பிப்ரவரி11 : உலகிற்கே ஒளியூட்டிய தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்த தினம் - American inventor - Electrical Scientists

பிப்ரவரி 11 : உலகிற்கே ஒளியூட்டிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்

பிப்ரவரி 11 : உலகிற்கே ஒளியூட்டிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்

அன்றாட நெருப்பின் நிறமும் அதன் பின்னால் இருக்கும் அறிவியலும்

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மின் விளக்கை கண்டறிந்தவர் யார்? என்று கேட்டால் எவ்வித தயக்கமும் இன்றி, அனைவரும் குறிப்பிடும் பெயராக தாமஸ் ஆல்வா எடிசன்(Thomas Alva Edison) விளக்குகிறார்.

மனித இனத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக விளங்குவது மின்விளக்குகள். ஆரம்ப காலத்தில் சக்கரம் மற்றும் நெருப்பை கண்டறிந்த மனிதன், அதிலிருந்து தன்னுடைய நாகரீக வளர்ச்சியின் தொடக்கத்திற்கு வித்திட்டான்.

ஆதிமனிதன் காலத்திலேயே நெருப்பைக் கொண்டு, காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதும், உணவுகளை சமைத்து உண்பது மற்றும் முக்கியமாக, கடும் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டான்.

தொடர்ந்து நாகரீக வளர்ச்சியின் காரணமாக, இரவு நேரத்திலும் வெளிச்சத்தின் தேவை அதிகரித்தது.

ஆரம்ப காலத்தில் விண்மீன்கள் மற்றும் நிலவின் ஒளியிலிருந்து இரவு உலகைக் கண்ட மனிதன். பின்நாளில், நெருப்பை அடிப்படையாகக் கொண்ட வெவ்வேறு வடிவ விளக்குகளை உருவாக்கி, அதன் மூலம் இரவு பொழுதை ஒளிரச் செய்தான். அக்காலத்தில் பல்வேறு வகையான எண்ணெய் விளக்குகள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக மண்ணெண்ணெய் விளக்குகள் நீண்ட நேரம் ஒளி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்றளவும் கூட, சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இருந்தாலும் கூட, மின் விளக்கின் வருகைக்கு முன்பு வரை மனித இனமானது இருள் சூழ்ந்த இரவுகளிலேயே தங்கள் பெரும்பொழுதை கழிக்க வேண்டி இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ (ohio) மாகாணத்தில், ஒரு சாதாரண குடும்பத்தின் ஏழாவது குழந்தையாக பிறந்தவர் தான், உலக வரலாற்றின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பின் நாயகன் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison).

ஆரம்ப கால எடிசன், முறையாக பள்ளிக்கு சென்று கல்வி பயிலவில்லை! என்பதும் கவனிக்கதக்கது. முன்னாள் பள்ளி ஆசிரியை ஆகப் பணியாற்றிய எடிசனின் தாயார் தான் அவருக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தது என்று அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும், ஸ்கார்லெட் காய்ச்சலால்(scarlet fever) பாதிக்கப்பட்ட எடிசன் குறைந்த செவித்திறனோடு வாழ்ந்தார் என்பதும் பலரும் அறியாத தகவல்.

ஆனால், அது குறித்து பின்னாளில் பகிர்ந்த அவர், நான் செய்யும் செயலில் கவன சிதறல் ஏற்படாமல் இருப்பதற்கு என்னுடைய செவித்திறன் குறைபாடும் முக்கியமான காரணம்! என நேர்மறையான கருத்தை தெரிவித்தார்.

சிறு வயது முதலே, இயக்கவியல், பிரபஞ்சம் உள்ளிட்ட கருத்துக்களின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தவர் எடிசன் என்று அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், வேதியியல் தொடர்பான ஆய்வுகளின் மீதும் ஆழமான ஆர்வம் கொண்டு இருந்த எடிசன். 13 வயதிலேயே செய்தித்தாள்களை விற்கும் வேலையை செய்து, அதில் வாரம் தோறும் 50 டாலர்கள் வரை சம்பாதித்து இருக்கிறார். அந்தப் பணத்தைக் கொண்டு தனக்கு தேவையான பொருட்களை வாங்கி, அதன் மூலம் வேதியல் சோதனைகளை செய்து பார்த்திருக்கிறார்.

அதன் விளைவாகவே, மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யக் கூடிய வகையிலான மின்கலன்களை(rechargeble batteries)உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். 19 வயதில் அமெரிக்காவிலிருந்து ஒரு பிரபலமான பத்திரிக்கை நிறுவனத்தில்,இரவு நேர பணியில் சேர்ந்தார்.

தன்னுடைய சோதனைகளை நிகழ்த்தி பார்ப்பதற்கு போதுமான நேரம் கிடைக்கும் என்பதனாலே இரவு நேர பணியில் சேர்ந்ததாக பின் நாளில் தெரிவித்திருக்கிறார் தாமஸ் எடிசன்.

அப்படி ஒரு நாள், ஈய அமில மின்கலனை(Lead acid battery)உடைத்து அது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, மின்கலனில் இருந்த அமிலம் ஆனது, எடிசன் வேலை செய்த அலுவலகத்தின் தரை எங்கும் சிந்திக்கிடந்தது. மறுநாள் இது குறித்து பத்திரிக்கை அலுவலகத்தின் மேலாளருக்கு தெரிய வர,எடிசனின் வேலை பறிக்கப்பட்டது.

வேலை பறிபோனது என்றாலும் துவண்டு போகாத எடிசன்,1869 ஆம் ஆண்டு தன்னுடைய 22 வது வயதில் மின்வாக்குப்பதிவு (electric voting machine)இயந்திரத்திற்கான காப்புரிமையைப் பெற்றார். ஆம், மின் வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதலாவது மாதிரியை உருவாக்கி, அதில் வெற்றி கண்டவர் தாமஸ் எடிசன் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அதைத்தொடர்ந்து, பல்வேறு துறை சார்ந்த கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி இருக்கிறார். நவீன காணொளி பதிவு தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக இருந்த (video recording)இயக்கப்பட கருவிகளை(motion camera)உருவாக்கியதில் தாமஸ் எடிசனின் பங்கு மிக மிக முக்கியமானது. இதன் மூலமே, ஒளிப்படங்களை,இயக்க காட்சி படங்களாக மாற்ற முடியும் என்பதை உலகம் அறிந்து கொண்டது. பின்நாளில் திரைத்துறையின் வளர்ச்சிக்கும் இது மிக முக்கிய காரணமாக அமைந்தது.

முன்பே குறிப்பிட்டது போல, சார்ஜ் செய்யக்கூடிய மின்கலன்களை உருவாக்கும் பணியிலும் வெற்றி கண்டிருந்தார் தாமஸ் எடிசன்.

நிக்கல் மற்றும் இரும்பை(nickel iron)அடிப்படையாகக் கொண்ட மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன்களை உருவாக்கி இருந்தார்.

அமெரிக்க காப்புரிமை நிறுவனத்தின் கணக்குகளின் படி, சுமார் 1093 காப்புரிமைகளை அமெரிக்காவில் மட்டும் வைத்திருந்தார். மற்றும் உலகளாவிய அளவில் 2200-க்கும் அதிகமான காப்புரிமைகளை வைத்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனால், இன்றளவும் பலரும் டங்ஸ்டன் இழை அடிப்படையிலான மின்விளக்குகளை தயாரித்தது தாமஸ் எடிசன் தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எடிசன் கண்டுபிடித்து மின்விளக்குகளில், கார்பன் இழை அடிப்படையிலான , மின்இழைகள் தான்(filaments) பயன்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இத்தகைய விளக்குகள் ஆங்கிலத்தில் incandescent விளக்குகள் என அறியப்படுகிறது. இதில், இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ,அமெரிக்காவில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாகாணத்தின் லைவர்மொர் (livermore) பகுதியில் இயங்கும் தீயணைப்பு நிலையத்தில்,கார்பன் இழை அடிப்படையிலான மின் விளக்கு ஆனது 1901 ஆண்டு முதல் தொடர்ச்சியாக 124 ஆண்டுகளில் இயங்கி வருகிறது. அவ்வப்போது பராமரித்திற்காக அணைக்கப்படுவதோடு சரி, மற்றபடி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் எடிசன் கண்டுபிடித்த மின் விளக்குகளின் நீடித்த தரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும், மின்கலன்கள் மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் கிடைக்கும் நேர்திசை மின்னோட்டத்தையும் (Direct current) கண்டறிந்தது, தாமஸ் எடிசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில், அறிவியல் கோட்பாட்டை பின்பற்றி செயல்பட்டவராகவே தாமஸ் எடிசன் அறியப்படுகிறார். அறிவியல் கோட்பாட்டு நம்பிக்கையின் (science deism) மீது ஆழமான பற்றுதலை எடிசன் கொண்டு இருந்தார் என்றும் கருதப்படுகிறது.

கார்பன் இழைகளை இணைத்து மின் விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஆயிரம் தடவை தோல்வி அடைந்து இருக்கிறார் தாமஸ் எடிசன் என்பதும் கவனிக்கத்தக்கது.

அது குறித்து பின்னாளில் சுவாரசியமான உரையாடல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட எடிசன், “மின்விளக்கு தயாரிப்பில் நான் பத்தாயிரம் தடவை தோல்வியடைந்த பிறகே, வெற்றி கண்டதாக பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் மின் விளக்கை தயாரிக்க கூடாத, பத்தாயிரம் வழிமுறைகளை நான் கண்டறிந்து இருக்கிறேன்.”என்று கூறினார்.

உண்மையில், விடாமுயற்சியின் வெளிப்பாடாகவே கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகிறது என்பதற்கு தாமஸ் எடிசன் ஒரு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு. தான் கொண்டு முயற்சியில் வெற்றி கண்டு இன்றைக்கு உலகம் எங்கும் அனைவரும் அறிந்த விஞ்ஞானியாக, கண்டுபிடிப்பாளராக விளங்குகிறார் தாமஸடிசன்.

இத்தகைய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான தாமஸ் எடிசனை போற்றும் விதமாக அவரது பிறந்த தினம் அமெரிக்காவில் தேசிய கண்டுபிடிப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவையும் கடந்து உலகளாவிய மக்களும் உலக கண்டுபிடிப்பாளர்கள் தினமாக பிப்ரவரி 11 ஐ கொண்டாடுகிறார்கள். இதற்கான அறிவிப்பை 1983 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் வெளியிட்டார்.

மனித இனத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாளர் மின்விளக்கின் நாயகன் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ

இளங்கலை இயற்பியல் மாணவர்
தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி- நாகர்கோவில்-02.

தொடர்புக்கு:- [email protected]

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *