‘விவசாயி ஒன்றும் முட்டாள் அல்ல’ – அகாலிதளத் தலைவர் நரேஷ் குஜ்ராலுடன் ஜியா உஸ் சலாம் நேர்காணல் (தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி)உழவர் உற்பத்திப் பொருள் பரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான ஒப்பந்தம், ஆகியவற்றோடு அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா மூலம் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களின் மீதான கட்டுப்பாட்டை நீக்கியதானது, பஞ்சாபின் விவசாயிகளை நெடுஞ்சாலைகள், வீதிகள் மற்றும் புறவழிச்சாலைகளுக்கு அழைத்து வந்தது மட்டுமல்லாமல், பாரதீய ஜனதா (பாஜக) மற்றும் நீண்டகால கூட்டணியில் பங்காளிகளான ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) இடையே ஒரு பிளவை ஏற்படுத்தியது. இந்த கூட்டு வெகுகாலம் நீடித்ததுடன் பஞ்சாபில் ஒரு இளைய பங்காளியாக அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பாஜகவுக்கு உதவியது. எவ்வாறாயினும், விவசாய மசோதாக்கள் அகாலிகளின் கையை கட்டாயப்படுத்தியதுடன், மோடி அரசாங்கத்தின் முடிவைப் பற்றிய தங்களது விமர்சனத்தில் கூறாமல் எதையும் விவசாயிகள் விட்டுவைக்கவில்லை எனும் நிலையில், கட்சி பல வகையில், கட்டம் கட்டமாகத்தான் என்றாலும், பிரிந்து செல்ல முடிவு செய்தது. முதலாவதாக, உணவு பதப்படுத்தும் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் மோடி அமைச்சரவையில் இருந்து விலகினார், இது பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரை “நிர்ப்பந்தம்” என்று முத்திரை குத்தத் தூண்டியது.

நாயை வால் அசைக்கிறது எனும் ஒரு விந்தைக் கதையாக, கட்சியின் முடிவு அதன் ஊழியர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்களின் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது என்பது தெளிவு. ஆர்வமூட்டும் வகையில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் மசோதாக்கள் விவாதிக்கப்பட்ட அமைச்சரவைக் கூட்டங்களில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கலந்து கொண்டார்.  மசோதாக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் அடாவடியான முறையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், குறுகிய காலத்திற்குள், அகாலிதளம் முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (என்.டி.ஏ) விலகியது, பிரகாஷ் சிங் பாதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிறுவக உறுப்பினர்களில் ஒருவராவார். தெலுங்கு தேசமும் சிவசேனாவும் இதற்கு முன்னர் விலகிய பின்னர், பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய மூன்றாவது நீண்டகால பங்காளியாக இது அமைந்தது. இது பாஜகவுக்கும் அகாலிதளத்துக்கும் இடையிலான கிட்டத்தட்ட நாற்பதாண்டுக் கால உறவுகளை முடிவுக்குக் கொண்டுவந்தது. மாநிலங்களவையில் விவசாயிகள் மசோதாக்களுக்கு எதிராக எழுச்சிகரமாக உரை நிகழ்த்திய பிரபல அகாலிதளத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான நரேஷ் குஜ்ரால், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு கட்சி வெளியேறுவதற்கு சற்று முன்னதாக ஃப்ரண்ட்லைனுடன் பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து உடனடியாக வெளியேறுவது குறித்து பரந்த சமிக்ஞைகளை வெளிப்படுத்திய  குஜ்ரால், நாடாளுமன்றத்தில் அவர் கூறியதை நினைவு கூர்ந்தார்: “பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள தீப்பொறியை நாடு முழுவதும் பற்றியெரியும் பெருநெருப்பாக மாற விட வேண்டாம்…. பசுமை புரட்சிக்குப் பின்னர் பஞ்சாப் தேசத்திற்கு உணவளித்துள்ளது. விவசாயியை பலியிட வேண்டாம். நேர்காணலின் பகுதிகள்:

விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தையும், விவசாயிகளின் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு மசோதாக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மசோதாவின் மாற்றங்களையும் எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?

நான் அதை பஞ்சாபின் விவசாயிகளின் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். மசோதாக்கள் நாடு முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் நான் பஞ்சாபைச் சேர்ந்தவன் என்பதாலும், மாநிலமானது நாட்டின் களஞ்சியமாக இருந்ததாலும், இதன் விளைவு மாநில விவசாயிகளால் மிகவும்  அழுத்தமான முறையில் உணரப்படும். விவசாயி கல்வியற்றவராக இருக்கலாம், ஆனால் மசோதாக்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர் புரிந்துகொள்கிறார். அவர் இந்த விஷயத்தில் கலந்தாலோசிக்கப்படவில்லை, இந்த வகையில் தான் இந்தக்   கோபத்தை நாங்கள் பார்க்கிறோம். பசுமைப் புரட்சியின் காலத்திலிருந்தே, ஒரு தேசம் எனும் முறையில் நாம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்பதை உறுதிசெய்வதற்கு பஞ்சாப் வழிவகுத்தது, ஆனால் ஒரு உபரி இருந்தது. அதை யாரும் மறுக்க முடியாது. கடந்த ஆறு ஆண்டுகளாக, குறைந்தபட்ச ஆதரவு விலை [MSP] அதிகரிக்கப்பட்டது. ஆயினும்கூட, இன்று, விவசாயி நம்பிக்கை பற்றாக்குறையால் அவதிப்படுகிறார். அவர் ஏமாற்றப்பட்டதாகவும், மோசடி செய்யப்பட்டதாகவும் உணர்கிறார். தனது வீட்டு வாசலில் இருந்த உள்ளூர் சந்தையான மண்டி, தொலைதூர இடத்திற்குச் சென்றுவிடும் என்று அவர் அஞ்சுகிறார். அவர் கொள்ளையடிக்கப்பட்டதாக உணர்கிறார்.

இந்த மூன்று மசோதாக்களுக்கும் உங்கள் கட்சியின் ஆட்சேபனைகள் அவற்றின் உள்ளடக்கம் அல்லது அவை நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய செயல்முறையிலிருந்து எழுகின்றனவா?

இரண்டும் தான். இரண்டு மசோதாக்களில் சில விதிகள் உள்ளன, அவை விவசாயியை சந்தை சக்திகளின் தாக்குதலுக்கு, (சுரண்டலுக்கு) உள்ளாக்கிவிடக்கூடும். உதாரணமாக, முழு உற்பத்திக்கும் MSP (குறைந்தபட்ச ஆதாரவிலை)  நிர்ணயிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக, விவசாயி தனது பொருட்களை மண்டிக்கு கொண்டு வந்தார், இந்திய உணவுக் கழகம் [FCI] அதைக் கொள்முதல் செய்தது. விவசாயி  MSP யை அறிந்திருந்தார், மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறுவது உறுதி. நாளை, MSP நிர்ணயம் செய்யப்படாத நிலையில், எஃப்.சி.ஐ 75 சதவீத விளைபொருட்களை வாங்கினாலும், விவசாயி இன்னும் 25 சதவீத இழப்பைச் சந்திப்பார். அவர் அதை திறந்த சந்தையில் விற்க வேண்டியிருக்கும், அங்கு MSP இருக்காது.

விவசாயி கோபப்படுகிறான். நான் மீண்டும் சொல்கிறேன், விவசாயி கல்வியறிவற்றவராக இருக்கலாம், ஆனால் அவர் ஒன்றும் முட்டாள் அல்ல. அவர் சந்தையைப் புரிந்துகொள்கிறார். அவர் அதைச் சுற்றி பார்த்திருக்கிறார்…. அவர் அதை விமான மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில் பார்த்திருக்கிறார். ஒரு காலத்தில் லாபம் ஈட்டிக் கொண்டிருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு என்ன நடந்தது என்பதை அவர் கண்டிருக்கிறார், இப்போது அது நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ஏர் இந்தியாவுக்கும் அதே கதிதான். விவசாயி இதையெல்லாம் புரிந்துகொண்டு விவசாயம் அடுத்த குறியாக இருக்கக்கூடும் என்று அஞ்சுகிறார்.கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே காலடி எடுத்து வைக்கும் என்ற அச்சம் உள்ளது, குறிப்பாக விவசாயிகள், குறிப்பாக சிறிய பங்குகளை வைத்திருப்பவர்கள் அவற்றிடம் தோற்றுப்போக நேரிடும். ஆமாம், பெரிய வணிக நிறுவனங்கள் வந்து விவசாயிக்கு ஒரு வருடம் ஒரு பெரிய விலையை வழங்கக்கூடும், பின்னர் கிட்டத்தட்ட விவசாயியின் கையை முறுக்கலாம் என்று கள மட்டத்தில் ஒரு தெளிவான பயம் உள்ளது. விவசாயிகளின் நலன்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

நிச்சயமாக, ஒப்பந்த வேளாண்மை பிரச்சினை உள்ளது. சிறு விவசாயிக்கு ஒரு வருடம் மிகவும் இலாபகரமான விலையை வழங்க முடியும். அடுத்த ஆண்டு ஒரு சர்ச்சை எழக்கூடும். சச்சரவுக்குத் தீர்வுகாண்பதற்கு விவசாயிக்குப் பெருத்த பணமூட்டைகள் இல்லை. மசோதாக்கள் இணக்கமான குறை தீர்க்கும் தீர்வை [வழிவகையை] வழங்கவில்லை. மசோதாக்கள் இதற்கு ஒரு செயல்முறையை கொண்டிருக்க வேண்டும். எனவே, மசோதாக்களின் உள்ளடக்கம் மற்றும் அவை நிறைவேற்றப்பட்ட  செயல்முறை ஆகியவற்றை  நாங்கள் எதிர்க்கிறோம். அவை விவாதிக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது. அவற்றை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது. அவற்றை அவ்வளவு ஆத்திர-அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன எங்களுக்கு புரியவில்லை. இந்த மசோதாக்கள் பஞ்சாபிற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதையும், கட்சி நிலைபாடுகளைக் கடந்து கட்சி சார்பற்ற முறையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஒரு கண்மூடித்தனமான வேகத்தில் பில்கள் நிறைவேற்றப்படுவதைப் பற்றி பேசுகையில், மசோதாக்களுக்கு முன்னர் பெருந்தொற்றுக் காலத்தின் போது பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் இருந்தன …. ஆம், நாங்கள் அதைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம்.

பில்கள் ஏதாவது பூதமா, ஏதோவொரு அலாவுதீனின் விளக்கா, ஒருமுறை நிறைவேற்றிவிட்டால், எல்லா சிக்கல்களும் மறைந்துவிடுமா? இல்லை. பீகார் போன்ற இடங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் எவ்வாறு செயல்பட்டது என்பதை நாங்கள் பார்த்தோம். எனவே வெறும் சட்டத்தின் ஒரு பகுதி ஒன்றும் உதவாது. நீங்கள் தொற்றுநோயைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் நம் வீட்டு வாசலில் சீனாவும் இருக்கிறது. தேசம் இது போன்ற ஒரு நெருக்கடியான நேரத்தில் இருக்கும் போது இந்த அவசரம் மிகவும் விளக்க முடியாத ஒன்றாகத் தெரிகிறது. மசோதாக்கள் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதற்கு

முன்னர் ஹர்சிம்ரத் கவுர் அமைச்சரவையில் இருந்து விலகினார். அடுத்த நடவடிக்கை என்ன?

எங்களுடையது கட்சி ஊழியர்கள் (கேடர்) அடிப்படையிலான கட்சி. அகாலிதளம் விவசாயிகளின் கட்சி. எங்கள் தலைமையின் நடவடிக்கை சராசரி விவசாயி மற்றும் கட்சியின் பணியாளர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது என்பது உண்மைதான். உத்தேச மசோதாக்கள் தொடர்பாக விவசாயிகள் கிளர்ந்தெழுந்தனர் மற்றும் அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கான முடிவு அந்த உணர்வின் பிரதிபலிப்பாகும். ஆனால் பாஜகவுடனான எங்கள் உறவு இந்திரா காந்தியின் காலத்திற்கும், அவர் படுகொலை செய்யப்பட்ட காலத்திற்கும் செல்கிறது. அகாலி-பாஜக கூட்டாண்மை பல காயங்களை குணப்படுத்த உதவியது மற்றும் இரு சமூகங்களையும் (சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள்) ஒன்றாகக் கொண்டுவந்தது. இது அரசுக்கு இன நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வந்தது. ஆனால் அகாலிகளுக்கும் பாஜகவுக்கும் இடையே இன்று நம்பிக்கை பற்றாக்குறை உள்ளது …. நான் ஒப்புக்கொள்கிறேன், இன்று அரசியல் மட்டத்தில் நம்பிக்கையின்மை உள்ளது. ஆனால் இந்த நம்பிக்கையின்மை கேடருக்கு பரவினால், அது உறவுக்கு நல்லதல்ல. நினைவில் கொள்ளுங்கள், எங்களுடையது ஒரு விவசாயிகள் கட்சி, அவர்களின் கோபத்தையும் அவர்களின் குறைகளையும் தலைமை எப்போதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

https://frontline.thehindu.com/cover-story/the-farmer-is-not-a-fool/article32759794.ece

தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி
நன்றி: ஃப்ரண்ட்லைன்