கால்பந்து பொருளாதாரம்
சித்தார்த்தன் சுந்தரம்
உலகக் கால்பந்து போட்டி (FIFA World Cup 2026) வரலாற்றிலேயே ஜுன் 11 ஆம் தேதி மெக்சிகோவில் ஆரம்பித்த 23 ஆவது பிஃபா உலகக் கோப்பை போட்டிதான் மிகவும் பெரியதாகும். இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன, ஜுலை 19 ஆம் தேதி வரை அதாவது, 39 நாள்கள் இந்தப் போட்டிகள் முதல் முறையாக மூன்று நாடுகளில் (அமெரிக்கா, கனடா, மெக்சிகோ) உள்ள 16 நகரங்களில் நடைபெற இருக்கின்றன.
இந்த உலகக் கோப்பை போட்டிகள் குறித்து பல சுவராசியமான தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் பல ஊடகங்களும், பொருளாதார அமைப்புகளும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அவற்றில் இருந்து சில சுவராசியமான புள்ளிவிவரங்களை நாம் இப்போது பார்க்கலாம்.
- 3 நாடுகள், 16 நகரங்கள், 48 அணிகள், 104 போட்டிகள். இதில் 13 போட்டிகள் மெக்சிகோவிலும், 13 போட்டிகள் கனடாவிலும் மீதமுள்ள 78 போட்டிகள் அமெரிக்காவிலும் நடைபெறும். கால் இறுதி ஆட்டத்திலிருந்து நியூஜெர்சியில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டி வரை அமெரிக்காவில் உள்ள பல நகரங்களில் இப்போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
- 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை 13, 1934 ஆம் ஆண்டு – 16, 1938 – 15, 1998-2022 – 32.
- பங்கேற்கும் மொத்த விளையாட்டு வீரர்கள் 1,248. இதில் முதன் முதலாக உலகக் கோப்பை போட்டிகளில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கை 891
- உலகக் கோப்பையில் முதன் முதலாக பங்கேற்கும் நாடுகள் – கேப் வெர்டி (Cape Verde), கியூராசாவோ (Curacao), ஜோர்டான், உஸ்பெக்கிஸ்தான்.
- மொத்தப் பரிசுத் தொகை 665 மில்லியன் டாலர். இதில் வெற்றி பெறும் சாம்பியன் அணிக்கு முதல் பரிசு 50 மில்லியன் டாலர், இரண்டாவது பரிசுத் தொகை 33 மில்லியன் டாலர், மூன்றாவது பரிசுத் தொகை 29 மில்லியன் டாலர். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் உத்ரவாதப் பரிசுத் தொகை 12.5 மில்லியன் டாலர் ஆகும். .
- போட்டியைக் காண்பதற்கான நுழைவுக் கட்டணம் ஆரம்பகட்ட போட்டிகளுக்கு 140 டாலர் முதல் 2,735 டாலர் வரை. இறுதி கட்டப் போட்டிகளுக்கு 4,185 டாலர் முதல் 10,990 டாலர் வரை. இது 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளுக்கு 25 டாலர் முதல் 75 டாலர்களாகவும், இறுதி கட்டப் போட்டிகளுக்கு 180 டாலர் முதல் 475 டாலர்களாகவும் இருந்தன.
- ஒரு பக்கம் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளுக்கிடையே பலபரீட்சை நடந்து வந்தாலும், எந்த நாடு சாம்பியன் கோப்பையை வெல்லும் என்பதைக் கணிப்பதிலும் கடுமையான போட்டி இருப்பது தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, ஸ்பெயினுக்கான வாய்ப்பு (16.5%), ஃபிரான்ஸ் (16%), அர்ஜெண்டினா (14.5%), பிரேசில் (11.3%), போர்ச்சுக்கல் (11.3%)
- 39 நாள்கள் நடக்கும் போட்டியின் காரணமாக உலகளவில் பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் தாக்கங்கள் நம்பிக்கையூட்டுகின்றன. பார்வையாளர்களின் வருகையால் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பொருளாதார நடவடிக்கைகள் உருவாகி, விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போட்டி நடைபெறும் நகரத்தின் ஹோட்டல்களுக்கானத் தேவை சாதனை அளவுக்கு அதிகரிப்பதோடு பார்வையாளர் வருகையால் உள்ளூர் வணிகங்களும் பயனடையும்.
