(டைம்ஸ் ஆப் இந்தியாவில் 14.09.2020அன்று நாராயண் சேகர் அவர்கள் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் சற்று சுதந்திரமான மொழிபெயர்ப்பு.)
எல்ஐசி பங்கு விற்பனைக்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது.
- ஒழுங்குபடுத்துவது.
- மூலதனத் தேவை
- சிறு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு.
- வெளிப்படைத்தன்மை.
‘நாலு குளம் வெட்டினேன்.அதில் மூணு பாழ். ஒண்ணில தண்ணியே இல்ல’ என்பதுபோல இந்த நான்கு காரணங்களுமே உண்மைக்குப் புறம்பானவை. இந்த வாதங்களுக்குள் ஒளிந்திருப்பது அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே.
ஒழுங்கும் கட்டுப்பாடும்
சந்தையின் செல்லப்பிள்ளைகளாக இருந்த டிஹெச்எப்ஃஎல், ஐஎல்எப்ஃ&எஸ், ஆர்காம், ரிலையன்ஸ் டிபென்ஸ், எஸ்ஸார், எஸ் வங்கி போன்ற நிறுவனங்கள் அனாதைகளாக வீசியெறியப்பட்டு இலட்சக்கணக்கானவர்களின் சேமிப்பு மறைந்து போனபோது அரசு வாய் மூடி மவுனமாக இருந்ததே? இந்திய வங்கிகளில் எட்டு இலட்சம் கோடி வராக்கடன்களாகப் போனதற்கு ‘உன் குத்தமா என் குத்தமா?’ என்று ப.சிதம்பரமும் நிர்மலா சீத்தாராமனு லாவணிக் கச்சேரி முடிவில்லாமல் நடத்துகிறார்களே?’ (ஜிஎஸ்டி வரி குறைவிற்கு மட்டும் ‘கணக்கினிலே கடவுள் செய்த குற்றமடி’ என்று நிதியமைச்சர் பாடிவிடுகிறார்.) இந்த வங்கிகளெல்லாம் சந்தையில் பட்டியிலிடப்பட்டதுதானே?
புரோமோட்டர்கள் தொடங்கிய நிறுவனம் அவர்களின் செயல்களினாலே அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படுவதை ‘நெட்டை மரங்களென நின்று புலம்பினார்’ என்ற பாரதியின் வரிகள் போல செபி(SEBI) கைகளைப் பிசைந்துகொண்டு பார்த்துக் கொண்டுதானிருந்தது.. இந்தக் கலவரங்களுக்கு மத்தியில் புரோமோட்டர்கள் தொழில் தொடங்குவதற்கு முன்னிருந்ததை விட எப்படி செல்வம் கொழிப்பவர்களாகிறார்கள்? ‘நானும் நீயும் வாழ்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே‘ என்ற கண்ணதாசனின் பாடல்தான் மனதிற்கு வருகிறது.
மூலதனத் தேவை
ஒரு திரைப்படத்தில் வடிவேலுவிடம் ‘யாருக்கு ஆபத்து?’ என்று கேட்கும்போது ‘யாருக்கோ’ என்று பதில் சொல்வார். அதுபோல மூலதனத் தேவை யாருக்கு? எல்ஐசிக்கா அல்லது சந்தைக்கா? ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடியளவில் வருமானமும் மொத்த சொத்து மதிப்பு முப்பது லட்சம் கோடிக்கு மேலும் இருக்கும் எல்ஐசிக்கா மூலதன தட்டுப்பாடு? அரசின் கடன் தேவைகளில் 25% தொகையையே தரும் எல்ஐசிக்கு மூலதன தேவை என்று சொன்னால் ‘சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னப் பிள்ளையும் சொல்லும்’ என்றுதான் பாடவேண்டும்.
சிறு முதலீட்டாளர்களுக்கு நன்மையா?
மொத்த மக்கள் தொகையில் 2%பேரே சந்தையில் பங்குகளை வாங்கும்போது எல்ஐசி போன்ற மாபெரும் நிறுவனத்தை அவர்களுக்காக திறப்பது என்பது மனோன்மணியம் நாடகத்தில் சுந்தரம் பிள்ளை சொல்வது போல ‘புலி வேட்டைக்கு பொருந்தும் தவிலடி எலி வேட்டைக்கு பொருந்துமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது. அல்லது ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தில் அரியணையில் மேக்பத் அமர்ந்திருப்பது ‘குள்ளன் ஒருவன் அரக்கனின் சட்டையை அணிந்திருப்பது போல’ சிறிய கூட்டம் ஒன்று 135கோடி மக்களின் சொத்தான எல்ஐசியின் மதிப்பை அபகரிப்பதுதான் இதன் நோக்கமாகும்.
வெளிப்படைத் தன்மை வேண்டும்
உண்மைதான். ஆனால் அதைத் தடுப்பது அரசுதான் என்று விமர்சகர்கள் கூறுகிறார்களே?. எல்ஐசியின் முதலீட்டுக் கொள்கையில் சுயேச்சைத் தன்மையும் வெளிப்படைத் தன்மையும் வேண்டும் என்கிறார்கள் அவர்கள். இப்பொழுது வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று நிதி அமைச்சரே சொல்கிறார். ‘அமைச்சரே நீங்கள்தான் அதை வழங்கும் இடத்தில் இருக்கிறீர்கள்.’ என்று நினைவுபடுத்த வேண்டும் போல. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி எங்கே போவது என்று தெரியாமல் தடுமாறும்போது ‘அரசே அது நீங்கள் வந்தவழி’ என்று சொல்வதுபோல யாராவது அம்மையாரிடம் சொல்லவேண்டும். மற்றபடி எல்ஐசியின் செயல்பாடுகள் வெளிப்படையாகவே உள்ளன.
காப்பீட்டு ஒழுங்காற்று வாரியம், பாராளுமன்றம் ஆகியவற்றிற்கு எல்ஐசியின் காலாண்டு,அரையாண்டு ஆண்டறிக்கை சமர்பிக்கப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம்.
இதற்கு மேலாக செய்தி ஊடகங்கள் எல்ஐசி உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக அதன் முதலீடுகள், வராக்கடன்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. எல்ஐசியின் வராகடன் 0.4%தான் என்றும் அவை முழுமையாக ஈடுகட்டப்பட்டுள்ளன என்று பல முறை சொல்லியும் எல்ஐசி நிர்வாகத்தை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கிறார்கள். ‘பழுத்த மரத்தில்தானே கல்லடி விழும்?’
கண்ணை மூடிக்கொள்ளும் ஊடகங்கள்
ஆனால் பொதுவெளியில் கிடைக்க வேண்டிய நியாயமான பாராட்டுகள் எல்ஐசிக்கு கிடைக்கவேயில்லை. எல்ஐசி படைத்திருக்கின்ற சாதனைகளை வேறு ஏதாவது தனியார் நிறுவனம் செய்திருந்தால்,நிதித் துறை அதை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கும். அதன் தலைமை நிர்வாகி பிரதம மந்திரியின் வெளிநாட்டுப் பயணங்களில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பார். வெற்றிகொள்ள முடியாத இந்த சின்னத்தை,மக்களுக்கும் சமுதாயத்திற்கும் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் அது ஆற்றியிருக்கிற சேவையை மின்னணு மற்றும் செய்தி ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டியிருக்கும். அவர்களைப் பொறுத்தவரை அது ’குப்பையிலே கிடக்கும் மாணிக்கம்’ கோரிக்கையற்று கிடைக்கும் பலாப் பழம்’.
நல்லதோர் வீணை செய்தே
ஊழியர்கள், பாலிசிதாரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. உடனடியாக பாதிப்பு இருக்காது. உண்மைதான். ஆனால் வரம் கொடுத்த சிவன் தலை மேலேயே கை வைத்த பத்மாசுரன் போல அரசாங்கத்தின் நலனே பாதிக்கப்படும்.
இறுதியாக வைக்கப்படுகின்ற வாதம் சிறிய அளவு பங்கே விற்கப்படும் என்பது. எல்ஐசி என்பது அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் என்றென்றும் அரசாங்கத்திற்கு வருமானத்தை தரக்கூடியது. அதில் சிறிய ஓட்டைகூட விழக் கூடாது. வருங்கால சந்ததிகளுக்காக அது காப்பாற்றி வைக்கப்பட வேண்டும். அரசின் ‘ஆத்மநிர்பார்’ திட்டத்திற்கு எல்ஐசி ஒரு வலிமையான சாதனம். இனி வரும் எல்லா அரசாங்கத்தின் மணிமகுடத்திலும் ஒளி வீசும் ரத்தினமாக அது இருக்க வேண்டும்.
‘அலையிடாப் பிறவா அமிழ்து அது.
மலையிடாப் பிறவா மணி அது.’