அகவி கவிதைகள்
********************************************************
1. செருப்புகளின் பிறந்த நாள்
கால்களுக்காகக்
காத்திருக்கும் காலாபிமானத் தவம்
உயரத்தில் அமர்ந்திருக்கும்
தரைதொடா செருப்புகள்
செருப்பற்ற பாதங்களைப் பார்க்க மனசின்றி
கண்களை மூடிக்கொண்டன
வாளிப்பு மினுமினுப்புகாட்டி
சாய்வு ஆசனத்தில்
அமர்ந்துள்ளன அவை!
பணமுடித்து போன பிறகு
கடையைத்
திரும்பிப் பார்க்காமல்
காலடி சேர்ந்து
பூமிக்கும் பாதத்திற்குமான
மென்சுக
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை
உறுதிசெய்து கொண்டே இருக்கின்றன
வாங்குபவனின்
கால் சேரும்போதுதான்
செருப்புகளின் பிறந்தநாள்
நிகழ்கிறது
ஆனால்
செருப்புகள் ஒருபோதும்
பிறந்தநாளைக்
கொண்டாடத்தக்கதென நினைத்ததேயில்லை
********************************************************
2. பொழுதை வாசித்தல்
வெயிலில் குளித்த அந்தியில்
கிளம்பும்போது
இரவு வாசல்
தூரத்தில் தெரிந்தது
இரவுத் திரைச்சீலை தொங்கவிடப்பட்ட பொழுதில்
காணாமல் போனது அந்தியின் முகம்
மழை சன்னல் திறந்த
சிறு தூறலுக்கிடையில்
வீடு போய்ச் சேர்ந்த போது
மின்சாரம் நின்றுபோன
வீட்டில்
விழி நட்சத்திரங்களுடன்
உரையாடிக்கொண்டிருந்தது
மெழுகுவர்த்தி
உபசரிப்பின் ஒரு பகுதியாய்
ஜெனிலியாவை
சங்கீதம் இசைக்கச் சொன்னார் அம்மா
பிஞ்சு இரவுச் செவியில்
கேட்கும் இசையால்
மறந்து போய்விட்டது
வெளியில் பெய்த மழை
மழையைக் கூட்டிக்கொண்டு
வந்துவிட்டீர்கள்
என்றார் நண்பர்
மழையையே மகளாய் பெற்றுள்ளீர்கள் என்றேன் நான்
சட்டென வந்துவிட்டது
மின்சாரம்
இருட்டு என்பது குறைந்த வெளிச்சம்
என்ற பாரதி வரியை
உரத்தக் குரலில்
வாசித்துக் கொண்டிருந்தது மெழுகுவர்த்தி.
********************************************************
3. கவிஞனின் மனைவி இறந்து போதல்.
கவிஞனின் முகம் தான்
அவன் மனையின் முகமும்
பிரத்தியேக முகமில்லாத
மனைவி ஒரு நாள்
இறந்து போகிறாள்
தீரா மின் தேக்கியாக
வயது முதிர் கணவனுக்கு
விசையூட்டியவள்
எழுத்துக் கலைஞன்
தன்வீட்டின் பெண்கொற்றக்குடையை
இழந்து நிற்பது
அவன் பேனாவுக்கு வந்த சேnதனை
மீளவும் அவன்
அர்த்த ராத்திரியிலோ
அதிகாலையிலோ
எழுந்து எழுதப் போனால்தான் தெரியும்
விடைபெற்றுப் போனது
அவள் மட்டுமல்ல
அவன் பருகியதேநீரும் காபியும் கூடத் தான்
சமையலறை மூலையிலிருந்து
கவிஞனுக்கு
ஆயுள் தயாரிக்கும் வேலை
நின்றுவிட்டது
கையறுநிலையில்
கவிஞனின்
ஆயுள் காலம்
வாழ்நாள் முழுதும்
கணவனின் புகழ் முகத் தயாரிப்புக்கு
மறைமுகமாகவே இருந்து ஜீவித்தவர்
இறந்து போய்
முதன்முதலாய்
தன் முகம் பற்றி
உலகத்தைப் பேச வைக்கிறார்
கணவனை
பகிரங்கமாய்
முந்தைய
மனைவியின் முகம்
முதன்முதலாய்
தன் வாழ்முகத்தைப்
பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்தி
மினுமினுக்கிறது
மனத் தட்டச்சிக்குள்
மக்களைப் புகுத்தி
கணினி நெடுஞ்சாலையில்
கால வாகனத்தில்
விட்ட இடத்திலிருந்து
பயணிக்கும்
கவிஞன்
எந்த இடத்தில்
விட்டானென
உலகம் வேண்டுமானால்
அறுதியிடலாம்
அவனால்
அறுதியிடவே முடியாது
ஏனெனில்
அப்போதும்
மரணத்தைப் பற்றி
எழுதிக் கொண்டிருந்தான்.
********************************************************
4. அந்த மகள்
இறப்பு வீட்டில்
இறந்தவர் பொருள்கள்
மெல்ல மெல்ல வெளியேற்றப்படுகின்றன
நல்ல புடவைகள்
நல்ல பாத்திரங்கள் என
அன்பான
ஒத்தாசையாளர்களுக்கு
இறந்தஅம்மாவின்
வயதான பொருள்களை
அள்ளிக் கொடுத்தாள் மகள்
எவரோ எடுத்துக்கொண்டு
போகட்டுமென
அம்மாவின் பூப்போட்ட மெத்தையும்
பயன்பாட்டுப் பொருள்கள்
பலவற்றையும்
நகராட்சிக் குப்பைமேட்டில்
போட்டுவிடச் சொன்னாள்
உறவுகள்
எதை எதையோ விரும்பி
அம்மாவின் நினைவுப் பொருள்களை
வாங்கிக் கொண்டு போனார்கள்
உணவை சமன்படுத்தியது
ரப்பர் உறிஞ்சி பாட்டில் தான்
அம்மாவின் எல்லாப் பொருள்களை விடவும்
பாலும் பழச்சாறும் ஊட்டி
ஆயுளை நீட்டித்த
ரப்பர் உறிஞ்சி பாட்டிலை மட்டும்
நினைவுப்பொருளாய்
அதி பத்திரமாய்
வைத்துக் கொண்டாள்
அந்த மகள்.
********************************************************
5. ஒன்றிணையும் தடங்கள்
வாழ்வின் கடைசி சுவாச
போக்குவரத்தறிந்து
போன இடத்தில்தான் அவர்களுக்குத் தெரிந்தது
எங்களைத் தனித் தனியாய் அறிந்திருந்த நாங்கள்
கணவன் மனைவியென
மரணத்தின் வாசலில் படுத்திந்த
மூப்பின் நோய் மனுசி
என்னை
அடையாளம் கண்டு சிரித்தார்
அந்தப் புன்னகையில் காலம்
கிழகு தட்டி இருந்தது
மிக மிகப் பின் வருட காலம்
ஒன்றில் என் துறையில் பணியாற்றியவரின்
மரணத்தின் முதல் நாள்
சந்திப்பும் கடைசிச் சொற்களும்
சாவு வீட்டு
சத்தத்தை மீறி
ஒலித்துக் கொண்டே இருக்கிறது மனத்துள்
எல்லா வேறுபாடுகளும்
உடைபட்டு
ஏதோவொரு
அசைவுகளின் நிகழ் காட்சிகளாய்
ஒன்றிணைந்து
உரசிப் போகின்றன
இந்த வாழ்வில் எதிர்பாராதத் தடங்கள்
********************************************************
எழுதியவர் :
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

