அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) பிறந்த நாள் பிப்ரவரி 12.
அமெரிக்கா நாட்டின் வரலாற்றில், ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln), மிகச் சிறந்த குடியரசுத் தலைவராகக் கருதப்படுகிறார்.
கடுமையான உழைப்பு, அப்பழுக்கில்லாத குணநலன், எடுத்துக் கொண்ட காரியத்தை உறுதியுடன் முடிக்கும் தன்மை ஆகியவற்றால் எளிய குடும்பத்தில் பிறந்த லிங்கன், அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக மக்களுக்கு உழைக்க முடிந்தது.
நான்கு ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்த ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln), அந்தக் குறுகிய காலத்தில் செய்த மகத்தான இரண்டு சாதனைகள் அவருக்கு அழியாப் புகழைத் தந்துள்ளது.
பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய அந்த சாதனைகள் – அடிமைத் தளையை அறுத்து, ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கு சுதந்திரம் அளித்தது. உள் நாட்டுப் போரினால், அமெரிக்கா சிதைந்து அழியாமல் அதனுடைய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடை நிலைநிறுத்தியது.
1809ஆம் வருடம், பிப்ரவரி 12ஆம் தேதி, அமெரிக்காவின் கென்டக்கியில் லாரூ கவுண்டியில் பிறந்தார், ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln). தந்தை தாமஸ் லிங்கன், தாய் நான்சி ஹான்க்ஸ். நல்ல மாணவனாக இருந்தும், வறுமை காரணமாக, அவரால் மேல் படிப்பு படிக்க முடியவில்லை. ஒரு கடையில் குமாஸ்தா பணியில் அமர்ந்தார்.
இடையில் சட்டம் பயின்று, வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். பின்பு, அரசியலில் பங்கேற்று, இலினாய்ஸ் மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினர் ஆனார். பின்பு, 1849ஆம் வருடம் அரசியலைத் துறந்து முழுநேர வக்கீல் தொழிலில் இறங்கினார். 1854ஆம் வருடம் கான்சாஸ், நெப்ராஸ்கா சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டம், அந்த மாநிலங்களில் அடிமைகள் வைத்துக் கொள்ள அனுமதியளித்தது. இதனால் கோபமடைந்த லிங்கன் வக்கீல் தொழிலை விடுத்து, அரசியலில் புகுந்தார். குறுகிய காலத்தில், குடியரசுக் கட்சியின் தலைவரானார்.
1860வது வருடம் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், வட மாநிலங்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றியடைந்தார் ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln). அடிமை வேண்டும் என்று கருதும் தென் மாநிலங்களில், இந்த வெற்றி அடிமைத் தளையை அழிக்கும் என்ற அச்சம் எழுந்தது.
தென் மாநிலங்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருந்தன. அதற்கு அடிமைகள் வேண்டும் என்பது அவர்கள் கணிப்பு. 40 இலட்சம் ஆப்ரிக்க அமெரிக்கர்கள், வயல் வெளிகளில் அடிமைகளாகப் பணி புரிந்து வந்தனர்.
வட மாநிலங்கள் பொருளாதாரம், தொழிற்சாலைகள் சார்ந்தது. பொருளாதர வளர்ச்சிக்கு அடிமைகள் தேவையில்லை, ஆகவே அடிமைத் தளை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து கொண்டவர்கள்.
தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தங்களிடையே கூட்டமைப்பு அமைத்துக் கொண்டு, அமெரிக்காவிலிருந்து பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். தென் மாநிலங்களிலிருந்த சேனைத் தளங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர்.
ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) பதவியேற்ற ஒரு மாதத்தில், தென் கரோலினாவில் இருந்த கோட்டையை, கூட்டமைப்புப் படைகள் தாக்கின. அமெரிக்கா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், கூட்டமைப்புப் படையினரை அழிப்பது ஒன்று தான் வழி என்பதை உணர்ந்த லிங்கன், ஒன்றிய மாநிலங்களை சண்டையில் ஈடுபடுத்தினார்.
ஒரே நாடு என்ற இலக்கு கொண்ட வட மாநிலத்தவர்களுக்கும், அடிமைகள் தேவை என்ற தென் மாநில கூட்டமைப்பிற்கும் நடந்த இந்த சண்டை அமெரிக்காவின் உள் நாட்டுக் கலகம் என்ற பெயர் பெற்றது.
இந்த உள்நாட்டுக் கலகம் 1861 முதல் 1865 வரை நடைபெற்றது. 23 வட மாநிலங்களும், தனியாக இருந்த சில பகுதிகளும், ஒன்றிய மாநில சேனையில் இருந்தன. இவர்களுடைய சீருடை நீல நிறம். 11 தென் மாநிலங்கள் கூட்டமைப்பு படையில் இருந்தன.
இவர்கள் சீருடை பழுப்பு நிறம். இந்த உள்நாட்டுக் கலகத்தில் 6,20,000 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டுக் கலகத்தில் முதல் முறையாக பெண்கள், காயம்பட்ட வீரர்களுக்கு முதலுதவி செய்வதற்கு நியமிக்கப்பட்டனர்.
சுமார் 3000 பெண்கள் நர்ஸ் பணியிலிருந்தனர். இதற்கு முன்னால் நர்ஸ் பணி ஆண்களுக்கான வேலையாக இருந்தது.
உள் நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த போது, 1863ஆம் வருடம், அமெரிக்காவில் இருக்கும் அடிமைகள், சுதந்திர மனிதர்கள் என்று அறிவித்தார் ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln). விருப்பமிருந்தால், அவர்கள் ஒன்றிய படையில் சேர்ந்து பணி புரியலாம் என்று அழைப்பு விடுத்தார்.
9 ஏப்ரல் 1865, அன்று கூட்டமைப்பு படைகள் தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்தன. இது நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, 14 ஏப்ரல் 1865, வாஷிங்க்டன், ஃபோர்ட் தியேட்டரில் மனைவி மேரியுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த லிங்கன், ஜான் வில்கின்ஸ் பூத் என்ற கூட்டமைப்பு ஆதரவாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மிகவும் இக்கட்டான கால கட்டத்தில், குடியரசுத் தலைவராகப் பணி புரிந்து, அமெரிக்கா சிதறாமல் பார்த்துக் கொண்ட ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) இன்றும் அமெரிக்காவின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர் மற்றும் ஒப்பற்ற தியாகி என்று போற்றப்படுகிறார்.
ஆபிரகாம் லிங்கனின் மறக்க முடியாத மேற்கோள்களில் சில :
“குணம் என்பது மரமென்றால், நற்பெயர் அதனுடைய நிழல். நிழல் என்பது அதைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான். மரம் தான் உண்மையான விஷயம்.”
“நீங்கள் எல்லா மக்களையும் சில நேரமும், சிலரை எல்லா நேரமும் ஏமாற்றலாம். ஆனால், எல்லா மக்களையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது.”
“மற்றவர்களுக்கு சுதந்திரத்தை மறுப்பவர்கள், அதற்குத் தகுதியற்றவர்கள்”
எழுதியவர்:
கே.என்.சுவாமிநாதன், சென்னை
11-02-2025
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.