“தொட்டதெல்லாம் பொன்னாகும்” வரம் கேட்ட மிதாஸ் – பண்டைய கிரேக்கத்தின் நாட்டுப்புறக் கதை
கிரேக்க கடவுள் டையோனிசஸ், பழரசத்திற்கும், வேடிக்கை விளையாட்டிற்கும் அதிபதி. கடவுள் டையோனிசஸ், எப்போதும் தேவதைகள் புடை சூழ இருப்பார். கூடவே மனித முகமும், மிருக உடம்பும் கொண்ட சதயர்கள், அவர் சென்றவிடமெல்லாம் செல்வர். டையோனிசஸ் தன்னுடைய சிறுத்தைகள் பூட்டிய தங்க ரதத்தில் பயணம் செய்வார். ரதம் நிற்குமிடத்தில், டையோனிசஸ் இளைப்பாற, சதயர்கள் குழல் வாசிப்பார்கள். இசைக்கேற்ப தேவதைகள் பாட்டுப் பாடி, நடனமாடி கடவுளை மகிழ்விப்பார்கள்.
சிலனஸ் என்பவர் மிகவும் வயதான சதயர். டையோனிசஸ் விருப்பத்திற்குப் பாத்திரமான சிலனஸ், அவருக்குக் கல்வி கற்பிக்கும் ஆசானாகவும் இருந்திருக்கிறார். கழுதையின் காதும், வாலும் கொண்ட சிலனஸ் மீது மதிப்பு வைத்திருக்கும் டையோனிசஸ், தான் செல்லுமிடமெல்லாம் அவரைக் கூட்டிச் செல்வார். கோடையில் ஒரு நாள் டையோனிசஸ், திராட்சைத் தோட்டம் ஒன்றிற்குத் தன்னுடைய பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார்.
கழுதையிலமர்ந்து சவாரி செய்து கொண்டிருந்த சிலனஸ், ஆழ்ந்த தூக்கத்தில், வரும் வழியிலிருந்த பள்ளத்தில், கழுதையிலிருந்து விழுந்து விட்டார். மது அருந்தியும், பாட்டு, நடனம் என்ற கேளிக்கையிலிருந்த தேவதைகள், மற்ற சதயர்கள், சிலனஸ் தவறி விழுந்ததையும், தங்களுடன் வராததையும் கவனிக்கவில்லை. சிலனஸ் ஏறி வந்த கழுதை, தன்னுடைய எஜமானன் இல்லாமல் தனியே வந்து கொண்டிருந்ததைப் பார்த்த பின்னர் டையோனிசஸ் மற்றும் பரிவாரங்கள், சிலனஸ் தங்களுடன் வரவில்லை என்பதை உணர்ந்தனர்.
மாலையில், தாங்கள் வேலை செய்து கொண்டிருந்த வயலிலிருந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயிகள், முதியவர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து கிடப்பதைப் பார்த்து, அவரைப் பள்ளத்திலிருந்து தூக்கி விட்டுக் கூட்டிச் சென்றனர். போகும் வழியில் எல்லாம், மதுவின் மயக்கத்தில், பள்ளத்தில் விழுந்தீர்கள் என்று கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர். “என்னுடைய இளம் வயதில் நான் கடவுளுக்கே ஆசானாக இருந்தவன்” என்று அவர் சொன்னதை நம்பாமல், மது மயக்கத்தில் உளறுவதாக நினைத்தனர். இருந்தாலும், சிலனஸை தங்களுடைய அரசர் மிதாஸ் முன்னிலையில் கூட்டிச் சென்றனர்.
சிலனஸ் பற்றி முன்பே அறிந்திருந்த மிதாஸ், அவரை அரசு மரியாதையுடன் வரவேற்று, அரண்மனையில் நல்ல உபசாரங்கள் அளித்துப் பார்த்துக் கொண்டார். பத்து நாட்கள் தங்கியிருந்த சிலனஸ், அரசருக்கும், மற்ற பிரபுக்களுக்கும் கதை மற்றும் அறிவுரைகள் சொல்லி, மகிழ்ச்சியாக தங்கியிருந்தார். இதனிடையில், டையோனிசஸ் எங்கிருக்கிறார் என்பதைத் தன்னுடைய காவலர்களை அறிந்து வரச் சொல்லி அனுப்பினார் மிதாஸ். டிமோலஸ் மலையடிவாரத்தில், டையோனிசஸ் தங்கியிருப்பதைக் கேள்வியுற்ற மிதாஸ், சிலனஸை அங்கு கூட்டிச் சென்றார்.
தன்னுடைய ஆசானும், நண்பனுமான சிலனஸைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த டையோனிசஸ், மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தன்னுடைய ஆசானை கண்டுபிடித்து, அவருக்கு உபசாரம் செய்த மிதாஸ், எந்த வரம் கேட்டாலும் கொடுப்பதாகக் கூறினார்.
அரசர் மிதாஸ் செல்வம் நிறைய வைத்திருந்தார். ஆனாலும், அவருக்கு தங்கம் மேல் ஆசை அதிகம். அதனால், “நான் எதைத் தொட்டாலும், அது தங்கமாக மாறும் வரம் வேண்டும்” என்று கேட்டார். இந்த வரம் மிகவும் ஆபத்தானது, இதனால் மிதாஸ் பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்று உணர்ந்த டையோனிசஸ், இந்த வரம் உங்களுக்கு வேண்டாம். வேறு எதாவது கேளுங்கள் என்று அறிவுரை செய்தார். ஆனால், விடாப்படியாக “தொட்டதெல்லாம் பொன்னாகும்” வரம் தான் வேண்டும் என்று மிதாஸ் ஆசைப்பட, அந்த வரத்தை அளித்தார் டையோனிசஸ்.
உண்மையாகவே இந்த வரம் வேலை செய்யுமா என்ற சந்தேகம் மிதாஸ் மனதில் தோன்றியது. ஆகவே, அரண்மனைக்குத் திரும்பும் வழியில் மரம், செடிகளைத் தொட்டு, அவை தங்கமாக மின்னுவதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார் மிதாஸ். கடவுள் அளித்த இந்த வரத்தினால், இன்னும் செல்வந்தனாக மாறுவேன் என்ற மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினார் மிதாஸ். அரண்மனைத் தோட்டத்திலிருந்த மரத்தின் இலையைத் தொட அது தங்கமாகியது. கீழே விழுந்திருந்த கூழாங்கல்லை கையில் எடுத்தவுடனே அது தங்கக்கல்லாக மாறியது. ரோஜா மலரைத் தொட்டவுடன் தங்க ரோஜாவாக உருமாறியது. மிதாஸ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அரண்மனையின் சுவரில் கை வைத்தவுடன் சுவர் தங்கச்சுவராக மாறியது.
அரண்மனைப் பணிப்பெண், அரசர் கையலம்புவதற்காக வெள்ளிப் பாத்திரத்தில் நறுமணம் நிறைந்த தண்ணீர் கொண்டு வந்தாள். அந்தத் தண்ணீரில் கை வைத்தவுடன் தண்ணீர் பொன்னாக மாறியது. அரசருக்கு சிறப்பான விருந்து தயாரித்து வைத்திருந்தார்கள்.
ரொட்டி, இறைச்சி, ஆப்பிள், திராட்சை என்று பழ வகைகள் விருந்தில் இருந்தன. ஆனால், சாப்பிடுவதற்கு எதைக் கையிலெடுத்தாலும் அது தங்கமாக மாறியது. அதனைக் கடித்து திங்க முடியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. மிதாஸ் மனதில் பயம் தோன்ற ஆரம்பித்தது. தாகம் தீர்க்க பழரசம் கொண்டு வரச் சொன்னார். அதுவும் அவர் கையில் தங்கமாக மாறியது. பணியாளர்களை ரொட்டியைக் கையில் கொடுக்காமல், அவருடைய வாயில் ஊட்டச் சொன்னார். ஆனால், ரொட்டி, வாயில் பட்டவுடன் தங்கமாக மாறியது.
உணவு, பழரசம் எதையும் அவரால் உண்ண முடியவில்லை. சாப்பிட முடியாவிட்டால், தண்ணீர், பழரசம் அருந்த முடியவில்லை என்றால், பசியும், தாகமும் தன்னுடைய உயிரை எடுத்துக் கொள்ளும் என்ற உண்மை அவருக்கு உரைத்தது.
இதனிடையில், மிதாஸின் மகள் மாரிகோல்ட், அரண்மனைத் தோட்டத்தில் ரோஜாப்பூ பறிக்கச் சென்றாள். மணம் வீசும் ரோஜாச் செடி மணம் வீசவில்லை. மென்மையான ரோஜா இதழ்கள், பறிக்க முடியாமல் கல் போல இருந்தன. கலவரமடைந்த மாரிகோல்ட், தந்தையிடம் ஆறுதல் தேடி ஓடினாள். மகளை ஆசையுடன் தொட்டு மடியிலமர்த்த மிதாஸ், மகளைத் தொட்டவுடன் அவள் தங்கச் சிலையாக மாறினாள்.
இப்போது தான், மிதாஸ் தன்னுடைய தவறை உணர்ந்தார். “இந்த வரம் வேண்டாம்” என்று கடவுள் எச்சரித்த போது அதனைப் புரிந்து கொள்ளாமல் தவறு செய்து விட்டோம் என்று வருந்தினார். வரம் என்று நினைத்துக் கேட்டது வரமல்ல, அது ஒரு சாபம் என்று உணர்ந்தார் மிதாஸ். “பேராசை பெரு நஷ்டம்” என்பதைப் புரிந்து கொண்ட அரசர் மிதாஸ், தனக்களித்த வரத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி டையோனிசஸை வேண்டிக் கொள்ள டிமோலஸ் மலையடிவாரத்திற்குச் சென்றார்.
தான் எச்சரிக்கை செய்தும், அதற்கு செவி சாய்க்காத மிதாஸ், சில நாட்கள் சிரமப்பட்டால் என்ன என்று நினைத்தார் டையோனிசஸ். ஆனால், உற்ற நண்பனைக் காப்பாற்றித் தன்னிடம் சேர்ப்பித்த மிதாஸூக்கு உதவி செய்வது தன்னுடைய கடமை என்று நினைத்த டையோனிசஸ், “மிதாஸ், டிமோலஸ் மலையடிவாரத்தில் பாக்டோலஸ் என்ற நதி ஓடுகிறது. அந்த நதியில் இறங்கி, மலையிலிருந்து வருகின்ற நீரூற்றில் முழுகி எழுந்தால், நான் கொடுத்த வரம் உன்னை விட்டு விலகும். உன்னுடைய மகளும் சுய உருவை அடைவாள்” என்றார்.
டையோனிசஸ் சொல்லியபடி டிமோலஸ் மலையடிவாரத்திற்குச் சென்று நதியில் இறங்கி, நீருற்றில் முங்கி எழுந்தார், மிதாஸ். என்ன ஆச்சரியம், முங்கி எழுந்தவுடன் அங்கு ஓடிக் கொண்டிருந்த நீர் தங்க நிறமாக மாறியது. ஆற்று நீரில் தங்கத் துகள்கள் மிதந்தன.
ஆனால், தன்னுடைய வரம் விலகி விட்டதா என்ற சந்தேகத்தில் கரை ஏறிய மிதாஸ் கண்ணில் கண்ட இலை, பூ, கற்கள் ஆகியவற்றைத் தொட்டார். அவை எதுவுமே தங்கமாக மாறவில்லை. பேராசையினால் பெருத்த ஆபத்தில் மாட்டிக் கொண்ட மிதாஸ் பழைய நிலையை அடைந்தார். இதனால், செல்வத்தின் மீது அவருக்கிருந்த ஆசை அவரை விட்டு விலகியது.
சிறுகதை எழுதியவர்:

சென்னை வசித்து வரும் இவர், பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது.
கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் – தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை, மங்கையர் மலர், கொலுசு, தீபம், கல்கி ஆன்லைன், பிரதிலிபி, சஹானா, புக்டே இணைய தளங்கள்.
பெற்ற பரிசுகளில் சில தினமலர், கலைமகள், நம் உரத்த சிந்தனை, இலக்கிய பீடம், துகள் ஜெர்மனி, “டாக்டர் அய்க்கண் நினைவு சிறுகதைப் போட்டி”, பிரதிலிபி கதை கட்டுரைப் போட்டிகள், சஹானா சிறுகதைப் போட்டி.
பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் ஐந்து.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.