மனித உறவுகளிலேயே உன்னதமான உறவு ஆசிரியர் – மாணவர் உறவு. இவ்வுறவின் அருமையை மெய்ப்பித்திட ஆசிரியர்கள் அசாதாரணமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்த வாசிப்பே அவர்களை நல்லாசிரியர்களாகப் பரிணமிக்கச் செய்யும். ஆசிரியர்கள் கட்டாயம் வாசித்திருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நீண்டது. அதில் முக்கியமானது சிங்கிஸ் ஐத்மாதவ் எழுதிய ‘முதல் ஆசிரியர்’ எனும் குறுநாவல்.
கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்து நிறைய புத்தகங்கள் படிக்கக் கிடைக்கின்றன. ஜான் ஹோல்ட் எழுதிய ’குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்?’, பாவ்லோ ஃப்ரெயரின் ’ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி’, ஜான் டூயி எழுதிய ‘கல்வியும், ஜனநாயகமும்’, ஆயிசா நடராஜன் எழுதிய ‘ஆயிசா’, மற்றும் ‘இது யாருக்கான வகுப்பறை’, ஜிஜுபாய் பதேக்கா எழுதிய ’பகல் கனவு’, ச.மாடசாமி எழுதிய ’என் சிகப்பு பால்பாய்ண்ட் பேனா’, மற்றும் ‘எனக்குரிய இடம் எங்கே?’, ச.சீஇராஜகோபாலன் எழுதிய ‘கல்வி: நேற்று, இன்று, நாளை’ போன்ற நூற்றுக்கணக்கான புத்தகங்கள் ஆசிரியர்கள் படித்து மகிழ்ந்திட காத்திருக்கின்றன. புத்தகங்களைப் படித்த அனுபவங்களுடன் தன் சொந்த அனுபவங்களும் சேர்ந்திட ஒருவர் சிறந்த ஆசிரியராகத் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.
முன்னாள் சோவியத் யூனியனின் அங்கமான கிர்கிஸ்தானைச் சேர்ந்த சிங்கிஸ் ஐத்மாதவ் (1928-2008) எழுதிய நாவல்கள் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ’ஜமீலா’ ’அன்னை வயல்’, ’முதல் ஆசிரியர்’. ’குல்சாரி’, ’ஒயிட் ஷிப்’ போன்ற நாவல்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. ’முதல் ஆசிரியர்’ புத்தகத்தை கனத்த மனதுடன்தான் படிக்க முடியும். முற்றிலும் கல்விக்கு எதிரான சூழலில் கல்விப் பணி செய்திடும் துய்சன் என்ற ஆசிரியரின் தன்னலமற்ற வாழ்வை சிங்கிஸ் ஐத்மாதவ் சொற் சித்திரமாகத் தீட்டியுள்ளார். துய்சன் தன் மாணவியின் துயர் துடைக்க தன் உயிரையும் கொடுக்கத் தயாராகிறார். அவளுக்குத் தாயுமாகித் தந்தையுமாகி நிற்கிறார்.
லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் வெற்றிக்குப் பின் சோவியத் போர் வீரர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். கிர்கிஸ்தானில் இருக்கும் குர்குரோ கிராமம் முற்றிலும் படிப்பறிவின்றி இருக்கிறது. கிராமத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி துய்சன் எனும் இளைஞன் எழுத்தறிவு கொடுக்கும் பணியைத் துவக்குகிறார். ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் முன்பு குதிரை லாயமாக இருந்த பாழடைந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். குதிரை லாயத்தை பள்ளிக்கூடமாக மாற்ற வேண்டிய வேலையை தனியொரு ஆளாக செய்து முடிக்கிறார்.
குளிர் காலத்தில் குழந்தைகள் குளிரைச் சமாளிக்க எரிபொருளைச் (மாட்டுச் சாணம்) சேகரிக்கும் வேலையில் இருக்கிறார். ஒரு மாலைப் பொழுதில் மாட்டுச்சாணக் கூடைகளைச் சுமந்தவாறு குழந்தைகள் அவரைக் கடந்து செல்கின்றனர். ”குழந்தைகளே! பள்ளிக்கூடம் தயாராகிறது. நீங்கள் எல்லாம் படிக்க வரவேண்டும்” என்கிறார். கூடியிருந்த குழந்தைகளில் மூத்தவளான பதினைந்து வயதுச் சிறுமி எல்தினா மட்டும் ”பெற்றோர்கள் அனுப்பினால் வருவோம்” என்கிறாள்.
துய்சனின் கண்களில் துளிர்க்கும் அன்பு, அக்கறை, ஆர்வம் ஆகியன எல்தினாவை ஈர்க்கின்றன. துய்சனின் உழைப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் பளிச்சிடுகிறது. தன்னுடன் வந்த குழந்தைகளிடம், “நாம் எல்லோரும் கூடையிலிருக்கும் சாணத்தை பள்ளியில் கொட்டிவிட்டுச் செல்வோமா? என்று கேட்கிறாள்”. யாரும் தயாரில்லை. எல்தினா மட்டும் பள்ளிக்குள் சென்று தன்னுடைய கூடையில் இருந்த சாணத்தைக் கொட்டிவிட்டு, மீண்டும் சாணி அள்ளச் செல்கிறாள்.
இருள் சூழ்ந்துவிடுகிறது. அரைக் கூடை சாணியுடன் வீடு செல்கிறாள். அத்தையிடம் திட்டும், அடியும் வாங்குகிறாள். பெற்றோர்களை இழந்திருந்த அல்தினா அவளுடைய மாமா வீட்டில் வளர்கிறாள். இரண்டு நாட்கள் கழித்து துய்சன் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் சொல்லி கேட்டுக்கொள்கிறார். அல்தினா அவருடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறாள். அத்தை அவரைத் திட்டி விரட்டிவிடுவாளோ என்ற அச்சம். ஆனால் ஆச்சரியமாக அவளின் மாமா பள்ளிக்கு அனுப்பிட சம்மதிக்கிறார்.
பள்ளிக்கூடத்தின் முதல் நாள்! குழந்தைகளுக்கு பென்சில், நோட்டு, புத்தகங்களை வழங்கிவிட்டு, சுவற்றில் லெனின் படத்தை மாட்டிவைக்கிறார். இவர் யார் தெரியுமா? இவர்தான் சார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நமக்கு விடுதலை பெற்றுத் தந்த லெனின் என்று பெருமையுடன் கூறுகிறார். அல்தினாவைப் பொறுத்தவரை படத்திலிருந்தவர் துய்சனாகவே தெரிகிறது. பள்ளிக்கு வருவதற்கு குழந்தைகள் சிற்றோடையைக் கடக்க வேண்டியிருக்கிறது. தினமும் குழந்தைகளைத் தன் தோள்களில் தூக்கிக்கொண்டு செல்கிறார். ஊர்க்காரர்கள் நினைத்தால் இரண்டு மரங்களை வெட்டிப் போட்டு பாலத்தை உடனே கட்டிவிடலாம்.

ஆனால் அதில் அவர்களுக்கு அக்கறையில்லை. துய்சன் பாலம் கட்டும் வேலையைத் துவக்கிட, அல்தினா உடனிருந்து உதவுகிறாள். அல்தினா படிப்பில் காட்டும் ஆர்வம் அவரை மேலும் உற்சாகப்படுத்துகிறது. அல்தினாவுக்கு நல்லதொரு எதிர்காலம் உண்டு என்று நம்புகிறார். அவளை வெளி ஊர்களுக்கு அனுப்பி மேலும், மேலும் படிக்கவைக்க நினைக்கிறார். ஒரு நாள் இரண்டு பாப்ளர் (குளிர் பிரதேசங்களில் உயர வளரும் மரம்) மரக் கன்றுகளைக் கொண்டு வருகிறார். பள்ளிக்கூட வாயிலில் அவற்றினை இருவரும் நடுகிறார்கள். இந்த மரங்கள் நீண்டு உயர வளரும். இதன் வளர்ச்சி போல் உன்னுடைய வாழ்வின் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்று அல்தினாவை வாழ்த்துகிறார். அந்தக் கணம் அல்தினா வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாதது.
ஆனால் அல்தினாவின் அத்தை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பணக்கார கிழவனுக்கு அவளை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொடுக்க முடிவெடுக்கிறாள். அல்தினாவின் பாதுகாப்பு கருதி அவளை தன்னுடன் பள்ளியிலேயே தங்கவைக்கிறார். பள்ளியிலிருந்து அல்தினாவை இழுத்துச் செல்ல மூன்று முரடர்களுடன் அத்தை வருகிறாள். துய்சனைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு அல்தினாவைக் கடத்திக் கொண்டுபோகிறார்கள். அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயலும் துய்சன் ஓட முடியாமல் கீழே விழுந்துவிடுகிறார். கிழவன் வீட்டில் சிக்கிக் கொண்டு அல்தினா செய்வதறியாது தவிக்கிறாள். கிழவன் வீட்டிலிருந்து தப்பிக்க அல்தினா செய்யும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன.
மூன்று நாட்கள் கழித்து துய்சன் ராணுவ வீரர்களுடன் வந்து அல்தினாவை விடுவித்துக் குதிரையில் கூட்டிச்செல்கிறார். அல்தினாவை அவளின் தூரத்து உறவினர் வீட்டில் பாதுகாப்பாக வைக்கிறார். அல்தினா உயர்கல்வி கற்க வெளியூர் புறப்படுகிறாள். துய்சன் வழியனுப்ப ரெயில்வே ஸ்டேஷன் வருகிறார். அல்தினா எந்தத் தருணத்திலும் துணிச்சலுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமே வாழ்வில் வெற்றி பெற உதவிடும் என்று அறிவுரை கூறுகிறார். கண்ணீர் மல்க தன் அன்பிற்கினிய ஆசிரியரிடமிருந்து அல்தினா விடைபெறுகிறாள். துய்சனின் அறிவுரைகளை என்றென்றும் அவள் மறக்கவில்லை. கல்லூரியில் படிக்கும்போது துய்சனுக்கு கடிதம் எழுதுகிறாள். கடிதத்திற்கு பதில்வரவில்லை. அல்தினாவின் கவனம் முழுவதும் படிப்பில் இருக்க வேண்டும் என்பதனால் அவளின் மனதை சஞ்சலப்படுத்தக் கூடாது என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு பதில் போடாமல் இருப்பார் என்று அவள் அறிவாள்.
கிராமப் பின்னணியில் வந்ததனால் ஆரம்ப காலத்தில் உயர்கல்வி கற்பதில் அல்தினாவுக்குச் சிரமம் இருந்தது. வெற்றி பெற வேண்டும்; துய்சனுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் கடினமாக உழைக்கிறாள். தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெறுகிறாள். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகிறார். அவள் சார்ந்த துறையில் பரிணமிக்கிறாள். குர்குரோ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவள் பணியாற்றும் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்கள். துய்சன் செய்த தியாகங்கள் வீண்போகவில்லை. இன்று குர்குரோ கிராமம் நன்கு கல்வியறிவு பெற்ற கிராமம். குர்குரோ கிராமத்து இளைஞர்கள் சோவியத் யூனியனின் பலபகுதிகளிலும் சாதனையாளர்களாகத் திகழ்கிறார்கள் என்பதறிந்து அல்தினா மகிழ்கிறாள். கிராமத்தின் வெற்றிக்குக் காரணமாயிருந்த தன்னுடைய ஆசான் துய்சனை நினைத்துப் பெருமை கொள்கிறாள்.
ஒரு முறை வேலை நிமித்தம் குர்குரோ அருகில் இருக்கும் ஒரு இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது. டிரைவரை கிராமத்தை ஒட்டி காரை நிறுத்தச் சொல்கிறாள். கிராமத்தின் முகமே மாறியுள்ளது. சோவியத் யூனியனின் ஒட்டுமொத்த வளர்ச்சியை குர்குரோ பிரதிபலிக்கிறது. மலை அடிவாரத்தில் ஆசிரியர் துய்சனின் அர்ப்பணிப்பின் சாட்சியமாய் வளர்ந்து நிற்கும் இரண்டு பாப்ளர் மரங்களைப் பார்த்துப் பூரிப்படைகிறாள். கண்கள் பனிக்கின்றன. அவள் வாழ்வைச் சீரழிக்க நினைத்த மாமாவையும், அத்தையையும் பார்ப்பதற்கு மனமில்லை. துய்சன் பற்றி விசாரிக்கிறாள். துய்சன் அங்கில்லை என்றும்; ரெயில்வேயில் வேலை பார்க்கிறார் என்றும் கூறுகிறார்கள். ஊரில் வேறு யாரையும் சந்திக்காமல் திரும்புகிறாள்.
பல்கலைக்கழகப் பேராசிரியர் அல்தினா திருமணம் செய்து பிள்ளைகளும் பெற்றுக் கொள்கிறாள். திருமணத்திற்குப்பின் அவள் ’அல்தினா சுலைமனோவ்னா’ என்றழைக்கப்படுகிறாள். ஒரு ரெயில் பயணத்தின் போது நிற்காமல் கடந்து செல்லும் ஒரு ஸ்டேஷனில் துய்சன் கொடி அசைத்து நிற்பது போல் தெரிகிறது. டிரெயினை நிறுத்தச் சொல்லிக் கத்துகிறாள். செயினைப் பிடித்து இழுக்கிறாள். டிரெய்ன் நின்றதும் பிளாட்பாரத்தில் அவள் ஓடிய வேகம் கண்டு அனைவரும் பதறுகிறார்கள். கொடி அசைத்துச் சென்ற மனிதர் துய்சன் இல்லை என்றறிந்ததும் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறாள். டிரெய்ன் மீண்டும் பயணத்தைத் தொடர்கிறது.

குர்குரோ கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் சோவியத் யூனியனின் சிறந்த ஓவியர்களில் ஒருவன் என்ற உச்சத்தை அடைகிறான். அல்தினாவும், அவனும் நல்ல நட்பில் இருக்கிறார்கள். இருவருக்கும் குர்குரோ கிராமத்தின் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பிதழ் வருகிறது. பள்ளிக்குப் புதிய கட்டிடத் திறப்பு விழா. இருவரும் பள்ளியின் பழைய மாணவர்கள் என்ற முறையில் அழைக்கப்படுகிறார்கள். அதிலும் அல்தினாதான் விழாவின் சிறப்பு விருந்தினர். இருவரும் குர்குரோ கிராமம் செல்கிறார்கள். பள்ளியின் புதிய கட்டிடம் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. அல்தினா மேடையில் வீற்றிருக்கிறாள். விழாவினை வாழ்த்தி பழைய மாணவர்கள் பலரும் தந்தி அனுப்பிருக்கிறார்கள். தந்தியைக் கொடுத்ததும் தபால்காரர் போய்விடுகிறார். ”தபால்காரர் துய்சன் விழாவில் பங்கேற்கட்டும்! கூப்பிடுங்கள் அவரை!” என்று தலைமை ஆசிரியர் சொன்னதும், அல்தினா திடுக்கிடுகிறாள்.
மேடையைவிட்டு இறங்கித் தேடுகிறாள். ”துய்சனுக்கு பட்டுவாடா செய்ய நிறைய தந்திகள் இருப்பதால் போய்விட்டார்; அவருக்கு எப்போதும் கடமைதானே முக்கியம்”, என்று கூட்டத்தில் நிற்கும் ஒருவர் சொல்கிறார். ஏமாற்றத்துடன் திரும்புகிறாள். விழா முடிந்ததும் மலையடிவாரத்தில், வெண்ணிலா ஒளியில் அவளுக்கும், துய்சனுக்கும் மட்டுமே கதைகள் பல சொல்லிடும், ஓங்கி வளர்ந்து நிற்கும் பாப்ளர் மரங்களின் முன் தன்னை மறந்து சில நிமிடங்கள் நிற்கிறாள். அன்றிரவே டிரெய்ன் மூலம் மாஸ்கோ திரும்புகிறாள். ஒரு சில நாட்களில் ஓவியர் நண்பருக்குக் கடிதம் எழுதுகிறாள். கடிதத்துடன் அவளின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி அனுப்புகிறாள். ”என் வாழ்க்கை அனுபவம் குர்குரோ குழந்தைகளை மட்டுமல்ல சோவியத் யூனியனின் அனைத்துக் குழந்தைகளையும் சென்றடைய வேண்டும்.
என்னுடைய வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ’முதல் ஆசிரியர்’ துய்சன் போல் சோவியத் யூனியனின் ஒவ்வொரு குழந்தைக்கும் இப்படிப்பட்ட முதல் ஆசிரியர் கிடைத்திட வேண்டும் என்று இந்த நூலின் மூலம் குழந்தைகளை வாழ்த்த விரும்புகிறேன். புத்தகத்தை நேர்த்தியாகக் கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள். நம் பள்ளியின் (துய்சன் பள்ளி) படத்தை உயிர்ப்புடனும், அழகுடனும் வரைந்து புத்தகத்தில் சேருங்கள். புத்தகத்துடன் நாம் இருவரும் குர்குரோ சென்று என்னுடைய முதல் ஆசிரியர் துய்சனைச் சந்திப்போம்”, என்று கடிதத்தை முடிக்கிறாள்.
—பெ.விஜயகுமார்.