பிரான்ஸ் நாட்டுக் கதை: ஃபார்துனே…!

பிரான்ஸ் நாட்டுக் கதை: ஃபார்துனே…!

அந்தக் குடிசையில் இருந்த ஏழைக்கு பெதோ என்ற மகனும் ஃபார்துனே என்ற மகளும் இருந்தனர். அவர் இறக்கும்போது மகளுக்கு ஒரு வெள்ளி மோதிரத்தையும் ரோஜாச் செடியையும் தந்தார். குடிசையையும் மற்ற பொருட்களையும் மகனுக்குத் தந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, “நீ மோதிரத்தையும் ரோஜாவையும் எடுத்துக்கொண்டு சென்றுவிடு” என்றான் பெதோ. ஃபார்துனேவுக்கு அழுகையாக வந்தது. இரவு ரோஜாவுக்குத் தண்ணீர் ஊற்ற ஒரு கூஜாவை எடுத்துக்கொண்டு ஓடைக்குச் சென்றாள். ஓடைக் கரையில் அழகான ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார். மேஜையில் விதவிதமான உணவுப் பண்டங்கள் இருந்தன. அவர் அந்த வனத்தின் ராணி. ஃபார்துனேயைப் பார்த்ததும், சேவகர்கள் மூலம் அவளை அழைத்து வரச் செய்தார்.

“இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்? இது ஆபத்தான இடமாயிற்றே?” “என்னிடம் திருடர்கள் பறித்துக்கொள்ள எதுவும் இல்லை. என்னிடம் இருப்பது ஒரு வெள்ளி மோதிரமும் ரோஜாச் செடியும் தான்.” “உன்னிடம் கனிவான இதயம் இருக்கிறது. அதை யாராவது திருடிவிட்டால்?” என்றார் வன ராணி. “ஐயோ, நான் ஏழை என்றாலும் வாழவே விரும்புகிறேன்.” “நல்லது. இரவு உணவு முடிந்ததா?” “இல்லை. எல்லாவற்றையும் அண்ணன் சாப்பிட்டுவிட்டான்.” வன ராணி அவளைத் தன்னோடு சாப்பிட வைத்தார். “ஓடைக்கு ஏன் வந்தாய்?” “என் ரோஜாவுக்குத் தண்ணீர் எடுக்க வந்தேன்“ என்று தனது கூஜாவைக் காட்டினாள் ஃபார்துனே. அது பழைய சாதாரண கூஜாவாக இல்லை. வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க கூஜாவாக மாறி இருந்தது! “இது உனக்காகத்தான் ஃபார்துனே. உன் ரோஜாக்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். இந்த வனத்தின் ராணி உன் சிநேகிதி என்பதை மறவாதே” என்றார் வன ராணி.

“மிக்க நன்றி. உங்களுக்கு இன்று பூத்துள்ள ரோஜாக்களில் பாதியைக் கொண்டுவருகிறேன்.” ஃபார்துனே கூஜாவைப் பிடித்தபடி வேகமாக வீட்டுக்குத் திரும்பினாள். அண்ணன் ரோஜாக்களை எடுத்துக் கொண்டு ஒரு முட்டைக்கோஸை வைத்திருந்தான். ஃபார்துனே தான் ஒளித்து வைத்திருந்த இடத்திலிருந்து மோதிரத்தை எடுத்துக்கொண்டு, வன ராணியிடம் சென்றாள்.

AMP

“ராணி, என் பூக்களை அண்ணன் எடுத்துக்கொண்டான். என்னிடம் இப்போது இந்த மோதிரம் மட்டும்தான் இருக்கிறது. பூக்களுக்குப் பதிலாகத் தாங்கள் இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” “உன்னிடம் இருக்கும் ஒரே பொருள் இது மட்டும்தானே?” “இல்லை. என்னிடம் தங்களது அன்பு இருக்கிறது. அது போதும்.”

வன ராணி அந்த மோதிரத்தை அணிந்துகொண்டு, ஆறு அழகான குதிரைகள் பூட்டிய ரதத்தில் கிளம்பிச் சென்றார். ஃபார்துனே வீடு திரும்பியதும், அந்த முட்டைக்கோஸை ஜன்னல் வழியே தூக்கி எறிந்தாள். மறுநாள் அந்த முட்டைக்கோஸைப் பார்த்ததும், “உன்னால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டாள் ஃபார்துனே. “என்னைத் தோட்டத்தில் போடு. உன் ரோஜாச் செடி கிடைக்கும்” என்றது முட்டைக்கோஸ். ஃபார்துனே வியப்போடு அந்தப் பேசும் முட்டைக்கோஸைத் தோட்டத்தில் வைத்தாள். அங்கு பெதோவின் கோழி இருந்தது. அதைப் பிடித்தாள்.

“என்னை விட்டுவிடு. உனக்குத் தெரியாத சில விஷயங்களைச் சொல்கிறேன்” என்றது கோழி. ஃபார்துனே கோழியை விட்டுவிட்டாள். “நான் கோழி அல்ல, ஒரு பெண். நீயும் உன்னை வளர்த்த இந்தக் கிழவனின் மகள் அல்ல. நான் அவரது மனைவி. உன் தாய் ஒரு ராணி. அவருக்கு ஆறாவதாக மகள் பிறந்தால், உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் சொன்னதால், அவரது அக்காவான வன ராணி உன்னை என் வீட்டில் விட்டுவிட்டார். நான் உன்னை வளர்த்தேன். அப்போது உன்னைப் பற்றி ஒருவரிடம் சொன்னதால், கோபம் அடைந்த வன ராணி என்னைக் கோழியாக மாற்றிவிட்டார்” என்றது அந்தக் கோழி. “கவலை வேண்டாம். நான் என் ரோஜாவைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன். விரைவில் எல்லாம் சரியாகும்” என்றாள் ஃபார்துனே. அண்ணன் வீட்டில் இருக்க மாட்டான் என்று அறிந்த ஃபார்துனே, அவனது அறைக்குச் சென்றாள். ரோஜாச் செடிக்கு நீர் ஊற்றினாள். அப்போது, இலைகளுக்கு நடுவிலிருந்து ஒரு குரல் கேட்டது. “என் அன்பு ஃபார்துனே, நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.”

அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. அப்போது திரும்பி வந்த அண்ணன், அவளை மீண்டும் வீட்டைவிட்டுத் துரத்தினான். அப்போது அங்கு வந்த வன ராணி, அவளைக் காப்பாற்றினார். ரோஜா மலர்க் கிரீடம் சூடிய ஓர் இளவரசன் வந்தான். வன ராணியை வணங்கினான். “ரோஜாச் செடியே, உன் துன்பம் இன்றோடு நீங்கியது. ஃபார்துனே, உன்னை அந்த வீட்டில் விட்டபோது, இவனையும் உனக்குத் துணையாக விட்டேன். ஆனால், ஒரு துர்தேவதை அவனை ரோஜாச் செடியாக மாற்றிவிட்டது. அதை உன் பொறுப்பில் வளருமாறு ஏற்பாடு செய்தேன். என் மந்திர நீர் அவனுக்குப் பழைய உருவத்தைத் தந்துவிட்டது” என்றார் வன ராணி.

தன் மந்திரக் கோலால் ஃபார்துனேயைத் தொட, அவளது ஆடைகள் பட்டாடைகளாக மாறின. உடல் எங்கும் நகைகள் ஜொலித்தன. அப்போது அங்கு வந்த அவளது அண்ணன் திகைத்தான். ஃபார்துனே என் அண்ணனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று வேண்டியதால் வன ராணி அவனை மன்னித்து விட்டுவிட்டார். தன் மந்திர சக்தியால் அவனது குடிசையை மாளிகையாக மாற்றினார். அவனது தீயகுணத்தையும் நல்ல குணமாக மாற்றினார். கோழி, முட்டைக்கோஸ்களும் சாபம் நீங்கின. எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Image may contain: 1 person, standing and outdoor

-தமிழில் ச. சுப்பாராவ்
நன்றி தமிழ் இந்து…
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *