பிரோஸ்கான் கவிதைகள்

நீ பிரதி செய்யப்பட்டவன் 

கண்ணாடி - கதை கதையாம் - கருத்துக்களம்

நீ எப்போது கண்ணாடி

பார்ப்பதை நிறுத்திக் கொண்டாயோ

அப்போதிலிருந்தே

உனது பிரதி

உன்னை அங்காங்கே எழுதிச் செல்வதும்

உனக்குத் தெரியாமலே போய் விட்டது.

நீ

இன்றிலிருந்து கண்ணாடி பார்ப்பதை

பழக்கமாக்கிக் கொள்.

உன்னை திருத்திக் கொள்ள

அதைவிட சிறந்த வழியேதுமில்லையென

எனக்கு தோன்றுகிறது என்பதை

நான் சொல்லி வைத்தால்

நீ

குறையென்பாய்.

ரசிகன் 

ITZY's Yuna Impresses Fans with Her Artwork | allkpop

நிறங்களை கொண்டாடுகிற நீ

ஓவியங்களை நன்கு ரசிக்க

பழகியிருந்தாய்.

ஒரு திறந்த வெளியில்

இரவு தனது நிறத்தை

இறக்கி வைக்கிறது.

நீ கரடு முரடான பாதையெல்லாம்

கடந்து அந்த வெளிக்குள் நுழைகிறாய்

உன் உடல் முழுதும்

நிறங்கள் அப்பிக் கொள்கிறது.

நீ ஓவியமாய் வர்ணிக்கப்படுகிறாய்

அந்த இரவு முழுதும் நீ

நிறங்களோடு உலாவுகிறாய்

விடிவதற்கு முன்

நிறங்கள் உதிரக் கூடும்

நீ வீடு வருகின்ற வழியில்

இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள்

பதிலொன்றைத் தயார் செய்து கொள்.

புனைவில் அசைதல் 

Days 5&6 - Days of Creation 7

கடல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்

மீன்கள் கரைக்கு வருகின்றன.

கரையைச் சுற்றியுள்ள பறவைகள்

மீன்களென மாறி கடலுக்குள் செல்கின்றன

பின்னர்

கரையில் நிறைந்த மீன்களெல்லாம்

சிறகு முளைத்து ஒவ்வொன்றாக

பறக்க தொடங்குகிறது.

இப்போது நான் தோழனிடம்

கடல் பற்றிய பேச்சை நிறுத்தச் சொல்லி

வானம் பற்றிய பேச்சைத் தொடர்கிறேன்

திடீரென நட்சத்திரங்கள் மழையென

உதிர்ந்து கீழே வருகின்றன.

பூமியில் பெருத்து வளர்ந்து நின்ற

மரங்களெல்லாம் நட்சத்திரங்களாய்

வானை நோக்கி செல்கின்றன.

நண்பன் என் வாயை மூடச் சொல்கிறான்.

நான் இப்போது மீன்கள் பற்றி

பேசியாகனும் என்றேன்

உடனே பறவைகள் அத்தனையும்

மீன்களாய் மாறத் தொடங்கியதும்,

நண்பன் மரங்கள் பற்றி

பேசத் தொடங்கி விட்டான்.

இப்போது நட்சத்திரங்களாக மழை

மாறத் தொடங்கி விட்டது.

உடனே நானும் நண்பனும்

உறங்கி விட்டோமென

நண்பன் எழுதிய கவிதை முடிகிறது.

 

தப்பு 

Tamil Cine Talk – thappu thandaa movie teaser

ஒரு அமைதி நிகழ்கிறது

உன் தப்பின் நெருடல்கள்

உனது குரல்வளையை அழுத்துகிறது

சப்தம் எழுப்பப்படாமல் கதறுகிறாய்

ஒரு பகலும் இரவும் அமைதியாகிறது.

காற்றின் மேல் அமர்ந்து எப்படியோ

என்னை வந்தடைகிறது உன் தப்பு

எச்சிலை விழுங்கிக் கொள்வது போல

மென்று விழுங்குகிறேன்.

எனது கை பேசி அலறுகிறது

நண்பன் தப்பின் வடிவத்தைப் பிரதி செய்கிறான்

அவனோடு முடியட்டுமே என்று நிறுத்த விரும்புகிறோம்.

வீட்டு முற்றத்து மரத்தில்

ஒரு பறவையாய் வந்து நின்று

என்னை தொந்தரவு செய்கிறது

உனது தப்பு.

கூழாங்கற்களைக் கொண்டு அடிக்கிறேன்

சிணுங்கலோடு பறக்கிறது.

இந்நேரம் உன் வீடு வந்திருக்க வேண்டும்

என் வீட்டு கூழாங்கற்களைக் கொண்டடித்து

விரட்டிய செய்தியோடு.

..

பிரோஸ்கான்