வேலைக்காகப் போராடுவோம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

வேலைக்காகப் போராடுவோம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)



வேலையின்மை என்னும் பூதம் நாட்டைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நாட்டைப் பீடித்தபின்பு, அதனைத்தொடர்ந்து அவசரகதியில் அறிவித்த சமூக முடக்கம் தொழிற்சாலைகளிலும், சிறிய வர்த்தக நிறுவனங்களிலும், சேவைத் துறைகளிலும், எல்லாவற்றிற்கும் மேலாக முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருந்த கோடிக்கணக்கானவர்களும் தங்கள் வேலைகளை இழந்து விட்டார்கள்.

கோவிட்-19க்கான சமூக முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பேகூட, வேலையின்மை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்திருந்தது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதும் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களையும் வர்த்தகப் பிரிவினரையும் கடுமையாகப் பாதித்தன. இவற்றின் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம் செங்குத்தாக உயர்ந்தது. 2017-18இன் காலமுறை தொழிலாளர் படை ஆய்வறிக்கை (PLFS-Periodic Labour Force Survey), (இதனை வெளிவரவிடாமல் நசுக்கிட அரசாங்கம் முயற்சித்தது), கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகிதம் அதிகரித்திருப்பதாகக் காட்டியுள்ளது. 2018-19க்கான ஆய்வறிக்கையும் இதேபோன்ற சித்திரத்தையே அளித்துள்ளது.

2019ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு ஸ்தாபனமும் (NSSO-National Sample Survey Organisation), இதேபோன்று ஓர் ஆய்வறிக்கையை அளித்துள்ளது. இதன் ஆய்வறிக்கையில் காணப்படும் விவரங்கள் மிகவும் அபாயகரமானதாகும். 2019இல் 15 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் கிராமப்புற ஆண்களில் 67 சதவீதத்தினரும், கிராமப்புற பெண்களில் 21 சதவீதத்தினரும், நகர்ப்புற ஆண்களில் 71 சதவீதத்தினரும், நகர்ப்புற பெண்களில் 19 சதவீதத்தினரும் மட்டுமே ஏதோ ஒருவிதத்தில் குறைந்தபட்ச ஆதார வேலையில் (remunerative work) பங்கேற்றிருப்பதாகக் கூறியுள்ளது.

மார்ச் மாதத்தில் கடைசி வாரத்தில் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே வேலைவாய்ப்பு நிலைமை மோசமாகத் தொடங்கிவிட்டது. சமூக முடக்கத்தை விலக்கிக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகள் கொஞ்சம் புதுப்பிக்கப்பட்டபின்னரும் கூட, முன்பு இருந்த வேலைகள் அனைத்தையும் மீளவும் நிரப்பிடவில்லை. வேலைவாய்ப்பு அளவு என்பது, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பிருந்த நிலையைவிடக் குறைவாகவே இருக்கிறது.

சிஎம்ஐஇ என்னும் இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிப்பதற்கான மையம் (CMIE-Centre for Monitoring Indian Economy) என்னும் தனியார் ஆய்வு அமைப்பு ஒன்று, வேலைவாய்பு நிலைமைகள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இதற்காக அது பயன்படுத்திய மாதிரி, முறைசாராத் தொழிலாளர்களில் மிகவும் குறைவேயாகும். அதன் விளைவாக, சிஎம்ஐஇ வேலையின்மை பிரச்சனையைக் குறைத்தே மதிப்பிட்டுள்ளது. சமூக முடக்கத்தின்பின் மீட்பு குறித்து அதீதமாகவே மதிப்பிட்டிருக்கிறது. அப்படி இருந்தும்கூட, சமீபத்திய அதன் மாதாந்திர தரவு, அக்டோபர் மாதத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.9 சதவீதம் என்றும், தேசிய வேலையின்மை விகிதம் 6.89 சதவீதம் என்றும் காட்டியுள்ளது.



சமூக முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டபின், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலை அளிப்பது என்பதும் பலமிழந்து தேய்ந்துபோய்க்கொண்டிருப்பதையேக் காட்டி இருக்கிறது. செப்டம்பரில் 265 மில்லியன் மனிதநாட்கள் வேலை இருந்தது என்பதுடன் ஒப்பிடும்போது, இப்போது அக்டோபரில் அது வெறும் 173 மில்லியன் மனித நாட்களே இருந்திருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் விரிவான அளவில் இருப்பது, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் துன்ப துயரங்களை அதிகரித்திருக்கிறது. ஒரு நிரந்தரமான உறுதியான வருமானம் இல்லாமல், அவர்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுக்காக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது என்பதோ, தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவது என்பதோ, ஏன் தங்களின் அன்றாட உணவுக்கான செலவுகளைக்கூட ஈடுசெய்வது என்பதோ முடியாது.

தேசிய குற்றப்பதிவேட்டு பீரோவின் அறிக்கையின்படி, 2019இல் நாட்கூலித் தொழிலாளர்கள் தற்கொலைகள் செய்துகொள்வது அதிகரித்திருக்கிறது. 2020இல் வேலை இழப்புகள் பிரச்சனைகளை மேலும் மோசமாக்கிடும். ஆனாலும், மோடி அரசாங்கம், மக்களின் பிரச்சனை இவ்வளவு மோசமாக மாறியுள்ளபோதிலும் அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது முரட்டுத்தனமாக இருந்துவருகிறது.

மத்திய அரசின் சார்பில் மிகவும் அற்ப அளவில் அளிக்கப்பட்ட ஊக்குவிப்பு நிதித்தொகுப்பும், மக்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளக்கூடிய விதத்திலோ, வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய விதத்திலோ இல்லை. மத்திய அரசாங்கம், வாழ்வாதாரங்களை இழந்து அவதிக்குள்ளாகி இருக்கிற மக்களுக்கு உதவக்கூடிய விதத்தில் ரொக்க மாற்று அளித்திடத் தவறிவிட்டது. மத்திய மாநில அரசாங்கங்களிலும், அரசாங்க சார்பான நிறுவனங்களிலும் பல லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன.

தற்போது பீகாரில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரத்தில், மக்களுக்கு வேலை அளிப்பதன் முக்கியத்துவம் நன்கு தெரிந்தது. பீகாரில் போட்டியிடும் மகாகத்பந்தன் கூட்டணி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்து லட்சம் அரசாங்க வேலைகள் அளிக்கப்படும் என்று அளித்துள்ள உறுதிமொழி, மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் கோரிக்கையை சாதி, மதங்களைக் கடந்து அனைத்துத்தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள். தேர்தல்முடிவுகள் எப்படி இருந்தாலும், பீகார் தேர்தல் பிரச்சாரம் வேலைகள் உருவாக்க வேண்டியதன் தேவையைக் கூர்மையாகக் கவனப்படுத்தி இருக்கிறது.

எனவே, வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தை முன்னுரிமை கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இளைஞர் இயக்கம், வேலைக்கான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பிரதான பங்கினை வகிக்க வேண்டியது அவசியமாகும். எனினும், இது அனைத்துத்தரப்பினரும் கவலை கொள்ள வேண்டிய மிகவும் விரிவான அளவில் உள்ள பிரச்சனையாகும். இதன்மீது உழைக்கும் மக்களின் அமைப்புகளாக விளங்கும் தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள் அனைத்தும் கவனம் செலுத்த வேண்டும். வேலையில்லாதோர் பட்டாளத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் இருக்கிற தொழிலாளர் வர்க்கத்தினர்தான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரையும் அணிதிரட்ட வேண்டும்.



வேலைவாய்ப்புக்கான போராட்டத்தில் முக்கியமாக பெண்களையும் அணிதிரட்ட வேண்டும். ஏனெனில் மிகவும் கணிசமான அளவிற்கு பெண்கள் வேலையின்றி இருந்து வருகிறார்கள்.

படித்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு ஆதாயம் அளிக்கக்கூடிய வேலை எதுவும் கிடைக்காமல் இருண்ட எதிர்காலத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான அனைத்துத்தரப்புப் பிரிவினரும் வேலைக்கான போராட்டத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

வேலையற்றவர்களுக்கு வேலையில்லா காலத்திற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து மாநிலங்களிலும் ஒன்றுபட்ட போராட்டம் நடத்த கவனம் செலுத்த வேண்டும். இத்துடன் வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் அளித்திட வேண்டும் என்கிற கோரிக்கையையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கொண்டுவர வேண்டும். மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டு, குறைந்தபட்சம் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டியது அவசியம். அதேபோல் அவர்களின் ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும். அரசிடம் அளவிடற்கரிய உணவு இருப்பு இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நவம்பருக்குப் பின்னரும் மக்களுக்கு இலவசமாக உணவு தான்யங்கள் அளிக்கப்படுவது தொடரப்பட வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

இறுதியாக, மத்திய மாநில அரசுகள் தங்களின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட. போர்க்கால அடிப்படையில் முன்வர வேண்டும்.

(நவம்பர் 4, 2020)



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *