ஒன்றிய அரசு அக் 2, 2021 அன்று வனப் பாதுகாப்புச் சட்டத்தில் (1980) கொண்டு வர இருக்கும் திருத்தங்களுக்கான முன் வரைவை வெளியிட்டுள்ளது. வழக்கம் போல் அரசமைப்புச் சட்ட அட்டவணையில் உள்ள வெவ்வேறு மாநில மொழிகளில் வரைவு அறிக்கை தரப்படவில்லை. கருத்துக் கேட்புக்கான வரைவு அறிக்கையை இணைய வழியில் வெளியிட்டுள்ளது .குறைந்தபட்ச நாட்களே கருத்துக்கேட்பு என்ற அடிப்படையில் ஒன்றிய அரசு 15 நாட்கள் அளித்திருந்தது. அது பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பால் தற்போது ஒரு மாத காலம் என்ற அடிப்படையில் நவம்பர் ஒன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்த சட்ட முன்வரைவு குறித்துக் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்டு அனுப்பும் படி கோரியுள்ளது.
1. Addl. Chief Secretary (Forest)/Principal Secretary (Forests), All States/UTs
2. PCCF, All States/UTs
3. Regional Officers, All IROs, MoEFCC
4. All concerned
மற்றொன்று இந்த சட்டத் திருத்த முன்வரைவு அக்.2 காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்.2 முதல் ஒருவாரம் இந்தியாவில் வன விலங்கு வார விழா படு குஷியாய் கொண்டாடப்படும் பொழுது இந்தத் துயரமான திருத்த வரைவு அறிக்கை வெளிவந்து விவாதத்துக்கு விடப்பட்டுள்ளது. உண்மையிலேயே வனவிலங்கு பாதுகாப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு வார காலம் சோக வாரமாகக் கொண்டாடி இருப்பார்கள். மேலும் இந்த வருட சர்வதேச சுற்றுச் சூழல் தினம் என்பது பத்தாண்டுகளுக்கான சூழல் புனரமைப்பு செய்வதற்கான அறைகூவலை விட்டுள்ளது. இது அந்த அறைகூவல் மீது சட்டத் திருத்தங்கள் மண்ணை அள்ளிப் போடுகிறது.
சரி நாம் இப்பொழுது சட்டத் திருத்தங்களுக்கு வருவோம்:
வனப் பாதுகாப்புச் சட்டம்-1980ல் வந்த பின் கடந்த 40 வருடங்களாக ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு மேம்பட்ட முறையில் காடுகள் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு திருத்தங்கள் அவசியமாகிறது. எனவே இந்த சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறதா கூறப்படுகிறது சுமார் 15 பிரச்சினைகளைக் கண்டறிந்து இத்திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாகப் பார்த்தோமானால் எந்தவிதமான அடிப்படையான தரவுகளோ ஆதாரங்களோ இல்லாமல் திருத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத்
தனியார் காடுகளை அவர்கள் காடுகளல்லாத செயல்களுக்கு அனுமதி தரப்படாததால் அவர்கள் காடுகள் வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை எனக் கூறி தனியார்களுக்குக் காடுகளை அழிக்கத் திருத்தம் தருகிறது
அதே போன்று ரயில்வே உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் காடுகள் பாதுகாப்புக் கொள்கையால் தடைப்பட்டுக் கிடக்கின்றன என்றும் இத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட பகுதிகள் காடுகளாக வளர்ந்து உள்ளதால் அதை தற்போது பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதால் அதைப் பயன்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் போதுமான தரவுகள் இல்லை.
அதே போன்று தனியார்கள் தங்கள் தரிசு நிலங்களைக் காடுகளாய் மாற்றினால் அது காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் போய்விடும் என்பதால் அவர்கள் அதைக் காடுகளாக மாற்றாமல் தரிசு நிலங்களாகவே விட்டு வைத்துள்ளனர் எனப் பெரிய புராணத்தை அவிழ்த்து விட்டு தற்போதுள்ள தனியார் காடுகளை அவர்கள் பயன்படுத்துவதற்கான திருத்தத்தை முன் வைக்கிறது (பிரச்சினை:3).இதற்கும் போதிய தரவுகள் இல்லை.
1996க்குப் பிறகு காடுகள் அல்லாத பகுதியாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் காடுகள் வளர்க்கப்பட்டிருப்பின் அவைகளுக்கு வனச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் இதனால் காடுகள் வளர்ப்பு அதிகரிக்கும் என ஒரு புதிய தத்துவத்தை முன் வைக்கிறது (திருத்தம்:4) இதனால் தற்போது உருவாக்கப் பட்டிருக்கும் காடுகள் அழிவுக்குச் செல்லும் அபாயம் உள்ளது. உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும் சூழலில் காடுகளைக் காப்பாற்றுவது முக்கியமாக உள்ள சூழலில் காடுகளை அழிக்க இந்த திருத்தம் வழி வகுக்கிறது.
சில சிறப்பு மிகு காடுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தக்க வைத்து அதனுடைய சூழல் மதிப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டப்படும் எனக் கூறப்படுவது (திருத்தம்:6) குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அதை காவு வாங்கும் எண்ணம் போல் இருக்கிறது.
ராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி பெறாமலேயே மாநில அரசுகள் காடுகள் சாராப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் சட்டத் திருத்தம் (எண்:7) கொடுக்கப்படுகிறது. காடுகள் பாதுகாப்பு என்பது ஒன்றிய அரசு, மாநில அரசு ஆகிய இருவருக்குமான பொதுப்பட்டியலில் இருக்கும் பட்சத்தில் இது போன்ற விஷயங்களில் தலையிடுவதை தடுப்பதாக தெரிகிறது. ஒன்றிய அரசே இத்திட்டங்களை அமல்படுத்தி காடுகளை அழிக்கும் அபாயம் உள்ளது.
காடுகளைத் தனியாருக்கு அடகு வைப்பதற்கேற்ப சப் செக்ஷன் 2(ஈஈஈ) எடுத்துவிட்டு 2(ஈஈ) போதும் (எண்:8) என்கிறது. இது காடுகள் தனியார்மயத்திற்கும் பேரழிவிற்கு எடுத்துச்செல்லும்
தற்போது காடுகளுக்குள் கனிம வளங்களை எடுப்பதால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்கும் முகமாகக் காடுகளுக்கு வெளியே தூரத்திலிருந்தே காடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் எண்ணை, வாயு ஆகியவற்றை எடுக்கும் புதிய தொழில்நுட்பமான எக்ஷ்ஸ்டண்டெட் ரீச் டிரில்லிங் (Extended Reach Drilling (ERD)) போன்ற தொழில்நுட்பங்கள் சூழலுக்கு உகந்ததாக இருப்பதால் அவைகளுக்குக் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் திருத்தம் என்பது காடுகளுக்குக் கீழ் புதைந்திருக்கும் கனிம வளங்களைக் கட்டற்ற முறையில் சூறையாட வழி வகுக்கிறது. மேலும் காடுகளின் சூழலியல், மண்ணியல் ஆகியவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளை அழிக்கும் திருத்தமாகவே இதைக் கொள்ளலாம்.
தனியார் காடுகளில் அவர்கள் 250 ச.மீ அளவில் சூழல் பாதுகாப்புடன் வசிப்பிடங்கள் கட்டிக் கொள்வதற்குத் திருத்தம் (எண்:10) கொடுக்கப்பட்டுள்ளது. இது காடுகளில் சுற்றுலாவிற்கான ஓய்வு வசிப்பிடங்களை அனுமதிப்பது போன்றதாகும். காடுகளை சுற்றுலா மயமாக்கலினால் சுற்றுப்புறச் சூழல் பாழாகும்.
இது வரை காடு சாரச் செயல்பாடுகளாக இருந்த மிருகக் காட்சி சாலைகள், சஃபாரி எனப்படும் காடுகளுக்குள் சவாரி சுற்றுலா, காடுகள் பயிற்சி நிறுவனங்கள் ஆகியன இனி மேல் காடு சார் செயல்பாடுகளாகக் கருதப்படும் (எண்:11.) இதன் மூலம் தனியார்கள் தங்கள் காடுகளுக்குள் அனுமதி பெறாமலேயே இது போன்ற நடவடிக்கைகளைச் செய்வதற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. இதனால் காடுகளுக்குள் சுற்றுலா நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டு காடுகளின் மொத்த சூழலியலும் கேள்விக் குறி ஆகும் சூழல் உள்ளது.
காடு சார நடவடிக்கைகளுக்கு விதிக்கப்படும் லெவி என்ற கட்டணம் ஒரு முறை வசூலிக்கப்பட்டு அதே நடவடிக்கையைப் புதுப்பிக்கும் போது இரட்டிப்புக் கட்டணம் வசூலிப்பது முறையானதாக இருப்பதால் அதை விலக்கி ஒரு முறை செலுத்தியதையே மீண்டும் லெவியாக வசூலிக்கலாம் (எண்.12). ஒரு முறை லெவி வசூலித்து அதன் பலனைப் பெற்றவர்கள் புதுப்பிக்கப்படும் காலத்தில் அதே லெவியைச் செலுத்துவது தான் முறையற்ற செயலாகும். காடுகளிலிருந்து பெறப்படும் பயன்கள் புதுப்பிக்கப்படும் காலத்தில் வேறுவிதமாக இருக்கும் பட்சத்தில் அதை மாற்றுவது தான் சரியானதாக இருக்கும்.
கணக்கெடுப்பு, கண்டறிதல் போன்ற காடு சாரா செயல்பாடுகளுக்கு அரசின் அனுமதி பெறும் முறை நீண்ட காலம் எடுப்பதால் பாதிப்புகள் உருவாகாத இது போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதி பெறும் முறை இனித் தேவையில்லை (எண்:14). மேற்சொன்ன செயல்பாடுகளில் இதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படவேண்டும்.
நிறைவாக..
காடுகள் பாதுகாப்பு என்பது ஒன்றிய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின்னரே திருத்தங்களை மக்களிடம் கருத்துக் கேட்புக்குச் சுற்றுக்கு விட வேண்டும்.
2006 காடுகள் உரிமைச் சட்டப்படி காடுகளின் மேலாண்மை, பாதுகாப்பு அனைத்தும் அங்கு வாழும் பழங்குடியினருக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காடுகளைப் பயன்படுத்தக் கொண்டு வரும் சட்டத் திருத்தங்கள் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். சுமார் 4கோடி ஹெக்டேர் காடுகள் வன உரிமைச் சட்டப்படி அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்குப் பொறுப்பான கிராம சபாக்களை ஒதுக்கிவிட்டு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது என்பது வன உரிமைச் சட்டத்திற்கு எதிரானது ஆகும். பழங்குடி அமைச்சகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் கொண்டு வருவதும் தவறானதாகும்.
தற்போது கொண்டு வரப்படும் சட்டத் திருத்தங்கள் ஒன்றிய அரசின் பணமயமாக்கல் திட்டம், சூழல் மதிப்பீட்டுத் தாக்க அறிக்கை-2020 ஆகியனவற்றிற்கு ஏற்றவாறு திருத்தங்களை உள்ளடக்கியதால் காடுகள் தனியார்மயமாகப்படுவதற்கும், அதன் வளங்கள் சூறையாடப்படுவதற்கும், பழங்குடியினரின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளதால் இந்தத் திருத்தங்களுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் திரள வேண்டும்.
பொ. இராஜமாணிக்கம்,
பொதுச் செயலர்,
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.