மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு அவர்களின் “நானும் நீதிபதி ஆனேன்” புத்தகம் குறித்து நண்பர் சமஸ் எழுதியதைப் பார்த்ததுமே, ஆர்வத்துடன் ஆர்டர் செய்து வாங்கினேன். பொதுவாகச் சுயசரிதைகளில் பல ஆளுமைகள், உண்மைகளை முழுமையாகச் சொன்னால் மற்றவர்களுக்குச் சங்கடம் ஏற்படும் எனப் பலவற்றைத் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், 30 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 7 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றிய நூலாசிரியர், இந்தப் புத்தகத்தில் பல அதிரடி உண்மைகளைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார்.
“இவன் என் மகன் இல்லை” – ஒரு தந்தையின் துயரம்
1971-ல் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவெடுத்தபோது, மாணவர்களிடையே பெரும் போராட்டம் வெடித்தது. காவல்துறையின் தடியடியில் உதயகுமார் என்ற மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அரசியல் அழுத்தங்களால், அந்த மாணவனின் தந்தையே “இறந்தது என் மகன் அல்ல” என்று சொல்ல வைக்கப்பட்ட கொடுமையை முதல் அத்தியாயத்தில் ஆசிரியர் விவரிக்கிறார்.
அப்போது எனக்கு 10 வயது என்பதால் அதன் தீவிரம் புரியவில்லை. பின்னாளில் ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில் சோ பேசும் ஒரு காட்சியில் இது நகைச்சுவையாகச் சொல்லப்பட்டபோதுதான் மேலோட்டமாகத் தெரிந்துகொண்டேன். ஆனால், போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவராகச் சந்துரு அவர்கள், விடுதி வளாகத்தில் ரத்தக்கறைகளையும் பூட்ஸ் தடங்களையும் விசாரணை ஆணையத்திடம் காட்டியது முதல், அரசியல் அழுத்தங்களால் விசாரணை நீர்த்துப் போனது வரை ஒரு ‘திரில்லர்’ நாவலைப் போல விவரித்துள்ளார்.
நெருக்கடி நிலையும் மு.மு. இஸ்மாயில் ஆணையமும்
பிரதமர் இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை (Emergency) கால நிகழ்வுகள், மிசா (MISA) கைதுகள் எனப் பல வரலாற்றுச் செய்திகளை ஆசிரியர் ஆவணப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இன்றைய முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறையில் அனுபவித்த துன்பங்கள் பற்றியும், பின்னாளில் அமைக்கப்பட்ட நீதிபதி மு.மு. இஸ்மாயில் ஆணையத்தின் முன்பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தான் ஆஜராகி வாதிட்டதுமே தன்னை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. தேவசகாயம் எழுதிய “ஜே.பி-யின் சிறைவாசம்” நூலைப் படித்தபோது கிடைத்த அதே ஆழமான புரிதலை, சந்துரு அவர்களின் இந்தப் பதிவுகளும் தருகின்றன.
அரசியல் சூழலும் நீதிபதி பதவியும்
எந்த முதல்வரை எதிர்த்துப் போராடினாரோ, அதே கலைஞர் அவர்கள் பின்னாளில் சந்துருவின் சமூக நீதி சார்ந்த தீர்ப்புகளைப் பாராட்டியதையும், அவர் நீதிபதி ஆவதற்குப் பரிந்துரை செய்ததையும் நூலாசிரியர் நேர்மையுடன் பதிவு செய்துள்ளார். ஒரு சாதாரணப் பட்டதாரியாக விரும்பியவரைச் சட்டம் பயிலத் தூண்டியது அன்றைய விசாரணை ஆணைய நீதிபதியும், மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் அவர்களுமே.
கறுப்புச் சட்டங்களும் போராட்டக் களமும்
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் மாணவப் பருவத்தில் சிறை சென்ற அனுபவமே அவரைப் பின்னாளில் மனித உரிமைகள் குறித்துப் பேச வைத்தது. அதைப் போலவே, சந்துரு அவர்கள் தனது போராட்டக் காலத்தில் சிறையில் பட்ட சிரமங்கள், பின்னாளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உதவியதாக நினைவு கூர்கிறார்.
பெயர்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. 1950-ன் தடுப்புக்காவல் சட்டம் முதல் இன்றைய தேசத்துரோகச் சட்டம் (Sedition), UAPA, தடா மற்றும் பொடா வரை கறுப்புச் சட்டங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆசிரியர் விரிவாகப் பேசியுள்ளார். கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் புகழ்பெற்ற வழக்கையும் (AKG Case) இதில் பதிவு செய்துள்ளார்.
நீதித்துறையின் மீதான விமர்சனம்
நீதிமன்ற நிர்வாகத்தில் நிலவும் வெளிப்படைத்தன்மையற்ற சூழல், கொலிஜியம் முறை, நீதிபதிகளுக்குப் பணி ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதிகள் காட்டும் சார்புத்தன்மை ஆகியவற்றைச் சந்துரு தயக்கமின்றி விமர்சித்துள்ளார். நீதிபதி ரஞ்சன் கோகாய் போன்றவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தனது ஆழமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நான் நீதிபதி ஆன கதை
நீதிபதி பதவி தன்னைத் தேடி வந்தபோது, “பெற்றோரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று அவர் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்க முயன்ற சூழ்ச்சிகளை முறியடித்து அவர் நீதியரசரானது ஒரு பெரும் போராட்டம். தனது 7 ஆண்டு காலப் பணியில் 96,000 வழக்குகளுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தவர் அவர்.
தனிப்பட்ட அனுபவம்
2003-ல் ஒரு தொழிற்சங்க வழக்கிற்காக நான் அவரை வழக்கறிஞராகச் சந்தித்தபோது, சில காரணங்களால் அவர் எங்கள் வழக்கை ஏற்கவில்லை. ஆனாலும், அவர் தனது பணிக்காலத்தில் ஏழைகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் ஆஜரான பல வழக்குகளைப் படிக்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது.
நிறைவாக…
சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் என அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஆவணம் இது. ஒரு நீதிபதியின் இருக்கைக்குப் பின்னால் இருக்கும் அதிகார அரசியலையும், நீதிக்கான போராட்டத்தையும் ஒருசேரப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் பெரிதும் உதவுகிறது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | நானும் நீதிபதி ஆனேன் |
| ஆசிரியர்: | மேனாள் நீதிபதி கே. சந்துரு |
| வெளியீடு: |
அருஞ்சொல்
|
| விலை: | ₹.600 |
| அறிமுகம் எழுதியவர்: |
சம்பத் ஸ்ரீனிவாசன்
|
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் சென்னை புத்தக காட்சியை நேரடியாக வந்து பார்வையிட்டு அதில் தங்களுக்கு பிடித்த புத்தகம் குறித்த நூல் அறிமுக கட்டுரையை ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை www.bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

