நமிரா சலீம் (Namira Salim) என்பவர் தனது பெயருக்கு பல “முதல்” இடங்களைக் கொண்ட ஒரு முன்னோடி நபராக உள்ளார். இது அவரை உலக அளவில் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமையாக மாற்றியுள்ளது. இவர் ஒரு துருவ ஆய்வாளர் ஆவார். பாகிஸ்தானில் இருந்து முதல் நபராக வட மற்றும் தென் துருவங்களை அடைந்தவர். இவர் மொனாக்கோ மற்றும் துபாயில் வசிக்கும் ஒரு பாகிஸ்தானியர். இவர் துருவ சாகசக்காரர், விண்வெளி வீரர் மற்றும் கலைஞர் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதல் பாகிஸ்தானிய விண்வெளி வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.
துருவங்கள்

இவர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வட துருவத்தை ஆய்வு செய்வதற்காகச் சென்றார். அதன் பிறகு இவர் ஜனவரி 2008 ஆம் ஆண்டில் தென் துருவத்திற்கும் சென்றார். இதன் மூலம் வட துருவத்தையும், தென் துருவத்தையும் அடைந்த முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல் அவர் வாழ்ந்த மொனாக்கோ மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து இரு துருவங்களையும் அடைந்த முதல் பெண்மணியும் ஆவார். மேலும் வட மற்றும் தென் துருவங்களில் அவர் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொனாக்கோ மற்றும் அமைதிக் கொடிகளின் தேசிய கொடிகளை ஏற்றினார்.
எவரெஸ்ட்
இவர் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற “முதல் எவரெஸ்ட் ஸ்கைடைவ் 2008” என்ற போட்டியில் பங்கேற்றார். இவர் 29,500 அடி உயரத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு மேலே ஸ்கைடைவ் (Skydive) செய்தார். இது 29,480 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட அதிகமாகும். இதன் மூலம் ஸ்கைடைவ்வில் சாதனைப் படைத்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இவர் சியாங்போச்சே விமான நிலையத்தில் தரை இறங்கினார். இது உலகின் மிக உயரமான விமான நிலையம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 12,350 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது எவரெஸ்ட் சிகரத்திலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் உள்ளது. நமிதா சலீம் இதை “மூன்றாவது துருவம்” என்று குறிப்பிடுகிறார்.
ராஜதந்திரி
இவர் 1975 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் பிறந்தார். அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் மொனாக்கோவின் முதன்மைப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் பேரழிவு வெள்ளத்திற்கு நிதி திட்டினார். அவர் மொனாக்கோ அரசாங்கத்தின் மூலம் மறுகட்டமைப்பு பணிக்காக நிதி உதவியைப் பெற்றுத் தந்தார். ஆகவே இவர் 2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான சுற்றுலாவின் கௌரவ தூதராகவும் பணியாற்றினார்.
இவரது தனிப்பட்ட முயற்சியின் காரணமாக 2009 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கும், மொனாக்கோவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்பட்டது. இவர் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று, மொனாக்கோவிற்கு பாகிஸ்தானின் கௌரவ தூதராக நியமிக்கப்பட்டார்.
விண்வெளிப் பயணம்

இவர் 2006 ஆம் ஆண்டில் விர்ஜின் கேலக்டிக் விண்வெளி விமானத்தில் பயணம் செய்வதற்காக ஒரு பயணியாகச் சேர்ந்தார். இவர் அக்டோபர் 2007 ஆம் ஆண்டில், உலகின் மிக உயர் செயல்திறன் கொண்ட தேசிய விண்வெளிப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விண்வெளி விமானப் பயிற்சியை முடித்தார். அவர் தனது பயிற்சி சான்றிதழை பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாராப்பிடம் வழங்கி, வாழ்த்து பெற்றார்.
இவர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று விர்ஜின் கேலக்டிக் – 04 விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குச் சென்றார். இது ஒரு துணைச் சுற்றுப் பயணம் ஆகும். இவர் எடையற்ற நிலையில் சுமார் ஐந்து நிமிடங்கள் சவாரி செய்தார். விண்வெளியில் இருந்து பூமியைக் கண்டு மகிழ்ந்தார். இதன் மூலம் முதல் பாகிஸ்தானிய விண்வெளி வீரர், மொனாக்கோவைச் சேர்ந்த முதல் வீரர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இவர் “பெண்கள் சக்தி 100” என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
