2019இல் தயாரிக்கப்பட்டு கொரோனா தொற்றால் 2020இல் வெளியிட முடியாமல் இந்த வருடம் (2021) ஜூலை மாதம் வெளியாகியுள்ள இந்திப் படம். ‘சார்பட்டா பரம்பரை’ போல் இதுவும் குத்துச் சண்டை தொடர்பான படம். ‘பாக் மில்கா பாக்’ படம் இயக்கிய ரகேய்ஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவும், நடிகர் பர்ஹான் அக்தரும் மீண்டும் இணைந்துள்ளனர். பரேஷ் ராவல், மிருணாள் தாக்கூர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தாய் தந்தையரை இழந்த ஒரு இஸ்லாமிய இளைஞன் இந்து மதத்தை சேர்ந்த தன் காதலியின் விருப்பத்திற்காக குத்துச்சண்டை பயிற்சி பெற்று தேசிய அளவில் முன்னேறுகிறான். அவளும் தந்தையின் விருப்பத்தை மீறி அவனை திருமணம் செய்துகொள்கிறாள். வேறு வேறு மதத்தினர் என்பதால் வீடு கிடைப்பதில்லை. அவளுடன் சேர்ந்து வாழ வீடு வேண்டுமென்பதற்காக அவன் தேசியப் போட்டியின் போது தரகர் ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு எதிராளியிடம் வேண்டுமென்றே தோற்றுப்போகிறான். இது வெளியில் தெரிந்து ஐந்து வருடங்களுக்கு அவன் போட்டியிட தடை செய்யப்படுகிறான். ஒரு குண்டு வெடிப்பில் அவள் இறந்து விடுகிறாள். அவளின் விருப்பத்திற்காக மீண்டும் பயிற்சிகள் எடுத்து வெற்றி பெறுகிறான்.
சார்பட்டாவையும் இதையும் ஒப்பிட்டால் அது குத்துச்சண்டை குறித்தும் ஒரு பகுதி மக்கள் வாழ்க்கை குறித்தும் நுணுக்கமான படம். இது இரு காதல் உள்ளங்கள் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதை காட்டும் படம். இதிலும் குத்துச்சண்டை பயிற்சிகள், நுணுக்கங்கள், அதிலுள்ள அரசியல் ஆகியவை காட்டப்பட்டாலும் அவற்றைவிட காதல், குடும்பம் ஆகியவை அதிக இடத்தை எடுத்துக்கொள்கின்றன. சார்பட்டாவில் ஜாதி பின்புலமாகக் காட்டப்படுகிறது; இதில் மதப் பிரச்சினை ஓங்கி நிற்கின்றது. சார்பட்டாவில் பாத்திரங்கள் இயல்பானதாக வருவதுபோல இதிலும் கதாநாயகியின் தோழியான நர்ஸ், கதாநாயகனின் தோழன், நாயகனை வளர்த்த ஜாபார் பாய் ஆகியோர் ஸ்டீரியோ டைப் எனும் வார்ப்பட மாதிரிகளாக இல்லாமல் இயல்பானவர்களாக உள்ளனர். சார்பட்டா கதை 70களில் நடப்பதால் அதைக் குறிக்கும் அவசர நிலைப் பிரகடனம், அரசியல் மாற்றங்கள் போன்ற வரலாற்று நிகழ்வுகளும் இந்தப் படத்தில் 90களில் நடந்த குண்டு வெடிப்புகள், இந்து முஸ்லிம் பகைமை ஆகியவை பின்னணியாக உள்ளன. லவ் ஜிகாத் என்கிற வார்த்தை 90களிலேயே வந்துவிட்டதா தெரியவில்லை. இந்தப் படத்தில் பயன்படுத்தப்படுகிறது.
டூபானின் பலம் காதலை மிக நயமாகக் காட்டியிருப்பது. இரண்டாவது ஒரு பெண்ணால் சமூக நிகழ்வுகளையும் தனிநபர் ஆளுமைகளையும் பிரித்து புரிந்துகொள்ள முடியும் என்று காட்டியிருப்பது. பலவீனம் வீட்டிற்கு முன்பணம் கொடுப்பதற்காக ஒரு குத்துச்சண்டை வீரன் விளையாட்டு உணர்வுகளுக்கு மாறாக குறுக்குவழியில் பணம் பெற்றுக்கொள்வது. இந்த இடத்தில் காதலியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற தீவிரமான உணர்வு அவனது நேர்மையை வீழ்த்திவிடுகிறது. கிட்டத்தட்ட மில்கா சிங் ஒலிம்பிக் பந்தயத்திற்கு முதல் நாள் பெண்ணுடன் இரவைக் கழித்து அதனால் தேர்வாகும் வாய்ப்பை இழப்பது போல.
தமிழ் திரைப்படம் பம்பாய் போல இதிலும் இஸ்லாமியர்களை குறை சொல்லும் தொனி உள்ளது. அசீசும் அனன்யாவும் திருமணம் செய்துகொண்டதும் அங்கு குடியிருக்கும் இஸ்லாமியர்கள் அவளை மதம் மாற சொல்கிறார்கள். இந்து மதத்தினர் குடியிருப்பில் அவன் இஸ்லாமியர் என்பதை சொல்லாமல் மறைக்க வேண்டும் என்கிறார் வீட்டுத் தரகர். இரண்டிற்கும் அவர்கள் உடன்படவில்லை என்பது வேறு விஷயம். குத்துச்சண்டை பயிற்சியாளர் நானா எனும் நாராயண பிரபு தீவிரமான இந்துமதப் பற்றாளர். முஸ்லிம்கள் மீது வெறுப்புக்கொண்டவர். அவருடைய மனைவி ஒரு குண்டு வெடிப்பில் இறந்தது ஒரு காரணம். ஆனால் அசீஸ் அலியின் விடா முயற்சியைக் கண்டு அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக்கொள்கிறார் அவரது குழு உறுப்பினர்கள் வெல்லும்போது ‘ஜெய் ஹனுமான்’ என்று முழக்கமிடுகின்றனர். இதை ஒரு பக்கம் காட்டிவிட்டு இன்னொரு பக்கம் நாயகன் அசீஸ் சண்டையிடும்போது இஸ்லாமியர்கள் அவனுக்காக தொழுவதுபோல் காட்டப்படுகிறது.
நானா பிரபு இறுதிக் காட்சியில் தனது மகளுக்காகவும் பேத்திக்காகவும் அசீஸின் பக்கம் நின்று அவனை உற்சாகப்படுத்துவது, யாரும் வீடு கொடுக்காதபோது கிறித்துவ மதத்தை சேர்ந்த தோழி தன் வீட்டை தருவது, தான் வளர்த்த பையன் தன்னைவிட்டு போனாலும் அவனது குத்துச் சண்டைகளை ரசிக்கும் ஜாபார் பாய் ஆகிய நிகழ்ச்சிகள் தனி மனித அளவில் மனிதம் மதத்தைத் தாண்டி நிற்பதாக எடுத்துக் கொள்ளலாம். நாயகன் நாயகி இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
காதலை நேசிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.