ஜே.பிரோஸ்கான் கவிதைகள்புறச்சிரிப்பு

ஒரு துன்புறுநிலையில்

அகத்தின் வலிக்கு

புறச் சிரிப்பு தீர்வாகலாம்.

தீர்வு

யாருக்கும் தெரியாமல்

நீ உதிர்த்த சொற்களிலிருந்து

ததும்பி வடியும் குரோதத்தின்

பிரதியை வடிகட்டி

மீண்டும் உன் அகத்தில் சேர்க்க

மீண்டும் சேர்க்க

இன்னும் ததும்ப

இறுதியில் சொற்களெல்லாம்

நஞ்சுக்கொடியாகி போயின.பேதம் ஏதுமில்லை

என்னுடைய புத்தக அலமாரியில்

பதுங்கிக்கிடக்கும் சொற்களுக்குள்

சூஃபிசமென்றும்

கஸலென்றும்

நவீனமென்றும்

பேதம் ஏதுமில்லை

அலமாரியில் இருக்கும் அத்தனையும்

வாசிக்கப்பட்டவைதான்

வாசிக்கப்பட வேண்டியவன் நானே.

வெளியேறு..

சொற்கள் என்பது ஒரு

சலசலப்புமிக்க நதி

அது கடலின் மாயத்தோற்றம்.

உப்பு,நிறம் என விரியும்

இந்த கோட்பாட்டிலிருந்து

வெளியேறு,

இல்லாத சுவையைத் தேடுவதைவிடுத்து…நேர்பாதை.

நீதியிருப்பது அவனது

நேர்பார்வையில்

சர்வமும் அவனது இருப்பின்

நேசத்திற்குள்தான்.

சந்தேகமேயில்லாமல் அவனுக்குள்

உனை முழுதுமாய் தொலைத்துவிடு.

நீ தெரிந்திருக்க வேண்டிய

இன்னொன்றையும் கவனி

உண்மையை கண்டடைந்தவுடன்

மாயஜாலத்தைப்பற்றி பேசிப்பறையாதே.

மறை நம்பிக்கையே அவனது

அன்பின் கூட்டுக்கு நேர்பாதை.

..

ஜே.பிரோஸ்கான்