ஃபிபனாசி தேநீர் சாலை | Fibonacci Tea Shop | ஆயிஷா. இரா. நடராசன் | Short Story | Ayesha Era. Natarasan |

 

அந்த டீ டைம் தேனீர் நிலையம் வித்தியசமான ஒன்றல்ல இப்போது இதுபோல வீதிக்கு வீதி வந்துவிட்டது. ஆனால் ஒரு விஷயம் அன்று கிளம்பும் போது தட்டுப்பட்டது. டீ மாஸ்டர், உதவியாளர், மேலாளர் எல்லாம் பெண்கள் இப்போது உடனடியாக திரும்ப அங்கே போகவேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது. எல்லாம் செல்வா எடுத்த செல்ஃபியால்தான்.

உணவுத் தர பரிசோதனை விஞ்ஞானி என்பது நீங்கள் நினைப்பது போல பெரிய ஆபிசர் உத்தியோகம் கிடையாது. விஞ்ஞானி என்று அப்துல்கலாம் கெத்தில் மார்தட்டவும் முடியாது. சாம்பார் ஊசிப்போய்விட்டதா என்பதை கண்டுபிடிக்க ஒரு படிப்பே வந்து அதில் உத்தியோகமும் ஊருக்கு ஊர் உருவாகிவிட்டது என்று (என் மனைவி போல) சிலரிடம் அசிங்கப்படுவதும் உண்டு. ஆனால் 2013ல் உலக சுகாதார நிறுவனம் அமைத்த கிறிஸ் எலியாட் உணவு பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு வல்லுநர் குழுவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற பாபுராய் பட்டேலின் உதவியாளராக இருந்தவன் நான். டாக்டர் புவியரசன் என்றால் உணவு அறிவியல் உலக அளவில் தெரியும்.

உணவு ஒருமைப்பாட்டின் எட்டு தூண்கள் எனும் அறிக்கையை நாங்கள் தான் 2014ல் தயாரித்தோம் என்பதை அடிக்கடி (என் மனைவி உட்பட) பலருக்கு ஏன் என் துணை விஞ்ஞானி செல்வாவிடம் கூட நியாகப்படுத்த நான் தவறுவதில்லை. அந்த அறிக்கையில் ஆய்வக சேவைகளின் பங்கு எனும் முழு அத்தியாயமே அடியேன் எழுதியது தான். ஆனால் செல்வா ஒரு செல்ஃபி எடுத்திருக்காவிட்டால் அந்த ‘மகளிர்’ டீ டைம் மீது இப்போது பாய்ந்தே தீர வேண்டிய நெருக்கடி வந்திருக்காது.

ஆனால் தேங்க்காட்…. அந்த செல்ஃபி இல்லை எனில் என்ன ஆகி இருக்கும்.

அன்று எங்கள் குழுவின் பரிசோதனை வல்லுனர் இந்திராவுக்கு பிறந்தநாள். செல்வாவின் நச்சு தாங்காமல் கண்ணில்பட்ட டீ டைமில் குட்டியாக அதை கொண்டாடினோம். நான் வழக்கம் போல எலுமிச்சை தேனீர். தவிர ஏலக்காய் டீ, இஞ்சி டீ, பொதினா டீ, பூஸ்டு டீ என்று டீ டைம்வாதிகள் ஒரு டஜன் தேனீர் வகையரா வைத்திருந்தனர். அவரவர் விருப்பப்படி ஏதோ ஒரு வகை தேனீர்… பிறகு சிய்ர்ஸ்…. ஹாப்பி பர்த்டே…. அப்போது ஒரு கிளிக்… செல்ஃபி ஆனால் செல்வா அந்த படத்தை எங்கள் புலனத்தில் பகிர்ந்தான்.

பொதுவாக இது மாதிரி புகைப்படத்தில் அவரவர் முகத்தை மட்டுமே பார்த்து கடந்து விடுவது மனித இயல்பு ஆனால் என் கைப்பேசி கிளியர்ஸ் பேஸ் என்று கதறிய போது நான் படத்தை டெலிட் செய்வதற்கு முன் என் மகத்தை உருபெருக்கி பார்த்தேன். அப்போது தான் என் கண்ணில் பட்டது. அந்த பின் சுவற்றில் ஒரு வாசகம். எங்கள் உணவு பாதுகாப்பு மாவட்டகுழுவையே நேற்று இரவிலிருந்து ஆட்டிப்படைக்கும் அந்த சுவர் எச்சரிக்கை.

‘இங்கு நீங்கள் அருந்தும் தேநீரால் உங்களது மனம் அல்லது உடலில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல…’ ஒ…. பிளடி!

‘இங்கே தான்…. நிறுத்துங்கள்’ என்றான் செல்வா தேநீரை உணவு பரிசோதனைக்கு  உட்படுத்துவது ..பர்த்டே கேர்ள் இந்திரா கையடக்க சோதனை கருவிகளுடன் தயாராகவே இருந்தாள். எங்கள் அலுவலக ரெக்கார்ட் கருவியோடு காசிம் மற்றும் கடைக்கு சீல் வைக்க எல்லா வகை ஆர்டர்களோடும் நாங்கள் இருந்தோம்/ எங்கள் ஜீப்பு ஓட்டுநர் குமணன் ‘இந்த இடம் தான்’ என்று நிறுத்திவிட்டு என்னை பார்த்தார்.

mmandiDESIGNS Fibonacci Sequence MUG - Ceramic Coffee or Tea Cup11oz or 15oz

‘இது வள்ளல் பாரிசந்து அதற்கு எதிரில் தான் டீ குடித்தோம்’ காசிம் தடுமாறினார். அங்கே அது இல்லை. இப்படி நடப்புது தான் என்றாலும் அந்த கட்டிடமாவது இருக்க வேண்டுமே அங்கே அதுவும் இல்லை. ஒரு சாலை உள்நோக்கி செல்கிறது. பெரிய மரக்கதவு வைத்த முதல் குட்டி கட்டிட வாயிலில் அந்த மட்டமதியானத்தில் ஒருவர் ஒருக்கலித்துபடுத்திருந்தார். வேறு ஈ காக்கா கிடையாது. அறை தூக்கத்தில் ‘வாங்க…’ என்றார். ‘பொம்பள டீ கடையா…. பதினாறாவது பில்டிங்க’ என்று முனகிவிட்டு மட்டையானார்.

யாருமே என்னை யோசிக்கக் கூட விடவில்லை… மடமடவென்று அந்த சாலையின் உள்நோக்கி கதவெண் 16 ஐ தேடி பாய்ந்தது குழு. உணவு மாசு என்பது சட்டப்படி குற்றம். தற்செயலாகவும் நுண்ணுயிரியல் அல்லது வேதி மாசுப்பட்ட உணவை நுகர்வோர்க்கு விற்று விட வாய்ப்புள்ளது. வேதி அபாயங்களில் இன்று கன உலோக சேர்க்கை, மைக்கோடாக்சின் பெரிய தொல்லை. இப்படி நடந்தால் அது கலப்படம் மட்டுமல்ல மோசடி. சிக்கன் ரைஸ், அஜினோ நூடுல்ஸ், ஷவர்மா கேஸ்கள் நூற்றுகணக்கில் வருகின்றன. இவைகளில் சீப் அண்டு பெஸ்ட் துரித உணவு துரித புற்றுநோய் வள்ளல்கள் இவர்கள்.

உள்நுழைந்த சில நிமிடங்களில் தெரிந்துவிட்டது. அந்த சாலை வழக்கமான ஒன்றல்ல. நான் கைபேசியில் மீண்டும் அந்த ‘சியர்ஸ்’ புகைப்படத்தை பார்த்து ஏதாவது தட்டுப்படுகிறதா என வியந்தேன். எண்களே வேறுமாதிரி இருந்தன. கட்டிடங்கள் ஒரே மாதிரி இல்லை. ஓட்டுநர் குமணன் அந்த செல்ஃபியை கூகுள் லென்சில் போட்டு பார்க்கிறார்.

‘ஃபிபனாசி சாலை 987’ என்று வந்தது. ‘என்னது 987 ஆ….அம்மாந்தூரம் போகணுமா’ என்றார் காசிம்…‘16வது கடைனு சொன்னாங்களே‘ என்றேன் நான். ‘இது ஃபிபனாசி சாலை தானா’ இந்திரா சந்தேகித்தார் பிறகு சட்டென்று ‘ஓ… ஃபிபனாசி…சார் ஃபிபனாசி வரிசை… ஓகே… ஓகே’ என்கிறார். பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலோ ஃபிபனாசி வரிசை என்று  வந்தது என் நினைவில் ஆடியது ‘என்னது பீபாவாசியா என்றார் காசிம்.

ஃபிபனாசி வரிசை சார் 1,2,3,5,8,13, 21 அந்த மாதிரி… ஒவ்வொரு எண்ணும் அதற்கு முன் உள்ள இரண்டு எண்களின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருக்கும்…’ இந்திரா விளக்கினார். ‘ஓ…முயல்வருமே அந்த கணக்கா’ என்றான் செல்வா.

நாங்கள் நின்ற இடத்தின் கதவு எண் பார்த்தேன். 34 என்று இருந்தது. அடுத்த கட்டிடம் 55 என்று  எண்ணிடப்பட்டிருந்தது. ‘இப்படி ஒரு சாலை நம்ம சாந்தோமில் இருக்கிறதா.’ என்றார் காசிம் நம்ப முடியாமல் ‘நம்ம கார்ப்பரேஷன் காரன் சரியே கிடையாது சார்’ என்கிறார். நடக்கும் எல்லாவற்றுக்கும் அரசாங்க சதியே காரணம் என்பது காசிமின் கட்சி.

 

Math Joke Mug - Fibonacci It's As Easy As 1-1-2-3 - Math Themed Gifts Math Related Gifts (11oz),Edge Color Coffee Mug Tea Cup Sky Bluemugs : Amazon.co.uk: Home & Kitchen

’சார்… 16வதுகட்டிடம்.. நாம் 16-வது ஃபிபனாசி எண் எது என்று கணக்கிட வேண்டும்….’ இந்திரா திறன்பேசியல் கூகுளித்தார். அது ஃபிபனாசி வரிசை 1,2,3,5,8,21 34…. இப்படியே போய் 16வது எண் 987 என்று காட்டியது. ஃபிபனாசி சாலை 987… வாவ்….  நமக்கு விடை கிடைத்துவிட்டது பள்ளிக்கூட வீட்டுப்பாட உற்சாகம் எங்கள் குழுவை திருப்தி அடைய வைத்தது.

ஃபிபனாசி சாலையில்  937 என்று எண்ணிடப்பட்ட அந்த கட்டிடம் மிக மிக பிரம்மாண்டமாக நின்றது.‘987 அறைகள்’ என்றான் செல்வா. சாலையின் முதல் கட்டிடம் ஒரு அறை… குட்டியாக மரக்கதவு வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. கண்டிப்பாக ஒவ்வொரு கட்டிடமும் ஃபிபனாசி தொடர் எண்ணின் எண்ணிக்கையில் அறைகள் கொண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படி ஒரு சாலையை வடிவமைத்தது யார். அன்று இந்திரா பிறந்தநாள் தேநீர் பார்ட்டியின் போது சரசரவென்று நுழைந்து டீ டைம் போர்டை பார்த்து டீ குடித்தபோது இதையெல்லாம் கவனிக்காதது ஏன்.

சரி இந்த 987 வது எண்ணிடப்பட்ட கட்டிடத்தில் நாங்கள் தேடிவந்த டீ டைம் தேனீர் நிலையம் எங்கு உள்ளது? அதே செல்ஃபி படத்தை மீண்டும் கூகுள் மேப்பில் நான் துழாவி செய்ய கமெண்ட் கொடுத்தபோது ஃபிபனாசி கனசதுரங்கள் ஆறாவது வரிசை என்றது. நான் உடனே ஃபிபனாசி சதுரம் ஆறாவது வரிசை என்று கூகுள் செய்தேன்/ இதோ அந்த சிம்பிளக்ஸ் வரைபடம் ஃபிபனாசிகனசதுரத்தின் ஒவ்வொரு உச்சியும் பிரதிநிதித்துவப்படுத்துவதே வரிசை எனப்படும். ஜிக்ஜாக் பகுதியளவு வரிசையாக்கம் அது இது என்று பித்து பிடிக்க வைக்கும் பலவற்றைதாண்டி அந்த டீ டைம் ஒரு வழியாக வந்தது.

என்னதான்தேநீர் நம் நாட்டின் தேசிய பானம் எனும் அளவுக்கு மக்கள் அதிகம் நுகரும் விஷயமாக இருந்தாலும் டாக்டர் புவியரசன் டெஸ்ட் என்று அடியேன் அருளிய சோதனை மிகமிக எளிமையானது. வெறும் காகித பரிசோதனைகள் இரண்டு. அதற்கு தண்ணீரே போதும். டீ தூள் அல்லது தேயிலையில் நான்கே சொட்டு தண்ணீர்…. நிறக்கலவை தெரிந்துவிடும்.  செங்கல் தூள் மற்றும் நிறமிகளை காகித த்தில் காட்டிக்கொடுக்கும். இரும்பு புளியங்கொட்டைதூள் கலப்பை அறிய மேக்னெட் டெஸ்ட். சில சமயம் நிலக்கரி தூள் கலப்பும்உண்டு. அதற்கு ஈர வடிகட்டிமுறை, கர்லின் முறையில் தேயிலையோடு தேங்காய் நார் சேர்ந்திருந்தால் பிழிப்பு முறையில் கண்டறியலாம்.

‘பூமிராஜா வந்துவிட்டார் ‘டீ டைமில் யாரோ உரக்க சொல்கிறார்கள். தேநீர் காதலர்கள் என்று உள்ளே ஒரு துணை அறை இருந்தது பன்னிரெண்டு பேர் வட்டமாக அமர்ந்து தங்கள் தேநீருக்கு காத்திருந்தனர்.

‘ஒவ்வொரு மூன்றாம் ஃபிபனாசி எண்ணும் இரண்டால் வகுப்படும்’ என்றார். தாடி வைத்திருந்தவர். பிறகும் விடவில்லை.‘ஒவ்வொரு நான்காம் ஃபிபனாசி எண்ணும் 3ல் வகுபடும் ஒவ்வொரு ஆறாவது ஃபிபனாசி எண்ணும் எட்டால் வகுபடும்…’  இப்படி சொல்லிக்கொண்டே போனார்.

நீண்ட தலை முடிகாரர் சிரித்தார்…‘ஆனால் லியோனார்டோ ஃபிபனாசியை உலகம் மறந்துவிட்டது’ என்றார். ‘ஃபிபனாசி இருந்திருக்காவிட்டால் இந்த உலகத்திற்கு 1,2,3 எழுதத் தெரிந்திருக்காது

சப்பை மூக்குக்காரர் மத்தியில் இருந்து‘ஆதி வேட்டைக்கார மனிதர்கள் ஃபிபனாசியின் தங்க விகிதத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்….’ என்றார். ‘மலர்கள் மலர்வதிலிருந்து வானில் நட்சத்திர அமைப்பு வரை கோல்டன் ரேஷியோ எல்லாவற்றிலும் நிறைந்து கிடக்கிறது.

மசாலா டீயில் எத்திலீன் ஆக்சைடு கலப்பு இருக்கிறதா என்று பார்க்க வந்தவன் இந்த 12 பேர் வட்டத்தை விட்டு வெளியேற முடியாமல் திணறுகிறேன் ஏதோ ஒன்று என்னை அங்கே கட்டிப்போட்டது. ஏனெனில் நானும் ஒரு தேநீர் காதலன்.

‘ஐம்புலன்களையும் ஒரு முகப்படுத்திட கோல்டன் ரிஷியோ ஃபிபனாசி டீ… இந்த பிரபஞ்சத்திலேயே வேறு எங்குமே கிடைக்காது’ என்றபடி கடையின் பெண் உதவியாளர் தேநீர் குவளைகளுடன் நுழைகிறார்.

ஒன்று முதல் பன்னிரெண்டு வரை தேநீர் குவளைகளின் அளவு மாறுபட்டது. 12வது நபர் 144 மில்லி பெரிய குவளையில் தேநீர் அருந்தியபோது 1,2,3,5,8,13,21, என்று மற்றவர்கள் 89 மில்லி வரை வரிசைகரமாக ‘சியர்ஸ்’ என்றனர். ‘இன்று ஃபிபனாசி தினம்.‘எனக்கு ஒரு குவளை தேநீர் பிளீஸ்’ என்றேன் வெட்கமின்றி.

இவர் தான் பூமிராஜா’ என்றார் அந்த பெண் உதவியாளர். 12 பேரும் சிரித்தார்கள். நான் அசடு வழிந்தேன் ஓ… டாக்டர் புவியரசன் என்பது இப்படி மாறிவிட்டதா. டீமேனியா என்பது இன்சோமேனியா போலத்தான். பிடித்தால் விடாது என்கிறான் செல்வா.

‘ஓகே,,,, சார்,,, இதோ நாங்கள்’ டீ டைம் கடை பெண்சிப்பந்திகள் வரிசையாக வந்தனர். என் குழுவினர் எங்கே என்று நான் அப்போதும் தேடவில்லை… இவர் தட்சிணா, இது சந்திரா, சனீமியா, அங்காளி, வெள்ளினா, செவ்வியா, நெப்டினா, புதனிகா, யுரேனியா…’

‘சார்…. புரிகிறதா…’ எங்கிருந்தோ செல்வாவின் குரல் மீண்டும் கேட்கிறது.‘இந்த பெண்கள் யாவரும் நாம் சூரிய மண்டல கோள்கள்…சார்’

‘நெப்டினா, புதனிகா… ஓ…புரிகிறது’. என்றேன் நான்.. பாவத்தின் சம்பளம் மரணம், உயிர்த்திருத்தலின் அடையாளம் தேநீர்.

‘ஆனால் பூமிராஜா நீங்கள் தான் சார்’ யாரோ சொல்கிறார்கள்… இந்த 12 பேரும் ராசி மண்டலர்கள் சார்… மீனர், கும்பர், கடகர், மகரர்….’ அய்யோ… எல்லாமே ஃபிபனாசி எண்களின் மாயா ஜாலம்…’ அனைத்து ராசியினருக்குமான ஒப்பற்ற பரிகாரம் திருமணம் ஆகவில்லையா… வேலை அமைய வேண்டுமா… தேநீரே தீர்வு..

Maths lovers mug for Maths teachers, Mathematicians, Mathematics subject, Fibonacci Mug image 1

‘கோல்டன் ரேஷியோ அதாவது தங்க விகித ஃபிபனாசி தேநீர்…. அந்த  எண்கள் மாதிரியே உங்களுக்குள் செயல்படும் 1,2,3 நாட்கள் எந்த அறிகுறியும் இருக்காது… இயல்பாக இருப்பீர்கள் 5, 8, 13 என்று அந்த நாட்கள் ஆகும்போது ஜலதரங்கம் ஆரம்பமாகும்… உடம்பிற்குள்… ஃபிபனாசி வேலை செய்வார்….’ பர்த்டே கேர்ள் இந்திரா எங்கிருந்தோ பேசிக்கொண்டிருந்தார்.’ ‘எங்கள் சார் அப்படித்தான் மாட்டிக்கொண்டார்.’

ஆனால் உலகின் புனித எண்ணை அழைத்திருக்கிறேன்’ என்றான் ஓட்டுநர் குமணன் 108 சாதாரண எண்ணல்ல… பெண்டாகிராம் எனும் ஐவரையின் ஒருமித்த மையம்…. ஃபிபனாசியின்  12 இலக்கங்களின் நிரல் அமைப்பு 108 என்று டீ டைம் மேலாளரிடம் விவரிக்கிறேன் நான்.

‘இரண்டு உலகங்களில் சார் தத்தளிக்கிறார்’ என்றார் அவர்.

உணவுத் தரக் கட்டுப்பாடெல்லாம் ஃபிபனாசி தேநீருக்கு முன் நிற்காது. அவனவன் மாட்டுகோமியம் விற்கிறான். தில் இருந்தால், திராணி இருந்தால், போய் டெஸ்ட் பண்ணுங்க. யாரோ கத்தினார்கள்.

‘இந்த ஃபிபனாசியை எங்கே இருந்துதான் பிடிச்சாரோ… ஒரு வாரமாக இப்படி’ என்கிறாள் என் மனைவி. 108ல் என்னோடு ஏறினாள். வண்டி கிளம்பும் போது ‘ஒரு டீ சாப்பிடலாமா பிளிஸ்’ என்றேன் 108 ஓட்டுநரிடம் அவர் அதே சுவர் அறிவிப்பை காட்டுகிறார். நிர்வாகம் பொறுப்பல்ல. பிறகுதான் கவனித்தேன் அன்று இந்திரா பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து தேநீர் காதலர்களுமே அந்த 108ல் இருந்தோம்.

மொத்தம் எட்டு பேர்… ஐந்தாவது ஃபிபனாசி எண் என்று நான் சொன்னதை யாரும் கண்டுகொள்ளவில்லை

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *