வளவ. துரையன் கவிதைகள்
***********************************
1. என்றும் இதே நிலைகள்
யாரோ விட்ட பட்டம்
அறுந்து இங்கே பறந்து வந்து
மின்கம்பியில் மாட்டிக் கொண்டு
என் மனத்தைப் போலத்
தத்தளிக்கிறது;
ஒடிந்து விழுவேன் என்று
பயமுறுத்திக் கொண்டே
இன்னும் ஒடியாமல்
முருங்கை ஆடுகிறது;
உச்சிக் கிளைகளில்
கட்டிய தன் கூடு
விழுந்து விடுமோவென்று
காகம் பதைபதைக்கிறது;
இழுக்க முடியாமல்
இழுத்து வரும் காளைகள்
எப்பொழுது தொழுவம்
வருமென ஏங்குகின்றன;
வேண்டுதலுக்காகக்
கோயிலில் ஏற்றி வைத்த
அம்பாளின் அகல்விளக்கு
அணைந்துவிடக் கூடாதென்று
இரு கைகளின் விரல்களாலும்
அணைகட்டிப் பாதுகாக்கிறாள்
முதிர்கன்னி ஒருத்தி.
*************************************
2. ஒண்ணுமே மாறல….
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு
அடியேன் சொந்த கிராமம்
திரும்புகிறேன்.
நிறைய மாற்றங்கள்தாம்.
நான் படித்த நடுநிலைப்பள்ளி
உயர்ந்து இப்போது
ஓர் உயர்நிலைப்பள்ளி.
எப்போதாவது வரும்
மழைத்துளி போல
வந்து கொண்டிருந்த
ஒரேஒரு பேருந்துக்குப் பதிலாக
நான்கைந்து பேருந்துகள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்க்
கோபித்துக் கொண்டு
விலகிக் கிடந்த கடைகள்
இப்போது மிக நெருக்கடிகளுக்கிடையில்
எப்பொழுதும் நாங்கள்
தடுக்கி விழுந்த
எங்கள் தெருவிலும்
எழிலார்ந்த தார்ச்சாலைகள்.
என்னுடன் படித்தவர்கள்
விளையாடியவர்கள் எல்லாம்
சிதறிக் கிடக்கும்
கேரம் போர்டுக் காய்களாய்
எங்கெங்கோ?
ஆனால்
இன்றுவரை திருமணமாகாமல்
வாசல் தூணருகில்
நிற்கும் முதிர்கன்னி
முத்தா பாய்.
*************************************
3. மாற்றங்கள்
மாதத்திற்கொருமுறை
கண்டிப்பாக வரும்
குடுகுடுப்பைக் காரரை
இம்மாதம் காணவில்லை;
இராப்பிச்சைக்காரர்கள்
எங்கோ போய்
ஓடி ஒளிந்து கொண்டனர்;
குரங்காட்டிகளும்
பாம்பாட்டிகளும்
வரக்கூடாதென்று
சட்டம் போட்டாயிற்று;
கடிதம் கொண்டுவந்தளித்துக்
குசலம் விசாரிக்கும்
தபால்காரர்கள்
காணாமல் போனார்கள்;
அம்மி கொத்தலையோ
உரல் கொத்தலையோ
என்று கூவியவர்கள்
இன்று
கிரைண்டர் கொத்தலையோ
என்று குரல் எழுப்புகிறார்கள்;
கோடிவீட்டுப் பாட்டி மட்டும்
வெற்றிலை பாக்கை வைத்து
டொக் டொக்கென்று
இடித்துக் கொண்டிருக்கிறார்.
*************************************
4. கருணை மழை
பெரும்புயலடித்து
ஓய்ந்த பின்தான்
ஓர் அமைதி இங்கே
வந்து சேருமாம்.
ஆனால் அந்தப்புயலின்
தடங்கள் இங்கே நிலையாய்
வடுக்களாக மாறியதை
யார் வந்து போக்க இயலும்?
இந்த மயான அமைதியைக்
கடக்க இயலாமல்
மனம் தினந்தோறும்
பேயாட்டம் ஆடுகிறதே;
இருவர் மனத்திலும்
தோன்றிய அந்த மோசமான
கவலை அழுத்த மண்டலம்
இப்படியா வீச வேண்டும்?
எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்கும்
சொற்களின் நந்தவனம்
போகும் திசையின்றி
அழுதுகொண்டிருக்கிறது;
ஒடிந்த மரங்களைக்
மௌனக் கயிறுகொண்டு
கட்டி நிமிர்த்தலாம் கண்ணே!
வேரறுந்து வீழ்ந்துவிட்ட
பெருமரங்களை எப்படி அகற்றுவது?
காலதேவன்தான் இனி
கருணைமழை பொழிந்து
காப்பாற்ற வேண்டும்.
*************************************
எழுதியவர் :

வளவ. துரையன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