- பிஃபாவுக்கு தொலைக்காட்சி உரிமை, ஸ்பான்சர்ஷிப், டிக்கெட் விற்பனை, விருந்தோம்பல், மறுவிற்பனைச் சந்தை (secondary ticket transactions) மூலமாக 13 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
- வருமானத்தில் பெரும்பகுதி பிஃபாவுக்குக் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான செலவுகளை (பாதுகாப்பு, போக்குவரத்து, தயார்நிலைக்கு விளையாட்டரங்கை ஆக்குவது, பொது சேவைகள், அவசரகால பாதுகாப்பு ஆகியவற்றிற்கு) போட்டி நடக்கும் நாடுகளும் அந்த நாடுகளைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- இந்தப் போட்டிகளுக்காக மேம்படுத்தப்படும் போக்குவரத்து வசதிகள், தரம் உயர்த்தப்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு, வலுவான சுற்றுலா அடையாள உருவாக்கம் (tourism branding) மற்றும் கால்பந்தில் அதிகரித்த பங்கேற்பு போன்றவை மூலம் நீண்டகால நன்மைகள் ஏற்படுவது மிகவும் உறுதியானவையாகத் தெரிகின்றன. இந்த காலகட்டத்தில் பல மில்லியன் அளவுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் ஃபிஃபா அமைப்புக் கணித்திருக்கிறது.
- இந்தியா இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் உலகக் கோப்பை கால்பந்து சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் இங்கும் சூடுபிடித்துள்ளன
- உலகக் கோப்பை தொடர்பான தகவல்களைப் பார்ப்பதிலும் வாசிப்பதிலும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலக அளவில் அதிக ஈடுபாடு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 90 நாட்களில் இந்தியப் பயனர்கள் இப்போட்டி தொடர்பான இணையப் பக்கங்களை 9.7 மில்லியன் முறை பார்வையிட்டுள்ளதாக ‘டபூலா’ (Taboola) நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன; இது உலகளாவிய கால்பந்து விளையாட்டின் மீது இந்தியர்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
- இந்த ஆர்வம் பல்வேறு துறைகளில் வணிக வாய்ப்புகளாக மாறி வருகிறது. இதன் மூலம் விளம்பரதாரர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு அதிகப் பயனாளர்களை சென்றடைவதற்கான சந்தைப்படுத்தல் வாய்ப்பு உண்டாகியிருக்கிறது
- இந்தியாவில் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ‘ஜீ’ (Zee), விளம்பர விற்பனைக்கான கால அவகாசம் குறைவாக இருந்தபோதிலும், ஏற்கனவே ஒரு டசனுக்கும் மேற்பட்ட விளம்பரதாரர்களை இணைத்துக் கொண்டுள்ளது. ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் இப்போட்டியை ஏராளமானோர் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில், வாகன உற்பத்தி, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG), வங்கி மற்றும் நிதிச் சேவைகள் (BFSI), குளிர்பானங்கள், தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை (lifestyle) சார்ந்த நிறுவனங்கள் முக்கிய விளம்பரதாரர்களாகக் களமிறங்கியுள்ளன.
- நிறுவனங்களைப் பொறுத்தவரை, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களிலும் பார்வையாளர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பெறக்கூடிய ஒரு அரிய தளமாக உலகக் கோப்பை அமைகிறது.
- முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, சில்லறை விற்பனைக் கடைகளில் கால்பந்து சார்ந்த அனுபவங்களை உருவாக்கவும், போட்டி நடைபெறும் நாட்களில் ஆட்டங்களை ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளது. பிரபல துரித உணவகச் சங்கிலி நிறுவனம் ஒன்று பிஃபா கருப்பொருளைக் கொண்ட சிறப்பு உணவு வகைகளை அறிமுகப்படுத்த உள்ளது; அதேவேளையில், நுகர்வோர் மின்னணு சாதன நிறுவனங்கள் தொலைக்காட்சிப் பெட்டி கொள்முதல் மற்றும் வீட்டிலிருந்தே போட்டியைப் பார்க்கும் அனுபவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய விளம்பரச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் கவனத்தையே ஈர்க்கும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களை யார்தான் இழக்க விரும்புவார்கள். போரினால் கடந்த சில மாதங்களாகச் சரிந்து வரும் பொருளாதாரம் பிஃபாவினால் ஓரளவுக்கு எழுச்சி பெறும் என நம்பலாம்.
எழுதியவர்:
சித்தார்த்தன் சுந்தரம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


கிரிக்கெட், கால்பந்து இரண்டும் ஒரு பெரிய பொருளாதாரம் தான்.
சேதுராமன் சாத்தப்பன், திருச்சி