விண்வெளிக்குச் சென்ற முதல் மெக்சிகோ விண்வெளி வீராங்கனை காட்யா செலஸ்டே எச்சரேட்டா கோன்சலஸ் (Katya Celeste Echazarreta Gonzalez) – ஏற்காடு இளங்கோ

விண்வெளிக்குச் சென்ற முதல் மெக்சிகோ விண்வெளி வீராங்கனை காட்யா செலஸ்டே எச்சரேட்டா கோன்சலஸ் (Katya Celeste Echazarreta Gonzalez) – ஏற்காடு இளங்கோ

காட்யா செலஸ்டே எச்சரேட்டா கோன்சலஸ் (Katya Celeste Echazarreta Gonzalez) என்பவர் ஒரு மெக்சிகன் – அமெரிக்க மின் பொறியாளர் மற்றும் அறிவியல் தொடர்பாளர் ஆவார். இவர் கிளாமர் மெக்சிகோ ஒய் லத்தீன் அமெரிக்காவின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த பெண்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார். இவர் மெக்சிகோவில் பிறந்த முதல் பெண் விண்வெளி வீரர் என்றப் பெருமைக்கு உரியவர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

இவர் மெக்ஸிகோவின் குவாடலஜாரா என்ற ஊரில் 1995 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று பிறந்தார். அவருக்கு 8 வயதாக இருந்த போது அவரது குடும்பம் அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தது. அவர் தொடக்கப் பள்ளியில் படிக்க தொடங்கிய போது ஆங்கில மொழி கடினமாக இருந்தது. அவரின் உச்சரிப்புக்காக கேலி செய்யப்பட்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசினார்.

Katya Echazarreta becomes first Mexican-born woman in space - Yucatan  Aerospace News

சிறு வயதிலேயே விண்வெளி, கணிதம், வானியல் மற்றும் இயற்பியல் அவற்றைப் படிக்க அவரது தாயார் ஊக்குவித்தார். அவர் ஈஸ்ட்லேக் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். பின்னர் மின் பொறியியல் படிக்க சான் டியாகோ நகரக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் மகளிர் பொறியாளர்கள் சங்கத்தில் ஒரு பகுதியாகவும், கணிதம், பொறியியல், அறிவியல் சாதனைத் (MESA) திட்டத்திற்கான வழிகாட்டியாகவும், உதவித்தொகை அறிஞராகவும் இருந்தார்.

இவர் 2019 ஆம் ஆண்டில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பிறகு ஜான்ஸ் காப் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினி பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். சமூகத்திற்கான அவரது மனிதாபமான பங்களிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பங்களிப்புகளுக்காக கௌரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.

தொழில்

The first Mexican to travel to space | Al Día News

இவர் ஹென்றி சாமுவேலி பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளிக்கான ஒரு ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார். அங்கு அவர் மின்சாரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைப் பராமரிக்கும் போது ரோபோவின் கட்டுப்பாடு மற்றும் உடலாகப் பணியாற்ற பல்வேறு பொருட்களைப் பரிசோதித்தார். பிறகு நாசாவில் பயிற்சி பெற்றார். இவர் 5 ஆண்டுகள் நாசாவின் முழுநேர மின் பொறியாளராகப் பணியாற்றினார்.

இவர் பொறியியல் கல்வியில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக வளர்ந்தார். மிகவும் ஆர்வமுள்ள பயிற்றுனராக இருந்து சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். அறிவியல் மற்றும் பொறியியல் தகவல் தொடர்புத் துறையில் தனது பணியின் மூலம், மாணவர்கள் மற்றும் இளம் நிபுணர்களிடையே இருக்கும் சில இடைவெளிகளைக் குறைக்க உதவினார்.

இவர் மிராண்டா காஸ்க்ரோவ் உடன் மிஷன் அன்ஸ்ஸ்டாப்பிள் நிகழ்ச்சியில் “எலக்ட்ரிக் கேட்” என்ற பெயரில் தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் நெட்ஃபிக்ஸ் யூடியூப் தொடரான ஐஆர்எல்லின் இணை தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் 2023 ஆம் ஆண்டில் ஃபண்டசியன் எஸ்பேஷியல் என்ற இலாப நோக்கமற்ற சிவில் சங்கத்தை நிறுவினார். இது இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதேபோல் மெக்சிகோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களையும் ஊக்குவிப்பதை முக்கிய சமூக நோக்கமாகக் கொண்டது.

விண்வெளிப் பயணம்

Katya Echazarreta, Mexico's first female astronaut

இவர் 120 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 7000 விண்ணப்பங்களில் இருந்து விண்வெளிப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ப்ளூ ஆரிஜின் NS-21 இன் பயணம் 2022 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று நடந்தது. இது 5 ஆவது மனிதப் பயணமாகும். இதில் ஆறு பேர் பயணம் செய்தனர். இவர் 107 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றார். இந்தப் பயணம் 11 நிமிடங்கள் நீடித்தது.

மெக்சிகோவைச் சோர்ந்த ரோடால்போ நேரி வேலா என்பவர் 1985 ஆம் ஆண்டு முதன் முதலில் விண்வெளிக்குச் சென்றார். 2010 ஆம் ஆண்டில் தான் மெக்சிகோ தனக்கென ஒரு விண்வெளி நிறுவனத்தை ஆரம்பித்தது. இவர் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மெக்சிகன் மற்றும் முதல் மெக்சிகன் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். இவர் மெக்சிகோவின் விண்வெளிப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எழுதியவர் : 

✍️ – ஏற்காடு இளங்கோ

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *