நூல்: ஃபயர் ஆஃப் சுமத்ரா – சுமத்ராவில் காட்டுத்தீ
ஆசிரியர்: சி.ஆர்.ரமண கைலாஷ்
வெளியீடு: Zero Degree Publishing
வனவிலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாடு, மோதல் தற்போது உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். காட்டைத் திருத்தி, விவசாயம் செய்வது, வளர்ச்சி என்பது இயற்கையை தேவைக்கு அதிகமாக அழிக்காமல் இருக்கும் வரி சரியாகத் தோன்றலாம். ஆனால் அத்துமீறும்போது இயற்கை திருப்பித் தாக்கும் என்பதை கொரோனா போன்ற நோய்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், ஒரு புலிக் குடும்பத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்தப் பெரும் சிக்கலை, முரண்பாட்டை ஒரு நாவலாக முன்வைத்துள்ளான் ஒரு சிறுவன் – ஆம், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுவன் சி.ஆர்.ரமண கைலாஷ். நான் இதை எழுதும்போது உடல் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது.
யானைகள் செல்லும் பாதையில் ரிசார்ட்டுகளைக் கட்டி விட்டு யானையை ஒழிக்க வேண்டும் என்று போராடுவது, வளர்ச்சி என்ற பெயரில் காட்டை அழித்து ரோட்டைப் போடுவது, கார்ப்பரேட்டுகளுக்கு கனிமங்களை எடுப்பதற்காக அனுமதி கொடுத்து பச்சை நிறக் காட்டை கருப்பு நிறமாக்குவது என்று மனிதனின் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.
அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களும், ஜமீந்தார்களும் தமது பொழுதுபோக்குக்காகப் புலி வேட்டையை நடத்தியுள்ளனர். இறந்த புலியின் உடல்மீது காலை வைத்துக் கொண்டு கம்பீரமாக நிற்கும் படங்களை நாம் பார்த்திருப்போம். உலகம் முழுதும் புலி வேட்டை இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் தனது அன்புக்குரிய ஒரு புலியை நீண்ட தூரம் அழைத்துச் சென்று பாதுகாக்கப்பட்ட பகுதியில் விடும் ஒரு சிறுவனின் கதையை ஒரு திரைப்படமாக சமீபத்தில் பார்த்தேன்.
காலகாலமாக காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் தமது தேவைக்கு மட்டுமே வேட்டையாடுவது வழக்கம். அவர்கள் காட்டை ஒரு தெய்வத்தைப் போல் பாதுகாத்தனர். ஆனால் இன்று வளர்ச்சி என்ற பெயரில் அவர்களை வெளியேற்றி விட்டு, காட்டை அழிக்கும் கார்ப்பரேட்டுகளை உள்ளே விட்டுக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் ரமணா தன் நாவலின் மையக் கருத்தாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சுமத்ரா காட்டில் ஏற்படும் ஒரு தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒரு பெண் புலி தப்பிக்கிறது. ஆனால் படுகாயமடைந்திருக்கும் அந்தப் புலியை விலங்கு ஆர்வலர்களின் படை காப்பாற்றி சிகிச்சைக்கு எடுத்துச் செல்கிறது. அங்கு இன்னொரு விபத்தில் தனது காலை இழந்த ஒரு புலியை சந்திக்கிறது சத்ரா என்கிற இந்தப் பெண்புலி. அவற்றின் இடையில் நடக்கும் உரையாடல்களின் மூலம் பல்வேறு சிந்தனைகளை, விவரங்களைக் கடத்துகிறார் ரமணா.
மறுபுறம், தனியாக விடப்பட்ட குட்டிகளை தந்தைப்புலி காப்பாற்றி அழைத்துச் செல்கிறது. தந்தைக்கும், குட்டிகளுக்கும் நடக்கும் உரையாடல்களின் மூலம் காட்டின் நிலையையும், அங்கு மனிதனின் ஊடுறுவல்கள் மூலம் ஏற்படும் சேதங்களையும் நமக்குக் காட்சிப் படுத்துகிறார் ரமணா.
காட்டில் ஏற்பட்ட நெருப்பு தானாக ஏற்பட்டதல்ல, மாறாக, பனை எண்ணை தயாரிக்கும் கார்ப்பரேட் கம்பெனி வைத்த நெருப்புத்தான் அப்படிப் பற்றியெறிந்தது என்பதை அவர் கூறும்போது வெலவெலத்துப் போகிறோம். இலாபம் என்ற ஒன்றுக்காக மூலதனம் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று தனது மூலதனம் புத்தகத்தில் மார்க்ஸ் ஒரு எடுத்துக் காட்டைக் கூறுவார். அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது மூலதனம்.
கட்டம், கட்டமாக ரமணா நாவலைக் கொண்டு செல்கிறார். நாவலின் அனைத்துத் தன்மைகளையும் உள்ளே கொண்டு வந்திருக்கிறார் ரமணா. இந்த வயதில் இத்தனை சிந்தனைத் தெளிவும், அதை வெளிப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ள ரமணாவை எப்படியும் பாராட்டலாம். அது மட்டுமல்ல, இவ்வளவு விவரங்களை எடுத்துக் கூறி, அவரை ஊக்கப்படுத்தியுள்ள அவரது தாயாரையும், குடும்பத்தையும் மிகவும் பாராட்ட வேண்டும்.
நாவலைப் பற்றி மேலும் மேலும் விவரித்துக் கொண்டே செல்லலாம்தான். ஆனால் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து நாம் அதிலுள்ள உண்மைகளை உணர்வதே சரியாக இருக்கும். இந்தப் புத்தகத்தை வாங்கித் தமது குழந்தைகளுக்குப் பரிசளிக்க பெற்றோர் முன்வர வேண்டும். என் குழந்தைக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும் என்று ‘பெருமைப்படும்’ பெற்றோருக்கு: ’இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டுள்ளது.’
நேற்று இந்தப் புத்தகத்தை முடித்தவுடனேயே பதிப்பாளரிடம் ரமணாவின் தொலைபேசி எண்ணைப் பெற்று அவரிடம் எனது பாராட்டைத் தெரிவித்த பின்னர்தான் அமைதி கோண்டேன். இந்தப் புத்தகம் தமிழிலும் வெளிவர வேண்டும். நல்லவேளையாக ரமணா தமிழர்தான் என்பதால் அவரே இந்த முயற்சியை மேற்கொண்டால் தமிழுலகம் பெருமை கொள்ளும்.
தமிழகத்துக்கு, ஏன் இந்தியாவுக்கும், உலகத்துக்கும் ஒரு விலங்குக் காவலர், எழுத்தாளர், இயற்கை ஆர்வலர் கிடைத்துள்ளார். போற்றிப் பாதுகாப்போம்.
கி.ரமேஷ்
Fire in Sumatra
Zero degree publishing
Contact: Zerodegreepublishing&gmail.com
Excellent observayion by Mr.K. Ramesh