மாசி வீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : மாசி வீதியின் கல்சந்துகள்
பக்கம் : 260
விலை : ரூ. 320
ஆசிரியர் : சீனு ராமசாமி
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
நூலைபி பெற : 44 2433 2924
தமிழ் கவிதைகள் தற்போது நவீன கவிதைகளில் இருந்து விடுபட்டுள்ளது. நவீன கவிதைகளின் காலமும் இடமும் சூழலும் இன்று கிடையாது. அகாலமும் மனிதரிடத்தே மாறும் தன்மை கொண்டதே. ஆனால் தற்காலத்தில் மேம்பட்ட துணுக்குகளே அதிகம் எழுதப்படுகின்றன. அவையே கவிதை என கருதப்படுகின்றது. ஒரு கவிதைக்கு உரிய பலமுனைப் பண்பு இவற்றில் இருப்பது கிடையாது. இத்தன்மைக்கு மத்தியில் துணுக்கற்ற இடத்துக்கு தன் கவிதையை நகர்த்தி வைக்க ஒருவன் துணிவான் எனில் அவனை முதன்மை வரிசைக்கு தகுதி உடைய கவிஞன் என சொல்லி விட முடியும். அந்த வகையில் சீனு ராமசாமி கவிதைகளை முதன்மை வரிசையில் நின்று பணி துவங்கும் கவிதைகள் எனலாம்.
” திருடனின்
வன்மமும்
அபகரிப்புக் கொலையும்
கூடிய
இரவில்
எல்லோரையும்
சரித்தவன்
ஏனோ ஒரு கணம் நின்றான்
இரத்தத்திட்டுகள்
மேலே சிணுங்கல் இசை
தூளியை அசைக்க
குழந்தை சிரித்தது
அவனும் சிரித்தான்
அவ்வீடும் சிரித்தது “
சீனு ராமசாமியின் மாசி வீதியின் கல்சந்துகள் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நல்ல கவிதைகளில் ஒன்று இது. இத்தொகுப்பில் இது போல சிறந்த கவிதைகள் பத்துக்கும் அதிகமாக உள்ளன. மாயன் மாமா, நில மகள், துணை, அவன் உடல், அன்பில் பெரிது ,கவிச்சிப் பெண் ,அவர்கள் போன்ற கவிதைகள் சீனு ராமசாமியை கவிஞன் என அடையாளம் காட்டக் கூடியவை
தவிரவும் சிறந்த வாக்கியங்கள் இத்தொகுப்பில் நிறைய வருகின்றன.
” ஒவ்வொரு முறையும்
ஒருவனைத் தள்ளி விடும் போதும்
அவனை மேலே கொண்டுவரும்
கண்ணுக்குத் தெரியாத
கை ஒன்று இருக்கிறது “
என்பது போல
“உருவமில்லாத் தெய்வத்துக்கும்
கையுண்டு
வெட்டுடையாளுக்குக்
காசுண்டு
இளைத்தவர் அழைக்கத்தான்
தெய்வங்கள்
இந்த மண்ணில் உண்டு
என்பது போல
” நஞ்சைக் கூடத்
தின்று உயிர் பிழைப்பேன்
நஞ்சை சமைக்க
எண்ண மாட்டேன் “
என்பது போல
“ஒருவனை நிராகரிக்கும் போது
மட்டும் சற்று கவனமாக இருங்கள் “
என்பது போல பலவரிகள் இத்தொகுப்பில் உள்ளன.பொதுவாக இவரது பிரச்சினை என குறிப்பிட வேண்டுமானால் கவிதையில் அதிகம் விளக்க முயற்சிப்பவராக இவர் இருக்கிறார். பல கவிதைகளில் கவிதை முடிந்த பின்னரும் விளக்கி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அவசியம் இல்லை. கவிஞன் தன் வாசகனை மிகவும் நுட்பமானவன் என கருதவேண்டும். அப்படி அல்லாதவனுக்காக கவிஞன் சொல்லவேண்டியது ஏதும் கிடையாது. அவனுக்கு விளக்கத் தொடங்கும் முன்பே கவிதை சென்று சேர்ந்து விடக் கூடியது.
உதாரணமாக ” யாரோ எவரோ ” என்கிற கவிதையில்
“யாரோ தடுக்குகிறார்கள்
யாரோ தட்டிவிடுகிறார்கள்
யாரோ எவரோ
தெரிந்தும் தெரியாது என்ற
பாவனையில்
நடிக்கிறார்கள்
யாரோ எவரோ
அமைதியாக விபரீதத்துக்கு முன்
எழுந்து சென்று விடுகிறார்கள் “
இந்த கவிதை விக்ரமாதித்யன் சாயல் கொண்ட ஒரு கவிதை. சொல்ல வந்த விஷயம் இத்துடன் முடிந்தாயிற்று. ஆனால் மீண்டும் நிறைய பேசுகிறார் .நல்ல தொடக்கத்துடன் எழுச்சியுடன் எழும் கவிதைகள் விளக்கும் தன்மையால் தடம் விலகிச் சென்று விடுகின்றன .
எது எவ்வாறாயினும் சில கவிதைகள் சீனு ராமசாமியை “இவன் கவிஞன் “என வாசகனுக்கு ஓங்கிச் சொல்லி விடுகின்றன. அத்தகைய கவிதைகளில் ஒன்று “நிலமகள் ”
“தோட்டத்துப்
பழங்களைத் தட்டில் தாங்கி
தலைக்கு மேல்
தூக்கியபடி
ஓடி வந்து
காட்டுகிறாள்
பூத்த சட்டை பாவாடையுடன்
மணல் வரைந்த ஓவியமாக
அச்சிறுமி
கவனிக்காத பாவனை முகங்களைக்
கண்கூசும் வெளிச்சத்தில்
பார்த்தபடி
நம்பிக்கையோடு நின்று
நகர்கிறாள்
அவளை ஒரு ஜன்னலில்
விட்டு விட்டு
கணநேரத்தில்
கிளம்பப் போகிறது
அப்பேருந்து”
நூல் அறிமுகம் எழுதியவர் :
லஷ்மி மணிவண்ணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.