Flower trees standing in the imaginary forest shortstory by Kumaraguru கற்பனை வனத்தில் நிற்கும் பூமரங்கள் சிறுகதை - குமரகுரு

கற்பனை வனத்தில் நிற்கும் பூமரங்கள் சிறுகதை – குமரகுரு
நடக்க துவங்கியிருக்கிறேன்.பெரிய வனம் முழுதும் இலைகளின் இரைச்சல்.

இந்த மண் சுமந்திருத்கும் அத்தனை இலைகளும் அதன் ஆடை அல்ல கவசம், மண்ணின் கீழ் மறைந்திருக்கும் பூமியின் அத்தனை இரகசியங்களையும் மறைக்கின்றன இவ்விலைகள்.
சப்பாத்துகள் அணியாத என் கால்களை உரசும் இலைகளின் ஈரம் ஒரு ஈர கூந்தலின் ஸ்பரிசத்தை உண்ர்த்தி சிலுப்புகிறது.

மெல்லிய காற்றில் மெல்ல மேலெழும்பும் சருகுகள் பார்த்து மேலே வான் நோக்குகிறேன்,மரக்கிளைகளின் நடுவே சிறு சிறு செம்மறி ஆட்டு குட்டிகளாக நகர்ந்து கொண்டிருகிறது மேகம். தன்னை பசுமையாக காட்டி கொள்வதற்காக காய்ந்த இலைகளை உதிர்க்குமா மரங்கள்?

இடைவெளியற்ற பாதை, பாதை என்பது எப்போதும் எங்கும் இருப்பதில்லை! வழிதான் நமக்கு தெரியும் பாதைகளோ மறைந்திருக்கும். நாம் செல்ல செல்ல இரவிலிருந்து பகலுக்குள் செல்வதைப் போல பாதைகள் உருவாகி கொண்டே போகும். பாதைகளில் நடப்பவனுக்கு எப்போதுமே போகுமிடமில்லை.

அண்ணாந்து பார்க்கிறேன், வேரூன்றிய மரங்கள் அத்தனையும் மேலோங்கி நிற்க, மரங்களுக்கும் வானுக்கும் நடுவில் ஒரு மாபெரும் வெளி. அந்த வெளியெங்கும் நிறைந்திருக்கும் வெறுமையை நிரப்ப ஏதுமில்லை. மரங்களும் கூட அந்த வெளிக்குள் பூக்களை உதிர்க்காமல், தரை நோக்கி உதிர்க்கினறன.

சிறுபிள்ளைதனம்தான், ஆனால ஏனோ அந்த பாம்பை கண்டதும் குந்தி கன்னத்தில் கை வைத்து அதன் கண்களையே பார்த்து கொண்டிருக்கிறேன். அதன் கண்களில் எதற்காக இத்தனை பயம், ஏன் நான் துளியளவும் அச்சம் கொள்ளவில்லை என்று ஆராய மனம் ஒப்பவில்லை. என் கைகளில் இருந்த எந்த உணவையும் உண்ணாது அந்த பாம்பு, என்னை வேண்டுமானால்… ஆனால், நான் அவ்வளவு நல்லவனில்லை, இருப்பினும் அதன் தோல் செதில்களில் மின்னும் ஒளியை நான் எங்கும் கண்டதில்லை. பாம்பின் கண்களை உற்று நோக்காத கவிஞனே பெண் கண்களை கயல் என்பான். நீயென்னை தீண்டாதே நான் உன்னை தீண்டேன்!

சர்ர்ர்ரென என தலை மீதொரு சப்தம்! குந்தியபடி அண்ணாந்தால் பருந்து. பருந்து இவ்வளவு கீழே வனத்துக்குள் மட்டுமே பறக்குமோ? அல்லததன் கண்களில் நானொரு இரையோ. கிளைகளில் அமராது ஒரு சுற்று முடித்து மீண்டும் என் தலையில் அதன் கால் பட பறந்தது. நான் நகர்ந்து நடக்க துவங்கினேன். அடுத்த சுற்றில் பாம்பை தன் கால்களில் சுமந்து பறந்ததும்தான் அது என்னை விரட்டியது புரிந்தது…

கண நேரத்தில் போகின்ற உயிரை, தினம் தினம் ஊதி எரிய விட்டபடி அலைவதென்பது எதற்கோ தெரியவில்லை? பிறப்பொன்றும் இறப்பொன்றும் நிகழாமலே இருந்தால் இந்த உலகெங்கும் பூமிக்கும் வானுக்கும் இடையில் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் மட்டுமே இருக்குமென்று நினைத்து கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன்…

ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு பழம் சுமந்திருக்கிறது. கோடிக்கணக்கான பூக்களில் உதிர்ந்தது போக பழமாகும் சில.

வியப்பதற்கென்று ஒன்று உண்டென்றால் அது பழங்களிலிருந்து முளைக்கப் போகும் மரங்களை சுமந்திருக்கும் கர்ப்ப பைகளான விதைகளை வியப்பேன்…

விதைகள் மிக நுண்ணிய படைப்புகள் அன்றோ. மாயாஜாலங்கள் அன்றோ. விந்தைகள் அன்றோ. முட்டைகள் அன்றோ. இரத்தமும் சதையுமாய் திரியும் அத்தனை நகரும் உயிர்களுக்கும் உணவாகும் மரங்களையும் செடிகளையும் சுமந்திருக்கும் அவற்றின் விஞ்ஞான புரிதல்கள் முழுமையடையும், ஆனால் ஆறறிவு கோண்டவர்களால் உருவாக்க முடியாதது விதைகளின் தொழில்நுட்பம் அல்லவா?

இதோ என் காலருகில் துளிர்த்து நிற்கிறதொரு கிளி பச்சை நிற தாவரம். எனக்கு அதைப் பற்றி தெரிய வேண்டியதில்லை. அதற்கும் என்னலப்பற்றி தெரியாது. அதன் பச்சை பிள்ளை சிர்ப்பை மட்டும்தான் நான் இரசிக்கிறேன். என்னால் அதற்கொரு ஆபத்துமில்லை, நான் பார்க்காத நேரம் ஒரு மான் அதை கொறித்துண்ண கூடும். நான் யார் அதை தடுக்க. ஆனால் நான் அதற்கும் தீங்கிழைக்க மாட்டேன்.

முழுதும் மழையில் நனந்து நிற்கிறதென் வனம். அதன் இலைகளெல்லாம் மழையுதிர்க்க என்னை கவ்வி இழுத்து செல்கிறது அதன் குடல்களுக்குள் நழுவியபடி என்னை நானே அர்பணித்து கொண்டிருக்கிறேன்…

முடிவில்லா எல்லாமும் எங்கேயும் நிறைந்திருக்கும். ஆம்! நான் முடிந்தால் என்னைப் போல் இன்னொருவன். எனக்கான அந்த இன்னொருவனை நான் உருவாக்கிய பின்னர் நான் உரமாவேன்.

இத்தனை ஆண்டுகளும் இங்கேயே நின்றபடி பறவைகளின் உறைவிடமாக வாழும் இத்தனை மரங்களையும் வாரி சுருட்டி என் காருக்குள் போட்டு ஊர் ஊராய் சுற்றி காட்ட வேண்டும். நல்லது கெட்டது சொல்லி தப்பிக்கும் உத்திகளை கற்பித்து மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விடும் போது அவை ஓட கற்றிருக்க வேண்டும்…

இயலாததென்றும் நிறைய உண்டல்லவா…
இயலாமை என்றும் ஒன்றுண்டல்லவா…

வேண்டாம்! இதோடு முடித்து கொள்வோம் என்று முடியும் உரையாடல்களை நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால், உரையாடலே செய்யாத வனத்தின் உரையாடலை புரிந்து கொள்ள முனைகிறேன்.

அது கூற விழைவதெல்லாம், என்னிடம் வாருங்கள் வேண்டுவதுப் பெற்று கொள்ளுங்கள், கேளுங்கள் தரப்படும் என்பதே அன்றி வேறொன்றுமேயில்லை…

என்னிடம் இந்த வனத்திற்களிக்க இரு கைகள் நிறைய நீருண்டு… இந்த வனமோ முழுவதும் கைகளாலானது… வானளாவிய கைகள் அவை!

வனத்தில் மரங்கள் மடிந்து உரமாகின்றன. வனத்தின் உயிர்கள் மடிந்து உணவாகின்றன. வனமோ தேவதையைப் போல, அனைத்து உயிர்களுக்கும் ஒன்றான ஆசுவாசத்தை வழங்கி கொண்டேயிருக்கிறது. வலிகளைப் பற்றிய புரிதலில்லாத வாழ்வை வழங்கி ஆசிர்வதிக்கிறது. பல நேரங்களில் இந்த ஆறாம் அறிவுதான் எவ்வளவு பெரிய பாரம்?

கிணறுகள் இல்லாத வனத்துக்குள் தானாக உருவாகி ஓடும் ஓடைகளும் நதிகளும் எப்படி உருவாகின? இத்தனை காடுகளில் உள்ள அத்தனை உயிர்களுக்கும் போதுமான நீரும் உணவும்தான் எவ்வளவு திட்டமிடுதலுக்கு பின் உருவாக்கப்பட்டருக்கும்?

அவ்வளவு எளிதாக இதை கடந்து விட முடிவதில்லை. இதோ இங்கே இப்போது ஒரு கூடு கீழே விழுந்து கிடக்கிறது. அதில் இருக்கும் முட்டைகளோ தெரித்திருக்கின்றன. ஆனால் பறவை இங்கில்லை. அது சிறிதளவும் இதற்கென வருந்தாது, அடுத்த ஈட்டில் முட்டைகளை எப்போதும் போல் அடை காக்கும்.

இலைகளை கொறித்து கொண்டிருக்கும் புழுக்களும், இதோ இங்கே முட்டைகளுக்குள் நகர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளும், சற்றே தள்ளி கிடக்கும் விலங்கின் சடலத்துக்குள் ஊடுருவி கொண்டிருக்கும் புழுக்களுக்குமென ஒவ்வொன்றிற்கும் பிரத்தியேகமான வாழ்க்கை.

யாரும் யாருக்கும் ஆறுதலோ அல்லது போதனையோ சொல்வதில்லை. நான் செத்தால் உணக்குணவு நீ செத்தால் எனக்குணவு என்று வாழ்கிற வாழ்வு எத்தனை உண்ணதமானது.

சிறு முள் ஒன்று என் பாதத்தில் தைக்கிறது. முட்களாலான கவசம் கொண்ட மரங்களும் கூட ஒரு போதும் அவற்றால் யாரையும் தாக்காதது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!!

வனத்தின் பேரழகுக்குள் மயங்கியிருத்தல் தவம். ஆயினும் வனத்தின் பேரமைதியை குலைத்தல் நன்றிகெட்டத்தனம்.

ஓடையிலிருந்தொரு மொடக்கு நீரை அருந்திய பின் ஒரு பாறையில் அமர்ந்தபடி பார்க்கிறேன். தூரத்து மலையருகில் கதிரவன் மெல்ல மறைகிறான். பேரிரைச்சலுடன் கூடு திரும்பி கொண்டிருக்கின்றன பறவைகள்.

அவற்றின் கூடு பத்திரமாய் இருக்க வேண்டும்…!!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Show 1 Comment

1 Comment

  1. கவிதாபழனிவேல்

    அருமை தோழர் ஒவ்வொரு வரிகளும் மனதை வருடிக் கொண்டு செல்கிறது வாழ்த்துகள்…💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *