செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரை நடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இந்நூல் அக்கால குடும்ப உறவுகளைப் பற்றி கூற வருகிறது.
கதையின் நாயகன் பிரதாப முதலி தன் கதையை சொல்வதாகக் கதை எழுதப்பட்டுள்ளது. பிரதாப முதலியின் தகப்பனார் கனகாசல முதலியார். இவர் தனது மகனின் இன்றைய சந்தோஷம் போதும் என்று கருதுபவர். பிரதாப முதலியின் தாயார் சுந்தரத் தண்ணி. இவர் தனது மகன் எப்போதும் ஷேமமாயிருக்க வேண்டும் என்று கருதுபவர்.
பிரதாப முதலியின் தாயுடன் பிறந்த அம்மான் சம்பந்தி முதலியார். இவரின் மகள் ஞானாம்பாள். உபாத்தியாயர் சாந்தலிங்கம் பிள்ளையின் வளர்ப்புப்பிள்ளை கனகசபை .
பிரதாப முதலிக்காக கனகசபை படித்துக் கொண்டும் அடி வாங்கிக்கொண்டும் இருப்பதை அறிந்த சுந்தரத் தண்ணி, பிரதாப முதலி மற்றும் கனக சபை இருவரையும் தன் அம்மான் வீட்டிற்கு அனுப்ப திட்டம் செய்தார்கள். அதன்படி ஞானாம்பாள், பிரதாப முதலி, கனகசபை மூவரும் உபாத்தியாயர் கருணானந்தம் பிள்ளையிடம் கல்வி பயின்றனர்.
“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது” என்பது போல் பள்ளிக்கூடத்தில் படிக்கிற படிப்பை அபிவிருத்தி செய்யாவிட்டால் அந்தப் படிப்பு ஒன்றுக்கும் உதவாது என்று கூறி ஆசான் கருணானந்தம் பிள்ளை அவரது போதகத்தை முடித்துக் கொண்டார்.
கனகசபையைப் பெற்ற தாய், தகப்பன் தேவராஜப்பிள்ளை, கனகசபையைத்தேடிக் கொண்டு சத்திய புரிக்கு வந்து சேர்ந்தார். கனகசபைத் தன்னை வளர்த்தவர்களுடன் தன்னைப் பெற்றவராகிய தேவராஜப் பிள்ளையுடன் ஆதியூருக்கு செல்கிறான். ஞானாம்பாளுக்கும் பிரதாப முதலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஞானாம்பாள் அதிகமாகப் படித்திருக்கிறோம் என்ற வித்யா கர்வமில்லாமல் சுத்த நிகர்வ சிரோமணியாயிருந்தாள். ஞானம்பாளும் பிரதாப முதலியும் பிரிவதும் பின்பு சேர்வதுமாக கதை புனையப்பட்டுள்ளது. கதைக்குள் கதைமாந்தர்களை அறிமுகப்படுத்தும் போது அவர்களின் சரித்திரம் கூறி அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
இப்புதினம் எண்ணற்ற கதைமாந்தர்களைக் கொண்டுள்ளது. கதையின் நகர்வுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு கதைமாந்தருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கதைக்குள் குறுங்கதைகள், சிறுகதைகள், குட்டிக் கதைகள் மூலம் நல் செயல்களும் துர் செயல்களும் விளக்கப்பட்டுள்ளன.
தத்தவஞானி சாக்ரடிஸ், மாவீரன் அலெக்ஸாண்டர், புருசியா தேசத்து அரசர் ப்ரடரிக், ஆஸ்தியாவின் ராஜஸ்தானியாகிய வியன்னாவின் அரசர் இரண்டாவது ஜோசப் ஆகியோரது வாழ்வில் நடந்த நிகழ்வுகள் மூலமும் நல்லொழுக்கப் பண்புகள், தீமை செய்பவரது வாழ்வில் ஏற்படும் குழப்பங்கள் விளக்கப்பட்டுள்ளன. நகைச்சுவை உணர்வுடன் கூடிய உரையாடல்கள், கதைகள் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன.
பல பழமொழிகளும் கையாளப்பட்டுள்ளன.
(எ.கா)
“ஆடவன் செத்த பிறகு அறுதலிக்குப் புத்தி வந்தது.”
“கடல் மீனுக்கு நுளையனிட்டதே சட்டம்.”
“அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்.”
நாயகன் பிரதாப முதலியின் அன்னை சுந்தரத் தண்ணி, மனைவி ஞானாம்பாள் என்ற இரு பெண் கதை மாந்தர்களும் இப்புதினத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பிரதாப முதலியும், ஞானம்பாளும் சில காலம் ஆதியூரில் தங்கியிருந்தனர்.
கனகசபை, தேவராஜப்பிள்ளை, பிரதாப முதலி மூவரும் வேட்டைக்கு செல்லும்போது பிரதாப முதலி விக்கிரமபுரியில் மாட்டிக் கொள்ள, அங்கு சிறை வைக்கப்பட்டான்.
பிரதாப முதலியை மீட்க சென்ற ஞானாம்பாள் ஆண் வேடந்தரித்து செல்கிறாள்.
ஆண் வேடமணிந்த ஞானம்பாள் சூழ்நிலையால் விக்கிரமப் புரியின் ராஜாவாகவும் பிரதாப முதலி உபராஜாவாகவும் இருந்து ராஜ்ஜிய பரிபாலனஞ் செய்தார்கள்.
கதையின் வாயிலாக ஆசிரியர் ராஜாக்கள் பிரஜைகளுக்கு செய்ய வேண்டிய அனுகூலங்களையெல்லாம் விவரிக்கிறார். மேலும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் வக்கீலின் கடமைகள் பற்றி விளக்கியுள்ளார். மனோ சாக்ஷிக்கு விரோதமாகக் கறுப்பை வெள்ளையென்றும் வெள்ளையைக் கறுப்பென்றும் வாதிப்பவர்கள் அநியாயவாதிகள் என்கிறார்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் ஆவணக்காப்பாளராக பணியைத்துவக்கியவர். கி.பி1805 முதல் கி.பி1861 வரை ஆங்கிலத்தில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து” சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக வெளியிட்டார்.
” நாளுக்கு நாள் சுதேஷ பாஷைகளுக்கு ஜீவ தாது குறைந்து வருகின்றது என்பதையும் தனது புதினத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.” அரைப் படிப்பைக் கொண்டு அம்பல மேறுவது போல”
“இங்கிலீஷ் அரசாட்சியில் வக்கீல்களைப் போலவே மற்ற உத்தியோகஸ்தர்களும், வித்தியார்த்திகளும் சுதேஷ பாஷைகளை நிகர்ஷ்டம் செய்கிறார்கள். ராஜ பாஷைகள் ஜீவனத்துக்கு மார்க்கமாயிருக்கிறபடியால் . வயிறே பெரிய தென் றெண்ணி அந்தப்பாஷைகளை மட்டும் அசிரத்தையாகப் படிக்கிறார்கள் என்பதையும் புதினத்தில் எழுதியுள்ளார்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களை வணங்குகிறேன் அவருடைய படைப்பான தமிழின் முதல் நாவலான” பிரதாப முதலியார் சரித்திரம்” ஆகச்சிறந்த முன்னு தரனமான படைப்பாக உள்ளது.
நூலின் தகவல்கள்
எழுதப்பட்ட ஆண்டு: 23/8/1879
திருச்சிராப்பள்ளி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.