மா.காளிதாஸ் கவிதைகள்
**************************************************************************
1.
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
ஒரு குரல்.
ஒழுகும் குழாயைத் திருகுவது போல
அதன் தலையை
இடப்பக்கமாக லேசாகத் திருப்பி
யாரோ ஒலியளவைக்
குறைக்க முயல்கிறார்கள்.
அதன் சொற்களைத் திருடுவது
பாதகமல்ல என்றொரு மணியடிக்கிறது.
ஒரு மன்னரைப் போல
கனவு உலாவரும் நேரமிது…
விசும்பல் ஒலி கேட்காதபடி
ஒரு திரைச்சீலை கூடவா கிடைக்கவில்லை?
சுழலும் தகடு காலாவதியாகிவிட்டதெனப் புறந்தள்ளிவிட முடியாது.
ஒரு குரல் தொடர்ந்து ஒலிப்பதென்பது
புதிய கீறலுக்கான அடையாளமல்லவா?
தொடர்ந்து ஒலிக்கும் குரல்
ஓர் ஒழுங்கற்ற இசை வடிவம்.
கூர் தீட்டப்பட்ட கத்தியைப் போல
எவ்வித பதட்டமுமின்றி
நெஞ்சைப் பதம் பார்ப்பவை
அதன் ஸ்வரங்கள்.
ஒரு சிறிய பானையில் அமிழ்த்தி
யாரோ கவிழ்த்து வைத்துள்ளார்கள்
பல பெயர்கள்
பல குற்றச்சாட்டுகள்
ஆழ்ந்த அமைதி
சமாதானத்திற்கான தூது
உரசப்படாத தீப்பொறி
உள்ளடங்கிய ஒரு குரலை.
குரல் ஒலிக்கிறது
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
அதுவொரு பறவையினுடையது
அதுவொரு விலங்கினுடையது
அதுவொரு மனிதனுடையது
என்பதைக்காட்டிலும் முக்கியமானது
அது எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.
**************************************************************************
2.
உன்னிடம் ஒரு முழுமையைக் காண்கிறேன்.
அது நாலாபுறமும் ஒளி வீசுகிறது
மேலே மேலேயெனத் தீயாய்ப் பரவுகிறது
மூச்சுக்காற்றைப் போல உள்ளிறங்குகிறது வெளியேறுகிறது.
இசை ராகம் தேர்ந்த குரல்வளத்துடன் சரியாகக் கட்டமைக்கப்பட்ட பாடல் போல
இருப்பை முணுமுணுக்க வைக்கிறது.
முழுமை என்பது
ஒரு வெறுமையென உணர்த்துகிறாய்
அதுவோர் எரிநட்சத்திரத்தைப் போல
மௌனப் பள்ளத்தாக்கில் விழுகிறது.
பெயர் பொறிக்கப்படாத
சுவரோவியத்தைப் போல
என்மீது தொங்குகிறது உன் முழுமை.
இன்றைய நாளுக்கான பறத்தலை
நிறைவுசெய்த பறவையைப் போல
என் கிளையில் ஓய்வெடுக்கிறது.
என்னிடம் எந்தப் புழுவும் இல்லை
எந்தத் தூண்டிலும் இல்லை
இது ஏதுமறியாமல் மிகத் தன்னியல்பாய் இங்குமங்கும் நீந்திக் கொண்டிருக்கிறது.
என்னை ஆட்கொண்ட தீராப்பசி
உன் முழுமை என்கிறேன்
பதிலேதும் சொல்லாமல்
என்னைத் தின்னத் தொடங்குகிறாய்.
**************************************************************************
3.
ஒற்றை இனிப்புப் பூந்தியைப் போலத்
தனித்துக் கிடக்கிறது
என் கதையில் ஒரு சொல்.
அதை மொய்க்கின்றன சில எறும்புகள்.
மூதாட்டியின் பாம்படத்தைப் போல சலனமின்றி ஆடுகிறது ஒரு பழமொழி.
எதையோ பறிப்பதற்கு
எப்போதும் தயார்நிலையிலுள்ள தொரட்டியைப் போலத்
தொங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு கேள்வி.
பதப்படுத்தப்பட்ட உணவைப் போலத்
தன்னை வெளிப்படுத்துகிறது
ஒரு மேற்கோள்.
பின்தொடரும் விரல்களுக்குப் பிடிகொடுக்காமல்
வண்ணத்துப்பூச்சியைப் போலப்
போக்குக் காட்டுகிறது
ஒரு ஆச்சரியம்.
விடுவித்துவிட்டால்
வேதாளம் போலக் குனிந்து பணிந்து
நன்றிசொல்லக் காத்திருக்கிறது
ஒரு புதிர்.
வலைகளையும் தூண்டில்களையும்
அறிந்துதான் வைத்திருக்கின்றன
துள்ளும் ஒன்றிரண்டு பிழைகள்.
யார் மீதான கோபத்திலோ விட்டெறிகிறீர்கள்
ஒரு சாந்தமான பொழுதில்
உங்கள் மனதின் படித்துறையில் அமர்ந்து
காயத்திற்கு மருந்திடுகிறது
என் கதை.
**************************************************************************
4.
ஒரு காலத்தில், அது
சிறகு விரித்துப் பறந்து கொண்டிருந்தது.
இறகுகள் அனைத்தும் உதிர்ந்த
மொட்டைப்பறவை பார்த்திருக்கிறீர்களா?
இரைக்காக மட்டுமே
உயிர்வாழ்தலின் சோகத்தைச்
சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா?
பலரின் உடல்களைத் திடகாத்திரமாகியுள்ளன
அதன் முட்டைகள்.
தானியங்களைக் கொறிப்பதற்கான
அதன் அலகுகள் முனை மழுங்கவில்லை.
கூர்நகங்களில் பற்றி
அணுகுண்டைத் தூக்கிப்போன
தூதுசென்ற
அதன் கால்கள்
இன்னமும் கூட வலுவோடுதான் உள்ளன.
அண்ணாந்து
வானம் பார்த்துத் தண்ணீர் அருந்த இப்போதும் தயார்தான்.
தீர்க்கமான அதன் கண்களில்
அவ்வளவு சொற்கள் ஒளிந்துள்ளன.
வெகுநாட்களாக உலர்ந்து கிடந்த
பேனாவிற்கு மையூற்றிச்
சட்டைப்பையில் வைக்கிறேன்.
அலகை மட்டும் வெளியே நீட்டி
அது இந்த உலகிற்கு
ஏதோ சொல்ல வருகிறது.
**************************************************************************
எழுதியவர்:-
✍🏻 – மா. காளிதாஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
