தங்கேஸ் கவிதைகள்
*****************************************************************
1. தருணம்
கையில் ஏந்தும் தருணம்
உயிர் பறவை
ஒரு முறை சிலிர்த்து
சிறகுகளை உதறிக் கொள்கிறது
வெள்ளித் தாரகைகளை
பிடித்தபடி
மேலேறிச் செல்லும் ஞாபகங்கள்
பிடிமானமில்லாமல்
மறுபடியும் கீழேயே விழுகின்றன
ஒரு கணத்தில் பிரபஞ்சம்
படைக்கப் பட்ட
ரகசியத்தை அறிந்து கொண்டேன்
பெருங்கடலில் நீந்திய முதல் உயிரி
மனமாகத்தான் இருக்க வேண்டும்
அடைக்கப்பட்ட இரும்பு ஷட்டர்களுக்கு
வெளியே
தகரக் கூரையின் கீழ்
கொட்ட கொட்ட
விழித்திருக்கும் குடும்பங்களோடு
சேர்ந்து நனைந்து கொண்டிருக்கும்
இந்த இராத்திரியும்
இனி உறங்கப்போவதில்லை
துயரத்தின் தாளாத சாட்சியாக
வீழ்ந்து கொண்டிருக்கும் மழையே !
தாயின் சேலையை
தலையோடு போர்த்திக் கொண்டு
பட்டாம் பூச்சியின் வெட வெடத்த
சிறகுகளைப் போல
இரு கரங்களையும் நீட்டி
உன்னை வாஞ்சையோடு ஏந்திக்கொண்டிருக்கும்
இந்த சின்னஞ் சிறு குழந்தையின்
எல்லையில்லாத அன்பிற்கு முன்
இன்று நீ தோற்றுக்கொண்டேயிருக்கப்போகிறாய்.
*****************************************************************
2. இரவின் சருகு
திறந்து கிடக்கும் நெடுவானில்
நுழையும் வழிதப்பிய நாரை
இந்நிலவு
இந்த ராத்திரியை
வெண் பொழிவால் அலங்கரிப்பது
ஒரு பாடலாக மாறி கரைவதற்கு தான்
சிறிய பனித்துளியை பரிசளித்தாலும்
பெரும் உலகமாய் நினைத்து
அதை கைகளில் ஏந்திக் கொள்வேன் நான்
இரப்பவர்க்கொன்று ஈயாத
இதயம் கொண்டாலும்
இறப்பவர்க்கொன்றாவது
ஈந்தால் தான் என்ன ?
நாளெல்லாம் ஊஞ்சலாடி
களைப்படைந்த மேகங்களை
நான் மடியிலிட்டு தாலாட்டி
தூங்க வைக்கும் போது
கிறங்கிச் சரியும்
புங்கை மரச் சருகொன்று
இரவின் சிறகாகி
கண்முன்னே
பறந்து போய்க் கொண்டிருக்கிறது
அதை யார் பிடிப்பது ?
*****************************************************************
3. வில்லாததை வித்து
“வில்லாததை வித்துக் கொடு” என்று ஊரிலிருந்து மாமா கார்டு போட்டார்
ஈரக்குலையில் முள்ளைப் போல இறங்கியது வார்த்தை.
வாங்கிய கடனை அடைக்க வக்கில்லை
ரெண்டு வருசமும் ஊருல
ஒத்தப் பொட்டு தூத்தல் இல்லை
வெள்ளாமை சாவியாகி
வீணாப் போக
அய்யா ராவோட ராவா வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி நாண்டுக் கிட்டார்
அம்மை அப்படியே விருமுத்தி அடித்துப் போய் தரையில் விழுந்தாள்
பிறகு பிள்ளைக வயித்துக்காக பெரிய சம்சாரிக வீட்டுக்கு கூலி வேலைக்குப் போனாள்
ஒத்த வாய் சோத்துக்கும் வழியில்லாம
நானும் அக்காவும் தீப்பெட்டி ஆபிசுக்கு
குச்சி அடுக்கப் போனோம்
நெல்லுச் சோறு மணத்த வீட்டுக்குள்ள
இப்போ கரு மருந்து வீச்சம்
” பச்சை மண்ணுக திரேகமெல்லாம்
பசை வீச்சம்
எல்லாம் தான் பழகிப் போகுது
எளவெடுத்த பொழப்புள ” என்று
அம்மை நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள்
கடனை அடைக்கச் சொல்லி
கடுதாசி மேல கடுதாசி போட்டாக
கைம் பொண்டாட்டி காசுக்கு எங்க போவா
என்று யாரும் கேட்கவில்லை
மாமா ஆளுப் பேரோட வந்து தெருவில் நின்னு திட்டுனாரு
சன்ன வார்த்தையில்லை
மானங் கெட்டுப் போச்சு
” உனக்கெல்லாம் கால் முழக் கயறுமா கெடக்கலை ?
நானா இருந்தா நாண்டு கிட்டு செத்துப் போயிருவேன் ”
அம்மை விக்குனா லுமில்லை விரைச்சாலுமில்லை
அவ சாகாம செத்ததை
அன்னைக்குத் தான்
பார்த்தோம்
கையில இருந்த
அரைக் குறுக்கத்தையும் வித்து
கடனை அடைச்சுப் புட்டு
ராத்திரியோட ராத்திரியா ராத்திரியா
ஊர் கொணத்துல விழுந்து உசிரை விட்டுட்டா
ஐம்பது வருசம் ஆனப் பிறகும்
இன்னும் சாமி கண்ணத் திறந்து பார்க்கல
உடம்புத் தோலோட கரு மருந்தும் ஒட்டிருச்சு
மூச்சு விட்டாலும் மருந்து வாசம் தேன்
இப்ப பேரப்பிள்ளைகள தூக்கி கொஞ்சனும்னு போனாலும்
நாத்தம் தாங்காம
ஓடிருதுக குட்டிக் காடுக
இப்படித்தேன்
அன்னைக்கு இருந்து
தீப்படிக்குள்ள அடைச்ச பொம்மண்டாப் போச்சு எங்க பொழப்பு
*****************************************************************
4. நூற்றாண்டுகளின் தனிமை வாசி
நூற்றாண்டுகளின்
தனிமை வாசி
யாரை கனவு காண்பான் தூக்கத்தில்
தனித்த உயிரினமாய்
படைக்கப்பட்டதின்
துயரம் இது
இறைக்கப்பட்ட செப்பு நாணயங்களாய்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்களை
பொறுக்கி கொள்ளவும் விருப்பமில்லை
ஆளற்ற வீதியிலே
கடவுள்களெல்லாம் துணையோடு
படைக்கப்பட்ட தேசத்தில் தான்
இப்படி தனிமை பீடிக்கப்பட்ட
சாபம் பெற்றலைகிறான்
ஆயுளுக்கும்
ஆயிரமாயிரம் கவிதைகளில்
முகம் காட்டினாலும்
தேம்பி அழுவதென்னவோ
மேகத்தின் மடியில்
தலை சாய்த்து தான்
ஏகன் அனேகனாய்
துயரம் ததும்பும்
எத்தனை எத்தனை
விழிகளில் இன்று
மிதந்து வரப் போகிறானோ
யார் கண்டது ?
*****************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

