மீன்வளம் சார்ந்த படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் (Fisheries Related Courses and Jobs)
– முனைவர் இல. சுருளிவேல்
கல்வியின் அவசியம் பற்றி “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து” என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். நாம் கற்கும் கல்வி அடுத்து ஏழு தலைமுறைக்கு உதவும். ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வி நிலை உயரும்போது முன்னேற்றமும் ஏற்படுகிறது. கல்வி ஒரு மனிதனை சிந்திக்க வைக்கிறது. அறியாமையை போக்குகிறது. நம் நாட்டில் பல்வேறு படிப்புகள் உள்ளன . முக்கியமாக மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல், வேளாண்மை போன்று மீன்வளக் கல்வியும் முக்கியமான ஒன்று. இன்றைய சூழ்நிலையில் வளர்ந்து வரும் துறைகளில் மீன் வளமும் ஒன்று. மீன்வளத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொழில்வாய்ப்புகள் மற்ற துறைகளோடு ஒப்பிடுகையில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. மீன்வளத்தின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்று, வருமானத்திற்கும், மீனவ மக்களின் வாழ்விற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. அதனால் இந்தியாவைப் பொறுத்தவரை மீன்வளம் என்பது கதிரெழுச்சித் துறையாகப் கருதப்படுகிறது.
மீன்வளப் படிப்பு:
மீன்வளப் படிப்பு (Fisheries Science) என்பது நன்னீர் மற்றும் கடல் நீர், உவர்நீர் மீன்களின் உற்பத்தி, வளர்ப்பு, மேலாண்மை மற்றும் பதப்படுத்துதல் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பாகும். இதில் மீன் வளர்ப்பு முறைகள் (Aquaculture), கடலியல் (Oceanography), மீன் நோய்கள், மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் மீன் உணவு பதப்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன. மீன்வள அறிவியல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் பதினோராம் வகுப்பில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை (Biology, Chemistry, Physics) எடுத்துப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில கல்லூரிகளில் தொழிற்கல்வி பிரிவில் (Vocational Stream) விவசாயம் அல்லது மீன்வளம் படித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு உண்டு.
மீன்வளப் பல்கலைக்கழகம்:
தமிழக அரசின், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமானது மாநில வேளாண்மை பல்கலைக்கழக (SAU) முறை மற்றும் பாடத்திட்டங்களைப் பின்பற்றி, மாநிலத்தில் மீன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான தொழில்முறை, மீன்வளக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டம் 2012-இன் படி, 19.06.2012 அன்று நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய குழுவால் (UGC) ’12B’ அந்தஸ்தையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தால் (ICAR) மீன்வள அறிவியல் படிப்பிற்கு ‘A’ தர அங்கீகாரத்தையும் (Accreditation) பெற்றுள்ளது. மேலும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் (AICTE) மீன்வளப் பொறியியல், உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology), உணவுத் தொழில்நுட்பம் மற்றும் மீன்வள நிறுவன மேலாண்மை (Fisheries Enterprises Management) ஆகிய படிப்புகளுக்கான அங்கீகாரத்தையும் இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்ப பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்; திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்; நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறுவில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்; கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் என்ற இடத்தில் ஒரு தனியார் கல்லூரியும் இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc.) நான்கு வருடங்கள் பட்ட பட்டப் படிப்பையும், நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரி இளநிலை மீன்வளப் பொறியியல்(B.Tech.) நான்கு வருடங்கள் பட்டப் படிப்பையும் வழங்குகிறது. அது தவிர சென்னை மாதவரம் வளாகத்தில் இயங்கி வரும் தொழில்சார் மீன்வள தொழில்நுட்பக் கல்வி நிலையம் இளநிலை தொழிற்கல்வி (தொழில்துறை மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம்) B.Voc. (IFPT) மூன்று வருட பட்டப் படிப்பு; சென்னை முத்துக்காடு, தொழில்சார் மீன் வளர்ப்பு தொழில்நுட்பக் கல்வி நிலையம் இளநிலை தொழிற்கல்வி( தொழில்துறை மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம்) B.Voc. (IA) மூன்று வருடங்கள் பட்டப் படிப்பு; தூத்துக்குடியில் இயங்கி வரும் தொழில்சார் மீன்பிடித் தொழில்நுட்பக் கல்வி நிலையம் இளநிலை தொழிற்கல்வி(தொழில்துறை மீன்பிடி தொழில்நுட்பம்) B.Voc. (IFT) மூன்று வருடங்கள் பட்டப் படிப்பையும் வழங்குகிறது. இது தவிர சுயநிதி பிரிவின்கீழ் சென்னை வாணியசாவடி வளாகத்தில் இளநிலை உயிர் தொழில்நுட்பவியல், நான்கு வருடங்கள், இளநிலை உணவு தொழில் முற்பவியல், நான்கு வருடங்கள், சென்னை முட்டுக்காட்டில் இளநிலை வணிக நிர்வாகவியல், நான்கு வருடங்கள் போன்ற படிப்புகளையும் வழங்குகிறது. மேலும், இப்பல்கலை முதுநிலை மீன்வள அறிவியல்(M.F.Sc), முனைவர் பட்ட ஆய்வு(Ph.D) படிப்புகளையும் வழங்குகிறது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தை தவிர அண்ணாமலை பல்கலைக்கழகம் இளநிலை மீன்வள அறிவியல் படிப்பை தருகிறது. அரசு கல்லூரிகள் சில முதுநிலை அறிவியல் மீன் வளர்ப்பு படிப்பையும், பட்டய படிப்பையும் வழங்குகிறது. மத்திய மாநில அரசுகள் சில தனியார் அமைப்புகள் மீன்வளம் சார்ந்த ஒரு நாள், ஒரு வாரம் ஒரு மாதம் பயிற்சிகளையும் வழங்குகிறது. மீன்வளம் சார்ந்த படிப்பாக இருக்கட்டும், பயிற்சியாக இருக்கட்டும் ஆர்வம், அதற்கான பயிற்சி முயற்சி இருந்தால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். பலர் படித்து முடித்தவுடன் வேலை எளிமையாக கிடைத்துவிடும் என்று நினைக்கின்றனர். இன்றைய போட்டி உலகில் துறை சார்ந்த அறிவும், தேடல் உள்ளவர்களுக்கே வாய்ப்பு தேடி வருகிறது. திறமை உள்ளவர்கள் மட்டுமே இத்துறையில் சாதிக்கின்றனர். மற்றவர்கள் குறைவான ஊதியத்தில் வாழ்க்கையை நடத்துகின்றனர். எனவே படிப்புடன் அதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்வது மிக அவசியம்.
மாநில அரசு: சம்பந்தப்பட்ட பாடங்களில் தேசிய தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றால், முனைவர் பட்ட தகுதியிருந்தால் பேராசிரியர் பணியில் சேர முடியும், பாட வல்லுநர், ஆராய்ச்சியாளர் ஆக முடியும். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன்வள உதவி ஆய்வாளர்/ ஆய்வாளர் (Fisheries sub Inspector/ Inspector, பண்ணை மேலாளர், மேலாளர், உதவி இயக்குனர் (Assistant Director) போன்ற பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் நிரப்பப்படுகின்றன.
மத்திய அரசு: வேளாண் ஆராய்ச்சிப் பணி (ARS) தேர்ச்சி பெற்றால் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், மீன்வளம் சார்ந்த பல்கலைக்கழகங்களில் நன்னீர், உவர் நீர், கடல் நீர் ஆராய்ச்சி மையங்களில் விஞ்ஞானி ஆகலாம். அதுமட்டுமல்லாமல், இந்திய மீன்வளக் கணக்கெடுப்பு நிறுவனம் (FSI), கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) ஆகியவற்றில் ஆய்வாளர் மற்றும் அதிகாரி வேலைகள் உள்ளன.
வங்கித் துறை
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ‘வேளாண்மை கடன் அதிகாரி’ (Agricultural Field Officer – AFO), தேசிய வேளாண் மற்றும் ஊராக வளர்ச்சி வங்கி(NABARD) போன்றவற்றில் மேலாளர் பணியும் உள்ளது. இதில் மீன்வளப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏனெனில், மீன்வளத் தொழில்களுக்கு கடன் வழங்குவதையும் அதன் திட்ட அறிக்கைகளை மதிப்பீடு செய்வதையும் இவர்களால் சிறப்பாகச் செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களில், மீன் மற்றும் இறால் வளர்ப்பு பண்ணைகளில் மேலாளர்கள் (Farm Managers), மீன் தீவனத் தயாரிப்பு நிறுவனங்களில் (Feed Mills) தொழில்நுட்ப வல்லுநர்கள், கடல் உணவு பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் (Quality Control Officers) பணிகளும் உள்ளன.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு:
சர்வதேச அளவில் கடல் உணவுகளுக்கான தேவை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அது சம்பந்தமான நிறுவனங்களில் மீன்வளம் படிப்பு படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக நார்வே, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் (Gulf Countries) அதிநவீன மீன்வளர்ப்பு பண்ணைகளிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இந்திய மீன்வளப் பட்டதாரிகளுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைகள் கிடைக்கின்றன.
