இன்று (பிப்ரவரி 5) உலக உரக்க வாசிப்பு தினம் (February 5 - World Read Aloud Day): உலகம் தொடர வேண்டிய உரக்க வாசிக்கும் பண்பாடு - அ. குமரேசன்

பிப்ரவரி 5: உலக உரக்க வாசிப்பு தினம் (February 5 – World Read Aloud Day)

உலக உரக்க வாசிப்பு தினம்

உலகம் தொடர வேண்டிய உரக்க வாசிக்கும் பண்பாடு

– அ. குமரேசன்

உரக்கப் பேசு என்று ஊக்குவித்துக்கொண்டிருக்கிறோம். கோரிக்கைகளை உரக்க முழங்குகிறோம். உரக்க வாசி எனக் ஒரு நாள் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் புதன்கிழமையன்று ‘உலக உரக்க வாசிப்பு தினம்” கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்த மாதம் 5ஆம் தேதி இந்த நாள் வருகிறது.

இந்தியா உள்பட பல நாடுகளில் செயல்பட்டு வருகிற, தலைமை அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ‘லிட்வொர்ல்ட்’ என்ற புத்தகங்கள் சார்ந்த தொண்டு நிறுவனத்தால் 2010ல் இந்த நாளைக் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டது.

படிப்படியாகப் பரவி, இன்று 173 நாடுகளில் பதிப்பாளர்கள், குறிப்பாகக் குழந்தைகளுக்கான புத்தக வெளியீட்டாளர்கள், இணையவழி நூல் வாசிப்புக் குழுக்கள், பள்ளிகள், நூலகங்கள், தொண்டு நிறுவனங்கள், மன்றங்கள் இணைந்து பல நாடுகளில் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

பள்ளிகளிலும் நூலகங்களிலும் உரக்க வாசிக்கும் வாசிப்பு அமர்வுகள், கதை சொல்லல் நிகழ்வுகள், புத்தக அறிமுகம், விவாதம், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் பலர் முன்னிலையில் புத்தகத்தை உரக்க வாசித்தல், எழுத்தாளர்களுடன் உரையாடுதல், புத்தகம் சார்ந்த குறு நாடகங்கள் என இந்த விழா அடையாளப்படுத்தப்படுகிறது.

இன்று (பிப்ரவரி 5) உலக உரக்க வாசிப்பு தினம் (February 5 - World Read Aloud Day): உலகம் தொடர வேண்டிய உரக்க வாசிக்கும் பண்பாடு - அ. குமரேசன்

பள்ளி வகுப்பறையில் நாம் நின்றுகொன்று பாடத்தைத் தனியாகவோ, எல்லாக் குழந்தைகளுடனும் இணைந்தோ உரக்க வாசித்த அந்த நாட்களுக்குச் சில நொடிகள் பயணம் செய்துவிட்டு வரத் தோன்றுகிறது அல்லவா? அப்படி வாசிக்கும்போது இந்த லானா, ளானா, ழான தகராறுகளையும் அதுபோன்ற மற்ற சிக்கல்களையும் ஆசிரியர்கள் திருத்துவார்கள். வாளைப் பலத்தை வாழைப் பழம் என்று உச்சரிக்க அப்படித்தானே கற்றுக்கொண்டோம்? ஆனால், உரக்க வாசிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் பயனுள்ள செயல்பாடு.

முதலில் குழந்தைகள் பெறும் நன்மைகளை அறிவோம். கேட்பதன் மூலமாகவே குழந்தைகள் மொழியைக் கற்கிறார்கள் இல்லையா? உரக்க வாசிக்கிறபோது சொற்களின் சரியான உச்சரிப்பைத் தெரிந்துகொள்வதோடு, புதிய சொற்களையும் அறிகிறார்கள். இது அவர்களின் சொல்லறிவையும் மொழித்திறனையும் வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

ஒரு சொல்லைத் தவறாக வாசிக்கிறபோது மற்ற குழந்தைகள் சிரிப்பது கூட சரியாக வாசிப்பதற்குத் தூண்டுகிறது. வகுப்பில் அந்தச் சிரிப்பு விமர்சனம் கிடைக்கப் பெறாதவர்கள்தானே வளர்ந்த பிறகு, “மக்கள் அழுகிறார்கள்” என்று சொல்வதாக நினைத்துக்கொண்டு “மக்கள் அழுகுகிறார்கள்” என்று கூறி மக்களைக் காய்கறியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்?

சொற்களைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இடையேயான உறவைக் குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள். இது பாடநூல்களையும் இதர படைப்பாக்கங்களையும் படிக்கிற ஈடுபாட்டை வளர்க்கும். எத்தனை வயதானாலும் பள்ளிக் காலத்தில் பயின்ற சொற்களும் வாக்கிய அமைப்புகளும் நினைவில் நிற்கின்றன.

ஒரு கதை உரக்க வாசிக்கப்படுகிற போது வாசிப்பவருக்கு வாசிக்கிறவர்களுக்கும் கேட்கிறவர்களுக்கும் அந்தக் கதையில் ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது கதை நிகழ்வுகளைக் கவனிக்கிற ஆர்வம் படிப்படியாக வாழ்க்கை நிகழ்வுகளையும உற்றுக் கவனிக்க வைக்கிறது. இலக்கிய ரசனையாகவும் பலருக்கு இது பரிணமிக்கும். வகுப்பில் ஆசிரியரோடும் மற்ற பிள்ளைகளோடும் இணக்கமான உறவை வளர்த்துக்கொள்ளவும் உரக்க வாசிப்பது உதவுகிறது.

பெரியவர்களுக்கு உரக்க வாசிப்பதற்கான சூழல் பெரும்பாலும் வாய்ப்பதில்லை. அந்த வாய்ப்பைத் தாங்களே உருவாக்கிக்கொள்கிறவர்களுக்கு, குறைந்தது, அறைக்குள் அல்லது பூங்கா போன்ற இடங்களில் வாய் திறந்து சன்னமான ஒலியில் வாசிப்பது கூட அவர்களது நினைவாற்றலையும், ஒருங்கிணைந்த அறிவாற்றலையும் கூர்மைப்படுத்திக்கொள்ளத் துணை செய்யும். கூச்சம் தொலையும்!

ஆழமான புத்தகங்களைக் கையில் எடுக்கிறபோது பொதுவாக அமைதியான சூழல் தேவைப்படுவது உண்மை. அதே வேளையில், உரக்க வாசிக்கிறபோது மன அழுத்தம் தணிகிறது. பரபரப்பு விலகுகிறது.

சொற்களைத் தெளிவாக உச்சரிப்பதற்கும், சரளமாகக் கையாள்வதற்கும் உரக்க வாசிப்பு ஒரு முக்கியமான பக்கபலம். எந்த இடத்தில் எப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவது என ஒரு பயிற்சி கிடைக்கும். தேர்ந்தெடுத்த பக்குவமான சொற்களால் பேசுகிறபோது அது மரியாதையையும் பெற்றுத் தரும்.

இன்று (பிப்ரவரி 5) உலக உரக்க வாசிப்பு தினம் (February 5 - World Read Aloud Day): உலகம் தொடர வேண்டிய உரக்க வாசிக்கும் பண்பாடு - அ. குமரேசன்

ஒரு புத்தகத்தை மௌனமாக வாசிக்கிறபோது, சில பத்திகளைச் சரியாக உள்வாங்க இயலாமல் போகும். அந்தப் பகுதிகளை உரக்க வாசித்துப் பாருங்கள், புகை கலைந்து பொருள் தெளிவாகப் புலப்படும்.

பார்வை மாற்றுத் திறனாளிகள் பிரெய்ல் எழுத்தில் அச்சிடப்பட்டவற்றை எளிதில் படிக்கிறார்கள். உற்றார்களும் நண்பர்களும் அவர்களுக்காக, பிரெய்லில் வராத நூல்களை உரக்க வாசிக்கிறபோது அந்த எழுத்தாக்கங்களின் செய்திகளும் அவர்களைச் சென்றடைகின்றன. எழுத்துக்கூட்டி வாசிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கும் மற்றவர்கள் உரக்க வாசிக்கக் கேட்பது அவர்களது வளர்ச்சிக்குத் துணையாகும்.

மக்கள் இயக்கங்களின் கிளை அமர்வு, மாநாடு உள்ளிட்ட கூடுகைகளில், வேலையறிக்கை, அரசியல் தீர்மானம் ஆகிய ஆவணங்களைத் தோழர்கள் சுற்றுமுறையில் உரக்க வாசிப்பதையும், பின்னர் விவாதிப்பதையும் காணலாம்.

இன்று வட்டார மொழிகளில் எழுதப்படும் கதைகளும் கட்டுரைகளும் நிறைய வருகின்றன. அவற்றை உரக்க வாசித்தால், வேறொரு வட்டாரத்தின் சொல்லாடல்களை நாமும் தெரிந்துகொண்டு ரசிப்போம். அத்துடன் அந்த வட்டார மக்களின் பண்பாடும் நமக்கு அறிமுகமாகும்.

முன்னோர்கள் வாய்மொழியாகவே வரலாறுகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் கதைகளாகத் தலைமுறைகளுக்கு வழங்கினார்கள். உரக்க வாசிப்பது அந்த மரபைப் பாதுகாத்து இணைந்திருக்கச் செய்யும்.

ஆகவே, வகுப்பறையின் உரக்க வாசிப்பு அனுபவத்தைக் குழந்தைகளுக்கு வீட்டு அனுபவமாகவும் பெற்றோர்களால் ஆக்க முடியும். அது கூடுதலாக உறவுப் பாசத்தையும் நெருக்கத்தையும் வளர்த்துவிடும்.

உள்ளூர் இலக்கியச் சந்திப்புகளில் நிகழ்ச்சி நிரலில் உரத்த வாசிப்பை இணைக்கிறவர்கள் அருமையான பணியைச் செய்கிறவர்களாகிறார்கள். இன்று இணையவழிக் கூடுகைகளில் கூட புத்தகம் உரக்க வாசிக்கப்படுகிறது.

முன்பு, கிராமத்தில் ஒரு படித்தவர் இருப்பார். மாலை நேரங்களில் மரத்தடியிலோ மண்டபத்திலோ ஊர்ச்சாவடியிலோ ஊரார் கூடியிருக்க, அவர் இதிகாசக் கதைகளை உரக்க வாசிப்பார். காப்பியங்களை வாசித்து விளக்கங்கள் கொடுத்தவர்களும் ஊர் மக்களுக்கு அரிய தொண்டாற்றியர்கள்தான். இன்று, தேநீர்க்கடைகளில் அன்றைய நாளேடு ஒன்றை ஒருவர் உரக்கப் படிக்க, மற்றவர்கள் தேநீரோடு அந்தச் செய்திகளையும் உள்ளே இறக்கிக்கொள்வதைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

இது பெருகட்டும். கதைகளோடு, செய்திகளோடு மக்களின் பிரச்சினைகளுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் சொல்கிற புத்தகங்களும் உரக்க வாசித்து உணர்த்துகிற களப்பண்பாடாக அது பரிணமிக்கட்டும். உலக உரக்க வாசிப்பு தினம் வாழ்த்துகள்.

எழுதியவர் : 

– அ. குமரேசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *