Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.



#Sankaraiah #NS100 #Sankaraiah100

என்.சங்கரய்யா: வாழ்க்கையும் இயக்கமும்
என். ராமகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 40
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

Comrade-N-Sankaraiah-Vaalvum-Iyakkamum

பொறியாளர் குடும்பம்

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவருமான என்.சங்கரய்யா, 1922 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதியன்று கோவில்பட்டியில் பிறந்தார்.

அவரது குடும்பம் அன்றைய நெல்லை மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தது. அது இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. சங்கரய்யாவின் பாட்டனார் எல்.சங்கரய்யாவும், அவரது அண்ணன் எல்.அண்ணாமலையும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அந்தக் குடும்பம் பரம்பரை கிராம அதிகாரிகளின் குடும்பமாகும்.

பின்னர் அண்ணாமலை தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தினார். மிகப்பெரிய வீடு ஒன்றும் அவருக்கிருந்தது. திருநெல்வேலி தச்சநல்லூரில் துவங்கப்பட்ட சர்க்கரை ஆலையிலும் அவர் முதலீடு செய்திருந்தார்.

அண்ணாமலை தம்பதியருக்கு பிள்ளைகள் இல்லாததால் தம்பி எல்.சங்கரய்யாவின் புதல்வர் நரசிம்மலுவையும், புதல்வி ஜானகியையும் அவர்கள் வளர்த்து வந்தனர்.

நரசிம்மலு உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்ததும், அண்ணாமலை அவரைப் பொறியியல் படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்று கருதினார். ஆனால் அக்காலத்தில் சென்னை ராஜதானியில் பொறியியல் கல்லூரிகள் இல்லாததால் நரசிம்மலுவை அவர் பம்பாய்க்கு அனுப்பி வைத்து அங்கே அவர் பொறியியல் படிக்க ஏற்பாடு செய்தார்.

சங்கரய்யாவின் பெற்றோர்

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
எஸ். நரசிம்மலு
Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
ராமானுஜம்

 

1911 ஆம் ஆண்டில் பம்பாய்க்குச் சென்ற நரசிம்மலு அங்கேயிருந்த பொறியியல் நிறுவனத்தில் இரண்டாண்டுகள் கொதிகலன் சட்டத்தின் கீழ் (Boiler Act) படித்து பொறியாளர் ஆனார்.

பின்னர் தமிழகத்திற்குத் திரும்பிய நரசிம்மலு, கோவில்பட்டியில் இருந்த ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.

1920 ஆம் ஆண்டில் அவரது மாமா ராமசாமியின் மூத்த புதல்வி ராமானுஜத்திற்கும், நரசிம்மலுவிற்கும் திருமணம் நடைபெற்றது, ராமானுஜத்திற்கு ஐந்து தம்பிகளும், இரண்டு தங்கைகளும் இருந்தனர். ராமசாமி, தூத்துக்குடி நீதிமன்றப் பணியில் இருந்தார்.

நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியின் மூத்த புதல்வர் ராஜமாணிக்கம் 1921 ஆம் ஆண்டிலும், இரண்டாவது புதல்வர் சங்கரய்யா 1922 ஆம் ஆண்டிலும் பிறந்தனர். சங்கரய்யாவுக்கு அவர் பெற்றோர் வைத்த பெயர் பிரதாபசந்திரன் என்பதாகும்.

அவருக்குப் பின் அவரது பெற்றோர் நான்கு புதல்விகளையும், மூன்று புதல்வர்களையும் பெற்றெடுத்தனர்.

 

துவக்க மனப்பதிவுகள்

நரசிம்மலு தனது பணியின் காரணமாக வெவ்வேறு இடங்களுக்கு மாற வேண்டியிருந்ததால் ராஜமாணிக்கமும், பிரதாப சந்திரனும் தூத்துக்குடியிலிருந்த தாய்வழிப்பாட்டனார் ராமசாமி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர் வீடு நம்மாழ்வார் தெருவில் இருந்தது. இருவரும் அருகில் இருந்த நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இச்சமயத்தில் ஒரு பிரச்சனை எழுந்தது. எல்.சங்கரய்யா தனது இரண்டாவது பேரன் பிரதாபசந்திரனுக்கு தனது பெயரைத்தான் வைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இதன் பொருட்டு அவர் இரண்டு நாட்கள் உணவருந்த மறுத்துவிட்டார். எனவே நரசிம்மலுவும் ராமானுஜமும் தங்கள் இரண்டாவது புதல்வன் பிரதாபசந்திரனின் பெயரை சங்கரய்யா என மாற்றினர். பள்ளிக் கூடத்திலும் அவர் பெயர் சங்கரய்யா என மாற்றப்பட்டது.