நுழைவுத் தேர்வு ஏதும் எழுத வேண்டுமா?
தமிழ்நாட்டில் மீன்வளக் கல்வி படிக்க தனியாக நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. பிளஸ் 2 வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் (Cut-off Marks) அடிப்படையிலேயே கலந்தாய்வு (Counselling) மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர ICAR-AIEEA போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்.
இட ஒதுக்கீடு:
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டின் படி பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. முக்கியமாக மீனவர்களுக்கு, மீனவர் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மின்வளப் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள மீனவர் சமூகத்தில் முக்கியமாக பரவர், மீனவர் (பட்டினவர், பர்வத ராஜகுலம், செம்படவர்), முக்குவார்/முக்காயர் ஆகிய சமூகங்களில் இருந்து இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு 5 ஐந்து விழுக்காடு முன்னுரிமை அடிப்படையிலும், 15 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மீன்வளக் கல்வியில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மீனவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீன்வளத்தில் தொழில் வாய்ப்புகள்
மீன்வளத்தில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணமாக, நன்னீர் மீன் உற்பத்தி, கடல் மீன் உற்பத்தி, இறால் வளர்ப்பு, ஆழ்கடல் மீன் பிடிப்பு, மதிப்பூட்டிய மீன் உணவு பொருட்கள் தயாரித்தல், உயிர்மீன் விற்பனை, மீன் ஏற்றுமதி, மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல், வண்ண மீன் வளர்ப்பு, வண்ண மீன் குஞ்சு பொரிப்பகம், வண்ண மீன் விற்பனை அங்காடி, ஜிலேபி மீன் உற்பத்தி, வளர்ப்பு விற்பனை, கடல்பாசி வளர்ப்பு, மீன்பிடி மற்றும் வளர்ப்பு சம்பந்தமான உபகரணங்கள் தயாரிப்பு, மீன் உணவு தயாரித்தல், நண்டு வளர்ப்பு, ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு, கூண்டு மீன் வளர்ப்பு, இணையவழி மீன் விற்பனை என பல்வேறு தொழில் வாய்ப்புகள் மீன்வளத்தில் இருக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மீன்களுக்கான சந்தை வாய்ப்பு மிக அதிகம். மீன்வளம் சார்ந்த படிப்புகளையும், தொழில் ஆலோசனைகளையும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
இது தவிர மத்திய, மாநில அரசின் மீன்வளம் சார்ந்த ஆராய்ச்சி நிலையங்கள், தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம், மீனவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்க, தொழில் முனைவோரை உருவாக்க மீன் உற்பத்தியாளர்களுக்கு, மீனவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. பல்வேறு திட்டங்கள் மற்றும் கல்வி, வேலை வாய்ப்புகளில் சேர்வதற்கு, தொழில் முனைவோர் பயிற்சிகளை, வழிகாட்டுதலை மத்திய அரசு மற்றும் மாநில அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்பட்டு வருகிறது.
மீன்வளம் என்பது நாட்டின் முக்கியமான வளமாக இருக்கிறது. அதனால் மீன்வளத்தை பாதுகாப்போடு மட்டுமல்லாமல், அது சார்ந்த படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் தேவை. வெறும் வேலைக்காக மட்டும் படிக்காமல் நேசித்து படிக்க வேண்டும். புதிதாக வேலையை உருவாக்கவும், பலருக்கு முன்னுதாரணமாகவும் விளங்கவேண்டும். மீன்வளம் சார்ந்த கல்விக்கு சம்பந்தப்பட்ட இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.tnjfu.ac.in இல் போதுமான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம்!
📚 எழுதியவர்:
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

