பட்டாம்பூச்சி கவிதைகள் – ஜே.பிரோஸ்கான்கவிதை 1: ஓவியப் பூச்சி

கொஞ்சம் நில்
கவனித்துச் செல்
பல ஓவியங்களை தனது உடலில்
ஏந்தியிருக்கும் அந்தப் பூச்சி
செத்தே ஆவியான ஞானத்தின்
பிரதிபலிப்பைச் சுமந்து செல்கிறது
தன் றெக்கைகளால்.
கவனி
உலகத்தின் எல்லா மலர்களும்
தன் இதழ்களை மூடிக் கொள்கின்றன
இப்போது எங்கே பசி தீர்வாய்
ஓவியப் பூச்சியே..கவிதை 2: மாலியும் ரகசியம் அறிந்த வண்ணத்துப்பூச்சி ஓவியமும் ………….

உள்ளங்கை ரேகையின் வடிவில்
கிறுக்கிய வண்ணத்துப்பூச்சியை சுமந்திருக்கும் கோட்டுச் சித்திரமொன்றுடன்
மாலி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்.
எதிர்கால கணிப்பில் நிச்சயமாக அவள்
ஆர்வம் கொண்டிருக்க மாட்டாள்.
ஆயுள் பற்றி தெரிந்திருக்க வேண்டியே அவசியம்
அவளுக்கு ஏற்பட வாய்ப்பில்லை.
ஏன் என்றாள் உலக வாழ்க்கையில் அவளுக்கு
நம்பிக்கை இருந்ததில்லை.
ஆசை, ஆடம்பரம் எல்லாம் நீரில் எழுத்தென்பாள்.
அப்போ அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கிறாள்.
அருகில் சென்று கேட்டு விடலாமென நகர்கிறேன்
அவள்
வரைந்த ஓவியத்தை கோபமாக அழித்துக் கொண்டிருக்கிறாள்.
வண்ணத்துப்பூச்சிக்கு மட்டுமே தெரியும்
மாலி என்ன பேசிருப்பாள்.

ஜே.பிரோஸ்கான், இலங்கை.