CPIM முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பி.ராமச்சந்திரன் (பி.ஆர்.சி.) –”I am happy..I was wrong..” | என்.குணசேகரன் | www.bookday.in |

தோழர் பி.ராமச்சந்திரன் (பி.ஆர்.சி.)–”I am happy..I was wrong..” | என்.குணசேகரன்

தோழர் பி.ராமச்சந்திரன் (பி.ஆர்.சி.) மாணவர் இயக்கத்திற்கு வழிகாட்டும் பணியை மேற்கொண்டபோது அவரிடம் இருந்த ஒரு தனிச் சிறப்பு எப்போதும் மனதை விட்டு அகலாது. அவரது ஒவ்வொரு அசைவிலும் ஆழமான அரசியல் தத்துவார்த்தத் தரம் வெளிப்படும். மார்க்சியத்தை மேற்கோள்கள் துணை கொண்டு அவர் பயன்படுத்தவில்லை. மார்க்சியத்தின் தத்துவ உயிர்ப்பினை நடைமுறைப் பணிகளில் அமலாக்கிட முனைப்பு காட்டினார். அந்த வருடங்கள் எங்களின் அரசியல் தத்துவார்த்தக் கண்ணோட்டம் மெருகெறிய காலம். அதற்கு முக்கிய காரணகர்த்தா தோழர் பி.ஆர்.சி.

பின்னாளில் அரங்கங்களுக்கு பொறுப்பு பணியை செய்கிறபோது, முக்கியமாக ,ஊழியர்களின் அரசியல் தத்துவார்த்த மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற போதனையை அவரிடம்தான் கற்றுக் கொண்டோம்.

அவர் அன்றாட இயக்க நடைமுறைகளுக்கு வழிகாட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டதுடன் எங்களின் அரசியல் உணர்வு வளரவும் நெறிப்படுத்தவும் பெரு முயற்சி மேற்கொண்டார். அந்த அரசியல் போதனை இன்றளவிற்கும் நீடித்து நிலைத்திருக்கிறது. அவர் கடுமையாக விமரசிப்பார்; ஆனால் அது மிகப்பெரும் அரசியல் கல்வி.

பெருந்திரளாக மாணவர்கள் பங்கேற்புடன் நடந்த போராட்டங்கள் ஏராளம். அதற்குரிய சூழலும் அன்று இருந்தது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற போராட்டங்களில் மாவட்ட மற்றும் கல்வி நிலைய தலைமைத் தோழர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இதில் தான் தோழர் பி.ஆர்.சியின் பங்களிப்பு மறைமுகமாக இருந்தது . மாவட்டங்களில் கட்சித் தலைமையோடு தொடர்ச்சியாக பேசி மாணவர் அரங்கத்திற்கான ஊழியர்களையும், தலைவர்களையும் கண்டறிந்து வளர்ப்பதற்கு அவர் கடும் முயற்சி எடுத்தார்.

கோவையில் மாணவர் அரங்கத்திற்கு இடைவெளி இருந்தது. மாவட்ட செயலாளராக இருந்த தோழர் வெங்கிடு அவர்களோடு பேசி, குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை அவருக்கு அளித்தது இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது. பிறகு கோவையில் வலுவான மாணவர் இயக்கம் செயல்பட்டது. இதுபோன்று பல மாவட்டங்களில் திரை மறைவில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியது. கட்சிக் குடும்பங்களோடு பேசி மாணவர் அரங்கத்திற்கு ஊழியர்களை உருவாக்கிட அவர் முயற்சித்தார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார். அப்போது கடுமையான எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் ஏராளமான முயற்சிகளை மாணவர் சங்கம் மேற்கொண்டது.

இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய நிர்வாகக் குழு நாடு தழுவிய மாணவர் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டது. தமிழ்நாட்டில் மாநிலந் தழுவிய வேலைநிறுத்த அறைகூவல் நிறைவேற்ற முடியுமா என்கிற கேள்வி எழுந்தது. தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. குறிப்பிட்ட அறைகூவல் தினத்தில் சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கலாம் என்றெல்லாம் கருத்து வந்தது.

தோழர் பி. ஆர். சி பல தோழர்களின் எதிர்மறையான கருத்துக்களை வைத்து, தற்போதைய ஸ்தாபன நிலைமையில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் வெற்றி பெறாது என்கிற கருத்தில் இருந்தார். நானும் பல தோழர்களும் வேலை நிறுத்தத்தை நடத்த வலியுறுத்தினோம். முடிவில் எங்களது கருத்தை ஏற்றார்.

