Farhan Akhtar in Bhaag Milkha Bhaag Bollywood Movie Review. Book Day Website And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

‘ஓடு மில்கா ஓடு’ (Bhaag Milkha Bhaa) | இரா. இரமணன்



அண்மையில் மறைந்த தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை குறித்த இந்தி திரைப்படம். மில்கா சிங்கும் அவரது மகளும் இணைந்து எழுதிய ‘The Race of My Life’ என்கிற தன் வரலாறு புத்தகத்தால் கவரப்பட்டு எடுக்கப்பட்ட படம். 2013இல் ரூ41கோடி செலவில் எடுக்கப்பட்டு  ரூ100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய படமாம். புத்தகத்தைப் படமாக்கும் உரிமைக்கு ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்ட மில்கா சிங், திரைப்படத்தின் லாபத்தில் ஒரு பங்கைத் தனது ‘மில்கா சிங் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அளித்தார். இந்த அறக்கட்டளை 2003இல் வசதியில்லாத ஏழை விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.

திரைக்கதையை பிரசூன் ஜோஷி எழுதி ரகேய்ஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கியுள்ளார். ஃபர்ஹன் அக்தர் மில்கா சிங்காக நடித்துள்ளார். படம் 1960 ரோம் ஒலிம்பிக் போட்டியில் தொடங்குகிறது. அதில் முதல் நபராக ஓடிக் கொண்டிருக்கும் மில்கா சிங், அவரது பயிற்சியாளர்’ ஓடு மில்கா ஓடு’ என்று கத்தியவுடன் ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறார். அந்த ஒரு கணத்தில் மற்றவர்கள் அவரை முந்தி செல்ல, அவர் நான்காவதாக வருகிறார். ஏன் அவர் திரும்பிப் பார்த்தார் என்பதை விவரிக்கிறது படம்.

மில்கா சிங் இன்றைய பாகிஸ்தானில் மூல்தான் என்கிற நகருக்கு அருகிலுள்ள கிராமத்தில் சீக்கிய குடும்பத்தில் பிறக்கிறார். நாடு இரண்டாகப் பிரிகிறது. அவரது குடும்பம் மொத்தமும் அழிக்கப்படுகிறது.அவரும் அவரது சகோதரியும் தப்பி டெல்லியில் அகதிகள் முகாமில் வசிக்கிறார்கள். மில்கா சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறான். அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவன் திருட்டை விட்டு கவுரவமான தொழில் செய்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என்கிறாள். ராணுவத்தில் சேர்கிறான். அங்கு ஓடுவதில் பயிற்சி பெற்று தேசிய ஓட்டப் பந்தயத்திற்குத் தேர்வாகிறான். 400 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக்கிற்கும் தேர்வாகிறான். ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒலிம்பிக் பந்தயத்தின் முதல் நாள் ஒரு பெண்ணுடன் கழித்ததால் தேர்வாகாமல் போகிறான். மனமுடைந்த மில்கா உலக சாதனையான 45.9 நொடிகளை விஞ்சுவதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறான். அந்த சாதனையை முறியடிப்பதோடு பல பன்னாட்டுப் போட்டிகளில் முதலாவதாக வருகிறான். ஆனால் அவனுடைய காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிடுகிறது.



இந்தியா பாகிஸ்தான் இடையே நட்புறவைப் பலப்படுத்தும் ஒரு முயற்சியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மில்கா சிங் அதில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நேரு கேட்டுக்கொள்கிறார். அவன் முதலில் மறுத்தாலும் இறுதியில் ஒப்புக்கொள்கிறான். பாகிஸ்தான் செல்லும் மில்கா தன்னுடைய கிராமத்திற்குச் சென்று பார்க்கிறான்.அவனுடைய ஒரு நண்பன் மட்டும் இஸ்லாமியராக மாறி அங்கேயே வசித்து வருகிறான். தன் குடும்பம் அழிக்கப்பட்டதையும் தான் மட்டும் தப்பி ஓடியதையும் அவன் நினைத்துப் பார்க்கிறான். இந்திய பாகிஸ்தான் நட்பு விளையாட்டுப் போட்டியில் அவனுடைய போட்டியாளரான காலிக்கும் பயிற்சியாளரும் அவனை மைதானத்தில் அவமதிக்கின்றனர். இருந்தாலும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் காலிக்கை மில்கா வெல்கிறான். பாகிஸ்தான் பிரதமர் அவனுக்கு ‘பறக்கும் சிங்’ (flying singh) என்ற பட்டத்தை அளிக்கிறார். ஓட்டத்தின் முடிவில் ‘விக்டரி லேப்’ எனும் வெற்றி ஓட்டத்தின்போது அவனுடன் சிறு வயது மில்காவும் ஓடிவருவதாகக் காட்டப்பட்டு படம் முடிகிறது.

படத்தில் பல சிறப்புகளைப் பார்க்கலாம். மில்காவை ஒரு காவிய நாயகனாகக் காட்டாமல் அவனுடைய பலம் மற்றும் பலவீனங்களுடன் காட்டியிருக்கிறார்கள். மூல்தான் கிராம சூழல், சிறுவர்கள் படிக்கும் முறை, கேலிகள், பள்ளிக்குப் போகும் ஆற்று மணலில் ஓடுவதிலிருந்து தொடங்கி மில்காவின் நிற்காத ஓட்டம், ராணுவ முகாம்களின் கடுமைக்கு நடுவில் வீரர்கள் ஆடிப் பாடி மகிழ்வது என ரசிப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. மில்காவின் காதல், அதன் சோகமான முடிவு படத்திற்கு கனத்தை அளிக்கிறது. அதே சமயம் இனிமையான பாடல்கள், பஞ்சாபியர்களுக்கே உரித்தான ஆடல் உற்சாகத்தைக் கொடுக்கிறது.

சக வீரரான ராணா பொறாமையால் மில்காவை அடித்து காலை உடைப்பது, அந்தக் காயத்துடன் மில்கா ஓடி வெற்றி பெறுவது சற்று சினிமாத்தனமாக இருக்கிறது. காலிக்கும் அவருடைய பயிற்சியாளரும் மில்காவை அவமானப்படுத்தும் நிகழ்வு இந்திய-பாகிஸ்தான் பகை, தேசிய வெறி ஆகியவற்றின் விளிம்பில் ஊசலாடுகிறது. ஆனால் பாகிஸ்தான் அதிபர் மில்காவை பாராட்டுவது அதைச் சமன் செய்துவிடுகிறது.

ஒலிம்பிக்கில் தேர்வாகாததற்கு தான்தான் காரணமா என்று ஸ்டெல்லா கேட்கும்போது இல்லை என்று சொல்லி அவளிடம் கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறான் மில்கா. பயிற்சியாளர்கள் மில்காவிடம் காட்டும் அக்கறை, அன்பு; தன் காதலி ஏன் இன்னொருவனை மணக்கச் சம்மதித்தாள் என்று கேட்கும்போது நமது சமுதாயத்தில் பெண்களின் விருப்பத்தை எங்கே கேட்கிறோம் என்று அவனுடைய நண்பன் பதில் சொல்கிறான். இவையெல்லாம் சேர்ந்து இது ஒரு விளையாட்டுப் படம் அல்ல; மனித ஆன்ம உணர்வைக் குறித்த படம் என்று அதன் இயக்குநர் கூறுவது சரி என்றே தோன்றுகிறது.

இரா. இரமணன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *