புத்தகம்: முதல் கிளை (இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்) – ப.கு. ராஜன்

முதல்  கிளை

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்

ப.கு. ராஜன்

 

ஒரு நூறாண்டு பயணம்

விடுதலை, சமத்துவம், சமதர்மம், சமூகநீதி

எனும் தாகத்தில்

வழுக்கும் செங்குத்துப் பாறையில்

காலைப் பிடிக்கும் பந்த பாசமும்

மாரைத் தட்டும் வர்க்க பாசமுமாய்

அரூப கனவுகள் தாண்டி

காத்திர திட்டம் தீட்டி

இணந்த இதயங்கள்

கோர்த்த கரங்கள்

ஒற்றை இலக்கென

நீண்ட பயணத்திற்கு

அமைப்பு கண்ட தினம்

         19 அக்டோபர்,1920

 

தோழர்கள்

எம்.என்.ராய்,

எவிலின் ட்ரெண்ட் ராய்

அபனி முகர்ஜி

ரோசா ஃபெட்டிங்காஃப் முகர்ஜி

மண்டையம் பிரதிவதி பயங்கரம் திருமலாச்சாரியா

குஷி முகம்மது என்ற முகமது அலி சிப்பாஸி

முகம்மது ஷாஃபிக்

 

சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள்

உங்கள் கனவுஎங்கள் கனவு

உங்கள் பயணம்எங்கள் பயணம்

உங்கள் இலக்குஎங்கள் இலக்கு

Expansion of Islam is the Greatest Miracle | Communist Philosopher M. N. Roy

மனபேந்திரநாத் ராய் – எம்.என்.ராய் (1954-1887)

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் கம்யூனிஸ்ட். ஐரோப்பாவிற்கு வெளியே முதல் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர். 14 வயது மாணவனாய் தொடங்கி 67 வயதில் இறுதி மூச்சுவிட்டவரை முடிவற்ற தேடலில் இருந்த முழுப் புரட்சிக்காரர். இந்தியா, அமெரிக்கா, மெக்ஸிகோ, சோவியத் ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், சுவிஸ், சீனா என கண்டங்கள் தாண்டி, காலகட்டங்கள் தாண்டி வீசியடித்த மார்க்சியப் புயல். ஜதீன் முகர்ஜி, ராஷ் பிகாரி போஸ், சன் யாட் சென், லாலா லஜபதி ராய், மைக்கல் பரோடின், லெனின், டிராட்ஸ்கி, ஜினோவிவ், ஸ்டாலின், புகாரின், மாவோ, காந்தி, நேரு, சுபாஸ் சந்திர போஸ் என ஆளுமைகள் பலரோடும் இணைந்தும் முரண்பட்டும் பணியாற்றிய ஆளுமை. தனது தாய்மொழியான பெங்காலி தவிர ஆங்கிலம், ஸ்பானிஸ், ஜெர்மன், ரசியன் எனப் பல மொழிகளிலும் கத்தியின் கூர்மையோடு எழுதிக் குவித்த எழுத்தாளர், சுமார் 35 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆசிரியராய், பதிப்பாளராய் ஏதேனும் ஒரு இதழின் முதன்மையான பத்திரிகையாளர். அவர்தான் இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் முதல் தோழர், முதல் தலைவர், தோழர்.எம்.என்.ராய்!

ன்றைய மேற்கு வங்கத்தின், மிட்னாபூர் மாவட்டத்தில் அர்பேலியா கிராமத்தில் 21 மார்ச் 1887 இல் பிறந்த எம்.என்.ராயின் இயற்பெயர், நரேந்திர நாத் பட்டாச்சார்யா. நரேன் என்றே அவர் இந்தியாவில் அறியப்பட்டு வந்தார். நரேனின் தந்தை வழி முன்னோர்கள் மிட்னாபூர் மாவட்டத்தில் க்ஷேபுட் கிராமத்தின் க்ஷேபுத்தேஸ்வரி கோயிலின் தலைமைப் புரோகிதர்கள். எம்.என்.ராயின் தந்தையார் வறுமை காரணமாக குலத்தொழிலை விட்டுவிட்டு தலைமைப் பண்டிட்டாக அதாவது சமஸ்கிருத ஆசிரியராக அர்பேலியா பள்ளிக்கு பணிக்கு வந்தார். ராயின்
உடன் பிறந்தவர்கள் 10 பேர். ஆரம்பத்தில் தந்தையின் பள்ளியிலும் பின் ஆறாம் வகுப்பு வரை அர்பேலியா ஞான் விக்காசினி பள்ளியிலும் படித்தார்.

பின் 1898 ஆம் ஆண்டு அவர்களது குடும்பம் தாயாரின் சொந்தக் கிராமமான கொடாலியாவிற்கு அவரது தாயாருக்கு வந்துசேர்ந்த பூர்வீக வீட்டிற்கு குடியேறியது. கல்கத்தாவிற்கு அருகில் உள்ள சாங்கிரிபோடா ரயில் நிலையம் அருகே உள்ள கிராமம் அது. 1905 வரை ராய் ஹரின்பாய் ஆங்கிலோ சான்ஸ்கிரிட் பள்ளியில் படித்தார். பள்ளியின் சக மாணவர்களோடு இணைந்து சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். இங்குதான் அவர் ஒரு புரட்சியாளராய் ஆனதன் ஆரம்பம் நடந்தது. 1905 பலவகையிலும் வங்காளத்திற்கு ஒரு மைல்கல் ஆண்டு. நரேனுக்கும் அப்படித்தான். அவரது தந்தையார் அந்த ஆண்டு மறைந்தார். நரேனுக்கு அனுஷிலன் ஷமிதியின் தொடர்பும் அந்த ஆண்டுதான் ஏற்பட்டது. வங்கப் பிரிவினை ஏற்பட்ட ஆண்டு. கொந்தளிப்பான வங்காளத்தின் கொந்தளிப்பான இளம் உள்ளத்துடன் நரேன் இருந்த காலகட்டம். ஆன்மிகம், சமூக சேவை என உடலும் உள்ளமும் சேர அலைந்து திரிந்துள்ளார். ஆனாலும் படிப்பையும் சமூக சேவையையும் விடாத நரேன் நல்ல மதிப்பெண்களுடன் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். அப்போதே அவர் அனுஷிலன் ஷமிதியின் உள்வட்ட உறுப்பினராய் ஆகியிருந்தார். பள்ளிக் கல்வி முடித்த அவர் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருந்த ’பெங்கால் நேஷனல் காலேஜ் அண்ட் ஸ்கூல்’ கல்வி நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அந்தக் கல்வி நிலையத்திற்கு அன்று அரவிந்த கோஷ் அவர்கள்தான் முதல்வர். அவர்தான் அன்றைக்கு வங்காளத்தின் மிகப்பெரிய புரட்சிக்காரர். இங்குதான் நரேன் ஒரு முழுநேரப் புரட்சிக்காரராக மாறினார். ஆனாலும் அங்கு கல்வி முடித்து ‘பெங்கால் டெக்னிகல் இன்ஸ்டியூட்டில்’ சேர்ந்தார். அங்கு வேதியியலும் பொறியியலும் கற்பிக்கப்பட்டது. சேர்ந்ததைத் தவிர அங்கு அவர் கல்வி கற்றதாகத் தெரியவில்லை.

1907 டிசம்பர் 6 ஆம் தேதி நரேன் தலமையில் சாங்கிரிப்போட்டா ரயில் நிலையத்தின் காசாளர் அலுவலகத்தை அனுஷிலன் ஷமிதியின் ஒரு குழு கொள்ளையிட்டது. நரேன் தேடப்பட்டவரானார். அவருடைய தாயார் 1908 ஆம் ஆண்டு மறைந்தார். அத்தோடு நரேன் குடும்பம் என்ற பிணைப்பேதும் இல்லாத புரட்சியாளர் ஆனார். 1908 ஆம் ஆண்டு அரவிந்த கோஷ் மற்றும் அவரது தம்பியும் மற்றுமொரு புரட்சியாளருமான பாரின் கோஷ் மற்றும் குழுவினர் கைது செய்யப்பட்டு கடுமையான சிறை வாசத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். அரவிந்த கோஷ் அதன்பிறகு அரசியலைவிட்டு வெளியேறி ஆன்மிகப் புகைமூட்டத்திற்குள் சென்றுவிட்டார். 1909 ஆம் ஆண்டு நரேனும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அப்போது சிறையில் உடனிருந்த மற்றுமொரு புகழ்பெற்ற புரட்சியாளரான ஜதின் முகர்ஜியாய் ஆகர்சிக்கப்பட்ட நரேன், சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் சிதிலமடைந்திருந்த புரட்சி அமைப்பை சீர்செய்ய முயன்றார். கொலை கொளைகளும் தொடர்ந்தன. பிரிட்டிஷ் காவல்துறை நரேனுக்கு ஒரு கோப்பு திறந்தது. அது 1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும்வரை மூடப்படவில்லை. அனுஷிலன் ஷமிதியும் ஏனைய புரட்சிகர அமைப்புகளும் சீர்படுத்தப்படும் முயற்சியில் 1915 ஆம் ஆண்டுவரை முழுமையாய் வெற்றிபெறவில்லை. ஆனால் ஜதின் முகர்ஜி, நரேன் ஆகியோர் போல பலர் மனம் தளராது போராடிய வண்ணம் இருந்தனர்.

1914 ஆம் ஆண்டு வெடித்த முதல் உலகப் போர், வங்காளத்தின் புரட்சிக் குழுக்களுக்கு ஒரு புதிய வாய்ப்பைக் கொண்டு வந்தது. பிரிட்டனுக்கு எதிராகப் போரில் இறங்கியிருந்த ஜெர்மனி, இந்தியாதான் பிரிட்டனின் பலத்தின் அடிப்படை என்பதைச் சரியாகவே மதிப்பிட்டது. அதனை பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பது தனது வெற்றியின் மிக முக்கியமான அம்சம் என முடிவுசெய்தது. இந்தியாவிலிருந்த புரட்சிக் குழுக்களுக்கும் இந்தியாவிற்கு வெளியில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்த புரட்சியாளர்களுக்கும் ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை அளிக்க முன்வந்தது. அவர்கள் அப்படி அளிக்க முன்வந்த ஆயுதங்கள் வந்த கப்பலிலிருந்து ஆயுதங்களைப் பெற்று வங்காளத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கும் ஆபத்தான பணியை முன்னின்று செய்ய எம்.என்.ராய் இந்தோனேசியாவின் படாவியா (இன்றைய ஜகார்த்தா) சென்றார். அங்கு கப்பல் வராத காரணத்தால் ஆயுதங்களையும் கப்பலையும் தேடி பிலிப்பைன்ஸ், ஜப்பான், சீனா என அலைந்தார். பிலிப்பைன்ஸில் இருந்த போது அவரது தலைவராக வரித்திருந்த ஜதின் முகர்ஜி ஒரு ராணுவ மோதலில் கொலையுண்ட செய்தி கேட்டு அதிர்ந்தார். ராணுவ உதவிக்கு ஜெர்மனிக்குச் செல்ல அவருக்கு ஆலோசனை கூறப்பட்டது. அதற்காக ஜப்பானிலிருந்து அமெரிக்கா பயணித்தார்.

1916 ஜூன் 15 அன்று ஏ.மார்ட்டின் என்ற பெயரில் சான் ஃபிரான்சிஸ்கோ அடைந்தார். வங்காளப் புரட்சியாளரும் நண்பருமான தனகோபால் முகர்ஜி, அங்கு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்.  அவரைச் சென்றடைந்த நரேன், ஜெர்மனி செல்ல முயற்சித்தார். அங்கிருந்து ஜெர்மனி செல்வது பல காரணங்களால் தாமதமானது. அமெரிக்காவிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. அங்கிருக்கும்போது அப்போது ஸ்டான்ஃபோர்டில் படித்துக் கொண்டிருந்த எவ்லின் டிரெண்ட் அவர்களின் தோழமையைப் பெற்றார். அத்தோடு பல்கலைக் கழகத்தின் தலவரும் சோசலிஸ்டுமான டேவிட் ஸ்டார் ஜோர்டன் அவர்களின் அறிமுகமும் பெற்றார். பிரிட்டிஷ் போலிஸ் அவரைத் தேடி சான் ஃபிரான்சிஸ்கோவிற்கும் வந்துவிட்டது. கல்கத்தாவிலிருந்து ஒரு ஆங்கிலப் போலிஸ் அதிகாரி இதற்காக அமெரிக்கா அனுப்பப்பட்டுள்ளார்.

1917 ஜனவரியில் நரேன், எம்.என்.ராய் எனும் பெயர் தரித்து நியூயார்க் வந்தடைந்தார். எவ்லின் டிரெண்டும் அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி உடன் வந்துவிட்டார். அவர் ராயிடம் காதல் வயப்பட்டிருந்தார். நியூயார்க் நகரில் அப்போது அங்கிருந்த லாலா லஜபதி ராய் அவர்களின் ஆதரவோடு எம்.என்.ராயும், எவ்லினும் இருந்தனர். லாலா லஜபதி ராய் அமெரிக்காவில் இந்திய விடுதலைக்காக ஆதரவு தேடி பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். எம்.என்.ராய் அவரது செயலாளர் போல கூட்டங்களுக்கு அவரோடு சென்று வந்துகொண்டிருந்தார். கூட்டத்தினர் பெரும்பாலும் இந்தியர்கள் தவிர அமெரிக்க சோசலிஸ்ட்டுகள். ஒரு கூட்டம் முடிந்தபின் ஒரு அமெரிக்கர்,  “பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றால் போதுமா? பிரிட்டிஷ்காரனுக்குப் பதில் சக இந்தியனிடம் மிதிபட்டால் பிரச்சனை இல்லையா?” எனக் கேட்டுள்ளார். லாலா லஜபதி ராய்,  “பிரிட்டிஷ்காரனிடம் மிதிபடுவதற்கும், சொந்தச் சகோதரனிடம் மிதிபடுவதற்கும் வித்தியாசம் இல்லையா?” எனப் பதில் கேள்வி கேட்டு கூட்டத்தை முடித்துவிட்டார். ஆனால் எம்.என்.ராய்க்கு மிதிபடுவதில் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் கேள்வி இரவு பகலாக அவரை உறுத்திக் கொண்டிருந்துள்ளது. அவர் அந்தக் கோணத்தில் அதுவரை சிந்திக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு எவ்லின் டிரெண்ட் சோசலிசக் கருத்துகளையும் மார்க்சியத்தையும் அவருக்குத் தெரிந்த அளவில் அறிமுகம் செய்துள்ளார். ராய் இரவு பகல் பாறாது நியூயார்க் பொது நூலகத்தில் மார்க்சியம் படித்துள்ளார். எவ்லினும் உடன் இருந்து கற்றுள்ளார்.

இந்தக் கட்டத்தில் அமெரிக்காவும் பிரிட்டன் சார்பாக உலகப் போரில் குதித்திருந்தது. ராய் கைது செய்யப்படும் அபாயம் நெருங்கியபோது, ஸ்டான்ஃபோர்ட் பலகலைக் கழகத் தலைவர் ஒரு மாநிலக் கவர்னருக்கு அளித்த கடிதத்தோடு எம்.என்.ராயும் எவ்லின் டிரெண்டும் 1917 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெக்ஸிகோவிற்குத் தப்பிச் சென்றனர். அங்கு அப்போது இருந்த அரசால் பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டு வரவேற்கப்பட்டு ஆதரிக்கப்பட்டனர். மெக்ஸிகோவின் ஏகாதிபத்தியப் பாரம்பரியம் இதற்கு ஒரு காரணம். மறுபுறத்தில் அமெரிக்க இந்தியக் கலப்பினம் நிறைந்த மெக்ஸிகோவில் ராய் ஒரு இந்தியர் என்பது மிகவும் மரியாதையுடனும் மதிப்பிடனும் நோக்கப்பட்டதாகத் தெரிகின்றது. அப்போது மெக்ஸிகோவில் அமெரிக்காவிலிருந்து தப்பி அங்கு வந்திருந்த பல இடதுசாரிகள் இருந்தனர். இந்த அரசியல் புகலிட சமூகத்தில் ராயும் எவ்லினும் மிகவும் மதிக்கப்பட்டனர். எம்.என்.ராய் சோசலிசக் கட்சியை அங்கிருந்த தனது நண்பர்கள், தோழர்கள் உதவியுடன் நிறுவினார். கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராய் குறித்து அறிந்த ஜெர்மானியர் அங்கு ஜெர்மன் தூதராகப் பதவியேற்றிருந்தார். அப்போது ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்தவர் ராயை ஏற்கனவே அறிந்தவர். இந்தியப் புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் முயற்சியின் போது இந்தோனேசியாவில் இருந்தவர். எனவே ராய் மீண்டும் ஆயுதங்களோடு இந்தியா செல்ல அவர்கள் உதவ முன்வந்தனர். சீனா சென்று ஆயுதம் பெற்று இந்தியாவிற்குள் நுழையும் திட்டத்தோடு பெருமளவிலான நிதி உதவியோடும் ராய் பயணம் புறப்பட்டார். ஆனால் பல காரணங்களால் பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு ராய் மெக்ஸிகோவில் தங்கினார். மெக்ஸிகோவின் இந்தியாவில் ஜதின் முகர்ஜியின் மறைவு, ராயின் முந்தைய புரட்சிகர அமைப்பின் சீர்குலைவு, அரசியல் ரீதியாக எம்.என்.ராய் அடைந்திருந்த மாற்றம் இவையெல்லாம் சேர்ந்ததால் ஆயுதத்துடன் மீண்டும் இந்தியா செல்லும் உத்வேகத்தை ராய் இழந்திருந்தார்.

இந்தக் கட்டத்தில் சோவியத் போல்ஷ்விக் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான மைக்கல் பொரோடின் ஒரு விபத்தாக மெக்ஸிகோ வந்தடைந்தார். அது அறிந்து ராய் அவரை வரவேற்று தன்னோடு தங்கச் செய்ததோடு அவருக்கு பொருளாதாரரீதியாகவும் உதவினார். அவரோடு சுமார் 6 மாதங்கள் நடத்திய நீண்ட விவாதங்கள், அதன் அடிப்படையிலான வாசிப்பு அகியவற்றின் அடிப்படையில் எம்.என்.ராய் முழுமையான மார்க்சிஸ்ட்டாக மாறியிருந்தார். எவ்லினும் அப்படியே மாறியிருந்தார் என நாம் யூகிக்கலாம். தான் தலைவராக இருந்த மெக்ஸிகோ சோசலிசக் கட்சியின் செயற்குழுவிடம் பொரோடினை அறிமுகம் செய்து வைத்து போல்ஷ்விக் கோட்பாடுகளை விளக்கினர். அவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு மெக்ஸிகோ சோசலிசக் கட்சியை மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சி என மாற்றி அமைக்கவும் சம்மதிக்க வைத்தார். மெக்ஸிகோவின் ஆளும் கட்சியான சோசலிசக் கட்சி, இவ்வாறாக ஐரோப்பாவிற்கு வெளியில் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது. அத்தோடு மட்டுமல்லாது எம்.என்.ராய் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1919 ஆம் ஆண்டு லெனின் அவர்களால் மீண்டும் தொடங்கப்பட்டிருந்த ‘கம்யூனிஸ்ட் இண்டர்நேஷனல்’ அல்லது கோமின்டார்ன் என அழைக்கப்பட்ட மூன்றாம் அகிலத்திலும் மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகியது.

போரோடின் மூலம் மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் எம்.என்.ராய் குறித்தும் அறிய வந்த லெனின், 1920 ஆம் ஆண்டு நடக்கவிருந்த கோமிண்டாங் 2 ஆவது சர்வதேசக் காங்கிரஸில் பங்குபெற வருமாறு எம்.என்.ராய்க்கு அழைப்பு விடுத்தார். மெக்ஸிகோ அரசின் உதவிகளோடு எம்.என்.ராய், எவ்லின் டிரெண்ட், மைக்கல் போரோடின் ஆகியோர் ஸ்பெயின் வந்தடைந்தனர். போரோடின் நேராக ரஷ்யா சென்றுவிட்டார். எம்.என்.ராய், எவ்லினோடு ஜெர்மனி வந்தடைந்தார். ஜெர்மனியில் அப்போது இயங்கிக்கொண்டிருந்த ஜெர்மன் கமிட்டி என அறியப் பட்ட இந்தியப் புரட்சியாளர்கள் குழுவைச் சந்தித்தார். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தக் குழுவின் இரு முக்கியமான தலைவர்களான வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா (சரோஜினி நாயுடு அவர்களின் சகோதரர்), பிரேந்திரநாத் தத்தா (விவேகானந்தரின் இளைய சகோதரர்) ஆகியோர் அங்கில்லாததால் அவர்களைச் சந்திக்க இயலவில்லை.

ஆனால் தற்செயலாக இந்தோனேசியாவிலிருந்து ஹாலந்து வந்து அங்கிருந்த கோமிண்டார்ன் தலைவரான ரட்ஜரிடம் கடிதம் பெற்று, மாஸ்கோ செல்லும் வழியில் ஜெர்மனி வந்த அபனி முகர்ஜியை எம்.என்.ராய் முதன் முதலில் பெர்லினில் சந்தித்தார். அவருக்கு அபனி முகர்ஜியை முன் பின் தெரியாது. அவர் அபனி முகர்ஜி காங்கிரஸிற்கு வருவதை விரும்பவில்லை. இந்தியாவிற்குச் செல்லுமாறு அறிவுரை கூறினார். ஆனால் அபனி முகர்ஜி அந்த அறிவுரையை ஏற்கத் தயாராக இல்லை. அவர் மாஸ்கோ சென்றுவிட்டார். (அவரது கதையைத் தனியே பிறகு பார்ப்போம்).1920 ஆம் ஆண்டின் ஆரமபத்தில் மாஸ்கோ வந்தடைந்த எம்.என்.ராய்க்கு ஒரு வியப்பான வரவேற்பு காத்திருந்தது. அத்தோடு லெனின் 2 ஆவது கோமிண்டார்ன் காங்கிரஸில் முன்வைக்கவிருந்த தீர்மானத்தின் (அவர்கள் தேற்றம் – தீஸிஸ் – எனக் குறிப்பிடுகின்றனர்) பிரதி ஒன்றும் அவரிடம் வழங்கப்பட்டது. ‘தோழர்.எம்.என்.ராயின் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும்’ என லெனின் அவர்களே கையால் எழுதிய குறிப்புடன் இருந்தது அந்த ஆவண நகல். லெனின் விருப்பப்படி அவரைச் சந்திக்கவும் எம்.என்.ராய் அழைத்துச் செல்லப்பட்டார். 32 வயதான எம்.என்.ராய் அவர்களைப் பார்த்து, நான் இவ்வளவு இளவயதினர் ஒருவரை எதிர்பார்க்கவில்லை. வெள்ளைத்தாடி கொண்ட ஒரு இந்திய முதியவரை எதிர்பார்த்தேன்” எனக் கூறியுள்ளார். (லெனினுக்கே அப்போது 50 வயதுதான்!) பிறகு இருவருக்கும் இடையே காலனிய நாடுகளின் விடுதலை மற்றும் சோசலிசம் நோக்கியப் பயணம் குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துள்ளன. பல சந்திப்புகளில் இந்த விவாதங்கள் நீண்டன. இறுதியில் தனது கருத்தில் உறுதியாக இருந்த லெனின் தனது தீர்மானத்தோடு, எம்.என்.ராயின் தீர்மானத்தையும் கோமிண்டான் காங்கிரஸில் முன் வைக்கச் செய்தார். லெனின் தனது தீர்மானத்தை விளக்கியும் வலியுறுத்தியும் பேசினார். எம்.என்.ராயும் தனது தீர்மானத்தை விளக்கியும் வலியுறுத்தியும் பேச வாய்ப்பளிக்கச் செய்தார். இரண்டு தீர்மானங்கள்மீதும் நீண்ட விவாதங்கள் நடந்தன. லெனினது தீர்மானம் (தீஸிஸ்) சில திருத்தங்களுடன் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் லெனின், காலனிய நாடுகள குறித்த நமது புரிதல் முழுமையற்றதுதான்” என்று கூறி, அதனால் எம்.ராயின் தீர்மானத்தையும், அவரே முன்மொழிந்த பல திருத்தங்களுடன் மாற்றுத் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளக் கோரினார். எம்.என்.ராய் தன்னுடைய தீர்மானம் மாற்று (Alternative) அல்ல, என்று விளக்கி, அதனை துணைத் தீர்மானமாக (Sublimentary) ஏற்றுக் கொள்ளக் கோரினார்.

இந்த இரண்டாவது கோமிண்டர்ன் காங்கிரஸில், எம்.என்.ராயும் எவ்லின் டிரெண்டும் மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கலந்துகொண்டனர். ராய் முழு வாக்குரிமையுடன் பிரதிநிதியாகவும், எவ்லின் ஆலோசனை வாக்குரிமையுடன் (Consulative Vote) பிரதிநிதியாகவும் பங்குபெற்றனர். முன்னரே கண்ட அபனிநாத் முகர்ஜி கட்சி சார்பில்லாது தனிப்பட்ட முறையில் ஆலோசனை வாக்குரிமையுடன் கலந்துகொண்டார். அவர்கள் தவிர வேறு இரு இந்தியரும் பங்கு பெற்றனர். தாஸ்கண்டில் இருந்து இந்தியப் புரட்சியாளர்கள் சார்பாக வந்திருந்த மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரியா அவர்களும், முகம்மது சஃபிக் சித்திக் யும் அந்த இருவர். ஆச்சாரியா ஆலோசனை வாக்குரிமையுடன் பங்குபெற்றார். முகம்மது சஃபி பார்வையாளராகப் பங்கு பெற்றார். அவர்கள் கதையும் அவர்கள் தாஷ்கண்ட்  வந்து நின்ற கதையும் பிறகு பார்ப்போம்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் காங்கிரஸ் முடிந்தபின் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியப் புரட்சிக்குப் பணியாற்றுவது எனவும், இந்தியா – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்த மக்களை ஆயுதபாணியாக்குவது எனவும் திட்டம் தீட்டப்பட்டது. லெனின் இந்தத் திட்டம் குறித்து நம்பிக்கையற்று இருந்தார். அவர், காங்கிரசும் காந்தியும் மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கு குறித்து மீண்டும் மீண்டும் கவனப் படுத்தினார். அவர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்காகப் போராடி மக்களின் நம்பிக்கையைப் பெறும் வழியை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எம்.என்.ராய் அவரது வங்காள அதிதீவிர குறுங்குழுவாதத்திலிருது முழுமையாக விடுபடாதவராகவே இருந்தார். காங்கிரஸ் பின்னடைந்துகொண்டிருப்பதாகவும் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்று திரண்டு எளிதில் காந்தியின் தலைமையைப் புறக்கணித்து வரும் மக்கள் திரளை தம் பின் திரட்ட முடியும் என்றும் தனது விருப்பத்தையெல்லாம் கணிப்பாகக் கூறிவந்தார். எல்லைப் பகுதி மக்களை ஆயுதபாணியாக்குவது என்பதும் இந்தக் கருத்தாக்கத்தின் பகுதிதான். இதற்கு ஆப்கானின் அன்றைய அமீர் அமானுல்லாவின் ஆதரவு அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும். அன்றைக்கு அமீர் அமானுல்லா பிரிட்டிஷாருடன் முரண்பட்டு போல்ஷ்விக்குகளோடும் இந்தியப் புரட்சியாளர்களோடும், கிலாபத் இயக்கத்தாரோடும் நட்புடன் இருந்தார். இது தற்காலிகமானதுதான் என்றும் பிரிட்டிஷாருடன் அவர் சமரசம் செய்துகொள்வார் என்றும் லெனின் கூறிவந்தார். ஆனாலும் எம்.என்.ராய் போன்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆப்கானிஸ்தான் வழியாக ஆயுதங்களையும் புரட்சியாளர்களையும் இந்தியாவிற்குள் அனுப்பும் முயற்சிக்கு அனுமதியளித்தார். அதன் அடிப்படையில் பெரும் ஆயுத சேமிப்புக் கிடங்கோடு 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் அடித்தளம் உருவாக்கப்பட்டது. எம்.என்.ராய், எவ்லின் உட்பட அனைவரும் தாஷ்கண்ட் வந்தடைந்தனர். கிலாபத் இயக்கத்தின் பகுதியாக துருக்கி சென்று, பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடும் நோக்கோடு இந்தியாவிலிருந்து நடையாய் நடந்து தாஷ்கண்ட் வந்திருந்த போராட்டக்காரர்களான முஹாஜிர்களிலிருந்து சோவியத் ஆதரவாளர்களாக மாறியிருந்தவர்களுக்கு அரசியல் மற்றும் ராணுவப் பயிற்சி அளிக்க தாஷ்கண்டில் ஒரு பயிற்சிப் பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சிபெற்ற இவர்கள் மீண்டும் இந்தியாவிற்குச் சென்று இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டவும் காங்கிரசிற்குள் இருந்து சுதந்திரத்திற்கும் போராடுவது என்பது திட்டம். சவுக்கத் உஸ்மானி, ரஃபீக் அஹமது, ஃபெரோசுதீன் மன்சூர், மீர் அப்துல் மஜீத், கௌஹர் ரஹ்மான் ஆகியோர் இந்த அணியில் அடங்குவர். அவர்கள் அங்கு வந்து சேர்ந்த கதையை பிறகு பார்ப்போம். பயிற்சிகள் ஒரு புறம் நடைபெற்றன. ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு புரட்சியாளர்களையும் ஆயுதங்களையும் அனுப்புவது குறித்த முயற்சிகள் மறுபுறம் நடைபெற்றது. ஆனால் போல்ஷ்விக் புரட்சி நடைபெற்றபோதே விழித்துக் கொண்ட பிரிட்டிஷ் அரசும் இந்தியாவின் பிரிட்டிஷ் போலீசும் எதிர் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருந்தன. பிரிட்டிஷ் அரசு லெனின் எதிர்பார்த்தபடி ஆப்கனிஸ்தானின் அமீருடன் சமரசம் செய்துகொண்டது. அமீர் ஆப்கானிஸ்தான் வழியாகப் புரட்சியாளர்களோ ஆயுதமோ இந்தியா செல்ல அனுமதிக்கவில்லை. அத்தோடு காபூலில் மகேந்திர பிரதாப் சிங் தலைமையில் அமைந்திருந்த தற்காலிக இந்திய அரசு எனும் அமைப்பினரையும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறக் கூறினார். மகேந்திர பிரதாப் சிங், பேராசிரியர்.பரகத்துல்லா, ஒபைதுல்லா, முகம்மது அலி சிப்பாஸி ஆகியோரும் தாஷ்கண்ட் வந்தடைந்தனர்.இப்படி அன்றைய தாஷ்கண்டில் மூன்று இந்திய அமைப்புகள் இருந்தன. எம்.என்.ராய், அபனி முகர்ஜி ஆகியோரின் தலைமையில் அவர்களோடு இணைந்திருந்த முஹாஜீர் போராளிகளின் அமைப்பு; அது அதிகாரபூர்வமாக கோமிண்டார்னின் செயற்குழுவிற்கு கீழான காலனிகளுக்கான அமைப்பு.  மகேந்திர பிரதாப் சிங், பரக்கத்துல்லா தலைமையிலான தற்காலிக இந்திய அரசாங்கம் எனும் அமைப்பு மற்றும் எம்.பி.டி.ஆச்சாரியா, அப்துர் ராவுப் தலைமையிலான இந்தியப் புரட்சியாளர்கள் சங்கம். இவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் தத்தம் அமைப்பில் இணைய அழைத்துக்கொண்டிருந்தனர். இதற்கு மேலாக விரேந்திர சட்டோபாத்யாயா, புபேந்திரநாத் தத்தா தலமையிலான பெரிலின் கமிட்டியும் தங்களை அடக்கிய ஒரு இந்தியப் புரட்சிகர கவுன்சிலை அமைக்கக் கோரிவந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஒரு கம்யூனிச இயக்கத்தை தொடங்குவதற்கான பணிகளை முன்னெடுக்கும் அமைப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. எம்.என்.ராய் தா அது உரிய காலத்திற்கு முந்தைய செயல் என நம்பினாலும் முஹாஜீர் போராளிகளின் கோரிக்கை காரணமாக அதனை ஏற்றுக்கோண்டதாக கூறியதாகப் பதிவாகியுள்ளது. ஆச்சாரியாவிடம் இருந்துதான் அதற்கான கோரிக்கை முதலில் வந்தது. போல்ஷ்விக்குகளும்  கம்யூனிஸ்ட்களும் பரவலாக கவனம் பெற ஆரம்பித்த காரணத்தால் ஏதேதோ விளக்கங்கள் பரப்பப்பட்டு வருவதால் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என அவர் கோரியதாகவும் பதிவுகள் உள்ளன – இல்லை-அடுத்த கோமிண்டார்ன் காங்கிரஸ் நெருங்கி வந்ததால் எம்.என்.ராய் அதன் தலைமைக் குழுவில் கட்சி இல்லாது நீண்டநாள் தொடர்வது இயலாது என்பதால் கட்சியை அமைக்க முன்வந்தார் எனவும் கூறப்படுகின்றது. கூறப்படும் இந்த எல்லாக் காரணங்களும் உண்மையாய் இருக்கவே சாத்தியங்கள் அதிகமாய் இருப்பதாக தெரிகின்றது.

இப்படியாக 1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அன்றைக்கு இந்தியா ஹவுஸ் என அழைக்கப்பட்ட கட்டிடத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. முதல் கூட்டத்தில் எம்.என்.ராய், எவிலின் டிரெண்ட் ராய், அபனி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்காஃப் முகர்ஜி, எம்.பி.டி.ஆச்சாரியா, முகம்மது அலி சிப்பாஸி, முகம்மது சஃபிக் ஆகியோர் பங்குபெற்று உறுப்பினர்களாயினர். மகம்மது சஃபிக் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் திட்டத்தை எழுத ஆச்சாரியா, எம்.என்.ராய், அபனி முகர்ஜி  அடங்கிய  ஆணையம்  அமைக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டபின் எம்.என்.ராயின் செயல்பாடுகள் ஒரு தனிப் பெரும் அத்தியாயம். அதைப் பிறகு பார்ப்போம்.

Abani Mukherji - Wikipedia

அபனி முகர்ஜி (1933-1891)

அந்தத் தீவுச் சிறையின்மீது அந்தி கவிழ்ந்துகொண்டிருந்தது. அப்போது சிறைவாசலின் பீரங்கி முழங்கியது. அது ஒரு கைதி தப்பித்து விட்டது குறித்த அபாய அறிவிப்பு. ஆனால் அந்த நேரத்தில் அந்தக் கைதி தீவுச் சிறையிலிருந்து சிங்கப்பூர் நீரிணையில் குதித்து நீந்தி பாதி தூரம் கடந்து ஒரு ஜப்பானிய மீன் பிடிப்புக் கப்பலில் ஏறியிருந்தார். வெள்ளைக்காரனிடம் இருந்து தப்பிவரும் அவரை ஜப்பானிய மீனவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து விட்டனர். இது ஏதோ விக்டோரியா காலக் கதையல்ல. நடந்தது 1917 ஆம் ஆண்டின் பிற்பாதியில். அவர் அபனிநாத் முகர்ஜி எனும் அபனி முகர்ஜி.

1915 இறுதியில் இந்தியப் புரட்சியாளர்களால் ஆயுதம் வாங்க அனுப்பப்பட்டு ஜப்பான், சீனா என அலைந்தவர். பின் அன்றைக்கு (1916 இல்) முக்கியமான செய்திகளோடு இந்தியா திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பிரிட்டிஷ் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிங்கப்பூர் அருகே தீவுச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து ஒரு சாகச முயற்சியில் தப்பி இந்தோனேசியா அடைந்தார். ஷாஹிர் என்ற பெயரில் ஜாவாவில் சுமார் இரண்டாண்டு ஏதேதோ பணியாற்றி, அங்கிருந்த டச்சுக் கம்யூனிஸ்ட்டுகளின் தொடர்பால் சோசலிஸ்ட்டாக மாறினார். பின் 1920  ஆரம்பத்தில் மாஸ்கோவில் 3 ஆவது அகிலமான கோமிண்டார்னின் 2 ஆவது காங்கிரஸில் கலந்துகொள்ள டச்சுத் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் வந்தடைந்தார். அன்றைக்கு அங்கு இருந்த டச்சுக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் கோமிண்டார்ன் தலைமைக் குழுவில் இருந்தவருமான ரட்ஜர்ஸ் அவர்களது பரிந்துரைக் கடிதத்தோடு கோமிண்டார்ன் காங்கிரஸில் எம்.என்.ராய், எவ்லின் டிரெண்ட் ராய், எம்.பி.டி.ஆச்சாரியா, முகம்மது ஷாஃபிக் ஆகியோரோடு பங்கு பெற்றார். பின் எம்.என்.ராய் அவர்களோடு தாஷ்கண்ட் வந்தார். 1920-அக்டோபர் 17இல் முதல் கட்சிக் கிளை ஆரம்பிக்கப்பட்டபோது அதில் உறுப்பினர். சில ஆண்டுகள் எம்.என்.ராயுடன் இணைந்து பணியாற்றினார். பின் அவருடன் முரண்பட்டுப் பிரிந்தார். ஆனால்
பின்னரும் கோமிண்டார்னின் கீழ்தான் பணியாற்றினார். 1930-களில் ஸ்டாலின் காலத்தில் வீசிய  புயலில் அநியாயமாக பலியானவர்களில் ஒருவராக ஆகிப்போனார். பிற்காலத்தில் குற்றமற்றவர் என பழி துடைக்கப்பட்டுள்ளார். வாழ்நாளெல்லாம் கம்யூனிஸ்டாக, ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக, மனந்தளராத புரட்சியாளராக வாழ்ந்து மடிந்துள்ளார்.

பனிநாத் முகர்ஜி என்ற அபனி முகர்ஜி, மத்திய ராஜதானியின் ஜபல்பூர் நகரில் 1891 ஜூன் 3 அன்று பிறந்தார். தந்தை திரியொக்னாத் முகர்ஜி. இன்றைய வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தின் பாபூலியா சொந்த கிராமம். தந்தையாருக்கு கல்கத்தாவில் சொந்த வீடு இருந்துள்ளது. ஓரளவு வசதியான குடும்பம். அபனி முகர்ஜி புனே, கல்கத்தா நகர்களில் வளர்ந்துள்ளார். 1905 ஆம் ஆண்டு மாணவராக வங்கப் பிரிவினையை எதிர்த்த போராட்ட அலைகளினால் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டார். காங்கிரஸ் தொண்டராகக் கூட்டங்களில் பங்குபெற ஆரம்பித்துள்ளார். அவரது வீட்டில் குடியிருந்த சாகாராம் கனேஸ் தியூஸ்கர் ஒரு புகழ்பெற்ற புரட்சிக்காரர். அவரது தொடர்பால் அன்றைய முன்னணிப் புரட்சியாளர்களான பிபின் சந்திரபால், பாரின் கோஷ் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. கலவரம் அடைந்த பெற்றோர் அபனியை வங்கத்திலிருந்து வெளியே அனுப்ப வெண்டும் என்பதற்காக அஹமதாபாத்தில் ஜவுளித் தொழில்நுட்பக் கல்வி கற்க அனுப்பி வைத்தனர். அபனி ஜவுளித் தொழில்நுட்பம் கற்றுத் தேர்ந்தார். ஆனால் புதிய அரசியல் தொடர்புகள் கிடைக்கப்பெற்றவரானார்.அஹமதாபாத்தில் கல்வி முடித்து கல்கத்தா பங்கலக்‌ஷ்மி மில்லில் பணியாற்றினார். பின் 1909-10 ஆம் ஆண்டுகளில் மேற்படிப்பிற்காக ஜப்பான் சென்றார். அப்போதே ஜதீன் முகர்ஜியின் தொடர்பால் ஜப்பானில் ஒரு ஆதரவுக் குழுவை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்தார். ஆனால் ஜப்பானியர்களின் மேட்டிமை உணர்வால் விரைவில் வெறுப்புற்றார். அப்போது டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மவுலானா பரக்கத்துல்லா அறிவுரையின் பேரில் ஐரோப்பா பயணம் ஆனார். அங்கு ஜெர்மனியிலும் தன் தொழில் படிப்பைத் தொடர்ந்துள்ளார். அங்குதான் முதன்முதலில் சோசலிச அரசியல் அவருக்கு அறிமுகம் ஆகியுள்ளது. 1912 ஆம் ஆண்டு அவர் ஜெர்மனியிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். புரட்சியாளர்களோடு அவரது தொடர்பும் ரகசியப் பணிகளும் தொடர்ந்தாலும் கல்கத்தாவின் ஆன்ரூ யூல் நிறுவனத்தில் ஜவுளித் தொழில் நுட்பப்பணியும் ஆற்றியுள்ளார். அங்கு 1913 ஆம் ஆண்டு நடந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நிர்வாகத்தாலும் போலீஸாலும் அடையாளம் காணப்பட்டார். பிரிட்டிஷ் போலிஸ் அவர்மீது நடவடிக்கை எடுக்கும்முன் புரட்சியாளர்களின் ஆதரவாளரும் அறிவுஜீவியுமான பேராசிரியர்.பினாய் சர்க்கார் உதவியோடு ராஜா மஹேந்திர பிரதாப் சிங், மதுரா நகரில் பிரேம் மஹாவித்யாலயா என்ற பெயரில் நடத்திவந்த தேசியப்பள்ளியில்  ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் அவரது செயலாளர்
ஆனார். மஹேந்திர பிரதாப்தான் பின்னர் காபூலில் தற்காலிக இந்திய அரசை நிறுவியவர்.

1914 ஆம் ஆண்டு முதல் உலகப் போர் வெடித்தது. அபனி முகர்ஜி கல்கத்தா வந்துள்ளார். புரட்சியாளர்களின் மிகப் பெரும் தலைவராக விளங்கிய ஜதின் முகர்ஜியால் ஆயுதப் புரட்சிக்கு ஆயுத உதவி பெற ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். கிட்டத்தட்ட இதே சமயத்தில்தான் பின்னர் எம்.என்.ராய் எனப் புகழ்பெற்ற நரேந்திரநாத் பட்டாச்சார்ஜியும் அன்றைக்கு பட்டாவியா என அழைக்கப்பட்ட இந்தோனேசியத் தலைநகரான ஜகார்த்தாவிற்கு அனுப்பப்பட்டார். ஆனால் நரேனும் அபனியும் ஒருவரை ஒருவர் அறியவில்லை.. இருவரையும் அனுப்பிவிட்டு ஜதின் முகர்ஜி ஒரிசாவின் பலாசோர் பகுதி காடுகளுக்குள் சென்றுவிட்டார்.

1915 ஆம் ஆண்டு ஜப்பான் வந்தடைந்த அபனி முகர்ஜி அவருடைய பழைய ஜப்பானிய நண்பர் வீட்டில் தங்கினார். அன்றைக்கு ஜப்பானில் இருந்த பேராசிரியர். பினாய்குமார் சர்க்கார், சிவப்பிரசாத் குப்தா, கெதர் கட்சித் தலைவரான பகவான் சிங், ராஷ்பிகாரி போஷ் ஆகியோரோடு அபனி முகர்ஜியும் இணைந்தார். அப்போது ஜப்பானுக்கு வந்திருந்த லாலா லஜபதிராய் மற்றும் சீனத் தலைவர் சன்யாட்சென் ஆகியோரும் பல கூட்டங்களில் கலந்துகொண்டு அறிவுரைகள் கூறியுள்ளனர். ராஷ்பிகாரி போஸ், பகவான் சிங், அபனி முகர்ஜி ஆகியோர் கொண்ட புரட்சிகர ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அவர்களது வழிகாட்டலின்படி அபனி முகர்ஜியும் சிவப்பிரசாத் குப்தாவும் 1916 ஆம் ஆண்டு பல முக்கியமான செய்திகளோடும் தொடர்பு முகவரிகளோடும் ஜதின் முகர்ஜியை சந்திக்க இந்தியாவிற்கு பயணப்பட்டனர். ஆனால் ஜதின் முகர்ஜி 1915 செப்டம்பரில் நடந்த ஒரு ராணுவ மோதலில் மரணம் அடைந்தது அவர்களுக்குத் தெரியவில்லை. அபனியும் சிவப்பிரசாத் குப்தாவும் பினாங்கு நகரில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டனர். அபனி முகர்ஜி சிங்கப்பூரின் ஃபோர்ட் கேனிங் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டார். எளிதில் நெருங்க முடியாத, தப்பிக்க வழியே இல்லாத சிறை எனப் பெயர் பெற்றது அந்தச் சிறை. ஆனால் அபனி முகர்ஜி ஒரு பெரும் சாகசமாக அங்கிருந்து தப்பினார்.

சிங்கப்பூரின் ஃபோர்ட் கேனிங் சிறையில் சில மாதங்கள் ராணுவ விசாரணைக்கு ஏனைய பல அரசியல் கைதிகளுடன் காத்திருந்தார். பல ஜெர்மன் கைதிகள் உடனிருந்தனர். பிரிட்டிஷ் எதிர்ப்பு அவர்களை ஒன்றுபடுத்தியிருந்தது. அபனி முகர்ஜி நீண்ட நாட்களாகத் திட்டம் தீட்டினார். தப்பித்துப் போக இயலாத சிறை என்ற பெயர் பெற்று  இருந்ததால் சில வகையில் காவல் கெடுபிடிகள் குறைவு எனத் தெரிகின்றது. தினசரி ஒரு மணி நேரம் கைதிகள் கடலில் நீராட அனுமதி இருந்துள்ளது. அது சிங்கப்பூர் நீர்ச் சந்தியை இந்தியப் பெருங்கடலோடு இணைக்கும் ஒரு குறுகலான, ஆபத்து நிறைந்த, சுறா மீன்கள் வாழும் கடற்பகுதி. அத்தோடு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் கண்காணிப்பின் கீழ்தான் கடல் குளியல். எனவே யாரும் தப்பிக்க முயற்சித்தது இல்லை. மிகவும் சிறந்த நீச்சல் வீரரான அபனி தப்பிக்க முயற்சித்தபோது ஜெர்மன் கைதிகள் உதவியுள்ளனர். அவர்கள் கூச்சலும் கும்மாளமுமாய் காவலர்களின் கவனத்தைத் திருப்பியபோது அபனி முகர்ஜி நீண்டநேரம் நீருக்குள் நீந்தி காவலர்களின் பார்வைப் பரப்பில் இருந்து மறைந்துவிட்டார். அவர்கள் கண்டுபிடித்து பீரங்கியால் சுட்டு அபாய அறிவிப்பு அளிக்கும்முன் அவர் நீண்ட தூரம் நீந்திச் சென்றுவிட்டார். அங்கு தற்செயலாக வந்த ஒரு ஜப்பானிய மீன்பிடிப்புப் படகில் தஞ்சம் அடைந்துள்ளார். பிரிட்டிஷ் எதிர்ப்பில் அவரை ஏற்றிக்கொண்டாலும், அவர்களது தைரியம், அருகே இருந்த மனிதர்கள் வசிக்காத தீவில் கொண்டுபோய் இறக்கிவிடும் அளவில்தான் இருந்துள்ளது.தனி மனிதனாக பல நாட்கள் காட்டில் குரங்குகள் உண்ட காய், ,கனிகள் கொட்டைகளை தானும் உண்டு சுனைநீர் அருந்தி உயிர் பிழைத்துள்ளார். அந்த மனிதவாசனையற்ற தீவில்  இருந்து இந்த்தோனேசியப் படகு ஒன்றில் சுமத்திரா வந்தடைந்தார். அங்கு ஒரு டச்சு எஸ்டேட் நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் நம்பிக்கைக்குரிய ஊழியராகப் பணியாற்றியுள்ளார்.அங்குத் தோட்டத்தொழிலாளர் மத்தியில் பணியாற்றிய டச்சுக் கம்யூனிஸ்ட்டுகள் தொடர்பு கிட்டியுள்ளது. அவர்கள் மூலம் அவரது சோசலிசம் குறித்து கொண்டிருந்த புரிதல் அதிகமானது. மார்க்சியம் குறித்தும் புரிதல் பெற்றுள்ளார். அத்தோடு ரசியப் புரட்சி குறித்தும் போல்ஷ்விக்குகளின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கொள்கைகுறித்தும் அறிந்து வியந்துள்ளார். அங்கிருந்த சுமார் இரண்டாண்டுகளில் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய தோழராக மாறியுள்ளார். 1919 ஆம் ஆண்டு இறுதியில் கோமிண்டார்னின் 2 ஆவது காங்கிரஸ் நடக்கவிருப்பதை அறிந்தபோது அதில் பங்குபெற விரும்பினார். இந்தோனேசிய, டச்சு கம்யூனிஸ்ட்டுகள் உதவியுள்ளனர். அவர்களது அறிமுகக் கடிதத்தோடு, டாக்டர்.ஷாஹிர் என்ற பெயரிலான போலிப் பாஸ்போர்ட்டோடு ஹாலந்து வந்தடைந்தார். இந்தோனேசிய டச்சுக் கம்யூனிஸ்ட்டுகளின் வலுவான சிபாரிசின் அடிப்படையில் புகழ்பெற்ற டச்சுக் கம்யூனிஸ்ட் தலைவரும் கோமிண்டார்ன் தலைமைக் குழு உறுப்பினருமான ரட்ஜர்ஸ் அளித்த அனுமதிக் கடிதத்தோடு மாஸ்கோ புறப்பட்டார். அந்தப் பயணத்தின் முதல் கட்டமாக பெர்லின் வந்தடைந்தார்.

அப்போது பெர்லினில் இருந்த எம்.என்.ராய் அவர்களைச் சந்தித்துள்ளார். இந்தியாவிலிருந்து தன்னைத் தவிர மேலும் ஒரு பிரதிநிதி என்று வியப்பு. 1920 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கிளாஸ்கோ நகரிலிருந்து வெளிவந்த ’கிலாஸ்கோ சோசலிஸ்ட்’  இதழில் வெளிவந்த ‘இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை’ (Indian Communist Manifesto) யின் இணையாசிரியர். இந்தியாவில் சோசலிசத்திற்கான முதல் திட்டம் ஆன அதன் ஏனைய ஆசிரியர்கள் எம்.என்.ராய், சாந்தி தேவி ஆகியோர். சாந்தி தேவி என்பது எவ்லின் பயன்படுத்திய புனைப் பெயர்தான்.

ஆனாலும் எம்.என்.ராய், அவருக்கு காங்கிரசிற்கு வரவேண்டாம் என அறிவுரை கூற முற்பட்டுள்ளார். ஆனால் அபனி அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவர் மாஸ்கோ அடைந்தார். கோமிண்டார்ன் காங்கிரஸில் எந்தக் கட்சியையும் பிரதிநித்துவம் செய்யாத சுதந்திர சோசலிஸ்டாக ஆலோசனை வாக்குரிமையோடு பங்குபெற்றுள்ளார். அங்கு எம்.என்.ராய், அபனி முகர்ஜி, எவ்லின் டிரெண்ட் ராய் ஆகியோரோடு மேலும் இரு இந்தியர்களும் பங்கு பெற்றனர். எம்.பி.டி. திருமலாச்சாரியா, முகம்மது சாஃபிக் ஆகியோரே அவர்கள்.

காங்கிரஸிற்குப் பிறகு அன்றைய துருக்கிஸ்தான் தலைநகரான தாஷ்கண்ட் நகரில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியப் புரட்சியாளர்களையும் அனுப்பும் திட்டத்தின் அடிப்படையில் அனைவரோடும் தாஷ்கண்ட் வந்து சேர்ந்தார். அப்போது அவர் ரோஷா ஃபிட்டிங்காஃப் அவர்களையும் திருமணம் செய்திருந்தார். ரஷ்ய யூதப் பெண்மணியான ரோஷா, லெனினது தனி அலுவலகத்தில் அவரது செயலாளரின் உதவியாளர். அவர் 1981 -லிருந்தே போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். 1921 ஆம் ஆண்டில் அஜர்பைஜானின் பாகு நகரில் நடந்த கிழக்கத்திய நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்றார். தாஷ்கண்ட் திரும்பிய அபனி முகர்ஜி, 1920 அக்டோபர் 17 அன்று இந்தியக் கம்யூனிட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டபோது அதில் உறுப்பினராக இருந்தார்.

கட்சி அமைக்கப்பட்ட போதும் அதனை ஒட்டி அந்தத் தேநீர்க் கோப்பையான கட்சிக் கிளைக்குள் வீசிய உட்கட்சிப் புயலிலும் அபனி முகர்ஜியும் எம்.என்.ராய் அவர்களும் ஓர் அணியில்தான்  இருந்தனர். உடனடியாக இந்தியாவில் மார்க்சியத்தை அறிமுகம் செய்யும் பணிகளிலும், காங்கிரஸிற்குள் ஒரு மார்க்சியத் திட்டத்தினை முன் வைக்கும் பணியிலும், இந்தியா குறித்த முதல் மார்க்சிய ஆய்வை எழுதி முன்வைக்கும் பணியிலும் இணைந்தே பணியாற்றினர். பின்னர் இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது, அவரவர் அவர்களது வழியில் பணியைத் தொடர்ந்தது, பின்னர் எம்.என்.ராய், ஸ்டாலின் காலத்தின் ’களையெடுப்பு’ கொடூரத்தில் பலியாக இருந்து அவரது நண்பர்களான பொரோடின் புகாரின் உதவியால் உயிர் தப்பியது, அபனி முகர்ஜி அதற்கு பலியானது எல்லாம் தனியே பிறகு பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய, பாடம் கற்க வேண்டிய வரலாறு.

MN Roy: brief outline of life-events and thoughts – Part 18 | sreenivasarao's blogs

எவ்லின் டிரெண்ட் (ராய்) (1970-1892)

இந்தியப் பொது உடமை இயக்கத்தின் வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர். இந்தியப் பொது உடமை இயக்கத்தின் பிதாமகன் எம்.என்.ராய் ஒரு சோசலிஸ்டாக மார்க்சிஸ்டாக மாறுவதற்கே ஓரளவு காரணமானவர். ஆனால் அந்த மனிதராலேயே கொஞ்சமும் நன்றியின்றி தனது நினைவுக் குறிப்புகளில் முற்றிலுமாக மறைக்கப்பட்டவர். வரலாற்றின் போக்கை மாற்றியவர்கள், முன்னகத்தியவர்கள் ஒரு நாள் இல்லையெனில் ஒரு நாள் விதந்தேற்றப்படுவர் என்பதற்கு எம்.என்.ராய் அவர்களின் வாழ்க்கையே ஒரு எடுத்துக் காட்டுதான் என்றாலும் அவருடைய சிறுபிள்ளைத்தனத்தையும் தாண்டி இன்றைக்கு மறக்கமுடியாத ஆளுமையாக நினைக்கப்படுபவர் எவ்லின் டிரெண்ட்.

எவ்லின் டிரென்ட், லா மார்ட்டின்–மேரி டெலோம் மெக்லெயோட் (Lamartine–Mary Delome MacLeod) தம்பதியினரின் 7 ஆவது குழந்தையாக 20 அக்டோபர் 1872 இல் அமெரிக்காவின் உட்டா (Utah) மாநிலத்தில், சால்ட் லேக் சிட்டியில் பிறந்தார். தந்தையாரான லாமார்ட்டின் டிரெண்ட் ஒரு புகழ்பெற்ற சுரங்கப் பொறியாளர். அவர் 1860 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர். அவர் ஊர் விட்டு ஊர் பணி நிமித்தம் செல்பவர் என்பதால் எவ்லின் மாணவர் விடுதிகளில் தங்கி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளிக் கல்வியை 1911 ஆம் ஆண்டு முடித்தார். பின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அவரது மூத்த சகோதரரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். பல்கலைக் கழகத்தின் தலைவரான டேவிட் ஜோர்டான் ஸ்டார் ஒரு முற்போக்காளர், போர் எதிர்ப்பாளர், சோசலிஸ்ட். அவரது செல்வாக்கின் கீழ் வந்த பல மாணாக்கர்களில் எவ்லினும் ஒருவர். 1912 ஆம் ஆண்டிலிருந்து 1915 ஆம் ஆண்டு வரை அவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம், கலைச் செயல்பாடுகள், சமூக சேவை, அரசியம் விவாதம் எனத் தீவிரமாக இயங்கியுள்ளார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற மாணவர் சஞ்சிகையான குவாட் (QUAD) இதழின் இணையாசிரியர். கலை, கவிதை ஆர்வலராக பல்கலை வளாகத்தில் இருந்த வங்காள மாணவர்களோடு தாகூர் குறித்து விவாதிப்பவராகவும் இருந்துள்ளார். மொத்தத்தில் அவர் விருப்பப்பட்டிருந்தால் வசதியானதும் வளமானதுமான அமெரிக்க வாழ்க்கை அவருக்கு எளிதில் கிட்டியிருக்கும்.

புரட்சி செய்ய போதுமான ஆட்கள் இல்லாத நிலை குறித்து அதிகம் ஓர்மையில்லாது ஆயுதம் தேடிய நரேன் (எம்.என்.ராய்) அந்தத் தேடலின் போக்கில் 1916 ஜூன் 15 அன்று அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ வந்தடைந்தார். சில நாட்கள் கழித்து அன்று ஸ்டான்ஃபோர்ட் பலகலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று அங்கேயே தங்கியிருந்த தனகோபால் முகர்ஜியிடம் வந்தடைந்தார். தனகோபால் முகர்ஜி பின்னாளில் புகழ்பெற்ற இந்தோ-ஆங்கில எழுத்தாளர் ஆனார். தனகோபால் முகர்ஜியின் மூத்த சகோதரர் ஜாடுகோபால் முகர்ஜி, புகழ்பெற்ற வங்கப் புரட்சியாளர், நரேனின் இயக்கத் தோழர். தனகோபால் முகர்ஜியின் தோழியும் பின்னர் அவரது மனைவியுமான ஈதல் ரே டங்கன், எவ்லின் டிரெண்ட் ஆகியோர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் வகுப்புத் தோழியர், சோசலிச வாசிப்பு வட்டம் மற்றும் பல சமூக சேவை முயற்சிகளில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். அப்போது எவ்லின் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேரத் தயாராகி வந்தார். அந்த நேரத்தில்தான் எவ்லின் நரேன் அறிமுகம் நடந்தது. ஏற்கனவே ஈதல், எவ்லின் அவர்களது வட்டத்தின் நண்பர்கள் அன்றைக்கு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தவரும் அமெரிக்க சோசலிசச் சிந்தனையாளருமான டேவிட் ஸ்டார் ஜோர்டன் அவர்களது செல்வாக்கு காரணமாக இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த ஆழமான அனுதாபங்கள் கொண்டவர்களாக இருந்தனர். நரேன் போன்ற ஒரு புரட்சிக்காரர் எவ்லின் போன்ற ஒருவரின் மனதைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. ஆனால் அது வெறுமனே காதலாக மட்டும் இல்லை என்பது பின்னர்தான் தெளிவானது. எம்.என்.ராயும் எவ்லினுக்குத் தந்த தனது புகைப்படத்தில் ‘To my Goddess from her loving worshipper’ என்றெல்லாம் வழக்கமான காதலர் போல எழுதியுள்ளார். சுமார் ஆறுமாதகாலம் அவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோவில் ஒன்றாய் வாழ்ந்துள்ளனர். எவ்லின் வேலை தேடுவதை விட்டுவிட்டார். அவர் நரேனுடன் ஐரோப்பா செல்லத் தயாராகியிருந்தார்.

நரேனைத் தேடி கல்கத்தாவைச் சேர்ந்த ஆங்கிலப் போலிஸ் அதிகாரி ஃசான் பிரான்ஸிஸ்கோவிற்கும் வந்துவிட்டார். அவரிடம் இருந்து தப்பிக்க நரேன் 1917 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சான் ஃபிரான்சிஸ்கோவைவிட்டு நியூயார்க் வந்து சேர்ந்தார். அங்கு வந்தபின்தான் அவர் போலீசிடமிருந்து தப்ப மணபேந்திரநாத் ராய் எனும் எம்.என்.ராய் ஆக உருவெடுத்துள்ளார். அவரே கூறியுள்ளபடி அதுவரையில் நரேந்திர பட்டாச்சார்யா எனும்பிராமண இளைஞனாகவே அவர் இருந்துள்ளார். பட்டாச்சார்யா எனும் சந்தேகத்திற்கிடமில்லாத பிராமண பெயரை விட்டு பொதுவான ராய் எனும் பெயர் தரித்ததிலேயே அவரது மாற்றம் உள்ளதென்கின்றனர். எவ்லின் பல சிறிய வேலைகள் செய்து பணமீட்டியுள்ளார். அதனைக் கொண்டே வாழ்க்கை நடந்துள்ளது.நியூயார்க்கில் லாலா லஜபதிராய் அமெரிக்க மக்கள் மத்தியிலும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியிலும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தார். எவ்லின் டிரெண்ட் லாலா லஜபதி ராயின் செயலாளராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில்தான் எம்.என்.ராய் ஒரு சோசலிஸ்டாகவும் மார்க்சிஸ்டாகவும் மாறிய காலகட்டம். மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்ததோடு தானும் மாறுதல் அடைந்தவராக எவ்லின் இருந்தார். இந்தகால கட்டத்தில்தான் தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி எம்.என்.ராயை எவ்லின் திருமணம் செய்துகொண்டார். அமெரிக்கா பிரிட்டனுக்கு ஆதரவாக உலகப்போரில் இறங்கியபோது மீண்டும் கைது செய்யப்படுவதற்கும் இந்தியாவிற்கு அனுப்பப்படுவதற்குமான ஆபத்து வந்தபோது எம்.என்.ராயும் எவ்லினும் 1917 ஜூன் மாதம் மெக்ஸிகோ சென்றனர். பின்னர் மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 3 ஆம் அகிலம் எனப்படும் கொம்யூண்டார்னின் 2 ஆவது காங்கிரஸில் பங்கேற்க 1919 ஆம் ஆண்டு மாஸ்கோ வந்தடைந்தனர். அவரது வாழ்க்கை எம்.என்.ராயின் வாழ்க்கையோடும் இந்தியப் புரட்சியின் வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்ததாக ஆகிப்போனது. எனவே மாஸ்கோவிலிருந்து தாஷ்கண்ட், பின் மீண்டும் மாஸ்கோ, பின் பெர்லின், பாரிஸ், ஜூரிச் என ஐரோப்பாவின் அபல நகரங்களிலுமிருந்து தொடர்ந்து இந்தியாவில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகள் பரவவும், இந்தியாவின் கம்யூனிஸ்டுகள் ஒருங்கிணைக்கப்படவும் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். மாஸ்கோவில் கிழக்கத்திய உழைப்பாளர்களின் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டபோதுஇந்தியப்புரட்சியாளர்களுக்கு வகுப்பெடுத்தவர்களீல் எவ்லினும் ஒருவர். எம்.என்.ராய் தொடங்கிய வன்கார்டு, அட்வாண்டு கார்டு, தி மாசஸ் போன்ற பத்திரிக்கைகளில் தொடர்ந்து சாந்தி தேவி என்ற பெயரில் எழுதிவந்தார். எம்.என்.ராயின் பெயரில் இந்தியாவில் சிங்காரவேலர், எஸ்.ஏ.டாங்கே, முஸாஃபர் அஹ்மது, ஆர்.சி.எஸ்.சர்மா (பாண்டிச் சேரி), சவுக்கத் உஸ்மானி (கான்பூர்), குலாம் ஹுசேன் (லாஹூர்) ஆகியோரோடு நடபெற்ற தொடர்ச்சியான கடிதத் தொடர்பில் எவ்லின் டிரெண்டின் பங்கும் இருந்துள்ளது. எம்.என்.ராய் நாடு நாடாய் அலைந்து திரிந்து பணியாற்றியபோது மாதம் தவறாமல் அவரது பத்திரிகைகள் வெளியாகவும், அவை பல்வேறு வழிகளில் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப் படுவதற்கும் எவ்லின் டிரெண்ட் அரும்பணியாற்றியுள்ளார்.

1925 ஆம் ஆண்டு பாரிசில் இருந்த எம்.என்.ராயும், எவ்லினும் கைது செய்யப்பட்டனர். எம்.என்.ராய் பாரிசிலிருந்து லக்ஸம்பர்க்கிற்கு நாடு கடத்தப்பட்டார். எவ்லின் பாரிசில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார். 1925 ஜூலை மாதம் 11, 12 தேதிகளில் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த காலனிய நாடுகளின் மாநாட்டில் எவ்லின் இந்தியா சார்பில் பங்கு பெற்றார். ஆனால் 1925 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி, என்ன காரணம் எனச் சொல்லாமல் அவர் எம்.என்.ராயையும் இந்தப் பணிகளையும் விட்டுப் பிரிந்து திடீரென்று அமெரிக்காவிற்கு தன் பிறந்த வீட்டிற்கும் சென்றுள்ளார். அமெரிக்க அரசே அக்டோபர் மாதம்தான் அவர் சட்ட விரோதமாக அமெரிக்கா திரும்பியுள்ளதை அறிந்துள்ளது. சில காலம் அவரைக் கண்காணித்து வந்து பின் விட்டுள்ளது. எவ்லின் ஒரு பத்திரிகையாளராகவும் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பின் முறைப்படியாக விவாகரத்தும் ஆகியுள்ளது. அதன்பின் எம்.என்.ராய், எவ்லின் டிரெண்ட் என்ற ஒரு நபர் தன் வாழ்விலோ அல்லது தான் இருந்த இயக்கத்தில் இருந்ததுபோலவோ கட்டிக்கொள்ளவில்லை.

எவ்லின் வெகுசில சந்தர்ப்பங்களில் எம்.என்.ராய் பற்றி பேசியுள்ளார் என்றாலும் அவரும் பிரிவிற்கான காரணம் குறித்து ஏதும் பேசவில்லை. 1931 ஆம் ஆண்டு எம்.என்.ராய் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு மிகவும் மோசமாகவும் நடத்தப்பட்டர். அபோதெல்லாம் அதனை எதிர்த்து அமெரிக்க ஊடகங்களில் எவ்லின் எழுதியுள்ளார். பின் 1936 ஆம் ஆண்டு அவர் வேறு ஒரு திருமணமும் செய்துகொண்டு அமைதியாய் வாழ்ந்து தன் காலத்தைக் கழித்துள்ளார். அவரது நினைவுக் குறிப்புகளை எழுதக் கோரியபோதும் அவர் எழுத மறுத்துள்ளார். ஆனால் 1928 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு மரணம் அடையும்வரை இந்தியா குறித்தும் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தும் இந்தியாவில் பொது உைடமை இயக்கத்தின் வளர்ச்சி குறித்தும் கூர்ந்து கவனித்து வந்துள்ளதாகத் தெரிகின்றது. எத்தனை கண்டங்களைச் சேர்ந்த எத்தனை நாடுகளைச் சேர்ந்த எத்தனை மனிதர்களின் உழைப்பும், கண்ணீரும் செந்நீரும் தியாகமும் இந்த இயக்கத்தின் பின்னே… தண்ணீர் விட்டோ வளர்த்தோம்…??!!

m.p.t. acharya | Magda Nachman Acharya

எம்.பி.டி. ஆச்சார்யா (1954-1887)

மண்டையம் பிரதிவாதி பயங்கரம் ஆச்சாரியா, தமிழகத்தில் சென்னையில் பிறந்து மிக இளம் வயதிலேயே ஒரு தீவிர பிரிட்டிஷ் எதிர்ப்பாளராகப் பரிணமித்தவர். மகாகவி பாரதி ஆசிரியராகப் பணிபுரிந்த இந்தியா பத்திரிகையின் பதிப்பாளர். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு ஈடுகொடுத்து பத்திரிகை நடத்த முடியாமல் போனபோது பாரதியோடும் பத்திரிகையோடும் அன்றைய ஃபிரெஞ்சு  பாண்டிச்சேரிக்குக் குடியேறினார். ஆனால் பிரிட்டிஷாரின் கொடுங்கரங்கள் அங்கும் நீண்டபோது, இந்தியாவிற்கு வெளியிலிருந்து புரட்சியைத் துரிதமாக்க ஐரோப்பா சென்றவர். அங்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என்று பணியாற்றினார். சோசலிஸ்டாக மாறினார். ஆனால் ஒருவகையான அராஜகவாதக் கருத்துகளுக்கு உரியவராகத்தான் இருந்தார். பின் ஆப்கானிஸ்தான் வந்து காபூல் நகரில் ‘இந்திய புரட்சிக் கழகம்’ எனும் அமைப்பை அப்துல் ராப் பார்ஃக் எனும் புரட்சியாளரோடு இணைந்து நிறுவினார். 1919 ஆம் ஆண்டின் இறுதியில் கோமிண்டார்ன் இரண்டாம் காங்கிரஸில் கலந்துகொள்ள மாஸ்கோ சென்றார். அன்றைய நிலையில் இந்தியப் புரட்சிகர அமைப்புகளில் அவர்களது அமைப்புதான் சுமார் 150 செயல்பாட்டாளர்களோடு இயங்கிய பெரிய அமைப்பு. காங்கிரசிற்குப்  பிறகு தாஸ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டபோது அதன் உறுப்பினர். கட்சிக்கான திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர். ஆனால் கட்சி ஆரம்பித்த இரு மாதங்களுக்குள்ளேயே இந்தியப் பொது உைடமை இயக்கம் எனும் 9 பேர் கொண்ட அமைப்பில் முதல் பிளவில் வெளியேறிய இருவரில் ஒருவர். அதன் பின் மீண்டும் ஐரோப்பா சென்று பல ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் அராஜகவாத அமைப்புகளோடு நெருக்கமாக இருந்து பணியாற்றினார். பின் 1931 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி ஒரு அராஜகவாத சோசலிச இயக்கத்திற்காக (லிபர்டேரியன் சோசலிஸ்ட்) பாடுபட்டார். ஒரு பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். மிகவும் வறிய நிலையில் 1954 ஆம் ஆண்டு மறைந்தார். சுயநலம் சிறிதுமின்றி வாழ்நாளெல்லாம் சோசலிசத்திற்காகப் போராடியவராகத்தான் இருந்துள்ளார். வழி பிறழ்ந்தவராக இருந்தாலும் இன்றைக்கும் பாடமாகும் ஓர் வாழ்க்கையே!

ண்டையம் பிரதிவாதி பயங்கரம் ஆச்சாரியா, 1887 ஆம் ஆண்டு  வாக்கில் சென்னையில் பிறந்தவர். எதோ ஒரு தலைமுறையில் மைசூர் பகுதிக்கு குடியேறி பின் ஏதோ ஒரு தலைமுறையில் சென்னைக்கு (அன்றைய மெட்ராஸ்) வந்து சேர்ந்த தமிழ் அய்யங்கார் குடும்பம். தந்தை எம்.பி.நரசிங்க அய்யங்கார், மதராஸ் பொதுப்பணித்துறையில் பொறியாளர். மண்டையம் குடும்பத்தில் பலரும் தேசிய இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருந்துள்ளனர். அவரது நெருங்கிய உறவினரான அழசிங்கப் பெருமாள், பிரம்மாவாதி எனும் இதழை நடத்திய குழுவைச் சேர்ந்தவர். அவர்தான் பத்திரிகை நடத்துவதற்கு ஆச்சாரியாவிற்கு ஆதர்சம் போல் தெரிகின்றது. அதுபோல அப்போது தேசிய இயக்கத்தில் தொடர்புகொண்டிருந்தவரும் சென்னை மாநிலக் கல்லூரி ஆசிரியருமான பேரா.ரங்காச்சாரியும் அவருக்கு உறவினரும் ஒரு ஆதர்சமும் ஆகும்.

சிறுவயது முதலே இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த ஆச்சாரியா மிகச் சிறிய வயதிலேயே தனியே பத்திரிகை நடத்த ஆரம்பித்துள்ளார். அவரது உறவினரான அழசிங்கப் பெருமாளின் பிரம்மவாதி ஆச்சாரியாவிற்கு திருப்தி அளிக்கவில்லை. அது மிகவும் வேதாந்த ஆன்மிக விசயங்களில் கவனம் செலுத்தியது. தேசியம், அரசியல் போன்றவற்றில் பெரிதும் அக்கறை காட்டவில்லை. அன்றைக்கு ஆச்சாரியாவும் மதத்திலிருந்து விடுபட்டவரல்ல என்றாலும் சிறுவயது முதல் விவேகானந்தராலும் ஆகர்சிக்கப்பட்டவர் என்பதால் தூய வேதாந்தம், ஆன்மிகம் எல்லாம் அவருக்கு உவப்பானதாக இல்லை.

1900 ஆம் ஆண்டு அவர் இந்தியா வார இதழைத் தொடங்கினார். பத்திரிகையின் ஆசிரியர் பின்னர் ’மகாகவி பாரதி’ ஆன சுப்பிரமணிய பாரதி. இருவரது உழைப்பில் இதழ் மிகவும் குறுகிய காலத்திலேயே புகழ் பெற்றுள்ளது. அதன் காரசாரமான தலையங்கங்களும் கார்ட்டூன்களும் தேசிய இயக்கத்தினர் மத்தியில் பலத்த வரவேற்பும் பிரிட்டிஷ் போலீஸின் கண்காணிப்பையும் பெற்றது. ஒரு கட்டத்தில் போலீஸ் அடக்குமுறையை சமாளிக்க இயலாமல் பத்திரிகையும் பதிப்பாளரும் ஆசிரியரும் பாண்டிச்சேரிக்கு இடம் மாறினர். பிரிட்டிஷ் ஆதிக்கக் கரம் பாண்டிச்சேரிக்கும் நீண்டது. கைதாகும் அபாயம் நெருங்கியபோது எம்.பி.டி.ஆச்சாரியா ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்தார். இடம் பெயர்வதற்கு முன்பே பத்திரிகை உைடமையை அவரது உறவினரான எஸ்.என்.ஆச்சாரியா பெயருக்கு மாற்றிவிட்டார். அதுவரையில் உச்சிக் குடுமியோடும் ஸ்ரீசூரணத்தோடும் இருந்த ஆச்சாரியா, அதனை எல்லாம் விட்டொழித்துவிட்டுதான் பயணித்தார். கொழும்பு, மார்செய்ல் வழியாக லண்டன் வந்தடைந்த ஆச்சாரியா, அங்கிருந்த இந்திய தேசிய காங்கிரஸினர் நடத்திய ‘இந்தியா ஹவுஸ்’ வந்தடைந்தார். பின்னால் மிக மோசமான பார்ப்பனிய சித்தாந்தவாதியாகவும் காந்தியைக் கொன்ற கூட்டதின் குருஜியாகவும் மாறிய வி.டி.சாவர்க்கர் புரட்சிக்காரராக கோலோச்சிய காலகட்டம். அவர் தவிர அவரைப் போலவே பின்னர் ஆகிப்போன வ.வே.சு.அய்யர் அவர்களும் அங்கிருந்து செயல்பட்டார். இவர்களைத்தவிர ஸ்யாமாஜி கிருஷ்ணவர்மாவும் முக்கியமான தலைவர். நால்வருமே ஒருவிதமான அராஜகவாதப் புரட்சியாளர்கள். ஆனால் அவர்கள் மூவருக்கும் இருந்த பார்ப்பன இந்துமத சாய்வு ஆச்சாரியாவுக்கு என்றும் இல்லை. கம்யூனிஸ்டாக ஆனபின்பும் அராஜகவாத சாய்வு அவருக்குப் போகவில்லை. அங்கிருக்கும்போது துப்பாக்கிச் சுடுவதற்கெல்லாம் பயிற்சி எடுத்துள்ளார். அப்போது லண்டனின் இந்தியா ஹவுஸில் விரேந்திர சட்டோபாத்யாயா, பிக்காஜி கேமா, மேடம் கேமா ஆகியோரும் அங்கிருந்துள்ளனர்.1909 ஆம் ஆண்டு மதன்லால் திங்கரா இந்தியாவிற்கான பிரிட்டிஷ் அமைச்சரான கர்சன் பிரபுவின் ஆலோசகரான சர்.கர்சன் வய்லியை சுட்டுக் கொன்றார். சில தினங்கள் கழித்து மிதவாத இந்தியர்கள் இந்தக் கொலைையக் கண்டிக்கவும் தங்களது பிரிட்டிஷ் விசுவாசத்தைக் காட்டவும் ஒரு கூட்டம் கூட்டியபோது, அங்கு கைகலப்பாகி சாவர்க்கார் கண்ணில் அடிபட்டுவிட்டது. ஆச்சாரியா சாவர்க்காரைத் தாக்கியவரை சுட்டிருப்பார். சாவர்க்கர் தடுத்ததால் சுடாது தலையில் தாக்கி படுகாயப்படுத்தி அதன் காரணமாக கைதாகியுள்ளார். அவரோடு சேர்ந்து வ.வே.சு.வும் கைதாகியுள்ளார். பின் ஆச்சாரியாவை தாக்கியவர் வழக்கை நடத்தத் தயாராக இல்லாத காரணத்தால் விடுதலையாகி உள்ளனர். ஆனால் பிரிட்டிஷ்
அரசு சாவர்க்கரை விடுதலை செய்யவில்லை. ஏனையோருக்கு லண்டனில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. பிக்காஜி கேமா, மேடம் கேமா ஆகியோர் பாரிஸிற்கும் சட்டோபாத்யாயா பெர்லினிற்கும் இடம் பெயர்ந்தனர்.

சிறிது காலம் கழித்து, வ.வே.சு. அய்யரும் ஆச்சாரியாவும் பாரிஸ் நகருக்கு வந்து சேர்ந்தனர். அங்கு தீவிர தேசியவாதிகளும் சோசலிஸ்டுகளுமாகிய பிக்காஜி கேமா, மேடம் கேமா ஆகியவர்களிடம் வந்து சேர்ந்தார். அவர்கள் நடத்திய ‘வந்தேமாதரம்’ என்ற பத்திரிகையை கொண்டுவர உதவிகரமாக இருந்தார். அந்தப் பத்திரிகையை சட்ட விரோதமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தார். அவர்களோடு ஏற்பட்ட நட்பின் காரணமாக அன்றைய ஐரோப்பாவின் முன்னணி சோசலிஸ்டுகளோடு தொடர்பு ஏற்பட்டது. அதன் காரணமாக ஒரு சோசலிஸ்டாக உருப்பெறுவதும் நடந்தது. சிறையிலிருந்த சாவர்க்காரை விடுதலைக்குப் பணியாற்றும் கமிட்டி ஒன்றும் ஆச்சாரியாவின் முன் முயற்சியில் உருவானது.

அப்போது பெர்லினில் இருந்து இயங்கத் தொடங்கியிருந்த இந்திய தேசிய செயல்பாட்டாளர்களோடு ஒருங்கிணைப்பை ஏற்பாடுசெய்ய வேண்டியும் அங்கிருந்து ‘தல்வார்’ என்ற பத்திரிக்கைைய நடத்த வகை செய்யவும் ஆச்சாரியா பெர்லின் அனுப்பப்பட்டார். பெர்லினில் இருந்த விரேந்திரநாத் சட்டோபாத்யாயா, விவேகானந்தரின் இளைய சகோதரர் பிரேந்திர தத்தா ஆகியோருக்கும் பாரிஸ் குழுவிற்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார். தல்வார் பத்திரிகையை இந்தியாவில் விநியோகிக்க துருக்கியத் தேசியவாதிகளின் உதவி வேண்டி இஸ்தான்புல் நகருக்கும் சென்றார்.

பின் முதலாம் உலகப்போர் வெடித்தபோது ஆச்சாரியா பெர்லினில் தங்கி ஜெர்மன் அரசு உதவியோடு பிரிட்டிஷ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்த உதவினார். ஆனால் ஜெர்மன், துருக்கி அரசாங்கங்களுக்கு இந்தியாவின் சுதந்திரம்குறித்து எந்த அக்கறையும் இல்லை என்பதை உணர்ந்தார். இந்திய விடுதலைக்கான உதவி என்பது சோசலிஸ்டுகளிடமிருந்துதான் வர இயலும் என்ற புரிதலுக்கு வந்து சேர்ந்தார். எனவே அப்போது சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸ் நடைபெற்றபோது அவர்களின் உதவி வேண்டி சட்டோபாத்யாயாவும் ஆச்சாரியாவும் ஸ்டாக்ஹோம் சென்றனர்.  அங்கிருந்து அவர்கள் பீட்டர்ஸ்பர்க் சோவியத்திற்கும் போல்ஷ்விக்குகளுக்கும் கடிதம் எழுதினர். எனவே போல்ஷ்விக்குகள் ஆட்சிக்கு வருவதற்குமுன்பே அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திய முதல் இந்தியப் புரட்சியாளர்கள் என சட்டோபாத்யாயாவையும் ஆச்சாரியாவையும் சொல்லலாம். ஸ்டாக்ஹோமிலும் இருவரும் போல்ஷ்விக்கான டிரோயோவ்ஸ்கியை சந்தித்தனர். முடிந்த உதவிகள் அனைத்தும் செய்வதாக அவர் உறுதி கூறியுள்ளார்.

பின்னர் உலகப் போரின் முடிவில் ஆச்சாரியா காபூலில் இருந்து இந்தியப் புரட்சிக்குப் பணியாற்ற காபூல் வந்து சேர்ந்தார். அங்கு ஏற்கனவே ராஜா மகேந்திர பிரதாப், பரக்கத்துல்லா ஆகியோர் தற்காலைக இந்திய அரசை நிறுவியிருந்தனர். அவர்களோடு இணைந்து சிலகாலம் பணியாற்றினார். ஆனால் அப்போது சோசலிஸ்டாக ஆகியிருந்த அவரால் அவர்களோடு தொடர்ந்து பணியாற்ற இயலவில்லை. மற்றுமொரு புரட்சியாளரான அப்துல் ராப் அவர்களோடு இணைந்து இந்தியப் புரட்சிக் கழகம் (Indian Revolutionary Association–IRA- Inquilabi–in–Hind) இது பெரும்பாலும் கிலாபத் கிளர்ச்சியின்போது ஆப்கானிஸ்தான் வந்த பரந்த இஸ்லாமிய (PanIslamist)போராட்டக்காரர்களையேக் கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானின் அமீர் அஹமதுல்லா பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டபோது இவர்களை வரவேற்றார். பின்னர் பிரிட்டிஷாரோடு சமாதானம் ஆனவுடன் நாடைவிட்டு வெளியேறச் சொன்னார். சுமார் 150 உறுப்பினர்களோடு தாஷ்கண்ட் வந்து சேர்ந்தனர். அங்கு தற்காலிக இந்திய அரசைச் சார்ந்தவர்களூம் வந்து சேர்ந்திருந்தனர்.1920 ஆம் ஆண்டில் கொமின்டார்னின் 2 ஆவது காங்கிரசிற்கு எம்.என்.ராய் மெக்‌ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரதிநிதியாய் அைழக்கப்பட்டு மாஸ்கோ வந்தபோது, தற்காலிக இந்திய அரசு சார்பாகவும், இந்திய புரட்சியாளர் சார்பாகவும்கூட பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்தான் எம்.பி.டி ஆச்சார்யா அவரது அமைப்பு சார்பாகவும் முகம்மது ஷாஃபிக் தற்காலிக அரசு சார்பாகவும் மாஸ்கோ வந்தனர். காங்கிரஸில் எம்.என்.ராய் தவிர அபனி முகர்ஜியோ, எம்.பி.டி.ஆச்சாரியாவோ, முகம்மது ஷாஃபிக்கோ பேசவில்லை.

ஆச்சாரியா மாஸ்கோவில் இருந்த 1919-1921 காலகட்டத்தில் மக்தா நாச்மென் எனும் ரஷியப் பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்துள்ளார். அவர் ஒரு ஓவியர். இது ஆச்சாரியாவிற்கு இரண்டாவது திருமணம்.  இந்தியாவைவிட்டுச் செல்லும்போதே அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. ஆனால் பத்தாண்டு காலம் தொடர்பேதும் இல்லை. காங்கிரஸ் முடிந்து ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு ஆயுதங்களும் புரட்சியாளர்களையும் அனுப்பும் திட்டத்தோடும் எல்லோரும் தாஷ்கண்ட் திரும்பியுள்ளனர். அங்கு 1920 அக்டோபர் 17 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ஆரம்பிக்கப்பட்டபோது அதில் எம்.என்.ராய், அபனி முகர்ஜி, எவ்லின் டிரென்ட்(ராய்), ரோஷா ஃபிட்டிங்கோஃப், முகம்மது அலி, முகம்மது ஷாஃபிக் ஆகியோரோடு எம்.பி.டி.ஆச்சாரியாவும் உறுப்பினராக இருந்ததோடு கட்சிக் கூட்டத்திற்கும் அவரே தலைமை வகித்துள்ளார். கட்சிக்கான விரிவான திட்டம் தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டபோது அதன் தலைவரகாவும் இருந்துள்ளார்.

அவரது முந்தைய அமைப்பான இந்தியப் புரட்சிக் கழகத்தின் சக தலைவரான அப்துர் ராப் பார்ஃக் அடுத்த மாதம் உறுப்பினரானார் என்றும் ஆகவில்லை என்றும் இரண்டுவிதமான பதிவுகள் உள்ளன. ஆனால் டிசம்பர் மாதத்திற்கு மேல் அவர்கள் எம்.என்.ராயோடும் அபனி முகர்ஜியோடும் ஒத்துப் பணியாற்ற இயலவில்லை. தனித்து இயங்க ஆரம்பித்தனர். அவர்கள் இவர்களை பிரிட்டிஷ் உள்வாளிகள் என்பதும் இவர்கள் அவர்களை பணத்தாசை பிடித்த ஊழல் பேர்வழிகள் என்பதுமாய் பரஸ்பரம் சகதி எறியும் பொது உைடமை இயக்கத்தின் மரபணு நோயை இந்தியப் பொது உடமை இயக்கத்திலும் அறிமுகம் செய்தனர்.

பின் 1922 ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் பெர்லின் வந்தார் ஆச்சாரியா. அங்கு ஆற்றிய பணிகள், அவர் மீண்டும் அங்கு அராஜகவாதத்திற்கு சென்றது. பின் இந்தியாவந்து அராஜக வாதம் பேசும் சிறு சோசலிசக் குழுக்களில் பணியாற்றியது, பின் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தது. மிகவும் வறுமையான நிலையில் 1954 ஆம் ஆண்டு மரணமடைந்தது எல்லாம் வேறு ஒரு சமயத்தில் பேச வேண்டிய சோகக் கதை. ஆனால் கடைசி வரையில் சொந்த நலனை முன்னிறுத்தாமல் சோசலிசத்திற்கான பாதை தேடிய ஒரு புரட்சியாளராகத்தான் இருந்துள்ளார்.

Image

ரோசா ஃபிட்டிங்காஃப் 

அவர் 1918 ஆம் ஆண்டில் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த ரஷிய யூதப் பெண்மணி. அவர் லெனினது தனிச் செயலாளரான லிடியா ஃபோடியேவாவின் உதவியாளர். அவர் கோமிண்டார்னின் இரண்டாவது காங்கிரஸிற்கு மாஸ்கோ  செயிண்ட்.பீட்டர்ஸ்பர்க்/மாஸ்கோ வந்த அபனி முகர்ஜியிடம் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர். 1920 ஆம் ஆண்டு கொமிண்டார்ன் காங்கிரஸ் முடிந்து எம்.என்.ராய், அபனி முகர்ஜி மற்றும் இந்தியப் புரட்சியாளர்கள் தாஸ்கண்ட் வந்தபோது ரோசாவும் தாஸ்கண்ட் வந்தார். அபனி முகர்ஜியும் ரோசாவும் இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்தனர். 1920 அக்டோபர் 17 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவானபோது அதில் ரோசாவும் உறுப்பினர். சொல்லப் போனால் அந்த ஏழுபேரில் அவர்தான் நீண்டகாலம் கம்யூனிஸ்டாக இருந்தவர். 1921 ஆம் ஆண்டு எல்லோரும் தாஸ்கண்டைவிட்டு மாஸ்கோ திரும்பியபோது அவர்களுடன் மாஸ்கோ திரும்பியுள்ளார். வெகுவிரைவில் அபனி முகர்ஜிக்கும் எம்.என்.ராய்க்கும் இடையில் முரண்பாடு முற்றிப் பிரிந்துவிட்டனர். ராய், எவ்லின், எம்.பி.டி.ஆச்சாரியாஆகியோர் ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்து விட்டனர். முகம்மது அலி சிப்பாஸி காபூலுக்கு இடம் பெயர்ந்தார். முகம்மது ஷாஃபிக் இந்தியா வந்தார். அபனி மகர்ஜியும் ரோசா ஃபிட்டிங்காஃப்வும் மட்டுமே மாஸ்கோவில் இருந்தனர். 1924 இல் பிரிட்டனில் முதன் முதலாக தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தது. சோசலிஸ்டான ராம்ஸே மெக்டொனால்ட் பிரதமர் ஆனார். அபனி முகர்ஜி, மனைவி ரோசாவுடன் இந்தியா வர அனுமதி கேட்டார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.ரோசா சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார். அபனி முகர்ஜி மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் வரலாறும் பொருளாதாரமும் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சோவியத் அறிவியல் கல்விக் கழகத்தில் (Soviet Accaemy of Sciences) இந்தியவியல் நிபுணராகப் பணியாற்றியுள்ளார். 1930-32 ஆண்டுகளில் அபனி முகர்ஜி இந்திய வரலாறு, இந்தியப் பொருளாதாரம் குறிப்பாக வேளாண்மைப் பொருளாதாரம் குறித்த நிபுணராக அன்றைய லெனின்கிராடாகிய இன்றைய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கிழக்கத்திய கல்விக் கழகத்தில் (LeninGrad Oriental Institute) பணியாற்றியுள்ளார். 1932 டிசம்பரில் அந்தக் கல்விக் கழகம் வெளியிட்ட அறிக்கை, அபனி முகர்ஜி, இந்தியப் பொருளாதாரம் மற்றும் மக்கள் இயக்கங்களின் வரலாறு ஆகியவற்றில் நிபுணர் எனவும் பல இந்திய மொழிகளில் வல்லுனர் என்றும் குறிப்பிடுகின்றது. இந்திய வரலாறு, வேளாண்மைப் பொருளாதாரம் குறித்த பல நூல்களும் எழுதியுள்ளார்.  ஆனால் 1933 நவம்பர் அறிக்கை, அபனி முகர்ஜி நீண்ட பயணம் சென்றிருப்பதாகவும் அதனால் கல்விக் கழகத்தில் பணி புரியவில்லை என்றும் ஓர் அறிக்கை குறிப்பிடுகின்றது. இந்தக் காலகட்டம் முழுவதும் ரோசா அபணி முகர்ஜியோடு லெனின் கிராடு நகரில்தான் வாழ்ந்துள்ளார். 1937 ஆம் ஆண்டு அபனி முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். பிறகு அவர் குறித்த செய்தி ஏதுமில்லை. ரோசாவிற்கும் ஏதும் தெரியவில்லை. எதிரிகளின் அநீதி, ஓடுகாலிகளின் துரோகம் மட்டுமல்ல; நண்பர்கள், தோழர்களின் அநீதி, துரோகம் எல்லாம் தாண்டித்தான் பொது உைடமைக்கான போராட்டம்.1927 ஆம் ஆண்டு சவும்யேந்திரநாத் தாகூரும், 1928 ஆம் ஆண்டு சவுகத் உஸ்மானியும் மாஸ்கோவில் அபனி முகர்ஜி, ரோசா குடுமபத்தினரைச் சந்தித்துள்ளனர். அது மகிழ்ச்சியான குடும்பமாக தங்களால் ஆன அளவில் ஏதோ ஒரு முனையில் தொடர்ந்து மார்க்சியப் பணியாற்றுபவர்களாக இருந்துள்ளனர். அபனி முகர்ஜிக்கும் அவருக்கும், ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தன. ஒரு பெண் குழந்தை குழந்தை உண்டு. மகனுக்கு தாகூரில் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரமான கோரா என்று பெயர். ரோசா லெனின்கிராடு நகரில்தான்
தொடர்ந்து வாழ்ந்துள்ளார்.

1969 டிசம்பரில் சின்மோஹன் ஷெனாவிஸ், ரோசா ஃபிட்டிங்காஃப் அவர்களை அவரது லெனின்கிராட் இல்லத்தில் சந்தித்து ஒரு நேர்காணல் செய்துள்ளார். 1933 ஆம் ஆண்டு அபனி முகர்ஜி கஜக்கிஸ்தானுக்கு நீண்ட பயணம் மேற்கொண்டார். ஆனால் அது அவரது ஆய்வுப் பணி தொடர்பானதுதான் என ரோசா கூறியுள்ளார். அபனி-ரோசா தம்பதியினரின் மகள் மருத்துவராகப் பணிபுரிந்துள்ளார். அபனி, தனது கடைசி நூலின் ஒரு பிரதியைக் கையெழுத்திட்டு ரோசாவுக்கு அளித்துள்ளார். அதை அவர் சின்மோஹனிடம் காட்டியுள்ளார். முதல் பக்கத்தில் அபனி முகர்ஜியின் கையெழுத்தில் அர்ப்பணிப்பு எழுதப்பட்டிருந்தது.

To Rosi,

My dear wife

With all love

In remembrance

Of the hard fight we

Fought together in

Pushing on our fight against the

Opportunist ‘Decolonisationists’

 Abani

25.11.28.

* ரோஷா ஃபிட்டிங்காஃப் 1970 ஆண்டு மறைந்ததாக சில குறிப்புகள் உள்ளன.

* அவரது புகைப்படம் ஏதும் கிடைக்கவில்லை.முகம்மது அலி சிப்பாஸி (1939-1890)

குஷி முகம்மது என இயற்பெயற்கொண்ட ஆனால் பெரும்பாலும் முகம்மது அலி சிப்பாஸி என்ற பெயரில் அறியப்படும் அவருக்கு இப்ராஹிம், அஹ்மது ஹுசேன் இன்னும் பல பெயர்கள். லாகூரில் 1890 வாக்கில் ஒரு சாதாரண கீழ் மத்தியதரக் குடும்பத்தில்  பிறந்தவர். பாட்டனாரும் தந்தையாரும் பஞ்சாபிக் கிராமம் ஒன்றில் எண்ணெய்ச் செக்கு வைத்து ஆட்டி வந்தவர்கள். தனது அறிவுக் கூர்மையாலும் உழைப்பாலும் லாகூர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று பின் லாகூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் அவர்களது நிறவெறியையும் எதிர்த்து லாகூர் மாணவர்களின் எழுச்சி 1913-14 ஆண்டுகளிலிருந்தே நடந்துகொண்டிருந்தது. இந்த எழுச்சிக்குக் காரணாமானவர்களில் ஒருவரான முகம்மது அலி 1915 ஆம் ஆண்டு ‘இனியும் பொறுப்பதில்லை’ எனும் நிலைக்கு வந்தார். சிரமப்பட்ட குடும்பம் அவர் மருத்துவராக ஆகியிருந்தால் கொஞ்சம் வசதியாக வாழ்ந்திருக்கும். அவரும் சிரமமில்லாத வாழ்க்கை வாழ்ந்திருப்பார். ஆனால் பரந்துபட்ட இஸ்லாமிய சித்தாந்தத்தின் செல்வாக்கில் இந்தியாவிற்கு வெளியே சென்று படை திரட்டி இந்தியாவின் சுதந்திரப் போரை நடத்துவது என்ற முடிவுக்கு அவரும் அவரது தோழர்களும் வந்தனர். அத்திட்டத்தின்படி பசி நோக்காது கண் துஞ்சாது மிகவும் கடினமான பயணத்தை மேற்கொண்டு காபூல் வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மகேந்திர பிரதாப் சிங்கின் தற்காலிக அரசில் ஒரு முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. அங்கிருந்த போது ஆப்கானிஸ்தான் அமீர் போன்றவர்கள் குறித்த மோசமான அனுபவமும், தற்காலிக இந்திய அரசில் இடம்பெற்றிருந்த சிலர் மூலமும் அந்த அரசின் சார்பாக ரஷியாவிற்கு தூது அனுப்பப்பட்ட போது ஏற்பட்ட நல் அனுபவங்கள் காரணமாக இடதுசாரியாக மாறினார். 1920 ஆம் ஆண்டு ஆப்கன்  அமீர் இந்தியப் புரட்சியாளர்களை எல்லாம் வெளியில் அனுப்பியபோது மற்றவர்களோடு சேர்ந்து அன்றைய துருக்கிஸ்தான் தலைநகரான தாஷ்கண்ட் வந்து சேர்ந்தார். அங்கு எம்.என்.ராய் மிக எளிதாக அவரை தனது நெருங்கிய தோழராக வென்றெடுத்துவிட்டார்.

1920 அக்டோபர் 17 ஆம் நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவானபோது அதில் முகம்மது அலி சிப்பாஸியும் ஒரு உறுப்பினர். பின்னர் மற்றவர்கள் பிரிந்த பின்னும் எம்.என்.ராயோடு கடைசிவரை தோழமை உறவைத் தொடர்ந்த இருவரில் ஒருவர். (மற்றவர் முகம்மது ஷாஃபிக்). மீண்டும் வந்து காபூல் நகரில் இருந்து இந்தியாவிற்குள் பஞ்சாபிலும் ஏனைய வட மேற்கு பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் குழுக்களை உருவாக்கியதில் பெரும் பங்காற்றியுள்ளார். 1921 ஆம் ஆண்டு அஹ்மதாபாத் காங்கிரஸில் எம்.என்.ராய், அபனி முகர்ஜியின் கம்யூனிஸ்ட் அறிக்கை பரவலாக விநியோகம் ஆனது எல்லாம் அவரது அசாத்தியமானதும் சாகசம் நிறைந்ததுமான பணிகளில் ஒன்றுதான். பின்னர் பாண்டிச் சேரியிலிருந்து ஒருவர் பணியாற்ற வேண்டும் எனும் நிலை வந்தபோது பாண்டிச்சேரி வந்துள்ளார். ஆனால் பிரிட்டிஷ் அரசினர் கண்டுபிடித்து விட்டனர். அவர்கள் அளித்த அழுத்தம் காரணமாக ஃபிரெஞ்சு அரசாங்கம் ஜிபூட்டிக்கு நாடுகடத்தியது.

அங்கிருந்து ஃபிரான்ஸ் வந்த முகம்மது அலி சிப்பாஸி மார்செய்ல்ஸ் நகரில் அமைக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐரோப்பிய மையத்தில் எம்.என்.ராய், எவ்லின் டிரெண்ட் ராய், கிளெமெண்ட்ஸ் பாமிதத் (ரஜனி பாமிதத்தின் மூத்த சகோதரர் – அவர்கள் குறித்து வேறொரு சமயம் பார்ப்போம்) ஆகியோரோடு இணைந்து பணியாற்றியுள்ளார். பின் 1930 இல் எம்.என்.ராய் கொமிண்டார்னில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்தியா சென்ற பிறகும் கிளெமெண்ட்ஸ் பாமிதத்தோடு மையத்தை தொடர்ந்து நடத்தியுள்ளார்.

ஜெர்மனியில் ஹிட்லர் பதவிக்கு வந்தபின் ஃபிரான்ஸின் ரகசிய ஃபாசிச எதிர்ப்புப் படை (Resistance) வீரராகப் பணியாற்றியுள்ளார். 1939 ஆம் ஆண்டு ஸ்டாலின், ஹிட்லரோடு செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் ஃபிரான்ஸிலும் ஏனைய பல ஐரோப்பிய நாடுகளிலும் எதிர்ப்புப் படையில் பணியாற்றியவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. 1939 இறுதியிலோ 40 ஆம் ஆண்டிலோ நாஜிகளால் பிடிக்கப்பட்டு வீரமரணம்அடைந்துள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக சில குறிப்புகள் உள்ளன. தூக்கில் இடப்பட்டதாக சில குறிப்புகள் உள்ளன. எப்படியோ நாஜிகள் வெல்லப்பட்டு ரீச் ஸ்டாக்கில் ஏற்றப்பட்ட செங்கொடியில் அவரது ரத்தமும் ஒரு துளி உள்ளது.

* அவரது புகைப்படம் ஏதும் கிடைக்கவில்லை.

 

முகம்மது ஷாஃபிக் (1932-1895)

முகம்மது ஷாஃபிக் பேஷ்வாரி, அன்றைய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என அழைக்கப்பட்ட இன்றைய பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வாவின் தலைநகரான பெஷாவர் நகரின் அருகே ஒரு கிராமத்தில் 1895 வாக்கில் பிறந்தார். கல்லூரிப் படிப்பு முடித்தவர் எனத் தெரிகின்றது. அதன்பின் பெஷாவரில் நீர்ப்பாசனத் துறையில் எழுத்தராகப் பணி புரிந்துள்ளார். 1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்திற்கெதிராக தீவிரமாகப் போராடியுள்ளார். போலிசாரால் தேடப்பட்ட போது 1919 மே மாதம் அவர்களிடமிருந்து தப்பித்து காபூல் வந்தடைந்துள்ளார். அங்கு ராஜா மகேந்திரசிங் பிரதாப் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இந்திய அரசில் பணியாற்றினார். முகம்மது அலி சிப்பாஸி போலவே மவுலானா ஒபைதுல்லா சிந்தி அவர்களால் ஆகர்சிக்கப்பட்டு இடதுசாரியாக மாறியுள்ளார். ஒபைதுல்லா சிந்தி முகம்மதியராக மதம்மாறிய சீக்கியர். அவர் குறித்து அதிகம் விவரங்கள் இல்லை. அவர் காபூலில் இருந்தபோது இந்திய தேசியக் காங்கிரஸின் காபூல் கிளையை ஆரம்பித்து காங்கிரஸ் தலைமையிடம் அங்கீகாரமும் பெற்றுள்ளார். 1922 ஆம் ஆண்டு காபூலிலிருந்து வெளியேற்றப்பட்டு மாஸ்கோவில் 7 மாதங்கள் இருந்துள்ளார். பின் துருக்கியில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின் அங்கிருந்து மெக்கா சென்று அங்கு வாழ்ந்துள்ளார். அன்றைய சிந்து மாநில பிரதமர் முயற்சியால் 1937 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியுள்ளார். 1939 இல் கங்கா யமுனா சிந்து கட்சி எனும் கட்சியை ஆரம்பித்து நடத்தியுள்ளார். 1944 ஆம் ஆண்டு மரணமடைந்துள்ளார்.

தற்காலிக அரசும் எம்.பி.டி.ஆச்சாரியாவின் இந்தியப் புரட்சிக் கழகமும் காபூலை காலி செய்து தாஷ்கண்ட் வந்தபோது ஷாஃபிக்கும் தாஷ்கண்ட் வந்துள்ளார். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட
மண்மகன் (ஜமீந்தார்) என்ற உருது, பெர்ஷியன் இருமொழி இதழின் ஆசிரியராகப் பனியாற்றியுள்ளார். ஓரிரு இதழ்களே வந்ததாகத் தெரிகின்றது.

1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பரில்  கொமிண்டார்ன் 2 ஆவது காங்கிரஸில் ஒரு பார்வையாளராகப் பங்கெடுத்துள்ளார். அங்கு நடந்த விவாதங்களிலும், பின்னர் எம்.என்.ராயுடனும், எவ்லினுடனும் நடத்திய விவாதங்களில் அவர்களால் வென்றெடுக்கப்பட்டு அவர்களுக்கு உற்ற தோழராக ஆகியுள்ளார். காங்கிரஸ் முடிந்து தாஸ்கண்ட் திரும்பியபோது ைஅவர்களோடு பொக்ஹாரா இல்லத்தில் தங்கியுள்ளார். 1920 செப்டம்பரில் அஜர்பைஜானின் தலைநகரான பாகு நகரில் நடந்த கிழக்கத்திய மக்கள் காங்கிரஸில் அபனி முகர்ஜியோடு ஷாஃபிக்கும் பங்கு பெற்று திரும்பியுள்ளார். 1920 அக்டோபரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அலகு அமைக்கப்பட்டபோது அதன் உறுப்பினரானார். அந்த முதல் கிளையின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுள்ளார். பின் எம்.என்.ராய் கொமிண்டார்னிலிருந்து வெளியேற்றப்படும் வரை அவரது ஆதரவாளராக இருந்துள்ளார். 1921 ஆம் ஆண்டு இந்திய ராணுவப் பயிற்சிப்பள்ளி மூடப்பட்டு அவர்கள் அனைவரும் தாஷ்கண்டில் இருந்து மாஸ்கோ திரும்பினர். ஷாஃபிக்கும் மாஸ்கோ வந்தார். அங்கு ஆரம்பிக்கப்பட்ட கிழக்கத்திய பாட்டாளி மக்களுக்கான பல்கலைக் கழகத்தில் ஓராண்டு மார்க்சியம் கற்றார்.1922 ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். ஆனால் போலீசின் வலையிலிருந்து தப்பி நீண்டகாலம் இருக்கவியலவில்லை பம்பாயிலும் லாகூரிலும் சில மாதங்கள் இருந்துவிட்டு காபூல் வந்துள்ளார். அங்கு ஏற்கனவே இருந்த முகம்மது அலிக்கு உதவியுள்ளார். லாகூரிலும் ஜலந்தரிலும் கம்யூனிஸ்ட் குழுக்களை உருவாக்குவதில் ஷாஃபிக்கும் பங்கெடுத்துள்ளார். அங்கிருக்கும் போது பழைய குறுங்குழு வாதங்களிலிருந்து வெளிவந்துள்ளார். முகம்மது அலி, மற்றும் மாஸ்கோவிலிருந்து அங்கு வந்து சேர்ந்த மற்றொரு பயிற்சி பெற்ற இளைஞரான அப்துல் ஹஃக் ஆகியோரோடு சேர்ந்து காங்கிரஸில் இணைந்துள்ளார்.

1923 ஆம் ஆண்டு இந்தியா வந்து பெஷாவரில் இருந்து ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு பின் 2 ஆவது பெஷாவர் சதிவழக்கில் மூண்றாண்டுகாலம் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார்.

சிறையிலிருந்து வெளி வந்தவுடனேயே சவுகத் உஸ்மானியோடு சேர்ந்து கராச்சியில் இரானியக் குடிமகனாகப் பெறப்பட்ட போலி பாஸ்போர்ட்டோடு மாஸ்கோ பயணித்துள்ளார். அங்கு 1928 இல் நடைபெற்ற கொமிண்டார்னின் 6 ஆவது காங்கிரஸில் சவுகத் உஸ்மானியோடு பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ளார். பின் அங்கிருந்து 1932 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வந்து சில காலம் கழித்து வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைந்து போனார் என ஒரு ஒரு குறிப்பு உள்ளது. 6 ஆவது காங்கிரஸிற்குப் பிறகு ஐரோப்பாவின் பல நாடுகளில் அலைந்து திரிந்து பணியாற்றி 1932 வாக்கில் வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைந்து போனார் என ஒரு குறிப்பும் உள்ளது.

முகம்மது ஷாஃபிக் உள்ளிட்ட ஏழு பேருக்கும் அந்த குளிர்கால இரவில் ‘தாஸ்கண்டில்’ ‘இந்தியா குர்ஸ்க்’ (இந்தியா ஹவுஸ்) கட்டிடத்தில் கூடி முதல்கிளையை அமைத்தபோது இரு நோக்கங்கள் இருந்தன. ஒன்று இந்திய சுதந்திரத்திற்குப் போராடுவது. அது இன்னும் ஏராளமான கதாபாத்திரங்கள் கொண்ட பெருங்கதை. நாம் பார்க்க வேண்டியது அவர்களது இரண்டாவது நோக்கம். அது இந்திய மண்ணில் கால் புதைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவது. இது அவர்கள் மாத்திரம் செய்த பணியல்ல. முதன்மையாக இந்தியாவிற்குள்ளிருந்து பலரும் இந்தியாவிற்கு வெளியிலும் இருந்து சிலருமாய் செய்த பணி. அந்த வரலாற்றைப் பார்ப்பது நாம் வந்த வழியை அறிந்துகொள்ளும் முயற்சி. வந்த வழி தெரியாதவர்கள் செல்லும் வழியை தீர்மானிப்பது கடினம். பார்ப்போம்!

முதல் கிளையின் உறுப்பினர்கள் இந்த ஏழு பேர்தான் என்றாலும் இவர்களோடு இணைந்து இந்தியாவில் பொதுவுடமை இயக்கம் உருவாகி வளர்ந்து காலூன்ற உதவிய இரு இந்திய வம்சாவளியினர் குறித்தும் சேர்த்துப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

Shapurji Saklatvala: Britain's First Communist MP | Madras Courier

சபூர்ஜி சக்லத்வாலா (1936-1874)

ஆண்டு 1927, மாதம் ஜனவரி, நேரம் நள்ளிரவு 12:30. வட இங்கிலாந்தில் துர்ஹாம் நகரிலிருந்து அந்த கூட்டமான ரயில் லண்டன்நோக்கி வந்துகொண்டிருந்தது. இடையில் ஏறிய பயணச்சீட்டுப் பரிசோதகர், தன் பெட்டியில் உலா வந்தார். அப்போது ரயில் பெட்டியின் கழிப்பறை அருகே, நடையில் ஒரு உருவம் சுருண்டு படுத்திருந்ததைப் பார்த்தார். எலும்பைத் துளைக்கும் குளிர். அதனால் தனது ஓவர்கோட்டை இழுத்து முகம் உட்பட முழுக்க மூடியிருந்தார் பயணி. அந்த வித்தியாசமான இந்திய ஓவர்கோட் பரிசோதகருக்கு எதையோ நினைவூட்டியது. அருகே சென்று எழுப்பிப் பார்த்தார். ஓவர் கோட்டை விலக்கிய பயணியின் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்து போனார். அது அவரது தொகுதி எம்.பி, காம்ரேட். சாக்.

சாக் என அனைவராலும் அழைக்கப்பட்ட சபூர்ஜி சக்லத்வாலா, இந்தியாவின் டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார், டாடா குழும நிறுவனர் என அழைக்கப்படும் ஜே.என்.டாடாவின் தங்கை. சபூர்ஜி சக்லத்வாலாவின் தந்தையாரான டோரப் சக்லத்வாலா, ஜே.என்.டாடாவின் வணிகத்தில் கூட்டாளி.

1824 மார்ச் 28 அன்று பம்பாயில், டோரப் சக்லத்வாலா, ஜெர்பாய் (டாட்டா) மகனாகப் பிறந்தார் சபூர்ஜி. சக்லத்வாலாக்கள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து அன்றைய பம்பாய் நகரம் நன்கறிந்த பார்சிப் பெரு வணிகக் குடும்பம். மிக ஆச்சாரமான ஜோராஸ்ட்ரினிய நம்பிக்கைகளும் சடங்கு சம்பிரதாயங்களூம் கொண்ட குடும்பம். இளம் வயதிலிருந்தே சபூர்ஜி எளிதில் காணமுடியாத அறிவுக்கூர்மையோடு இருந்துள்ளார். பம்பாயின் புகழ்பெற்ற செயிண்ட்.சேவியர் பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் பயின்று நல்ல கல்வி பெற்றுள்ளார். கல்லூரிக் காலத்திலேயே கல்லூரியின் மிகச் சிறந்த பேச்சாளர் எனப் பெயர் பெற்றவர். இளம் வயதிலேயே அன்று தன் தந்தையாரும் பங்குதாரரான டாட்டா குழுமத்தின் நிறுவனங்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக நாட்டின், உலகின் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்தும் தொழிற்சாலை உற்பத்தி, வணிகம் ஆகியவை குறித்தும் ஆழமான ஞானம் பெற முடிந்தது.

சொந்த வாழ்க்கையில் எந்தச் சிரமமும் எதிர்கொள்ளாத மேட்டுக்குடி வாழ்க்கைதான். ஆனால் பகவான் புத்தர் போல சக மனிதர்களின் துயரங்களைத் தன்துயரங்களாகக் கொண்டு அதற்கு தீர்வுதேடி அலையும் உறங்காத உள்ளம் கொண்டவராக இருந்துள்ளார். 1896 ஆம் ஆண்டு கொடிய பூபானிக் பிளேக் கொள்ளை நோய் பரவியது. மக்கள் கொத்தாக மாண்டனர். அந்த ஆண்டு முழுவதும் வாரத்திற்கு சுமார் 1900 பேர் இறந்தனர் என இன்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில்பெரும்பாலோனோர், ஜோபர்பட்டி என பம்பாய்வாசிகளால் அழைக்கப்படும் சேரிப் பகுதிகளிலும், ஷாவ்ல்கள் என அழைக்கப்படும் நெருக்கமான ஒண்டுக் குடித்தனப் பகுதிகளிலும்தான். தொழிலாளர்களும் அத்துக் கூலி முறைசாரா உழைப்பாளிகளும்தான். அன்றைய பம்பாய்  கவர்னர் காலராவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த ரஷிய யூத மருத்துவரான ஹாஃப்கைன் (W.M.Haffkine) அவர்களை அழைத்து பிளேக் தடுப்பு மற்றும் மருத்துவப் பணிகளை முடுக்கிவிட்டார். மருத்துவ முகாம்கள் நிறுவுவதிலும் ஹாஃப்கைன் அவர்களின் பணிகளில் உதவுவதிலும் சபூர்ஜி சக்லத்வாலா முழு மூச்சாக ஈடுபட்டார். பணி மிகவும் கடுமையானது. இது போலீஸ் உதவியோடு ஜோபர்பட்டி ஜோபர்பட்டியாய் ஷாவ்ல் ஷாவ்லாக தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது; நோய் கண்டவர்களைக் கண்டறிந்து பிரித்தெடுத்து முகாம்களுக்கு கொண்டு செல்வது; மாநகருக்கு வெளியில் இருந்து வருபவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் மத்தியில் நோய் கண்டவர்களை பிரித்தெடுத்து தடுப்பது, பல பகுதிகளில் அங்கு வாழும் மக்கள் அனைவரையும் கட்டாயமாக அப்புறப்படுத்துவது; பல பெரும் பகுதிகளை தூய்மைப் படுத்துவது, நோய் பரப்பும் எலி-மூஞ்சூறு ஆகியவற்றைக் கொன்றழிப்பது என மிகுந்த எதிர்ப்புக்குள்ளாகும் பணிகளைக் கொண்டது. இவை அனைத்தையும் செய்யும்போது பிளேக் கொடிய தொற்று நோய் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்டுமுழுவதும் அவர் ஆற்றிய பணி அவரை உடல்ரீதியாகவும் உள்ளரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதித்துள்ளது எனத் தெரிகின்றது. அத்தோடு அவரது அரசியல் சமூக நோக்கையும் திருப்பியிருக்கும் எனத்தெரிகின்றது.

அதன்பின் தங்களது நிறுவனத்தின் பணிகளில் முழுமூச்சாய் ஈடுபட்டார். அவரது மாமாவும் நிறுவனத்தின் தலைவருமான ஜே.என்.டாட்டவின் கனவுகளில் ஒன்று ஒரு உலகத் தரத்திலான இரும்பு எஃகுத் தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவுவது. அதற்காக சபூர்ஜி சில தொழில்நுட்ப வல்லுநர்களோடு இரும்புத்தாது கிடைக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இன்றைய மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒரியா, பீஹார், ஜார்கண்ட் பகுதி முழுவதும் குதிரைகளிலும் ஜீப்புகளிலும் அலைந்தார். இறுதியில் இரும்புத்தாதும், நிலக்கரியும், சுண்ணாம்புக்கல்லும் அருகருகே கிடைக்கும் இடத்தைக் கண்டுபிடித்தார். அது இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் வடக்கே சுபர்ணரேகா நதியும் மேற்கே கார்கே நதியும் எல்லைகள் போலப் பாயும் பகுதியாகும். அன்றைக்கு அந்தப் பகுதியில் இருந்த ஒரே சிற்றூர் சாக்‌ஷி. அதுதான் இன்றைக்கு ஜார்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரும் நகரமாய் மாறியுள்ள ஜாம்ஷெட்பூர். இன்று அங்குதான் உலகின் 11 ஆவது பெரிய இரும்பு எஃகு உற்பத்தி நிறுவனமான டாட்டா ஸ்டீல் நிறுவனம் உள்ளது. (முதலிடத்தில் இருப்பது மித்தல் குடும்பத்தின் ஆர்சிலர் மித்தல்!! அது எப்படி 1990 ஆம் ஆண்டில்கூட ஒரு இரும்புத் தகடு உருட்டாலை மட்டுமே சொந்தமாய் கொண்டிருந்த அவர்கள் இப்போது உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராய் ஆனார்கள்? அது பெரிய கதை; முதல் பத்து நிறுவனங்களில் ஆறு சீன நிறுவனங்கள்; அது எப்படி 1912 இல் டாட்டா உற்பத்தியை ஆரம்பித்த போது இரும்பு எஃகு உற்பத்தி என்றால் என்னவென்று தெரியாது இருந்த சீன நிறுவனங்கள் இந்த நிலை அடைந்தன? அது இன்னும்  மிகப் பெரிய கதை). 1908 ஆம் ஆண்டு கட்டுமானம் ஆரம்பம் ஆனபோது அதைக் கனவாய்க் கொண்டிருந்த ஜே.என்.டாட்டா உயிருடன் இல்லை. அவர் 1904 ஆம் ஆண்டே இறந்துவிட்டார். அவரது மகனாகிய தோரப் டாட்டாவோடு இணைந்து இந்த இடத்தைக் கண்டறிந்தவரையில் சமமாய்ப் பங்களித்த சபூர்ஜி சக்லத்வாலா இந்தியாவில் இல்லை. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது நியாயமாக அவர் பங்குதாரர் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஆக்கப்படவில்லை. சபூர்ஜி மனமுடைந்தார். மும்பை அருகே உள்ள லோனாவாலாவில் உளவியல் சிகிச்சையும் ஓய்வும் பெற்றார். பின் டாட்டாவின் இங்கிலாந்து அலுவலகத்தின் பொறுப்பாளராக லண்டனுக்கு அனுப்பப்பட்டார். தோரப் நியாயமாக இருந்திருந்தால் இன்றைக்கு டாட்டா ஸ்டீல் என அறியப்படும் நிறுவனம் அல்லது டாட்டா குழுமமே ‘டாட்டா&சக்லத்வாலா’ குழுமம் என அறியப்பட்டிருக்கும். டாட்டா குழுமத்தினரின் இழப்பு, பொதுவுைடமை இயக்கத்திற்கான கொடையானது.1905 ஆம் ஆண்டு லண்டன் வந்த சபூர்ஜி சக்லத்வாலா, தனது பணிபோக லண்டன் தாராளர்கள் சங்கம் (London Liberal Club) என்பதிலும் உறுப்பினர் ஆனார். அதன் உறுப்பினர்களாக இருந்த அரசியல் பிரமுகர்களிடம் இந்திய மக்களின் பரிதாப நிலை குறித்துப் பேசிப்பார்த்தார். அவர்களது மேட்டிமைத்தன அணுகுமுறையில் வெறுப்பு கொண்டார். அன்றிருந்த சுதந்திர தொழிலாளர் கட்சி (ILP- Independent Labour Party) உறுப்பினர் சிலர் இந்தியா குறித்து அனுதாபத்துடன் பேசுபவர்களாக இருந்தனர். எனவே சக்லத்வாலா சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். ஆனால் விரைவில் அவர்களது பம்மாத்தான கருத்துகளாலும் நடவடிக்கைகளாலும் வெறுப்படைய ஆரம்பித்தார். கட்சி இன்றைக்கும் இருக்கும் தொழிலாளார் கட்சியாக உருவெடுத்தது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி எல்லோரையும் போல சக்லத்வாலாவையும் கவர்ந்து உத்வேகமூட்டியது. பிரிட்டன், சோவியத் அரசைச் சீர்குலைக்க அங்கு தலையிட்ட போது அதனை எதிர்த்து தொழிலாளர் கட்சியின் இடதுசாரிப் பகுதி இயக்கம் கண்டபோது அதில் சக்லத்வாலாவும் இருந்தார்.

ஒரு மார்க்சிய சோசலிசக் கட்சியாக ஆரம்பமான தொழிலாளர் கட்சி, சிறிது சிறிதாக மார்க்சிய எதிர்ப்புக் கட்சியாக மாறிவந்தது. 1919 இல் லெனினது தலைமையில் மூண்றாம் அகிலம் உருவானது. பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி மூண்றாம் அகிலத்தில் இணைய வேண்டும் என சக்லத்வாலாவும் வேறுசில இடதுசாரிகளும் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர். அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

சிபிஜிபி (CPGB) என அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டிருந்தது. ஆமாம்! தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. சக்லத்வாலாவும் சில தோழர்களும் 1921 ஆம் ஆண்டில் சிபிஜிபி (CPGB) என அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக ஆயினர்.  சக்லத்வாலா சாகும்வரை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக முரணற்ற, சமரசமற்ற, ஏகாதிபத்திய, காலானியாதிக்க எதிர்ப்பாளராக, தொழிலாளர் வர்க்கத் தலைவராக பணியாற்றினார்.

1922-23 காலகட்டத்திலும் பின் 1924-29 காலகட்டத்திலும் சபூர்ஜி சக்லத்வாலா பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு தொழிலாளர்கள் நிரம்பி வாழும் ஒரு லண்டன் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளார். 1922 ஆம் ஆண்டு அவர் தொழிலாளர் கட்சியின் ஆதரவு பெற்ற கம்யூனிஸ்டாக வென்றார். ஆனால் 1924 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆகிய இரண்டு பிரதானக் கட்சிகளும் இணைந்து தோற்கடிக்க எடுத்த முயற்சிகளையெல்லாம் மீறி சக்லத்வாலா வெற்றிபெற்றார். பாராளுமன்றத்தில் ஒரு கம்யூனிஸ்ட் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் எடுத்துக்காட்டாய்க் காட்டப்படும் வகையில் பணியாற்றியுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனி ஆதிக்க எதிர்ப்பு, இந்தியாவில் பிரிட்டிஷாரின் கொடுமைகளுக்கு எதிர்ப்பு, தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்கு ஆதரவு என அவரது குரல் பிசிறின்றி கனத்து ஒலித்துக்கொண்டே இருந்தது.பிரிட்டன் முழுவதும் சதா பயணித்து தொழிலாளர் வர்க்க ஒருங்கிணைப்பிற்காகவும், கம்யூனிசக் கொள்கைகளுக்காகவும் பாராளுமன்றத்தில்பேசியவற்றையும்அதற்குமேலாகவும் முடிவற்றுப் பிரச்சாரம் செய்பவராக இருந்தார். அனல் பறக்கும் பேச்சாளர். தொழிலாளர் மத்தியில் அவர் பேச்சைக் கேட்கக் கூடிய கூட்டம் வேறு யாருக்கும் வந்ததில்லை. 1925 ஆம் ஆண்டு நடந்த தொழிலாளர் காங்கிரஸில் அவர் இந்திய விடுதலைக்காக கொண்டுவந்த தீர்மானத்தை தொழிற்சங்கத் தலைமையில் இருந்த சிலரும் ஆதரிக்கத் தயாரில்லை. ஆனால் சொந்த நாட்டின் அரசை இந்தியாவின் சாமான்ய மக்களின் நலனுக்காக கண்டிக்கவும்  பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து முழுமையாகப் பிரிந்து போக இந்தியர்களுக்கு உரிமையுண்டு எனப் பிரகடனம் செய்யவும் ஆங்கிலத் தொழிலாள வர்க்கம் தயங்கவில்லை. இதற்காக சகலத்வாலா முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஆதரவாக சுமார் 31 லட்சம் வாக்குகளும் எதிராக சுமார் 0.8 லட்சம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. நினைவில் நிறுத்துங்கள்! இந்தியாவிலேயே இந்திய தேசியக் காங்கிரஸில் பூரண சுதந்திரத்திற்கான தீர்மானத்தை மகாத்மா காந்தியும் காங்கிரஸ் தலைமையில் இருந்த ஏனைய மேட்டுக்குடி கனவான்களும் நிறைவேற்ற அனுமதிக்காத காலம். முதன்முதலாக 1921 ஆம் ஆண்டு அஹமதாபாத் காங்கிரஸில் கம்யூனிஸ்டுகளான  ஹஸ்ரத் மொஹானியும் சுவாமி குமாராணந்தாவும் முன்மொழிந்த தீர்மானததை காந்தியே தலையிட்டுத் தோற்கடித்தார். பின் அடுத்தடுத்த காங்கிரஸில் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் மகாத்மாவாலும் ஏனைய கணவான்களாலும் தோற்கடிக்கப்பட்டன. பின் 1929 ஆம் ஆண்டில்தான் லாகூர் காங்கிரஸில் பூரண சுதந்திரம் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கம் சக்லத்வாலாவின் தலைமையில் இதனை 1925 லேயே ஆதரித்துள்ளது. ஆனால் நாம் இதனை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு எழுதப்பட்ட நூல்கள் எதிலும் படிப்பது இயலாது. அவர்கள் சொல்லவில்லை என்பதில் வியப்பில்லை. ஆனால் இந்தியப் பொதுவுைடமை இயக்கமே இதனை அதிகம் பேசியதில்லை.

சக்லத்வாலா, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுக்கள் உருவாகவும் அவர்கள் ஒருங்கிணைந்து ஒரு கட்சியாகவும் செயல்பட ஆற்றிய பணிகள் ஏராளம். சகலத்வாலாவின் பெயரே அன்றைக்கு இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளாக மாறத் தொடங்கியிருந்த டாங்கே, சிங்காரவேலர் உள்ளிட்ட அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருந்தது. எளிதில் யாரும் இணைந்து பணியாற்ற முடியாத குணநலன் நிரம்பிய எம்.என்.ராய், ரஜினி பாமி தத் ஆகியோரோடும் இணைந்து பணியாற்றினார். இங்கிலாந்தின் துறைமுகங்களூக்கு வந்து செல்லும் இந்தியக் கப்பல் பணியாளர்களின் சங்கத்தைக் கட்டியமைத்தார். அத்தோடு இந்தியத் தொழிலாளர் நலன்களுக்குப் பணியாற்ற இந்தியத் தொழிலாளர் நலச் சங்கம் (Workers Welfare League of India) ஒன்றையும் அமைத்தார். இந்த இரண்டு அமைப்புகளையும் செல்வாக்கு மிக்கதாக வளர்த்தெடுத்தார். அவர்கள் மூலம் எம்.என்.ராய் நடத்திய வான்கார்டு (Vanguard), அட்வாஸ்டு கார்டு (Advanced Guard), மக்கள் திரள் (Masses) ஆகிய பத்திரிகைகளும் ஏனைய மார்க்சிய கம்யூனிச இலக்கியங்களும் பிரசுரங்களும் பம்பாய், சென்னை, கல்கத்தா துறைமுகங்களை அடைய உதவினார். பின்னர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவ பயிற்சி பெற்ற சிலரை அனுப்ப வேண்டும் என முடிவெடுக்கப்ப்ட்ட போது, அலெக்ஸ் கேம்பல், பிலிப் ஸ்ப்ராட்,ஹட்சின்சன், பென் ப்ராட்லி போன்றோர் இந்தியா வர உதவினார். கான்பூர், மீரட் சதிவழக்குகள் புனையப்பட்ட போது பிரிட்டிஷ் இந்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் முன்னரும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலுமே அம்பலப்படுத்தினார். பம்பாய் ஜவுளித் தொழிலாளர்களின் வரலாற்றுப் புகழ் பெற்ற வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர் குடும்பங்களுக்காக நிதி திரட்டி அனுப்பினார். அவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவரைத்தான் 1925 ஆம் ஆண்டின் கான்பூர் முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். அவர் வர இயலாத காரணத்தால்தான் சிங்காரவேலர் அதற்குத் தலைமை வகித்தார்.

1926 இல் பிரிட்டனில் வரலாறு காணாத முழு வேலை நிறுத்தம் நடந்தது. பிரிட்டனின் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கிய டிரேட் யூனியன் காங்கிரஸ் அதனை நடத்தியது. தொழிலாளர் கட்சியின் சகல கருங்காலி வேலைகளையும் மீறி 9 நாட்கள் நடந்த வேலை நிறுத்தம் நாட்டை நிலைகுலையச் செய்தது. அந்த வேலை நிறுத்தத்தில் சக்லத்வாலாதான் முதன்மையான தலைவர் எனலாம். வேலை நிறுத்தத்திற்கு தொழிலாள வர்க்கத்தைத் தயார் செய்வதற்கான ஹைட் பார்க் கூட்டம் ஒன்றின் அவரது பேச்சிற்காக தேசத்துரோகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுபோன்ற ஒரு வேலை நிறுத்தம் பிரிட்டனுக்கு அதுதான் முதல்; அதுதான் கடைசி. பிரிட்டீஷ் தொழிலாளர் வர்க்கம் இன்றுவரை அது போன்ற பொது வேலை நிறுத்தம் ஒன்றை ஒன்பது நாட்களுக்கு அல்ல; ஒரு நாளுக்குக் கூட நடத்த இயலவில்லை.

லண்டன், நம்பர் 10, டவுனிங் தெரு. -1926 பொது வேலை நிறுத்தம் குறித்து அன்றைய பிரதமர் பால்ட்வின் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய பிரிட்டிஷ் டிரேடு யூனியன் காங்கிரஸ் தலைவர்கள். இடமிருந்து வலம் ஐந்தாவது- சக்லத்வாலா.

1927-ஆம் ஆண்டு சக்லத்வாலா இந்தியப் பயணம் மேற்கொண்டார். அவரைத் தடுத்து நிறுத்த பிரிட்டிஷ் அரசும் இந்திய அரசும் முடிந்த மட்டும் முயன்றன. இந்தியாவிற்குப் பயணிப்பதற்கான கடவுச்சீட்டையும் அனுமதியையும் போராடிப்பெற வேண்டியிருந்தது. இந்தியாவில் பம்பாய், அஹமதாபாத், டெல்லி, கல்கத்தா, சிங்காரவேலரின் அன்றைய மெட்ராஸ் என சென்ற இடங்களிலெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு காத்திருந்தது. எல்லா இடங்களிலும் அவர் தனது மின்சாரம் பாய்ச்சும் பேச்சால் பிரிட்டிஷ் எகாதிபத்திய எதிர்ப்பு தேசிய இயக்கத்திற்கும் தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பெரும் ஆதரவைத் திரட்டினார். அவர் மஹாத்மா காந்தியோடு நேரிலும் கடிதங்கள் மூலமாகவும் பத்திரிகைகள் மூலமும் நடத்திய விவாதங்கள் வியப்பூட்டுபவை. இந்திய உழைப்பாளி மக்களின் முழுமையான விடுதலையையும் அவர்களது நலன்களையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆளுமையும் இந்திய முதலாளிகள், நிலப்பிரபுக்கள் நலனுக்கு பாதகம் இல்லாதவகையில் மட்டும் சுதந்திரப் போராட்டத்தை ஒரு கட்டுக்குள் வைத்து நடத்த விரும்பிய ஆளுமையும் நடத்திய விவாதம் என்பது வாசிப்பவர் எவருக்கும் எளிதில் விளங்கும்.

1927 ஆம் ஆண்டு இந்தியாவில் அவர் உருவாக்கிய தாக்கம் அவர் இந்தியா வருவதை அதற்குப்பின் அனுமதிக்கவில்லை. அவர் சொந்த நாட்டில் காலெடுத்து வைப்பதைக் கண்டு பிரிட்டிஷ் அரசு அவ்வளவு அச்சம் கொண்டது. அமெரிக்காவின் தொழிலாளர் வர்க்கம் தம்மிடையே பேச அவரை அழைத்தபோது அமெரிக்க அரசும் பிரிட்டிஷ் அரசும் அஞ்சி நடுங்கி அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்தின.

சக்லத்வாலா லண்டன் டிரஃபால்கர் சதுக்கத்தில் உரையாற்றுகிறார்.

1929 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து அவரைத் தோற்கடித்தன. அவரது ரயில்  பயணங்களும் கூட்டங்களும் அதிகமாயின. அன்றைக்கு அவர் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தால் ஆக அதிகம் வெறுக்கப்பட்ட ஆளுமையாகவும் நிறம், இனம், மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சகல பகுதி உழைப்பாளி மக்களால் நேசிக்கப்பட்டவராகவும் திகழ்ந்தார்.

1934 ஆம் ஆண்டு அவர் சோவியத் யூனியனுக்குச் சென்றார். அங்கு நடந்திருந்த முன்னேற்றங்கள், கல்வி, மருத்துவ, வீட்டு வசதிகள் அவரை மிகவும் கவர்ந்தன. சோவியத் ஆட்சியில் தேசிய இனங்கள் அடைந்திருந்த முன்னேற்றங்கள் அவருக்கு முக்கியமானதாகத் தோன்றியதில் வியப்பேதுமில்லை. தனது நண்பரும் தோழரும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான, ஹாரி பாலிட்  அவர்களுக்கான கடிதத்தில்,  “ஓ ஹாரி, சோவியத் யூனியனின் சுயேட்சையான அதிகாரம் கொண்ட குடியரசுகள் சாதித்துள்ளதைப் பார்க்கும்போது இத்தகைய சூழல் நிலவினால் என் இந்திய மக்கள் என்னவெல்லாம் சாதிக்கவியலும்?” என்று எழுதியுள்ளார்.

சபூர்ஜி சக்லத்வாலா, 1907 ஆம் ஆண்டு சாரா எலிசபெத் மார்ஷ் எனும் ஆங்கில உழைக்கும் வர்க்கப் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். தசாரா கடைசிவரை கணவரது பணிகளுக்குத் துணையாக இருந்தார். அவர்களுக்கு மூன்று மகன்களும் இரு மகள்களும் பிறந்தனர். இளைய மகள் ஷெர்ரி தன் தந்தையார் குறித்து ஒரு நல்ல நினைவுக் குறிப்பு நூலை எழுதியுள்ளார் (நேஷனல் புக் ஏஜென்ஸி). அத்தோடு பஞ்சனன் சாஹா, ரஜனி பாமிதத்தின் முன்னுரையோடு ஒரு சிறு வாழ்க்கை வரலாறு (பியூப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்) எழுதியுள்ளார்.

1936, ஜனவரி 16 அன்று 61 வயதான சக்லத்வாலா, மாரடைப்பால் மரணம் தழுவினார். கடுங் குளிரில் மெல்லிய மழையோடு நடந்த அவரது இறுதி யாத்திரையில்  அவரது உடலுக்குப் பின்னே சென்ற அவரது மனைவி மகன்கள் மகள்களை ஆயிரக் கணக்கான பிரிட்டிஷ் தொழிலாளர்கள் நிறம், இனம், மதம், மொழி வேறுபாடின்றி தொடர்ந்தனர். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்திய கட்சியின் பொதுச் செயலாளர், ஹாரி பாலிட், ”தோழர்.சக்லத்வாலா அவர்களுக்கு ஈடாகப் பணியாற்றுவது எங்கள் யாருக்கும் இயலாத காரியம்; ஆனால் மாமனிதராய் அவர் உயர்த்திப் பிடித்த செங்கொடியை மரணம் அடையும் மட்டும் தாழவிடாது உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்பதுதான், நாங்கள் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி” என்றார்.

1936, ஜனவரி 20 அன்று பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘டெய்லி வொர்க்கர்’ இதழ் ஒரு தொழிலாளியின் அஞ்சலிக் கவிதையைப் பிரசுரித்திருந்தது.

“Saklatvala died, but his work remained to be finished.

He is gone from our midst

The stalwart and brave;

A foe to the tyrant, a friend to the slave.

We hearken in vain for the voice that is stilled.

In our hearts there’s a void that can never be filled

Keen, tireless and brave was life he led

We mourn over the loss of the comrade that’s dead

At the horns of the plough we may pause and look back

To scan o’er the furrow and follow our Sak”

சொந்த நாட்டில் கால் பதிக்கவிடாது ஏகாதிபத்தியத்தால் தடுக்கப்பட்டார். ‘…வேலிக்கு மேலே நீளும் என் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே,

வேலிக்குக் கீழே நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்…’

என இன்குலாபின் கவிதை ஒன்று  விரியும். அவர் வரவில்லை என்றாலும் அவரது பெயரும் பணியும் இந்தியாவில் ஒரு பொதுவுைடமை இயக்கம் உருவாகி வளர்ந்து காலூன்ற உதவிகரமாகவும் உத்வேகமாகவும் இருந்துள்ளன. இந்தியக் கம்யூனிஸ்டுகள் வீரவணக்கம் செலுத்த வேண்டியர்களில் டாட்டா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் முரண்தான். ஆனால் தாம் பிறந்த வர்க்கம், தேசம், மதம், இனம், மொழி, ஜாதி தாண்டிய மனிதர்களை தனது வரலாறு நெடுகக் கொண்டதுதானே பொதுவுைடமை இயக்கம்.

உங்களளவு சுயம்குறித்த சிந்தனையற்று இல்லை என்றாலும் உங்களளவு திறமையாக இல்லை என்றாலும் உங்கள் பணி தொடரப்படுகின்றது காம்ரேட்… சாக்.

NPG x11531; (Rajani) Palme Dutt - Portrait - National Portrait Gallery

ரஜனி பால்மெ தத் (1974-1896)

ரஜனி பால்மெ தத், கிளமன்ஸ் பால்மெ தத் – கம்யூனிஸ்ட் சகோதர்கள். கிளமன்ஸ், ரஜனி பால்மெ தத்திற்கு மூன்று வயது மூத்த சகோதரர். இருவருமே பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB- Communist Party of Great Britain) இல் தீவிரமாக செயல்பட்டவர்கள். தந்தையார் டாக்டர். உபேந்திர கிருஷ்ண தத், இந்தியர், வங்காளி. பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியில் தொழிலாளர் பகுதியில் அவர்களுக்கான மருத்துவராக காலம் முழுவதும் பணியாற்றியவர். தாயார் அன்னா பால்மெ, சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஒரு நீதிபதி. ஏனைய உறவினர்கள் எல்லோரும்கூட மேட்டுக்குடியினர். ஒரு சகோதரனின் பேரன்தான் பின்னாளில் ஸ்வீடனின் பிரதமராக இருந்து கொலையான உலஃப் பால்மே (Olaf Palme). குடும்பத்தினரின் நிறபேதம், வர்க்க பேதம், ஆகியவற்றுக்கு எதிராகத்தான் அன்னா திருமணம் செய்துகொண்டார்.

CP Great Britain: Writers Section

கிளெமென்ஸ் பால்மே தத்

பெற்றோரின் தாக்கத்தில்தான் சகோதரர்கள் இருவரும் (ஒரு சகோதரி எல்லியும்…) இடதுசாரிகளாக உருவாயினர். தந்தையாரைப் போலவே மூவரும் சிறந்த படிப்பாளிகள். கல்வி உதவித்தொகை பெற்று உயர் கல்வி கற்றனர். பலகலைக் கழகத்திற்குள் நுழையும்போதே மூவரும் ஆழமான சோசலிசக் கருத்துகள் கொண்டவர்களாக இருந்தனர். எல்லியும் கிளெமன்ஸும் கேம்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் பயின்றனர். ரஜனி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் பலியோல் கல்லூரியில் செவ்வியல் இலக்கியம் பயின்றார். போதாத கல்வி உதவித் தொகை. பெரும்பாலும் வரட்டு ரொட்டியில்தான் வாழ்க்கையே நடந்துள்ளது. ஆப்பிரிக்கா குறித்த கட்டுரைப் போட்டியில் 10 பவுண்டுகளை வென்றபோது அதனைக் கொண்டு ஒரு சூடான முழுச் சாப்பாட்டிற்குப் பதிலாக தொகையை ஆக்ஸ்ஃபோர்ட் யூனியனின் வாழ்நாள் சந்தா கட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டில் இருந்த இடதுசாரிக் குழுக்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஐ.எல்.பி எனப்படும் சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் (ILP – Independent Labour Party) இணைந்தார். அது பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியில் உள்ளே இருந்து பணியாற்றியது. 1914 ஆம் ஆண்டு உலகப் போர் வெடித்த போது, ஐ.எல்.பி போர் எதிர்ப்பு நிலைபாட்டை எடுத்தது. ஏனைய ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள், சோசலிசம் பேசிய குழுக்கள் எல்லாம் சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்பதைக் காற்றில் பறக்கவிட்டு தத்தம் நாட்டின் தீவிர தேசபக்தர்களாக மாறினர். பால்மெ தத் சகோதரர்களும் அவர்களது தோழர்களுமான சிறுபான்மைதான் போர் எதிர்ப்பாளர்களாக தொடர்ந்தனர். அன்றைக்கு போர் எதிர்ப்பில் உறுதியாக இருந்த லெனினது போல்ஷ்விக் கட்சியால் ஈர்க்கப்பட்டனர். மார்க்சியம் கற்றனர். அக்டோபர் புரட்சிக்கு முன்பே போல்ஷ்விக் ஆதரவாளர்களாக மாறினர்.

1916 ஆம் ஆண்டு அரசு அவரைக் கட்டாய ராணுவச் சேவைக்குப் பணித்தது. அதுவரை பேசிய போர் எதிர்ப்பை சற்றும் தயங்காது செயலில் காட்டினார். ஆக்ஸ்ஃபோர்ட்டில் இருந்து ஆல்டர்ஷாட் ராணுவச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கும் போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார். சிறை மற்றும் சிறை மருத்துவமனையின் மோசமான நிலைகுறித்து அவரது அறிக்கை சிறையிலிருந்து ரகசியமாக வெளியேறி பின்னர் பாராளுமன்றத்திலும் பேசுபொருள் ஆனது. ரஜனிக்கு அப்போதும் 20 வயதுதான். சிறையில் அவர் நடத்தப்பட்ட விதத்தால் உடல்நிலை மோசமானது. அரசு அவரை பால்வினை நோயாளிகள் நிரம்பிய ஒரு ராணுவ வார்டில் கொண்டுபோய் போட்டது. அவர் அப்போதும் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. அரசு அவரை வெவ்வேறு ராணுவச் சிறையிலும் மாறி மாறிப் பந்தாடியது. ஒவ்வொரு சிறை நிர்வாகமும் அவர் சிறைக்கு வருவதை நினைத்து அச்சம் கொண்டது. வேறு சிறைக்கு மாற்றப்பட்ட போது நிம்மதிப் பெருமூச்சு விட்டது. கடைசியில் அரசே இனி அவர் எந்தவொரு நாளும் ராணுவத்திற்குள்
நுழையத் தடை விதித்து விடுதலை செய்தது. அவர் ஆக்ஸ்ஃபோர்ட் மீண்டார்.

1917 ஃபிப்ரவரியில் நடந்த முதல் ரஷ்யப் புரட்சியும் ஜார் தூக்கி எறியப்பட்டதும் ரஜனியின் போர் எதிர்ப்பிற்கு ஒரு புதிய அர்த்தத்தை அளித்தன. 1917 மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் இரண்டாவது புரட்சிக்கும் போர் நிறுத்தத்திற்கும் ரஜனி அறைகூவல் விடுத்துள்ளார். ஆக்ஸ்ஃபோர்ட் மாணவர் சங்கத்தில் அவர் பேசியபோது போர் ஆதரவு தேச பக்த சிகாமணிகள் ரவுடித்தனம் செய்துள்ளனர். ஆனால் அதற்குத் தயாராக இருந்த ரஜனியின் தோழர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். கூட்டம் நடந்து முடிந்துள்ளது. வெளியேறியவர்கள் ஜன்னல் கதவுகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர்.

ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் அவரை பல்கலைக் கழகத்திலிருந்து தூக்கி எறிந்தது. அவர் தேர்வெழுத வேண்டியிருந்தபோது அவர் முதல் நாள் இரவுதான் ஆக்ஸ்ஃபோர்ட் நகரியம் வரவேண்டும்; தேர்வு முடிந்த இரவு வெளியேறிவிட வேண்டும்; தேர்வுக்காகத் தங்கியிருக்கும் நாட்களில் எந்தக் கூட்டத்திலும் பேசக் கூடாது எனும் நிபந்தனைகளின் பேரில்தான் அநுமதி வழங்கியது. இப்படி கட்டபொம்மனை ஜான்சன் துரை முன்னால் நிறுத்தியதுபோல தேர்வுமேஜைக்கு கொண்டுவந்து அமர வைத்தது.ஆனால் அவர் தேர்வெழுதி 14 பாடங்களில் ஆல்ஃபா (Alphas – தனிச் சிறப்பு; இந்தியப் பலகலைகழகங்கள் சில அளிக்கும் டிஸ்டிங்ஷன் போன்றது). அவருக்கு அளிக்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் அவரது கல்விப் புலமையை வானளவிற்குப் புகழ்ந்தே ஆகவேண்டியிருந்தது. ஆனால் அவரது அரசியல்சார்புகளை எடுத்துக்கூறி அவரை இந்தியாபோன்ற நாட்டில் இளம் மாணவர்களுக்கு கலவிகற்பிக்க நியமிக்க நினைப்பவர்கள் சற்று யோசிக்க வேண்டும் என்று நீட்டி முழக்கியது. பிரிட்டிஷ் அரசாங்கம் அதுபோன்ற சிரமங்களை இந்திய கல்வி நிலையங்களுக்கு அளிக்கவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட கடவுப் புத்தகத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எந்தவொரு நாட்டிற்கும் பயணிக்கச் செல்லாது என முத்திரை குத்தித்தான் தந்தது. அத்தோடு அவரது வேலை வாய்ப்பிற்கான அனைத்துப் பாதைகளையும் மூடியது.

ரஜனி பால்மே தத், 1919 இல் சர்வதேச  தோழிலாளர்  அமைப்பான, ஐ.எல்.ஓ வின் தேர்வில் வெற்றிபெற்று அதில் பணியேற்கத் தயாரானார். கட்சி அப்போது தொழிலாளர் ஆய்வுத் துறை (LRD – Labour Research Department) என்ற ஒன்றை ஆரம்பித்து அதில் பணியாற்ற அவரை வேண்டியது. சர்வதேச அமைப்பின் பணி ஆணையைப் பெற்றும் அதனைப் புறக்கணித்து சொற்ப ‘அலவன்ஸில்’ கட்சிப் பணியை ஏற்றார். 1920 இல் கட்சியை எந்த அகிலத்துடன் இணைப்பது என்ற பிரச்சினை முன்வந்தது. பெரும்பான்மை சமூக ஜனநாயகக் கட்சிகளால் தலைமைதாங்கி நடத்தப்பட்ட 2 ஆம் அகிலத்தில் இணைப்பது என முடிவெடுத்தனர். ரஜனி, கிளமென்ஸ் உள்ளிட்ட இடதுசாரிகள் லெனின் தலைமையிலான மூன்றாம் அகிலத்தில் இணைய விரும்பினர்.

இதற்கிடையில் 1920 ஆம் ஆண்டில் ஐ.எல்.பிக்கு வெளியிலிருந்த மார்க்சியக் குழுக்கள் ஒன்றிணைந்து கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியை (CPGB – Communist Party of Great Britain) தொடங்கினர். அவர்கள் மூன்றாம் அகிலத்தில் இணையவும் முடிவு செய்தனர். 1921 ஆம் ஆண்டு இடதுசாரி ஐ.எல்.பி கட்சியினர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். ரஜனி, கிளமென்ஸ் பால்மே தத், சபூர்ஜி சக்லத்வாலா, எமிலி பர்ண்ஸ், வால்டன் நியூபோல்ட் போன்றோர் இதில் அடங்குவர். 1920 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் கூட ஏகாதிபத்தியம் குறித்தோ காலனிய நாடுகள் குறித்தோ தெளிவான புரிதலில் இல்லை. ரஜனி பால்மே தத்தும், சக்லத்வாலாவும்தான் அதில் தெளிவோடு இருந்ததோடு தொழிலாளர் வர்க்கத்தினரிடம் அதுகுறித்து சோர்வுறாது பிரச்சாரம் செய்தனர். லெனினது புகழ்பெற்ற நூலாகிய, ‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்’ 1926 ஆம் ஆண்டில்தான் ஆங்கிலத்தில் வந்தது. ஆனால் ரஜனியும் சக்லத்வாலாவும் தங்களது சொந்த மார்க்சியப் புரிதலின் அடிப்படையிலும் அவர்களது இந்திய உணர்வாலும் லெனினது நிலைபாடுகளுக்குத் தாமே வந்திருந்தனர்.

ரஜனி இந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோது கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவுவதற்காக 1920 ஆம் ஆண்டு சல்மே முர்ரிக் லண்டன் வந்து சேர்ந்தார். எஸ்தோனியாவைச் சேர்ந்தவரான அவர் லெனினாலேயே தேர்வுசெய்யப்பட்டு நேரடியாக அவருக்குக் கீழ் இயங்குபவராக இருந்தார். 32 வயதான அவரும் 24 வயதே ஆன ரஜனியும் காதல் வயப்பட்டனர். பின்னர் திருமணமும் செய்துகொண்டனர். சல்மா 1905 ஆம் ஆண்டிலிருந்து போல்ஷ்விக். 1905 ஆம் ஆண்டு புரட்சியின் போதே ஜார் அரசால் சைபீரியாவிற்கு அனுப்பப்பட்டவர். பின் அக்டோபர் புரட்சிக்குப் பின் ஃபின்லாந்தில் இருந்து உள்நாட்டுப் போரில் ஃபின்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போரிட்டவர். பிரிட்டிஷ் கம்யூனிசத்திற்கு உதவ ஒரு வலுவான பிரதிநிதி தேவை என லெனின் நினைத்தபோது அவரது தேர்வு சல்மே முர்ரிக்.

1920 ஆம் ஆண்டிலிருந்து ரஜனியின் செயல்பாடுகளிலும் நிலைபாடுகளிலும் சல்மே செல்வாக்கு செலுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இன்றைக்குப் பார்க்கும்போது நமக்கு அதில் வியப்பேதுமில்லை. சல்மே ஒன்றும் அவரது அந்தப் புரத்து ராணியல்ல. ரஜனியைக் காட்டிலும் நீண்ட போராட்ட, புரட்சி அனுபவமும், மார்க்சியப் புரிதலும் கொண்டவர். ஆனாலும் அன்றைக்கு எம்.என்.ராய் போன்ற பெருந்தலைவர்களே சற்று எகத்தாளம்  தொனிக்கத்தான் எழுதியுள்ளனர். வரலாற்றைப் புரட்டும்போது பெண்ணியம், சூழல், சாதி, அறிவியல் போன்ற பரிமாணங்களில் சமூகத்தின் ஏனைய சில முற்போக்கு ஆற்றல்களோடு ஒப்பிட பொதுவுைடமை இயக்கம் பின்தங்கியே இருந்துள்ளது என்பது தெரிகின்றது. இந்தப் பரம்பரை வியாதி இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்பதுதான் நிலை.

1922 ஆம் ஆண்டு நடந்த கட்சிக் காங்கிரஸில் ஹாரி போலிட்டும், ரஜனியும் அதிக வாக்குகள் பெற்று கட்சியின் தேசியசெயற்குழுவிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1923 இல் ரஜனி முதன் முறையாக சோவியத் யூனியன் சென்றார். கொமிண்டார்னில் பிரிட்டனுக்கான துணைக்குழுவில் கார்ல் ராடேக், ஜினோவிவ், புகாரின், கூசினென் ஆகியோரோடு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார். 1923 இல் கட்சியின் வார இதழான ’கம்யூனிஸ்ட்’. ‘தொழிலாளர் வாராந்தரி’ (Workers Weekly) என்று பெயர் மாற்றப்பட்டு, ரஜனி அதன் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார். 8 வாரங்களில் அதன் சந்தா 19 ஆயிரத்தில் இருந்து 51 ஆயிரம் ஆக உயர வழிவகுத்தார்.

1924 ஆம் ஆண்டு அவரும் சல்மே முர்ரிக்கும் முதலில் ஸ்டாக்ஹோமுக்கும் அங்கு நடந்த திருமணத்திற்குப் பிறகு ப்ருஸெல்ஸ் நகருக்கும் வந்தனர். இருவரும் 1936 ஆம் ஆண்டுவரை அங்குதான் இருந்து பணியாற்றினர். பிரிட்டிஷ்  கட்சி தொடங்கப்பட்டு மூன்றே ஆண்டுகளின் கட்சியின் மின்னும் தாரகையான ரஜனி இப்படி குடிபெயர்ந்தது இயல்பாகக் கேள்விகளை தோற்றுவித்தது. உடல்நிலை காரணமாக அங்கு இருப்பதாக ரஜனி கூறினார். அது முழுக்கப் பொய் எனச் சொல்வதற்கில்லை. ஆனால் அடிப்படையில் கொமிண்டார்ன் பணியில்தான் இருவரும் அங்கு இருந்தனர் எனத் தெரிகின்றது.1924 இல் கொமிண்டார்னின் காலனிய நாடுகளுக்கான உபகுழு பாரிஸில் செயல்படத் தொடங்கியபோதிருந்து அதன் முக்கியமான உறுப்பினராக, எம்.என்.ராய் உடன் இணைந்து பணியாற்றினார். பாரிஸிற்கும் ப்ருஸெல்ஸுக்கும் பெர்லினுக்குமாய் அலைந்தார். அப்போதிருந்து இந்தியாவில் பொது உைடமை இயக்கத்தைக் கட்டுவதற்கான கடமை, இந்த உபகுழுவிற்கும் பிரிட்டிஷ் கட்சிக்குமான வேலையென ஆனது.எம்.என்.ராயின் இதழ்கள், பிரசுரங்கள் இந்தியாவில் விநியோகிக்கப்படவும், பிரிட்டீஷ் கம்யூனிஸ்டுகள் சிலர் இந்தியா வந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஒருங்கிணைக்கப் பணியாற்றியதில் சக்லத்வாலாவோடு ரஜனிக்கும் பெரும் பங்கு உள்ளது.

1924 ஆம் ஆண்டு லெனின் மறைந்தபின் சூழல் வெகு வேகமாக மாறிப்போனது. 1927 இல் எம்.என்.ராய் சீனாவிற்கு அனுப்பப்பட்டார். சீனாவில் கொமின்டார்னின் திட்டங்கள் தோல்வியுற்றன. எம்.என்.ராய் மீது பழிபோடப்பட்டது. எம்.என்.ராய் கொமிண்டார்னில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். பின் அவர் இந்தியா திரும்பியது. சிறை சென்றது , மீண்டது எல்லாம் வேறு கதை. ஆனால் எம்.என்.ராய் அகன்றது ரஜனி,கிளமன்ஸ், சக்லத்வாலா ஆகியோரின் இந்தியாவிற்கான பணியை அதிகரித்தது.

1936 ஆம் ஆண்டு ரஜனியும் சல்மெயும் பிரிட்டனுக்கு நிரந்தரமாகத் திரும்பினர். அங்கு ஆக்ஸ்ஃபோர்டிலும் கேம்பிரிட்ஜிலும் ஏனைய உயர் கல்வி நிலையங்களிலும் படித்த இந்திய மாணவர்கள் மத்தியில் ஆற்றிய பணி, இந்தியப் பொதுவுடமை இயக்கத்திற்கு எண்ணற்றத் தலைவர்களை உருவாக்கியது. ரஜனியின் ’இந்தியா இன்று’ (India Today) 1940 ஆம் ஆண்டு வெளியானது.இன்றைக்கும் காலனித்துவ கால இந்தியாவின் பொருளாதாரம் குறித்த நூல்களில் தலையாயது என்றே அது மதிக்கப்படுகின்றது.

இந்திய சுதந்திரம் நெருங்கிவந்த நாட்களில் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு முடிவெடுத்தபோது ரஜனி அதனைத் தவறெனக் கூறி மறுபரிசீலனை செய்யக் கோரினார். ஆனால் மத்தியக் குழு, ரஜனியின் பழைமைவாதம் காலாவதியாகிவிட்டது (‘Dutt Orthodoxy was Redundant’) என்று கூறிவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுகுறித்து எழுதிய கடிதத்தை அவர் ஆசிரியராக இருந்த லேபர் மந்திலியில் முழுமையாகப் பிரசுரித்தார்.

ரஜனி பால்மே தத் இந்தக் காலகட்டம் முழுவதும் சோவியத் ஆதரவாளராகத் தொடர்ந்தார். விசுவாசி என்றுதான் சொல்ல வேண்டும். உலகப் போர் காலத்தில் தீவிர ஃபாசிச எதிர்ப்பு பேசி எழுதி வந்தார். பின் ஸ்டாலினிற்கும் ஹிட்லருக்கும் உடன்படிக்கை ஏற்பட்டபோது திடீரென்று ஃபாசிச எதிர்ப்பைக் கைவிட்டு பிரிட்டனும் ஃபிரான்ஸும்தான் மனிதகுல எதிரிகள் என்றார். பிறகு ஜெர்மனி சோவியத்தின் மீது படையெடுத்ததும், மறுநாள் காலையிலிருந்து வேறு மாதிரி பேச ஆரம்பித்தார். இவை அவர் மீதிருந்த நம்பிக்கையைக் குலைத்தன. இதனையெல்லாம் மீறி 2 ஆம் உலகப் போரின் முடிவில் சோவியத் யூனியன் மீது பிரிட்டிஷ் தொழிலாளர் மத்தியில் அனுதாபமும் பாராட்டுகளும் இருந்தன. கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் முதன்முறையாக அதற்கு முந்தைய உச்சமான 18 ஆயிரம் என்பதைத் தாண்டி 50 ஆயிரத்தைத் தொட்டது. பல ஆண்டுகள் கழித்து 1945 இல் இரு கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1946 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சி அரசு, ரஜனி இந்தியா செல்வதற்கு 30 ஆண்டு காலமாக இருந்த தடையை நீக்கியது. 1946 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஜனி பால்மெ தத் முதன்முறையாக தன் தந்தையின் நாட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த நான்கு மாதங்களில் இந்தியாவில் சுமார் 45 கூட்டங்களில் உரையாற்றினார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் போக காந்தி, நேரு, ஜின்னா ஆகியோரோடும் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். பாகிஸ்தான் பிரிவினையைத் தடுக்க முயற்சித்தார். ஆனால் அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி அவரைத் தொல்லையாகக் கருதியது. அன்று காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரும் புதிருமாக நின்றன. அவர்களது ஒற்றுமைக்கு ரஜனி முயற்சித்தார். பின்னாளில் காங்கிரசோடு எல்லை மீறி உறவாடிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவரும், சாதாரணமாக எல்லோரையும் மிகவும் அரவணைத்துச் செல்லக் கூடியவருமான பி.சி.ஜோஷியே அவர் கூறியது எதனையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஆனாலும் சென்ற இடங்களிலெல்லாம் அவர் ஒரு மாபெரும் வீரனுக்கு, தலைவனுக்கு உறிய வரவேற்பைப் பெற்றார். ஜூலை மாதம் அவர் லண்டனுக்குத் திரும்பும் முன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிலும் உரையாற்றினார்.1956 இல் குருஷேவின் உரை மூலம் ஸ்டாலின் குறித்த செய்திகள் வெளிவந்தபோதும், ‘சூரியனில் சில கருப்புப் புள்ளிகள் உள்ளன’ என்று அதற்குச் சமாதானம் கூறினார். இதெல்லாம் கட்சியில் எடுபடவில்லை. கட்சி என்றைக்கும் ஒரு வெகு மக்கள் கட்சியாக இருந்ததில்லை. ஆனால் கட்சியின் தினசரியான டெய்லி வொர்க்கர் (Daily Worker) 2 லட்சம் பிரதிகள் விற்பனையாகியது. கட்சியின் பிரசுரங்கள் ஒரு ஆண்டில் 10 லட்சம் பிரதிகள் விற்றதும் உண்டு. கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை மீறிய அறிவுப்புல செல்வாக்கோடு இருந்தது. கட்சியில் இருந்த பலரும் பிரிந்து சென்றனர். கட்சியும் அதுவரை கொண்டிருந்த செல்வாக்கையும் இழந்தது. அது ஒரு பெரும் சோகக் கதை.

சல்மே முர்ரிக் 1964 ஆம் ஆண்டு மரணமடைந்தார். 1965 இல் ரஜனி பால்மெ தத் கட்சிப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 1975 ஆம் ஆண்டு ஜனவரி மாத லேபர் மந்திலி (Labour Monthly) இதழுக்கு, ஐரோப்பிய நாடுகள் பொதுச் சந்தையை ஏற்படுத்தப்போகிறோம், முந்தைய காலனி நாடுகளின் வளர்ச்சிக்கு உதவப் போகிறோம் என்று கதையளப்பதை விமர்சித்து கட்டுரை எழுதினார். அதை, “…கடைந்தெடுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களது ஞானத்தின் தொடக்கம் கம்யூனிசம் குறித்த அச்சத்தில்தான் பிறக்கிறது!’ என முடித்திருந்தார். ஆனால் அந்த இதழ் வருவதற்கு முன்பே, டிசம்பர் 20, 1974 இல் அவர் இயற்கையெய்தினார்.

**