ஆனால் அவருக்கு உள்ளுக்குள் ஐயம் இருந்து வந்ததை நான் அறிவேன். பிறகு மும்முரமாக வேலை நிறுத்த தயாரிப்புப் பணி நடைபெற்றது. அதில் அதிக அளவு மாணவர்களின் உற்சாகம் வெளிப்பட்டது.வேலைநிறுத்த முடிவில் கருத்து வேறுபாடு இருந்தாலும் தோழர் பி ஆர் சி கட்சி மட்டத்தில் மாவட்டங்களில் பேசி முழுத் தயாரிப்பு இருக்கும் வகையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா தவிர மற்ற மாநிலங்களில் அவ்வளவு வெற்றி கிடைக்காது என்று நினைத்த அகில இந்திய தலைமைக்கும் இது ஆச்சரியமாக இருந்தது.

கல்வி நிலையங்களில் வேலை நிறுத்தம் செய்து பேரணி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் என மாணவர் சங்க மாநிலக் குழு கணக்கெடுத்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல அன்று பெருந்திரள் மாணவர்களை திரட்டுவதற்கான வாய்ப்பு இருந்த சூழலை மாணவர் சங்கம் முழுமையாக பயன்படுத்தியது.

எந்த ஒரு இயக்கத்திலும் பெருந்திரள் பங்கேற்பே முக்கியமானது என்ற நோக்கு மாணவர் சங்கத் தலைமைக்கு இருந்தது. இதுவும் தோழர் பி. ஆர். சி ஊட்டிய பாடம்.

வேலை நிறுத்தம் முடிந்த பிறகு திருவல்லிக்கேணி கட்சி மாநிலக் குழு அலுவலகத்தில் தோழர் பி. ஆர். சி என்னோடு உரையாடியது இன்றைக்கும் அழுத்தமாக பதிந்துள்ளது.

சோவியத்நாட்டின் மகத்தான தலைவர் தோழர் ஸ்டாலின், சீனப் புரட்சியின் நாயகன் தோழர் மாசேதுங் இருவருக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை தோழர் பி ஆர் சி குறிப்பிட்டார். சீனப் புரட்சி வெற்றிக்குப் பிறகு நடந்த சந்திப்பு அது .

தோழர் ஸ்டாலின் தோழர் மாசேதுங்கிடம் குறிப்பிட்டார்.’ சீனப் புரட்சி வெற்றி பெற நிலைமைகள் பக்குவப்படவில்லை என்று நான் கணித்ததால் இப்போது புரட்சி வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தினேன். ஆனால் நீங்கள் வெற்றிகரமாக புரட்சியை சாதித்தீர்கள். என்னுடைய கணிப்பு தவறாகப் போனதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி (I am happy..I was wrong..)’என்று ஸ்டாலின் சொன்னதாக தோழர் பி ஆர் சி குறிப்பிட்டார்.

“மாணவர் வேலை நிறுத்தம் வெற்றி பெறாது என்ற எனது கருத்து தோற்றுப் போனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி! ஸ்டாலின் சொன்னதையே நான் சொல்கிறேன்: ”I am happy..I was wrong..’ வேலை நிறுத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் !”என்று தோழர் பி ஆர் சி குறிப்பிட்டார்.

தோழர் பி.ஆர்.சி குறிப்பிட்டது ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் கருத்து என்பதை சோவியத் வரலாறு, சீனப் புரட்சி வரலாறுகளை உணர்ந்தோர் அறிவர்.

இது போன்ற எடுத்துக்காட்டுகளை தோழர் பி ஆர் சியால்தான் சொல்ல முடியும். எத்தனையோ சந்தர்ப்பங்களில் இது போன்ற உரையாடல்களை அவரோடு நடத்தும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

அவரது வகுப்பு எடுக்கும் பாணி தனிச் சிறப்பு கொண்டது.தத்துவார்த்தக் கருத்துக்களை புரிபடாது எடுத்துரைக்கிற தவறை அவரிடம் காண முடியாது. அதே நேரத்தில் ‘எளிதாக புரிந்து கொள்ள வேண்டும்;’ சுவையாக’ இருக்க வேண்டும்’ என்கிற உந்துதலில் தத்துவார்த்தக் கருத்துக்களை மிக மலினப்படுத்தல் அவரிடம் இருக்காது. நேரடியாக மனதில் பதிய வைக்கும் வகையில் அவருடைய தத்துவ வகுப்புகள் இருக்கும். அவரது அந்த பாணி வகுப்பு எடுக்கிற அன்றைய தோழர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

விடுதலைப் போராட்ட அனுபவங்கள் அவரை உருவாக்கி இருந்ததை பல நேரங்களில் உணர முடிந்தது. அது மாணவர் அரங்க வழிகாட்டுதலிலும் முத்திரை பதித்திருந்தது. கல்வி நிலைய அன்றாடப் பிரச்சினைகளுக்காக போராடுகிற அதே நேரத்தில் நமது நாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் பாதையை முன்னெடுக்க வேண்டும் என்ற உந்துதல் அவரது அனைத்து செயல்பாடுகளிலும் பிரதிபலித்தது. அன்றைய மாணவர் இயக்கத் தலைமை அதனால் பெரும் பயன் பெற்றது.

எழுதியவர் : 

✍🏻 என்.குணசேகரன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *