தங்கேஸ் எழுதிய ஐந்து புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

*****************************************************************

1

படபடக்கும் வெள்ளை தாள்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்கு
கொள்ளை அழகு

விரல் தீண்டும் இந்தச் சிறு கணத்திற்காகவா
இத்தனைக் காலங்கள் காத்திருந்தாய்?

ஆனாலும் உன்னை ஆதி அந்தமாய்
தழுவும் போது நான் சொல்வேன் நின்னினும் என் தவம் பெரிதே கந்தர்வா!

கல்லாய் சமைந்திருந்தவளை
உயிர்ப்பித்தது
ஒரு மாசற்ற சுவாசம் எனில்
அந்த ஒரே ஒரு மாசற்ற சுவாசத்திற்காக
உன் பெயரைச் சொல்லிச் சொல்லியே
கல்லாய் சமைந்தவள் நான்

*****************************************************************

2.வழி தப்பிய நாரை

இந்த இரவில் எந்த நாரை
வழிதப்பி அலைகிறதோ
அது எனக்கு சிநேகிதமாகிறது

அதன் வெது வெதுப்பான கூட்டில்
இப்போது குளிர் பரவ ஆரம்பித்திருக்கும்

அந்தப் பிரத்தியேகமான கிளை
சிவந்த ஜவ்வுக் கால்களுக்கு
இப்போது எங்கு தவம் திடக்கும்

உயிர்ப்பைக் காணாத பொழுதுகள்
அதன் இலைகளின் மீது
பனித்துளிகளாகி
முயலின் கண்களைப் போல
திரு திருவென
விழித்துக் கொண்டிருக்க கூடும்

இருப்பின் துயரம்
பல்கிப் பெருக

இந்த இரவு என்னை
இப்படி எத்தனை எத்தனை
வழிதப்பிய நாரைகளின்
சிநேகிதனாக்கப் போகிறதோ
யார் கண்டது

*****************************************************************

3

என் இனிய கொள்ளிவாய் பிசாசே !
இரவில்பூதகணங்களை ஏவி விட்டு
ஏன் என் தலையை ஒன்றுக்குப் பத்தாக
உருட்டுகிறாய் ?

நானோ இரவுகளைக் கிழித்து
கருப்பு ஆடையாக உடுத்திக்கொண்டு
நினைவுக்கிழிசல்களின் வழியே
உன் முகம் கண்டு திகைக்கிறேன்
கண்ணாமூச்சிக்கு வருகிறாயா
ஒளிந்து கொள்கிறேன்
பேயைப்போல் பிரகாசிக்கும் உன் கண்களாலும்
என்னை கண்டுபிடிக்க இயலாது
ஏனென்றால் இன்று
நான் ஒளிந்து கொள்ளப்போவது
குகை இருளைப்போல அடர்ந்திருக்கும்
உனக்குள் தானே

*****************************************************************

4. அற்றைத் திங்கள்

அற்றைத்திங்கள் இன்னும்
உடையாத பனிக்குடமாய்
மேலே மிதந்து கொண்டிருக்க
அதிலிருந்து கிளைவிட்டிறங்குகின்றன
கோடி கோடி தொப்புள் கொடிகள்

தொப்புள் கொடிகளின் நீளத்தில்
அசைந்தாடிக்கொண்டிருக்கும் சிசுக்களில்
ஒன்று
நீயும்
நானும்

இந்த ஏகாந்த இரவில்
என் சுவாசத்தை மூன்று முறை
உள்ளங்கையில் ஊதிப்பார்த்தேன்
அதிலிருந்து விரிந்தது
அச்சுஅசலாய் நிலவின் படம்

அட கடவுளே இன்றாவது
என்னை கடைத்தேற்ற மாட்டாயா?

*****************************************************************

5.சந்திப்பு

இது போன்றதொரு சாதாரண நாள் தான்
எத்தனை மகத்தானதாக மாறிவிடுகிறது
ஒரு சந்திப்பில் ?

கறிக்கடை சந்தின் முக்கில் இருக்கும பிள்ளையார்
தன் துதிக்கையை அசைத்தபடியே
அன்போடு உன்னை அழைக்கிறார்

தெருவில் செல்லும் அழகிய யுவதிகள்
உனக்கென்று ஒரு சிறிய புன்னகையை
உதட்டோரம் கசியவிட்டு செல்கிறார்கள்

கடன்காரனோ உன்னை காணாதது போல
முகத்தை வேறுபக்கம் திருப்பிய படி
இருசக்கர வாகனத்தில் விரைந்து செல்கிறான்

பார்த்ததும்
வள்ளென்று விழவேண்டிய
தெரு நாய் நட்பாக
வாலை ஆட்டியபடி வருகிறது

பழைய வாசல் கோலத்தின் மீது
மஞ்சள் அரளிப் பூக்கள்
புள்ளிகளாக விழுந்து கிடக்கின்றன

என்றுமில்லாத வழக்கமாக ஓடி வந்து
உன் கழுத்தை கட்டிக்கொள்கிறார்கள்
குழந்தைகள்
இல்லாள் ஒரு புன்னகையோடு
உன்னிடம் தேநீர் கோப்பையை தருகிறாள்

எல்லாவற்றிற்கும் ஒரு சந்திப்பு தான்
காரணம் என்றால்

அது யாரென்று கேட்டால்
மட்டும்
கடைசி வரையிலும்
நீ
தெரியாது என்றே சொல்வாய்
தெரிந்தால் தானே சொல்வதற்கு

*****************************************************************

📚 எழுதியவர் : 

✍🏻 தங்கேஸ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *