இரவு-நாய்-மலைப்பாம்பும் சில ஆடுகளும்.
…………………
இந்த இரவை நான்
மூன்று துண்டுகளாக பிரித்து
ஒற்றைத் துண்டில்
நான் ஒரு ஆதி காலத்து
றப்பான் இசையில் மூழ்கி நிற்கிறேன்.
மற்றொன்றில்
மாதுக்களின் பெல்லி நடன இறைச்சலில் முண்டக்கண் மூடாமல்
திகைத்து நிற்கிறேன்
மூன்றாம் துண்டில் நான்
கண்ணாடிக் குவளைகளை ஏந்திய
பழரச விருந்தில் கலக்கிறேன்.
மூன்று துண்டிலும் இரவு
என்னை மகிழ்வித்ததாக
நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.
அறைக் கதவை திறந்து
நான் வெளியே வருகிறேன்
அறைக்கு வெளியே கட்டப்பட்டிருந்த
நீல கண்களுடைய நாய் இறந்து கிடக்கிறது.
ஆடுகள் பட்டிகளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது
வீட்டுச் சுவரடியில் நகர முடியாமல் படுத்துக்கிடக்கும் மலைப் பாம்பொன்றை.
ஒவ்வொரு இரவுகளும் இப்படி
ஏதோவொரு நிகழ்வை தர மறுப்பதில்லை.
.
பிரதிச் சொல்
நீ தேடும் அந்தச் சொல்லை
நான் ஒரு போதும்
சுவையுள்ளதாய் உணர்ந்ததில்லை.
எனது பிரதியில் எங்கேயும் காணமுடியாத
அந்தச் சொல்
என்னிடமே தங்கியிருப்பது பற்றி
நீ அறிந்திருக்க நியாயமில்லை
உனக்கான வாசகனாய் அந்தச் செல்லை தேடுபவர்கள்
நிருத்திக் கொள்ளட்டும்
நான் பதில் சொல்லொன்றை
தருவதில் ஆறுதலோ
மகிழ்ச்சியோ அடைந்து கொள்ளட்டுமே அவர்கள்.
யாரும் உச்சரிக்காத சொல்லொன்றை
என் வாசகனுக்காய்
என் பிரதியில் அங்காங்கே
நிரப்பி விட்டிருக்கிறேன்
இடைவெளியை உன் வாசகன்
நிரப்பிட நீ
சில உப்பற்ற சொல்லை
அவர்களுக்கு புசிக்க பணித்திட வேண்டும்.
இப்போது நான் என்பது
பிரதிச் சொல்.
..
குகை
நான் ஏன் அந்த குகையை
தேடிச் செல்கிறேன்
நான் ஏன் அங்கே போகிறேன்
மனசு பேதலித்துப் போனவன் போல
நான் ஏன் இருட்டுக் குகைக்கு செல்கிறேன்
அங்கே என்னதான் உள்ளது
எனது முன்னோர்களின் கால் தடங்களும்
அவர்களின் நிர்வாண ஓவியங்களும்
இல்லை சில மண்டை ஓடுகளும்
இருக்குமென நான் அங்கே போகவில்லை.
ஒரு சிறு பாலகனின் சிரிப்பை
சுமந்து செல்கிறேன்
எல்லா வலிகளையும்
காயங்களையும் விட்டுவிட்டு
அங்கே நான் வியக்கும் ஏதோவொன்று இருக்கு.
நான் ஏன் அந்த இருட்டு
குகைக்கு செல்கிறேன்
இனிமேலும் என்னால் வாழ்ந்திட முடியாது
எல்லாத்துக்குமான ஆசைகளுடன்
அலைந்து திரிபவர்களுடனான
கால் தடங்களில் என்னால்
இனியும் நடந்திட முடியாது
அங்கே பேராசைகளை சுமப்பவர்கள்
இருக்கவே மாட்டார்கள்
யாரும் இருந்திருக்கவும் மாட்டார்கள்.
நான் அந்த இருட்டு குகைக்கே
போய் விடுகிறேன்.
காமம்
பனி இரவு
குளிர்ந்த உடலின் மேல்
போர்த்தப்பட்ட தாபப் போர்வை
சிணுங்களும் முணகலுமாக
அறை முழுதும் சிதறி தெறித்துக்கிடக்க
மெல்லிய ஆடையில் நீ
என்னை நெருங்குகிறாயென கனவை நான்
முடித்து வைக்க மனமில்லாமல்
தொடர்கிறேன்.
எதிர் வீட்டு ஜன்னல் வழியே
எரியும் வெளிச்ச குவளையின்
நிழலில் சர்வத்தின் பிணைவு
என் கண்களை பறித்தெடுத்துக் கொண்டு,
ஒரு பறவையாக சிறகடிக்க தொடங்குகிறது
பறவையென்பது காமம்.
..
காகம்
வெறுப்பான நிறத்தையொத்த
பறவையென
பல நேரம் பச்சையாய்
பல பேர் பேசியதுண்டு.
சில நேரம் காகத்தை
இதனால் என்னவோ
நானும் வெறுக்க
கற்றுக் கொண்டேனென்று.
கவிதையொன்றை எழுதி முடித்தேன்.
மூன்று நாட்களுக்கு முன்னர்
மனைவியின் தங்க சைன் ஒன்று
குளிக்கும் போது தவறியதில்
மனைவி ரெம்ப கவலையாக இருந்தாள்
எனது கவலை காகத்தை திட்டியெழுதிய
கவிதையினால் தீர்ந்தது.
மனைவியிடம் கவிதையை
படித்துக் காட்டிக்கொண்டிருக்கிறேன்
என் வீட்டு முற்றத்தில் காகமொன்று
தனது அலகில் தங்கத்தை சுமந்து
நின்றது.
காகத்துக்கு வடை கொடுத்தாள் மனைவி
காகம் தங்கம் கொடுத்தது.
இன்றிலிருந்து காகம்
மனைவியின் செல்லப்பறவையென
மாற்றியெழுதச் சொன்னாள்
கவிதையின் முடிவை.
..
ஜே.பிரோஸ்கான்

