ஜலீலா முஸம்மில் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | ஜலீலா முஸம்மில்லின் கவிதைகள் | Tamil Kavithai | www.bookday.in

ஜலீலா முஸம்மில்லின் கவிதைகள்

ஜலீலா முஸம்மில்லின் கவிதைகள்

***************************************
1.முகிழ்க்கும் ஆத்ம நேசம்

நேசம் என்பது
ஒரு அழகான பயம்
நேசம் கொள்வது
ஒரு அலாதியான பயங்கரம்

***************************************

2.

பெண்ணாகப் பிறந்தாய்
என்னுயிருக்குள் கலந்தாய்
உறவின் உன்னதம்
உயிர்க் கோப்பையில் ஊற்றினாய்
என் புல்லாங்குழல்
இசையெங்கும்
உன் வாசனை மட்டுமே
என் புலன் யாவும்
உன் ரோஜாக்கள் மட்டுமே
சந்தேகமில்லை
மரணம் தாண்டியும்
உனை நேசிக்கிறேன்
ஆயினும்
மரணத்தில்
உன் கைகோர்த்திட
உடன்பாடில்லை எனக்கு
எனது எச்சங்களின்
பிம்பங்களை
எனது எண்ணக்கருவறையின்
அதிர்வுகளை
என் இதயத்தில்
முகாமிட்ட
நினைவுக் கரங்களின் தேவைகளை
நீ மட்டுமே அறிந்தவள்
என் பிரபஞ்சம்
உன் மானசீக அச்சாணியில்தான்
நகர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது
உன் பேரன்பின் குளிர்சிறகுகளுக்குள் கொடுகிக் கிடக்கிறேன்
யுகங்கள் தோறும்
எனையாளும் தேவதை நீ
என் பின்னரான
எல்லாம் நீதான் என்ற
நம்பிக்கையில்…
நானாகிறவன்
சொட்டும் உயிர்த்தீயில்
உழல்கிறேன்
என் வாழ்வின்
பூரணப்படுத்துதல்
என்பது
உன்னால் மட்டுமே
யாசகனாய் நான்…

***************************************

3.

கொஞ்சம் கொஞ்சல்
நிறைய கெஞ்சல்

கொஞ்சம் ஊடல்
நிறைய கவியாடல்

கொஞ்சம் தேனீர்
நிறைய தாகம்

கொஞ்சம் சண்டை
நிறைய சமரசம்

கொஞ்சம் போடி
நிறைய போடா

கொஞ்சம் மௌனம்
நிறைய சொற்கள்

கொஞ்சம் வம்பு
நிறைய அன்பு

கொஞ்சம் குறும்பு
நிறைய அலட்டல்

கொஞ்சம் கண்ணீர்
நிறைய காதல்

கொஞ்சம் தூரம்
நிறைய நெருக்கம்

மீண்டும் மீண்டும்
முதல்தடவை போன்றே
முகிழ்க்கும்
நம் ஆத்ம நேசம்

***************************************

4. வண்ண வில்
வான் தூறல்
நுண்துளிகளில்
பிரமாண்டமாய் உருவான
வானவில் வளையலை
பூமி அணிந்திருந்தாள்

தூறல் நிறுத்தத்திலும்
துலங்கி குலுங்கி
சிரித்தது வளையல்

முற்றத்தில் நின்று
அதைக்கண்ணுற்ற மகளின்
கொண்டாட்டத்தில்
அவள்
முகத்துக்கு இடமாறியிருந்தது வானவில்

சுவரில் கிறுக்கிய வண்ண வில்
ஆகாயம் சென்றது எப்போது
என்று எனைக் கேள்விக்குட்படுத்தியவளின்
முக வானவில்
வினாக்குறி
ஆகிறது சற்று நேரத்தில்

இரவோடிரவாக வான்தேவதைகள்
குட்டிதேவதை‌ கிறுக்கிய வானவில்லை சிரமப்பட்டுத்
தூக்கிச் சென்றதாய்
பதிலிறுக்கிறேன்

வினாக்குறி‌ மீண்டும்
மினுங்கி வானவில்
வடிவம் பெற‌
குட்டி தேவதை
கைதட்டியபடி
துள்ளிக் குதிக்கிறாள்

இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகத்தோடு

பூமிக்கைகளில் குலுங்குகிறது
வானவில்
எழுதியவர் : 

✍🏻கவிஞர் ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. ச.லிங்கராசு

    கற்பனையின் கற்பகதரு இந்தப் பா.. இந்த பாவை படைத்த பக்கத்து நாட்டு பாவை பாவலருக்கு பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *