபஞ்சத்துக்கு அப்பால் கடவுள் ஒருவர் இருக்கிறார் என உறுதிப்படுத்தவோ, இல்லை என நிரூபிக்கவோ நம்மிடம் வழிமுறை ஏதுமில்லை எனச் சேர்த்துக் கொள்கிறார்.

Image result for Laplace

லாப்லாஸ்

இப்படிப்பட்ட ஒரு கருத்து, முன்பு மாபெரும் வானியல் வல்லுநர் லாப்லாஸ் (Laplace) அவர்களிடம், அவர் எழுதிய வான்மண்டல எந்திரவியல் பற்றிய ஆய்வறிக்கை (Treatise on Celestial Mechanics) என்னும் நூலில், உலகைப் படைத்தவரைக் குறிப்பிடக்கூட இல்லையே, ஏன் என நெப்போலியன் எழுப்பிய கேள்விக்கு, “அப்படியொரு கருதுகோள் எனக்குத் தேவைப்படவில்லை” என்று லாப்லாஸ் பெருமிதத்தோடு பதிலளித்தாரே, அந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில், பிரபஞ்சம் பற்றிய நம்முடைய பரிணாம வளர்ச்சிக் கருத்தோட்டத்தில் பிரபஞ்சத்தைப் படைத்தவருக்கோ, ஆள்பவர்க்கோ அறவே இடமில்லை. இப்போது நிலவிவரும் மொத்த உலகிலிருந்து விலகி ஒதுங்கியிருக்கும் கடவுள் பற்றிப் பேசுவது ஒரு முரண்பாட்டையே குறிக்கிறது. இது, மத நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை வலியச் சென்று அவமதிக்கும் செயலாகவே எனக்குத் தோன்றுகிறது.

மேலும், நம் அறியொணாவாதி நம்முடைய அறிவு அனைத்தும் நம் புலன்கள் நமக்குத் தெரிவிக்கும் தகவலை அடிப்படையாகக் கொண்டது என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனால், நம் புலன்கள் அவற்றின் மூலம் நாம் கண்டுணரும் புறப்பொருள்கள் பற்றிய சரியான உருவகங்களைத் தருகின்றன என்று நாம் தெரிந்து கொள்வது எப்படி என்கிற கேள்வியையும் சேர்த்துக் கொள்கிறார். மேலும் அவர் நமக்குத் தெரிவிக்க முற்படுவது என்னவெனில், புறப்பொருள்களைப் பற்றி அல்லது அவற்றின் தன்மைகளைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், அப்பொருள்கள் பற்றி உறுதியாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாத அவர், அப்பொருள்கள் அவருடைய புலன்களில் ஏற்படுத்திய எண்ணப் பதிவுகளையே பேசுகிறார். இந்த முறையிலான தர்க்க நியாயத்தை வெறும் வாக்குவாதத்தால் மட்டும் வீழ்த்துவது ஐயமின்றிக் கடினம் என்றே தோன்றுகிறது.

ஆனால் வாக்குவாதத்துக்கு முன்னதாகச் செயல் இருந்தது. Im Anfang war die That [“ஆதியில் இருந்தது செயல்” – கதேயின் ஃபாஸ்ட் (Goethe’s Faust) நாடகத்திலிருந்து]. மனிதக் கூர்மதி, சிக்கலைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் முன்பாகவே, மனிதச் செயல் அதற்குத் தீர்வு கண்டுவிட்டது. உணவைப் பற்றிய நிரூபணம் அதை உண்பதில் இருக்கிறது. புறப்பொருள்களில் நாம் கண்டுணரும் தன்மைகளுக்கு ஏற்ப அவற்றை நாம் நம் சொந்தப் பயன்பாட்டில் கையாளும் தருணம் முதற்கொண்டே, நம்முடைய புலனுணர்வு சரிதானா இல்லையா என்பதை ஐயந்திரிபற்ற சோதனைக்கு உட்படுத்துகிறோம். இந்தப் புலனுணர்வுகள் தவறாக இருந்திருக்கும் எனில், அப்பொருளை எதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றிய நம் மதிப்பீடும் தவறாகவே இருந்தாக வேண்டும். எனவே, நம் முயற்சி தோல்வியுறவே செய்யும். நம் நோக்கத்தை நிறைவேற்றுவதில் நாம் வெற்றி பெறுவோம் எனில், அதாவது, அப்பொருளைப் பற்றிய நம் கருத்தோடு அப்பொருள் ஒத்துப் போகிறது, மேலும் எந்த நோக்கத்துக்காக அப்பொருளைப் பயன்படுத்த எண்ணினோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறது  என்பது நமக்குத் தெரிய வருமாயின், அதுவே அப்பொருளைப் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியுமான நம் புலனுணர்வு எந்த அளவுக்கு நமக்குப் புறத்தே நிலவும் எதார்த்தத்துடன் ஒத்துப் போகிறது என்பதற்கு முடிவான நிரூபணம் ஆகும்.

மேலும், நாம் ஒரு தோல்வியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போதெல்லாம் நம்மைத் தோல்வியுறச் செய்த காரணத்தை அறிந்து கொள்ளப் பொதுவாக அதிக காலம் ஆவதில்லை. நாம் எந்தப் புலனுணர்வை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டோமோ, அது முழுமையற்றதாகவும் மேலோட்டமானதாகவும் இருந்தது என்றோ, தேவையற்ற முறையில் பிற புலனுணர்வுகளின் விளைவுகளுடன் இணைத்துப் புரிந்து கொள்ளப்பட்டது என்றோ தெரிந்து கொள்கிறோம். இதனைப் பிழையான தர்க்க நியாயம் என்கிறோம். நம் புலன்களை முறையாகப் பயிற்றுவிக்கவும்,  முறையாக உணர்ந்து முறையாகப் பயன்படுத்திய புலனுணர்வுகளால் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் நம் செயல்பாட்டினை வைத்துக் கொள்ளவும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும்வரை, நம் புலன்களால் உணரப்பட்ட பொருள்களின் புறநிலை இயல்புடன் நம் புலனுணர்வுகள் ஒத்துப் போதலை, நம் செயல்பாட்டின் விளைவு நிரூபிப்பதை நாம் நிச்சயம் காண்போம். விஞ்ஞான ரீதியில் நெறிப்படுத்தப்பட்ட நம் புலனுணர்வுகள் அவைதம் இயல்பான தன்மையாலேயே புற உலகு குறித்து எதார்த்தத்துக்குப் புறம்பான கருத்துகளை நம் மனதில் தோற்றுவிக்கின்றன என்றோ, அல்லது, புற உலகுக்கும் அதைப் பற்றிய நம் புலனுணர்வுகளுக்கும் இடையே உள்ளார்ந்த ஒத்திசைவின்மை இருக்கிறது என்றோ இதுவரையில் ஒரே ஒருமுறைகூட நாம் முடிவுக்கு வர நேர்ந்ததில்லை.

Image result for Neo-Kantian

ஆனால், நவீன-கான்ட்டிய (Neo-Kantian) அறியொணாவாதிகள் நம்முன் வந்து கூறுகின்றனர்: ஒரு பொருளின் தன்மைகளை நாம் சரியாகக் கண்டுணரலாம். ஆனால், எந்தவொரு புலன்வழி அல்லது சிந்தனைவழிச் செயல்முறை மூலமும் “தன்னிலைப் பொருளை” (thing-in-itself) புரிந்து கொள்ள முடியாது. இந்தத் “தன்னிலைப் பொருள்” நம் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது. நெடுங்காலம் முன்பே ஹெகல் இதற்குப் பதிலுரைத்துள்ளார்: ஒரு பொருளின் அனைத்து தன்மைகளையும் நீங்கள் அறிந்திருப்பின், அப்பொருளையே நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். அப்பொருள் நாம் இல்லாமலே [புறத்தே] நிலவுகிறது என்கிற உண்மையைத் தவிர எதுவும் இருக்கவில்லை. உங்கள் புலன்கள் அவ்வுண்மையை உங்களுக்கு உணர்த்தும்போது, கான்டின் பிரசித்தி பெற்ற அறிந்துகொள்ள முடியாத Ding an sich என்னும் “தன்னிலைப் பொருளின்” கடைசி மிச்சத்தையும் புரிந்துகொண்டு விடுகிறீர்கள். இதோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். கான்டின் காலத்தில் இயற்கைப் பொருள்களைப் பற்றிய நம் அறிவு உண்மையில் முழுமையற்றதாகவே இருந்தது. எனவே, அப்பொருள்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நமக்கிருந்த சொற்ப அறிவின் பின்னால், புதிரான “தன்னிலைப் பொருள்” ஒன்று இருக்கலாமென நியாயமாகவே அவர் சந்தேகப்பட்டிருக்கக் கூடும். புரிந்து கொள்ள முடியாத இப்பொருள்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டன, பகுத்தாயப்பட்டன.

அதற்கும் மேலாக மாபெரும் விஞ்ஞான முன்னேற்றத்தின் பலனாக அப்பொருள்கள் மறுஉற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாமே உற்பத்தி செய்ய முடிகிற ஒரு பொருளை அறிய முடியாததாக நிச்சயம் கருத முடியாது. இந்த [19-ஆம்] நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த ரசாயனவியலுக்கு  அங்ககப் பொருள்கள் இத்தகைய புதிரான பொருள்களாகவே இருந்தன. இப்போது நாம் இப்பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக அவற்றின் ரசாயனத் தனிமங்களிலிருந்து அங்ககச் செயல்முறைகளின் உதவியின்றியே உருவாக்கக்  கற்றுள்ளோம். எந்தப் பொருளாயினும் அதன் ரசாயனக் கட்டமைப்பைத் தெரிந்து கொண்டதுமே அதன் தனிமங்களிலிருந்து அப்பொருளை உருவாக்கிட முடியும் என நவீன ரசாயனவியல் அறிஞர்கள் அறிவிக்கின்றனர். உயர்நிலை அங்ககப் பொருள்களின் அதாவது அல்புமின் சேர்மங்களுடைய கட்டமைப்பை அறிந்து கொள்வதில் இன்னும் நாம் மிகவும் பின்தங்கியே உள்ளோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னருங்கூட நாம் இந்த அறிவைப் பெற்று, அந்த அறிவையே ஆயுதமாகக் கொண்டு, செயற்கை அல்புமினை உற்பத்தி செய்ய மாட்டோம் என்று கூற இது காரணமாக முடியாது. ஆனால், அல்புமினை நாம் உற்பத்தி செய்யும் நிலையை அடையும்போது, அதே வேளையில், அங்கக உயிரை உற்பத்தி செய்தவராகி விடுவோம். ஏனெனில், உயிரானது அதன் மிகவும் அதிகீழ்மட்ட வடிவங்களிலிருந்து அதியுச்சிமட்ட வடிவங்கள் வரையில் அல்புமின் சேர்மங்கள் நிலவுவதற்கான இயல்பான முறையே அன்றி வேறல்ல.

என்றாலும், நம் அறியொணாவாதி முறையான மன அளவிலான வரம்புகளை இட்டுக் கொண்டவுடனே அவர் அப்பட்டமான உயர்தரப் பொருள்முதல்வாதியைப் போன்றே பேசுகிறார், செயல்படுகிறார். பருப்பொருளும், இயக்கமும் அல்லது இப்போது அழைக்கப்படுவது போல ஆற்றலும், நாம் அறிந்தவரை படைக்கவோ, அழிக்கவோ முடியாதவை என்றாலும், எப்போதோ ஒரு காலத்தில் அவை படைக்கப்படவில்லை என்பதற்கான நிரூபணம் நம்மிடம் இல்லை என அவர் கூறலாம். ஆனால், குறிப்பிட்ட எந்தவொரு சூழ்நிலையிலாவது, அவருடைய இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்த நீங்கள் முயல்வீர்கள் எனில், உடனே அவர் உங்கள் வாதத்தைப் புறந்தள்ளுவார். ஆன்மீகவாதத்தின் சாத்தியப்பாட்டைக் கருத்தளவில் (in abstracto) ஏற்றுக்கொள்ளும் அவர் நடைமுறையில் (in concreto) புறக்கணித்து விடுகிறார். நாம் அறிந்த வரையிலும் அறிய முடிகிற வரையிலும் பிரபஞ்சத்தைப் படைத்தவனும் இல்லை, ஆள்பவனும் இல்லை என்று கூறுவார்; நம்மைப் பொறுத்தமட்டில் பருப்பொருளும் ஆற்றலும் படைக்கவோ அழிக்கவோ முடியாதவை; நமக்குச் சிந்தனை என்பது ஆற்றலின் ஒரு வடிவமாகும், மூளையின் செயல்பாடாகும்; நாம் அறிந்ததெல்லாம், பருப்பொருள் உலகம் மாற்ற முடியாத விதிகளால் ஆளப்படுகிறது; இன்னும் இதுபோல என்னவெல்லாமோ கூறுவார். இவ்வாறு, அவர் விஞ்ஞானம் வழிப்பட்ட மனிதராக இருக்கும்வரையில், அவர் ஏதோ ஒன்றை அறிந்தவராக இருக்கும்வரையில், அவர் ஒரு பொருள்முதல்வாதி ஆவார். அவருடைய விஞ்ஞானத்துக்கு வெளியே, அவர் எதுவும் அறிந்திடாத துறைகளில், அவர் தம் அறியாமையைக் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து அறியொணாவாதம் (Agnosticism) என்று கூறிக் கொள்கிறார்.

எது எப்படி இருந்தாலும், ஒன்று மட்டும் தெளிவானது: நான் ஓர் அறியொணாவாதியாக இருந்திருந்தாலும்கூட, இச்சிறு நூலில் சுருக்கமாக [நான்] வரைந்து காட்டியுள்ள, வரலாறு பற்றிய கருத்தோட்டத்தை, “வரலாற்று அறியொணாவாதம்” (Historical Agnosticism) என்று நான் குறிப்பிட்டிருக்க முடியாது என்பது வெளிப்படை. மத நம்பிக்கை கொண்டோர் என்னைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். அறியொணாவாதிகள், எங்களை வைத்து நையாண்டி செய்கிறீர்களா என்று சீற்றத்துடன் கேட்டிருப்பார்கள். வரலாற்றின் வளர்ச்சிப் போக்கு குறித்த கருத்தோட்டத்தை, ஆங்கிலத்திலும் அதோடு ஏனைய பிற மொழிகள் பலவற்றிலும், “வரலாற்றுப் பொருள்முதல்வாதம்” (Historical Materialism) என்னும் சொல்தொடரை நான் பயன்படுத்தினால், இங்கிலாந்துக் கவுரவ மனப்பான்மையர்கூட அளவுமீறி அதிர்ச்சி அடையமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். வரலாற்றுப் பொருள்முதல்வாதம், முக்கியமான அனைத்து வரலாற்று நிகழ்வுகளுக்கும் முடிவான காரணத்தையும், அந்நிகழ்வுகளின் மாபெரும் உந்து சக்தியையும், சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் ஏற்படும் மாறுதல்கள், அவற்றின்  விளைவாக, வேறுபட்ட வர்க்கங்களை உருவாக்கும் சமுதாயப் பிரிவினை, அவ்வர்க்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் ஆகியவற்றில் கண்டறிய முனைகிறது.

Image result for ancient england

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இங்கிலாந்துக் கவுரவ மனப்பான்மைக்கும்கூட அனுகூலமாக இருக்கலாம் என்பதை நான் எடுத்துக் காட்டினால், ஒருவேளை எனக்கு இந்தச் சிறப்புரிமை வெகுவிரைவிலேயே அளிக்கப்படலாம். சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் குடியமர்ந்த பண்பட்ட வெளிநாட்டினர் எவரையும், அவர் அன்றைய நிலையில் ஆங்கிலக் கவுரவ நடுத்தர வர்க்கத்தின் மதவெறியையும் மூடத்தனத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம், துணுக்குறச் செய்தது என்கிற உண்மையை நான் மேலே குறிப்பிட்டேன். அக்காலத்திய கவுரவமான ஆங்கில நடுத்தர வர்க்கம் அறிவார்ந்த வெளிநாட்டவர் கண்ணுக்குத் தெரிந்ததுபோல் அப்படியொன்றும் முட்டாள்தனமாக இருக்கவில்லை என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டப்போகிறேன். அவ்வர்க்கத்தின் மதப்பற்று புரிந்து கொள்ளக் கூடியதே.

மத்திய காலத்திலிருந்து ஐரோப்பா வெளித்தோன்றியபோது, நகரங்களில் உதித்தெழுந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்கம்தான் ஐரோப்பாவின் புரட்சிகரக் கூறாக உருவானது. மத்திய காலப் பிரபுத்துவ அமைப்பினுள்ளே அது அங்கீகாரத்துக்குரிய ஒரு நிலையை வென்றெடுத்தது. ஆனால், இந்த நிலையும்கூட அதன் விரிந்து பரவிய ஆற்றலுக்கு [ஏற்றவாறின்றி] மிகவும் குறுகியதாகவே ஆகிப் போனது. முதலாளித்துவ வர்க்கமான இந்த நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி, [அன்று நிலவிய] நிலப்பிரபுத்துவ அமைப்பு தொடர்வதற்கு முட்டுக்கட்டை ஆகியது. எனவே, நிலப்புரத்துவ அமைப்பு வீழ்ந்துபோக நேரிட்டது.

ஆனால், நிலப்பிரபுத்துவத்தின் மாபெரும் சர்வதேச மையமாய் இருந்தது ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையாகும். அது, நிலப்பிரபுத்துவ மேற்கு ஐரோப்பா முழுவதையும், உள்ளே நிகழ்ந்துவந்த அனைத்துப் போர்களையும் மீறி, இஸ்லாமிய நாடுகளுக்கும், அதே அளவுக்கு பிரிந்து போன கிரேக்கர்களுக்கும் எதிரான மாபெரும் அரசியல் அமைப்பாக ஒன்றுபடுத்தியது. அது, நிலப்பிரபுத்துவ நிறுவனங்களை புனித தீட்சையின் ஒளிவட்டத்தால் சூழ்ந்து கொண்டது. நிலப்பிரபுத்துவ அமைப்பை மாதிரியாகக் கொண்டு, தன் சொந்தப் படிநிலை அமைப்பை ஒழுங்கமைத்துக் கொண்டது. முடிவில், அது கத்தோலிக்க உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதியை முழுமையாகக் கைப்பற்றி வைத்துக் கொண்டு,   தானே மிகமிகச் சக்திவாய்ந்த ஒரு நிலப்பிரபுவாகச் செயல்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும், விரிவான அளவில், மதச்சார்பற்ற நிலப்பிரபுத்துவத்தின் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் தொடுப்பதற்கு முன்பாக, அதன் புனித மைய நிறுவனமாகிய இந்தத் திருச்சபையை ஒழித்தாக வேண்டியிருந்தது.

அதோடு, நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து விஞ்ஞானம் மாபெரும் புத்தெழுச்சி பெற்று வளர்ந்தது. வானியல், எந்திரவியல், பௌதிகவியல், உடல் கூற்றியல், உடலியல் ஆகியவை மீண்டும் பேணி வளர்க்கப்பட்டன. மேலும், முதலாளித்துவ வர்க்கத்துக்கு, அதன் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சிக்காக, இயற்கைப் பொருள்களின் பௌதிகப் பண்புகளையும், இயற்கைச் சக்திகளின் செயல்பாட்டு முறைகளையும் ஆய்ந்தறியும் விஞ்ஞானம் தேவைப்பட்டது. இதுநாள்வரையில் விஞ்ஞானம் திருச்சபையின் பணிவுமிக்க பணிப்பெண்ணாகவே இருந்து வந்தது. மதநெறியால் விதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டி வளர விஞ்ஞானம் அனுமதிக்கப்படவில்லை. அந்தக் காரணத்தால் அது விஞ்ஞானமாகவே இருக்க முடியவில்லை. விஞ்ஞானம் திருச்சபையை எதிர்த்துக் கலகம் புரிந்தது. முதலாளித்துவ வர்க்கத்தால் விஞ்ஞானம் இன்றிச் செயலாற்ற முடியவில்லை. எனவே, அதுவும் திருச்சபைக்கு எதிரான கலகத்தில் சேர்ந்துகொள்ள வேண்டியதாயிற்று.

வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கம் நிலைபெற்று நின்ற மதத்துடன் மோத வேண்டியிருந்த களங்களில் மேலே குறிப்பிட்ட இரண்டு மட்டுமே பின்வரும் உண்மைகளை எடுத்துக் காட்டப் போதுமானவை: முதலாவதாக, ரோமன் திருச்சபையின் ஏமாற்று வேடங்களுக்கு எதிரான போராட்டத்தில் மிக நேரடியாக அக்கறை கொண்டிருந்த வர்க்கம் முதலாளித்துவ வர்க்கம்தான். இரண்டாவதாக, நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும் அக்காலத்தில் மதவேடம் பூண வேண்டியிருந்தது. அனைத்துக்கும் முதலாக திருச்சபைக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. நகரங்களிலுள்ள பல்கலைக் கழகங்களும் வணிகர்களும் குரல் எழுப்பத் தொடங்கினால், நாட்டுப்புற மக்கள் திரள்களிலும், தாங்கள் வெறுமனே பிழைப்பு நடத்த, மதம்சார்ந்த, மதம்சாராத தங்களின் நிலவுடைமைப் பிரபுக்களோடு எங்கெங்கும் போராட வேண்டியிருந்த விவசாயிகளிடத்திலும் நிச்சயம் வலுவான எதிரொலியை எழுப்ப வேண்டியிருந்தது. அவ்வாறே எழுப்பவும் செய்தது.

நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக நடந்த முதலாளித்துவ வர்க்கத்தின் நெடிய போராட்டம் தீர்மானகரமான மூன்று பெரும் போர்களில் உச்சத்தைத் தொட்டது.

அவற்றுள் முதலாவது போர், ஜெர்மனியில் நடைபெற்ற, புரொட்டெஸ்டன்ட் சீர்திருத்தம் (Protestant Reformation) என்றழைக்கப்பட்ட ஒன்றாகும். திருச்சபைக்கு எதிராக லூதர் (Luther) எழுப்பிய போர்க்குரலுக்குச் செவிசாய்த்து, அரசியல் தன்மை வாய்ந்த இரு எழுச்சிகள் தோன்றின. முதலாவது, ஃபிரான்ஸ் வான் ஸிக்கின்கென் (Franz von Sickingen) தலைமையின்கீழ் கீழ்நிலைப் பிரபுக்கள் நடத்தியது (1523). அடுத்தது, 1525-இல் நடைபெற்ற மாபெரும் விவசாயிகள் போர் (Peasants’ War). இரண்டும் தோற்கடிக்கப்பட்டன. இத்தோல்வி பிரதானமாக, போரில் மிகவும் அக்கறை கொண்ட தரப்பினர்களான நகரங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களின் உறுதியின்மையால் நேர்ந்ததாகும் – இங்கே நாம் இந்த உறுதியின்மைக்கான காரணங்களுக்குள் நுழைய இயலாது. அன்றுதொட்டு, இந்தப் போராட்டம் வட்டாரச் சிற்றரசர்களுக்கும் மைய அதிகாரத்துக்கும் இடையேயான சண்டையாகச் சீரழிந்து போனது. ஐரோப்பாவின் அரசியல் முனைப்புள்ள தேசங்களின் அணியிலிருந்து ஜெர்மனியை 200 ஆண்டுகளுக்கு விலக்கி வைப்பதில் முடிந்தது. லூதரனியச் சீர்திருத்தமோ உண்மையில் ஒரு புதிய மதநெறியை, எதேச்சாதிகார முடியாட்சிக்கு ஏற்புடைய ஒரு மதத்தைத் தோற்றுவித்தது. வடகிழக்கு ஜெர்மனியின் விவசாயிகள் லூதரனியத்துக்கு மதம் மாறிய கணமே, அவர்கள் சுதந்திர மனிதர்கள் நிலையிலிருந்து பண்ணையடிமைகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

Image result for Calvin

கால்வின்

ஆனால், எங்கு லூதர் தோற்றாரோ அங்குக் கால்வின் (Calvin) வெற்றி சூடினார். கால்வினுடைய மதநெறி, அவர் காலத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் துணிவுமிக்க பகுதியினருக்கு ஏற்ற ஒன்றாக இருந்தது. போட்டி மிகுந்த வணிக உலகில் வெற்றி அல்லது தோல்வி, ஒரு மனிதனின் செயல்பாடு அல்லது சாமர்த்தியத்தைச் சார்ந்தது இல்லை. அவனால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைமைகளைப் பொறுத்தே அமைகின்றது. கால்வினுடைய ஊழ்வினைக் கோட்பாடு இந்த உண்மையின் மதநெறிப்பட்ட வெளிப்பாடே ஆகும். இங்கு நடப்பதெல்லாம் ஒரு மனிதனின் எண்ணத்தையோ, அவனுடைய செயலையோ சார்ந்ததல்ல, யாருக்கும் தெரியாத அனைத்துக்கும் மேலான பொருளாதாரச் சக்திகளின் கருணையையே சார்ந்ததாகும். குறிப்பாகப் பொருளாதாரப் புரட்சி நிகழும் ஒரு காலகட்டத்தில் இது நிச்சயமான உண்மையாகும்.

அப்படியொரு காலகட்டத்தில், பழைய வணிகத் திசைவழிகளும் வணிக மையங்களும் மறைந்து அவற்றுக்குப் பதிலாகப் புதியவை தோன்றின. இந்தியாவும் அமெரிக்காவும் உலகுக்குத் திறந்து விடப்பட்டன. மிகவும் புனிதமான பொருளாதார நம்பிக்கையாதாரப் பொருள்களான தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்புங்கூட நிலைகுலைந்து சரியத் தொடங்கியது. கால்வினுடைய திருச்சபை சாசனம் முற்ற முழுக்க ஜனநாயகத் தன்மையும், குடியரசுத்  தன்மையும் கொண்டதாக இருந்தது. கடவுளின் பேரரசு குடியரசுமயமாக்கப்பட்ட பிறகு இவ்வுலகின் பேரரசுகள் முடிமன்னர்களுக்கும் பிஷப்புகளுக்கும் பிரபுக்களுக்கும் கீழ்ப்பட்டதாக இருக்க முடியுமா? ஜெர்மன் லூதரனியம் சிற்றரசர்களின் கைகளில் உவப்பான கருவியாக  ஆகியபோது, கால்வினியம் ஹாலந்தில் ஒரு குடியரசையும், இங்கிலாந்திலும், அனைத்துக்கும் மேலாக ஸ்காட்லாந்திலும், முனைப்பான குடியரசுக் கட்சிகளையும் நிறுவியது.

இரண்டாவது மாபெரும் முதலாளித்துவ எழுச்சி தனக்கு வேண்டிய கோட்பாட்டு விளக்கம் கால்வினியத்தில் முற்றிலும் தயாரான நிலையில் இருக்கக் கண்டது. இந்த எழுச்சி இங்கிலாந்தில் நடைபெற்றது. நகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கம் இதை நடத்தியது. நாட்டுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த குறுநிலக் கிழார் இனம் போராடி அதை வெற்றிபெறச் செய்தது. இதில் விந்தையூட்டுவது என்னவெனில், மூன்று மாபெரும் முதலாளித்துவ எழுச்சிகள் அனைத்திலும் [முன்னணியில் நின்று] போரிட வேண்டிய சேனையாக அமைவது விவசாயி இனமே. வெற்றி கிட்டியபின் அந்த வெற்றியின் பொருளாதார விளைவுகளால், சர்வ நிச்சயமாக நாசமாகும் வர்க்கமும் இதே விவசாயி இனம்தான். குரோம்வெல்லுக்கு (Cromwell) பிறகு நூறு ஆண்டுகளில், இங்கிலாந்தின் குறுநிலக் கிழார் இனம் அனேகமாக மறைந்தொழிந்து போனது. என்றாலும், இந்த குறுநிலக் கிழார் இனமும், நகரங்களில் வாழ்ந்த சாதாரண மக்கள் பகுதியினரும் இல்லாமல் முதலாளித்துவ வர்க்கத்தினர் மட்டும் ஒருபோதும் இந்தப் போராட்டத்தை அதன் இறுதி முடிவுவரை நடத்தி வென்றிருக்க மாட்டார்கள்.

முதலாம் சார்லஸ் மன்னரை ஒருபோதும் சிரச்சேதத்துக்கு உள்ளாக்கியிருக்க மாட்டார்கள். அக்காலகட்டத்தில் கனிந்துவந்து கைகூடிய முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிகளையாவது தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, புரட்சியைக் கணிசமான அளவுக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது – 1793-இல் ஃபிரான்சிலும், 1848-இல் இங்கிலந்திலும் நடந்ததைப் போன்று முற்றிலும் அதே மாதிரி. உண்மையில் இது முதலாளித்துவ சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி விதிகளில் ஒன்றாக இருக்குமெனத் தோன்றுகிறது.

நல்லது, இத்தகைய மிகைப்படியான புரட்சிகரச் செயல்பாட்டுக்குத் தவிர்க்கவியலாத எதிர்வினை கட்டாயமாகப் பின்தொடர்ந்தது. இந்த எதிர்வினையும் அதன் பங்குக்குத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கான எல்லையையும் தாண்டிச் சென்றது. இப்படித் தொடர்ந்து நிகழ்ந்த பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின், முடிவாகப் புதிய ஈர்ப்பு மையம் உருவானது. அதுவே ஒரு புதிய தொடக்கப் புள்ளியாக ஆனது. [இங்கிலாந்து] கவுரவ மனப்பான்மையினரால் “மாபெரும் கலவரம்” என்ற பெயரில் அறியப்பட்ட, ஆங்கிலேய வரலாற்றின் இந்த மகத்தான காலகட்டமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த போராட்டங்களும், ஒப்பீட்டளவில் அற்பமானதொரு நிகழ்ச்சியால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. மிதவாத வரலாற்று அறிஞர்கள் அந்நிகழ்ச்சிக்குப் “புகழ் படைத்த புரட்சி” (the Glorious Revolution)11 எனப் பெயர் சூட்டினர்.

Image result for முதலாளித்துவ நிலப்பிரபு

இந்தப் புதிய தொடக்கப் புள்ளி, வளர்ந்து வந்த நடுத்தர வர்க்கத்துக்கும், முன்னாள் நிலப்பிரபுத்துவ நில உடைமையருக்கும் இடையேயான ஒரு சமரசமாக இருந்தது. இந்த நில உடைமையர், இப்போதுபோலப் பிரபுக்குலம் என்று அழைக்கப்பட்ட போதிலும், இதற்கு மிகவும் பிந்தைய ஒரு காலகட்டத்தில் ஃபிரான்சில் லூயி ஃபிலிப்பைப் போல “பேரரசின் முதலாவது முதலாளி” ஆவதற்கு அவர்களை இட்டுச் செல்லும் பாதையில் நீண்ட நாட்களுக்கு முன்பே அடியெடுத்து வைத்து விட்டார்கள். நல்ல வேளையாக, இங்கிலாந்தில் அதன் பழைய நிலப்பிரபுத்துவச் சீமான்கள் ரோஜாப் போரின்போது12 ஒருவரையொருவர் கொன்று அழிந்தனர். அவர்களின் சந்ததியர், பெரும்பாலும் பழைய குடும்பங்களின் வழித்தோன்றல்களாக இருந்த போதிலும், நேரடி வாரிசு வழியிலிருந்து பெருமளவு விலகியவர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவத் தன்மையைவிட மிகுதியும் முதலாளித்துவத் தன்மையிலான பழக்க வழக்கங்களையும் போக்குகளையும் கொண்ட, முற்றிலும் ஒரு புதிய குழுவினராக அமைந்தனர். அவர்கள் பணத்தின் மதிப்பை நன்கு புரிந்து கொண்டிருந்தனர்.  உடனடியாக, நூற்றுக்கணக்கான சிறு விவசாயிகளை வெளியேற்றிவிட்டு, [தங்கள் நிலங்களில்] அவர்களுக்குப் பதிலாக ஆடுகளை [கிடைகளில்] நிரப்பி, அவர்களின் [நிலத்துக்கான] வாடகையை உயர்த்த முற்பட்டனர். எட்டாம் ஹென்றி திருச்சபையின் நிலங்களை ஊதாரித் தனமாக வாரி வழங்கியபோது, புதிய முதலாளித்துவ நிலப்பிரபுக்களை கூட்டம் கூட்டமாக உருவாக்கினார்.

எண்ணற்ற பண்ணைகளைக் கைப்பற்றி, முற்றிலுமாக அல்லது ஒப்பீட்டளவில் புதிய முதலாளிகளுக்கு மறுவழங்கீடு செய்தனர். 17-ஆம் நூற்றாண்டு முழுவதும் இது தொடர்ந்தது. இதன் காரணமாகவும் புதிய முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் ஏராளமாக உருவாயினர். இதன் விளைவாக, ஏழாம் ஹென்றியின் காலத்திலிருந்தே ஆங்கிலப் “பிரபுக்குலத்தினர்” தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சியை எதிர்த்துச் செயல்படுவதற்கு மாறாக, மறைமுகமாக அதன்மூலம் லாபம் ஈட்டவே முயன்றனர். பொருளாதார அல்லது அரசியல் காரணங்களை முன்னிட்டு, நிதித்துறை, தொழில்துறை சார்ந்த முதலாளித்துவ வர்க்கத்தினரின் முன்னணி நபர்களுடன் ஒத்துழைக்க விருப்பம் கொண்ட, பெரும் நிலவுடைமையாளரின் ஒரு பிரிவு எப்போதுமே இருந்து வந்தது. எனவே, 1689-ஆம் ஆண்டின் சமரசம் எளிதாகவே நிறைவேறியது. நிதி, பட்டறைத் தொழில், வணிகம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார நலன்கள் தக்கவாறு கவனிக்கப்பட்ட வரையில், அரசியல் கொள்ளைப் பொருள்களான “முறைகேடான செல்வமும் நிலமும்” பெரிய நிலவுடைமைக் குடும்பங்களிடமே விட்டு வைக்கப்பட்டன.

[நடுத்தர வர்க்கத்தின்] இந்தப் பொருளாதார நலன்கள் அக்காலகட்டத்தில் தேசத்தின் பொதுக் கொள்கையைத் தீர்மானிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாக இருந்தன. சிறு விவகாரங்களைப் பற்றிய சச்சரவுகள் இருந்திருக்கலாம். ஆனால், மொத்தத்தில் பிரபுக்குல ஆட்சிக் கும்பல், தன்னுடைய பொருளாதாரச் செழிப்பானது, தொழில்துறை, வணிகத்துறை சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரச் செழிப்புடன் பிரிக்க முடியாதபடி கட்டுண்டுள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தது.

அந்தக் காலகட்டம் முதலே முதலாளித்துவ வர்க்கம், இங்கிலாந்தின் ஆளும் வர்க்கங்களின் பணிவான ஒரு பகுதியாக, இருப்பினும் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியாக விளங்கியது. தேசத்தின் மிகப் பெருந்திரளான உழைக்கும் மக்களைக் கீழ்ப்படுத்தி வைத்திருப்பதில் [ஆளும் வர்க்கங்களின்] ஏனைய பகுதிகளுடன் முதலாளித்துவ வர்க்கமும் பொது அக்கறை கொண்டிருந்தது. வணிகர் அல்லது ஆலை அதிபர் தம் எழுத்தர்கள், தம் பணியாளர்கள், தம் வீட்டு வேலையாட்கள் ஆகியோரைப் பொறுத்தவரை எஜமானர் அல்லது அண்மைக் காலம்வரை அழைக்கப்பட்டதுபோல, “இயற்கையாகவே மேலானவர்” என்னும் நிலையை வகித்தார். இவரால் முடிந்த அளவுக்கு அவர்களிடம் அதிகமாகவும், தரமானதாகவும் வேலை வாங்குவது அவருடைய அக்கறையாக இருந்தது.

இதன்பொருட்டு, அவர்கள் முறையாகக் கீழ்ப்படிந்து நடக்க, அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது. அவர் [வணிகர் அல்லது பட்டறை உடைமையாளர்] தன்னளவில் மத நம்பிக்கை கொண்டவர். அவர் அரசரையும் பிரபுக்களையும் எதிர்த்துப் போரிட்டபோது அவருடைய மதமே அவருக்குப் போர்ப் பதாகையை வழங்கியது. இயற்கையாகவே அவருக்குக் கீழானவர்களின் மனங்களைத் தன் விருப்பத்துக்கு ஏற்ப வயப்படுத்தவும், கடவுளே விரும்பி, அவர்களுக்கு மேலான நிலையில் வைத்துள்ள எஜமானர்களின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் நடக்கும்படி செய்யவும், இதே மதம் அளித்துள்ள வாய்ப்புகளைக் கண்டுகொள்ள அவருக்கு அதிக நாள் ஆகவில்லை. சுருங்கக் கூறின், உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, தேசத்தின் மாபெரும் மக்கள் திரளான “கீழ்த்தட்டினரை”, தாழ்ந்த   நிலையிலேயே இருத்தி வைத்திருக்கும் பணியில், இப்போது ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தினர் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மதத்தின் செல்வாக்கு, இந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது.

முதலாளித்துவ வர்க்கத்தினரின் மதச் சார்புகளை வலுப்படுத்த இன்னொரு காரணியும் இருந்தது. அது இங்கிலாந்தில் உதித்தெழுந்த பொருள்முதல்வாதமாகும். இந்தப் புதிய கோட்பாடு நடுத்தர வர்க்கத்தின் பக்தி உணர்வுகளை அதிர்ச்சியுறச் செய்தது; அதுமட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தினர் உட்படப் படிப்பறிவில்லாத சாதாரண மக்களுக்குப் போதுமானதாக இருந்த மதத்தின் நிலைக்கு மாறாக, பொருள்முதல்வாதம், கற்றறிந்தவர்க்கும்  பண்பட்ட மனிதருக்கும் மட்டுமே ஏற்றதொரு தத்துவமாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. ஹாப்ஸின் வருகையுடன் பொருள்முதல்வாதம் அரச குடும்பத்தின் தனிச்சிறப்புரிமை, வரம்பற்ற அதிகாரம் ஆகியவற்றின் பாதுகாவலனாக அரங்கில் நுழைந்தது. பையன் துடிப்பானவன்தான், ஆனாலும் விசமத்தனமானவன் (puer robustus sed malitiosus) [ஹாப்ஸ் எழுதிய குடிமகன் என்னும் நூலின் முன்னுரையில் வரும் தொடர்] என்பார்களே, அத்தகைய மக்களை அடக்கி வைக்குமாறு அது எதேச்சாதிகார முடியரசுக்கு அழைப்பு விடுத்தது.

இதுபோல, ஹாப்சுக்குப் பின்வந்த போலிங்பிராக் (Bolingbroke), ஷாஃப்ட்ஸ்பரி (Shaftesbury) முதலானோர் வழங்கிய புதிய இறையுண்மைவாத வடிவிலான பொருள்முதல்வாதம், பிரபுக்குலத் தன்மை வாய்ந்த, மேதாவிகளுக்கு மட்டுமே புரியக்கூடிய கோட்பாடாக இருந்தது. எனவே, மத நம்பிக்கைக்கு எதிரான அதன் தன்மை, முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான அரசியல் தொடர்புகள், இந்த இரண்டின் காரணமாகவும் அது நடுத்தர வர்க்கத்தின் வெறுப்புக்கு ஆளானது.  எனவே, பிரபுக்குலத்தின் பொருள்முதல்வாதத்துக்கும் இறையுண்மைவாதத்துக்கும் எதிராக, முன்பு ஸ்டூவர்ட்டுகளுக்கு (Stuarts) எதிராகப் போர்க்கொடியையும், போரிடும் படையணிகளையும் வழங்கிய அதே புரொட்டெஸ்டன்ட் மதக் குழுக்கள்தாம், முற்போக்கான நடுத்தர வர்க்கத்துக்கு முக்கியமான வலிமையைத் தொடர்ந்து வழங்கி வந்தன. இன்றுங்கூட அக்குழுக்கள்தாம் “மாபெரும் மிதவாதக் கட்சியின்” (the Great Liberal Party) முதுகெலும்பாக அமைந்துள்ளன.

இதற்கிடையில், பொருள்முதல்வாதம் இங்கிலாந்திலிருந்து ஃபிரான்சுக்குச் சென்றது. அங்கே அது மற்றொரு பொருள்முதல்வாதத் தத்துவவியல் மரபான கார்ட்டீசியனியத்தின் (Cartesianism)13 ஒரு பிரிவோடு கலந்து சங்கமித்தது. ஃபிரான்சிலுங்கூட, தொடக்கத்தில் அது முற்றிலும் பிரபுக்குலத் தன்மை கொண்ட கோட்பாடாகவே விளங்கியது. ஆனால், விரைவிலேயே அதன் புரட்சிகரப் பண்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகள் தம் விமர்சனத்தை, மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் எதிர்கொண்ட விஞ்ஞான மரபு, அரசியல் நிறுவனம் எதுவாயினும், அவற்றுக்கும் அவர்களின் விமர்சனத்தை விரிவுபடுத்தினர். தங்களின் கோட்பாடு உலகளாவிய பயன்பாடு கொண்டது என்று கூறிக் கொள்வதை நிறுவும் பொருட்டு அவர்கள் குறுக்குவழியைக் கடைப்பிடித்தனர். அறிவுத்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் தங்களின் கோட்பாட்டினைத் துணிச்சலுடன் பிரயோகித்து, கலைக்களஞ்சியம் என்ற ஒரு பிரும்மாண்ட நூலில் தொகுத்து வைத்தனர். அதன் காரணமாக, அவர்கள் கலைக்களஞ்சியத்தார்14 என்று அழைக்கப்பட்டனர்.  இவ்வாறாக, பகிரங்கப் பொருள்முதல்வாதம், இறையுண்மைவாதம் ஆகிய அதன் இரு வடிவங்களில் ஏதேனும் ஒரு வடிவில் அது ஃபிரான்சின் ஒட்டுமொத்த படித்த, பண்பாடுடைய இளைஞர்களின் வழிகாட்டும் நெறியாக ஆனது. அதுமட்டுமின்றி, ஆங்கில முடியரசுவாதிகள் வரைந்து கொடுத்த இந்தக் கோட்பாடு இவ்வாறு, மாபெரும் புரட்சி (Great Revolution) வெடித்தபோது, ஃபிரெஞ்சுக் குடியரசுவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தத்துவார்த்தப் பதாகையைத் தந்தது. மனித உரிமைப் பிரகடனத்தின் (Declaration of the Rights of Man)15 வாசகத்தை வழங்கியது.

Image result for Great French Revolution

மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சி (The Great French Revolution) முதலாளித்துவ வர்க்கத்தின் மூன்றாவது எழுச்சியாகும். ஆனால், அதுதான் முற்றிலும் மத முகமூடியை கழற்றி எறிந்துவிட்டுப் போராடிய முதல் எழுச்சியாகும். அவ்வெழுச்சிப் போராட்டம் ஒளிவு மறைவற்ற அரசியல் வழிகளில் நடைபெற்றது. [போராட்டத்தில் மோதிக்கொண்ட] ஒருதரப்பு [முழுமையாக] அழிக்கப்பட்டு, மறுதரப்பு முழுமையான வெற்றியை ஈட்டும் வரையில்  உண்மையாகவே இறுதிவரை நடத்திச் செல்லப்பட்ட முதல் எழுச்சியாகவும் அது விளங்கியது. அதில், ஒருதரப்பான பிரபுக்குலம் அழிக்கப்பட்டு, மறுதரப்பான முதலாளித்துவ வர்க்கம் வெற்றியை ஈட்டியது. இங்கிலாந்தில் புரட்சிக்கு முந்தைய நிறுவனங்கள், புரட்சிக்குப் பிந்தைய நிறுவனங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியும், நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான சமரசமும், நீதிமன்ற முன்மாதிரித் தீர்ப்புகளின் தொடர்ச்சியிலும், நிலப்பிரபுத்துவ கால வடிவிலான சட்டங்கள் பயபக்தியுடன் பாதுகாக்கப்பட்டதிலும் வெளிப்பட்டன. ஃபிரான்சில் புரட்சியானது பழங்கால மரபுகளிலிருந்து முற்றிலும் முறித்துக் கொண்டதாக இருந்தது. அது நிலப்பிரபுத்துவத்தின் இறுதிச் சுவடுகளையும் துடைத்தழித்தது. முதலாளித்துவ நிலைமைகளுக்கு உகந்தவாறு, பழைய ரோமானியச் சட்டத்தின் தேர்ந்த தழுவலாக விளங்கிய, குடிமையியல் சட்டத் தொகுப்பினை (Code Civil) அது உருவாக்கியது. சரக்குகளின் உற்பத்திக் கட்டம் என்று மார்க்ஸ் அழைத்த அந்தப் பொருளாதாரக் கட்டத்துக்குரிய, நீதிமுறை உறவுகளின், ஏறத்தாழ முழுநிறைவான வெளிப்பாடாக அது விளங்கியது.

ஃபிரெஞ்சு நாட்டின் இந்தப் புரட்சிகரச் சட்டத் தொகுப்பு, விதிவிலக்கின்றி இங்கிலாந்து உட்பட, ஏனைய எல்லா நாடுகளிலும் சொத்துடைமைச் சட்டச் சீர்திருத்தங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இன்றும்கூடப் பயன்பட்டு வருகின்ற அளவுக்குத் திறம்பட உருவாக்கப்பட்டிருந்தது. லண்டன் என்று எழுது, கான்ஸ்டாண்டிநோபிள் என்று வாசி (vous ecrivez Londres et vous prononcez Constantinople) என்று ஒரு ஃபிரெஞ்சுக்காரர் கூறியதுபோல, ஆங்கிலச் சொல்லின் எழுத்துகளுக்கும் ஆங்கில உச்சரிப்புக்கும் இசைவு கிடையாது. அதுபோல, விளக்கும் மொழிக்கும் விளக்கவரும் பொருளுக்கும் இசைவு இல்லாத அந்த அநாகரிக நிலப்பிரபுத்துவ மொழியில்தான் ஆங்கிலச் சட்டம் முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார உறவுகளைக் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. என்றாலும், இந்த ஆங்கிலச் சட்டம்தான், இந்த ஆங்கிலச் சட்டம் ஒன்று மட்டும்தான், பழைய ஜெர்மானியத் தனிநபர் சுதந்திரம், வட்டார சுய-ஆட்சி, அனைத்துத் தலையீடுகளிலிருந்தும் (நீதிமன்றங்களின் தலையீடுகள் தவிர்த்து) விடுபட்ட சுயேச்சைநிலை ஆகியவற்றின் சிறந்த கூறுகளைக் காலங்காலமாகப் பேணிக்காத்து அவற்றை அமெரிக்காவுக்கும் காலனிகளுக்கும் வழங்கி இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இத்தகைய சிறந்த கூறுகள்தாம், [ஐரோப்பாக்] கண்டத்தில் எதேச்சாதிகார முடியாட்சிக் காலத்தில் இழக்கப்பட்டன. இன்னமும் அவை எங்குமே முழு அளவுக்கு மீட்கப்படவில்லை [என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்].

[இனி] நம் இங்கிலாந்து முதலாளியின் பக்கம் திரும்புவோம். [ஐரோப்பாக்] கண்டத்து முடியரசுகளின் உதவியுடன் ஃபிரெஞ்சுக் கடல்வழி வணிகத்தை அழிக்கவும், ஃபிரெஞ்சுக் காலனிகளைக் கைப்பற்றவும், கடல் ஆதிக்கப் போட்டிக்கு ஃபிரான்சிடம் எஞ்சியிருந்த கடைசி உரிமைத் தகுதிகளை நசுக்கவும், இங்கிலாந்து முதலாளிக்கு ஃபிரெஞ்சுப் புரட்சி அற்புதமான ஒரு வாய்ப்பை அளித்தது. இங்கிலாந்து முதலாளி ஃபிரெஞ்சுப் புரட்சியை எதிர்த்துப் போராடியதற்கு இது ஒரு காரணமாகும். இந்தப் புரட்சியின் வழிமுறைகள் அவருடைய மனப்பாங்குக்கு முற்றிலும் எதிராகச் சென்றன என்பது  இன்னொரு காரணமாக அமைந்தது. “அருவருக்கத்தக்க” அதன் தீவிரவாதம் மட்டுமின்றி, முதலாளித்துவ ஆட்சியை வரம்பு கடந்து, கடைக்கோடி எல்லைகளுக்கு எடுத்துச்செல்லும் அந்த முயற்சியேகூட [அவருக்கு ஏற்புடையதாயில்லை]. இங்கிலாந்து முதலாளி தம்முடைய பிரபுக்குலம் இல்லாமல் என்னதான் செய்ய முடியும்? அந்தப் பிரபுக்குலம்தானே, அவருக்கே உரித்தான நடையுடை பாவனைகளை அவருக்குக் கற்றுத் தந்தது; அவருக்கெனப் புதிய பாணிகளை உருவாக்கிக் கொடுத்தது; உள்நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டிய தரைப்படைக்கும், வெளிநாடுகளில் காலனிய நிலப்பரப்புகள், புதிய சந்தைகள் ஆகியவற்றை வென்று தந்த கடற்படைக்கும் அதிகாரிகளை அளித்தது.

உண்மையிலேயே, முதலாளித்துவ வர்க்கத்தினரில் முற்போக்கான ஒரு சிறுபான்மையும் இருந்தது. சமரச ஏற்பாட்டின் கீழ் இந்தச் சிறுபான்மையின் நலன்கள் அவ்வளவு நன்றாகக் கவனிக்கப்படவில்லை. இந்தச் சிறுபான்மைக் குழு, பெரும்பாலும் குறைந்த செல்வச் செழிப்புள்ள நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்டிருந்தது. ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், இக்குழு நாடாளுமன்றத்தில் அதிகாரம் இன்றி இருந்தது.

இவ்வாறு, பொருள்முதல்வாதம் ஃபிரெஞ்சுப் புரட்சியின் வழிகாட்டும் நெறியாக ஆனதெனில், கடவுள் பக்தி மிகுந்த ஆங்கில முதலாளியோ தம் மதத்தை மேலும் இறுகப் பற்றிக் கொண்டார். சாதாரண மக்களின் மத உள்ளுணர்வுகள் இழக்கப்படுமெனில், எத்தகு மோசமான விளைவு நேரும் என்பதைப் பாரிசில் நடைபெற்ற பயங்கர ஆட்சி நிரூபித்துக் காட்டவில்லையா? பொருள்முதல்வாதம் ஃபிரான்சிலிருந்து அண்டை நாடுகளுக்குப் பரவி, இதையொத்த கொள்கைநெறிப் போக்குகளால், குறிப்பாக ஜெர்மன் தத்துவவியலால், மேலும் வலுவூட்டப் பெற்றது. உண்மையில் பொருள்முதல்வாதமும் சுதந்திரச் சிந்தனையும் பொதுவாக [ஐரோப்பாக்] கண்டத்தில் பண்பட்ட மனிதர்களுக்கான அவசியத் தகுதிகளாக ஆகின.  எந்த அளவுக்கு அதிகமாக இந்தப் போக்குகளைக் காண முடிந்ததோ, அந்த அளவுக்கு அதிகப் பிடிவாதத்துடன் ஆங்கில நடுத்தர வர்க்கம் பன்முகப்பட்ட தன் மதநெறிகளோடு இறுகப் பிணைத்துக் கொண்டது. இந்தக் கொள்கை நெறிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கலாம். என்றாலும், அவை அனைத்தும் தெளிவான மத அடிப்படை கொண்ட கிறிஸ்துவக் கொள்கை நெறிகளாகவே இருந்தன.

புரட்சியானது ஃபிரான்சில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் வெற்றியை உறுதிசெய்த அதேவேளை, இங்கிலாந்தில் வாட் (Watt), ஆர்க்ரைட் (Arkwright), கார்ட்ரைட் (Cartwright) ஆகியோரும் இன்ன பிறரும், ஒரு தொழில்புரட்சியைத் தொடங்கி வைத்தனர். அப்புரட்சி, பொருளாதாரச் சக்தியின் ஈர்ப்பு மையத்தை அடியோடு இடம்பெயரச் செய்தது. முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வவளம், நிலவுடைமைப் பிரபுக்குலத்தின் செல்வவளத்தைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி வேகமாகப் பெருகியது. முதலாளித்துவ வர்க்கத்துக்கு உள்ளேயே நிதித்துறை சார்ந்த பிரபுக்குலத்தினரான வங்கி அதிபர்கள் போன்றோர், மென்மேலும் அதிகமாக ஆலை அதிபர்களால் பின்னிலைக்குத் தள்ளப்பட்டனர். 1689-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சமரசம், முதலாளித்துவ வர்க்கத்துக்குச் சாதகமாக, படிப்படியான மாறுதல்களுக்கு உள்ளான பிறகுங்கூட, அச்சமரசத் தரப்புகளின் ஒப்பீட்டுப் பலத்துக்கு இசைவானதாக இப்போது இல்லை. இந்தத் தரப்புகளின் பண்பியல்புங்கூட மாறிவிட்டது. 1830-ஆம் ஆண்டின் முதலாளித்துவ வர்க்கம் முந்தைய நூற்றாண்டின் முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக விளங்கியது. அரசியல் அதிகாரம் இன்னமும் பிரபுக்குலத்திடமே விட்டுவைக்கப்பட்டு இருந்தது. பிரபுக்குலம் அவ்வதிகாரத்தைப் புதிய தொழில்துறை முதலாளித்துவத்தின் உரிமைத் தகுதிகளை எதிர்த்து நிற்கப் பயன்படுத்தியது. [நாளடைவில்] அவ்வரசியல் அதிகாரம் புதிய பொருளாதார நலன்களுடன் முரண்பட்டுப் போனது. பிரபுக்குலத்துடன் ஒரு புதிய போராட்டம் தேவையாக இருந்தது. அத்தகு போராட்டம் புதிய பொருளாதார சக்தியின் வெற்றியில்தான் முடிவதாக இருக்கும்.

முதலாவதாக, 1830-ஆம் ஆண்டில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின் உத்வேகத்தில் சீர்திருத்தச் சட்டம் (Reform Act)17 அனைத்து எதிர்ப்பையும் மீறி உடனே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் முதலாளித்துவ வர்க்கத்துக்குக் குறிப்பிடத்தக்க, சக்திவாய்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது. அதன்பின் தானியச் சட்டங்கள் (Corn Laws)18 ரத்து செய்யப்பட்டதானது [கட்டற்ற வணிகத்துக்கான ஒரு நடவடிக்கை], நிலவுடைமைப் பிரபுக்குலத்தின் மீது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை, அதிலும் முக்கியமாக அதன் முனைப்பு மிக்க பகுதியான ஆலை அதிபர்களின் ஆதிக்கத்தை இறுதியாகவும் உறுதியாகவும் நிலைநிறுத்தியது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆகப்பெரும் வெற்றியாகும். என்றபோதிலும், அதுவே அவ்வர்க்கம் தன் சொந்தத் தனிப்பட்ட நலனுக்காகப் பெற்ற கடைசி வெற்றியாகவும் அமைந்தது. அதன்பிறகு இவ்வர்க்கம் பெற்ற வெற்றி எதுவாயினும், அதன் கூட்டாளியாக முதலில் இருந்து, ஆனால் விரைவிலேயே அதன் எதிராளியாக மாறிப்போன, ஒரு புதிய சமூக சக்தியுடன் அவ்வெற்றியைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது.

Image result for தொழிற்புரட்சி

தொழில்புரட்சி பெரிய ஆலை முதலாளிகளின் வர்க்கம் ஒன்றைத் தோற்றுவித்தது. அதைவிட எண்ணிக்கையில் அதிகமான ஆலைத் தொழிலாளிகளின் வர்க்கத்தையும் கூடவே தோற்றுவித்தது. தொழில்புரட்சியானது தொழில் உற்பத்தியில் ஒரு துறைக்குப்பின் இன்னொன்று என ஒவ்வொன்றாகப் பற்றிப் படர்ந்த அதே விகிதத்தில், இந்த ஆலைத் தொழிலாளி வர்க்கமும் படிப்படியாக எண்ணிக்கையில் அதிகரித்தது. அதே விகிதத்தில் இவ்வர்க்கம் அதன் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டது. தொழிலாளர்களின் கூட்டமைப்புகளுக்குத் தடைவிதித்த சட்டங்களை நீக்கத் தயக்கம் காட்டிய நாடாளுமன்றத்தைக் கட்டாயப்படுத்தியதன் மூலம், 1824-ஆம் ஆண்டு வாக்கிலேயே இவ்வர்க்கம் இந்த ஆற்றலை நிரூபித்துக் காட்டியது. சீர்திருத்தக் கிளர்ச்சியின்போது தொழிலாளர்கள், சீர்திருத்தக் கட்சியின் தீவிரக்கொள்கைப் பிரிவாக அமைந்து செயல்பட்டனர். 1832-ஆம் ஆண்டுச் சட்டம் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்காமல் ஒதுக்கியதும், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மக்கள் உரிமைச் சாசனத்தில் (People’s Charter) வகுத்தமைத்தனர். மாபெரும் முதலாளித்துவத் தானியச் சட்ட எதிர்ப்புக் கட்சிக்கு (Anti-Corn Law Party)19 எதிராகத் தங்களை ஒரு சுயேச்சையான கட்சியாக அமைத்துக் கொண்டனர். அதுதான் நவீன காலத்தின் முதலாவது தொழிலாளர் கட்சியான சாசனவாத (Chartists) இயக்கமாகும்.

அதன்பிறகு, [ஐரோப்பாக்] கண்டத்தின் 1848 பிப்ரவரி, மார்ச் புரட்சிகள் நடைபெற்றன. அவற்றில் உழைக்கும் மக்கள் மிகவும் முக்கியமானதொரு பங்கு வகித்தனர். குறைந்தது பாரிஸ் எழுச்சியிலேனும், முதலாளித்துவச் சமுதாயத்தின் கண்ணோட்டப்படி நிச்சம் அனுமதிக்க முடியாத கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்குப்பின் பொதுவான பிற்போக்கு வந்து சேர்ந்தது. முதலாவதாக, 1848 ஏப்ரல் 10-இல் சாசனவாதிகளின் தோல்வி; அடுத்து, அதே ஆண்டு ஜூனில், பாரிஸ் தொழிலாளர்களின் எழுச்சி நசுக்கப்படுதல்; பிறகு, இத்தாலி, ஹங்கேரி, தெற்கு ஜெர்மனியில் 1849-இன் பேரழிவு; முடிவாக, 1851 டிசம்பர் 2-இல் பாரிஸ் மீது லூயி போனப்பார்ட்டின் வெற்றி. தற்காலிகமாவது, தொழிலாளி வர்க்க உரிமைத் தகுதிகளின் [நிலைநாட்டப்படும்] அபாயம் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஆனால் என்ன விலைகொடுத்து [இது சாதிக்கப்பட்டது]! இங்கிலாந்து முதலாளி, சாதாரண மக்களை மத மனநிலையில் வைத்திருப்பதன் அவசியத்தை முன்பே உணர்ந்திருந்தார் என்றாலும், இந்த அனுபவங்கள் அனைத்துக்கும் பின்பு, அந்த அவசியத்தை இன்னும் எவ்வளவு அதிகமாக உணர்ந்திருப்பார்? [ஐரோப்பாக்] கண்டத்தைச் சேர்ந்த தன் கூட்டாளிகளின் ஏளனப் பேச்சுகளைப் பொருட்படுத்தாமல், அடித்தட்டு மக்களைக் கிறிஸ்துவ மதநெறிப்படுத்த, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக்கணக்கிலும் தொடர்ந்து செலவிட்டு வந்தார். இப்பணிக்குத் தன் சொந்த நாட்டு மதப் பணிக்குழுக்களுடன்  திருப்தியடையாமல், மத நிகழ்ச்சிகளை வணிக முறையில் ஏற்பாடு செய்யும் உலகின் மிகப்பெரும் அமைப்பாளர், சகோதரர் ஜொனாதனுக்கு (Brother Jonathan)20 வேண்டுகோள் விடுத்தார். மதப் புத்துயர்ப்புவாதத்தையும் (Revivalism)21, [மதப் பிரச்சாரர்களான] மூடி, சாங்கி, இன்ன பிறரையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தார். முடிவாக, இந்த இங்கிலாந்து முதலாளி, ரட்சண்ய சேனை (Salvation Army) அமைப்பின் ஆபத்தான உதவியையும் ஏற்றுக் கொண்டார். இந்த அமைப்பு, பண்டைய கிறிஸ்துவ மதத்தின் பிரசாரத்துக்குப் புத்துயிர்ப்பு அளிக்கிறது. ஏழைகளே [தேவனால்] தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. மத வழியில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போரிடுகிறது. இவ்வாறாக அது பண்டைய கிறிஸ்துவ வர்க்கப் பகைமையின் ஒரு கூறினைப் பேணி வளர்க்கிறது. இன்று தங்கள் கைப்பணத்தை வாரி வழங்கும் செல்வந்தர்களுக்கு இதே கூறு ஒருநாள் தொல்லையாக முடியலாம்.

Image result for நிலப்பிரபுத்துவ பிரபுக்குலம்

நிலப்பிரபுத்துவப் பிரபுக்குலம்

மத்திய காலத்தின்போது நிலப்பிரபுத்துவப் பிரபுக்குலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருந்தது போல, முற்றிலும் அதே பிரத்தியேகத் தன்மையுடன், முதலாளித்துவ வர்க்கம், எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அரசியல் அதிகாரத்தைச் சிறிது காலத்துக்கேனும் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது, வரலாற்று வளர்ச்சிப்போக்கின் ஒரு விதியாகவே தோன்றுகிறது. நிலப்பிரபுத்துவம் முற்றிலும் துடைத்தழிக்கப்பட்ட ஃபிரான்சில்கூட ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கம் மிகக் குறுகிய காலங்களுக்கு மட்டுமே அரசாங்கத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. லூயி ஃபிலிப்பின் ஆட்சிக் காலத்தில், 1830 – 1848 ஆண்டுகளில், முதலாளித்துவ வர்க்கத்தின் மிகச்சிறிய ஒரு பகுதிதான் அரசை ஆட்சி புரிந்தது. மிகப்பெரிய பகுதி, உயர்ந்த தகுதி வரம்பு காரணமாக வாக்குரிமையின்றி விலக்கப்பட்டிருந்தது. இரண்டாவது குடியரசின்கீழ், 1848 – 1851 ஆண்டுகளில் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆட்சி நடத்தினர். ஆனால், அவ்வாட்சி மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவர்களின் திறமையின்மை இரண்டாவது பேரரசைக் கொண்டு வந்தது. இப்போதுதான், அதாவது மூன்றாவது குடியரசில்தான், ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தினர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியதிகாரத்தைத் தன்பிடியில் வைத்துள்ளனர். அதற்குள்ளாக, ஏற்கெனவே வீழ்ச்சிக்குரிய உயிர்த்துடிப்பான அறிகுறிகளை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். நிலப்பிரபுத்துவத்தை அறிந்திடாத, சமுதாயம் தொடக்க நிலையிலேயே முதலாளித்துவ அடித்தளத்திலிருந்து தொடங்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தின் நீடித்து நிலைபெற்ற ஆட்சி சாத்தியமாக இருந்துள்ளது. மேலும் ஃபிரான்சிலும் அமெரிக்காவிலும்கூட முதலாளித்துவ வர்க்கத்தாரின் வாரிசுகளாகிய உழைக்கும் மக்கள் ஏற்கெனவே கதவைத் தட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

இங்கிலாந்தில் முதலாளித்துவ வர்க்கம் யாருடனும் பகிர்ந்து கொள்ளாத தனி ஆட்சியதிகாரத்தை என்றுமே வகித்ததில்லை. 1832-ஆம் ஆண்டு வெற்றிகூட அனேகமாக முதன்மையான அனைத்து அரசாங்க அலுவலகங்களையும் நிலவுடைமைப் பிரபுக்குலத்தின் கட்டுப்பாட்டிலேயே விட்டு வைத்தது. நடுத்தர வர்க்கம் பணிவுடன் இவ்வாட்சிக்குக் கீழ்ப்படிந்தது. மிகப்பெரிய மிதவாத ஆலை முதலாளி திரு.டபிள்யூ.ஏ.ஃபோர்ஸ்டர் (W.A.Forster) நிகழ்த்திய ஒரு பொதுக்கூட்டச் சொற்பொழிவுக்கு முன்புவரை இது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஃபிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்ளும்படி பிராட்ஃபோர்டு (Bradford) நகரின் இளைஞர்களை அச்சொற்பொழிவில் ஃபோர்ஸ்டர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். உலகில் அவர்கள் முன்னேறிச் செல்ல அதுவொரு வழியாகும் என்றார். அவர்தம் சொந்த அனுபவத்தை எடுத்துக்காட்டிப் பேசினார். ஆங்கிலம் போன்று, குறைந்தது அதே அளவுக்கு ஃபிரெஞ்சு மொழியும் அவசியமாயிருந்த உயர்குடி வட்டாரத்தில், ஓர் அமைச்சராகப் பழக நேர்ந்தபோது எவ்வளவு அசடாகத் தம்மைப் பார்த்தனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். உண்மை என்னவெனில், அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் கல்வியறிவில்லாத புதுப் பணக்காரர்களாகவே இருந்தனர். தொழில் சாமர்த்தியத்தால்22 தாளிக்கப்பட்ட, [பிறரோடு கலக்காமல்] ஒதுங்கியிருக்கும் குறுகிய மனப்பான்மையையும், ஒதுங்கியிருக்கும் இறுமாப்பையும்விடப் பிற தகுதிகள் தேவைப்படுகின்ற அதிகாரம் மிக்க அரசாங்கப் பதவிகளைப் பிரபுக்குலத்தினரிடமே விட்டுவிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இப்போதுங்கூட, நடுத்தர வர்க்கத்தின் கல்வி குறித்துப் பத்திரிக்கைகளில் நடைபெறும் முடிவில்லாத வாக்குவாதங்கள், ஆங்கில நடுத்தர வர்க்கம், சிறந்த கல்விபெறும் அளவுக்கான தகுதி தனக்கு உண்டென இன்னமும் கருதவில்லை என்பதுடன், மிகவும் மிதமான கல்வியையே நாடுகிறது என்பதையே காட்டுகின்றன.

தானியச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகுங்கூட, அன்றைய முன்னணி மனிதர்களான காப்டென்களும், பிரைட்டுகளும், ஃபோர்ஸ்டர்களும், இன்ன பிறரும், நாட்டின் அதிகாரபூர்வமான அரசாங்கத்தில் ஒரு பங்கினைப் பெறமுடியாதவாறு இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருந்தது, முற்றிலும் இயல்பானதாகவே தோன்றுகிறது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய சீர்திருத்தச் சட்டம் (Reform Act) நிறைவேறிய பிறகே, அமைச்சரவையின் கதவு இவர்களுக்குத் திறக்கப்பட்டது. ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தினர் இன்றைய நாள்வரைக்கும் அவர்களுடைய சமூக ரீதியான தாழ்வு மனப்பான்மையால் மிக ஆழமாகப் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த அளவுக்கு எனில், அரசு விழாக்கள் அனைத்திலும் தேசத்தை மதிப்பான முறையில் பிரதிநிதித்துவப்படுத்த, இவர்கள் தங்களின் சொந்தச் செலவிலும், தேசத்தின் செலவிலும், சோம்பேறிகளின் அலங்காரக் கும்பல் ஒன்றைத் தீனிபோட்டுக் காப்பாற்றி வருகின்றனர். தனிமதிப்பும் தனிச்சலுகையும் பெற்ற இந்தக் குழு இவர்களால் உற்பத்தி செய்யப்பட்டதுதான். என்றாலுங்கூட, தங்களில் ஒருவர் இந்தக் குழுவில் இடப்பெறும் தகுதியுடையவராகக் காணப்படும் போதெல்லாம், தாங்களே பெரிதும் கவுரவிக்கப்பட்டதாக  ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தினர் கருதுகின்றனர்.

Image result for Katheder-Socialist

ஆக, தொழில்துறை, வணிகத்துறை சார்ந்த நடுத்தர வர்க்கம், நிலவுடைமைப் பிரபுக்குலத்தை அரசியல் அதிகாரத்திலிருந்து முழுமையாக விரட்டியடிப்பதில் இன்னமும் வெற்றி காணவில்லை. இந்த நிலையில் மற்றொரு போட்டியாளராகிய தொழிலாளி வர்க்கம் களத்திலே தோன்றிவிட்டது. சாசனவாத இயக்கத்துக்கும் [ஐரோப்பாக்] கண்டத்தின் புரட்சிகளுக்கும் பிறகு எழுந்த பிற்போக்கும், 1848-66 ஆண்டுகளில் ஆங்கில வணிகத்தின் தன்னிகரில்லா விரிவாக்கமும் (கொச்சையாக, கட்டற்ற வணிகம் மட்டுமே இதற்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. ஆனால் ரயில் பாதைகள், மாகடல் நீராவிக் கப்பல்கள், பொதுவாகப் போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவற்றின் பிரம்மாண்ட வளர்ச்சியே இதற்குப் பெருமளவு காரணமாகும்), மிதவாதக் கட்சியைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தொழிலாளி வர்க்கத்தை மீண்டும் விரட்டியடித்தன. சாசனவாதிகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததுபோலத் தொழிலாளி வர்க்கம் இக்கட்சியின் தீவிரக்கொள்கைப் பிரிவாக அமைந்தது. என்றாலும், தொழிலாளி வர்க்கத்தின் வாக்குரிமைக்கான கோரிக்கைகள், படிப்படியாக, தடுக்க முடியாதவையாய் ஆகின. மிதவாதிகளின் விக் (Whig) பிரிவுத் தலைவர்கள் “அஞ்சிப் பின்வாங்கிய” போது, டிஸ்ரேலி (Disraeli), சாதகமான வாய்ப்பை டோரிகள் (Tories)23 கைப்பற்றச் செய்ததன்மூலம் தம்முடைய மேன்மை நிலையை வெளிக்காட்டினார். நகர்ப்புறங்களில் தொகுதிகளை மாற்றியமைத்ததுடன், குடியிருப்போர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு முறை வந்தது. பிறகு 1884-இல், குடியிருப்போர் வாக்குரிமை, மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுத் தொகுதிகள் மீண்டும் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டன. இதன்மூலம் தேர்தல் தொகுதிகள் ஓரளவுக்குச் சமமாக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் தேர்தல் வலிமையைக் கணிசமாக அதிகரித்தன. இதன் காரணமாக, இப்போது குறைந்தது 150 முதல் 200 வரையிலான தொகுதிகளில், வாக்காளர்களில் தொழிலாளி வர்க்கம் பெரும்பான்மை வகிக்கிறது. ஆனால், நாடாளுமன்ற அரசாங்கம், மரபுக்கு மதிப்பளிக்கப் போதிப்பதற்கான தலையாய பள்ளியாகும். ஜான் மானர்ஸ் பிரபு (Lord John Manners) வேடிக்கையாக, “நமது பழம்பெரும் பிரபுக்கள்” என்று குறிப்பிட்டோரை, நடுத்தர வர்க்கம் அச்சத்துடனும் பயபக்தியுடனும் நோக்குகிறது எனில், பெருந்திரளான உழைக்கும் மக்களோ, “அவர்களின் மேலோர்” என்று வழக்கமாகக் குறிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினரை மதிப்புடனும் மரியாதையுடனும் நோக்கினர். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துத் தொழிலாளி உண்மையாகவே முன்மாதிரியான தொழிலாளியாக இருந்தார். தன் எஜமானரின் அந்தஸ்துக்கு அவர் காட்டிய மரியாதைமிக்க அபிமானமும், தனக்கென உரிமைகளைக் கோருவதில் அவருக்கிருந்த தன்னடக்கமான பணிவும், தம் சொந்த நாட்டுத் தொழிலாளர்களின் தீராத, கம்யூனிசம் சார்ந்த புரட்சிகரப் போக்குகளைக் கண்டு நொந்துபோன, கத்தேடெர்-சோஷலிஸ்ட் (Katheder-Socialist)24 கருத்துமரபைச் சேர்ந்த எங்கள் ஜெர்மன் பொருளாதார அறிஞர்களுக்கு ஆறுதல் அளித்தன.

ஆனால்,  தம்மளவில் தொழிலில் தேர்ந்தவர்களான ஆங்கில நடுத்தர வர்க்கத்தினர், ஜெர்மன் பேராசிரியர்களைக் காட்டிலும் வெகுதொலைவுக்குப் பார்வையைச் செலுத்தினர். அவர்கள் தொழிலாளி வர்க்கத்துடன் தயக்கத்தோடுதான் தம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டனர். சாசனவாத இயக்கம் நடைபெற்ற காலங்களில், “பையன் துடிப்பானவன்தான், ஆனாலும் விசமத்தனமானவன்” (puer robustus sed malitiosus) என்பார்களே, அத்தகைய மக்கள் என்னவெல்லாம் செய்ய வல்லவர்கள் என்பதை இவர்கள் அறிந்து கொண்டனர். அக்காலம் முதற்கொண்டே இங்கிலாந்து நாட்டின் சட்டங்களில் மக்கள் உரிமைச் சாசனத்தின் (People’s Charter) பெரும்பகுதியைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர். இனி எந்த நாளும் மக்களைத் தார்மீக வழிமுறைகளால் மட்டுமே ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தி வைக்க முடியும். சாதாரண மக்கள்மீது செயல்படக்கூடிய அனைத்துத் தார்மிக வழிமுறைகளில் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் இருப்பது, என்றும் இருந்து வருவது – மதம்தான்.  எனவேதான், பள்ளி நிர்வாகக் குழுக்களில் பாதிரிமார்களுக்குப் பெரும்பான்மை அந்தஸ்து. எனவேதான், மதச்சடங்குவாதம்25 முதல் ரட்சண்ய சேனை வரையிலான அனைத்து வகைப்பட்ட மதப் புத்தெழுச்சிவாதங்களுக்கும் ஆதரவளிப்பதற்காக முதலாளித்துவ வர்க்கம் [தனக்குத் தானே விதித்துக் கொள்ளும்] அதிகரித்துவரும் சுய-வரிவிதிப்புகள்.

இப்போது [ஐரோப்பாக்] கண்டத்து முதலாளித்துவ வர்க்கத்தினரின் சுதந்திரச் சிந்தனை மீதும், மத அலட்சியத்தின் மீதும் இங்கிலாந்துக் கவுரவ மனப்பான்மையினரின் வெற்றி வந்து சேர்ந்தது. ஃபிரான்ஸ், ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் [ஆட்சியை எதிர்த்துக்] கலகம் செய்யத் தொடங்கினர். அவர்கள் சோஷலிசத்தால் முழுக்கவும் பீடிக்கப்பட்டனர். தங்களின் சொந்த மேம்பாட்டுக்காகக் கையாளும் வழிமுறைகளின் சட்டத் தன்மை குறித்து அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. அதற்கான மிகச்சிறந்த காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இங்கே, துடிப்பான பையன் (puer robustus) நாளுக்குநாள் மென்மேலும் விசமத்தனமானவன் (malitiosus)-ஆக மாறிவிட்டான். கப்பலில் ஏறும்போது வீறாப்புடன் புகைத்துக்கொண்டு வந்த சுருட்டைக் கடல்பயண நோய்க்கு ஆளாகி [வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்ததும்] யாருக்கும் தெரியாமல் நழுவவிடும் ஓர் இளைஞனைப் போல, ஃபிரெஞ்சு, ஜெர்மன் நாட்டு முதலாளி வர்க்கத்தினர் வேறுவழி ஏதுமின்றி கடைசித் தந்திரமாகத் தங்களின் சுதந்திரச் சிந்தனையைச் சந்தடியின்றி விட்டொழிக்க வேண்டியதாயிற்று. இதுவரை ஏளனம் செய்து வந்தோர் ஒவ்வொருவராக வெளிப்படையான நடத்தையில் மதப் பற்றாளராக மாறினர். திருச்சபை, அதன் ஐதீகங்கள், சடங்குகள் குறித்து மரியாதையுடன் பேசினர். வேறு வழியில்லாதபோது ஐதீகங்களையும் சடங்குகளையும் கடைப்பிடிக்கவும் செய்தனர்.

ஃபிரெஞ்சு முதலாளிகள் வெள்ளிக்கிழமைகளில் மெய்க (maigre) [ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினால் மாமிசம் அனுமதிக்கப்படாத விரத நாளில் உண்ணப்படும் ஒருவகை உணவு] உண்டனர். ஜெர்மன் முதலாளிகளோ ஞாயிற்றுக்கிழமைகளில் [திருச்சபைகளில் நிகழ்த்தப்படும்] நீண்ட புரொட்டெஸ்டன்ட் பிரார்த்தனை உரைகளைத் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து இறுதிவரை கேட்டனர். பொருள்முதல்வாதத்தை நம்பி இவர்கள் துயரத்துக்கு ஆளாக நேர்ந்தது. “Die Religion muss dem Volk erhalten werden” – மக்களுக்காக மதத்தை உயிருடன் வைத்திருக்க வேண்டும் – அறவே அழிந்துபோய்விடாமல் சமுதாயத்தைப் பாதுகாக்க அதுதான் ஒரே வழியும், இறுதி வழியும் ஆகும். இவர்களின் துரதிர்ஷ்டம், மதத்தை நிரந்தரமாகத் தகர்த்தெறியத் தங்களால் இயன்றது அனைத்தையும் செய்து முடிக்கும்வரை இவர்கள் இதைக் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, இங்கிலாந்து முதலாளித்துவ வர்க்கத்தினரின் முறை, [தங்களை ஏளனம் செய்தோரை] ஏளனம் செய்திடவும், [அவர்களைப் பார்த்து], இவ்வாறு கூறிடவும்: “அட முட்டாள்களே! இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இதை நான் உங்களுக்குக் கூறியிருப்பேனே!”

Image result for capitalism religion

எனினும், இங்கிலாந்து முதலாளியின் மத ரீதியான மந்தத்தனமோ, [ஐரோப்பாக்] கண்டத்து முதலாளியின் காலங்கடந்த இந்த மாற்றமோ, பொங்கியெழும் பாட்டாளி வர்க்க அலைக்கு அணைபோடும் என்று நான் கருதவில்லை. மரபு என்பது மிகப்பெரும் தடைச்சக்தி ஆகும். வரலாற்றின் [முன்னகரவிடாமல் தடுக்கும்] எதிர்மறை நிலைம சக்தியாகும் (vis inertiae). ஆனால், முனைப்பின்றி வாளா இருப்பது என்பதாலேயே அது நிச்சயம் தகர்த்தெறியப்பட்டுவிடும். எனவே, மதமானது முதலாளித்துவ சமுதாயத்துக்கு நீடித்து நிற்கக்கூடிய பாதுகாப்பாக ஆக முடியாது. சட்டம், தத்துவம், மதம் சார்ந்த நம்முடைய கருத்துகள் அனைத்தும், அந்தந்த சமுதாயத்தில் அப்போது நிலவும் பொருளாதார உறவுகளின் ஏறக்குறைய சேய்மையான உடன்விளைவுகளே ஆகும். எனவே, நீண்ட கால அளவில் பார்க்குமிடத்து, [சட்டம், தத்துவம், மதம் சார்ந்த] இத்தகைய கருத்துகள், பொருளாதார உறவுகளில் நிகழும் ஒரு முழுமையான மாற்றத்தின் விளைவுகளை  எதிர்த்து நிற்க முடியாது. மேலும், இயற்கையை மீறிய தெய்வீக வெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தாலொழிய, தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை மதச் சித்தாந்தங்கள் எவையும் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த முடியாது என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

உண்மையில், இங்கிலாந்திலுங்கூட உழைக்கும் மக்கள் மீண்டும் எழுந்து இயங்கத் தொடங்கிவிட்டனர். ஐயமின்றி, பல்வேறு வகைப்பட்ட மரபுகளாலும் அவர்கள் விலங்கிடப்பட்டுள்ளனர். பழமைவாதிகள், மிதவாதிகள் என்னும் இரு கட்சிகளே இருக்க முடியும், தொழிலாளி வர்க்கம் மிகப்பெரும் மிதவாதக் கட்சி மூலமாகவும் அதன் வழியாகவும்தான் தன்னுடைய விமோசனத்தைத் திட்டமிட்டாக வேண்டும் என்ற பரவலான நம்பிக்கை கொண்ட முதலாளித்துவ மரபுகள் பல இருந்து வருகின்றன. பழம் தொழிற்சங்கங்கள் மிகப்பலவும் தம்மிடம் உறுப்பினராகச் சேர விண்ணப்பம் அளிப்போரில், முறையான பயிற்சிக் கட்டத்தைக் கடந்து வராதவர்களைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைக்கின்றன. இத்தகைய தொழிற்சங்கம் ஒவ்வொன்றும் தானே தன் சொந்தக் கருங்காலிகளை உற்பத்தி செய்வதையே இது குறிக்கிறது. தொழிற்சங்கங்களின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் முதன்முறையாக எடுத்த உத்தேச முயற்சிகளிலிருந்து மரபுரிமையாகப் பெற்ற தொழிலாளர்களின் மரபுகளும் இருந்து வருகின்றன. ஆனால், இவையெல்லாம் இருந்தபோதிலும், பேராசிரியர் பிரென்டானோ (Brentano) அவர்களேகூடத் தம் சகோதரக் கத்தேடெர்-சோஷலிஸ்டுகளுக்கு வருத்தத்துடன் அறிவிக்க வேண்டியிருந்தது போல, ஆங்கிலத் தொழிலாளி வர்க்கம் முன்னகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் போல, மெதுவாகவும் தீர்க்கமாகவும் அடிவைத்துச் சில இடங்களில் தயக்கத்தோடும், சில இடங்களில் ஏறத்தாழ பலனற்ற, உத்தேச முயற்சிகளுடனும் தொழிலாளி வர்க்கம் முன்னகர்ந்து செல்கிறது.

அவ்வப்போது, அளவுக்கதிகமான முன்னெச்சரிக்கை காரணமாக “சோஷலிசம்” என்னும் பெயரில் அவநம்பிக்கை கொண்டு, அதேவேளை சோஷலிசத்தின் சாரப்பொருளைப் படிப்படியாகக் கிரகித்துக் கொண்டு, அது முன்னகர்ந்து செல்கிறது. இந்த இயக்கம் பரவுகிறது; தொழிலாளர்களின் அடுக்குகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பற்றிக் கொள்கிறது. இந்த இயக்கம் இப்போது லண்டனின் கிழக்கு முனைப் பகுதியைச் சேர்ந்த தேர்ச்சியற்ற பிரிவுத் தொழிலாளர்களைச் சோம்பலிலிருந்து தட்டியெழுப்பியுள்ளது. இந்தப் புதிய தொழிலாளர் படையணிகள் பதிலுக்கு எத்தகைய மகத்தான உந்துசக்தியை இவ்வியக்கத்துக்கு அளித்துள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இயக்கத்தின் வேகம், சிலபேருடைய பொறுமையின்மையின் அளவுக்கு ஏற்ப இருக்கவில்லைதான். ஆங்கில ஆளுமையின் மிகச்சிறந்த இயல்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது தொழிலாளி வர்க்கமே என்பதையும், இங்கிலாந்தில் ஒருதரம் ஓரடி முன்னோக்கி வைக்கப்படுமாயின் அதன்பிறகு பெரும்பாலும் அது ஒருபோதும் இழக்கப்படுவதே இல்லை என்பதையும் அந்தச் சிலபேர் மறக்கலாகாது. பழைய சாசனவாதிகளின் பிள்ளைகள் மேற்கூறிய காரணங்களால் போதுமான அளவுக்கு முன்னேற்றம் காணவில்லை என்றாலும், பேரப்பிள்ளைகள் அவர்தம் மூதாதையருக்கு ஏற்ற தகுதியுடையோர் என்றே தோன்றுகிறது.

Image result for கற்பனாவாத சோஷலிசம்

ஆனால், ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றி இங்கிலாந்தை மட்டுமே சார்ந்தது அன்று. குறைந்தது இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த வெற்றியைப் பெற முடியும். ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளிலும் தொழிலாளி வர்க்க இயக்கம் இங்கிலாந்தைவிட மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கிறது. ஜெர்மனியில் அவ்வியக்கத்தின் வெற்றி கைக்கெட்டும் தொலைவில்தான் இருக்கிறது. அங்கே கடந்த 25 ஆண்டுகளில் அவ்வியக்கம் கண்டுள்ள முன்னேற்றம் நிகரற்றதாகும். மென்மேலும் அதிகரித்துச் செல்லும் வேகத்தில் அது முன்னேறிச் செல்கிறது. ஜெர்மன் நாட்டு நடுத்தர வர்க்கமானது, அரசியல் செயல்திறன், கட்டுப்பாடு, தைரியம், ஆற்றல், விடாமுயற்சி ஆகியவற்றில் வருந்தத்தக்கத் தன் குறைபாட்டைத் தானே வெளிக்காட்டியதெனில், ஜெர்மன் நாட்டுத் தொழிலாளி வர்க்கமோ மேற்கண்ட அனைத்துப் பண்புகளும் தன்னகத்தே உண்டு என்பதற்குப் போதுமான நிரூபணத்தை வழங்கியுள்ளது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய நடுத்தர வர்க்கத்தினுடைய முதலாவது எழுச்சியின் தொடக்கப் புள்ளியாக ஜெர்மனி விளங்கியது. தற்போதுள்ள நிலைமைகளில், ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் முதலாவது வெற்றிக்குக் களமாகவும் ஜெர்மனி விளங்கும் என்பது சாத்தியக்கூறின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டதா, என்ன?

பிரெடெரிக். எங்கெல்ஸ்

லண்டன், ஏப்ரல் 20, 1892.
கற்பனாவாத சோஷலிசமும்

விஞ்ஞான சோஷலிசமும்

அத்தியாயம் 1

[கற்பனாவாத சோஷலிசம்]

நவீன சோஷலிசமானது அதன் சாரப்பொருளில், ஒருபுறம், உடைமையாளர்களுக்கும் உடைமையற்றவர்களுக்கும் இடையே, முதலாளிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே நிலவிவரும் வர்க்கப் பகைமைகளையும், மறுபுறம், உற்பத்தியில் நிலவிவரும் ஒழுங்கின்மையையும் அறிந்து கொள்வதன் நேரடியான விளைவாகும். ஆனால், நவீன சோஷலிசமானது, அதன் கொள்கை வடிவில், 18-ஆம் நூற்றாண்டின் மாபெரும் ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள் வகுத்தளித்த கோட்பாடுகளின், மிகவும் தர்க்கரீதியான ஒரு நீட்சி என்பதுபோல, பார்த்தவுடன் வெளித்தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அதன் வேர்கள் பொருளாயத ரீதியிலான பொருளாதார உண்மைகளில் எவ்வளவுதான் ஆழமாகப் பதிந்திருந்த போதிலும், எந்தவொரு புதிய கொள்கையையும் போலவே, நவீன சோஷலிசமும், தொடக்கத்தில், தயாராகத் தன் கைக்குக் கிடைத்த அறிவுத்துறை சார்ந்த கருத்துகளில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

ஃபிரெஞ்சு நாட்டில் மனிதர்களின் மனத்தை வரப்போகும் புரட்சிக்காகத் தயார்செய்த அந்த மாமேதைகள், தாங்களே தீவிரப் புரட்சியாளர்களாகவும் திகழ்ந்தனர். எப்படிப்பட்டதாக இருப்பினும், எந்த வகையான புறநிலை அதிகாரத்தையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – இவை ஒவ்வொன்றுமே தயவு தாட்சண்யமற்ற விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன: அவை ஒவ்வொன்றும், பகுத்தறிவின் தீர்ப்பு–மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும் அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு உகந்தது என்கிற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று. ஹெகல் (Hegel) கூறுவதுபோல, உலகம் தலையால் நின்ற காலம்26 அது. [என்ன பொருளில் எனில்] முதலாவதாக, மனிதனுடைய தலையும், அதன் சிந்தனையால் வந்து சேர்ந்த கோட்பாடுகளுமே அனைத்து மனிதச் செயலுக்கும், மனிதக் கூட்டமைப்புக்கும் அடிப்படையெனக் கருதப்பட்டது  என்னும் பொருளிலும், நாளடைவில் இதோடன்றி இந்தக் கோட்பாடுகளுக்கு முரணாயிருந்த எதார்த்தம் உண்மையிலேயே தலைகீழாக மாற்றப்பட வேண்டியிருந்தது என்னும் விரிவான பொருளிலும் [அவ்வாறு கருதப்பட்டது]. அன்று நிலவிய சமுதாயம், அரசாங்கம் ஆகியவற்றின் ஒவ்வொரு வடிவமும், பழைய மரபுவழிக் கருத்தாக்கம் ஒவ்வொன்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததெனக் குப்பைக் குழியில் வீசி எறியப்பட்டது. இதுநாள்வரை உலகம்,  தப்பெண்ணங்களால் மட்டுமே, தான் வழிநடத்தப்பட இடம்கொடுத்து விட்டது. கடந்த காலத்தவை அனைத்துமே அனுதாபத்துக்கும் அவமதிப்புக்குமே உகந்தவை. இப்போதுதான் முதன்முறையாக, [இருளகன்று] பகலின் ஒளி, பகுத்தறிவின் ஆட்சி தோன்றியது. இது முதற்கொண்டு, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட சமத்துவம், விட்டுக்கொடுக்க முடியாத மனித உரிமைகள் ஆகியவற்றின் மூலம், மூட நம்பிக்கை, அநீதி, தனிச்சலுகை, ஒடுக்குமுறை ஆகியவை அகற்றப்பட வேண்டும்.

Image result for Rousseau

ரூஸோ

இந்தப் பகுத்தறிவின் ஆட்சி என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை; இந்த நித்தியமான நீதி என்பது முதலாளித்துவ நீதியாகத் தன்னை நிறைவேற்றிக் கொண்டது; இந்தச் சமத்துவம் என்பது சட்டத்தின் முன்பான முதலாளித்துவச் சமத்துவமாகக் குறுகிவிட்டது; முதலாளித்துவச் சொத்துடைமை என்பது இன்றியமையாத மனித உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது; பகுத்தறிவின் அரசாங்கம், ரூஸோவின் (Rousseau) மூக ஒப்பந்தம் (Contrat Social)27 ஒரு ஜனநாயக முதலாளித்துவக் குடியரசாகத்தான் நடைமுறைக்கு வந்தது, அது அவ்வாறுதான் நடைமுறைக்கு வர முடியும். இவற்றையெல்லாம் இன்று நாம் அறிவோம். 18-ஆம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்களால், அவர்களின் சகாப்தம் அவர்களுக்கு விதித்த வரம்புகளுக்கு அப்பால், அவர்களின் முன்னோர்கள்  சென்ற அளவுக்கும் அதிகமாகச் செல்ல முடியவில்லை.

ஆனால், நிலவுடைமைப் பிரபுக்களுக்கும், சமுதாயத்தின் ஏனைய அனைத்து பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட நகரத்தாருக்கும் இடையேயான பகைமையுடன் பக்கம் பக்கமாகவே, சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையேயான, பணக்காரச் சோம்பேறிகளுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் இடையேயான பொதுவான பகைமையும் நிலவி வந்தது. இந்தச் சூழ்நிலைதான், முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாங்கள் தனியொரு வர்க்கத்தை அல்லாமல், மனிதகுலம் முழுவதையுமே பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கியது. அது மட்டுமன்று. முதலாளித்துவ வர்க்கம் தான் தோன்றியது முதலே, அதன் எதிரிணைச் சக்திக்கும் சேர்த்துப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் நிலவ முடியாது. மத்திய கால கைவினைக் குழும நகரத்தார் நவீன முதலாளியாக வளர்ச்சியுற்ற அதே விகிதத்தில் கைவினைக் குழுமப் பயிற்சியாளரும், கைவினைக் குழுமங்களுக்கு வெளியே இருந்த நாள்கூலி வேலையாளும் பாட்டாளியாக வளர்ச்சியுற்றனர். மொத்தத்தில், முதலாளித்துவ வர்க்கத்தினர் நிலவுடைமைப் பிரபுக்களுடனான தங்களின் போராட்டத்தில், அக்காலத்திருந்த பல்வேறு தொழிலாளி வர்க்கங்களின் நலன்களையும் சேர்த்துத் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ள முடிந்தது. என்றாலும், நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த, ஓரளவு வளர்ச்சி பெற்ற வர்க்கத்தின் சுயேச்சையான கொந்தளிப்புகள், ஒவ்வொரு மாபெரும் முதலாளித்துவ இயக்கத்தின் போதும்  இருக்கவே செய்தன. எடுத்துக் காட்டாக, ஜெர்மன் மதச் சீர்திருத்தத்தின் போதும், விவசாயிகளுடைய போரின் போதும் போராடிய அனாபாப்டிஸ்டுகள் (Anabaptists)28, அவர்களின் தலைவராகிய தாமஸ் முன்ஸேர் (Thomas Munzer), மாபெரும் ஆங்கிலப் புரட்சியில் சமன்வாதிகள் (Levellers)29, மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சியில் பாபெஃப் (Babeuf) ஆகியோரைச் சொல்லலாம்.

Image result for Saint-Simon

சான்-சிமோன்

இன்னமும் வளர்ச்சி பெறாத ஒரு வர்க்கத்தின் இந்தப் புரட்சிகர எழுச்சிகளுக்குப் பொருத்தமான கொள்கைவழி விளக்கங்களும் முன்வைக்கப்பட்டன. 16-வது, 17-வது நூற்றாண்டுகளில் [முன்வைக்கப்பட்ட] இலட்சிய சமுதாய நிலைமைகள் பற்றிய கற்பனாவாதச் சித்திரங்கள்30, 18-வது நூற்றாண்டில் (மொரெல்லி (Morelly), மாப்லீ  (Mably) ஆகியோர் முன்வைத்த) உண்மையான கம்யூனிசத் தன்மை வாய்ந்த கொள்கைகள்  [அவ்வாறானவை]. சமத்துவத்துக்கான கோரிக்கை இனி அரசியல் உரிமைகளுக்கு மட்டும் என வரம்பிடப்பட்டதாக இருக்கவில்லை. தனிநபர்களின் சமூக நிலைமைகளுக்கும் அக்கோரிக்கை நீட்டிக்கப்பட்டது. ஒழிக்கப்பட வேண்டியவை வெறும் வர்க்கச் சலுகைகள் மட்டுமல்ல,  வர்க்கப் பாகுபாடுகளே ஒழிக்கப்பட்டாக வேண்டும் [என்று கோரிக்கை வைக்கப்பட்டது]. துறவு மனப்பான்மை கொண்ட, வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் நிராகரிக்கின்ற, ஆடம்பரமற்ற ஸ்பார்ட்டானிய எளிமை வாய்ந்த ஒரு கம்யூனிசமே இந்தப் புதிய போதனையின் முதலாவது வடிவமாக இருந்தது. அதன்பிறகு வந்தனர் மூன்று மாபெரும் கற்பனாவாதிகள் (Utopians): பாட்டாளி  வர்க்க இயக்கத்துடன் கூடவே நடுத்தர வர்க்க இயக்கமும் இன்னமும் ஓரளவு முக்கியத்துவம் கொண்டது எனக் கருதிய, சான்-சிமோன் (Saint-Simon); முதலாளித்துவ உற்பத்தி மிகவும் வளர்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில், அதனால் தோற்றுவிக்கப்பட்ட பகைமைகளின் தாக்கத்தில், வர்க்கப் பாகுபாட்டினைத் திட்டமிட்டு நீக்குவதற்காக, ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தித் தம்  பரிந்துரைகளை வகுத்தளித்த ஃபூரியேவும் ஓவனும் (Fourier and Owen).

மூவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது. இவர்களில் எந்த ஒருவரும், இக்காலகட்டத்தில், வரலாற்று ரீதியான வளர்ச்சி தோற்றுவித்த அந்தப் பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பிரதிநிதியாகத் தோன்றவில்லை. ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்களைப் போலவே இவர்களும், தொடக்கச் செயல்பாடாக, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை விடுவிக்கப் போவதாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஆனால், மனிதகுலம் முழுவதையுமே உடனடியாக விடுவிக்கப் போவதாய்க் கூறிக் கொள்கின்றனர். அவர்களைப் போலவே இவர்களும், பகுத்தறிவின் ஆட்சியை, நித்தியமான நீதியின் ஆட்சியைக் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் காண விரும்பும் ஆட்சிக்கும், ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள் கூறிய ஆட்சிக்கும் இடையே, விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடையேயான வேறுபாடு உள்ளது.

நம்முடைய இம்மூன்று சமூகச் சீர்திருத்தவாதிகளுக்கும், ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்த முதலாளித்துவ உலகம், நிலப்பிரபுத்துவத்தையும் சமுதாயத்தின் அனைத்து முந்தைய கட்டங்களையும் போன்று, அதே அளவுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் அநீதியானதாகவும் இருக்கிறது. ஆகவே, அவற்றைப் போலவே குப்பைக் குழிக்குப் போகத் தயாராக உள்ளது. தூய பகுத்தறிவும் நீதியும் இதுநாள்வரை உலகில் ஆட்சி புரியவில்லை எனில், மனிதர்கள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே அதற்கான காரணம். இப்போதைய தேவை என்னவெனில், மேதமைமிக்க ஒரு தனிமனிதர். அப்படிப்பட்டவர் இப்போது உதித்தெழுந்துவிட்டார், உண்மையை அவர் புரிந்து கொள்கிறார்; அவர் இப்போது உதித்தெழுந்துவிட்டார், உண்மை இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பது வரலாற்று ரீதியான வளர்ச்சி என்னும் சங்கிலித்தொடர் நிகழ்வுகளில், அவசியத்தின் காரணமாக நிகழ்ந்த, தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு அன்று. வெறுமனே இதுவொரு மகிழ்ச்சியான விபத்தே ஆகும். 500 ஆண்டுகள் முன்னதாகவும் இவர் பிறந்திருக்க முடியும். அப்படிப் பிறந்திருப்பின், அவர் மனிதகுலத்தை இந்த 500 ஆண்டுகாலப் பிழை, பூசல், துயரம் இவற்றிலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.

புரட்சியின் முன்னோடிகளான 18-ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள், இருப்பவை அனைத்துக்குமான ஒரே நீதிபதியாக, பகுத்தறிவுக்கு எவ்வாறு அறைகூவல் விடுத்தனர் என்பதை நாம் பார்த்தோம். பகுத்தறிவு பூர்வமான ஓர் அரசாங்கமும், பகுத்தறிவு பூர்வமான [ஒரு] சமுதாயமும் நிறுவப்பட வேண்டும்; நித்தியமான பகுத்தறிவுக்கு முரணாகச் செல்லும் அனைத்தும் ஈவிரக்கமின்றி ஒழிக்கப்பட வேண்டும் [என்பது அவர்களின் கருத்து]. உண்மையில் இந்த நித்திய பகுத்தறிவு என்பது, எதார்த்தத்தில், அப்போதுதான் முதலாளியாகப் பரிணமித்துக் கொண்டிருந்த 18-ஆம் நூற்றாண்டுக் குடிமகனின் இலட்சிய பூர்வமான புரிந்துணர்வே அன்றி வேறல்ல என்பதையும் நாம் கண்டோம். இந்தப் பகுத்தறிவு பூர்வமான சமுதாயத்தையும் அரசாங்கத்தையும் ஃபிரெஞ்சுப் புரட்சி நடைமுறைப்படுத்திக் காட்டியது.

Image result for freedom of property

ஆனால், புதிய சூழலின் நிலைமைகள் முந்தைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், போதுமான அளவு பகுத்தறிவுக்கு உகந்ததாக இருந்த போதிலும், எந்த வகையிலும் முற்றிலும் பகுத்தறிவுக்கு உகந்த ஒன்றாக இல்லை என்பது தெரிய வந்தது. பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த அரசு முழுமையாகத் தகர்ந்துவிட்டது. ரூஸோவின் மூக ஒப்பந்தம் பயங்கர ஆட்சியில்31 தன் நிறைவேற்றத்தைக் கண்டது. தங்களின் அரசியல் ஆற்றலில் நம்பிக்கை இழந்துபோன முதலாளித்துவ வர்க்கத்தினர், [பயங்கர ஆட்சியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள], முதலில் நெறியாளர் குழுவின்32 ஊழலிலும், முடிவில் நெப்போலியனியக் கொடுங்கோன்மையின் அரவணைப்பிலும் அடைக்கலம் புகுந்தனர். உறுதியளிக்கப்பட்ட நித்திய சமாதானம், நாடு பிடிப்பதற்கான ஒரு முடிவில்லாப் போராக மாறியது. பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த சமுதாயமும் இதே கதிக்கு ஆளானது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான பகைமை, பொதுவான செல்வச் செழிப்பில் கரைந்துபோவதற்கு மாறாக, இப்பகைமையை ஓரளவுக்குத் தணித்துவந்த கைவினைக் குழுமச் சலுகைகளும் பிற சலுகைகளும் நீக்கப்பட்டதாலும், திருச்சபையின் அறக்கட்டளை நிறுவனங்கள் நீக்கப்பட்டதாலும், மேலும் கடுமையாகிவிட்டது. நிலப்பிரபுத்துவத் தளைகளிலிருந்து விடுபட்ட “சொத்துடைமைச் சுதந்திரம்” (freedom of property),  இப்போது உண்மையாகவே கைவரப் பெற்றது[!]. இந்தச் சுதந்திரம், சிறு முதலாளிகளுக்கும், சிறு [நில] உடைமையாளர்களுக்கும், பெரும் முதலாளிகள், பெரும் நிலப்பிரபுகளின் மேலாதிக்கத்துக்கான போட்டியின் பிடியில் நசுக்கப்பட்டு, தங்களின் சொற்பச் சொத்துகளை இந்த மாபெரும் பிரபுக்களுக்கு விற்பதற்கான சுதந்திரமாக மாறிப்போனது. இவ்வாறாக, சிறு முதலாளிகளையும், சிறு விவசாய உடைமையாளர்களையும் பொறுத்தவரை, “சொத்துடைமைச் சுதந்திரம்” (freedom of property) என்பது “சொத்துடைமையிலிருந்து சுதந்திரம்” (freedom from property) என ஆகிப்போனது. முதலாளித்துவ அடித்தளத்தின் மீது ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, சாதாரண உழைக்கும் மக்களின் வறுமையையும் துயரையும் சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளாக ஆக்கியது. கார்லைல் (Carlyle) அவர்களின் சொற்களில் கூறுவதெனில், மேலும் மேலும் பணப் பட்டுவாடாதான் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரே உறவு என்று ஆகிப்போனது. குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. முன்பெல்லாம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கக் கேடுகள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாண்டவமாடின. அவை அடியோடு ஒழிக்கப்படாவிட்டாலும், இப்போது அவை எப்படியோ பின்னிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில், இதுநாள்வரை ரகசியமாகச் செயல்பட்டுவந்த முதலாளித்துவ ஒழுக்கக் கேடுகள், அவற்றைவிட  ஆடம்பரமாகத் தழைத்தோங்கத் தொடங்கின. வணிகம் மேலும் மேலும் பெரிய அளவுக்கு மோசடியாக ஆனது. புரட்சிகர முழக்கமான “சகோதரத்துவம்”33 என்பது, [மேலாதிக்க] போட்டியில் நிகழும் களப்போரின் சூழ்ச்சியிலும், சண்டை சச்சரவுகளிலும் நிறைவேற்றம் கண்டது. பலத்தின்மூலமான ஒடுக்குமுறைக்குப் பதிலாக ஊழல்மூலமான ஒடுக்குமுறை வந்தது. முதல்பெரும் சமூக நெம்புகோலாக வாளுக்குப் பதில் தங்கம் இடம்பெற்றது. முதல் இரவுக்கான உரிமை, நிலவுடைமைப் பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவ ஆலையதிபர்களுக்கு மாற்றப்பட்டது. விபச்சாரம், என்றும் கேள்விப்படாத அளவுக்கு அதிகரித்தது. திருமணம் என்பது முன்பு போலவே சட்ட அங்கீகாரம் பெற்ற விபச்சார வடிவமாகவும், விபசாரத்தின் அதிகாரபூர்வ மூடுதிரையாகவும் தொடர்ந்து இருந்துவந்தது. அதுமட்டுமின்றி, அதன் பிற்சேர்க்கையாகப் பிறன்மனை நயத்தலும் வளமாகச் செழித்தோங்கியது.

சுருங்கக் கூறின், “பகுத்தறிவின் வெற்றி”– யிலிருந்து உதித்தெழுந்த சமூக, அரசியல் நிறுவனங்கள், தத்துவ அறிஞர்களின் ஆரவாரமான வாக்குறுதிகளுடன் ஒப்பிடுகையில், கொடுமையான ஏமாற்றம் தரும் கேலிக் கூத்துகளாகிவிட்டன. இந்த ஏமாற்றத்தை வரைமுறைப்படுத்திட வல்லுநர்கள் இல்லாதது குறைபாடாக இருந்தது. நூற்றாண்டின் இறுதியில் அவர்களும் வந்து சேர்ந்தனர். 1802-இல் சான்-சிமோனின் ஜெனீவாக் கடிதங்கள் வெளியாயின. ஃபூரியேயின் கொள்கைக்கான அடிப்படைக் கருதுகோள்கள் 1799 முதலே உருவாகி வந்த போதிலும் அவருடைய முதலாவது நூல் 1808-இல் வெளிவந்தது. 1800 ஜனவரி 1-ல் ராபர்ட் ஓவன் நியூ லானார்க்கின் (New Lanark)34 மேலாண்மைப் பொறுப்பை ஏற்றார்.

ஆனாலும், அந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையும் இன்னமும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன. இங்கிலாந்தில் அப்போதுதான் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை, ஃபிரான்சில் இன்னமும் அறியப்படாததாகவே இருந்தது. ஆனால், நவீனத் தொழில்துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவத் தன்மைக்கு முடிவுகட்டுதலையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது. தான் தோற்றுவித்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்களை மட்டுமின்றி, தான் உருவாக்கிய அதே உற்பத்திச் சக்திகளுக்கும் பரிவர்த்தனை வடிவங்களுக்கும் இடையேயான மோதல்களையும் வளர்க்கிறது. நவீனத் தொழில்துறை மறுபுறம் அதே பிரம்மாண்ட உற்பத்திச் சக்திகளுக்குள்ளேயே அம்மோதல்களுக்கு முடிவுகட்டும் சாதனங்களையும் வளர்க்கிறது. எனவே, 1800-ஆம் ஆண்டு வாக்கில், புதிய சமுதாய அமைப்பிலிருந்து உதித்தெழுந்த இந்த மோதல்கள் அப்போதுதான் உருவெடுக்கத் தொடங்கியிருந்தன என்றால், இம்மோதல்களுக்கு முடிவுகட்டும் சாதனங்களோ இன்னும்கூடக் குறைவாகவே வளர்ச்சி கண்டிருந்தன. பாரிஸ் நகரத்தின் “ஏதும் இல்லாத” சாதாரண மக்கள், பயங்கர ஆட்சியின்போது, குறுகிய காலத்துக்கு மேலாதிக்கம் பெறுவதும், இவ்வாறாக முதலாளித்துவ வர்க்கத்தினரே இருந்த போதிலும், [அவர்களையும் மிஞ்சி] முதலாளித்துவப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்வதும் சாத்தியப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்ததன் மூலம், அப்போதைய நடப்பு நிலைமைகளில், அவர்களின் ஆதிக்கம் நீடித்து நிலைபெறுவது எவ்வளவு அசாத்தியமானது என்பதையே அவர்கள் நிரூபித்துக் காட்டினர். பாட்டாளி வர்க்கமானது, “ஏதும் இல்லாத” இந்தச் சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன்முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய்த் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்குச் சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது. அவ்வர்க்கம் தனக்குத்தானே உதவிக் கொள்ளும் திறனற்றிருந்த அந்நிலையில், அதிகம் போனால் வெளியிலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோதான் [தனக்குத் தேவையான] உதவியைப் பெற்றிட முடியும்.

இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோஷலிசத்தின் நிறுவனர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியது. முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்து கிடந்த அந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள். சமுதாயம் தீங்குகளைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்தவில்லை. அத்தீங்குகளைக் களைவது பகுத்தறிவின் பணி ஆகும். எனவே, ஒரு புதிய, மிகவும் முழுநிறைவான சமூக ஒழுங்குமுறை அமைப்பைக் கண்டுபிடித்து, பிரச்சாரத்தின் மூலமும், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரிப் பரிசோதனைகள் மூலமும், அந்த அமைப்பை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியமாகும் [எனக் கற்பனாவாதிகள் கருதினர்]. இந்தப் புதிய சமூக அமைப்புகள் கற்பனாவாத அமைப்புகளாகவே நின்றுபோக முன்கூட்டியே விதிக்கப்பட்டவை. அவை எந்த அளவுக்கு முழுமையாகவும் நுணுக்கமாகவும்  வகுக்கப்பட்டனவோ, அந்த அளவுக்கு, தூய கற்பனைப் புனைவுகளாக அவை தடம்புரண்டு செல்வதைத் தவிர்க்க முடியாது.

இந்த உண்மை விவரங்கள் நிலைநாட்டப்பட்டதுமே, பிரச்சினையின் இப்பக்கத் தரப்பின்மீது இன்னும் ஒருநொடி அதிகமாகவும் நாம் கருத்தூன்றி விவரிக்கத் தேவையில்லை. தற்போது இது முற்றிலும் கடந்த காலத்துக்கு உரியதாகிவிட்டது. இன்று நம்மை நகைக்க மட்டுமே வைக்கும் இந்தக் கற்பனைப் புனைவுகள் குறித்து ஆரவாரத்துடன் சொற்சிலம்பம் ஆட அவற்றை இலக்கியச் சிறு குஞ்சுகளிடம் விட்டுவிடலாம். இவர்தம் சொந்த மொட்டை வாதங்கள், இத்தகு “பைத்தியக்கார” கற்பனைகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் மேன்மை கொண்டதெனப் பெருமையடித்துக் கொள்ளட்டும். நம்மைப் பொறுத்தவரை, கற்பனைப் புனைவான மேலோட்டை உடைத்துக் கொண்டு திசையெங்கும் வெளிக்கிளம்பும் அற்புதமான விழுமிய சிந்தனைகளையும், சிந்தனைத் துளிர்களையும் கண்டு நாம் பரவசமடைகிறோம். இந்த அற்பவாதிகளின் (Philistines) குருட்டுக் கண்களுக்கோ இவை புலப்படுவதில்லை.

சான்-சிமோன் மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சியின் புதல்வர் ஆவார். அப்புரட்சி வெடித்தபோது அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. ஃபிரெஞ்சுப் புரட்சி, சலுகை பெற்ற சோம்பேறி வர்க்கங்களாகிய பிரபுக்கள், பாதிரியார்கள் ஆகியோர் மீது மூன்றாம் வகைப்பிரிவினர் (Third Estate), அதாவது உற்பத்தித் துறையிலும் வணிகத் துறையிலும் உழைக்கின்ற, தேசத்தின் மாபெரும் மக்கள் திரளின் வெற்றி ஆகும். ஆனால், மூன்றாம் வகைப்பிரிவினரின் இந்த வெற்றி அப்பிரிவினரின் ஒரு சிறு பகுதிக்கு மட்டுமே உரிய வெற்றியாக, அப்பிரிவினருள் சமூக ரீதியில் தனிச்சலுகை பெற்ற ஒரு பகுதியினர், அதாவது சொத்துடைமை படைத்த முதலாளித்துவ வர்க்கத்தினர், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட வெற்றியாக விரைவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. இந்தப் புரட்சியின்போது முதலாளித்துவ வர்க்கம் அதிவேகத்தில் வளர்ச்சி பெற்றது உண்மைதான். ஒருபாதி, பிரபுக்குலம், திருச்சபை ஆகியவற்றின் நிலங்களைப் பறிமுதல் செய்து, அதன்பின் அவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்து, ஊக வணிகம் செய்ததன் மூலமும், மறுபாதி, இராணுவ ஒப்பந்தங்களைப் பயன்படுத்தித் தேசத்தின் பெயரில் மோசடிகள் புரிந்ததன் மூலமும் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. இந்த ஏமாற்றுக்காரர்களின் ஆதிக்கம்தான், நெறியாண்மைக் குழுவின் ஆட்சியில், ஃபிரெஞ்சு நாட்டை அழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்றது. இவ்வாறாக, அவ்வாதிக்கம் நெப்போலியனுக்கு ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

Image result for french revolution

எனவே, சான்-சிமோனைப் பொறுத்தவரை, மூன்றாம் வகைப்பிரிவினருக்கும் சலுகை பெற்ற வர்க்கங்களுக்கும் இடையேயான பகைமை “தொழிலாளர்களுக்கும்” “சோம்பேறிகளுக்கும்” இடையேயான பகைமையின் வடிவமாகப் பட்டது. [அவருடைய பார்வையில்] சோம்பேறிகள் என்போர் சலுகை பெற்ற பழைய வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, உற்பத்தி அல்லது வினியோகத்தில் எந்தப் பங்கும் ஆற்றாமல் தங்களின் வருமானத்தில் வாழ்ந்தவர்கள் அனைவருமேதாம். “தொழிலாளர்கள்” என்போர் கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, ஆலையதிபர்கள், வணிகர்கள், வங்கி உடைமையாளர்கள் ஆகியோரும்தாம். சோம்பேறிகள் அறிவுசார் தலைமைப் பொறுப்புக்கும், அரசியல் மேலாதிக்கத்துக்குமான செயலாற்றலை இழந்து விட்டனர் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. புரட்சியால் முடிவாக நிலைநாட்டப்பட்டும் விட்டது. உடைமையற்ற வர்க்கங்களுக்கும் இத்தகைய செயலாற்றல் இல்லை என்பது பயங்கர ஆட்சியின் அனுபவங்கள் நிரூபித்துவிட்டதாக சான்-சிமோனுக்குத் தோன்றியது. அப்படியெனில், தலைமை தாங்கப் போவதும், அதிகாரம் செலுத்தப் போவதும் யார்? சான்-சிமோனின் கருத்துப்படி விஞ்ஞானம், தொழில்துறை இவையிரண்டும் ஒரு புதிய மதப்பிணைப்பில் இணைந்து, [இதைச் சாதிக்க வேண்டும்]. மதச்சீர்திருத்தக் காலம்தொட்டு இழந்துவிட்ட மதக் கருத்துக்களின் ஒற்றுமையை மீட்டளிக்க இவையிரண்டும் முன்னமே விதிக்கப்பட்டுள்ளன. அப்படியெனில், அத்தகைய மதக் கருத்துகளின் ஒற்றுமை, கட்டாயமாக, ஆன்மீக வழிப்பட்ட, கட்டுறுதியான படிநிலை அமைப்புக் கொண்ட ஒரு “புதிய கிறிஸ்துவமாகவே” இருக்க வேண்டும். ஆனால், விஞ்ஞானம் கல்விமான்களால் ஆனது; தொழில்துறையோ அதன் முதலிடத்தில் உழைக்கும் முதலாளிகள், ஆலையதிபர்கள், வணிகர்கள், வங்கி உடைமையாளர்கள் ஆகியோரைக் கொண்டது. இந்த முதலாளிகள், ஒருவகைப் பொது அதிகாரிகளாக, ஒருவகை சமூக அறங்காவலர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பது உண்மையிலேயே சான்-சிமோனின் எண்ணமாக இருந்தது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இந்த முதலாளிகளே இன்னமும், அதிகாரம் செலுத்தவல்ல, பொருளாதார ரீதியாகச் சலுகை பெற்ற நிலையை வகிப்பார்கள். முக்கியமாக வங்கி உடைமையாளர்கள், கடன் செலாவணியை ஒழுங்குபடுத்தலின் மூலம் ஒட்டுமொத்தச் சமூக உற்பத்தியையும் நெறிப்படுத்தக் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். ஃபிரான்சில் நவீனத் தொழில்துறையும், அதனுடன்கூட முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பெரும்பிளவும் அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்துக்கு, இந்தக் கருத்துரு மிகச்சரியாய்ப் பொருந்துவதாகவே இருந்தது. ஆனால், சான்-சிமோன் அதிலும் குறிப்பாக வலியுறுத்திக் கூறுவது இதுதான்: முதலாவதாக, ஏனைய அனைத்துக்கும் மேலானதாக, அவரின் கவனத்தை ஈர்ப்பது, “மிகுந்த எண்ணிக்கை கொண்ட, மிகவும் ஏழ்மையான வர்க்கத்தின்” (“la classe la plus nombreuse et la plus pauvre”) துன்பமும் துயரமும்தாம்.

சான்-சிமோன் ஏற்கெனவே தன்னுடைய ஜெனீவாக் கடிதங்களில், “அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும்” என்னும் கருத்தை முன்வைக்கிறார். அதே கடிதங்களில், பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே என்பதையும் அவர் கண்டு கொள்கிறார். “ஃபிரான்சு நாட்டில் உங்களுடைய தோழர்கள் ஆட்சி புரிந்தபோது அங்கே என்ன நிகழ்ந்தது, பாருங்கள்;  அவர்கள் பஞ்சத்தை உண்டாக்கினர்” என்று மக்களைப் பார்த்துக் கூறுகிறார். ஆனால், ஃபிரெஞ்சுப் புரட்சியை ஒரு வர்க்கப் போர் எனவும், அதுவும் பிரபுக்குலத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே நடைபெற்ற ஒன்றல்ல, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் உடைமையற்றோருக்கும் இடையே நடைபெற்றதாகும் எனவும் அடையாளம் காண்பது, அதுவும் 1802-ஆம் ஆண்டில் காண்பது, மிகவும் பொருள்செறிவுள்ள ஒரு கண்டுபிடிப்பாகும். 1816-இல், அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும் என அறிவிக்கிறார். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும் என்று முன்னறிந்து கூறுகிறார். பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் ஆகும் என்கின்ற அறிவு இங்கே கரு வடிவில்தான் காணப்படுகிறது. எனினும், மிகவும் தெள்ளத் தெளிவாக இங்கே வெளிப்படுத்தப்படுவது என்னவெனில், மனிதர்கள் மீதான [இன்றைய] அரசியல் அதிகாரம், வருங்காலத்தில் பொருள்களின் நிர்வாகமாகவும், உற்பத்திச் செயல்முறைகளின் மேலாண்மையாகவும் மாறிவிடும் என்னும் கருத்தாகும். அதாவது, அண்மைக் காலத்தில் மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்திய “அரசின் ஒழிப்பு” என்கிற கருத்தே இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

சான்-சிமோன், அவர் காலத்து அறிஞர்களை மிஞ்சித் தனக்கிருந்த இதே மேதமையை, நேச நாடுகளின் படைகள் பாரிஸ் நகருக்குள் நுழைந்த பிறகு உடனடியாக 1814-லும், மீண்டும் 1815-இல் நூறு நாள் போரின்35 போதும் வெளிப்படுத்தினார். ஃபிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் கூட்டணியும், பிறகு ஜெர்மனியுடன் இவ்விரு நாடுகளின் கூட்டணியும்தான் ஐரோப்பாவின் செழிப்பான வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் ஒரே உத்திரவாதம் எனப் பிரகடனம் செய்கிறார். வாட்டர்லூ36 வெற்றியாளர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு 1815-இல் ஃபிரெஞ்சு நாட்டவர்க்கு உபதேசிக்க எந்த அளவுக்கு வரலாற்று முன்னோக்கு வேண்டுமோ, அந்த அளவுக்குத் தைரியமும் வேண்டும்.

சான்-சிமோனிடம் ஒரு விரிவான பரந்த பார்வையைக் காண்கிறோம். இத்தன்மையின் காரணமாக, பிற்காலத்து சோஷலிஸ்டுகளின் அனைத்துக் கருத்துகளையும், கண்டிப்பாகப் பொருளாதாரம் சார்ந்தவையாக இல்லாதவை உட்பட, சான்-சிமோனின் கருத்துகளில் கருவடிவில் இருக்கக் காண்கிறோம். அதேவேளையில், ஃபூரியேயிடம் தற்போது நிலவும் சமுதாய நிலைமைகளைப் பற்றிய ஒரு விமர்சனத்தைக் காண்கிறோம். இந்த விமர்சனம் அசலான ஃபிரெஞ்சுப் பாணியில் அமைந்தது, நகைச்சுவை வாய்ந்தது. ஆனால், அதன் காரணமாக, எந்த வகையிலும் ஆழம் குறைந்துவிடாதது. முதலாளித்துவ வர்க்கத்தினர், புரட்சிக்கு முன்பு அவர்களுக்கு உத்வேகத்துடன் தீர்க்க தரிசனம் வழங்கியோர், புரட்சிக்குப் பிறகு அவர்களைத் துதிபாடுவோர் ஆகியோர்மீது அவர்களின் சொற்களைக் கொண்டே தாக்குதல் தொடுக்கிறார். முதலாளித்துவ உலகின் பொருளாயத, ஒழுக்கநெறி சார்ந்த அவலங்களைச் சிறிதும் இரக்கமின்றித் தோலுரித்துக் காட்டுகிறார். பகுத்தறிவு மட்டுமே ஆட்சி செலுத்தும் சமுதாயம், அனைவருக்கும் இன்ப வாழ்வை வழங்கும் நாகரிகம், வரம்பில்லா மனித மேம்பாடு ஆகியவற்றை முதலாளித்துவ உலகம் படைத்தளிக்கும் என முன்பு அதன் தத்துவ அறிஞர்கள் அளித்த பிரகாசமான வாக்குறுதிகளையும்,  அவர்காலத்து முதலாளித்துவச் சித்தாந்திகளின் நடைமுறைக்கு ஒவ்வாத சொல்லடுக்குளையும், தற்போதைய முதலாளித்துவ அவலங்களுக்கு நேரெதிரே நிறுத்திக் காட்டுகிறார். மிகவும் ஆரவாரமான சொல்லடுக்குகளுக்கு இணையாக, எவ்வாறு எங்கு நோக்கினும் மிகவும் பரிதாபகரமான எதார்த்தம் நிலவுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சொல்லடுக்குகளின் இந்த மிக மோசமான படுதோல்வியைக் காரசாரமான தன்னுடைய கிண்டலால் திணறடிக்கிறார்.

ஃபூரியே ஒரு விமர்சகர் மட்டுமன்று. அமைதி குலையாத சாந்தமான அவரின் இயல்பு, அவரை ஓர் அங்கத* எழுத்தாளராகவும், நிச்சயமாக எந்தக் காலத்துக்கும் தலைசிறந்த அங்கத எழுத்தாளர்களில் ஒருவராகவும் அவரை ஆக்கிவிடுகிறது. புரட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தழைத்தோங்கிய ஊக வணிக மோசடிகளையும், அக்காலகட்டத்தில் ஃபிரெஞ்சு வணிகத்தில் பரவலாக நிலவிய, அதன் பண்பியல்பான, கடைக்கார மனோபாவத்தையும், அவர் சம வலிவோடும் வனப்போடும் சித்தரிக்கின்றார். பாலினங்களுக்கு இடையேயான உறவுகளின் முதலாளித்துவ வடிவத்தையும், முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்களின் நிலையையும் பற்றிய அவருடைய விமர்சனம் இன்னும்  கைதேர்ந்த ஒன்றாகும். எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்திலும் பெண் விடுதலையின் தரமே சமுதாய விடுதலையின் தரத்தை அளவிடும் இயல்பான அளவுகோலாகும் என்று முதன்முதலில் அறிவித்தவர் ஃபூரியே ஆவார்.

*புகழ்வதுபோல் இகழ்வது அங்கதம் எனப்படும்.

ஆனால், ஃபூரியே, சமுதாயத்தின் வரலாறு பற்றிய அவரது கருத்தோட்டத்தில்தான் தலைசிறந்து விளங்குகிறார். இதுநாள்வரையுள்ள வரலாற்றின் போக்கினை, காட்டுமிராண்டி நிலை, நாகரிகமற்ற நிலை, தந்தைவழிச் சமூகம், நாகரிக நிலை என நான்கு பரிணாம வளர்ச்சிக் கட்டங்களாகப் பிரிக்கிறார். நாகரிக நிலை என்கிற கடைசிக் கட்டம் இன்றைய குடிமைச் சமுதாயத்தை அல்லது முதலாளித்துவ சமுதாயத்தை, அதாவது, 16-ஆம் நூற்றாண்டில் உருவான சமுதாய அமைப்பைக் குறிக்கிறது. “நாகரிகமற்ற காலகட்டத்தில் எளிய வடிவில் நடைமுறையிலிருந்த தீயொழுக்கம் ஒவ்வொன்றையும் நாகரிகக் கட்டம், சிக்கலான, குழப்பம்மிக்க, தெளிவற்ற, வஞ்சகத் தன்மை கொண்ட வாழ்க்கை வடிவமாக உயர்த்தியுள்ளது” என்பதை நிரூபிக்கிறார். நாகரிகம், “ஒரு நச்சு வட்டத்தில் சுற்றி வருகிறது”; தொடர்ந்து முரண்பாடுகளை மறு உற்பத்தி செய்து அவற்றைத் தீர்த்துவைக்கும் திறனின்றி, முரண்பாடுகளிலேயே இயங்குகிறது; எனவே, அது சாதிக்க விரும்புவதற்கு அல்லது சாதிக்க விரும்புவதாகப் பாசாங்கு செய்வதற்கு நேர் எதிரான நிலைமைக்கே எப்போதும் வந்தடைகிறது. எடுத்துக்காட்டாக, “நாகரிகக் கட்டத்தில் மீமிகை வளத்திலிருந்தே வறுமை பிறக்கிறது” என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டுகிறார்.

நாம் பார்த்தவாறு, ஃபூரியே அவர்காலத்தவரான ஹெகலைப் போலவே அதே அறிவார்ந்த வழியில் இயக்கவியல் வழிமுறையைப் பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம். அதே இயக்கவியலைப் பயன்படுத்தி, வரம்பில்லா மனித மேம்பாடு குறித்துப் பேசுவதை எதிர்த்து ஃபூரியே வாதிடுகிறார். ஒவ்வொரு வரலாற்றுக் கட்டமும் அதன் ஏறுமுகக் காலகட்டத்தையும், இறங்குமுகக் காலகட்டத்தையும் பெற்றுள்ளது என்கிறார். இந்தக் கூர்ந்த கவனிப்பை, ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்காலத்துக்கும் பயன்படுத்துகிறார். கடைசி முடிவாகப் பூமி அழிந்துபோகும் என்னும் கருத்தை இயற்கை விஞ்ஞானத்தில் எவ்வாறு கான்ட் புகுத்தினாரோ, அதேபோல ஃபூரியே மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் புகுத்தினார்.

Image result for french revolution

பிரெஞ்சு புரட்சி

ஃபிரான்சில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்தபோது, இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதன் காரணமாக, பேராற்றலில் எந்த வகையிலும் குறைந்துவிடாத, ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீராவியும், கருவிகளைத் தயாரிக்கும் புதிய எந்திர சாதனங்களும் பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றிக் கொண்டிருந்தன. அதன்மூலம் முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே அடியோடு புரட்சிகரமாக்கி வந்தன. பட்டறைத்தொழில் காலத்தில் மந்த கதியில் நடைபோட்டு வந்த வளர்ச்சி, உற்பத்தியில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டமாக மாறியது. சமுதாயம் பெரு முதலாளிகளாகவும் உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிளவுறுவது, தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வேகத்தில் நிகழ்ந்தது. இவ்விரு வர்க்கங்களுக்கும் இடையில், முன்பிருந்த நிலையான நடுத்தர வர்க்கத்துக்குப் பதிலாகக் கைவினைத் தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் அடங்கிய ஒரு நிலையற்ற மக்கள் திரள் இடம்பெற்றது. மக்களில் மிகவும் ஊசலாட்டமான பகுதியினரான இவர்கள் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கை நடத்தினர்.

புதிய உற்பத்தி முறை அதன் ஏறுமுகத்தின் தொடக்க நிலையிலேதான் இன்னமும் இருந்தது. இப்போது அதுதான் இயல்பான, முறையான உற்பத்தி முறையாக இருந்தது. தற்போதைய நிலைமைகளில் சாத்தியமான ஒரேவொரு உற்பத்தி முறையாகவும் இருந்தது. எனினும், இந்த நிலையிலுங்கூட அது மிக மோசமான சமூகக் கேடுகளை உண்டாக்கி வந்தது. வசிக்க வீடில்லாத மக்கள் கூட்டம், பெரிய நகரங்களின் படுமோசமான குடியிருப்புகளில் மந்தைகளாக அடைபட்டுக் கிடந்தது. மரபு வழியிலான அனைத்து ஒழுக்கநெறிக் கட்டுப்பாடுகளும், குடும்பத் தலைவருக்குக் கீழ்ப்படிதலும், குடும்பப் பிணைப்புகளும் தளர்ந்து போயின. மிகுதியான வேலைப்பளு, முக்கியமாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தும் அளவுக்கு இருந்தது. தொழிலாளர் வர்க்கத்தினர், நாட்டுப்புறத்திலிருந்து நகரத்துக்கும், விவசாயத்திலிருந்து நவீனத் தொழில்துறைக்கும், நிலையான வாழ்க்கை நிலைமைகளிலிருந்து நாள்தோறும் மாறுகின்ற பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகளுக்குமாக, முற்றிலும் புதிய நிலைமைகளுக்குள் திடீரெனத் தூக்கியெறியப்பட்டு, முழுதும் நம்பிக்கை இழந்தோராயினர்.

இந்தச் சூழ்நிலையில் 29 வயதான ஓர் ஆலையதிபர் சீர்திருத்தவாதியாக முன்னணிக்கு வந்தார். ஏறத்தாழ குழந்தையைப் போன்ற எளிய உன்னதப் பண்புகள் கொண்ட  ஒரு மனிதர். அதேவேளையில், மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர். [அவர்தான் ராபர்ட் ஓவன்]. ராபர்ட் ஓவன் பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்களின் போதனையை ஏற்றுக் கொண்டவர். அதாவது, மனிதனின் பண்பியல்பு, ஒருபுறம் மரபுவழியிலும், மறுபுறம் அத்தனிநபரின் ஆயுள்காலத்தில் அதிலும் முக்கியமாய் அவருடைய வளர்ச்சிக் கட்டத்தில் நிலவுகின்ற சூழ்நிலையாலும் உருவாக்கப்படுகின்றது. ஓவன் சார்ந்திருந்த வர்க்கத்தினரில் மிகப்பலர் தொழில்புரட்சியில் குளறுபடியையும், குழப்பத்தையும், குழம்பிய குட்டையில் மீன்பிடித்து, குறுகிய காலத்தில் பெருஞ்செல்வம் திரட்டுவதற்கான வாய்ப்பையுமே கண்ணுற்றனர். ஓவனோ தன்னுடைய மிகவிருப்பமான கொள்கையை நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் குளறுபடியிலிருந்து ஒழுங்கை நிலைநாட்ட, இந்தத் தொழில்புரட்சியில் நல்வாய்ப்பு இருப்பதைக் கண்டார். ஏற்கெனவே மான்செஸ்டர் ஆலை ஒன்றில் ஐந்நூறுக்கு மேற்பட்டோரின் மேலாளராக இருந்தபோது, அவருடைய கொள்கையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளார். [அதன்பின்] 1800-லிருந்து 1829 வரையில், ஸ்காட்லாந்தில் நியூ லானார்க் என்னும் நகரில் அமைந்த மாபெரும் பஞ்சாலையின் மேலாண்மைக் கூட்டாளியாக இருந்துகொண்டு, அதே வழிமுறைகளில், ஆனால் மேலும் அதிக சுதந்திரத்துடன் அப்பஞ்சாலையை வழிநடத்தி வெற்றி கண்டார். அவ்வெற்றி ஐரோப்பிய அளவில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.

Image result for ancient manchester labour

ஏங்கல்ஸ்

தொடக்கத்தில், மிகவும்  மாறுபட்ட தன்மை கொண்ட, பெரும்பகுதியும் நம்பிக்கையற்றுப் போன மனிதர்களைக் கொண்ட ஒரு மக்கள் தொகுதியை, படிப்படியாக 2,500 பேராக வளர்ச்சி பெற்ற ஒரு மக்கள் தொகுதியை, ஓவன் ஒரு முன்மாதிரியான குடியிருப்பாக மாற்றிக் காட்டினார். அந்தக் குடியிருப்பு, குடிப்பழக்கம், போலீஸ், நீதிபதிகள், வழக்குகள், ஏழ்மையர் சட்டங்கள், அறக்கட்டளை இவைபற்றி அறிந்ததில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நிலைமைகளில் மக்களை வைத்திருப்பதன் மூலமும், இன்னும் முக்கியமாக வளர்ந்துவரும் தலைமுறையைக் கவனமாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமும் ஓவன் இதனைச் சாதித்தார். அவர்தான் குழந்தைப் பள்ளிகளைத் தோற்றுவித்த முன்னோடி. முதன்முதலாக நியூ லானார்க்கில் அவற்றை அறிமுகப்படுத்தினார். இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வராதபடி, அந்த அளவுக்கு அங்கே அவர்கள் ஆனந்தமாக இருந்தனர். ஓவனின் போட்டியாளர்கள் தங்கள் தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு 13, 14 மணிநேரம் வேலை வாங்கியபோது, நியூ லானார்க்கில் வேலைநாள் பத்தரை மணிநேரம் கொண்டதாகவே இருந்தது. ஒருமுறை பருத்திப் பற்றாக்குறையால் நான்கு மாத காலம் பஞ்சாலையில் வேலை நிறுத்தப்பட்டபோது, ஓவனின் தொழிலாளர்கள் எல்லாக் காலத்துக்கும் முழுச் சம்பளம் பெற்றனர். இவ்வளவும் இருந்தபோதும், ஆலையின் வணிக மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாகப் பெருகியது. இறுதிவரை ஆலையின் உடைமையாளர்களுக்கு மிகுந்த இலாபத்தை அளித்து வந்தது.

இத்தனைக்குப் பிறகும் ஓவன் மனநிறைவு அடையவில்லை. தன்னுடைய தொழிலாளர்களுக்கு அவர் பெற்றுத் தந்த வாழ்க்கை, அவர் பார்வையில், மனிதர்களுக்குத் தகுதியான வாழ்விலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவே பட்டது. “இம்மக்கள் என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்” [என்று எழுதினார்]. தன்னுடைய தொழிலாளர்களுக்கு ஓவன் வழங்கியிருந்த வாழ்க்கை நிலைமைகள் ஒப்பீட்டளவில் அனுகூலமானவை என்றாலும், அவர்களின் பண்பியல்பும், அறிவுத்திறனும் அனைத்துத் திசைகளிலும் நியாயமான வளர்ச்சிபெற அனுமதிக்கும் நிலைக்கு இன்னமும் எட்டாத தொலைவிலேயே அவை இருந்தன. அவர்களுடைய வினையாற்றல்கள் அனைத்தையும் சுதந்திரமாகச் செயல்படுத்த மிகவும் குறைவான வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளே இருந்தன. “இருந்த போதிலும், இந்த 2,500 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி, சமுதாயத்துக்கு நாள்தோறும் உற்பத்தி செய்து வருகின்ற உண்மையான செல்வத்தின் அளவுக்கு, அரை நூற்றாண்டுக்கும் குறைவான காலத்துக்கு முன்பு உற்பத்தி செய்திட, 6,00,000 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி தேவைப்பட்டிருக்கும். [இன்று] 2,500 பேர் நுகர்ந்த செல்வத்துக்கும், [அன்று] 6,00,000 பேர் நுகர்ந்திருக்கக்கூடிய செல்வத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு, [அவ்வகையில் மீந்திருக்க வேண்டிய செல்வம்] என்ன ஆயிற்று என என்னை நானே கேட்டுக் கொண்டேன்” [என்று ஓவன் எழுதினார்].

விடை தெளிவானது. ஆலையின் உடைமையாளர்களுக்கு, அவர்கள் போட்ட மூலதனத்துக்கான 5 சதவீதத் தொகையையும், அதோடு சேர்த்து 3,00,000 பவுண்டுகளுக்கு மேற்பட்ட நிகர இலாபத்தையும் வழங்குவதற்காக இச்செல்வம் பயன்படுத்தப்பட்டுவிட்டது. நியூ லானார்க் ஆலைக்குக் கூறப்பட்ட இந்த உண்மை, இங்கிலாந்திலுள்ள அனைத்து ஆலைகளுக்கும் இன்னும் அதிக அளவுக்குப் பொருந்துவதாக இருந்தது.

“எந்திரச் சாதனங்கள், சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்ட நிலையிலும், இந்தப் புதிய செல்வத்தைப் படைக்காமல் இருந்திருப்பின், நெப்போலியனுக்கு எதிராகவும், சமுதாயத்தின் பிரபுக்குலக் கோட்பாடுகளை ஆதரித்தும், ஐரோப்பாவில் நடத்தப்பட்ட போர்களைத் தொடர்ந்து நடத்த முடிந்திருக்காது. என்றாலும், இந்தப் புதிய சக்தி உழைக்கும் வர்க்கங்களின் படைப்பாகும்.” [குறிப்பு 1.சி., பக்கம் 22]. எனவே, இந்தப் புதிய சக்தியின் பலன்கள் அவர்களுக்கே உரியனவாகும். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரம்மாண்ட உற்பத்திச் சக்திகள், இதுநாள்வரை தனிநபர்களைச் செழிப்பாக்கவும், சாதாரண மக்களை அடிமையாக்கவுமே பயன்படுத்தப்பட்டன. ஓவனுக்கோ அவை சமுதாயத்தின் மறுகட்டமைப்புக்கான அடித்தளங்களை நல்கின. அனைவரின் பொதுச் சொத்தாகவும், அனைவரின் பொது நன்மைக்காகச் செயல்படுத்தப்படப் போகிற சக்திகளாகவும் அமைந்தன.

ஓவனுடைய கம்யூனிசம் முற்றிலும் இந்தத் தொழில்முறை அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். சொல்லப் போனால், வணிகக் கணக்கீட்டின் விளைவு எனக் கூறலாம். இறுதிவரை, இந்த நடைமுறை சார்ந்த தன்மையை அது தொடர்ந்து மெய்ப்பித்து வந்தது. இவ்வாறு, 1823-இல் ஓவன் அயர்லாந்தில் கம்யூனிசக் குடியிருப்புகள் மூலம், [மக்களின்] இன்னல் களைவதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்தார். இந்தக் குடியிருப்புகளை அமைப்பதற்கான செலவு, [பராமரிப்புக்கான] ஆண்டுச் செலவினங்கள், அனேகமாக [அதிலிருந்து பெறப்படும்] வருமானம் ஆகியவை அடங்கிய முழுமையான திட்ட மதிப்பீடுகளை வகுத்திட்டார். வருங்காலத்துக்கான அவருடைய வரையறுக்கப்பட்ட திட்டத்தில், விவரங்களின் நுட்பமான வரையறுப்புகள், அப்படியொரு நடைமுறைசார்ந்த அனுபவ அறிவுடன் கையாளப்பட்டுள்ளன. அடித்தளத் திட்டம், முன்புறக் காட்சி, பக்கவாட்டுக் காட்சி, மேலிருந்து நோக்கும் பொதுவான காட்சி என அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. சமூகச் சீர்திருத்தத்துக்கான ஓவனின் வழிமுறையை ஏற்றுக் கொண்டால், அவர் உள்ளபடியே முன்வைத்துள்ள விவரங்களின்  ஒழுங்கமைப்புக்கு எதிராக, நடைமுறைக் கண்ணோட்டத்திலிருந்து சொல்வதற்கு ஏதுமில்லை.

கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. முக்கியமாகச் சமூகச் சீர்திருத்தத்துக்கான பாதையைத் தடுக்கும் மூன்று பெரும் தடைகள் அவருக்குத் தென்பட்டன: தனியார் சொத்துடைமை, மதம், திருமணத்தின் தற்போதைய வடிவம். இவற்றின்மீது தாக்குதல் தொடுத்தால் தாம் எவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என ஓவன் அறிந்து வைத்திருந்தார். சட்டப் பாதுகாப்பின்மை, அதிகாரபூர்வ சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், தம்முடைய முழுமையான சமூக அந்தஸ்தையே இழத்தல் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் விளைவுகள் பற்றிய அச்சமின்றி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்து இவற்றுள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. [இவ்வாறுதான் நடக்குமென] அவர் முன்னறிந்தபடியே நிகழ்ந்தது. பத்திரிகைகளில் அவருக்கு எதிரான மௌனச் சதியுடன் கூடவே, அதிகாரபூர்வச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தம் செல்வம் அனைத்தையும் பலியிட்டு அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றிபெறாத கம்யூனிசப் பரிசோதனைகளால் தம்முடைய செல்வத்தையெல்லாம் இழந்து நொடித்துப் போனார். நேரடியாகத் தொழிலாளி வர்க்கத்திடம் வந்து சேர்ந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகள் அவர்களிடையே பணியாற்றினார். [அக்காலகட்டத்தில்] இங்கிலாந்தில் தொழிலாளர்கள் சார்பிலான ஒவ்வொரு சமூக இயக்கமும், ஒவ்வொரு மெய்யான முன்னேற்றமும் ராபர்ட் ஓவனின் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளன.

தொழில்கூடங்களில் பெண்கள், குழந்தைகளின் வேலைநேரத்துக்கு வரம்பு விதித்த முதலாவது சட்டத்தை37 ஐந்து ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின், 1819-இல் நிர்ப்பந்தம் கொடுத்து. நிறைவேறச் செய்தார். இங்கிலாந்தின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஒரே மாபெரும் தொழிற்சங்கக் கூட்டமைப்பாக இணைந்து நடத்திய முதலாவது காங்கிரசின் தலைவராக இருந்தார்38. சமுதாயத்தின் முழுமையான கம்யூனிசவழி அமைப்புமுறைக்குரிய இடைக்கால நடவடிக்கைகளாக, ஒருபுறம் சில்லறை வணிகத்துக்கும் உற்பத்திக்குமாகக் கூட்டுறவுக் கழகங்களை ஓவன் அறிமுகப்படுத்தினார். அக்காலகட்டம் முதலாகக் குறைந்தது அவை, வியாபாரிகளும் ஆலையதிபர்களும் சமூக ரீதியாகச் சிறிதும் தேவையற்றவர்கள் என்பதற்கான நடைமுறை நிரூபணத்தை வழங்கின. மறுபுறம், தொழிலாளர்களின் உற்பத்திப் பொருள்களை உழைப்பு-நோட்டுகளுக்குப் பரிவர்த்தனை செய்து கொள்ள உழைப்புக் கடைவீதிகளை39 அவர் அறிமுகப்படுத்தினார். இந்த உழைப்பு-நோட்டுகளின் அலகு ஒரு மணிநேர வேலை ஆகும். இந்த நிறுவனங்களின் தோல்வி நிச்சயமாகத் தவிர்க்கமுடியாத ஒன்று என்றாலும், மிகவும் பிந்தைய ஒரு காலகட்டத்தில் புரூதோனின் (Proudhon) பரிவர்த்தனை வங்கி40 அமைக்கப்படுவதற்கு இவை முழு அளவில் முன்னோடியாக விளங்கின. [புரூதோனின் வங்கியைப்போல] இவை சமூகக் கேடுகள் அனைத்துக்கும் சஞ்சீவி மருந்தெனக் கூறிக் கொள்ளவில்லை. ஆனால் சமுதாயத்தை மேலும் தீவிரமாக மாற்றியமைப்பதற்கான முதலாவது முயற்சி மட்டுமே. அந்த வகையில், ஓவனின் நிறுவனங்கள் புரூதோனின் வங்கியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்கின.

Image result for communism

கற்பனாவாதிகளின் சிந்தனை முறை 19-ஆம் நூற்றாண்டின் சோஷலிசக் கருத்துக்களின் மீது நீண்ட காலத்துக்கு ஆளுமை செலுத்தி வந்தது. அவற்றுள் சிலவற்றின் மீது இன்னமும் ஆளுமை செலுத்தி வருகிறது. மிக அண்மைக் காலம்வரை ஃபிரெஞ்சு, ஆங்கில சோஷலிஸ்டுகள் அனைவரும் இவ்வகைச் சிந்தனை முறைக்கு வழிபாடு செய்துவந்தனர். வைட்லிங்கின் (Weitling) சிந்தனை உட்பட, முற்பட்ட ஜெர்மன் கம்யூனிசம் இதே சிந்தனை மரபைச் சேர்ந்ததுதான். இவர்கள் அனைவருக்கும் சோஷலிசம் என்பது அறுதி உண்மை (absolute truth), பகுத்தறிவு, நீதி ஆகியவற்றின் வெளிப்பாடாகும். சோஷலிசம் தன் சொந்த சக்தியின் சிறப்புத் தன்மையாலேயே அனைத்துலகையும் வெற்றி கொள்ள அதனைக் கண்டுபிடித்துச் சொன்னாலே போதும். அறுதி உண்மை என்ற வகையில் அது காலம், இடம், மனிதனுடைய வரலாற்று ரீதியான வளர்ச்சி ஆகியவற்றைச் சார்ந்திருக்கவில்லை. எப்போது, எங்கே அது கண்டுபிடிக்கப்படுகிறது என்பது வெறும் தற்செயல் நிகழ்ச்சியே ஆகும். இவ்வளவு இருந்தும்கூட அறுதி உண்மை, பகுத்தறிவு, நீதி ஆகியவை வெவ்வேறு சிந்தனை மரபுகள் ஒவ்வொன்றின் நிறுவனருக்கும் வெவ்வேறு வகையினதாகவே இருக்கின்றன. ஒவ்வொருவருடைய விசேஷ வகைப்பட்ட அறுதி உண்மை, பகுத்தறிவு, நீதி ஆகியவை, அவருடைய அகவயப் புரிதல், அவருடைய வாழ்க்கை நிலைமைகள், அவருடைய அறிவின் ஆழம், அவருடைய மதிநுட்பப் பயிற்சி ஆகியவற்றால் மீண்டும் தாக்கம் பெறுகின்றன. இந்தக் காரணத்தால், இந்த அறுதி உண்மைகள் [தமக்குள் பொதுக் கூறுகள் எதுவுமின்றி] ஒன்றையொன்று பரஸ்பரம் விலக்கி வைப்பதைத் தவிர வேறு எந்த முடிவையும் வந்தடைவது சாத்தியமன்று.

எனவே, இதிலிருந்து ஒருவகையான கதம்பவாத, சராசரி சோஷலிசத்தைத் தவிர  வேறெதுவும் தோன்ற வழியில்லை. உண்மையில் பார்க்கப் போனால், இத்தகைய ஒரு சோஷலிசம்தான் ஃபிரான்சிலும் இங்கிலாந்திலும் மிகப் பெரும்பாலான சோஷலிஸ்டுத் தொழிலாளர்களின் உள்ளங்களில் இன்றைய நாள்வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, இது, மிகப் பன்முகக் கருத்துச் சாயல்களுக்கும் இடம்தரும் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு; வேறுபட்ட குழுக்களின் நிறுவனர்களால் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச எதிர்ப்பைத் தூண்டும்படியான விமர்சன அறிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகள், வருங்காலச் சமுதாயம் குறித்த சித்திரங்கள் ஆகியவை அடங்கிய  குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு; [பல்வேறு சிந்தனைகளில் அடங்கியிருந்த] தனிப்பட்ட உள்ளடக்கக் கூறுகளின் மிகத் தெளிவான கூர்முனைகள், நீரோடையில் உருண்டு மழுங்கிய கூழாங்கற்களைப் போல, விவாத நீரோட்டத்தில்  மழுங்கடிக்கப்பட்டு, மிக எளிதில் கலந்து உருவாக்கப்பட்ட குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு.

சோஷலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க, முதலில் அதைக் [கற்பனை அல்லாத] ஓர் உண்மையான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது.

அத்தியாயம்-2

[இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்]

இதற்கிடையில் 18-ஆம் நூற்றாண்டின் ஃபிரெஞ்சுத் தத்துவத்துடன் கூடவேயும் அதற்குப் பின்பும், புதிய ஜெர்மன் தத்துவம் உதித்தெழுந்தது. ஹெகலின் தத்துவத்தில் அது உச்சநிலையை அடைந்திருந்தது. பகுத்தாய்வின் மிக உயர்ந்த வடிவமாக இயக்கவியலை மீண்டும் எடுத்துக் கொண்டதுதான் ஜெர்மன் தத்துவத்தின் தனிச்சிறப்பு. பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இயல்பான இயக்கவியல்வாதிகளாக இருந்தனர். இவர்கள் அனைவருள்ளும் பல்துறை அறிவுசான்றவரான அரிஸ்டாட்டில் (Aristotle) இயக்கவியல் சிந்தனையின் மிகமிகத் தலையாய வடிவங்களை ஏற்கெனவே பகுத்தாய்ந்திருந்தார். இதற்கு மாறாகப் [பிற்காலத்திய] புதிய ஜெர்மன் தத்துவமானது, முக்கியமாய் ஆங்கிலச் செல்வாக்கின் விளைவாக, பகுத்தாய்வுப் போக்கில் இயக்க மறுப்பியல் முறை என்று சொல்லப்படும்  போக்குடன் மென்மேலும் இறுக்கமாக ஒன்றிவிட்டது. இயக்கவியலை அறிவுத்திறனோடு விளக்கிக் கூறியவர்கள் (எ-டு: டெக்கார்ட்டே (Descartes),  ஸ்பினோஸா (Spinoza)) இதிலும்கூட இருந்தார்கள் என்ற போதிலும் இது நடைபெற்றது.  18-ஆம் நூற்றாண்டின்  ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள் அவர்களின் தனிச்சிறப்பான தத்துவார்த்தப் படைப்புகளில் என்னதான் சொல்லியிருந்த போதிலும், இதே இயக்க மறுப்பியல் முறைதான் அவர்கள்மீது ஏறத்தாழ முழுமையாய் ஆதிக்கம் செலுத்தியது. இருந்த போதிலும், வரம்புக்குட்பட்ட பொருளில் தத்துவம் என்று சொல்லப்படுவதற்கு வெளியே ஃபிரெஞ்சு நாட்டினர் இயக்கவியலின் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கினர். டிட்ரோவின் ரமோவின் மருகன் (Le Neveu de Rameau), ரூஸோவின் மனிதர்களிடையே சமத்துவமின்மை தோன்றியது பற்றிய ஆய்வுரை (Discours sur l’origine et les fondements de l’inegalite parmi less hommes) ஆகியவற்றை மட்டும் கவனத்தில் கொள்ளுமாறு நாம் அறிவுறுத்தினால் போதும் [எனக் கருதுகிறேன்]. இந்த இரு சிந்தனை முறைகளின் தலையாய பண்பினை இங்குச் சுருக்கமாக எடுத்துரைக்கிறோம்.

பொதுவாக இயற்கையையோ, மனிதகுலத்தின் வரலாற்றையோ, நம் சொந்த அறிவுசார் செயல்பாட்டையோ கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, முதலில் நாம், உறவுகளும் எதிர்வினைகளும், வரிசைமுறைகளும் தொகுதிமுறைகளும் தமக்குள் முடிவின்றிப் பின்னிப் பிணைந்து சிக்கலாகிக் கிடக்கும் ஒரு சித்திரத்தையே காண்கிறோம். இதில் எதுவும் அப்படியே, அங்கேயே, முன்பிருந்தவாறு தொடர்ந்து இருக்கவில்லை. அனைத்துமே இயங்கிக்கொண்டும், மாறிக்கொண்டும், தோன்றிக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கக் காண்கிறோம். எனவே, முதலில் நாம், இந்தச் சித்திரத்தின் தனித்தனிப் பகுதிகள் இன்னமும் பெருமளவுக்குப் பின்னணியிலே வைக்கப்பட்ட நிலையில், அச்சித்திரத்தை முழுமையான ஒன்றாகவே பார்க்கிறோம். இயங்குகின்ற, சேர்கின்ற, இணைக்கப்படுகின்ற பொருள்களைக் காட்டிலும் அப்பொருள்களின் இயக்கங்களையும், நிலைமாற்றங்களையும், இணைப்புகளையும் மட்டுமே கவனிக்கின்றோம். உலகைப் பற்றிய முதிராத, வளர்ச்சியடையாத, ஆயினும் அகநிலையில் பிழையற்ற இந்தக் கருத்துருவே பண்டைய கிரேக்கத் தத்துவத்தின் கருத்துருவாகும். முதன்முதலில் ஹெராக்லிட்டஸ் (Heraclitus) இதைத் தெளிவாக வரையறுத்துக் கூறினார்: ஒவ்வொன்றும் இருந்துகொண்டும், இல்லாமலும் இருக்கிறது. ஏனெனில், ஒவ்வொன்றும் நிலையற்றதாக இருக்கிறது, இடையறாது மாறிக்கொண்டும், இடையறாது தோன்றிக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கிறது.

Image result for Heraclitus

ஆனால் இந்தக் கருத்துரு, தோற்றங்களுடைய ஒட்டுமொத்தத் சித்திரத்தின் பொதுவான தன்மையைச் சரியாகவே வெளிப்படுத்தினும், அச்சித்திரத்தில் அடங்கியுள்ள உட்கூறுகளை விளக்கிட இது போதுமானதாக இல்லை. அக்கூறுகளைப் புரிந்து கொள்ளாதவரை, முழுமையான சித்திரம் பற்றிய ஒரு தெளிவான கருத்தை நாம் கொண்டிருக்க முடியாது. அக்கூறுகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றின் இயற்கையான அல்லது வரலாற்று ரீதியான தொடர்புகளிலிருந்து அவற்றைப் பிரித்தெடுத்து, அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே அதன் இயல்பு, தனிச்சிறப்பான காரணங்கள், விளைவுகள், இன்னபிற குறித்துப் பரிசீலித்தாக வேண்டும். முதன்மையாக இது, இயற்கை விஞ்ஞானம், வரலாற்று ஆராய்ச்சி ஆகியவற்றின் பணியாகும். பண்டைய காலத்துக் கிரேக்கர்கள் விஞ்ஞானத்தின் இந்தக் கிளைகளை, மிகச்சரியான காரணங்களுக்காக, கீழ்நிலைக்கு உரியனவாக ஒதுக்கி வைத்திருந்தனர். ஏனெனில், இந்த விஞ்ஞானங்களின் மீது செல்வாக்குச் செலுத்த அதற்கான விவரங்களை முதலில் அவர்கள் திரட்ட வேண்டியிருந்தது. இயற்கை சார்ந்த, வரலாறு சார்ந்த விவரங்களை, குறிப்பிட்ட அளவுக்குத் திரட்டியாக வேண்டும். அதன்பிறகே எந்த வகையான விமர்சனப் பகுப்பாய்வும், ஒப்பீடும் இருக்க முடியும்; வகைகளில், படிநிலைகளில், இனங்களில் ஒழுங்கமைக்கவும் முடியும். எனவே, துல்லியமான இயற்கை விஞ்ஞானங்களின் அடிப்படைகளை முதன்முதலாக அலெக்சாண்டிரிய காலகட்டத்தில்41 கிரேக்கர்கள் உருவாக்கினர். அதன்பின் மத்திய காலத்தில் அரேபியர்கள் உருவாக்கினர்.

உண்மையான இயற்கை விஞ்ஞானம் 15-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் தொடங்கியது. அதுமுதற்கொண்டு, தொடர்ந்து அதிகரித்துவரும் வேகத்தில் அது முன்னேறி வந்துள்ளது. இயற்கையை அதன் தனித்தனிப் பிரிவுகளில் பகுத்தாய்தல், இயற்கை சார்ந்த வேறுபட்ட நிகழ்முறைகளையும், பொருள்களையும் திட்டவட்டமான இனக்குழுக்களில் வகைப்படுத்தல். அங்ககப் பொருள்களின் அகநிலைக் கட்டமைப்பை அவற்றின் பன்முக வடிவங்களிலும் நுணுகி ஆய்தல் – இவைதாம் கடந்த 400 ஆண்டு காலத்தில், இயற்கையைப் பற்றிய நம் அறிவில் ஏற்பட்ட பிரம்மாண்ட முன்னேற்றப் படிகளின் அடிப்படை நிபந்தனைகள் ஆகும். ஆனால், இந்தவகை ஆய்வுமுறையானது, இயற்கைப் பொருள்களையும் நிகழ்முறைகளையும் [பிரபஞ்சத்தின்] பிரம்மாண்டமான முழுமையுடன் அவற்றுக்குள்ள தொடர்புகளிலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தி நோக்கும் பழக்கத்தையும், அவற்றின் இயக்கத்தில் அல்லாது ஓய்வில், அவை அடிப்படையில் மாறிகள் (variables) என்ற நிலையில் அல்லாது மாறிலிகள் (constants) என்ற நிலையில், அவற்றின் வாழ்வில் அல்லாது அவற்றின் மரணத்தில் வைத்து நோக்கும் பழக்கத்தையும் மரபுரிமையாக நம்மிடையே விட்டுச் சென்றுள்ளது. பொருள்களை நோக்குவதற்கான இந்த வழிமுறையை, பேக்கனும் லோக்கும் இயற்கை விஞ்ஞானத்திலிருந்து தத்துவத்துக்கு இடம் மாற்றியபோது, அது கடந்த நூற்றாண்டுக்கே உரிய தனித்துவமான, குறுகிய, இயக்க மறுப்பியல் சிந்தனை முறையைத் தோற்றுவித்தது.

இயக்க மறுப்பியல்வாதிக்கு, பொருள்களும் அவற்றின் மனப் பிரதிபலிப்புகளும், கருத்துகளும் தனித்தனியானவை; அவற்றை ஒன்றின்பின் ஒன்றாகவும் ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவை நிலையான, நெகிழ்வற்ற, என்றைக்குமாய்த் தரப்பட்ட ஆய்வுப் பொருள்கள் ஆகும். முற்றிலும் ஒத்துப் போகாத முரண்நிலைகளில்தான் அவர் சிந்திக்கிறார். “அவருடைய பேச்செல்லாம் ‘ஆம், ஆம்; இல்லை, இல்லை’ என்பதுதான்; அவற்றுக்கு அதிகமாக எதுவாக இருந்தாலும் அது பாவத்திலே பிறந்தது.” அவரைப் பொறுத்தவரை, ஒரு பொருள் இருக்கிறது அல்லது இருக்கவில்லை; ஒரு பொருள் அதுவாகவும், அதே நேரத்தில் வேறொன்றாகவும் இருக்க முடியாது. நேர்நிலையும் எதிர்நிலையும் ஒன்றையொன்று முற்றிலும் விலக்குகிறது; காரணமும் விளைவும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காத முரண்நிலையில் நிற்கின்றன.

முதல்பார்வையில் இந்தச் சிந்தனை முறை மிகவும் அறிவார்ந்ததாகவே நமக்குத் தோன்றுகிறது. ஏனெனில், இது மேம்பட்ட பொதுப்புத்தி என்று சொல்லப்படும் சிந்தனை முறையாகும். இந்த மேம்பட்ட பொதுப் புத்தியானது, அதற்குரிய நான்கு சுவர்களின் எளிய ஆட்சி எல்லைக்குள் இருக்கும்போது மதிக்கத் தக்கதாகத் திகழ்கிறது. ஆராய்ச்சி என்னும் பரந்த உலகினுள், ஆபத்தான பயணத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அது விந்தைமிகு அபாயங்களை நேரடியாக எதிர்கொள்கிறது. மேலும், இயக்க மறுப்பியல் சிந்தனை முறையானது, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் குறிப்பிட்ட ஆய்வுப் பொருளுக்குத் தக்கவாறு பரப்பு மாறுபடுகின்ற பற்பல செயல்களங்களில் நியாயப்படுத்தக் கூடியதாகவும், அவசியமானதாகவும் இருப்பினும், இறுதியாக ஒரு கட்டத்தில் அது ஓர் எல்லையை வந்தடைகிறது; இந்த எல்லைக்கு அப்பால், அது ஒருபக்கச் சார்புடையதாக, வரம்புக்கு உட்பட்டதாக, அருவமானதாக, தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கி மூழ்கிப் போனதாக ஆகிவிடுகிறது. தனித்தனிப் பொருள்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துகையில், அவற்றுக்கு இடையேயான தொடர்பினை அது மறந்துவிடுகிறது. அப்பொருள்களின் இருத்தலில் கவனம் செலுத்துகையில், அந்த இருத்தலின் தொடக்கத்தையும் முடிவையும் மறந்துவிடுகிறது. அவற்றின் ஓய்வில் கவனம் செலுத்துகையில் அவற்றின் இயக்கத்தை மறந்துவிடுகிறது. மரங்களைப் பார்க்கும் அது காட்டினைப் பார்க்க முடியவில்லை. [தனிக் கூறுகளை மட்டும் பார்த்து, ஒட்டுமொத்த முழுமையைப் பார்க்கத் தவறுகிறது].

அன்றாட நிகழ்வுகளைப் பொறுத்தவரை நமக்குத் தெரியும், [ஐயமின்றி] சொல்லவும் முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு விலங்கு உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று நம்மால் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆனால், நெருங்கிச் சென்று ஆய்கையில், பல சூழ்நிலைகளில் இது மிகவும் சிக்கலான கேள்வியாக இருக்கக் காண்கிறோம். சட்ட வல்லுநர்கள் இதை நன்கு அறிவர். தாயின் கருப்பையிலிருக்கும் சிசுவைக் கொல்லுதல் எந்த வரம்புக்கு அப்பால் கொலைக்குற்றம் ஆகிறது என்று அறிவுக்குகந்த ஒரு வரம்பைக் கண்டறியச் சட்ட வல்லுநர்கள் எவ்வளவுதான் தங்கள் மூளையைக் கசக்கிப் பார்த்தும் பலனில்லை. மரணம் நிகழும் தருணத்தை ஐயமின்றித் தீர்மானிப்பதும் இதேபோல இயலாதது. ஏனெனில், மரணம் என்பது உடனடியாக நடைபெறும் நொடிநேர நிகழ்வன்று, மிகவும் நீடித்ததொரு நிகழ்முறை என்பதை உடலியங்கியல் நிரூபித்துள்ளது.

அதுபோன்றே, ஒவ்வோர் அங்கக உயிரினமும் ஒவ்வொரு நொடியும் அதுவாகவும், அதே நேரத்தில் அதுவல்லாததாகவும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் அது வெளியிலிருந்து தரப்படும் பொருளைத் தன்மயமாக்கிக் கொள்கிறது; பிற பொருளை [தன்னுள்ளிருந்து] வெளியேற்றுகிறது. ஒவ்வொரு நொடியும் அதன் உடலில் சில உயிரணுக்கள் மடிகின்றன, வேறுசில உயிரணுக்கள் புதிதாகத் தோன்றுகின்றன. நீண்ட காலத்திலோ, குறுகிய காலத்திலோ அதன் உடலின் பொருள் முழுவதுமாகப் புதுப்பிக்கப்படுகிறது, பொருளின் பிற [புதிய] மூலக்கூறுகளால் மாற்றீடு செய்யப்படுகிறது. எனவே, ஒவ்வோர் அங்கக உயிரினமும் எப்போதும் தானேயாகவும், அதேநேரத்தில் தானல்லாத பிறிதொன்றாகவும் இருக்கிறது.

மேலும், நெருங்கிச் சென்று ஆராய்கையில் ஒரு முரண்நிலையின் இரு துருவங்களும், எடுத்துக்காட்டாக, நேர்நிலையும் எதிர்நிலையும், அவை எந்த அளவுக்கு எதிரெதிராக இருக்கின்றனவோ அந்த அளவுக்குப் பிரிக்க முடியாதனவாகவும் இருப்பதைக் காண்கிறோம். அவற்றுக்கிடையே எவ்வளவுதான் எதிர்ப்பு இருந்தபோதிலும், அவை பரஸ்பரம் [ஒன்றுள் ஒன்று] ஊடுருவக் காண்கிறோம். அதே முறையில், காரணம், விளைவு ஆகிய கருத்துருக்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்குப் பயன்படுத்துகையில் மட்டுமே உண்மையாக [காரணம் காரணமாகவும், விளைவு விளைவாகவும்] இருக்கக் காண்கிறோம். இந்தத் தனிப்பட்ட நிகழ்வுகளை, அவை பிரபஞ்ச முழுமையுடன் கொண்டுள்ள பொதுத் தொடர்பில் வைத்துப் பரிசீலிக்கத் தொடங்கியதுமே, காரணமும் விளைவும் ஒன்றுக்குள் ஒன்று ஊடுவக் காண்கிறோம். பிரபஞ்ச அளவிலான செயலையும் எதிர்ச்செயலையும் நாம் கூர்ந்து  நோக்குகையில் காரணம், விளைவு இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து கலக்கக் காண்கிறோம். [பிரபஞ்ச அளவிலான செயலிலும் எதிர்ச்செயலிலும்] இங்கே இப்போது விளைவாக இருப்பது, அங்கே அப்போது காரணமாக இருக்குமாறும், காரணமாக இருப்பது, விளைவாக இருக்குமாறும்,  காரணங்களும் விளைவுகளும் எப்போதும் தொடர்ந்து இடம் மாற்றிக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிகழ்முறைகள், சிந்தனை முறைகள் எதுவும் இயக்க மறுப்பியல் சார்ந்த பகுத்தாய்வின் கட்டுக்கோப்பில் இடம்பெறுவதில்லை. இதற்கு மாறாக, இயக்கவியலானது, பொருள்களையும் அவற்றின் உருவகிப்புகளையும், அதாவது கருத்துகளையும், அவற்றின் அத்தியாவசியத் தொடர்பிலும், தொடரிணைப்பிலும், இயக்கத்திலும், தொடக்கத்திலும் முடிவிலும் உய்த்துணர்ந்து புரிந்து கொள்கிறது. எனவே, மேலே குறிப்பிட்டவை போன்ற அத்தகைய நிகழ்முறைகள் செயல்முறைக்கான இயக்கவியலின் வழிமுறையைச் சரியென உறுதிப்படுத்தும் சான்றுகளாகி விடுகின்றன.

Image result for nature

இயற்கைதான் இயக்கவியலுக்கான நிரூபணம். நவீன விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துவரும் மிக வளமான விவரப் பொருள்களைக் கொண்டு அது இந்த நிரூபணத்தை நிலைநாட்டியுள்ளது என்பதைச் சொல்லியாக வேண்டும். முடிவாகப் பார்க்குமிடத்து, இயற்கையானது இயக்கவியல் போக்கில் செயல்படுகிறதே அன்றி இயக்க மறுப்பியல் போக்கில் செயல்படவில்லை என்பதையும், முடிவில்லாமல் திரும்பத் திரும்பத் தொடங்கிய புள்ளிக்கே வந்துசேரும் சுழற்சியின் நித்தியமான ஒருமுகப் போக்கில் இயற்கை இயங்கவில்லை; மாறாக, அது மெய்யான, வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகிறது என்பதையும் நவீன விஞ்ஞானம் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஏனையோர் அனைவருக்கும் முன்பாக டார்வின் (Darwin) பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும். அனைத்து அங்கக உயிரினங்களும், தாவரங்களும், விலங்குகளும், மனிதனும்கூட, கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் பரிணாம நிகழ்முறையின் விளைவுகளே என்று நிரூபித்ததன் மூலம், இயற்கையைப் பற்றிய இயக்க மறுப்பியலான கருத்துருவுக்கு டார்வின் அதிவலுவான அடி கொடுத்தார். எனினும், இயக்கவியல் முறையில் சிந்திக்கக் கற்றுக் கொண்ட இயற்கைவாதிகள் மிகச் சிலரே. விரல்விட்டு எண்ணி விடலாம். விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் விளைவுகளுக்கும், [எவ்வித ஆதாரமுமின்றி, இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தாங்களாக] முன்கூட்டியே வரையறுத்துக் கொண்ட சிந்தனை முறைகளுக்கும் இடையேயான இந்த மோதல்தான், தற்போது தத்துவார்த்த இயற்கை விஞ்ஞானத்தில் ஆட்சி செலுத்திவரும் முடிவற்ற குழப்பத்துக்குக் காரணமாகும். அதுதான் கற்பிக்கும் ஆசிரியர்கள், கற்றுக் கொள்பவர்கள், அவர்களைப் போன்றே நூலாசிரியர்கள், வாசகர்கள் ஆகியோரின் நம்பிக்கை இழப்புக்கும் காரணமாகும்.

எனவே, பிரபஞ்சம், அதன் பரிணாம வளர்ச்சி, மனிதகுலத்தின் வளர்ச்சி, இந்தப் பரிணாம வளர்ச்சி மனிதர்களின் மனத்தில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பு ஆகியவற்றின் துல்லியமான உருவகிப்பை இயக்கவியல் வழிமுறைகளால் மட்டுமே பெற முடியும். வாழ்வு – மரணம், முற்போக்கான அல்லது பிற்போக்கான மாறுதல்கள் ஆகியவற்றின் எண்ணிலடங்காச் செயல்களையும் எதிர்ச்செயல்களையும் தொடர்ந்து தன் கவனத்தில் கொள்வதன் மூலம் இயக்கவியல் இதைச் சாத்தியம் ஆக்குகிறது. புதிய ஜெர்மன் தத்துவம் இந்த உத்வேகத்தில்தான் முன்னேறி வந்துள்ளது. சூரிய மண்டலம் நிலையானது, அது நித்திய காலத்துக்கும் நிலவுவது என்கிற நியூட்டனின் முடிபுகளுக்குத் தீர்வு கண்டதன் மூலம், கான்ட் (Kant) [தத்துவ இயலில்] தன் பணியைத் தொடங்கினார். பெயர்பெற்ற அந்தத் தொடக்கத் தூண்டுவிசை வரலாற்று நிகழ்முறையில் ஒருதரம் அளிக்கப்பட்டதும், சூரியனும் அதன் அனைத்து கிரகங்களும் சுழலும் முகில்படலப் பொருண்மையிலிருந்து உருவாயின என்பது கான்ட் தந்த தீர்வாகும். அதே வேளையில், சூரிய மண்டலம் இவ்வாறுதான் தோன்றியது என்ற இந்தக் கருத்திலிருந்தே, வருங்காலத்தில்  அதன் அழிவும் தவிர்க்க முடியாது பின்தொடரும் என்கிற முடிவுக்கு அவர் வந்தடைந்தார். கான்ட்டின் கொள்கை முடிவை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, லாப்லாஸ் (Laplace) கணித வழியில் நிலைநாட்டினார். அதற்கும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு, வாயுவின் வெப்ப ஒளிவீசும் இத்தகைய பொருண்மைகள் உறைதலின் பல்வேறு நிலைகளில் அண்டவெளியில் நிலவுவதை நிறமாலை ஆய்வுக் கருவி நிரூபித்தது.

இந்தப் புதிய ஜெர்மன் தத்துவம் ஹெகலியத் தத்துவ அமைப்பில் உச்சத்தைத் தொட்டது. இந்த அமைப்பில் இயற்கை உலகு, வரலாற்று உலகு, அறிவு உலகு ஆகிய அனைத்து உலகும், முதல்முறையாக, இடையறாத இயக்கம், மாற்றம், உருமாற்றம், வளர்ச்சி ஆகியவை கொண்ட ஒரு நிகழ்முறையாக உருவகிக்கப்பட்டது. இந்த அமைப்பின் பெருஞ்சிறப்பு இதில்தான் காணக் கிடக்கிறது. இந்த இயக்கம், வளர்ச்சி ஆகிய அனைத்தின் தொடர்ச்சியான ஒரு முழுமையை உருவாக்குகின்ற அகநிலைப் பிணைப்பைப் புலப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் மனிதகுலத்தின் வரலாறு என்பது, முதிர்ச்சிபெற்ற தத்துவார்த்தப் பகுத்தறிவின் தீர்ப்பாயத்தில் ஒருசேரக் கண்டிக்கத்தக்க, சாத்தியமான அளவுக்கு விரைவாக மறந்துவிடல் நல்லதெனக் கருதத்தக்க, அர்த்தமற்ற வன்முறைச் செயல்களின் மூர்க்கத்தனமான வெறியாட்டமாக இனிமேலும் தோன்றவில்லை. அதற்கு மாறாக, அதே மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் நிகழ்முறையாகவே தோன்றியது. இந்த நிகழ்முறையின் படிப்படியான முன்னேற்றப் பயணத்தை, வளைந்து நெளிந்து செல்லும் அதன் வழிநெடுகப் பின்தொடர்வதும், தற்செயலானவையாகத் தோற்றமளிக்கும் அதன் அனைத்து நிகழ்வுகளின் ஊடாகவும் இழையோடும் உள்ளார்ந்த விதியைப் புலப்படுத்துவதும்தான் இப்போது அறிவாளர்களின் பணியாக இருந்தது.

Image result for hegel

ஹெகல் மற்றும் மார்க்ஸ்

ஹெகலிய தத்துவ அமைப்பு, தான் முன்வைத்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்பது இங்கு முக்கியமன்று. இந்தப் பிரச்சினையை முன்வைத்தது என்பதுதான் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாகும். இந்தப் பிரச்சினை எக்காலத்தும் எந்தவொரு தனிநபராலும் தீர்வுகாண இயலாத ஒன்றாகும். அவர் காலத்தில் ஹெகல் – சான்-சிமோனையும் சேர்த்து – அவருடைய காலகட்டத்தின் தலையாய கலைக்களஞ்சியச் சிந்தனையாளராகத்  திகழ்ந்தார் என்ற போதிலும், அவர் வரம்புக்கு உட்பட்டவராகவே இருந்தார். காரணம், முதலாவதாக, தவிர்க்க முடியாதபடி அவர்தம் அறிவின் வீச்சு வரம்புக்கு உட்பட்டிருந்தது. இரண்டாவதாக, அவர் காலத்திய அறிவு, கருத்துரு இவற்றின் வீச்சும் ஆழமும் வரம்புக்கு உட்பட்டிருந்தன. இந்த வரம்புகளோடு மூன்றாவது ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஹெகல் ஒரு கருத்துமுதல்வாதியாக இருந்தார். அவருடைய மூளைக்குள் உதிக்கும் சிந்தனைகளை, உள்ளபடியான பொருள்கள், நிகழ்முறைகள் ஆகியவற்றின் உத்தேசமான கருத்தியல் சித்திரங்களாக அவர் கருதவில்லை.

ஆனால், அதற்கு மாறாக, பொருள்களும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே எங்கேயோ முடிவில்லா நித்தியத்திலிருந்து நிலவிவரும் “கருத்தின்” மெய்மைப்படுத்தப்பட்ட சித்திரங்களே அன்றி வேறல்ல என்று கருதினார். இந்த முறையிலான சிந்தனை எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. உலகிலுள்ள பொருள்களின் உள்ளபடியான தொடர்பினை முழுமையாக நேர்மாறாக்கியது. கண்கூடான உண்மைகளின் தொகுப்புகள் பலவற்றைப் பிழையின்றியும், அறிவுக் கூர்மையுடனும் ஹெகல் உள்வாங்கிக் கொண்டார். என்றாலும், மேற்கூறிய காரணங்களினால், அவரிடம் அரைகுறையான, செயற்கையான, இட்டுக்கட்டப்பட்ட,  சுருங்கச் சொன்னால், விவர நோக்கில் தவறான கருத்துகள் நிறையவே இருந்தன. ஹெகலியத் தத்துவ அமைப்பே மாபெரும் குறைப்பிரசவமாகவே அமைந்தது. ஆனால், இத்தகைய தத்துவ அமைப்புகளுள் கடைசியானதாகவும் இருந்தது. உண்மையில் அது தீர்க்க முடியாத ஓர் உள்முரண்பாட்டில் சிக்கித் தவித்தது. ஒருபுறம், ஹெகலியத் தத்துவ அமைப்பின் தலையாய கருதுகோள், மனிதகுல வரலாறு என்பது ஒரு பரிணாம வளர்ச்சிப் போக்கு என்னும் கருத்துருவே ஆகும். [எனவே] அறுதி உண்மை என்று சொல்லப்படுகின்ற ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடிப்பதில் தன் அறிவாற்றலின் உச்சத்தைக் காண்பது, இத்தத்துவ அமைப்பின் இயல்புக்கே முரணானது ஆகும்.

ஆனால், மறுபுறம், இந்த அறுதி உண்மையின் சாரமே தான்தான் என்பதாக ஹெகலியத் தத்துவ அமைப்பு உரிமை கொண்டாடியது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய, இயற்கை, வரலாறு பற்றிய அறிவாகிய ஒரு [தத்துவ] அமைப்பு, எல்லாக் காலத்துக்குமான இறுதி [உண்மை] என்று கூறுவது, இயக்கவியல் பகுத்தாய்வின் அடிப்படை விதிக்கே முரணானது ஆகும். புறத்தே நிலவும் பிரபஞ்சத்தைப் பற்றிய முறைப்படுத்தப்பட்ட அறிவு, காலத்துக்குக் காலம், பிரம்மாண்டப் பெருநடை போட்டு முன்னேறிச் செல்ல வல்லது என்னும் கருத்தை, உண்மையிலேயே இந்த அடிப்படை விதி தன்னுள் கொண்டுள்ளதே அன்றி, எவ்வகையிலும் அதை ஒதுக்கிவிடவில்லை.

ஜெர்மன் கருத்துமுதல்வாதத்தில் இருந்த இந்த அடிப்படை முரண்பாடு பற்றிய புரிதல், தவிர்க்க முடியாதபடி பொருள்முதல்வாதத்துக்குத் திரும்பவும் இட்டுச் சென்றது. [ஆனால்] வெறும் இயக்க மறுப்பியலான, 18-ஆம் நூற்றாண்டுக்கே உரிய எந்திரத்தனமான பொருள்முதல்வாதத்துக்கு அல்ல என்பதைக் கவனத்துடன் குறித்துக் கொள்க. [18-ஆம் நூற்றாண்டின்] பழைய பொருள்முதல்வாதம், முந்தைய வரலாறு அனைத்தையும், அறிவுக்கு ஒவ்வாத் தன்மையும் வன்முறையும் நிரைந்த தெளிவற்ற [கருத்துக்] குவியலாகப் பார்த்தது. [ஆனால்] நவீனப் பொருள்முதல்வாதம், இந்த வரலாற்றில் மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கைக் காண்கிறது. இவ்வளர்ச்சிப் போக்கின் விதிகளைக் கண்டறிவதையே தன் நோக்கமாகக் கொள்கிறது. 18-ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுக்காரர்களைப் பொறுத்தவரை, ஏன் ஹெகலைப் பொறுத்தவரையும்கூட, இயற்கையிலிருந்து பெறப்பட்ட கருத்துரு என்னவெனில், ஒட்டுமொத்த இயற்கையும் நியூட்டன் கற்பித்ததுபோல் அதன் நித்தியமான விண்கோள்களையும், லின்னேயஸ் (Linnaeus) கற்பித்ததுபோல் மாற முடியாத அங்கக உயிரினங்களையும் கொண்டு குறுகிய வட்டங்களில் இயங்கி வருகிறது, என்றென்றும் மாறாமல் நிலையாக இருக்கிறது என்பதுதான்.

[ஆனால்] நவீனப் பொருள்முதல்வாதம் இயற்கை விஞ்ஞானத்தின் மிக அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியுள்ளது. அக்கண்டுபிடிப்புகளின்படி, [1] இயற்கையும் கால அளவிலான அதன் வரலாற்றைக் கொண்டுள்ளது. விண்கோள்களும் அங்கக உயிரினங்களைப் போல, மக்களைப் போல, சாதகமான சூழ்நிலைகளில், [புதிதாகப்] பிறந்துகொண்டும், [இறந்து] அழிந்து கொண்டும் உள்ளன. [2] ஒட்டுமொத்த இயற்கை, திரும்பத் திரும்ப நிகழும் சுழல்வட்டப் பாதையில் இயங்குவதாக இன்னமும் சொல்ல வேண்டியிருப்பினும், இந்தச் சுழல்கள் வரம்பிலாப் பெரும் பரிமாணங்களைப் பெற்றுவிடுகின்றன. இரண்டு கூறுகளிலும் நவீனப் பொருள்முதல்வாதம் சாராம்சத்தில் இயக்கவியல் தன்மை கொண்டதாகும். [தத்துவங்களின்] அரசியைப் போன்ற நிலையில் இருந்து கொண்டு, ஏனைய விஞ்ஞானங்களின் தொகுப்பு மீது ஆட்சி செலுத்துவதாகப் பாசாங்கு செய்யும், அந்த வகையானதொரு தத்துவத்தின் உதவி இனிமேலும் இதற்குத் தேவையில்லை. [அந்தந்தத் துறைசார்ந்த] ஒவ்வொரு தனிச்சிறப்பான விஞ்ஞானமும், பொருள்களின் மாபெரும் கூட்டுமொத்தத்திலும், பொருள்களைப் பற்றிய நம்முடைய அறிவின் கூட்டுமொத்தத்திலும் தனக்குள்ள நிலையினைத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டவுடனே, இந்தக் கூட்டுமொத்தம் குறித்துக் பரிசீலிக்கும் ஒரு தனிச்சிறப்பான விஞ்ஞானம், தேவைப்படாத அல்லது அவசியமற்ற ஒன்றாகும். முந்தையத் தத்துவம் அனைத்திலும் அழியாமல் இன்னமும் எஞ்சியிருப்பது, சிந்தனையையும் அதன் விதிகளையும் பற்றிய விஞ்ஞானமாகிய முறைசார்ந்த தர்க்கவாதமும், இயக்கவியலும் மட்டுமே. ஏனைய அனைத்தும் இயற்கையையும் வரலாற்றையும் பற்றிய நேர்மறை விஞ்ஞானத்தில் உட்கிரகிக்கப் பட்டுவிட்டன.

என்றாலும், தொடர்புடைய சாதகமான விவரப்பொருள்கள் ஆய்வுத்துறையால் வழங்கப்படும் அளவுக்கே, இயற்கை பற்றிய கருத்துருவில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றிருந்த நிலையில்,  ஏற்கெனவே மிகவும் முன்னதாகவே, கண்கூடான குறிப்பிட்ட சில வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்று, அவை வரலாறு பற்றிய கருத்துருவில் தீர்மானகரமான ஒரு மாற்றத்துக்கு  இட்டுச் சென்றன. 1831-இல் முதலாவது தொழிலாளி வர்க்க எழுச்சி லியோனில் (Lyons) நிகழ்ந்தது. 1838-க்கும் 1842-க்கும் இடையே, தேசந் தழுவிய முதலாவது தொழிலாளி வர்க்க இயக்கமாகிய ஆங்கிலச் சாசனவாதிகளின் இயக்கம் அதன் உச்சத்தைத் தொட்டது. ஐரோப்பாவில் மிகவும் முன்னேறிய நாடுகளின் வரலாற்றில், பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம் முன்னணிக்கு வந்தது. ஒருபுறம், நவீன தொழில்துறையின் வளர்ச்சி, மறுபுறம், முதலாளித்துவ வர்க்கம் புதிதாகப் பெற்றுக் கொண்ட அரசியல் மேலாதிக்கம் இவற்றின் அளவுக்கேற்ப  இது நிகழ்ந்தது. தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் முன்னணிக்கு வந்தது. மூலதனமும் உழைப்பும் ஒருமித்த நலன்கள் கொண்டவை என்றும், உலகளாவிய நல்லிணக்கமும், உலகளாவிய வாழ்க்கை வளமுமே கட்டுப்பாடற்ற போட்டியின் விளைவுகள் என்றும் கூறப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தின் போதனைகள் பொய் என்பதைக் கண்கூடான நிகழ்வுகள் மென்மேலும் வலுவாக நிரூபித்து வந்தன. இவற்றையெல்லாம் இனிமேலும் புறக்கணிக்க இயலாது. மிகவும் அரைகுறையானவை என்றாலும் இவற்றின் தத்துவார்த்த வெளிப்பாடாய் அமைந்த ஃபிரெஞ்சு, ஆங்கில சோஷலிசத்தையும் இனிமேலும் புறக்கணிக்க இயலாது. ஆனால், வரலாறு பற்றிய பழைய கருத்துமுதல்வாதக் கருத்துரு இன்னமும் தூக்கி எறியப்படாமலே இருந்தது. இந்தக் கருத்துருவுக்குப் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் போராட்டங்கள் குறித்து எதுவும் தெரியாது. பொருளாதார நலன்கள் குறித்துமே எதுவும் தெரியாது. இந்தக் கருத்துருவைப் பொறுத்தவரை, உற்பத்தியும், [ஏனைய] அனைத்துப் பொருளாதார உறவுகளும் தற்செயலானவையாகவும், “நாகரிகத்தின் வரலாற்றில்” கீழ்நிலைக் கூறுகளாகவே தோற்றமளிக்கின்றன.

Image result for MODREN SOCIALIM

கடந்தகால வரலாறு அனைத்தையும் ஒரு புதிய ஆய்வுக்கு உட்படுத்துவதை இந்தப் புதிய நிகழ்வுகள் கட்டாயமாக்கின. அதன்பிறகே பின்வரும் உண்மைகள் கண்டறியப்பட்டன: கடந்தகால வரலாறு அனைத்தும், அதன் புராதன கட்டங்களைத் தவிர்த்து, வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது; சமுதாயத்தின் இந்தப் போரிடும் வர்க்கங்கள் எப்போதுமே, உற்பத்தி முறைகள், பரிவர்த்தனை முறைகளின் படைப்புகளே. சுருங்கக் கூறின், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவும் பொருளாதார நிலைமைகளின் படைப்புகளே. சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் எப்போதுமே உண்மையான அடித்தளத்தை அமைக்கிறது. இதிலிருந்து தொடங்கினால் மட்டுமே, குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் நீதி, அரசியல் சார்ந்த  நிறுவனங்கள், அவற்றுடன் மதம், தத்துவம் சார்ந்த கருத்துகள், பிற கருத்துகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய [சமுதாயத்தின்] மேற்கட்டுமானம் முழுமைக்கும் நாம் முடிவான விளக்கம் காண முடியும். ஹெகல் வரலாற்றை இயக்க மறுப்பியலிலிருந்து விடுவித்தார்; அதனை இயக்கவியல் தன்மை கொண்டதாய் ஆக்கினார். ஆனால், வரலாறு பற்றிய ஹெகலின் கருத்துரு சாராம்சத்தில் கருத்துமுதல்வாத வகைப்பட்டது. ஆனால், கருத்துமுதல்வாதம் இப்போது அதன் கடைசிக் புகலிடமான வரலாறு பற்றிய தத்துவத்திலிருந்தும் விரட்டப்பட்டது. இப்போது வரலாறு பற்றிய ஒரு பொருள்முதல்வாத விளக்கம் முன்வைக்கப்பட்டது. இதுநாள்வரை செய்ததுபோல், மனிதனின் உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, மனிதனின் இருப்பைக் கொண்டு அவனுடைய உணர்வை விளக்குவதற்கு ஒரு வழிமுறை கண்டறியப்பட்டது.

அக்காலம் முதற்கொண்டு, இனிமேலும் சோஷலிசம் என்பது ஏதோவோர் அறிவுசான்ற மூளையின் தற்செயலான கண்டுபிடிப்பாய் இருக்கவில்லை. வரலாற்று ரீதியாக வளர்ச்சிபெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். சாத்தியமான அளவுக்குக் குறைகளற்ற முழுநிறைவான ஒரு சமுதாய அமைப்பை உற்பத்தி செய்வது சோஷலிசத்தின் பணியாக இனியென்றும் இருக்கப் போவதில்லை. இந்த வர்க்கங்களும் அவற்றுக்கு இடையேயான பகைமையும் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழக் காரணமாக இருக்கும் நிகழ்வுகளின் வரலாற்று-பொருளாதாரத் தொடர்ச்சியை நுணுகி ஆய்வதும், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளில் இந்த மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான சாதனங்களைக் கண்டறிவதும்தான் சோஷலிசத்தின் பணியாகும். ஆனால், இயற்கை பற்றிய ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகளின் கருத்துரு எந்த அளவுக்கு இயக்கவியலுக்கும் நவீன இயற்கை விஞ்ஞானத்துக்கும் ஒத்திசைவற்றதாய் இருந்ததோ, அதே அளவுக்கு முந்தைய கால சோஷலிசம் இந்தப் பொருள்முதல்வாதக் கருத்துருவுக்கு ஒத்திசைவற்றதாய் இருந்தது. முந்தைய கால சோஷலிசம் நடப்பிலுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தது உண்மைதான். ஆனால், அவற்றைக் [காரணம் கூறி] விளக்க, முந்தைய கால சோஷலிசத்தால் முடியவில்லை. எனவே, அவற்றைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற இயலவில்லை. அவற்றைத் தீயவை என நிராகரிக்க மட்டுமே அதனால் முடிந்தது. முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை, எந்த அளவுக்குக் கடுமையாக இந்த முந்தைய சோஷலிசம் வெளிப்படையாய்க் கண்டித்ததோ, அந்த அளவுக்குத் தெளிவாக, இந்தச் சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, அது எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் எடுத்துக்காட்ட முடியவில்லை.

ஆனால், அவ்வாறு தெளிவாக எடுத்துக்காட்ட – (1) முதலாளித்துவ உற்பத்தி முறையை அதன் வரலாற்றுத் தொடர்பில் விளக்கி, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் அது தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துரைப்பதும், கூடவே, அதன் காரணமாக நிகழும் தவிர்க்க முடியாத அதன் வீழ்ச்சியை எடுத்துரைப்பதும், (2) இதுநாள்வரை ரகசியமாக இருந்துவந்த, முதலாளித்துவத்தின் சாராம்சத் தன்மையைத் தோலுரித்துக் காட்டுவதும், அவசியமாக இருந்தது. உபரி மதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது. ஊதியம் தரப்படாத உழைப்பை உறிஞ்சிக் கொள்வதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும், அதன்கீழ் தொழிலாளி சுரண்டப்படுவதற்கும் அடிப்படையாக அமைகிறதென்று எடுத்துக்காட்டப்பட்டது. முதலாளி தம் தொழிலாளியின் உழைப்புச் சக்தியைச் சந்தையில் கிடைக்கும் சரக்காக, அதற்கான முழு மதிப்பையும் [விலையாகக்] கொடுத்து வாங்கினாலும்கூட, அந்த உழைப்புச் சக்திக்காகத் தாம் கொடுத்ததற்கும் அதிகமான மதிப்பினை அதிலிருந்து பிழிந்தெடுத்துக் கொள்கிறார் என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது. மேலும், முடிவான பகுப்பாய்வில், உடைமை வர்க்கங்களின் கைகளில் தொடர்ந்து அதிகரித்துவரும் மூலதனத் திரட்சிக்கு ஆதாரமாகக் குவிக்கப்படும் அந்த மதிப்புத் தொகைகள், இந்த உபரி மதிப்பிலிருந்துதான் பெறப்படுகின்றன என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது. முதலாளித்துவ உற்பத்தியின் ஆதி மூலம், மூலதனத்தின உற்பத்தி ஆகிய இரண்டும் விளக்கியுரைக்கப்பட்டன.

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய ரகசியத்தின் வெளிப்பாடு ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக, சோஷலிசம் ஒரு விஞ்ஞானம் ஆகியது. அதன் விவரங்கள், உறவுகள் அனைத்தையும் வகுத்தமைப்பதுதான் அடுத்த பணியாக இருந்தது.

அத்தியாயம்-3

[விஞ்ஞான சோஷலிசம்]

மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே சமூகக் கட்டமைப்பு முழுமைக்குமான அடித்தளம் ஆகும்; வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், செல்வம் வினியோகிக்கப்படும் முறையும், சமுதாயம் வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும், [அந்தச் சமுதாயத்தில்] என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எவ்வாறு பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பதைச் சார்ந்தே உள்ளன. வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, இந்த வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, அனைத்துச் சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, வினியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல. அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட  சகாப்தத்தின் பொருளாதார  அமைப்புமுறையில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, தத்துவத்தில் அல்ல. தற்போது நிலவும் சமூக நிறுவனங்கள் நியாயமற்றவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருக்கின்றன, நியாயம் அநியாயமாகவும், தர்மம் அதர்மமாகவும் மாறி விட்டன* என்கிற மன உணர்வு [நாளுக்குநாள்] வளர்ந்து வருவதானது, உற்பத்தி, வினியோக முறைகளில் ஓசைப்படாமல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, எனவே, முந்தைய பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட சமூக அமைப்புமுறை, இனிமேலும் தொடர்ந்து அவ்வாறு நிலவ முடியாது என்பதற்கான நிரூபணம் ஆகும். [அனைவரும் அறிய] வெளிக்கொணரப்பட்டுள்ள  இந்தப் பொருத்தமின்மைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும், மாறிவிட்ட இந்த உற்பத்தி முறைகளுக்குள்ளேதான், ஏறத்தாழ வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்தாக வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. இந்த வழிமுறைகள், அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து தருவிப்பதன் மூலம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டியவை அல்ல. தற்போது நிலவும் உற்பத்தி அமைப்புமுறையின் மறுக்க முடியாத உண்மைகளிலிருந்தே கண்டறியப்பட வேண்டியவை.

Image result for MODREN SOCIALIM

அப்படியெனில், இது தொடர்பாக நவீன சோஷலிசத்தின் நிலைபாடு என்ன?

தற்போதைய சமுதாய நிலைமை, இன்றைய ஆளும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கம் தோற்றுவித்ததாகும். தற்போது இது ஏறத்தாழப் பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முதலாளித்துவ வர்க்கத்துக்கே உரிய தனிவகைப்பட்ட உற்பத்தி முறை, மார்க்ஸ் குறிப்பிட்டதைத் தொடர்ந்து முதலாளித்துவ உற்பத்தி முறை என்று அறியப்படுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையானது, நிலப்பிரபுத்துவ அமைப்புமுறைக்கு ஒத்திசைவற்றதாய் இருந்தது; தனிநபர்களுக்கும், அனைத்து சமூக மக்களணிகளுக்கும், வட்டார நகராண்மைக் கழகங்களுக்கும் வழங்கியிருந்த சலுகைகளுக்கு ஒத்திசைவற்றதாய் இருந்தது; [மேலும்] நிலப்பிரபுத்துவ அமைப்பினுடைய சமூக நிறுவனத்தின் கட்டுக்கோப்பை உருவமைக்கிற, கீழ்ப்படிதல் சார்ந்த பரம்பரைப் பிணைப்புகளுக்கும் ஒத்திசைவற்றதாய் இருந்தது. முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறிந்து, அதன் இடிபாடுகள் மீது முதலாளித்துவச் சமுதாய அமைப்பை நிறுவியது. கட்டற்ற [வணிகப்] போட்டி, தனிமனித சுதந்திரம், சட்டத்தின் முன் சரக்குடைமையாளர்கள் அனைவருக்குமான சமத்துவம், ஏனைய மீதமுள்ள அனைத்து முதலாளித்துவ அருள்பாலிப்புகள் ஆகியவற்றின் சாம்ராஜ்யமாக அது விளங்கியது. அதனைத் தொடர்ந்து, முதலாளித்துவ முறையிலான உற்பத்தி [தங்கு தடையின்றி] சுதந்திரமாக வளர முடிந்தது. நீராவியும், எந்திர சாதனங்களும், எந்திரங்களைக் கொண்டே எந்திரங்களைத் தயாரித்தலும், பழைமையான பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றியமைத்தன. அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தின் வழிகாட்டுதலில் பரிணமித்த உற்பத்திச் சக்திகள், இதற்குமுன் கண்டு கேட்டிராத வேகத்திலும், அளவிலும் வளர்ச்சி பெற்றன. ஆனால், பழைமையான பட்டறைத் தொழிலும், அதன் செல்வாக்கின்கீழ் மிகுந்த வளர்ச்சி பெற்றுவந்த கைவினைத் தொழிலும், அவற்றின் காலத்தில், கைவினைக் குழுமங்களின் நிலப்பிரபுத்துவத் தடைமதில்கள் மீது எவ்வாறு முட்டி மோதினவோ, அதேபோல, இப்போது நவீனத் தொழில்துறையானது, அதன் முழுமையான வளர்ச்சி நிலையில், முதலாளித்துவ உற்பத்திமுறை தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வரம்புகள் மீது முட்டி மோதுகிறது. புதிய உற்பத்திச் சக்திகளோ அவற்றைப் பயன்படுத்திவரும் முதலாளித்துவ முறையை விஞ்சி ஏற்கெனவே வளர்ந்துவிட்டன. உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி முறைக்கும் இடையேயான இந்த மோதல், ஆதிப் பாவத்துக்கும் தெய்வ நீதிக்கும் இடையேயான மோதலைப் போன்று, மனிதனின் சிந்தனையில் உதித்தெழுந்ததல்ல. உண்மையில் இம்மோதல், நமக்குப் புறத்தே, இம்மோதலை உருவாக்கிய மனிதர்களின் எண்ணத்தையும் செயல்களையும்கூடச் சாராமல் தன்னியல்பாக நிலவுகிறது. நவீன சோஷலிசம் என்பது, உண்மையில் இந்த மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. முதற்கண், இந்த மோதலால் நேரடியாகப் பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே அன்றி வேறல்ல.

சரி, இந்த மோதல் எதில் அடங்கியிருக்கிறது?

முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பாக, அதாவது மத்திய காலத்தில், சிறுதொழில் அமைப்புமுறையே பொதுவாக நிலவி வந்தது. உழைப்பாளர்களின் உற்பத்திச் சாதனங்கள் அவர்களுடைய தனிப்பட்ட சொத்துடைமையாக இருந்தன. அதன் அடிப்படையிலேயே அவர்களின் உற்பத்தி முறை அமைந்திருந்தது. நாட்டுப் புறங்களில் சிறு விவசாயிகள், சுதந்திரக் குடியானவர்கள் அல்லது பண்ணையடிமைகளின் விவசாயம் [நடைபெற்று வந்தது]. நகரங்களில் கைவினைக் குழுமங்களாக ஒழுங்கமைந்திருந்த கைவினைத் தொழில்கள் [நடைபெற்று வந்தன]. நிலம், விவசாயக் கருவிகள், பட்டறை, அதற்கான வேலைக் கருவிகள் ஆகிய உழைப்புச் சாதனங்கள், ஒற்றைத் தனிநபரின் உழைப்புச் சாதனங்களாக இருந்தன. அவை ஒரு தொழிலாளியின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தன. எனவே, தவிர்க்க முடியாதவாறு அவை சிறியனவாக, குறைந்த திறத்தனவாக, வரம்புக்குட்பட்ட பயன்பாடு கொண்டவையாக இருந்தன. இந்தவொரு காரணத்தாலேயே அவை பெரும்பாலும் உற்பத்தியாளருக்கே சொந்தமாக இருந்தன. சிதறிக் கிடந்த, குறைவான இந்த உற்பத்திச் சாதனங்களை ஒருசேரத் திரட்டுவது, அவற்றை விரிவுபடுத்துவது, இன்றைய காலகட்டத்தின் உற்பத்திக்கான சக்திமிக்க உந்துகோல்களாக அவற்றை மாற்றுவது – துல்லியமாக இதுதான், முதலாளித்துவ உற்பத்திக்கும், அதனைத் தூக்கிப் பிடிக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் உரிய வரலாற்றுப் பணியாக இருந்தது.

Image result for ancient labour

15-ஆம் நூற்றாண்டு முதலாக எவ்வாறு இப்பணி எளிய ஒத்துழைப்பு, பட்டறைத் தொழில், நவீனத் தொழில்துறை ஆகிய மூன்று கட்டங்களின் வழியாக, வரலாற்று ரீதியாக செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை மூலதனம் நூலின் நான்காம் பிரிவில் மார்க்ஸ் விவரமாக விளக்கியுள்ளார். ஆனால், நூலின் அதே பிரிவில் காட்டப்பட்டிருப்பது போல, முதலாளித்துவ வர்க்கம் இந்தத் திறன்குறைந்த உற்பத்திச் சாதனங்களை ஆற்றல்மிக்க உற்பத்திச் சக்திகளாக மாற்றியமைக்கும் அதேவேளையில், தனிநபரின் உற்பத்திச் சாதனங்களாக இருந்த அவற்றை, மனிதர்களுடைய ஒரு குழுவால் மட்டுமே பயன்படுத்த முடிகின்ற சமூக உற்பத்திச் சாதனங்களாக மாற்றியமைக்காமல், அப்பணியை நிறைவேற்ற இயலவில்லை. கைராட்டை, கைத்தறி, கொல்லரின் சம்மட்டி ஆகியவை [முறையே] நூற்பு-எந்திரம், விசைத்தறி, நீராவிச்-சம்மட்டி ஆகியவற்றால் மாற்றப்பட்டன. தனிநபரின் பட்டறையோ, ஆலையாக மாற்றப்பட்டது. அது, [உற்பத்தியில்] நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஒத்துழைப்புக்கு வழிவகுத்தது. அதே முறையில், உற்பத்தியேகூடத் தனிநபர்களுடைய செயல்பாடுகளின் தொடர்வரிசையிலிருந்து சமூகச் செயல்பாடுகளின் தொடர்வரிசையாக மாறியது. [உற்பத்திப் பொருள்களைப் பொறுத்தவரை] தனிநபர் உற்பத்திப் பொருள்களிருந்து சமூக உற்பத்திப் பொருள்களாக மாற்றம் பெற்றன. இப்போது ஆலையிலிருந்து வெளிவந்த நூல், துணி, உலோகப் பொருள்கள் ஆகியவை, பல தொழிலாளர்களின் கூட்டுத் தயாரிப்பாக இருந்தன. அப்பொருள்கள் தயாரித்து முடிக்கப்படும் முன்பு, அத்தனை தொழிலாளர்களின் கைகளையும் அடுத்தடுத்து வரிசையாகக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. எந்தவொரு தனிநபரும், “இது நான் செய்தது, இது என்னுடைய தயாரிப்பு” என்று அப்பொருள்கள் குறித்துச் சொல்ல முடியாது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில்,  முன்கூட்டி வகுக்கப்பட்ட திட்டப்படி அன்றிப் படிப்படியாகப் பற்றிப் படரும் அந்தத் தன்னியல்பான உழைப்புப் பிரிவினை, உற்பத்தியின் அடிப்படை வடிவமாக எங்கே இருக்கிறதோ, அங்கே உற்பத்திப் பொருள்கள் சரக்குகளின் (commodities) வடிவத்தைப் பெறுகின்றன. இச்சரக்குகளின் பரஸ்பரப் பரிவர்த்தனை, வாங்கல், விற்றல் ஆகியவையே தனிமனித உற்பத்தியாளர்கள் தங்களின் பன்முகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகுக்கின்றன. மத்திய காலத்தில் இவ்வாறுதான் நிகழ்ந்தது. எடுத்துக்காட்டாக, விவசாயி, விவசாய விளைபொருள்களைக் கைவினைஞரிடம் விற்று, அவரிடமிருந்து கைவினைப் பொருள்களை வாங்கிக் கொண்டார். தனிமனித உற்பத்தியாளர்களின், சரக்கு உற்பத்தியாளர்களின் இந்தச் சமுதாயத்தினுள், புதிய உற்பத்தி முறை தன்னை வலிந்து புகுத்திக் கொண்டது. வரையறுத்த திட்டம் எதுவுமின்றித் தன்னியல்பாக வளர்ந்து, ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் ஆளுகை புரிந்த பழைய உழைப்புப் பிரிவினையின் ஊடாக, ஆலையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது போன்ற, ஒரு வரையறுத்த திட்டத்தின்படி அமைந்த உழைப்புப் பிரிவினை இப்போது உதித்தெழுந்தது. தனிநபர் உற்பத்தியின் பக்கம் பக்கமாகவே சமூக உற்பத்தியும் தோன்றியது. இருவகை உற்பத்திப் பொருள்களும் ஒரே சந்தையில் விற்கப்பட்டன. எனவே, குறைந்தபட்சம் ஏறத்தாழ சமமான விலைகளில் அவை விற்கப்பட்டன. ஆனால், ஒரு வரையறுத்த திட்டத்தின்படி அமைந்த [உழைப்புப் பிரிவினையின்] ஒழுங்கமைப்பு, தன்னியல்பான உழைப்புப் பிரிவினையைவிட வலிமை வாய்ந்ததாக இருந்தது.

தனிநபர்களின் குழுவாக அமைந்த, ஒன்றுபட்ட சமூக சக்திகளைக் கொண்டு செயல்படும் ஆலைகள், தனிப்பட்ட சிறு உற்பத்தியாளர்களைக் காட்டிலும் மிகமிக மலிவாக அவற்றின் சரக்குகளை உற்பத்தி செய்தன. தனிநபர் உற்பத்தி, அடுத்தடுத்து ஒவ்வொரு துறையிலும் [சமூக உற்பத்திக்குப்] பலியானது. சமூகமயப்பட்ட உற்பத்தி, பழைய உற்பத்தி முறைகள் அனைத்தையும் புரட்சிகரமாக்கியது. ஆனால், அதேவேளையில் அதன் புரட்சிகரத் தன்மை [அப்போது] உணரப்படவில்லை. அதற்கு மாறாக, சரக்குகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாகவே அது புகுத்தப்பட்டது. சமூகமயப்பட்ட உற்பத்தி முறை உதித்தெழுந்தபோது, சரக்குகளின் உற்பத்திக்கும் பரிவர்த்தனைக்கும் தேவைப்படும் குறிப்பிட்ட சில துணைக்கருவிகளான, வணிகர்களுடைய மூலதனம், கைவினைத் தொழில், கூலியுழைப்பு ஆகியவை தயார் நிலையில் இருக்கக் கண்டது. அவற்றை அது தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டது. சமூகமயப்பட்ட உற்பத்தி முறை இவ்வாறு சரக்குகளின் உற்பத்திக்கான ஒரு புதிய வடிவமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அதன்கீழ், இயல்பாகவே, [பலன்களைக்] கைவசப்படுத்தலின் பழைய வடிவங்கள் அப்படியே மாற்றமின்றி முழு வீச்சுடன் செயல்பட்டு வந்தன. அதோடு அதன் உற்பத்திப் பொருள்களுக்கும் அவை பயன்படுத்தப்பட்டன.

சரக்குகளுடைய உற்பத்தியின் பரிணாம வளர்ச்சிப் போக்கில், மத்திய காலப் பகுதியில், உழைப்பின் உற்பத்திப் பொருளுடைய உடைமையாளர் பற்றிய பிரச்சினை எழுவதற்கு வாய்ப்பில்லை. தனிமனித உற்பத்தியாளர் பெரும்பாலும், தனக்கே சொந்தமான  மூலப் பொருளைக் கொண்டு, தன் சொந்தக் கருவிகளைப் பயன்படுத்தி, தன் சொந்தக் கையுழைப்பாலோ, தன் குடும்பத்தாரின் கையுழைப்பாலோ உற்பத்தி செய்தார். பொதுவாக, அது அவருடைய சொந்தக் கைவினைப் பொருளாகும். இந்தப் புதிய உற்பத்திப் பொருளைக் கைவசப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை அவருக்கில்லை. இயல்பாகவே அப்பொருள் முற்றிலும் அவருக்கே உரித்தாகிவிட்டது. எனவே, அந்தப் பொருளில் அவருக்கிருந்த உடைமை உரிமை, அவருடைய சொந்த உழைப்பின் அடிப்படையில் அமைந்தது. வெளியார் உதவி பயன்பட்டிருந்த உற்பத்தியிலுங்கூட, பெரும்பாலும் அதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை. கூலி அல்லாத பிறவற்றால் அவ்வுதவி ஈடுகட்டப்படுவது மிகப் பொதுவான வழக்கமாக இருந்தது. கைவினைக் குழுமங்களில் [பணியாற்றிய] தொழில் பழகுநர்களும், நாட்கூலிப் பணியாட்களும், பெரும்பாலும் [பிற்காலத்தில்] தாங்களும் தலைமைக் கைவினைஞர் ஆகலாம் என்ற நோக்கில், வேலையைக் கற்றுக் கொள்ளும் பொருட்டே வேலை செய்தனர். உணவுக்காகவும், கூலிக்காகவும் வேலை செய்தது குறைவு.

பிறகு, பெரிய தொழில்கூடங்களிலும் பட்டறைகளிலும், உற்பத்திச் சாதனங்களின் ஒன்றுகுவிப்பும், உற்பத்தியாளர்களின் ஒன்றுகுவிப்பும் நிகழ்ந்தன. [முறையே] அவை உள்ளபடியான சமூகமயப்பட்ட உற்பத்திச் சாதனங்களாகவும், அவர்கள் சமூகமயப்பட்ட உற்பத்தியாளர்களாகவும் ஆகிப்போன தன்மை மாற்றமும் நிகழ்ந்தன. ஆனால், சமூகமயப்பட்ட இந்த உற்பத்தியாளர்களும், உற்பத்திச் சாதனங்களும், அவற்றின் உற்பத்திப் பொருள்களும் இந்த மாற்றத்துக்குப் பின்பும், அவை முன்பு பாவிக்கப்பட்டது போன்றே, அதாவது, தனிநபர்களின் உற்பத்திச் சாதனங்களாகவும் உற்பத்திப் பொருள்களாகவுமே பாவிக்கப்பட்டன. இதுநாள்வரை, உழைப்புக் கருவிகளின் உடைமையாளர், உற்பத்திப் பொருள்களையும் தாமே கைவசப்படுத்திக் கொண்டார். ஏனெனில், வழக்கப்படி, அது அவருக்கே சொந்தமான பொருளாய் இருந்தது. பிறரின் பணியுதவி விதிவிலக்காகவே இருந்தது. இன்றைய நிலையில், உற்பத்திப் பொருளானது இனிமேலும் உழைப்புக் கருவியினுடைய உடைமையாளரின் பொருளாக இல்லை. முற்றிலும் மற்றவர்களுடைய உழைப்பின் உற்பத்திப் பொருளாகவே இருக்கிறது. இருந்த போதிலும், உழைப்புக் கருவிகளின் உடைமையாளர் எப்போதுமே அப்பொருளை தனக்கே உரித்தாக்கிக் கொள்கிறார். இவ்வாறு, சமூக முறையில் இப்போது உற்பத்தி செய்யப்படும் பொருள்களோ, உற்பத்திச் சாதனங்களை உண்மையாகவே இயக்கி, சரக்குகளை உண்மையாகவே உற்பத்தி செய்தவர்களால் அல்லாமல் முதலாளிகளால் கைவசப்படுத்தப்பட்டன. உற்பத்திச் சாதனங்களும், மேலும், உற்பத்தியேகூட சாராம்சத்தில் சமூகமயம் ஆகிவிட்டன. தனிநபர்களை [மையப்படுத்திய] தனியார் உற்பத்தி முறையில் ஒவ்வொருவரும் தன் சொந்த உற்பத்திப் பொருளைத் தானே சொந்தமாக்கிக் கொண்டு, அப்பொருளைச் சந்தைக்குக் கொண்டு செல்வர். அத்தகைய உற்பத்தி முறையில் நிலவுகின்ற கைவசப்படுத்தலின் வடிவத்துக்குச் சமூகமயப்பட்ட உற்பத்திச் சாதனங்களும் உற்பத்தியும் உட்படுத்தப்பட்டன. [இன்றைய] உற்பத்தி முறை, கைவசப்படுத்தலின் இந்த வடிவத்துக்கு ஆதாரமாக அமைந்த நிலைமைகளை ஒழித்துவிட்ட போதிலும், அந்த வடிவத்துக்கு இந்த உற்பத்தி முறை உட்படுத்தப்படுகிறது.42

Image result for புதிய உற்பத்தி முறை

புதிய உற்பத்தி முறை

புதிய உற்பத்தி முறைக்கு அதன் முதலாளித்துவத் தன்மையை அளித்திடும் இந்த முரண்பாடு, இன்றைய சமூகப் பகைமைகள் அனைத்தின் கருவைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. புதிய உற்பத்தி முறையானது, அனைத்து முக்கிய உற்பத்தித் துறைகளிலும், அனைத்துத் தொழில் உற்பத்தி நாடுகளிலும், எவ்வளவு பெரிய அளவில் ஆதிக்கம் பெற்றதோ, அந்த அளவுக்குத் தனிநபர் உற்பத்தியை சுருங்கச் செய்து, அற்ப சொற்பமாய் ஆக்கியது. அந்த அளவுக்குத் தெளிவாக, சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் முதலாளித்துவக் கைவசப்படுத்தலுக்குமான ஒத்திசைவின்மையைப் புலப்படுத்திக் காட்டியது

நாம் ஏற்கெனவே கூறியதுபோல, தொடக்ககால முதலாளிகள், சந்தையில் பிற உழைப்பு வடிவங்களுக்குப் பக்கத்திலேயே, கூலியுழைப்பும் அவர்களுக்காகத் தயார்நிலையில் இருக்கக் கண்டனர். ஆனால் அது [முதன்மையானதாக இல்லாமல்], விதிவிலக்காகவும், நிரப்புக் கூறாகவும், துணைக் கூறாகவும், நிலையற்றதாகவும் விளங்கிய கூலியுழைப்பாகவே இருந்தது. விவசாயத் தொழிலாளி சில வேளைகளில், நாள்கூலி வேலைக்கு வந்த போதிலும், அவர் சில ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்தார். அதை வைத்துக் கொண்டு அவர் எப்பாடு பட்டாவது மூச்சைப் பிடித்து வாழ முடிந்தது. இன்றுவரை பணித் துணையாளாய் இருப்பவர், நாளை தேர்ந்த கைவினைஞராய் ஆகுமளவுக்குக்  கைவினைக் குழுமங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஆனால், உற்பத்திச் சாதனங்கள் சமூகமயமாகி, முதலாளிகளின் கைகளில் ஒன்றுகுவிக்கப்பட்டதுமே இவை அனைத்தும் மாறிவிட்டன. தனிநபரான உற்பத்தியாளரின் உற்பத்திச் சாதனங்களும், உற்பத்திப் பொருளும் மென்மேலும் மதிப்பிழந்து போயின. அந்த உற்பத்தியாளர், முதலாளியின் கீழ் [ஒரு] கூலித் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவருக்கு வேறுவழி எதுவுமில்லை. முன்னாளில் விதிவிலக்காகவும், துணைக்கூறாகவும் இருந்த கூலியுழைப்பு, இந்நாளில் உற்பத்தி அனைத்தின் விதியாகவும் அடிப்படையாகவும் ஆகியது; முன்னாளில் நிரப்புக் கூறாக இருந்த கூலியுழைப்பு, இந்நாளில் தொழிலாளிக்கு எஞ்சியிருந்த ஒரே கடமையாய் ஆகியது. சில நேரங்களில் மட்டும் கூலித் தொழிலாளியாய் இருந்தவர், வாழ்நாள் முழுமைக்கும் கூலித் தொழிலாளியாய் ஆனார். இதே காலத்தில் நிகழ்ந்த நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையின் சிதைவாலும், நிலவுடைமைப் பிரபுக்களின் பணியாள் குழுக்கள் கலைக்கப்பட்டதாலும், விவசாயிகள் அவர்களின் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாலும், இன்னபிறவற்றாலும், இந்த நிரந்தரக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் ஏராளமாய் அதிகரித்தது. ஒருபுறம் முதலாளிகளின் கைகளில் ஒன்றுகுவிக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்களுக்கும், மறுபுறம் தங்களின் உழைப்புச் சக்தியைத் தவிர வேறு உடைமை ஏதுமற்ற உற்பத்தியாளர்களுக்கும்  இடையேயான பிரிவினை முழுமையாக்கப்பட்டது. சமூகமயமாகிவிட்ட உற்பத்திக்கும் முதலாளித்துவக் கைவசப்படுத்தலுக்கும் இடையேயான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையாத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

தங்களுடைய உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையையே தங்களுக்கு இடையேயான சமூகப் பிணைப்பாகக் கொண்ட, சரக்கு உற்பத்தியாளர்கள், தனிமனித உற்பத்தியாளர்கள், இவர்களின் சமுதாயத்தினுள் முதலாளித்துவ உற்பத்தி முறை வலிந்து புகுத்திக் கொண்டதை நாம் கண்டோம். ஆனால் சரக்குகளின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட ஒவ்வொரு சமுதாயத்துக்கும் உள்ள தனித்தன்மை இதுதான்: உற்பத்தியாளர்கள் தங்களுடைய சமூக ரீதியான பரஸ்பர உறவுகளின் மீதே கட்டுப்பாடு இழந்துவிடுகின்றனர். ஒவ்வொரு மனிதரும், தான் வைத்திருக்க நேர்ந்த உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு தனக்காகவும், தன்னுடைய ஏனைய பிற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வகைசெய்யும் பரிவர்த்தனைக்காகவும் உற்பத்தி செய்கிறார். தன்னுடைய குறிப்பிட்ட பண்டவகை எந்த அளவு சந்தைக்கு வரும், அந்தவகைப் பண்டத்துக்கு எந்த அளவு தேவை இருக்கும் என்றெல்லாம் எவருக்கும் தெரியாது. தன்னுடைய தனிப்பட்ட உற்பத்திப் பொருள் உள்ளபடியான தேவையைச் சரிக்கட்டுமா, தன்னுடைய உற்பத்திச் செலவை ஈடுகட்ட இயலுமா, தன் சரக்கை விற்க முடியுமா என்பதேகூட  எவருக்கும் தெரியாது. சமூகமயமாகிவிட்ட உற்பத்தியில் ஒழுங்கின்மை ஆட்சி புரிகிறது.

ஆனால், சரக்குகளின் உற்பத்தியானது, வேறெந்த உற்பத்தி வடிவத்தையும் போன்றே, அதற்கே உரிய தனித்தன்மை கொண்ட, அதிலிருந்து பிரிக்க முடியாத, உள்ளார்ந்த விதிகளைப் பெற்றுள்ளது. [உற்பத்தியில்] ஒழுங்கின்மை நிலவிய போதிலும், அதையும் மீறி இந்த விதிகள் ஒழுங்கின்மைக்குள்ளும், அதன் வாயிலாகவும் செயல்படுகின்றன. சமூக ரீதியான பரஸ்பர உறவுகளின் நிலைபெற்ற ஒரே வடிவத்தில், அதாவது பரிவர்த்தனையில், இவ்விதிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இங்கே, அவை போட்டியின் கட்டாய விதிகளாகத் தனிமனித உற்பத்தியாளர்களைப் பாதிக்கின்றன. தொடக்கத்தில் இந்த உற்பத்தியாளர்களுக்கே தெரியாத விதிகளாக அவை இருக்கின்றன. அவர்கள் இவ்விதிகளைப் படிப்படியாகவும், அனுபவத்தின் விளைவாகவும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. எனவே இவ்விதிகள் உற்பத்தியாளர்களைச் சாராமல், அவர்களுக்கே விரோதமாக, அவர்களுடைய குறிப்பிட்ட உற்பத்தி வடிவத்தின் இரக்கமற்ற இயற்கை விதிகளாகத் தாமாகவே செயல்படுகின்றன. உற்பத்திப் பொருள் உற்பத்தியாளர்களை ஆட்சி புரிகிறது.

மத்திய காலச் சமுதாயத்தில், குறிப்பாகத் தொடக்க நூற்றாண்டுகளில், உற்பத்தியானது, சாராம்சத்தில், தனிமனிதனின் தேவைகளை நிறைவு செய்தலை நோக்கமாகக் கொண்டிருந்தது. பிரதானமாக உற்பத்தியாளரின் தேவைகளையும் அவருடைய குடும்பத்தின் தேவைகளையும் மட்டுமே அது நிறைவு செய்துவந்தது. நாட்டுப்புறங்களில் இருந்தது போன்று, தனிப்பட்ட முறையில் சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவிய இடங்களில், நிலவுடைமைப் பிரபுக்களின் தேவைகளையும் நிறைவு செய்ய அது உதவியது. எனவே, இவையனைத்திலும் பரிவர்த்தனைக்கு இடமில்லை. இதன்விளைவாக, உற்பத்திப் பொருள்கள் சரக்குகளின் பண்பியல்பைப் பெறவில்லை. விவசாயியின் குடும்பத்தினர் துணிமணி, வீட்டுவசதிப் பொருட்கள், அவற்றுடன் வாழ்வாதாரச் சாதனங்கள் உட்பட ஏறத்தாழத் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தாங்களே உற்பத்தி செய்தனர். தங்கள் சொந்தத் தேவைகளை நிறைவேற்றுதற்கும், நிலவுடைமைப் பிரபுக்களுக்குப் பொருள்வடிவில்  செலுத்த வேண்டியதற்கும் போதுமான அளவைவிட அதிகமாக அவர்கள் உற்பத்தி செய்யத் தொடங்கிய போதுதான், அவர்கள் [பரிவர்த்தனைக்கான] சரக்குகளையும் உற்பத்தி செய்தனர். இந்த உபரிப் பொருள்கள் சமூகமயப்பட்ட பரிவர்த்தனையில் தள்ளப்பட்டன. விற்பனைக்கு வைக்கப்பட்டுப் சரக்குகள் ஆயின.

நகரங்களில் வாழ்ந்த கைவினைஞர்கள் தொடக்கத்திலிருந்தே பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது உண்மைதான். ஆனால் அவர்களுங்கூட, தங்களின் தனிப்பட்ட தேவைகளில் மிகப் பெரும்பகுதியைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டனர். அவர்களுக்குத் தோட்டங்களும், துண்டு நிலங்களும் இருந்தன. அவர்கள் தங்களின் ஆடுமாடுகளைச் சமுதாயக் காடுகளில் மேய விட்டனர். இந்தக் காடுகளிலிருந்து மரமும் விறகும் அவர்களுக்குக் கிடைத்தன. பெண்கள் சணல், கம்பளி, இன்னபிற நூற்பு வேலையில் ஈடுபட்டனர். [இந்தக் காலகட்டத்தில்] பரிவர்த்தனை நோக்கத்துக்கான உற்பத்தி, அதாவது சரக்குகளின் உற்பத்தி, இன்னமும் அதன் மழலைப் பருவத்திலேதான் இருந்தது. எனவே, பரிவர்த்தனை, வரம்புக்கு உட்பட்டதாக இருந்தது; சந்தை மிகவும் குறுகியதாக இருந்தது; உற்பத்தி முறைகள் மாற்றமின்றி நிலைத்ததாக இருந்தன. வெளி உலகிலிருந்து ஒதுங்கியே இருந்தனர்; உள்ளே ஐக்கியம் நிலவியது. நாட்டுப்புறத்தில் மார்க்கும் [பண்டைய ஜெர்மானிய கிராமச் சமுதாயம்], நகரத்தில் கைவினைக் குழுமமும் இருந்தன.

ஆனால், சரக்குகளின் உற்பத்தி விரிவடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமாக முதலாளித்துவ உற்பத்தி முறையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, இதுநாள்வரை உள்ளுறைந்து கிடந்த, சரக்கு-உற்பத்தியின் விதிகள், மிகவும் வெளிப்படையாகவும், அதிக வலிமையோடும் செயல்படத் தொடங்கின. பழைய பிணைப்புகள் தளர்ந்தன. ஒதுங்கிய நிலையின் பழைய வரம்புகள் நொறுங்கின. உற்பத்தியாளர்கள் மென்மேலும் சுயேச்சையான, தனித்தொதுங்கிய சரக்கு உற்பத்தியாளர்களாக மாற்றப்பட்டடனர். மொத்தத்தில் சமுதாயத்தின் உற்பத்தி முழுமையும் திட்டமின்மையாலும், நோக்கமின்மையாலும், ஒழுங்கின்மையாலும் ஆளப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த ஒழுங்கின்மை மென்மேலும் உச்ச நிலைக்கு வளர்ச்சி பெற்றது. ஆனால், சமூகமயப்பட்ட உற்பத்தியின் இந்த ஒழுங்கின்மையைத் தீவிரப்படுத்த முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு உதவிய முதன்மையான சாதனம், ஒழுங்கின்மைக்கு நேர் எதிரான ஒன்றாகும். ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தி நிறுவனத்திலும் உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்ட, சமூக அடிப்படையில் அமைந்த கூடுதலான ஒழுங்கமைப்புதான் இந்த முதன்மையான சாதனம். இதன்மூலம் உற்பத்தி முறையின் பழைய, அமைதியான, மாறாத நிலைமைக்கு முடிவு கட்டப்பட்டது. உற்பத்தியின் இந்த ஒழுங்கமைப்பு எங்கெல்லாம் ஒரு தொழில்பிரிவில் புகுத்தப்பட்டதோ, [அங்கெல்லாம்] அது, தன்னருகில் வேறெந்த உற்பத்தி முறையையும் அனுமதிக்கவில்லை. உழைப்பின் களம் போர்க்களம் ஆகிவிட்டது. மாபெரும் புவியியல் கண்டுபிடிப்புகளும்43, அவற்றைத் தொடர்ந்து நடைபெற்ற குடியேற்றமும் சந்தைகளை விரிவுபடுத்தின; கைவினைத் தொழில், பட்டறைத் தொழிலுக்கு மாறியதை விரைவுபடுத்தின. ஏதோ குறிப்பிட்ட வட்டாரங்களின் தனிமனித உற்பத்தியாளர்களுக்கு இடையில் மட்டும் போர் வெடிக்கவில்லை. வட்டார அளவிலான போராட்டங்கள், தொடர்ந்து, தேச அளவிலான மோதல்களை, அதாவது, 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டுகளின் வணிகப் போர்களைத் தோற்றுவித்தன.44

Image result for உலகச் சந்தையின் தோற்றம்

மார்க்ஸ்,ஏங்கல்ஸ்

முடிவாக, நவீனத் தொழில்துறை, உலகச் சந்தையின் தோற்றம் ஆகியவை இந்தப் போராட்டத்தை உலகளாவியதாய் ஆக்கின. அதேவேளையில், [இதுவரை] கேட்டிராத அளவுக்கு அப்போராட்டத்தை உக்கிரப்படுத்தின. உற்பத்தியில் நிலவும் இயற்கையான அல்லது செயற்கையான நிலைமைகளில் இருக்கும்  அனுகூலங்கள் இப்போது ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியின் இருப்பையும், அழிவையும் தீர்மானிக்கின்றன. அத்தோடு, ஒட்டுமொத்தத் தொழில்துறையின், நாடுகளின், இருப்பையும், அழிவையுமே தீர்மானிக்கின்றன. கீழே விழுபவர் ஈவிரக்கமின்றி மூலையில் தூக்கி வீசப்படுகிறார். நடப்பது என்னவெனில், தனி உயிரினம் ஒன்றின் வாழ்வுக்கான டார்வினியப் போராட்டம், தீவிரப்படுத்தப்பட்ட வன்முறையுடன், இயற்கையிலிருந்து சமுதாயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. விலங்குக்கு இயல்பானதாய் உள்ள வாழ்வுக்கான நிலைமைகள் மனித வளர்ச்சியின் இறுதிக் கட்டமாகத் தோன்றுகின்றன. சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் முதலாளித்துவ முறையிலான கைவசப்படுத்தலுக்கும் இடையேயான  முரண்பாடு இப்போது, தனியொரு தொழில்கூடத்தில் நிலவும் உற்பத்தியின் ஒழுங்கமைப்புக்கும், பொதுவாகச் சமுதாயத்தில் நிலவும் உற்பத்தியின் ஒழுங்கின்மைக்கும் இடையேயான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறை தான் தோன்றிய நாளிலிருந்தே அதில் உள்ளார்ந்து நிலவும் பகைமையின் இவ்விரு வடிவங்களில்தான் இயங்கி வருகிறது. ஃபூரியே ஏற்கெனவே கண்டுபிடித்துச் சொன்ன அந்த “நச்சு வட்டத்திலிருந்து” அதனால் என்றுமே வெளிவர முடிந்ததில்லை. இந்தச் சுழல் படிப்படியாகக் குறுகிக் கொண்டிருக்கிறது என்பதையும், மென்மேலும் திருகுசுருளாகி வருகின்ற இந்த இயக்கமானது, கிரகங்களின் இயக்கத்தைப்போல மையத்துடன் மோதி, [ஒரு கட்டத்தில்] முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பதையும் உண்மையில் அந்தக் காலகட்டத்தில் ஃபூரியேயால் கண்டறிய முடியவில்லை. சமுதாயத்தின் உற்பத்தி முழுமையிலும் நிலவும் ஒழுங்கின்மையின் நிர்ப்பந்த சக்திதான் மிகப் பெரும்பான்மையான மனிதர்களை மென்மேலும் முழுமையாகப் பாட்டாளிகளாய் மாற்றி வருகிறது. உற்பத்தியில் நிலவும் ஒழுங்கின்மைக்கு இறுதியாக முடிவுகட்டப் போகிறவர்களும் அதே பாட்டாளி வர்க்கத்தின் சாதாரண மக்கள்தாம். சமுதாயத்தின் உற்பத்தி முழுமையிலும் நிலவும் ஒழுங்கின்மையின் நிர்ப்பந்த சக்திதான், நவீனத் தொழில்துறையில் எந்திர சாதனங்கள் வரம்பின்றித் தொடர்ந்து செம்மைப்படுத்தலைக் கட்டாய விதியாக்குகிறது; அதன்மூலம், ஒவ்வொரு தனிப்பட்ட தொழில்துறை முதலாளியும் தன்னுடைய எந்திர சாதனங்களை மென்மேலும் செம்மையாக்க வேண்டும், இல்லையேல் அழிய நேரிடும் என்கிற நிலையை உருவாக்குகிறது.

ஆனால், எந்திர சாதனங்களைச் செம்மைப்படுத்தல், மனித உழைப்பைத் தேவையற்றதாக்கி வருகிறது. எந்திர சாதனங்களைப் புகுத்துவதும் மென்மேலும் அவற்றை அதிகரிப்பதும், லட்சக்கணக்கான உடல் உழைப்பாளிகள் ஒருசில எந்திரத் தொழிலாளர்களால் வேலையிலிருந்து அகற்றப்படக் காரணமாகிறது. அதேவேளையில், எந்திர சாதனங்களை மேம்படுத்துவதோ, அதே எந்திரத் தொழிலாளர்களே மென்மேலும் அதிக அளவில் வேலையிலிருந்து அகற்றப்படக் காரணமாகிறது. முடிவாக இதன் விளைவு என்னவெனில், மூலதனத்தின் சராசரித் தேவைகளுக்கும் மிகுதியான எண்ணிக்கையில் வேலைக்குத் தயாராகவுள்ள கூலித் தொழிலாளர்களை உற்பத்தி செய்வதுதான். அதாவது, 1845-இல் நான் பெயரிட்டு அழைத்ததுபோன்ற, முழுமையான ஒரு தொழில்துறை ரிசர்வ் பட்டாளம் உருவாக்கப்படுவதுதான்.45 இந்த ரிசர்வ் பட்டாளம், தொழில்துறை செழித்தோங்கி இயங்கும் காலங்களில் ஈர்த்துக் கொள்ளப்பட்டு, தவிர்க்க முடியாத நசிவு ஏற்படும்போது நடுத்தெருவில் வீசப்படுகிறது. இந்த ரிசர்வ் பட்டாளம், தொழிலாளி வர்க்கம் மூலதனத்துடன் தன் வாழ்வுக்காக நடத்தும் அதன் போராட்டத்தின்போது, அதன் கால்களில் மாட்டப்பட்ட நிலையானதொரு தண்டச் சுமையாக விளங்குகிறது. மூலதனத்தின் நலன்களுக்கு உகந்தவாறு, கீழ்மட்டத்தில் கூலியைக் குறைத்து வைத்திருக்கும் ஒழுங்குபடுத்தியாகவும் செயல்படுகிறது.

இவ்வாறாக, மார்க்ஸ் கூறியவாறு, மூலதனம் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக நடத்தும் போரில், எந்திர சாதனங்கள் அதன் சக்திவாய்ந்த ஆயுதம் ஆகின்றன; உழைப்புக் கருவிகள் தொடர்ந்து, தொழிலாளியின் கைகளிலிருந்து பிழைப்புச் சாதனங்களைப் பறித்துக் கொள்கின்றன; தொழிலாளி உற்பத்தி செய்யும் அதே பொருளே தொழிலாளியை அடிமைப்படுத்தும் கருவியாகவும் ஆகிறது.

இவ்வாறாக, உழைப்புக் கருவிகளைச் சிக்கனப்படுத்துவது, தொடக்கத்திலிருந்தே உழைப்புச் சக்தியின் கண்மூடித்தனமான விரயமாகவும், உழைப்பு செயல்படும் இயல்பு நிலைமைகளையே அடிப்படையாகக் கொண்ட கொள்ளையாகவும் ஆகிவிடுகிறது. எந்திர சாதனமாகிய, “உழைப்பு நேரத்தைக் குறைப்பதற்கான மிகவும் சக்திவாய்ந்த கருவி, தொழிலாளியின் நேரத்திலும் தொழிலாளியினுடைய குடும்பத்தின் நேரத்திலும் ஒவ்வொரு நொடியையும், முதலாளி தன்னுடைய மூலதனத்தின் மதிப்பைப் பெருக்கும் நோக்கத்துக்காகத் தன் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள அவருக்குத் தாரைவார்ப்பதற்கு உகந்த  மிகவும் வெற்றிகரமான சாதனமாகி விடுகிறது.” [மூலதனம், ஆங்கிலப் பதிப்பு, பக்கம் 406].

இவ்வாறாக, ஒருசிலரின் அளவுக்கதிக வேலை, மற்றவர்களின் சோம்பேறித்தனத்துக்கு முன்னோடி நிபந்தனையாகி விடுகிறது. உலகமெங்கும் புதிய நுகர்வோரைத் தேடி அலையும் நவீனத் தொழில்துறை, உள்நாட்டில் சாதாரண மக்களின் நுகர்வை அரைப்பட்டினி நிலைமைக்கு வலியத் தாழ்த்தி, இவ்வாறு செய்வதன்மூலம், தன் சொந்த உள்நாட்டுச் சந்தையை அழித்துவிடுகிறது.

 

Image result for மூலதனம்

மூலதனம்

“ஒப்பீட்டளவில் உபரியாக இருக்கும் மக்கள் திரளை, அதாவது தொழில்துறை ரிசர்வ் பட்டாளத்தை, மூலதனத் திரட்சியின் அளவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு எப்போதும் சமனப்படுத்தும் இந்த விதி, வல்கனின் (Vulcan) ஆப்புகள் புரோமித்தியசைப் (Prometheus) பாறையோடு பிணைத்து இறுக்கியதைவிடவும் உறுதியாக, தொழிலாளியை மூலதனத்தோடு பிணைத்து இறுக்குகிறது. மூலதனத் திரட்சிக்கு இணையாகத் துயரமும் திரண்டு பெருகுவதை இந்த விதி உறுதி செய்கிறது. எனவே, ஒருமுனையில் செல்வம் திரளும் அதேவேளை, எதிர்முனையில், அதாவது, மூலதனத்தின் வடிவில் தன் சொந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வர்க்கத்தின் முனையில், துயரமும், உழைப்பின் வேதனையும், அடிமைத்தனமும், அறியாமையும், கொடுமையும், மனச் சீரழிவும் திரண்டு பெருகுவதைக் குறிக்கிறது.” [மூலதனம், ஆங்கிலப் பதிப்பு, பக்கம் 661].

மேலும், முதலாளித்துவ உற்பத்தி முறையிலிருந்து உற்பத்திப் பொருள்களின் பிறவகையான பிரிவினை எதையும் எதிர்பார்ப்பது, ஒரு மின்கலத்தின் மின்வாய்கள், அமிலம் கலந்த நீரைச் சிதைக்காது எனவும், நேர்மின்வாயில் ஆக்சிஜனையும் எதிர்மின்வாயில் ஹைடிரஜனையும் வெளியிடாது எனவும் எதிர்பார்ப்பதைப் போன்றதே ஆகும்.

எப்போதும் அதிகரித்துச் செல்லும் நவீன எந்திர சாதனங்களின் செம்மைப்பாடு, சமுதாய உற்பத்தியின் ஒழுங்கின்மையால், தனிப்பட்ட தொழில்துறை முதலாளியை எப்போதும் தன் எந்திர சாதனங்களை மேம்படுத்தவும், எப்போதும் அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும்  நிர்ப்பந்திக்கின்ற ஒரு கட்டாய விதியாக மாறிப் போகிறது என்பதை நாம் கண்டோம். உற்பத்தியின் களத்தை விரிவாக்குவதற்கான வெறும் சாத்தியப்பாடுகூட, இந்தத் தனிப்பட்ட முதலாளிக்கு இதேபோன்ற ஒரு கட்டாய விதியாக மாற்றப்பட்டு விடுகிறது. நவீனத் தொழில்துறையின் மாபெரும் விரிவாக்கச் சக்தியானது, வாயுக்களின் விரிவாக்கச் சக்தியுடன் ஒப்பிடுகையில், வெறும் குழந்தை விளையாட்டைப் போன்று எளிதில் கைவரக் கூடியதாகும். அவ்விரிவாக்கச் சக்தி, தடையனைத்தையும் தகர்த்தெறிந்து, தன்மையிலும் அளவிலும் விரிவாக்கம் காணும்  ஓர் அவசியமாக இப்போது நமக்குத் தோன்றுகிறது. நுகர்வு, விற்பனை, நவீனத் தொழில்துறையின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை, இவற்றால் அத்தகைய தடை  உருவாக்கப்படுகிறது. ஆனால், பரந்த, தீவிர விரிவாக்கம் காண சந்தைகளுக்கு இருக்கும் திறன், மிகவும் குறைந்த ஆற்றலுடன் செயல்படுகின்ற, முற்றிலும் வேறுபட்ட விதிகளால் பிரதானமாய் ஆளப்படுகிறது. சந்தைகளின் விரிவாக்கம் உற்பத்தியின் விரிவாக்க வேகத்துடன் சேர்ந்து நடைபோட முடியாது. மோதல் தவிர்க்க முடியாததாய் ஆகிவிடுகிறது. இந்த மோதல், முதலாளித்துவ உற்பத்தி முறையைச் சுக்கு நூறாக உடைத்தெறியாத வரையில், அதனால் மெய்யான தீர்வை வழங்க முடியாது. எனவே, மோதல்கள் குறிப்பிட்ட கால அளவில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி மற்றுமொரு “நச்சு வட்டத்தை” உண்டாக்கி விட்டது.

உண்மையைக் கூறுவதெனில், முதலாவது பொது நெருக்கடி வெடித்த, 1825-ஆம் ஆண்டுதொட்டு, ஒவ்வொரு பத்து ஆண்டிலும் ஒருமுறை, அனைத்து நாகரிக தேசங்களிலும், அவற்றைச் சார்ந்து வாழுகின்ற ஓரளவுக்கு நாகரிகமற்ற தேசங்களிலும், ஒட்டுமொத்தத் தொழில் வணிக உலகும், உற்பத்தியும், பரிவர்த்தனையும் நிலைகுலைந்து விடுகின்றன. வணிகம் நிலைகுத்தி நின்று விடுகிறது; சந்தைகள் [தேவைக்கதிகமான சரக்குகளால்] திணறுகின்றன. எந்த அளவு விலை போகவில்லையோ, அந்த அளவுக்கு எண்ணிறந்த உற்பத்திப் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன; ரொக்கப் பணம் மறைந்து போகிறது; கடன் செலாவணி கரைந்து போகிறது; ஆலைகள் மூடப்படுகின்றன; பெருந்திரளான தொழிலாளர்களுக்குப் பிழைப்பாதாரப் பொருள்கள் கிடைக்கவில்லை; காரணம், அவர்கள் பிழைப்பாதாரப் பொருள்களை மிதமிஞ்சி உற்பத்தி செய்துவிட்டனர்; திவாலுக்கு அடுத்து திவாலும், ஜப்திக்கு அடுத்து ஜப்தியும் முடிவில்லாமல் தொடர்கின்றன. தேக்கநிலை பல ஆண்டுகளுக்கு நீடிக்கிறது; உற்பத்திச் சக்திகளும் உற்பத்திப் பொருள்களும் விரயமாக்கப்படுகின்றன, ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றன; குவிந்து கிடக்கும் சரக்குகளின் திரள் சிறிது சிறிதாகக் கரைந்து, ஓரளவுக்கு மதிப்புக் குறையும்வரை, உற்பத்தியும் பரிவர்த்தனையும் படிப்படியாக மீட்சிபெற்று மீண்டும் எழுந்து நடக்கத் தொடங்கும்வரை இது நிகழ்கிறது. [பிறகு] கொஞ்சம் கொஞ்சமாக நடை வேகம் பெறுகிறது; வேகம்பெற்றுப் பெருநடை ஆகிறது; தொழில்துறையின் பெருநடை விரைவுநடையாக மாறுகிறது; விரைவுநடை வேகம்பெற்று வளர்ந்து, தொழில்துறை, வணிகக் கடன் செலாவணி, ஊக வணிகம் ஆகியவை நான்குகால் பாய்ச்சலில் தலைதெறிக்க ஓடும் ஓட்டம் ஒரு துல்லியமான தடைதாண்டும் ஓட்டமாக மாறுகிறது. முடிவில்,  அந்த ஓட்டம், கழுத்தை முறிக்கும் தாவல்களுக்குப் பின், எங்கே தொடங்கியதோ அங்கேயே, அதாவது ஒரு நெருக்கடியின் குழியிலேயே வந்து முடிகிறது. திரும்பத் திரும்ப இதே கதைதான். 1825-ஆம் ஆண்டு முதலாய் ஐந்து தடவை இந்த நெருக்கடியை நாம் கடந்து வந்துள்ளோம். தற்போதைய தருணத்தில் (1877) ஆறாவது தடவையாய் அனுபவித்துக் கொண்டுள்ளோம். இந்த நெருக்கடிகளின் தன்மை மிகவும் தெளிவாகத் தெரிகின்றது; முதலாவது நெருக்கடியை “crise plethorique”, அதாவது மிகைநிறைவால் ஏற்படும் நெருக்கடி என்று விளக்கி, ஃபூரியே இந்த நெருக்கடிகளின் தன்மையை அவ்வளவு தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடிகளில், சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் முதலாளித்துவக் கைவசப்படுத்தலுக்கும் இடையேயான முரண்பாடு ஒரு மூர்க்கமான எழுச்சியில் முடிகிறது. சரக்குகளின் சுற்றோட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. சுற்றோட்டத்துக்குரிய சாதனமாகிய பணம், சுற்றோட்டத்துக்கு இடையூறாய் ஆகிவிடுகிறது. சரக்குகளின் உற்பத்தி, சுற்றோட்டம் தொடர்பான அனைத்து விதிகளும் தலைகீழாய் மாறிவிடுகின்றன. பொருளாதார மோதல் அதன் உச்சநிலையை எட்டிவிட்டது. உற்பத்தி முறை, பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகிறது.

Image result for ancient manchester labour

ஆலையினுள்ளே நிலவும் சமூகமயப்பட்ட உற்பத்தியின் ஒழுங்கமைப்பானது, அதனுடன் கூடவே நிலவி அதன்மீதே ஆதிக்கம் செலுத்தும், சமுதாய உற்பத்தியின் ஒழுங்கின்மைக்கு முரணாகிவிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. இந்த உண்மையானது, நெருக்கடிகளின்போது பல பெரிய முதலாளிகள், அதைவிட அதிக எண்ணிக்கையிலான சிறிய முதலாளிகள் நொடித்து அழிவதன் வாயிலாக நிகழும் மூர்க்கமான மூலதனக் குவிப்பின் மூலம், அந்த முதலாளிகளுக்கே நேரடியாக உணர்த்தப்படுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் பொறியமைவு முழுமையும், அதனாலேயே தோற்றுவிக்கப்பட்ட உற்பத்திச் சக்திகளின் அழுத்தத்தில் செயலற்று நின்றுவிடுகிறது. இந்த உற்பத்திச் சாதனங்களின் திரள் அனைத்தையும் மூலதனமாக மாற்ற இனிமேலும் அதனால் இயலவில்லை. அவை பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதே காரணத்தால், தொழில்துறை ரிசர்வ் பட்டாளமும் வேலையின்றி முடங்கிக் கிடந்தாக வேண்டும். உற்பத்திச் சாதனங்கள், பிழைப்புச் சாதனங்கள், வேலைசெய்யத் தயாராயுள்ள தொழிலாளர்கள் ஆகிய உற்பத்தியின் அனைத்துக் கூறுகளும், அதாவது, பொதுச் செல்வத்தின் அனைத்துக் கூறுகளும் [தேவைக்கு அதிகமாக] மிகைநிறைவாய் இருக்கின்றன. ஆனால், “மிகைநிறைவே கடுந்துன்பத்துக்கும் வறுமைக்கும் மூலகாரணமாய் ஆகிவிடுகிறது” (ஃபூரியே). ஏனெனில், உற்பத்திச் சாதனங்களும், பிழைப்புச் சாதனங்களும் மூலதனமாக மாற்றப்படுவதைத் தடுப்பது இதே மிகைநிறைவுதான். காரணம், முதலாளித்துவச் சமுதாயத்தில் உற்பத்திச் சாதனங்கள் முதலில் மூலதனமாக, அதாவது, மனிதனின் உழைப்புச் சக்தியைச் சுரண்டும் சாதனமாக மாற்றப்பட்ட பிறகே அதனால் செயல்பட முடியும். உற்பத்திச் சாதனங்களும் பிழைப்புச் சாதனங்களும் இவ்வாறு மூலதனமாக மாற்றப்பட வேண்டிய அவசியம், இச்சாதனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேயாக உருவெடுத்து நிற்கிறது. உற்பத்தியின் பொருளாயத ரீதியான உந்துசக்தியும் மனித ரீதியான உந்துசக்தியும் ஒன்றிணைய முடியாதவாறு இதுதான் தடுக்கிறது. உற்பத்திச் சாதனங்களைச் செயல்பட விடாமலும், தொழிலாளர்களை வேலை செய்யவும் வாழவும் விடாமலும் இதுதான் தடைசெய்கிறது. எனவே, ஒருபுறம், முதலாளித்துவ உற்பத்தி முறை, இந்த உற்பத்திச் சக்திகளைத் தொடர்ந்து வழிநடத்த இயலாத அதன்சொந்தத் தகுதியின்மைக்காகக் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்த உற்பத்திச் சக்திகள், தற்போதுள்ள முரண்பாட்டை நீக்கிடவும், மூலதனம் என்பதான தம் இயல்பை ஒழித்திடவும், சமுதாய உற்பத்திச் சக்திள் என்கிற அவற்றின் தன்மை நடைமுறையில் அங்கீகரிக்கப்படவும், மேலும் கூடுதலான ஆற்றலுடன் தாமே தொடர்ந்து முன்னேறிச் செல்கின்றன.

உற்பத்திச் சக்திகள், மென்மேலும் சக்தி மிக்கவையாக வளர்ந்து, மூலதனம் என்பதான தமக்குள்ள இயல்பை எதிர்த்துப் புரியும் இந்தக் கலகம், அவற்றின் சமுதாயத் தன்மை அங்கீகரிக்கப்பட வேண்டுமென மென்மேலும் வலுவாக அவை இடும் இந்தக் கட்டளை, முதலாளித்துவ நிலைமைகளின்கீழ் சாத்தியப்படும் அளவுக்கு, இச்சக்திகளை மென்மேலும் சமுதாய உற்பத்திச் சக்திகளாக நடத்தும்படி முதலாளித்துவ வர்க்கத்தையே நிர்ப்பந்திக்கின்றன. தொழில்துறையின் பரபரப்பான காலம், அந்தப் பரபரப்பால் கடன் செலாவணியில் ஏற்படும் எல்லையற்ற பெருக்கம், இவற்றுக்குக் குறையாத அளவில், மாபெரும் முதலாளித்துவத் தொழில் நிறுவனங்களின் நிலைகுலைவால் ஏற்படும் தகர்வு – இவையனைத்தும், [இன்று] நாம் காண்கிறோமே, வெவ்வேறு வகையான கூட்டுப் பங்குக் குழுமங்கள் (joint-stock companies), பெருந்திரளான உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயமயமாக்கலில் அத்தகைய வடிவங்களைக் கொண்டுவரத் தூண்டுகின்றன. இந்த உற்பத்திச் சாதனங்கள், வினியோகச் சாதனங்கள் இவற்றுள் பலவும் தொடக்கத்திலிருந்தே, ரயில்வேக்களைப் போல, முதலாளித்துவ விரிவாக்கத்தின் பிற வடிவங்கள் அனைத்துக்கும் இடமளிக்காத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமானவையாய் இருத்தன. பரிணாம வளர்ச்சியில், அடுத்துவரும் ஒரு கட்டத்தில், இந்த வடிவமும் போதுமானதாய் இல்லை. குறிப்பிட்டவொரு நாட்டில், ஒரு தொழில்துறையின் குறிப்பிட்டவொரு கிளையில், பெரிய அளவில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கத்துக்காக அமைந்தவொரு சங்கமான, “பொறுப்பாண்மை”  (Trust) என்னும் அமைப்பில் ஒன்றுபடுகிறார்கள். உற்பத்தி செய்ய வேண்டிய மொத்த அளவை அவர்கள் தீர்மானித்து, [அதில் ஒவ்வொருவரும் உற்பத்தி செய்ய வேண்டிய அளவை] தங்களுக்குள்ளே பிரித்துக் கொள்கிறார்கள். இதன்மூலம், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையை அவர்கள் வலிந்து நடைமுறைப்படுத்தி விடுகின்றனர். ஆனால், இந்தவகைப் பொறுப்பாண்மை அமைப்புகள், தொழில் மோசமானவுடன், பொதுவாக கலைந்துபோகக் கூடியவை ஆகும். அதன் காரணமாகவே, அவை அதைவிட அதிகம் மையப்படுத்தப்பட்ட கூட்டமைப்பைக் கட்டாயப்படுத்துகின்றன. குறிப்பிட்ட ஒரு தொழில்துறை முழுமையுமே ஒரு பிரம்மாண்டக் கூட்டுப் பங்குக் குழுமமாக மாற்றப்படுகிறது. குழுமத்துக்குள் நடைபெறும் போட்டி, இந்த ஒரு குழுமத்தின் அகநிலையான ஏகபோகத்துக்கு வழி வகுக்கிறது. 1890-இல் ஆங்கில ஆல்கலி (alkali) உற்பத்தியில் இது நடந்தது. 48 பெரும் தொழில் நிறுவனங்களின் ஒன்றிணைவுக்குப் பின், இப்போது அது ஒருநிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. 60,00,000 பவுண்டுகள் மூலதனத்துடன், ஒரே திட்ட வரைவுப்படி இயக்கப்படுகிறது.

பொறுப்பாண்மை அமைப்புகளில் சுதந்திரமான போட்டி என்பது அதற்கு நேரெதிரானதாக அதாவது ஏகபோகமாக மாறிவிடுகிறது. முதலாளித்துவச் சமுதாயத்தின் வரையறுத்த திட்டம் எதுவும் இல்லாத உற்பத்தி, படையெடுத்துவரும் சோஷலிசச் சமுதாயத்தின் வரையறுத்த திட்டப்படியான உற்பத்தியிடம் சரணடைகிறது. இந்த [முதலாளித்துவ] ஏகபோகம் இதுவரையில், இன்னமும்கூட, நிச்சயமாக முதலாளிகளின் ஆதாயத்துக்கும் அனுகூலத்துக்கும் உகந்ததே. ஆனால், இந்த ஏகபோகத்தில், சுரண்டல் அந்த அளவுக்கு அப்பட்டமானது, அது தகர்ந்தாக வேண்டும். பங்கு ஆதாய வெறியர்களின் (dividend-mongers) ஒரு சிறு கும்பல் நடத்தும் வெட்கங்கெட்ட சமூகச் சுரண்டலுக்கு வழிவகுக்கின்ற, பொறுப்பாண்மை அமைப்புகள் செயல்படுத்தும் உற்பத்தியை எந்தத் தேசமும் சகித்துக் கொள்ளாது.

எப்படி ஆயினும், பொறுப்பாண்மை அமைப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், முதலாளித்துவச் சமுதாயத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாகிய அரசு, இறுதியில் உற்பத்தியின் நெறியாண்மையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.46 அரசின் உடைமையாக மாற்றப்பட வேண்டிய இந்த அவசியம், தகவல்தொடர்பு, போக்குவரத்துத் துறைகளின் மாபெரும் நிறுவனங்களாகிய அஞ்சல் நிலையம், தந்தி, ரயில்வே ஆகியவற்றில் முதலாவதாய் உணரப்படுகிறது.

Image result for ancient Stock Exchange

பங்குச் சந்தை

நவீன உற்பத்திச் சக்திகளை இனிமேலும் நிர்வகிக்க முடியாத முதலாளித்துவ வர்க்கத்தின் தகுதியின்மையை நெருக்கடிகள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. அதேபோல, உற்பத்திக்கும் வினியோகத்துக்குமான மாபெரும் நிறுவன அமைப்புகள், கூட்டுப் பங்குக் குழுமங்களாகவும், பொறுப்பாண்மை அமைப்புகளாகவும், அரசின் உடைமையாகவும் மாற்றப்படுவது, முதலாளித்துவ வர்க்கத்தினர் இந்தப் பணிகளுக்கு எவ்வாறு தேவையற்றவர்கள் ஆகிவிட்டனர் என்பதைக் காட்டுகிறது. [இதுநாள்வரை] முதலாளி செய்துவந்த அனைத்து சமூகப் பணிகளையும் [இன்று] சம்பளம் பெறும் அலுவலர்கள் செய்துவிடுகின்றனர். பங்காதாயங்களைச் சுருட்டிக் கொள்வதையும், [கடன், வட்டி வசூலுக்கான] ரசீதுகளைக் கிழிப்பதையும், முதலாளிகள் தங்களுக்குள் ஒருவர் மூலதனத்தை மற்றவர் கொள்ளையடிக்கும் இடமான பங்குச் சந்தையில் (Stock Exchange) சூதாடுவதையும் தவிர, முதலாளிக்கு இனி எந்தச் சமூகப் பணியும் கிடையாது. முதலாளித்துவ உற்பத்தி முறை முதலாவதாகத் தொழிலாளர்களை வெளியே தள்ளுகிறது. இப்போது அது முதலாளிகளையும் வெளியே தள்ளுகிறது. தொழிலாளர்களைத் தரம் தாழ்த்தியதுபோல இவர்களையும் தரம் தாழ்த்துகிறது. [தொழிலாளர்களைப் போன்று] இவர்களை உடனடியாகத் தொழில்துறை ரிசர்வ் பட்டாளத்து அணிகளின் நிலைக்குத் தாழ்த்தாவிட்டாலும், [உற்பத்திக்குத் தேவையில்லாத] உபரி மக்கள் கூட்டத்து அணிகளின் நிலைக்குத் தாழ்த்துகிறது.

ஆனால், கூட்டுப் பங்குக் குழுமங்களாகவோ, பொறுப்பாண்மை அமைப்புகளாகவோ, அல்லது அரசின் உடைமையாகவோ மாற்றுவதானது, உற்பத்திச் சக்திகளின் முதலாளித்துவத் தன்மையை நீக்கிவிடாது. கூட்டுப் பங்குக் குழுமங்கள், பொறுப்பாண்மை அமைப்புகளைப் பொறுத்தவரை இது வெளிப்படையானது. மேலும், நவீன அரசுங்கூட, தொழிலாளர்களின் ஆக்கிரமிப்புகளுக்கும், தனிப்பட்ட முதலாளிகளின் ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக, முதலாளித்துவ உற்பத்தி முறையின் புற நிலைமைகளைக் காப்பாற்றும் பொருட்டு, முதலாளித்துவச் சமுதாயம் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரே நிறுவன அமைப்பாகும். நவீன அரசின் வடிவம் எதுவாயினும், அது சாராம்சத்தில் முதலாளித்துவ [நிர்வாக] எந்திரமே ஆகும்; அது முதலாளிகளின் அரசு ஆகும்; மொத்த தேசிய மூலதனத்தின் இலட்சிய உருவாக்கம் ஆகும். நவீன அரசு எந்த அளவு அதிகமான உற்பத்திச் சக்திகளை அரசுடைமை ஆக்குகிறதோ, அந்த அளவு அது நடைமுறையில் தேசிய முதலாளியாகிறது; அந்த அளவு அதிகமான குடிமக்களைச் சுரண்டுகிறது. தொழிலாளர்கள் மாற்றமின்றிக் கூலித் தொழிலாளர்களாகவே, அதாவது பாட்டாளிகளாகவே இருக்கின்றனர். முதலாளித்துவ உறவு அகற்றப்படவில்லை. மாறாக, அது ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. ஆனால், நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகையில் அது தலைகுப்புற விழுகிறது. உற்பத்திச் சக்திகளின் அரசுடைமை, மோதலுக்கான தீர்வு ஆகிவிடாது. ஆனால், அந்தத் தீர்வின் கூறுகளாக அமையும் செயல்நுட்ப நிலைமைகள் அதனுள்ளே மறைந்து கிடக்கின்றன.

மோதலுக்கான இத்தீர்வு, நவீன உற்பத்திச் சக்திகளுடைய சமூகத் தன்மையை நடைமுறையில் அங்கீகரிப்பதிலும், எனவே, உற்பத்தி, கைவசப்படுத்தல், பரிவர்த்தனை முறைகள் ஆகியவற்றை உற்பத்திச் சாதனங்களின் சமூகமயப்பட்ட தன்மைக்கு இசைவிப்பதிலும்தான் அடங்கியிருக்க முடியும். மேலும், ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கட்டுப்பாட்டைத் தவிர வேறெந்தக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் வளர்ந்துவிட்ட உற்பத்திச் சக்திகளை, வெளிப்படையாகவும் நேரடியாகவும் சமுதாயமே உடைமையாக்கிக் கொள்வதால் மட்டுமே இந்த இசைவு ஏற்பட முடியும். உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் சமூகத் தன்மை இன்றைக்கு உற்பத்தியாளர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது; குறிப்பிட்ட கால இடைவெளியில் உற்பத்தி, பரிவர்த்தனை அனைத்தையும் குலைக்கிறது; கண்மூடித்தனமாக, பலவந்தமாக, அழிவுபூர்வமாகச் செயல்படும் ஓர் இயற்கை விதியைப் போன்றே செயல்படுகிறது. ஆனால், உற்பத்திச் சக்திகளைச் சமுதாயம் தானே எடுத்துக் கொண்டதும், உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் சமூகத் தன்மையை, உற்பத்தியாளர்கள் அதன் இயல்பு பற்றிய மிகச்சரியான புரிதலுடன் பயன்படுத்திக் கொள்வர். இச்சமூகத் தன்மை, கொந்தளிப்புக்கும், குறிப்பிட்ட கால இடைவெளியிலான சீர்குலைவுக்கும் மூலகாரணமாக இருப்பதற்குப் பதில், உற்பத்திக்கே ஆற்றல் மிக்க உந்துசக்தி ஆகிவிடும்.

முனைப்புமிக்க சமூகச் சக்திகள், நாம் அவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் இருக்கும்வரையில், துல்லியமாய் இயற்கை சக்திகளைப் போன்றே கண்மூடித்தனமாக, பலவந்தமாக, அழிவுபூர்வமாகச் செயல்படுகின்றன. ஆனால், நாம் அவற்றைப் புரிந்துகொண்டதுமே, அவற்றின் செயல்பாடு, அவற்றின் திசைவழி, அவற்றின் விளைவுகள் ஆகியவற்றை நாம் உள்வாங்கிக் கொண்டதுமே, அவற்றை மென்மேலும் நம் விருப்பத்துக்குக் கீழ்ப்படியச் செய்வதும், அவற்றைப் பயன்படுத்தி நம்சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதும் முற்றிலும் நம்மை மட்டுமே சார்ந்ததாகும். மேலும், முக்கியமாகப் பேராற்றல் கொண்ட இன்றைய உற்பத்திச் சக்திகளுக்கு இது மிகவும் பொருந்தும். செயல்பாட்டுக்கான சமூகச் சாதனங்களின் இயல்பையும் தன்மையையும் புரிந்துகொள்வது, முதலாளித்துவ உற்பத்தி முறையின் பண்பியல்புக்கும், அதன் பாதுகாவலர்களின் பண்பியல்புக்கும் எதிரானது ஆகும். அவற்றைப் புரிந்து கொள்ள நாம் பிடிவாதமாக மறுக்கும்வரையில் இந்தச் சக்திகள் நம்மையும் மீறி நமக்கே எதிராகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். மேலே நாம் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளதுபோல, நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கும்.

ஆனால், அவற்றின் இயல்பைப் புரிந்து கொண்டதும், நம்மீது ஆதிக்கம் செலுத்தும் பூதங்களாக இருக்கும் அவற்றை, ஒன்றுபட்டு உழைக்கும் கைகளில், மனமுவந்து பணிபுரியும் பணியாட்களாக மாற்றிவிடலாம். இந்த வேறுபாடு, புயலின்போது இடி- மின்னலில் அழிவுச் சக்தியாகச் செயல்படும் மின்சாரத்துக்கும், தந்தியிலும், வோல்ட்டா மின்வில்லிலும் நம் கட்டளைப்படி செயல்படும் மின்சாரத்துக்கும் இடையேயான வேறுபாடு போன்றதாகும். காட்டுத் தீயுக்கும், மனிதனுக்குச் சேவை புரியும் நெருப்புக்கும் இடையேயான வேறுபாடு போன்றதாகும். முடிவாக, இன்றைய உற்பத்திச் சக்திகளின் உண்மையான இயல்பை இவ்வாறு புரிந்து கொண்டதும், உற்பத்தியின் சமூக ரீதியான ஒழுங்கின்மை, சமுதாயத்தின் தேவைகளுக்கும், ஒவ்வொரு தனிமனிதனின் தேவைகளுக்கும் ஏற்றவாறு வரையறுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் உற்பத்தியின் சமூக ரீதியான கட்டுப்பாட்டுக்கு வழிவிட்டு ஒதுங்கும். அதன்பிறகு, உற்பத்திப் பொருள் முதலில் உற்பத்தியாளரையும், பிறகு கைவசப்படுத்துவோரையும் அடிமையாக்குகின்ற முதலாளித்துவ உற்பத்தி முறை மாற்றப்பட்டு அதனிடத்தில், நவீன உற்பத்திச் சாதனங்களுடைய இயல்பின் அடிப்படையில் உற்பத்திப் பொருள்களைக் கைவசப்படுத்தும் முறை நடைமுறைக்கு வரும். அதன்படி, ஒருபுறம், உற்பத்தியின் பராமரிப்புக்கும் விரிவாக்கத்துக்குமான சாதனங்களாக நேரடியான சமூகக் கைவசப்படுத்தலும், மறுபுறம், பிழைப்புக்கும் இன்ப நுகர்வுக்குமான சாதனங்களாக நேரடியான தனிமனிதக் கைவசப்படுத்தலும் நிகழும்.

Image result for பாட்டாளி வர்க்கம்

பாட்டாளி வர்க்கம்

முதலாளித்துவ உற்பத்தி முறை, மக்கள் தொகையில் மென்மேலும் மிகப் பெரும்பான்மையினரைப் பாட்டாளிகளாக முழுமையாய் மாற்றுகின்ற அதேவேளையில், தன் சொந்த அழிவு பற்றிய அச்சுறுத்தலால், இந்தப் புரட்சியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்ற ஒரு சக்தியையும் அது தோற்றுவிக்கிறது. ஏற்கெனவே சமூகமயப்பட்ட பரந்த உற்பத்திச் சாதனங்களை மென்மேலும் அரசின் உடைமையாக மாற்றும்படி அது நிர்ப்பந்திக்கும் அதேவேளையில், இந்தப் புரட்சியை நிறைவேற்றுதற்கான வழியையும் அதுவே சுட்டிக் காட்டுகிறது. பாட்டாளி வர்க்கம் அரசியல் திகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு, உற்பத்திச் சாதனங்களை அரசின் உடைமையாக மாற்றுகிறது .

ஆனால், இதைச் செய்வதன்மூலம், அது பாட்டாளி வர்க்கம் என்ற தன் வர்க்க நிலைக்கே முடிவுகட்டுகிறது; அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது; அரசு அரசாக இருக்கும் நிலைக்கும் முடிவுகட்டுகிறது. இதுநாள்வரை வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்த சமுதாயம் என்பதால் அதற்கு அரசு தேவைப்பட்டது. அதாவது, அந்தந்தக் காலகட்டத்தில் சுரண்டும் வர்க்கமாக இருக்கும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் நிறுவன அமைப்பு ஒன்று தேவைப்பட்டது. தற்போது நிலவிவரும் உற்பத்தி நிலைமைகளில் [பாதிப்பு ஏற்படுத்தும்படி] வெளியிலிருந்து வரக்கூடிய எந்தவொரு தலையீட்டையும் தடுக்கும் நோக்கத்துக்காகவும், எனவே, இன்னும் முக்கியமாக, சுரண்டப்படும் வர்க்கங்களை அந்தந்த உற்பத்தி முறைக்கு (அடிமை முறை, பண்ணையடிமை முறை, கூலியுழைப்பு முறை) பொருத்தமான ஒடுக்குமுறை நிலையில் பலவந்தமாக இருத்திவைக்கும் நோக்கத்துக்காகவும் ஒரு நிறுவன அமைப்பு தேவைப்பட்டது. அரசு என்பது ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக, சமுதாயத்தின் ஒருங்கிணைந்த கண்கூடான உருவகத் திரட்சியாக விளங்கியது. ஆனால், எந்த வர்க்கம் அதன் காலத்தில் அதுவே ஒட்டுமொத்தச் சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோ, அந்த வர்க்கத்தின் அரசாக இருந்தவரை மட்டுமே, அரசு அவ்வாறு விளங்கியது. அதாவது, பண்டைய காலத்தில் அடிமைகளை உடைமையாகக் கொண்ட குடிமக்களின் அரசாகவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்தவரை மட்டுமே அரசு அவ்வாறு விளங்கியது. இறுதியில் அரசு, சமுதாயம் முழுமைக்கும் உண்மையான பிரதிநிதியாய் ஆகும்போது, அது தன்னைத் தேவையற்றதாய் ஆக்கிக் கொள்கிறது.

இனிமேலும் எந்தவொரு சமூக வர்க்கத்தையும் கீழ்ப்படுத்தி வைக்க வேண்டிய தேவையின்றிப் போனவுடனே, வர்க்க ஆதிக்கம், உற்பத்தியில் தற்போதுள்ள ஒழுங்கின்மையின் காரணமாக நடைபெறும் தனிநபரின் பிழைப்புக்கான போராட்டம், அந்தப் போராட்டம் காரணமாக எழும் மோதல்கள், அத்துமீறல்கள் இவையனைத்தும் நீக்கப்பட்டவுடனே, அடக்கியாள எதுவும் மிச்சமில்லை என்பதால், தனிச்சிறப்பான ஓர் அடக்குமுறைச் சக்தியாகிய அரசுக்கு இனி அவசியமில்லை. ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் பிரதிநிதியாய் உண்மையாகவே தன்னை வரித்துக் கொண்டதை வெளிப்படுத்தும் அரசின் முதலாவது நடவடிக்கை, உற்பத்திச் சாதனங்களைச்  சமுதாயத்தின் பெயரில் உடைமையாக்கிக் கொள்வதாகும். அதேவேளையில், இந்த நடவடிக்கைதான், அரசு என்ற முறையில் அது சுயேச்சையாக மேற்கொள்ளும் இறுதி நடவடிக்கையும் ஆகும். சமூக உறவுகளில் அரசின் தலையீடு, அடுத்தடுத்து ஒவ்வொரு துறையாகத் தேவையற்றதாகி, பிறகு தானாகவே மறைந்துவிடுகிறது. மனிதர்களை ஆளும் அரசாங்கம் மாற்றப்பட்டு, அதனிடத்தில் பொருள்களின் நிர்வாகம், உற்பத்திச் செயல்முறைகளின் நிறைவேற்றம்  இடம்பெறுகிறது. அரசு “ஒழிக்கப்படுவதில்லை”. அது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது. “சுதந்திர அரசு”47 என்னும் சொல்தொடர் எந்த அளவு மதிக்கத் தக்கது என்பதை இது புலப்படுத்துகிறது. அதாவது, இச்சொல்தொடரைச் சில நேரங்களில் கிளர்ச்சிக்காரர்கள் பயன்படுத்தியது எந்த அளவு நியாயமானது என்பதையும், முடிவாக விஞ்ஞான ரீதியாய் எந்த அளவு அது குறைபாடுடையது என்பதையும் இது புலப்படுத்துகிறது. மேலும், ஒரே நொடியில் அரசு ஒழிக்கப்படுவதற்கு, அரசுமறுப்பியவாதிகள் என்று அழைக்கப்படுவோர் முன்வைக்கும் கோரிக்கைகள் எந்த அளவு மதிக்கத்தக்கன என்பதையும் மேற்கூறியது புலப்படுத்துகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோற்றம் முதற்கொண்டே, உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் சமுதாயமே கைவசப்படுத்த வேண்டும் என்பது, தனிமனிதர்களும், குறுங்குழுக்களும் வருங்காலத்துக்குரிய இலட்சியம் என, அனேகமாகத் தெளிவான புரிதலின்றி, அடிக்கடி கண்டுவந்த கனவாக இருந்து வந்துள்ளது. ஆனால், அதன் நிறைவேற்றத்துக்கான எதார்த்த நிலைமைகள் இருக்கும்போது மட்டுமே அது சாத்தியம் ஆகமுடியும்; வரலாற்றுக் கட்டாயமாகவும் ஆகமுடியும். ஏனைய சமூக முன்னேற்றம் ஒவ்வொன்றையும் போன்றே இதுவும், வர்க்கங்கள் நிலவுவது நீதிக்கும் சமத்துவத்துக்கும் இன்ன பிறவற்றுக்கும் முரணாகுமென மனிதர்கள் புரிந்து கொள்வதாலோ, இந்த வர்க்கங்களை ஒழிக்க வேண்டுமென வெறுமனே விரும்புவதாலோ நடைமுறை சாத்தியம் ஆகிவிடாது. குறிப்பிட்ட புதிய பொருளாதார நிலைமைகள் ஏற்படுவதால் மட்டுமே நடைமுறை சாத்தியம் ஆக முடியும். சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் எனவும், ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கம் எனவும் சமுதாயம் பிளவுபட்டதானது, முந்தைய காலகட்டங்களில் நிலவிய பற்றாக்குறையான, கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவாகும். மொத்த சமூக உழைப்பும் ஈட்டுகின்ற உற்பத்திப் பொருள்கள், அனைவருடைய வாழ்வுக்கும் வேண்டிய அத்தியாவசிய அளவைக் காட்டிலும் சற்றே கூடுதலாக மட்டுமே இருக்கும் வரையில், அதன் காரணமாகச் சமுதாய உறுப்பினர்களில் மிகப் பெரும்பான்மையினர் அவர்களின் முழு நேரத்தையும் அல்லது ஏறத்தாழ முழு நேரத்தையும் உழைப்பில் செலுத்த வேண்டியிருக்கும் காலம் வரையில், இந்தச் சமுதாயம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும்.

Image result for ancient manchester labour slave

கொத்தடிமைகள்

பிரத்தியேகமாய் உழைப்புக்குக் கொத்தடிமைகளாக விளங்கும் மிகப் பெரும்பான்மையின் அருகருகிலேயே, நேரடியான உற்பத்தி சார்ந்த உழைப்பிலிருந்து விடுபட்ட ஒரு வர்க்கம் உதித்தெழுந்துள்ளது. இவ்வர்க்கம், உழைப்பை நெறிப்படுத்தல், அரசு நிர்வாகம், சட்டம், விஞ்ஞானம், கலை, இதுபோன்ற இன்னபிற சமுதாயப் பொது விவகாரங்களைக் கவனித்துக் கொள்கிறது. எனவே, உழைப்புப் பிரிவினை விதிதான், வர்க்கப் பாகுபாட்டுக்கு அடிப்படையாய் அமைகிறது. ஆனால் இவ்வாறு கூறுவது, இந்த வர்க்கப் பாகுபாடு, வன்முறையாலும் வழிப்பறியாலும், தந்திரத்தாலும் மோசடியாலும் நிலைநாட்டப்பட்டது என்று கூறுவதைத் தடுக்கவில்லை. ஆதிக்க நிலையைப் பெற்றவுடன் ஆளும் வர்க்கம், உழைக்கும் வர்க்கத்தின் செலவில், தன் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டது என்றோ, அதன் சமூகத் தலைமைப் பதவியைச் சாதாரண மக்களைக் கொடூரமாகச் சுரண்டுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது என்றோ  கூறுவதைத் தடுக்கவில்லை.

ஆனால், வர்க்கப் பாகுபாட்டுக்கு, மேலே காட்டியவாறு, ஓரளவு வரலாற்று நியாயம் உண்டு என்றபோதிலும், அதுகூடக் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும்தான், குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் மட்டும்தான். உற்பத்திப் பற்றாக்குறையே இதன் அடிப்படையாக இருந்தது. நவீன உற்பத்திச் சக்திகளின் முழுமையான வளர்ச்சியால் வர்க்கப் பாகுபாடு துடைத்தெறியப்படும். உண்மையில் சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு, வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி குறிப்பிட்ட கட்டத்தை எட்டியிருப்பது முன்நிபந்தனை ஆகும். பரிணாம வளர்ச்சியின் அந்தக் கட்டத்தில், குறிப்பிட்ட ஏதோவோர் ஆளும் வர்க்கம் அல்ல, ஆளும் வர்க்கம் என்பதாக ஏதேனும் ஒரு வர்க்கம் நிலவுவதும், அதன் காரணமாக, வர்க்கப் பாகுபாடேகூட நிலவுவதும், காலாவதி ஆகிப்போன, காலத்துக்கு ஒவ்வாத ஒன்றாகிவிடும். எனவே, உற்பத்திச் சாதனங்களையும், உற்பத்திப் பொருள்களையும், அதன்மூலம் அரசியல் ஆதிக்கம், கலாச்சார ஏகபோகம், அறிவுத்துறைத் தலைமை ஆகியவற்றையும், சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு வர்க்கம் கைவசப்படுத்திக் கொள்வது தேவைப்படாததாய் ஆவது மட்டுமின்றி, அது பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, அறிவுத்துறை ரீதியாக, வளர்ச்சிக்கு இடையூறாகவும் ஆகிவிடும் அளவுக்கு, உற்பத்தியின்  வளர்ச்சியைக் கொண்டு செல்வது, வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கான முன்நிபந்தனை ஆகும்.

இந்த வளர்ச்சிநிலை தற்போது எட்டப்பட்டுவிட்டது. அரசியல் துறையிலும் அறிவுத்துறையிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் கையாலாகாத்தனம் அவர்களுக்கே இனிமேலும் ஒரு ரகசியமாய் இருக்க முடியாது. முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதாரத் திவால்நிலை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப தவறாமல் வெளிப்படுகிறது. ஒவ்வொரு நெருக்கடியிலும், சமுதாயம் தன்சொந்த உற்பத்திச் சக்திகள், உற்பத்திப் பொருள்களைப் பயன்படுத்த முடியாமல் அவற்றின் சுமையின்கீழ் சிக்கி மூச்சுத் திணறுகிறது. போதுமான நுகர்வோர் இல்லாத காரணத்தால், உற்பத்தியாளர்கள் நுகர்வதற்கு ஏதுமில்லை என்னும் இந்த அபத்தமான முரண்பாட்டைச் சமுதாயம் நேருக்குநேர் எதிர்கொண்டு, செய்வதறியாது நிற்கிறது. உற்பத்திச் சாதனங்களின் விரிவாக்கச் சக்தி, அவற்றின்மீது முதலாளித்துவ உற்பத்தி முறை சுமத்தியுள்ள கட்டுகளை உடைத்தெறிகிறது. உற்பத்திச் சாதனங்கள் இந்தக் கட்டுகளிலிருந்து விடுதலை பெறுவது[தான்], உற்பத்திச் சக்திகள் இடையறாது தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட வேகத்தில் வளர்ச்சி பெறவும், அதன் விளைவாக, நடைமுறையில் உற்பத்தியானது வரம்பின்றி அதிகரிக்கவும் ஒரேயொரு முன்நிபந்தனையாகும். இதுமட்டுமல்ல. உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் கைவசப்படுத்திக் கொள்வதானது, உற்பத்தி மீதான தற்போதைய செயற்கைக் கட்டுப்பாடுகளை ஒழித்துக்கட்டுகிறது.

அதோடு மட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் உற்பத்தியின் தவிர்க்க முடியாத உடன்நிகழ்வுகளாகத் தோன்றி, நெருக்கடிகளின்போது அவற்றின் உச்சத்தை எட்டுகின்ற, உற்பத்திச் சக்திகள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் நேரடியான விரயத்தையும், நாசத்தையும் ஒழித்துக்கட்டுகிறது. மேலும், இன்றைய ஆளும் வர்க்கங்கள், அவற்றின் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரின் முட்டாள்தனமான ஊதாரிச் செலவுகளுக்கு முடிவு கட்டுவதன் மூலம், சமுதாயம் முழுமைக்குமாகத் திரளான உற்பத்திச் சாதனங்களையும் உற்பத்திப் பொருள்களையும் விடுவித்துக் கொடுக்கிறது. [உற்பத்திச் சாதனங்களின் சமுதாய உடைமையானது] சமூகமயப்பட்ட உற்பத்தியைப் பயன்படுத்தி, சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினருக்கும், பொருளாயத ரீதியில் முற்றிலும் போதுமான, நாளுக்குநாள் மேலும் நிறைவானதாகிவரும் வாழ்க்கையை மட்டுமின்றி, அனைவருக்கும், அவர்களின் உடல் ஆற்றல்களையும், உள்ளத்து ஆற்றல்களையும் தங்குதடையின்றி மேம்படுத்தவும் செயல்படுத்தவும் உத்தரவாதம் அளிக்கின்ற வாழ்க்கையையும் பெற்றுத் தருவதற்கான சாத்தியப்பாடு இப்போது முதன்முதலாய் இங்கே இருக்கிறது.  ஆம், அச்சாத்தியப்பாடு இங்கே இருக்கிறது.  

உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் கைப்பற்றிக் கொண்டதுமே, சரக்குகளின் உற்பத்திக்கு முடிவு கட்டப்படுகிறது. கூடவே, உற்பத்திப் பொருள் உற்பத்தியாளர் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒழிக்கப்படுகிறது. சமூக உற்பத்தியில் ஒழுங்கின்மை அகற்றப்பட்டு, அதனிடத்தில், முறைப்படுத்தப்பட்ட, திட்டவட்டமான, ஒழுங்கமைப்பு உண்டாக்கப்படுகிறது. தனிமனிதனின் பிழைப்புக்கான போராட்டம் மறைகிறது. அதன்பின், மனிதன், குறிப்பிட்ட அர்த்தத்தில், [வரலாற்றிலேயே] முதன்முதலாக விலங்கின உலகிலிருந்து துண்டிக்கப்படுகிறான். வெறும் விலங்கின வாழ்க்கை நிலைமைகளிலிருந்து வெளியே வந்து, உண்மையாகவே மனித வாழ்க்கை நிலைமைகளினுள் பிரவேசிக்கிறான். மனிதனின் சுற்றுச்சார்பாக அமைந்து இதுநாள்வரை மனிதனை ஆட்சி புரிந்துவந்த வாழ்க்கை நிலைமைகளின் ஒட்டுமொத்தக் கூறுகளும், இப்போது மனிதனின் ஆதிக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் கீழ் வந்துள்ளது. முதன்முதலாக மனிதன், இயற்கையின் உண்மையான, உணர்வுபூர்வமான தலைவனாய் ஆகிறான்.

காரணம், இப்போது அவன் தன்சொந்த சமூக நிறுவன அமைப்பின் எஜமானன் ஆகிவிடுகிறான். இதுநாள்வரை, மனிதனுடைய சொந்தச் சமூகச் செயல்பாடுகளின் விதிகள், இயற்கையின் விதிகளைப் போன்று, அவனுக்கு நேருக்குநேர் எதிராக நின்று, அவனுக்கு அந்நியமாக இருந்து, அவனை ஆதிக்கம் செலுத்தி வந்தன. இனிமேல் அவ்விதிகளை அவன் முழுமையான புரிதலுடன் பயன்படுத்திக் கொள்வான். எனவே, மனிதன் அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடுவான். இதுநாள்வரை, இயற்கையும் வரலாறும் அவன்மீது சுமத்திய [ஒரு] கட்டாயச் [சுமையாக], மனிதனுக்கு நேருக்குநேர் சவாலாக இருந்துவந்த அவன்சொந்தச் சமூக நிறுவன அமைப்பு, இப்போது அவனுடைய சுதந்திரமான சொந்தச் செயல்பாட்டின் விளைவாய் ஆகிப்போனது. இதுநாள்வரை வரலாற்றை வெளியிலிருந்து ஆட்சிபுரிந்த புறநிலைச் சக்திகள் மனிதனுடைய நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன. அந்த நேரம் முதற்கொண்டுதான் மனிதன் மென்மேலும் உணர்வுபூர்வமாகத் தன்சொந்த வரலாற்றைத் தானே படைத்திடுவான். அந்த நேரம் முதற்கொண்டுதான், அவன் தொடங்கிவைக்கும் சமூக இயக்கங்கள் முழுமையாகவும், தொடர்ந்து பெருகிச் செல்லும் அளவிலும், அவன் கருதிய பலன்களை அளித்திடும். நிர்ப்பந்தத்தின் ஆட்சியிலிருந்து சுதந்திரத்தின் ஆட்சிக்கு மனிதன் முன்னேறிச் செல்வதை இது குறிக்கிறது.

Image result for ancient manchester labour

வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி குறித்து நாம் வரைந்து காட்டியதைச் சுருக்கமாகத் தொகுத்தளிப்போம்.

  1. I. மத்திய காலச் சமுதாயம்–தனிநபர்களின் சிறிய அளவிலான உற்பத்தி [நடைபெறுகிறது]. உற்பத்திச் சாதனங்கள் தனிநபரின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தகவமைக்கப்பட்டுள்ளன. எனவே, முதிர்ச்சியற்ற, செப்பமற்ற, சின்னஞ்சிறிய, செயலில் திறன்குன்றிய சாதனங்களாய் இருக்கின்றன. உற்பத்தியானது, உற்பத்தியாளரின் அல்லது அவருடைய நிலவுடைமைப் பிரபுவின் உடனடி நுகர்வுக்காக நடைபெறுகிறது. இந்த நுகர்வுக்கும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்போது மட்டுமே, அத்தகைய உபரியானது விற்பனைக்கு வைக்கப்பட்டு, பரிவர்த்தனைக்கு வருகிறது. எனவே, சரக்குகளின் உற்பத்தி என்பது, மழலைப் பருவத்திலேதான் இருக்கிறது. ஆனால் சமுதாயம் முழுமைக்குமான உற்பத்தியில் ஒழுங்கின்மையை, ஏற்கெனவே அது தன்னுள் கருவடிவில் கொண்டுள்ளது.
  2. II.முதலாளித்துவப் புரட்சி– தொழில்துறை முதலில் எளிய கூட்டுறவு அமைப்பாகவும், பட்டறைத் தொழிலாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுநாள்வரை சிதறிக் கிடந்த உற்பத்திச் சாதனங்கள் பெரிய தொழில்கூடங்களாய் ஒன்றுகுவிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, தனிநபரின் உற்பத்திச் சாதனங்களாய் இருந்தவை, சமூக உற்பத்திச் சாதனங்களாக மாற்றப்படுகின்றன. ஆனால், இந்த மாற்றம், மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவத்தைப் பாதிக்கவில்லை. கைவசப்படுத்தலின் பழைய வடிவங்கள், மாற்றமின்றி அப்படியே நடைமுறையில் உள்ளன. முதலாளி தோன்றுகிறார். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர் என்ற தகுதியில், உற்பத்திப் பொருள்களையும் தாமே கைவசப்படுத்திக் கொண்டு அவற்றைச் சரக்குகளாக மாற்றுகிறார். உற்பத்தி, சமூகச் செயலாய் ஆகிவிட்டது. பரிவர்த்தனையும் கைவசப்படுத்தலும் னிப்பட்ட செயல்களாக, தனிநபர்களின் செயல்களாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமூக உற்பத்திப் பொருள் தனிப்பட்ட முதலாளியால் கைவசப்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டுதான், நம்முடைய இன்றைய சமுதாயம் உழல்கின்ற, நவீனத் தொழில்துறை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்ற, அனைத்து முரண்பாடுகளும் உதித்தெழுகின்றன.

() உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்படுதல். தொழிலாளி வாழ்நாள் முழுவதும் கூலியுழைப்பில் உளையச் சபிக்கப்படுதல். பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான பகைமை.

() சரக்குகளின் உற்பத்தியை ஆட்சி புரியும் விதிகளின் மேலாதிக்கமும் பயனுறுதியும் அதிகரித்தல். கட்டுப்பாடற்ற போட்டி. தனிப்பட்ட ஆலையில் [உற்பத்தியின்] சமூகமயப்பட்ட ஒழுங்கமைப்புக்கும், ஒட்டுமொத்த உற்பத்தியில் சமூக ஒழுங்கின்மைக்கும் இடையேயான முரண்பாடு.

() ஒருபுறம், போட்டியானது, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தியாளரும் எந்திர சாதனங்களைச் செம்மைப்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது. அதன் உடன்விளைவாகத் தொழிலாளர்கள் வேலையிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. [விளைவு?] தொழில்துறை ரிசர்வ் பட்டாளம். மறுபுறம், போட்டியின் விளைவாக, உற்பத்தியின் வரம்பில்லா விரிவாக்கம் ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் கட்டாயமாகிறது. இவ்வாறு, இருபுறமும், இதற்குமுன் கேட்டிராத அளவுக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, தேவைக்கு மிஞ்சிய வரத்து, மிகை உற்பத்தி, சந்தைகளில் [தேவைக்கதிகச் சரக்குகளின்] தேக்கநிலை, ஒவ்வொரு பத்தாண்டிலும் நிகழும் நெருக்கடிகள், நச்சு வட்டம்; இங்கே உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்களின் மிகை – அங்கே வேலைவாய்ப்பின்றி, பிழைப்புச் சாதனங்களின்றித் தவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகை. ஆனால், உற்பத்திக்கும் சமூக நல்வாழ்வுக்குமான இவ்விரு உந்து சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. காரணம், முதலாளித்துவ உற்பத்தி முறை உற்பத்திச் சக்திகளை, முதலில் அவை மூலதனமாக மாற்றப்படாவிட்டால், அவற்றைச் செயல்படவிடாமல் தடுக்கிறது; உற்பத்திப் பொருள்களைச் சுற்றோட்டத்தில் செல்லவிடாமல் தடுக்கிறது. [ஆனால்] அதே உற்பத்திச் சக்திகளின் மிகைநிறைவுதான் அவை மூலதனமாக மாற முடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஓர் அபத்தமாக வளர்ந்துவிட்டது. உற்பத்தி முறை பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தினர் அவர்களின் சொந்தச் சமூக உற்பத்திச் சக்திகளையே தொடர்ந்து நிர்வகிக்க இயலாத தகுதியின்மைக்காகக் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

() உற்பத்திச் சக்திகளின் சமூகத் தன்மையை, பகுதி அளவுக்கு அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. உற்பத்திக்கும் தகவல்தொடர்புக்குமான மாபெரும் நிறுவனங்களை முதலில் கூட்டுப் பங்குக் குழுமங்களும், பிறகு பொறுப்பாண்மை அமைப்புகளும், அதன்பின் அரசும் உடைமையாக்கிக் கொள்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் தான் தேவையற்ற ஒரு வர்க்கம் எனத் தெளிவுபடுத்திக் காட்டிவிட்டது. அதனுடைய சமூகப் பணிகள் அனைத்தையும் தற்போது சம்பள அலுவலர்களே செய்து முடிக்கின்றனர்.

III. பட்டாளி வர்க்கப் புரட்சி – முரண்பாடுகளுக்கான தீர்வு [காணப்படுகின்றது]. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இதைப் பயன்படுத்தி, முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயப்பட்ட உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், உற்பத்திச் சாதனங்களை அவை இதுநாள்வரை சுமந்திருந்த மூலதனம் என்னும் தன்மையிலிருந்து விடுவிக்கிறது. அவற்றின் சமூகத் தன்மை தானே தீர்வு கண்டுகொள்ள முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. இதுமுதற்கொண்டு, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் அமைந்த சமூகமயப்பட்ட உற்பத்தி சாத்தியம் ஆகிறது. அதுமுதற்கொண்டு, உற்பத்தியின் வளர்ச்சி, சமுதாயத்தில் வேறுபட்ட வர்க்கங்கள் நிலவுவதை காலத்துக்கு ஒவ்வாததாய் ஆக்குகிறது. சமூக உற்பத்தியில் ஒழுங்கின்மை எந்த அளவு மறைகிறதோ, அந்த அளவு அரசியல் ஆட்சியதிகாரம் மறைந்து போகிறது. முடிவில், தனக்கே உரிய சமூக நிறுவன வடிவத்தின் எஜமானனாகத் திகழும் மனிதன், அதேவேளையில், இயற்கையின் தலைவன் ஆகிறான். தனக்குத் தானே எஜமானன் ஆகிறான். அதாவது, சுதந்திரமடைகிறான்.

இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். [இச்செயலுக்கான] வரலாற்று நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தன்மையையும்கூடத் தீர்க்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோஷலிசத்தின் பணியாகும்.

[நூல் முற்றும்]

Image result for கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்


அடிக்குறிப்புகள்

1 எட்வர்டு எவிலிங் மொழிபெயர்த்து, கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் என்னும் தலைப்பில் லண்டனில் வெளியிட்ட ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரை.

2 1869-இல் எய்ஸெனாஹ் என்னும் இடத்தில் நடைபெற்ற தொடக்கக் காங்கிரசில் அமைக்கப்பட்ட ஜெர்மன் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்கள் எய்ஸெனாஹர்கள். ஜெர்மன் குட்டி பூர்ஷ்வா சோஷலிஸ்டு பெர்டினாண்ட் லாசலின் ஆதரவாளர்கள் லாசலியர்கள். இவர்கள் 1863-இல் ஜெர்மன் தொழிலாளர் பொதுச்சங்கத்தை நிறுவினர். இந்த இரு பிரிவுகளும் 1875-இல் இணைந்தன. இவர்களின் போக்கு சந்தர்ப்பவாதப் போக்கு என மார்க்ஸ், எங்கெல்ஸ் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளனர். கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சனம் என்னும் நூலில் இவர்களின் சந்தர்ப்பவாதக் கோட்பாடுகளை விமர்சத்துள்ளார் மார்க்ஸ்.

3 தங்கமும், வெள்ளியும் நிர்ணய மதிப்பாகப் பயன்படுத்தப்படும் நாணயச் செலாவணி முறை.

4 பண்டைய ஜெர்மானிய நாட்டுப்புற சமுதாயமாகிய மார்க் பற்றி எங்கெல்ஸ் எழுதிய விரிவான கட்டுரை, இந்நூலின் முதலாவது ஜெர்மன் பதிப்பில் பின்னிணைப்பாக வெளியிடப்பட்டது. 1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்பிலும் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பின்னிணைப்பு இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பில் சேர்க்கப்படவில்லை.

5 கிரேக்க மொழியில் க்னாசிஸ் என்றால் அறிவு என்று பொருள். அக்னாசிஸ் என்பது அதன் எதிர்ச்சொல். உலகம் அறிய முடியாதது, மனித அறிவால் புலன் உணர்வுகளுக்கு அப்பால் சென்று எதையும் அறிந்து கொள்ள முடியாது என்று கூறும் கருத்துமுதல்வாதக் கொள்கை.

6 உலகப் பொதுவான கருத்துருக்கள் யாவும் மெய்யாக நிலவும் தனிப்பட்ட பொருள்களைக் குறிக்கும் பெயர்களே; கருத்துருக்கள் பொருள்களின் மூலாதாரம் அல்ல; பொருள்களே முதன்மையானவை; அவை மட்டுமே உண்மையில் நிலவுபவை; கருத்துருக்கள் அதிலிருந்து உருவாக்கப்பட்டவை; – என்னும் கருத்துடையவர்கள். இதனை மத்திய காலப் பொருள்முதல்வாதத்தின் முதல் வெளியீடு எனலாம்.

7 அனக்சாகோரசின் கருத்துப்படி ஹோமியோமெரியாக்கள் என்பவை மிகவும் நுண்ணிய, பண்பியல்பு ரீதியாகத் திட்டவட்டமான துகள்கள். இவற்றை வரையறையின்றிப் பிளக்க முடியும். இயற்கையில் நிலவுகிற அனைத்துக்குமான ஆதார அடிப்படை. இத்துகள்கள் இணைந்தே பல்வேறுபட்ட பொருள்களாயின.

8 ‘qual’ என்பது சொற்களின் தத்துவம் சார்ந்த சிலேடையாகும். ‘qual’ என்ற சொல்லுக்கு சித்தரவதை, ஒருவரை ஏதேனும் செய்யத் தூண்டும் ஒருவகை வலி என்பது நேர் பொருளாகும். அதேவேளையில், மாயாவாதியான போமே இந்த ஜெர்மன் சொல்லுடன், [தன்மை என்பதாகப் பொருள்படும்] லத்தீன் மொழிச் சொல்லாகிய qualitas என்ற.சொல்லைக் கலக்கிறார். அவர் ‘qual’ என்று குறிப்பிடுவது வெளியிலிருந்து உண்டாக்கும் வலியை அல்ல, ஒரு பொருள் அல்லது ஓர் உறவு அல்லது ஒருநபரின் தன்னியல்பான வளர்ச்சியிலிருந்து தோன்றி, தன்னளவில் அந்த வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற செயலாக்கக் கோட்பாடு ஆகும். [ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

9 தெய்வத்தைப் பிரபஞ்சத்தின் அறிவுமயமான முதல்காரணமாக ஏற்றுக் கொண்டு, அதேவேளையில், இயற்கையிலும் சமுதாயத்திலும் அவருடைய தலையீட்டை மறுக்கும் மதத் தத்துவம்.

10 கிறிஸ்துவ மதவாதி வில்லியம் பூத் என்பவர் 1865-இல் இங்கிலாந்தில் மதப் பணிகளுக்கும், தர்ம சேவைகளுக்குமென உருவாக்கிய அமைப்பு. பிற நாடுகளுக்கும் பரவியது. 1880-இல் இராணுவப் படை அமைப்பில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த அமைப்பை முதலாளித்துவ வர்க்கம் ஆதரித்தது. தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களைத் திசை திருப்புவதே இதன் பணிகளின் நோக்கமாக இருந்தது.

11 1688-இல் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆங்கில முதலாளித்துவ வர்க்க வரலாற்று அறிஞர்கள் சூட்டிய பெயர். ஸ்டூவர்ட் வம்சத்தினர் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டு, நிலவுடைமைப் பிரபுக்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் இடையேயான சமரசத்தின் அடிப்படையில், சட்டவழி முடியரசு வில்லியம் தலைமையில் நிறுவப்பட்டது.

12 வெள்ளை ரோஜாவைச் சின்னமாகக் கொண்ட யார்க் வம்சத்துக்கும், சிவப்பு ரோஜாவைச் சின்னமாகக் கொண்ட லங்காஸ்டர் வம்சத்துக்கும் இடையே ஆட்சி அதிகாரத்துக்காக நடைபெற்ற போர்கள். இந்தப் போர்களின் விளைவாக இங்கிலாந்தின் பழைய பிரபுத்துவக் குடும்பங்கள் பூண்டோடு அழிந்தன. புதிதான டியூடர் வம்சத்தினர் அரசுரிமை பெற்று எதேச்சாதிகார முடியரசை நிறுவினர்.

13 டேக்கார்ட்டே என்ற பெயரின் இலத்தீன் வடிவமான கார்ட்டிசியஸ் என்ற சொல்லிலிருந்து வந்த பெயர். டேக்கார்ட்டேவின் கருத்துகளை வளர்த்து, 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் தத்துவவியலிலும் இயற்கை விஞ்ஞானத்திலும் உருவான ஒரு போக்கு.

14 18-ஆம் நூற்றாண்டின் ஃபிரெஞ்சு அறிவொளி இயக்கத்தைச் சேர்த்த ஒரு குழுவினர். இக்குழுவின் தலைவர் டெனீடிட்ரோ. இக்குழுவில் தலைமைப் பங்கு ஆற்றியவர்களில் பெரும்பாலோர் பொருள்முதல்வாதிகள். அரசியலில் வெவ்வேறு கருத்துடையோர் எனினும் பிரபுத்துவத்தையும், மதச் சபையின் ஆதிக்கத்தையும் எதிர்த்தனர். ஃபிரெஞ்சுப் புரட்சியின் சித்தாந்தத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தனர்.

15 1789-இல் ஃபிரெஞ்சு அரசியலமைப்புச் சபையால் ஏற்கப்பட்டு, 1791-இல் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. புதிய முதலாளித்துவ அமைப்பின் அரசியல் கோட்பாடுகளை இது எடுத்துரைத்தது.

16 1804-இல் ஃபிரான்சில் முதலாம் நெப்போலியன் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஐந்து சட்டத் தொகுப்புகளில் ஒன்று. இந்தச் சொத்துரிமைச் சட்டம், முதலாளித்துவ சமுதாயத்துக்குரிய முன்மாதியான சட்டத் தொகுப்பாகும்.

17 1831-இல் காமன்ஸ் சபையால் நிறைவேற்றப்பட்டு, 1832 ஜூனில் பிரபுக்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வாக்குரிமைச் சீர்திருத்தச் சட்டம். நிலவுடைமைப் பிரபுக்களின் அரசியல் ஏகபோகத்துக்கு எதிராக அமைந்தது. தொழில்துறை முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடம் கிடைத்தது. ஆனால், இந்தச் சட்டத்தை நிறைவேற்றப் போராடிய பாட்டாளி வர்க்கத்தினரும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரும் ஏமாற்றப்பட்டனர். அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை.

18 நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, 1815-இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, தானிய இறக்குமதிகளுக்குக் கடுமையான சுங்க வரிகள் விதிக்கப்பட்டன. ஏழை மக்கள் மட்டுமின்றி தொழில்துறை முதலாளிகளும் பாதிக்கப்பட்டனர். உற்பத்திச் செலவு அதிகரித்தது. உள்நாட்டுச் சந்தை குறுகியது. அயல்நாட்டு வணிக வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தது. ஆங்கிலேய முதலாளிகள் தானியச் சட்ட எதிர்ப்புக் கழகத்தை நிறுவிக் கிளர்ச்சி செய்தனர். அதன் விளைவாக, 1846-இல் இச்சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

Image result for ancient manchester labour

19 மான்செஸ்டர் ஆலை முதலாளிகளான கேப்டன், பிரைட் ஆகியோர் 1838-இல் தொழில்துறை முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு நிறுவிய தானியச் சட்ட எதிர்ப்புக் கழகத்தைக் குறிக்கிறது.

20 1775-83 ஆண்டுகளில் ஆங்கிலேயரின் வட அமெரிக்கக் காலனிகள் சுதந்திரத்துக்காகப் போராடிய போது வட அமெரிக்கர்களுக்கு ஆங்கிலேயர் சூட்டிய கேலியான புனைப்பெயர்.

21 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிறிஸ்துவ புரொட்டெஸ்டன்ட் மதத்தில் தோன்றிய போக்கு. அக்காலத்தில் வட அமெரிக்காவில் வெகுவாகப் பரவியது.

22 தொழில் விவகாரங்களிலுங்கூட, தேசியவெறி சார்ந்த இறுமாப்பு, ஏமாற்றம் தரும் ஆலோசகனே ஆகும். வெகு அண்மைக்காலம்வரை, சராசரி ஆங்கில ஆலை முதலாளி, ஆங்கிலேயர் ஒருவர் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி பேசுவதையும் மதிப்புக் குறைவாகவே கருதினார். இங்கிலாந்தில் குடியேறிய “பாவப் பிறவிகளான” வெளிநாட்டினர், இவருடைய உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளில் விற்பனை செய்யும் தொல்லையிலிருந்து இவரை விடுவித்தது குறித்து ஓரளவு பெருமையே பட்டுக் கொண்டார். பெருமளவு ஜெர்மானியர்களான இந்த வெளிநாட்டினர் ஏற்றுமதிகளையும் இறக்குமதிகளையும் உள்ளடக்கிய இங்கிலந்துடைய வெளிநாட்டு வணிகத்தின் மிகப் பெரும்பகுதியை இவ்விதம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை இந்த ஆங்கில முதலாளி ஒருபோதும் கவனிக்கவே இல்லை. ஆங்கிலேயரின் நேரடியான வெளிநாட்டு வணிகம் ஏறத்தாழ முழு அளவுக்கு, காலனிகள், சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, தென்அமெரிக்கா ஆகிய வரம்புக்குள் அடங்கி விட்டதையும் கவனிக்கவே இல்லை. அதேபோல, இந்த ஜெர்மானியர்கள் வெளிநாடுகளில் பிற ஜெர்மானியர்களுடன்தான் வணிகம் புரிந்தனர் என்பதையும், உலகம் முழுவதும் வணிகக் காலனிகளின் முழுமையான பிணைய அமைப்பை இவர்கள் படிப்படியாக நிறுவிக் கொண்டனர் என்பதையும் இவர் கவனிக்கவே இல்லை.

ஆனால், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மனி ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்வதில் முனைப்போடு இறங்கியபோது, இந்தப் பிணைய அமைப்பு, ஒரு தானிய ஏற்றுமதி நாடு, மிகக் குறுகிய காலத்துக்குள் முதல்தரத் தொழில்துறை நாடாகப் பரிணமித்ததில் உதவி புரிந்தது. பிறகு, ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்து ஆலை முதலாளி பீதியுற்று, தன் வாடிக்கையாளர்களை ஏன் தன்னால் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை எனத் தன்னுடைய தூதர்களையும் கான்சல்களையும் வினவினார். அவருக்குக் கிடைத்த ஒருமித்த பதில்: (1) உங்கள் வாடிக்கையாளரின் மொழியை நீங்கள் கற்றுக் கொள்வதில்லை. ஆனால், உங்கள் மொழியில் அவர் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். (2) உங்கள் வாடிக்கையாளரின் தேவைகள், பழக்கவழக்கங்கள், விருப்புவெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க நீங்கள் முயல்வதுகூட இல்லை. ஆனால், உங்கள் ஆங்கிலத் தேவைகள், பிறவற்றுக்கும் அவர் ஒத்துப்போக வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். [எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

23 விக் கட்சி, டோரிக் கட்சி ஆகியவை 1670-80 ஆண்டுகளில் இங்கிலாந்தில் உருவான இரு அரசியல் கட்சிகள். நிதி, வணிகத் துறை முதலாளிகள், முதலாளித்துவப் பிரபுக் குலத்தினர் ஆகியோரின் நலன்களை வெளியிட்ட விக் கட்சி, பின்னாளில் ஒரு புதிய மிதவாதக் கட்சியாக அமைந்தது. பெரிய நிலப்பிரபுக்கள், மதச்சபையின் உயர் குருமார்கள் ஆகியோரின் கட்சியான டோரிக் கட்சி பின்னாளில் கன்செர்வேட்டிவ் கட்சியாக மாறியது.

24 1870-90 ஆண்டுகளில் ஜெர்மன் முதலாளித்துவ சித்தாந்தத்தில் நிலவிய ஒரு போக்கு. ஜெர்மன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இதன் தத்துவ ஆசிரியர்கள். கத்தேடெர் என்பது ஜெர்மன் மொழியில் பல்கலைக்கழகப் பேராசிரியப் பீடங்களைக் குறிக்கும். அரசானது வர்க்கங்களுக்கு மேம்பட்டது என்றும், அதனால் பகைமை கொண்ட வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்க முடியும் என்றும், முதலாளித்துவ நலன்களைப் பாதிக்காமலே சோஷலிசத்தைப் படைக்க முடியும் என்றும் இவர்கள் கூறினர். பொதுவாக, தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தைத் திசைதிருப்புவதே இவர்களின் வேலைத் திட்டமாகும்.

Image result for கத்தோலிக்க சடங்கு

25 இங்கிலாந்தில் ஆங்கிலேய மதச்சபையில் 1830-களில் தோன்றிய போக்கு. கத்தோலிக்கச் சடங்குகளையும், கத்தோலிக்க ஐதீகங்கள் சிலவற்றையும் மீண்டும் புகுத்த வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.

26 பிரெஞ்சுப் புரட்சி பற்றிய அந்த வாசகம் வருமாறு: “உரிமை என்னும் சட்டத்தின் கருத்துருவான சிந்தனை, திடுமென தன்னை வெளிக்காட்டிக் கொண்டது. உரிமையின்மை எனும் பழைய கட்டுமானத்தால் இதை எதிர்த்து நிற்க முடியவில்லை. எனவே உரிமை என்னும் இந்தக் கருத்தோட்டத்தின்படி இப்போது ஓர் அரசமைப்புச் சட்டம் நிறுவப்பட்டிருக்கிறது, இனி அனைத்தும் இதையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அண்டத்தில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றிவரும் காலம்தொட்டு, மனிதன் தன் தலையின் மீது, அதாவது எண்ணத்தின் மீது நின்று, அந்தப் படிமத்துக்கு ஏற்ப எதார்த்தத்தைக் கட்டியமைக்கும் ஒரு காட்சியினை இதற்குமுன் எப்போதும் கண்டதே இல்லை. அனக்சாகோரஸ், Nous அதாவது பகுத்தறிவே உலகை ஆளுகிறது என்று முதன்முதலில் கூறினார். ஆனால், இப்போது முதன்முறையாக மனிதன், மன ரீதியான எதார்த்தத்தை எண்ணமே ஆள வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டான். இது ஓர் உன்னதமான அறிவு விடியலாகத் திகழ்ந்தது. சிந்திக்கத் தெரிந்த அனைவரும் இந்தப் புனித நாளைக் கொண்டாடுவதில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். ஒரு பெருமித உணர்வு அந்நாட்களில் மனிதர்களை ஆட்கொண்டது. உலகத்தோடு தெய்வீகக் கோட்பாட்டின் இணக்கம் தற்போது ஏற்பட்டுவிட்டது போன்று, பகுத்தறிவின் உற்சாகம் உலகமெங்கும் வியாபித்து நின்றது” (ஹெகல், வரலாற்றின் தத்துவம், 1840, பக்கம் 535). – காலஞ்சென்ற பேராசிரியர் ஹெகலின், சீர்குலைவு உண்டாக்கும், பொது அபாயம் விளைவிக்கும் இத்தகைய போதனைகளுக்கு எதிராக, சோஷலிஸ்டு – எதிர்ப்புச் சட்டத்தை உடனே செயல்படச் செய்வதற்கு இதுதான் சரியான தருணம் அல்லவா? [எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

27 ரூசோவின் தத்துவப்படி, ஆதியில் சமத்துவமாய் வாழ்ந்த மக்களிடையே, தனியார் சொத்துரிமை தோன்றியபின் ஏற்ற தாழ்வுகள் உருவாயின. அதன்பின் சமுதாய ஒப்பந்த அடிப்படையில் அரசுக்கு மாறினர். அரசியல் ஏற்ற தாழ்வு வளரவே, சமுதாய ஒப்பந்தம் மீறப்பட்டு, உரிமையற்ற நிலை தலைதூக்கியது. ஒரு புதிய சமுதாய ஒப்பந்த அடிப்படையில், சிந்தனையின் ஆட்சிக்கு உகந்த ஓர் அரசை நிறுவுவதே இந்த நிலைக்கு மாற்று ஆகும்.

28 16-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும் தோன்றிய சமயப் பிரிவினர். குழந்தைப்பருவத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் அறிவு வளர்ச்சி பெற்ற பிறகு மறுபடியும் ஞானஸ்நானம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியவர்கள். இவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் ஆவர். 1524-25 ஆண்டுகளில் நடைபெற்ற விவசாயிகளின் போரில் தாமஸ் முண்ட்சர் தலைமையில் போராடினர்.

29 17-ஆம் நூற்றாண்டின் ஆங்கில முதலாளித்துவப் புரட்சியில் தீவிர இடதுசாரிப் போக்கின் பிரதிநிதிகள். நகர்ப்புற, நாட்டுப்புற மக்களில் ஏழைப் பகுதியினரின் நலன்களை வெளியிட்டனர். தனியார் நிலவுடைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பது இவர்கள் கருத்து. புராதனச் சமத்துவக் கம்யூனிசக் கருத்துகளைப் பிரசாரம் செய்தனர். பொது நிலங்களைக் கூட்டாக உழுது பயிரிடுவதன் மூலம் நடைமுறையில் இக்கருத்துகளைச் செயல்படுத்த முயன்றனர்.

30 கற்பனாவாதக் கம்யூனிசத்தை எடுத்துரைத்தவர்களின் நூல்களான, தாமஸ் மோரின் உட்டோப்பியா (1516), தாம்மசா கம்பனேல்லாவின் சூரிய நகரம் (1623) ஆகியவற்றை எங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்.

31 ஜாக்கொபின்வாதிகளின் புரட்சிகர ஜனநாயகச் சர்வாதிகாரம் நடைபெற்ற காலம் (1793 ஜுனிலிருந்து 1794 ஜுலை வரை). அப்போது பெரு முதலாளித்துவ அரசியல் பிரிவினரான ஜிரோண்டிஸ்டுகளும் முடியாட்சிவாதிகளும் தொடுத்த எதிர்ப்புரட்சிப் பயங்கரத்துக்கு ஜாக்கொபின்வாதிகள் புரட்சிகர பயங்கரத்தின் மூலம் எதிரடி கொடுத்தனர்.

32 நெறியாளர் ஐவர் அடங்கிய குழு. ஆண்டுக்கு ஒருவர் வீதம் இவர்கள் மறுதேர்வு செய்யப்பட்டனர். 1794-இல் ஜாக்கொபின்வாதிகளின் புரட்சிகர சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்ட பின் 1795-ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டப்படி இந்த நெறியாளர் குழு ஃபிரன்சின் செயலாண்மை அதிகாரத்தை ஏற்றது. ஜனநாயக சக்திகளுக்கு எதிரான பயங்கர ஆட்சியை ஆதரித்தது. பெரு முதலாளிகளின் நலன்களுக்காகச் செயல்பட்டது. 1799-இல் போனபார்ட்டிஸ்டுகள் இவர்களின் ஆட்சியைக் கவிழ்த்தனர்.

33 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஃபிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சியின் முழக்கமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை எங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்.

34 ஸ்காட்லாந்து நகராகிய லானார்க்குக்கு அருகே 1784-இல் நிறுவப்பட்ட பருத்தி ஆலையும் கிராமமும்.

Image result for napoleon

35 பிரான்சுக்கு எதிரான ஆறாவது நேசக்கூட்டைச் சேர்ந்த ருஷ்யா, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரஷ்யா முதலிய நாடுகளின் சேனைகள் 1814 மார்ச் 31-இல் பாரிஸ் நகருக்குள் புகுந்தன. முதலாவது நெப்போலியனின் பேரரசு வீழ்ந்தது. நெப்போலியன் முடியிழந்து, எல்பாத் தீவுக்குக் கடத்தப்பட்டார். ஃபிரான்சில் பூர்போன் முடியரசு மீண்டும் ஏற்பட்டது. எல்பாத் தீவுக்குக் கடத்தப்பட்ட முதலாவது நெப்போலியன் 1815 மார்ச் 20-இல் பாரிசுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து அவருடைய பேரரசு மீண்டும் உயிர் பெற்றது. அன்று முதல் 1815 ஜுன் 22-இல் இரண்டாவது தடவை அவர் முடிதுறந்தது வரை நூறு நாட்கள் நடைபெற்ற போர் நூறுநாள் போர் எனப் பெயர்பெற்றது.

36 வாட்டர்லூவில் (பெல்ஜியம்) 1815 ஜுன் 18-இல் முதலாவது நெப்போலியனுடைய படை, வெல்லிங்டனின் தலைமையிருந்த கூட்டு ஆங்கில-டச்சுப் படைகளாலும் புளூஹர் தலைமை தாங்கிய பிரஸ்ஸியப் படையாலும் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் போர் 1815-ஆம் ஆண்டுப் போர் நிகழ்ச்சிகளில் தீர்மானகரமான பங்காற்றியது. அது ஃபிரான்சுக்கு எதிரான ஏழாவது கூட்டணிக்கு (இங்கிலாந்து, ருஷ்யா, ஆஸ்திரியா, பிரஷ்யா, ஸ்வீடன், ஸ்பெயின் முதலிய நாடுகளின் கூட்டு) முழு வெற்றிக்கும், முதலாவது நெப்போலியனுடைய பேரரசின் தகர்வுக்கும் காரணம் ஆயிற்று.

37 ஓவனின் முன்முயற்சியால் 1815 ஜூனில் நாடாளுமன்றத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது 1819 ஜூலையில்தான் வெட்டிக் குறுக்கப்பட்ட வடிவில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. பஞ்சாலைகளில் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ள இச்சட்டம் தடை விதித்தது. 18 வயத்துக்கு உட்பட்டோரின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என வரம்பு விதித்தது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் ஒன்றரை மணிநேரம் இரண்டு இடைவேளைகள் விடவேண்டும் என்றது.

38 1833 அக்டோபரில் லண்டனில், கூட்டுறவுக் கழகங்கள், தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் நடைபெற்றது. ஓவன் இதற்குத் தலைமை வகித்தார். இதில், இங்கிலாந்து, அயர்லாந்து தேசியக் கூட்டுத் தொழிற்சங்கம் நிறுவப்பட்டது. இத் தொழிற்சங்கம் உற்பத்தி நிர்வாகத்தைத் தானே ஏற்றுச் சமாதான வழிகளில் சமுதாயத்தை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. முதலாளித்துவ சமூகமும் அரசும் கடுமையாக எதிர்த்ததால் 1834 ஆகஸ்டில் இந்த நிறுவனம் சிதைந்துவிட்டது.

39 இங்கிலாந்தின் பல நகரங்களில் தொழிலாளர்களின் கூட்டுறவுக் கழகங்கள் ஏற்படுத்திய நியாய உழைப்புப் பரிவர்த்தனைச் சந்தைகளை (Equitable Labour Exchange Bazaars) எங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார். முதலாவது சந்தையை 1832-இல் ஓவன் நிறுவினார். முதலாளித்துவச் சரக்குப் பொருளாதாரச் சூழ்நிலையில் பணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்து கொள்ளும் இம்முயற்சி வெகுவிரைவில் தோல்வியடைந்தது.

40 1848 – 49 ஆண்டுகளில் நடைபெற்ற புரட்சியின்போது புரூதோன் பரிவர்த்தனை வங்கியை அமைக்க முயன்றார். அவருடைய மக்கள் வங்கி 1849 ஜனவரி 31-இல் பாரிசில் அமைக்கப்பட்டது. முறையாக செயல்படத் தொடங்கும் முன்னரே, அது தோல்வியடைந்து ஏப்ரல் தொடக்கத்திலேயே மூடப்பட்டது.

41 அலெக்சாண்டிரியா காலகட்டம் என்பது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை ஆகும். எகிப்திய நகரமான அலெக்சாண்டிரியாவின் பெயரில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இக்கால கட்டத்தில் கணிதம், எந்திரவியல் (முறையே யூக்லிட், ஆர்க்கிமிடீஸ் ஆகியோர்), புவியியல், வானியல், உடலியல், உடல்கூறியல் போன்ற பல அறிவியல் துறைகள் வளர்ச்சி கண்டன.

42 கைவசப்படுத்தும் முறை அப்படியே இருந்தாலும்கூட, மேலே விவரிக்கப்பட்ட மாறுதல்களால், உற்பத்தியில் ஏற்படும் அதே அளவுக்குக் கைவசப்படுத்தலின் தன்மையிலும் புரட்சிகர மாற்றம் ஏற்படுகிறது என்பதை இது தொடர்பாகச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் நான் என்சொந்த உற்பத்திப் பொருளைக் என்னுடையதாகக் கைவசப்படுத்திக் கொள்கிறேனா அல்லது பிறர் ஒருவரின் உற்பத்திப் பொருளை என்னுடையதாகக் கைவசப்படுத்திக் கொள்கிறேனா என்பது முற்றிலும் வேறான விஷயம். இடையில் இதையும் கவனிக்கவும்: ஒட்டுமொத்த முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கருவடிவில் கொண்டுள்ள கூலியுழைப்பு மிகவும் பழமையானது. அடிமை உழைப்பின் கூடவே, பல நூற்றாண்டு காலமாக, விட்டுவிட்டும் ஆங்காங்கேயும் இது இருந்து வந்துள்ளது. ஆனால், தேவையான வரலாற்று முன்னிபந்தனைகள் நிறைவேறும்போது மட்டுமே, இந்தக் கரு தக்கவாறு முதலாளித்துவ உற்பத்தி முறையாக வளர முடிந்தது. [எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

Image result for columbus

43 1492-இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும், 1498-இல் வாஸ்கோ-டா-காமா இந்தியாவுக்குக் கடல்வழியைக் கண்டுபிடித்ததும் இவற்றில் மிகவும் முக்கியமானவை.

44 இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் வணிகத்தில் ஆதிக்கம் பெறவும், காலனிச் சந்தைகளைப் பிடிக்கவும், பிரதான ஐரோப்பிய நாடுகளிடையே 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. தொடக்கத்தில் இங்கிலாந்தும் ஹாலந்தும் பிரதான போட்டி நாடுகளாக இருந்தன. 1652-54, 1664-67, 1672-74 ஆண்டுகளில் இந்த நாடுகளிடையே முக்கிய வணிகப் போர்கள் நடந்தன. பிறகு இங்கிலாந்துக்கும் ஃபிரான்சுக்கும் கடும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போர்கள் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று, 18-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் அனேகமாக உலக வணிகம் அனைத்தையும் தன் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டது.

45 இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, சொனென்ஸ்சின் அண்ட் கோ, பக்கம்.64. [எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

46 “வேண்டியிருக்கும்” என்று நான் கூறுகிறேன். ஏனெனில், உற்பத்திச் சாதனங்களும், வினியோகச் சாதனங்களும் கூட்டுப் பங்குக் குழுமங்களால் மேற்கொள்ளப்படும் மேலாண்மையின் வடிவத்தை நடைமுறையில் விஞ்சி வளர்ந்துவிடுகிறது. அப்போதுதான், அதன் காரணமாக, அச்சாதனங்களை அரசு தானே எடுத்துக் கொள்வது பொருளாதார ரீதியாகத் தவிர்க்க முடியாததாக ஆகிறது. அப்போதுதான், அப்போது மட்டும்தான் – இதை நிறைவேற்றுவது இன்றைய அரசாகவே இருந்தாலும்கூட – அது ஒரு பொருளாதார முன்னேற்றமாக இருக்கும். உற்பத்திச் சக்திகள் அனைத்தையும் சமுதாயம் தானே எடுத்துக் கொள்வதற்கு முன்னோட்டமாக அமையும் இன்னொரு படிநிலையை எட்டியதாகவும் இருக்கும். ஆனால், அண்மைக் காலமாகவே, பிஸ்மார்க் தொழில்துறை நிறுவனங்களை அரசுடைமை ஆக்க முனைந்தது முதலாகவே, ஒருவகையான போலி சோஷலிசம் முளைத்திருக்கிறது. அது அடிக்கடி, அதிக ஆரவாரமின்றி, அனைத்து அரசுடைமையுமே, பிஸ்மார்க்கிய வகையானதுகூட, சோஷலிச வகைப்பட்டது என்று அறிவிக்கும் அளவுக்கு ஒருவித அற்பவாதமாக இழிந்து போகிறது. புகையிலைத் தொழிலை அரசு எடுத்துக் கொள்வது சோஷலிசத் தன்மை வாய்ந்தது எனில், நெப்போலியனையும் மெட்டர்நிக்கையும் நிச்சயமாக சோஷலிசத்தின் நிறுவனர்கள் வரிசையில் சேர்த்தாக வேண்டும்.

பெல்ஜிய அரசோ, மிகச் சாதாரண அரசியல் நிதியியல் காரணங்களுக்காகத் தன்னுடைய பிரதான ரயில் பாதைகளைத் தானே கட்டியமைத்தது. பிஸ்மார்க்கோ பிரதான பிரஸ்ஸிய ரயில் பாதைகளை, எவ்விதப் பொருளாதார நிர்ப்பந்தமும் இன்றி, அரசுடைமை ஆக்கினார். ரயில் பாதைகளை அரசின் கையில் வைத்துக் கொண்டால் போர் ஏற்படும் காலத்தில், நல்லதுதானே என்பதற்காகவும், ரயில்வே ஊழியர்களை அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மந்தைகளாய் வளர்த்தெடுப்பதற்காகவும், முக்கியமாக, நாடாளுமன்றத்துக்கு வாக்குகளுக்கு உட்படாத, ஒரு புதிய வருவாய் ஆதாரத்தைத் தனக்காக உருவாக்கிக் கொள்வதற்காவும் பிஸ்மார்க் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். எனவே, இது எந்தப் பொருளிலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ, உணர்வு பூர்வமாகவோ, ஏதேச்சையாகவோ, ஒரு சோஷலிச நடவடிக்கை ஆகிவிடாது. அப்படிப் பார்த்தால், [மன்னருக்குச் சொந்தமான] ராயல் கடல்சார் நிறுவனமும், ராயல் பீங்கான் தொழிற்சாலையும், படைகளின் பட்டாளத்துத் தையல் துறையும்கூட சோஷலிச நிறுவனங்கள் ஆகிவிடும். ஏன், மூன்றாம் ஃபிரெடெரிக் வில்லியம் ஆட்சியின்போது, விபச்சார விடுதிகளை அரசு எடுத்துக் கொள்ள ஒரு கபட வேடதாரி அக்கறையுடன் பரிந்துரைத்த நடவடிக்கையும்கூட [சோஷலிச நடவடிக்கை ஆகிவிடாதா]! [எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு]

47 சுதந்திர அரசு என்பது 1870-ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் செயல்திட்டத்தில் இடம்பெற்ற கோரிக்கை முழக்கம் ஆகும்.

48 முதலாளித்துவ நெருக்கடிக்கு இடையேயும், நவீன உற்பத்திச் சாதனங்களின் பிரம்மாண்ட விரிவாக்கச் சக்தியைப் பற்றிக் குத்துமதிப்பாகத் தெரிந்து கொள்ள ஒருசில புள்ளி விவரங்கள் உதவலாம். திரு.கிஃபன் குறிப்பிட்டுள்ளபடி, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மொத்தச் செல்வவளம், முழுமையாக்கப்பட்ட தொகையில்,

1814-இல் 220,00,00,000 பவுண்டுகள்

1865-இல் 610,00,00,000 பவுண்டுகள்

1875-இல் 850,00,00,000 பவுண்டுகள்

ஒரு நெருக்கடியின்போது, உற்பத்திச் சாதனங்களும் உற்பத்திப் பொருள்களும் விரயமாக்கப்படுவதற்கு ஓர் எடுத்துக்காட்டு: 1875-78 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடியின்போது ஜெர்மன் இரும்புத் தொழிலில் மட்டும் ஏற்பட்ட மொத்த இழப்பு, இரண்டாவது தொழில்துறை காங்கிரசில் (பெர்லின், பிப்ரவரி 21, 1878) தரப்பட்ட கணக்குப்படி, 22,750,000 பவுண்டுகளாகும். [எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

-தமிழாக்கம்: மு.சிவலிங்கம்