தங்கேஸ் கவிதைகள்
**********************************************
1. விசித்திரம்
நிழல் மீது நிழல் மோதவே
வலிக்கும் எனக்கு
ஆனால் சிக்னலில்
சின்னஞ் சிறுசு முதல்
முதியோர் வரை
கை நீட்டி பிச்சை எடுக்கையில்
அடைத்த கண்ணாடி காருக்குள்
குளிரூட்டப்பட்ட இருக்கையில்
அமர்ந்தபடி
கடந்து போவதில் சிக்கலில்லை
கண்ணாடி வழியே பார்க்கும் போது
அவர்கள் வெறும் காட்சிப் பொருட்களன்றி
வேறில்லை
சங்க கால கவிஞன் முதல்
சமசால கவிஞன் வரை
பசியைத் தான் பக்கம் பக்கமாக
எழுதி குவித்திருக்கிறான்
லச்சையின்றி
அள்ளிக் சொண்டு போகும்
சமூகத்தில்
கை நீட்டுபவனுக்கு கிடைப்பதென்னவோ
ஒரு கவளம் தான்
நீ நேர்மையானவன்
நிம்மதியாக இருப்பது போலவும்
அவர்கள் மகிழ்ச்சியற்று
துன்பப்படுவது போலவும்
கொள்ளும் பாவனைதான்
விசித்திரமாயிருகிறது
உண்மையில் அவ்வளவு
பெரிய கரிய யானையை பாராமல்
அதன் துதிக்கையில் உச்சியில்
இருக்கும் சிறு சிறு செம்பழுப்பு
புள்ளிகளை தேடி கண்டு பிடிக்கும் மனிதர்கள்
அதிர்ச்சிகரமானவர்கள் தான்
**********************************************
2. நிகர்
இருளில் மூழ்கி இருக்கும் வீடு
துக்கித்து வெளிச்சத்தை
எதிர்நோக்கி இருக்கையில்
குண்டூசி தேடி வந்திருக்கிறான்
எதிர் வீட்டுச் சிறுவன்
தேடித் தொலையாத மனிதர்களை நோக்கி வசைமாரி பொழிகிறான் சாபங்களாக
இவ்வளவு பெரிய வானில்
நட்சத்திரங்களும் நிலவும்
பயனற்று போகின்றன
ஒரு சிறிய கணத்தில்
சுவரில் மேயும் பல்லிக்கு
பூச்சிகள் நல்ல இரையாவதால்
நீடுழி வாழிய இரவே
என்கிறது அது
வெளிச்சத்தை வெறுத்து
உயிர் வாழும் வெளவாலும்
சிறப்பு உற்சவத்தில்
வீட்டுக்குள் சுதந்திரமாக
வந்து போகிறது
நீடுழி வாழிய நீ இரவே
பேச்சில் வெளிச்சத்தை கொண்டுவர
முடியாத மனிதர்களின் முகங்கள் தான்
தொங்கிப் போகின்றன
வழக்கமான சுபாவாத்தில்
குற்றச்சாட்டுகள்
நீண்டு கொண்டே போகின்றன
உலகின் கடைசிக் கோடி வரை
இருளின் குழந்தைகளே
உங்களுக்கு என்ன கேடு
ஆதி மனிதனின் வாரிசுகள் தானே நீங்கள் ?
இருள் வீட்டில் ஒளி
ஒரு தற்காலிக பயணி தானே
என்று யார் சொன்னது
யோசி
அந்த வழியிலேயே
வனவிலங்குகள்
வீட்டுக்குள் நுழைகின்றன
சுவர்களில் பூதாகரமாக தோன்றும் உருவங்கள்
மனிதர்களை மலைக்க வைக்கின்றன
என்ன சொல்லி என்ன செய்ய ?
தேடிய பொருள் கடைசி வரை
கிடைக்கவேயில்லையென்று
அழுது கொண்டிருக்கிறான்
சிறுவன்
ஒரு குண்டூசிக்கு நிகரில்லாத
வாழ்வு இது
அவ்வளவு தான்
**********************************************
3. எழுத்து
உருகவைக்கும் எழுத்து
ஒரு கவிதையாகிறது
அதன் செல்கள் முழுவதும்
நீ தான் நிரம்பிக் கொண்டிருக்கிறாய்
பற்களை கிட்டிக்க வைக்கும்
பொருளாதாரச்சுமையை மீறி
அது நம்மை புன்னகைக்க வைக்கிறது
சாதி நகம் கொண்டு
இரத்தம் வரக் கீறும்
இந்த சமூகத்தின் வன்முறையிலிருந்து
சற்று நேரம் அது நம்மை
பாதுகாக்கிறது
நான் ராஜ குமாரனாகிறேன்
நீ யுவராணி
மலர்கள் அட்சதையாக தூவப்படும்
மாடவீதிகளில் பவனி வருகிறது
நமது தேர்
சட்டென்று
இந்த கற்பனை வேண்டாமென்று
சொல்கிறது நம் இதயம்
நாம் அதன் பேச்சை கேட்கிறோம்
நான் உனக்காக
புதியதொரு வானத்தை திறக்கிறேன்
இப்போது
நாம் இருவரும் பறவைகள்
பறக்க பறக்க பரவசம்
எட்டாத தொலைவினில்
எண்ணித் தொலையாத சுகம்
விழிகளை மூடிக் கொண்டு
இப்படியே சிறகடிப்பை நிறுத்திவிட்டால்
நாம் தான் மிதக்கும் சொர்க்கம் ஆவோம்
புளித்த கூழுக்கு
உரித்த வெங்காயம்போல்
அத்தனை சுவையாக இருக்கிறது
இந்த நிமிடம்
குறிப்பாக இன்று மாதத்தின் முதல் தேதி
இங்கே வீட்டு வாடகை கேட்பதற்கும்
ஆள் வரப்போவதில்லை
என்று நினைக்கும் போது
பேசாமல் இங்கே இந்தக்கவிதையிலே
வாழ்ந்து விடலாமென்று
சத்தியமாக தோன்றுகிறது
நம் இருவருக்கும்
**********************************************
4. வாழ்க்கை
இந்த பொன்னொளிர் மாலையில்
இருளை ஏந்தி வரும் காகத்தின் சிறகுகள் அற்புதமானவை
ஒரு மழைத்துளி பயணி போல
ஆதி அந்தமாய் தரையிறங்கும் காலம் அத்தனை தெய்வீகமாகிறது
ஒரு முழு வெண்புறா
முகத்துக் கருகில் வந்து உரசும் போது
எதிர்பாரா சந்திப்பு
நம் இருப்பை புரட்டிபோட்டு
விட்டு போகிறது
காதுக்கும் மேலே
கேசத்தை கோதும்
ஒரு கரம்
அந்த மோதிரவிரலைப் பற்றிய படி
தலைகுப்புற பாய்கிறது
ஒரு பயணியின் வாழ்க்கை
**********************************************
5. ஒரு குடிகாரனின் நிழலின் வாக்குமூலம்
வழக்கமான மொட்டை மாடி
மாலை நடை பயிற்சியின் போது
உடன் வரும் நிழல் தான்
கோக்கு மாக்காக
மொட்டை மாடி
கைப் பிடிச் சுவர்களில்
மோதி மோதி தன்னை
சிதைத்துக் கொண்டிருந்தது
“ஒரு நாய்க்குட்டி போல
என் பின்னால் வர வேண்டியதுதானே
ஏன் இப்படி போதை போட்ட வன் போல
தள்ளாடிக் கொண்டிருக்கிறாய் ? ”
என்று கேட்டேன்
” நிஜமானவன் என்ற ஆணவத்தில் கதைக்கிறாயா ?
நிழலாக இருப்பதின் சிரமம்
என்னவென்று தெரிந்தால்
இப்படி பேசமாட்டாய் ”
நிழலாய் இருப்பதின் சிரமம் என்ன ?
வெறும் அசைவு தானே நீ
சொந்தமாக என்ன செய்யப் போகிறாய் ?
“தார்ச்சாலையில்
நேரங் காலம் பாராமல்
ஓடி ஓடி மழுங்கி போன
கார் டயரைப் போல
மழுங்கிப் போன
எங்கள் வாழ்க்கை பற்றி
என்ன அறிவாய் நீ ? ”
சதா காலமும் கை கட்டி
வாய் பொத்தி
ஊமையாக சுயமழிந்து
நீ போகும் பாதையெல்லாம்
ஒரு அடிமை போல உடன் வந்து
கார் சக்கரத்தில் நசுங்கி
முட்களில் கீறி
நீ காரி உமிழும் போது
முகத்தில் வாங்கி
அப்பப்பா
இவ்வளவு ஏன்
நீ உன் காதலியை
முத்தமிட
நானும் என் நிழல் காதலியை
முத்தமிடும் முன்
சட்டென்று நீ உதடுகளை
எடுத்துக் கொள்ள
அல்லது உன் காதலி
பின் நகர
கட்டாந் தரையில் மோதி
என் முகம்
மீன் செதிலைப் போல சிதைந்து
அப்பப்பா நம்பர் 2 வாக இருப்பதின் கஷ்டம் என்னவென்று தெரியுமா உனக்கு ?
வேண்டுமானல் குடிகாரனின் நிழலாக
நீ ஒரே ஓர் நாள் இருந்து பார்
அப்போத புரியும் உனக்கு நிழலாய் இருப்பதின் சிரமம், ”
**********************************************
📚 எழுதியவர் :
✍🏻 தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

