Dr.ஜலீலா முஸம்மில்லின் கவிதைகள்
**************************************************
1. மாயமனுக்கள்..
உன்னுடன் பேச்சில்லை என்பதைச்
சொல்லாமல் சொல்லிச் செல்கிறாய்
குறுக்கும் மறுக்கும்
முன்னும் பின்னும்
அங்கும் இங்கும்
பூனைக்குட்டியாய்
நடமாடி நடமாடி
பூடகமாக அறிவிக்கிறாய்
நாற்காலி நகர்த்துகிறாய்
கொலுசொலி கீதமிசைக்கிறாய்
தண்ணீரை ஜாடியில் வார்க்கிறாய்
தட்டில் கரண்டி கணீரென
வைக்கிறாய்
சத்தமிடுவதெல்லாம்
சங்கேத பாஷையில்
சங்கம் அமைக்கின்றன
சித்தத்தில் உணர்வலைகள்
சங்கமிக்கத் துடிக்கின்றன
யுத்தம் நிகழ்த்துவதாய்
நித்தம் மாயமனுக்கள்
பித்தனாகி அறியாததுபோல்
சத்தமின்றி ரசிக்கிறேன் நான்
கண்மலர்கள் விரிக்கிறாய்
கருங்கூந்தல் அவிழ்க்கிறாய்
மென்கரங்கள் கோதுகிறாய்
மோனரசம் கெளிக்கிறாய்
தள்ளித்தள்ளி விலகி விலகி
தன்பக்கம் ஈர்த்திடத்துடிக்கிறாய்
நேசப்போரின் நீலமேகங்கள் சூழும் திசையாகித்தவிக்கிறாய்
என்னைப் பார்
என்னைக் கேள்
என்னைச் சீண்டு
என்றுதான்
வேறென்ன?
பேச்சற்ற மௌனத்திலும்
பேச
எங்கு தான் கற்றாய் நீ?
**************************************************
2.மென் பட்டாம்பூச்சிகளின் தோட்டம்
கண்ணியம்
கரிசனம்
கலந்து செய்யப்பட்டது
பேரன்பு
பெரும்பிரியம்
பிசைந்து
நெய்யப்பட்டது அது
விலை மதிப்பற்ற
வைரம் அது
கலப்படம் அற்ற
கருணை அது
‘நெற்றி முத்தம்’
என்றால்
நினைவுக்கு வரும்
முதல் நபர்
அப்பாதான்
அப்பாவின்
நெற்றி முத்தம்..
அங்கு விளைந்து கிடக்கிறது
மென்பட்டாம்பூச்சிகளின் தோட்டம்!!
**************************************************
3.தொண்டை நனைக்க…
ஒரு புத்தகம் இல்லாமல் என்னால்
தேநீர் அருந்த முடியாது
ஒரு கோப்பைத்தேநீர்
இல்லாமலும் என்னால் புத்தகம் அருந்த முடியாது
தனியே தேநீர் அருந்தப்
பொறுமையில்லை
அதன் சூடு மெல்லத்
தணிகையில்
தொண்டை நனைக்க
ஒரு நல்ல துணையாக
புத்தகம் வேண்டும்
அது மட்டுமல்ல
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களென
நேர மேலாண்மையும்
அதிலுண்டு!
புத்தகத்தைத் தனிமையில்
விடலாகாது
அதன் சுவை இரட்டிப்பாக
புத்தக நட்பு வலுப்பட
ஒரு கோப்பைத் தேநீர் நல்லது
தொடர்ந்து வாசித்து முடிக்க
தேநீரொரு அருமருந்து !!
**************************************************
4.பேருண்மைத்தனமாக…
அன்பில்லாமல்
செத்து செத்துப் பிழைக்கிறேன்
அன்பை மட்டும் வைத்து ஏன் என்னைச் செதுக்கினாய் இறைவா
அன்பு நீரூற்றி ஏன் என்னை வளர்த்தாய் இறைவா
சிறு பூக்களை தந்து விட்டு மறைந்து விடுகிறார்கள்
நானோ நந்தவனத்தை பரிசளிக்கக் காத்து கிடக்கிறேன்
மந்திரித்து
கண்ணரித்து
காயம் செய்கிறதே அன்பு
அப்படியானால் அது அன்புதானா?
ஐயமாக இருக்கிறது
அன்பில்லாத அன்பை நினைத்து பயமாக இருக்கிறது
அன்பை துறப்பது முற்றையும் துறப்பது போல் அல்லவா?
அஃதின்றி அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்
உள்ளத்திறப்பு அன்பு ஒன்றுதானே
கள்ளத்தனம் அற்றது அன்பு ஒன்றுதானே
அதை விடுத்தும் வாழ்வது எப்படி?
அன்பில்லாமல் செத்து செத்து பிழைக்கிறேனே இறைவா
என் நெஞ்சுக்குழிக்குள் எதை வைத்துத் தைத்தாய் இறைவா
சுருக்கென்று தைத்து
படக்கென்று மறைந்து விடுவது அன்பு இல்லை தானே?
இன்னும் இன்னும்
வேண்டும் என்கிறேன்
இன்மை பாராட்டி
இலகுவாய் விலகுகின்றனவே யாவும்
தொடர்புகளுக்கு எல்லாம் தூய்மையாக இருக்கிறேன்
அன்பிற்கெல்லாம் பேரன்பைப் பொழிகிறேன்
நுனிவிரல் கொடுத்தால் தோள்கள் இரண்டையும் தருகிறேன்
சதி என்றறியாது விதியென்று கைமாறு செய்கிறேன்
வானத்தின் நிர்மலம் போலும் அனைத்தையும் நினைத்து விடுகிறேன்
ஒரு உத்தமமில்லாத உறவினை
அறியாது
பேருண்மைத்தனமாக வாழ்ந்து விடுகிறேன்
அன்பில்லாமல்
செத்து செத்துப் பிழைக்கிறேன்
இப்போது புரிந்தேன்,
என் பிரச்சனை என்னவென்றால்
ஒரு பூவுக்கு,
நந்தவனமாக விரிந்து கொள்வதுதான்!!!
**************************************************
5.விழலுக்கன்றி…
இலைத்தது
கிளைத்தது
பூத்தது
காய்த்தது
கனி தந்தது
காடு தழைக்கவும் உவந்தது
தங்கவும்
தாங்கவும் ஆனது
தழலுக்குத் தண்ணிழலீந்தது
விழலுக்கன்றி
வையகத்துக்காய் மட்டுமே
வாழ்ந்து மாய்ந்தது
இவையெல்லாம் செய்த மரத்தைத்தான்
சும்மா நிற்கும் மரம் என்கிறீர்கள்….!!
**************************************************
எழுதியவர் :
✍️ – Dr.ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
