திரைப்பட தணிக்கை சட்ட திருத்த மசோதா பாசிசத்தின் ஒரு துளியே

Film Censorship Act Amendment Bill is a drop of fascism article by M. Sivakumar. Book Day And Bharathi TV are Branch of Bharathi Puthakalayam.



பாசிஸ்டுகளுக்கு அடிப்படையில் ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை கிடையாது. ஜனநாயகம் என்பது ஒரு தோல்வியடைந்த கோட்பாடு என்று நினைப்பவர்கள். கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் ஒரு பாசாங்கு என நினைப்பவர்கள். மக்கள் என்பது அவர்களுக்கு ஒரு கூட்டம், அந்த கூட்டம் எப்போதும் அரசு அதிகாரத்தின் கீழ் மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அதற்காக எதையும் செய்வார்கள். வர்க்கம், வர்க்க உணர்வுகளை விட தேசமே முக்கியம் என பிரச்சாரம் செய்பவர்கள்.

பாசிஸ்டுகள் அதிகமாக பயப்படுவது கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவு சார் உழைப்பாளிகளை பார்த்துதான். அவர்களை ஒடுக்க முதலில் சட்டங்களை உபயோகிப்பார்கள், முடியா விட்டால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

தேச பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக இதைத்தான் மோடி அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. பழங்குடிகளுக்கு போராடி நேற்று சிறையில் இறந்த 83 வயது அருட் தந்தை ஸ்டேன்ஸ் மிக சமீபத்திய உதாரணம்.

என்ன செய்தாலும் சில திரைப்பட இயக்குனர்களும், கலைஞர்களும் குறிப்பாக ஆவணப்பட இயக்குனர்களும் அடங்க மறுக்கிறார்களே என்றுதான், கடந்த ஆண்டே, திரைப்பட தணிக்கை மறுக்க பட்டால் மேல் முறியீட்டுக்கு போகும் உரிமையை பறித்தது. அதன் தொடர்ச்சியைத்தான் இப்போது இன்னொரு திரைப்பட தணிக்கை சட்ட திருத்தமாக பார்க்கிறோம்.

எத்தனையோ திரைப்படங்கள் இன்றளவும் அரசுக்கு எதிராக, அரசின் ஆணவ போக்குக்கு எதிராக, கலை நயத்தோடு, நல்ல கதை விவரிப்போடு வந்து விடுகிறது. பாசிஸ்டுகள்தான் முட்டாள்களாயிற்றே, அத்தகைய படைப்புகள் வெளி வந்த பிறகுதான், ஓ! நமக்கு எதிரான படைப்பு என உணர்கிறார்கள். (கிழக்கு ஐரோப்பிய சினிமா வரலாற்றை படித்தவர்களுக்கு இது நன்றாகவே புரியும்)

இதை தடுக்கத்தான், இப்போதைய திரைப்பட சட்ட திருத்த மசோதா. எங்கே அதெற்கென்று ஒரே ஒரு சட்டத்திருத்ததை இயற்றினால் புரிந்து கொள்ள போகிறார்களே என்று கூடவே ஒப்புக்கு வேறிரு சட்ட திருத்தங்களையும் சொல்லி இருக்கிறார்கள். கீழ் வருவதுதான் அந்த சட்ட திருத்தும்:

18/06/2021 தேதியிட்ட இந்திய அரசின் சினிமாத்தொக்ராப் சட்ட திருத்தம் பற்றிய அறிவிப்பு மூன்று திருத்தங்களை சொல்கிறது:



முதல் திருத்தம்

6 AA பிரிவில் சொல்லப்படும் திருத்தம் சினிமா படைப்பு piracy குறித்தது – படைப்பாளி/தயாரிப்பாளர் அனுமதியின்றி நவீன தொழில் நுட்ப உதவி கொண்டு குறிப்பிட்ட படைப்பையோ அல்லது படைப்பின் பகுதியையோ டிஜிட்டல் பொது வெளியில் விடுவது குற்றமாகும், அதற்கான தண்டனை இப்போது கடுமையாக்க பட்டுள்ளது. குறைந்த பட்சம் மூன்று மாதம் முதல் அதிக பட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபாரத தொகையாக குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாயிலிருந்து அதிக பட்சம் படைப்பு உருவாக்க செலவில் 5 சதவீதம். இதில் எதோ ஒன்றோ அல்லது இரண்டுமே தண்டனையாக இருக்கலாம்.

(இந்த திருத்தும் குறித்து பெரிதாக எதிர்ப்பு வரப்போவதில்லை. இந்தியாவில் உருவாகும் படைப்பு, உலகெங்கும் டிஜிட்டல் வடிவில் வெளியாகிறது. அது உலகின் எதோ ஒரு பகுதியில் நவீன தொழில் நுட்பம் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு, உலகெங்கும் இன்னொரு தொழில் நுட்பம் கொண்டு பதிவிறக்கம் செய்ய படுகிறது. இதை தடுக்க முடியுமா என்பதே கேள்வி, அப்படி தடுக்க முடியுமானால், அதற்கும் தொழில் நுட்பம்தான் தேவை.)

இரண்டாவது திருத்தம்

5A பிரிவில் பொது வெளியில் திரைப்படத்தை காண்பிக்க திரைப்பட சான்றிதழ் வழங்குவது. இதில் U/A என்ற சான்றிதழ் எல்லோரும் பார்க்க கூடியது என்று அர்த்தம். இதில் சொல்லப்படும் திருத்தம், இனி U/A என்பது U/A 7+, U/A 13+ என்ற பிரிவுகளோடு இருக்கும். அதாவது 7 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் பார்க்க கூடியது, 13 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் பார்க்க கூடியது.

(இந்த திருத்தம் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை.)

மூன்றாவது திருத்தம்

இந்த திருத்தம்தான் முற்றிலுமாக ஏதிர்க்க படவேண்டியது. ஏன்?

திரைப்படத்தை பொது வெளியில் காண்பிப்பதற்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரம் மத்திய திரைப்பட தணிக்கை குழுவிற்கு மட்டுமே உண்டு என்பதுதான் தற்போதைய சட்டம். இதில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று 1991 ம் ஆண்டு கர்நாடகா உயர் நீதி மன்றமும், 2000ம் ஆண்டு உச்ச நீதி மன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

இதைத்தான் தற்போது மத்திய அரசு திருத்தம் மூலமாக மாற்ற வேண்டும் என்கிறது. அதன் மூலம் மத்திய அரசு நினைத்தால், ஏற்கனவே சான்றிதழ் வழங்க பட்ட திரைப்படத்தை, மீண்டும் தணிக்கை குழு பார்த்து புதிதாக சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை குழுவிற்கு உத்தரவிட மத்திய அரசிற்கு உரிமை உண்டு என்பதாகும். ஏற்கனவே உள்ள சட்டத்தின் படி, ஒரு முறை சான்றிதழ் வழங்கினால் அது என்றென்றைக்குமானது என்பதாகும்.

(இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டால், படைப்பாளியின் சுதந்திரம் பறி போகும், படைப்பாளி/தயாரிப்பாளர் பொருளாராத ரீதியாக மற்றும் தொழில்ரீதியாக பல இன்னல்களுக்கு உள்ளாவர். சுருக்கமாக சொல்லப்போனால், மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் அமைப்பே அர்த்தமற்றதாகி விடும். படைப்பு சுதந்திரம் என்பது மத்திய அரசின் காலடிக்கு போய் விடும்.)

எம். சிவகுமார்,
தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.