இளம் வர்த்தக நகரமாயிருந்த தூத்துக்குடி அந்நாட்களில் அயல்நாடு செல்வோருக்கும், அங்கிருந்து வருவோருக்கும் வாயிலாக இருந்தது. இங்கிலாந்து உள்ளிட்ட அயல்நாடுகளுக்குச் செல்வோர் தூத்துக்குடி அல்லது தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் அல்லது கொழும்புவிற்குச் சென்று அங்கிருந்து பயணத்தைத் தொடர்வார்கள். திரும்பும்பொழுதும் அவ்வாறே வருவார்கள். இவ்வாறு இங்கிலாந்து பயணத்தை முடித்துவிட்டு, சோவியத் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு பிரபல காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேருவும், அவரது புதல்வர் ஜவஹர்லால் நேருவும் தூத்துக்குடிக்கு கப்பலில் வந்திறங்கினர். அவ்விருவருக்கும் தூத்துக்குடி மேலூர் பகுதியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைக்காண சிறுவர்களான ராஜமாணிக்கத்திற்கும், சங்கரய்யாவிற்கும் மிகவும் வியப்பாக இருந்தது.

அவர்களை ஈர்த்த மற்றொரு நிகழ்ச்சி 1930 ஆம் ஆண்டில் நடந்தது. புரட்சி வீரர் பகத்சிங்கும், அவரது சக தோழர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டு ஸட்லெஜ் நதிக்கரையில் எரிக்கப்பட்டனர். இந்தச் செய்தி வெளியானதும் இந்திய நாடே கொதித்தெழுந்தது. நாடு முழுவதும் ஆவேசமான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தூத்துக்குடி நகரிலும் வரலாறு காணாத ஆவேச எழுச்சி காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் சோகமும், ஆவேசமும் பொங்க ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தையும் ராஜமாணிக்கமும், சங்கரய்யாவும் கண்டனர்.

இந்தச் சிறுவர்களைக் கவர்ந்த மற்றொரு நிகழ்ச்சி மேலூர் காளிகோவில் திருவிழாவாகும். தசரா பண்டிகையையொட்டி நடைபெறும் திருவிழாவினைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். சுடலைமாடன் பற்றிய வில்லுப்பாட்டு, ஊமைத்தேவர் சிலம்பப்பள்ளி மாணவர்களின் வாள்வீச்சு, தீப்பந்தம், பூதாகரமான காளி உருவப்பொம்மைகள் வலம்வருவது போன்று ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நேரத்தில் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
சங்கரய்யாவின் மூத்த சகோதரர் எஸ். என். ராஜமாணிக்கம்
Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
சங்கரய்யாவின் இளைய சகோதரர் என். ராமசாமி

 

சங்கரய்யாவின் நினைவிலிருக்கும் மற்றொரு சம்பவம் 1928 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர் போராட்டமாகும். அவ்வாண்டில் தென்னிந்திய ஆங்கிலேய ரயில்வே நிர்வாகம் நாகப்பட்டினம் மற்றும் போத்தனூர்  ரயில்வே பணிமனைகளை மூடி, ரயில்வே தொழிலாளிகளை பெருமளவு ஆட்குறைப்பு செய்ய முயன்றது. இதை எதிர்த்து ரயில்வே தொழிலாளிகள் மார்க்சீய அறிஞர் ம.சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் மற்றும் கிருஷ்ணசாமிப் பிள்ளை போன்ற தலைவர்களின் தலைமையில் அவ்வாண்டு ஜூலை 19 ஆம் தேதியன்று வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ரயில் போக்குவரத்து நின்றது. பல இடங்களில் வேலை நிறுத்தக்காரர்களுக்கும், ஆங்கிலேய காவல்துறையினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. தூத்துக்குடி மேலூர் ரயில்நிலைய கைகாட்டி மரம் வீழ்த்தப்பட்டது. காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் சங்கரய்யாவின் மாமாவும், அரசு பதிவிதழ் பெற்ற சித்த வைத்திய  மருத்துவருமான (ஆர்.ஐ.எம்.பி) பி.ஆர்.வரதராஜுலுவிடம் வந்து சிகிச்சை பெற்றனர். சங்கரய்யாவின் வீடு மேலூர் ரயில் நிலையம் அருகில் இருந்ததால் இந்த மோதலை அவரும் ராஜமாணிக்கமும் நேரில் காணமுடிந்தது.

1930 ஆம் ஆண்டில் நரசிம்மலு மதுரை ஹார்விமில்லில் பொறியாளரானார். எனவே குடும்பத்தினர் மதுரைக்கு குடிபெயர்ந்தனர். ராஜமாணிக்கமும், சங்கரய்யாவும் மூன்றாவது  வகுப்பில் சேர்க்கப்பட்டனர். ஈராண்டு காலத்திற்குப்பிறகு, அவர்கள் பாட்டனார் ராமசாமி, இவ்விருவரையும் தூத்துக்குடியில் படிக்க வைக்க விரும்பி மீண்டும் அங்கே அழைத்துச் சென்றார். அங்கே இரு சகோதரர்களும் சீனா வான நல்ல பெருமாள் பிள்ளை பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இருவரும் ஒரே வகுப்பில் படித்தனர். மகாதேவன் பிள்ளை என்ற சிறந்த தலைமை ஆசிரியர் இருந்தார். இதர ஆசிரியர்களும் சிறந்த ஆசிரியர்களாக இருந்தனர்.

பகலில் பள்ளிப்படிப்பு, மாலையில் தண்ணீர் தாங்கி மைதானத்தில் கால்பந்து விளையாட்டு என்று அவர்கள் படிப்பு தொடர்ந்தது.

சுயமரியாதை இயக்கம்

பிரபல காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராகவும் இருந்த பெரியார் ஈ.வெ.ரா, 1920 ஆம் ஆண்டுக்குப்பின் சமூக சீர்திருத்தப் பணியில் இறங்கினார்.

பிராமணிய போக்கை எதிர்த்தும், பிராமணரல்லாதோர் மற்றும் சமூகத்தின் அடித்தட்டுப் பகுதியில் ஆழ்த்தப்பட்டிருந்தோருக்கு சம உரிமை கோரியும், பெரும் இயக்கமொன்றைத் துவக்கினார்.

இந்தக் கொள்கையைப் பரப்பும் பொருட்டு அவர் 1925 ஆம் ஆண்டில் ‘குடியரசு’ என்ற ஏட்டையும் துவக்கினார். தமிழ்நாடு முழுவதும் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தினார்.

சங்கரய்யாவின் பாட்டனார் ராமசாமியும், இந்தப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்தின் உறுப்பினரானார். “குடியரசு’’ ஏட்டின் சந்தாதாரர் ஆனார். தன் குடும்பம் முழுவதையும் அவர் சுயமரியாதைக் குடும்பமாக்கினார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
முதலில் சங்கரய்யா, அவர் சகோதரி லட்சுமி காந்தம், மைத்துனர் எஸ்.கோபாலகிருஷ்ணன், மூத்த சகோதரர் எஸ்.என். ராஜமாதிக்கம்.

அவரது மூத்த மகன் வரதராஜூலுவின் திருமணத்தையும் சுயமரியாதை இயக்க முறையில் புரோகிதர்கள் இன்றி நடத்தினார். அழகிரிசாமி என்ற தமிழாசிரியர் தலைமையில் இந்தத் திருமணம் எவ்விதச் சடங்குகளுமின்றி நடைபெற்றது. கடவுள் மறுப்பு திருமணமாக இது இருந்ததால் ராமசாமியின் நெருங்கிய உறவினர்கள் அதைப் புறக்கணித்தனர். ஆனால் ராமசாமி எதைக் குறித்தும் கவலைப்படாமல் தன் நம்பிக்கைப்படியே திருமணத்தை நடத்தினார். இச்சம்பவமும், மேலும் “குடியரசு’’ ஏட்டைப் படித்து வந்தது, பெரியார் கூட்டங்களுக்குச் செல்வது போன்றவை ராஜமாணிக்கத்திற்கும், சங்கரய்யாவிற்கும் இளம் வயதிலேயே முற்போக்கான சிந்தனையோட்டம் ஏற்பட உதவி புரிந்தது.  விஞ்ஞான, சமூக வளர்ச்சியை விவரிக்கும் அறிஞர் சிங்காரவேலரின் கட்டுரைகளையும் அவர்கள் தவறாது படித்து வந்தனர். அவர்களின் மாமா வரதராஜூலு தூத்துக்குடி சுயமரியாதை இயக்கச் செயலாளராக சில ஆண்டுக்காலம் செயல்பட்டார்.

ராமசாமி நீதிமன்றப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், சுயமரியாதைக் கூட்டங்கள், மாநாடுகளில் கலந்து கொண்டார். ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

மீண்டும் மதுரைக்கு

ராஜமாணிக்கமும், சங்கரய்யாவும் எட்டாவது வகுப்பை முடித்தபின் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர்.அச்சமயத்தில் நரசிம்மலு மதுரை நகராட்சியில் பொறியாளராக இருந்தார். அவர்கள் வீடு மேலமாசி வீதியில் இருந்தது. அக்காலத்திய பிரபல நாடகக் கலைஞர்களான கே.பி.ஜானகியும், அவர் கணவர் எஸ்.குருசாமியும், அருகில் வசித்து வந்தனர்.

ராஜமாணிக்கமும், சங்கரய்யாவும் செயிண்ட் மேரீஸ் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இதன் தலைமை ஆசிரியராக திரு.அமலோற்பவம் பாதிரியார் இருந்தார்.

ஒன்பதாம் வகுப்பில் தேறியபின் சகோதரர்கள் இருவரும் யு.சி. உயர்நிலைப்பள்ளி என்றழைக்கப்படும் ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஜே.டி.மாணிக்கம் என்பவர் இங்கே தலைமை ஆசிரியராக இருந்தார்.

நன்றாகப் படித்து வந்த சங்கரய்யா 10வது வகுப்பில் படிக்கும்பொழுது ஆங்கில பேச்சுப் போட்டி, ஆங்கில கவிதை ஒப்பிப்பு போன்றவற்றில் பங்கெடுத்து பரிசுகள் பெற்றார்.

பள்ளி இறுதித்தேர்வு நடைபெற்றபொழுது அவருக்கு வயது குறைவாக இருந்தது. எனவே மருத்துவ விதிவிலக்குப் பெற்று தேர்வு எழுதினார்.

கல்லூரிப் படிப்பு

1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றிபெற்ற சங்கரய்யா, பட்டப்படிப்பிற்காக அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். வரலாற்றை பிரதான பாடமாகவும், தர்க்க இயலை துணைப்பாடமாகவும் எடுத்துக் கொண்டார். இவை நீங்கலாக தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களும் இருந்தன.

அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் மன்றம் இருந்தது. அது ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. சங்கரய்யா அந்த மன்றத்தின் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாணவர் மன்றமானது பல்வேறு அரசியல் தலைவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தியது. இவற்றில் அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்கத்தேவர், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பேசியுள்ளனர்.

1937 ஆம் ஆண்டில் ராஜாஜி மாகாண முதல்வராக இருந்தபோது மதுரைக்கு வந்தார். அவரை பிரபல காங்கிரஸ் தலைவர் ஏ.வைத்தியனாதய்யரின் வீட்டில் சங்கரய்யாவும், இதர மாணவர் மன்றப் பிரதிநிதிகளும் சந்தித்து அமெரிக்கன் கல்லூரிக்கு அவர் வந்து உரையாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டனர். ஆனால் ராஜாஜி ஒரு நிபந்தனை விதித்தார். கல்லூரி முதல்வர் அழைத்தால்தான், தான் வர முடியுமென்று கூறினார். அதன்படியே கல்லூரி முதல்வரும் ராஜாஜி உரையாற்ற வேண்டுமென அழைத்தார்.

ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிய ராஜாஜி, எழுதப்படிக்கத் தெரியாத மக்களுக்கு மாணவர்கள் எழுத்தறிவைப் போதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
தன் சக அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுடன் சங்கரய்யா. (இடதுபுறம்) வாழவந்தான், சங்கரய்யா, குப்புசாமி. 1941ஆம் ஆண்டில் முதல் சிறைவாசத்திற்கு முன்பு பிப்ரவரி மாதத்தில் எடுத்த நிழற்படம்.

அமெரிக்கன் கல்லூரியில் பரிமேலழகர் தமிழ் கழகம் இருந்தது. இந்தக் கழகமானது மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து கற்க வேண்டுமென்பதை உற்சாகப்படுத்துவதற்காக விவாதங்கள் மற்றும் பேச்சுப் போட்டிகளை நடத்தியது. பேச்சுப் போட்டிக்கான தலைப்பு ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் அறிவிக்கப்படும்.  ஒருமுறை “நாடு வளர நாட்டின் வளர்ச்சிப் பாதை’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. சங்கரய்யா அதில் பங்கேற்று 10 நிமிட நேரம் பேசினார். அதற்குப் பெரும் வரவேற்பு இருந்தது. அவருக்கு சிறந்த தமிழ் இலக்கிய நூல்கள் முதல் பரிசாகக் கிடைத்தன.

பின்னர் சங்கரய்யா அந்த கழகத்தின் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது கல்லூரி கால நினைவுகளை சங்கரய்யாவே கூறுவது பொருத்தமாக இருக்கும்.

‘அப்போது அமெரிக்கன் கல்லூரியில் திருவனந்தபுரத்திலிருந்தெல்லாம் வந்து ஏராளமான மாணவர்கள் தங்கிப்படித்தார்கள். பல மொழி, இன மக்களாகப் பிறந்து வளர்ந்திருந்தாலும், நான் படித்த காலங்களில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையாகவே வளர்ந்தோம். இன்றும்கூட,  அன்று என்னுடன் படித்த மாணவர்கள் தேசபக்தர்களாகவும், நாட்டையும், மக்களையும் நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

“1940ல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தபோது, காவல்துறையினருக்கும், மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அதில், கல்லூரியின் துணை முதல்வர் ரஞ்சிதம் அவர்கள் மாணவர்களுக்காக  நின்றது மறக்க முடியாதது. அதன்பின் காவல்துறையினரை வாபஸ் பெறச்சொல்லிவிட்டு நாங்களே பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டோம்.

“நான் படிக்கும் பொழுது பரிமேலழகர் கழகத்தின் சார்பில் பேச்சுப்போட்டிகள் நடக்கும். அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். கால்பந்து விளையாட்டிலும் பங்கேற்றேன். கல்லூரியில் வரலாற்றுக் கழகம் என்ற அமைப்பும் சிறப்பாக இயங்கியது. அதைப் பயனுள்ள ஜனநாயக விவாத அரங்காக அமைத்த பெருமைக்குரியவர் திரு.கார்மேகக்கோனார் என்ற பெருந்தகையாவார். திரு.ஜோதிமுத்து, திரு.ரஞ்சிதம், பிலிப்ஸ் கார்மேகக்கோனார் போன்ற ஆசிரியப் பெருமக்கள்  மாணவர்களின் சிந்தனைக்கும், ஜனநாயக உணர்வுகளுக்கும் மதிப்பளித்து வழி நடத்தியது. இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது…’’

1939 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் சங்கரய்யா, கல்லூரி கால்பந்துக் குழுவிலும் பங்கேற்றார். திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டார்.

தேசிய அரசியல் ஈர்ப்பு

1937-39 ஆம் ஆண்டுகளில் மதுரை நகரம் பல புதிய நிகழ்ச்சிப் போக்குகளைக் கண்டது. 1937 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கம், மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தலை நடத்தியது. இத்தேர்தலில் பங்கேற்பது என்று காங்கிரஸ் கட்சி 1936 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்து அதற்கான பிரச்சாரத்தில் இறங்கியது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் பங்கேற்பது அதுதான் முதல் தடவையாகும்.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியிலிருந்த ஆங்கிலேய ஆதரவு நீதிக்கட்சியை முறியடித்து வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 215 இடங்களில் காங்கிரஸ் கட்சி 159 இடங்களையும், நீதிக்கட்சி சில இடங்களையும் பெற்றன. ராஜாஜியை முதல்வராகக் கொண்டு காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது.

இத்தேர்தலில் மதுரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல காங்கிரஸ் தலைவர் என்.எம்.ஆர்.சுப்பராமனும், நீதிக்கட்சி சார்பில் இ.எம்.கோபாலகிருஷ்ணனும் போட்டியிட்டனர். அக்காலத்தில் வயதுவந்த  அனைவருக்கும் வாக்குரிமை கிடையாது. படித்தவர்கள் மற்றும் சொத்து உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. தமிழகத்தின் அரசியல் மையமான மதுரையில் பிரச்சார வேகம் அதிகமாயிருந்தது. நகரில் நடைபெற்ற கூட்டங்களில் சங்கரய்யா கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர்களின் உரைகளைக் கேட்டார்.

இத்தேர்தலில் மதுரையில் என்.எம்.ஆர்.சுப்புராமன் வெற்றி பெற்றார். ராமநாதபுரத்தில் நீதிக்கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் ராஜாவை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரும், திண்டுக்கல்லில் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி பாரதி மற்றும் விருதுநகரில் காமராஜர் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

மதுரையின் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடையே பிரதிபலிக்கும். அவர்களிடையே சுதந்திரப் போராட்ட இயக்கம், சமூக சீர்திருத்தம், அவற்றில் மாணவர் பங்கு போன்றவை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இதன் மூலம் தேசிய உணர்வு, தேசபக்த உணர்வு போன்றவை அவர்களிடையே மேலோங்க ஆரம்பித்தது. இதை, கல்லூரி முதல்வரான அமெரிக்கர் பிளிண்ட் விரும்பவில்லை என்ற போதிலும் இந்த உணர்வு மாணவரிடையே பலமாகப் பிரதிபலித்தது.

1938 ஆம் ஆண்டில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மதுரையில் பல தொழிலாளர் சங்கங்களுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை பசுமலை மகாலெட்சுமி மில், என்.எம்.ஆர்.நிட்டிங் கம்பெனி மற்றும் மீனாட்சி மில் தொழிலாளர் சங்கங்களாகும்.

மகாலெட்சுமி மில் தொழிலாளிகள் ஆறு ரூபாயாக இருந்த மாத சம்பளத்தை ஹார்வி மில்லில் தரப்படுவது போன்று ஒன்பது ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென்று கோரி, வேலை நிறுத்தம் செய்தனர். ஆனால் ராஜாஜியின் காங்கிரஸ் அமைச்சரவை சங்கத்தலைவர் தேவரையும், செயலாளர் வி.ராமநாதன் மற்றும் ஏ.செல்லையா உள்ளிட்டு 450 பேரைக் கைது செய்தது.

தேவர் மீதான வழக்கு பிரபலமாக விளங்கியது. அது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நாட்களில் மதிய நேரத்தின்பொழுது சங்கரய்யாவும் வேறு சில மாணவர்களும் நீதிமன்றத்திற்கு சென்று அந்த விசாரணையைக் கண்டதுண்டு. இந்த வழக்கில் தேவருக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது என்றாலும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ராஜாஜி அரசாங்கம் அவரை 10 நாட்களிலேயே விடுதலை செய்தது.

சிறிது காலத்திற்குப் பிறகு முத்துராமலிங்கத் தேவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு சங்கரய்யாவிற்கு கிடைத்தது. சங்கரய்யாவின் நெருங்கிய கல்லூரி நண்பர்களுள் ஒருவரான பூவண்ணன் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். தேவருக்கு நன்கு அறிமுகமானவர். அவர் ஒரு நாள், சங்கரய்யாவை, தேவரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். இந்தச் சந்திப்பு வடக்குமாசி வீதியிலிருந்த சசிவர்ணத் தேவர் வீட்டில் நடைபெற்றது. தேவர் இவ்விருவரிடமும் அமெரிக்கன் கல்லூரி நிலைமை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களின் தேசிய மனோநிலை, கல்லூரி முதல்வர் அதை விரும்பாதது போன்றவற்றை சங்கரய்யா விவரித்துக் கூறினார். பின்னர் தேவர், நாட்டு நிலைமை குறித்து எடுத்துக் கூறினார். இறுதியில் இவ்விருவரும் அவரிடமிருந்து விடைபெறும் பொழுது “பிரதர், நல்லா படியுங்கள், நாங்க இருக்கிறோம், பார்த்துக் கொள்கிறோம்’’ என்று கூறி உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அதே 1938 ஆம் ஆண்டில் பிரபல காங்கிரஸ் தலைவர் ஏ.வைத்தியநாதய்யர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்பிரவேசம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி கோவிலில் அதுவரை தலித் மக்கள் மட்டுமல்ல, மிக பிற்படுத்தப்பட்ட மக்களும் நுழைய அனுமதிக்கப்பட்டதில்லை.

எனவே, வைதீக பழமைவாதிகள் இந்தக்கோவில் நுழைவு நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, ராஜாஜி கூறியபடி வைத்தியநாதய்யர், முத்துராமலிங்கத்தேவரைச் சந்தித்து ஆதரவு கோரினார். உடனே தேவர், கோவில் நுழைவை எதிர்ப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் யாரும் இடையூறு செய்யத் துணியவில்லை. கோவில் நுழைவு சிறப்பாக நடைபெற்றது.

சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் அம்மன் சன்னதி வாயிலில் நின்று இந்நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு ராஜாஜி அனுமதியளித்தார். உதவினார் என்பதற்காக பிராமண சமூகத்தினர் அவர் மீது ஆத்திரம் கொண்டனர். அவர் அடுத்தாற்போல் மதுரைக்கு வந்தபொழுது பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அவருக்கு கல்பாலத்தில் கருப்புக்கொடி காண்பித்தனர்.

அதே 1938 ஆம் ஆண்டில் மற்றொரு சம்பவமும் நடைபெற்றது. சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ராஜாஜி, உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று வகுப்புகளில் இந்தி ஒரு கட்டாய பாடமாக்கப்படும் என்று அறிவித்து அதற்காக ஒரு சட்டமுன் வரைவையும் (மசோதா) சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதை சுயமரியாதை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. “இது தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோருக்கு எதிரான சீர்குலைவு திட்டம்” என்று சுயமரியாதைக்காரர்களால் வலுவாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

“இந்தியாவிற்கு ஒரு பொது மொழி இருக்க வேண்டும். இந்தியாவின் தேசிய மொழியாக இருப்பதற்கான தகுதி இந்தி மொழிக்கே உள்ளது” என்று ராஜாஜி கூறினார்’’…

இந்திய அரசியலில் தென்னிந்தியர்கள் பங்கேற்க வேண்டுமானால் இந்தி மொழியை கற்காமல் அது முடியாது என்பது ராஜாஜி கருத்து…

இந்தியை கட்டாயப் பாடமாக்கும் போக்கை மறை மலையடிகள், உ.வே.சாமிநாத அய்யர், ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்ற தமிழறிஞர்களும் சோமசுந்தர பாரதி, திரு.வி.க. மற்றும் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு போன்ற காங்கிரஸ் தலைவர்களும் கண்டித்தனர்.

“தமிழ்நாட்டில் எம்.சிங்காரவேலு மற்றும் ப.ஜீவானந்தம் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் பிரிவினரும் காங்கிரஸ் அரசின் இந்தி தொடர்பான அரசாணை தேவையற்றது என்றும் அர்த்தமற்றது என்றும் கண்டித்தனர்.

பள்ளிகளில் இந்தித்திணிப்பை எதிர்த்து சுயமரியாதை இயக்கம், ராஜாஜிக்கு அவர் செல்லும் இடங்களில் கருப்புக் கொடி காட்டும்படி வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து அவர் மதுரைக்கு வந்தபோது  400 பேர் அவர் வரும் வழியில் நின்று கருப்புக்கொடி காண்பித்து “ராஜாஜி திரும்பப்போ’’ என முழக்கமிட்டனர். சி.எம்.வி.அச்சக உரிமையாளர் வேணு கோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கரய்யாவும், அவர் அண்ணன் ராஜமாணிக்கமும் பங்கேற்று ராஜாஜிக்கு கருப்புக்கொடி காண்பித்தனர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
திருவனந்தபுரம் தேசியக் கவுன்சில் கூட்டத்திற்கு வந்திருந்தபோது எடுத்தபடம். ஜீவா, பூபேஷ் குப்தா, பி. ராமமூர்த்தி, என். சங்கரய்யா, ஜி. எஸ். மணி.

சிறிது காலத்திற்குப் பிறகு சுயமரியாதை இயக்கம்

இந்தித் திணிப்பை எதிர்த்து மறியல் போராட்டம் நடத்தி ஏராளமானோரை சிறைக்கு அனுப்பியது. சங்கரய்யாவும், ராஜமாணிக்கமும் அவர்களின் இளைய மாமா சுப்பையாவை (போஜா) சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்கச் செய்தனர். அவரும் அதன்படி மறியலில் ஈடுபட்டு 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்று சிறை சென்றார்.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி

1938-39 ஆம் ஆண்டுகளில் மதுரையில் உருவாகி வந்த பலமான அமைப்பு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியாகும்.

காங்கிரஸ் – சோசலிஸ்ட் கட்சி என்பது 1934ஆம் ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன் முயற்சியால் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டின்போது உருவாக்கப்பட்டதாகும். இது காங்கிரஸ் கட்சியை சோசலிசப் பாதைக்கு கொண்டுவர வேண்டும், அதற்காக விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம் போன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலும் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்பதை தன் லட்சியமாகக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் பிரபல காங்கிரஸ் தலைவர்களாக விளங்கிய பி.ராமமூர்த்தி, ஜீவா, பி.சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. (அய்யங்கார்) போன்றோர் இந்த அமைப்பை உருவாக்குவதில் முன்நின்றனர். இதே போல் மலபாரில் ஏ.கே.கோபாலன், கிருஷ்ணபிள்ளை, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்றோர் இதில் முக்கியப் பங்கேற்றனர்.

அச்சமயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருந்ததால், அது தலைமறைவாகச் செயல்பட்டு வந்தது. பின்னர், ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கம்யூனிஸ்டு களும், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்த தீவிர ஊழியர்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈர்த்தனர். இவ்வாறு 1936ஆம் ஆண்டில் தமிழகத்தில் பி.ராமமூர்த்தி, ஜீவா உள்ளிட்ட 9 பேரைக் கொண்ட முதல் கம்யூனிஸ்ட் குழு உருவானது.

அச்சமயத்தில் தென் தமிழகத்தில் முத்துராமலிங்கத் தேவர், எஸ்.குருசாமி, அவர் துணைவியார் கே.பி.ஜானகி, ஏ.செல்லையா, தூத்துக்குடி அண்ணாச்சி சங்கர நாராயணன் போன்றோர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பிரபலத் தலைவர்களாக விளங்கினார்கள்.

மதுரை நகர் காங்கிரஸ் குழுவிற்கு நடந்த தேர்தலில் கே.பி.ஜானகி, எஸ்.குருசாமி உள்ளிட்ட அணி, பிரபல காங்கிரஸ் தலைவர் ஏ.வைத்தியநாதய்யர் தலைமையிலான அணியைத் தோற்கடித்து நகர கட்சிப் பொறுப்பை கைப்பற்றியிருந்தது. கே.பி.ஜானகி மதுரை நகர காங்கிரஸ் குழுவின் செயலாளராக இருந்தார்.

காலப்போக்கில் சென்னையிலிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் முயற்சியால் கே.பி.ஜானகி, எஸ்.குருசாமி, ஏ.செல்லையா ஆகியோர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் ஆனார்கள்.

இதே காலகட்டத்தில், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்காக ஏ.கே.கோபாலன், சுப்பிரமணிய சர்மா போன்ற ஊழியர்கள் கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் சுப்பிரமணிய  சர்மா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தவர் ஆவார்.

ஏ.கே.கோபாலனும், சர்மாவும், முதலில் தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடையேயிருந்து தேசிய மனப்பான்மை கொண்டவர்களை கம்யூனிஸ்டுகளாக்கும் பணியில் இறங்கினார். இதைத்தொடர்ந்து அவர்கள் மாணவர் அரங்கத்தில் சங்கரய்யாவிடம் தொடர்பு கொண்டனர். ஏ.கே.கோபாலனும், சர்மாவும் மாறி மாறி மதுரைக்கு வர ஆரம்பித்தனர். திண்டுக்கல் வழியாக மதுரைக்கு வரும் ஏ.கே.கோபாலன், கோரிப்பாளையத்திற்கு வந்து சேர்வார். சங்கரய்யா, அங்கே குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்து கோபாலனை அவர் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வார்.

சில சமயங்களில் கோபாலன் அமெரிக்கன் கல்லூரி விடுதியிலேயே தங்குவதற்கு சங்கரய்யா ஏற்பாடு செய்வதுண்டு. சர்மாவும் இதேபோல் வந்து செல்வதுண்டு.

இவ்விருவரும் மதுரையிலுள்ள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்கள்.

இவ்வாறு, சங்கரய்யாவிற்கு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி பெயரில் செயல்பட்டு வந்த எஸ்.குருசாமி, கே.பி.ஜானகி, செல்லையா, வி.ராமநாதன் மற்றும் பல ஊழியர்களுடன் தொடர்பேற்பட்டது.

இதைத்தொடர்ந்து இவர்களனைவரும் அடிக்கடி சந்தித்து விவாதிப்பார்கள். கட்சியிலிருந்து வரும் ஆவணங்களைப் படித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வார்கள்.

அச்சமயத்தில் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி “பாட்டாளி வர்க்கப்பாதை’’ (Proletarian path) என்ற ஆங்கில ஏட்டை வெளியிட்டு வந்தது. அது, மதுரையில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை தலைவராகக் கொண்டு நடத்தப்பட்டு வந்த ‘அஹிம்சா இன்ஷுரன்ஸ் நிறுவனம்’ என்ற காப்பீட்டு நிறுவன அலுவலகத்திற்கு வந்து சேரும். அங்கிருந்து சசிவர்ணத் தேவர் மூலம் குருசாமிக்கு வந்து சேரும். அதைப்படித்து இந்த கம்யூனிஸ்ட் ஆதரவாளர் குழுவினருக்கு தமிழில் கூறும் பணியை சங்கரய்யா செய்வார்.

8. மதுரை மாணவர் சங்கம்

1938 ஆம் ஆண்டில் மதுரையில் சுதந்திரப் போராட்டத்தின் வீச்சும், சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (MSO) அமைக்கப்பட்டு அது. பல கிளர்ச்சிகளை நடத்தி வந்ததும், சேர்ந்து மதுரையில் மாணவர் சங்கத்தை துவக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதலில் மதுரையில் மாணவர் சங்கத்தைத் துவங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் இது குறித்து விவாதித்தனர்.  விவாதத்தின் முடிவில் மதுரையில் மாணவர்கள் சங்கத்தை துவக்குவதென்று முடிவானது.  அந்த மாநாட்டைத் துவக்கி வைக்க பிரபல இளம் கம்யூனிஸ்ட் பாரிஸ்டர் மோகன் குமாரமங்கலத்தை அழைப்பதென்றும் முடிவானது. மோகன் குமாரமங்கலமும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

குறித்த நாளில் மாணவர்கள் மாநாடு மதுரை ரீகல் அரங்கத்தில் (விக்டோரியா எட்வர்ட் ஹாலில்) துவங்கியது. அரங்கத்தினுள்ளும், அதற்கு வெளியேயும் ஏராளமான மாணவர்கள் திரண்டிருந்தனர்.

மாநாட்டில் மோகன் குமாரங்கலமும், என்.சங்கரய்யாவும் உரையாற்றினார். இறுதியில் அங்கேயே மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கரய்யா அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதிலும் மாணவர் சங்கத்தை உருவாக்கும் பணி தொடங்கியது.

அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும், மாணவர் சங்கத்தை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்களுமான ராஜலிங்கம், ரங்கசாமி சகோதரர்களின் வீடு கமாண்டிங் ஆபீசர் தெருவில் இருந்தது. அந்த வீட்டின் மாடியே மாணவர் சங்க அலுவலகமாக செயல்படத் தொடங்கியது.

மதுரை மாணவர் சங்கம் துவங்கப்பட்டபின், அது பெரும் வளர்ச்சியைப் பெற ஆரம்பித்தது. கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே உறுப்பினர் சேர்ப்பு என்பதும் துவங்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பின் மாணவர் சங்கம் மதுரையில் எழுத்தறிவு இயக்கத்தைத் துவங்கியது. காங்கிரஸ் தலைவர் காமராஜர் அதைத் தொடங்கி வைத்தார். எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி போதிக்கும் பணி இவ்வாறு விறுவிறுப்பாகத் ஆரம்பித்தது.

மாணவர் சங்கம் மக்கள் பிரச்சனைகளையும் எடுத்துக் கொண்டது. அடிக்கடி மாணவர்களின் பெரும் ஊர்வலங்கள் நடக்கும். “சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம்’’ என்று பொறிக்கப்பட்ட மாணவர் சங்கக் கொடியை கரங்களில் ஏந்தி ஏராளமான மாணவர்கள் அமெரிக்கன் கல்லூரியிலிருந்து துவங்கி மாசி வீதிகளில் ஊர்வலமாகச் சென்று ஜான்சிராணி பூங்காவை அடைவார்கள். அங்கே நடைபெறும் கூட்டத்தில் சங்கரய்யா உள்ளிட்ட மாணவர் தலைவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு உரை நிகழ்த்துவார்கள்.

சிறிது காலத்திற்குப் பிறகு சங்கரய்யா உத்தமபாளையத்திற்குச் சென்று அங்கே மாணவர் சங்கத்தைத் துவக்கி வைத்தார். அங்கே நடைபெற்ற துவக்கக் கூட்டத்தில் ஜமால் மொய்தீன், குலாம் மொய்தீன் சகோதரர்களும், அ.அப்துல்வஹாப், எஸ்.பி. முகமது இப்ராஹிம் போன்ற மாணவர்களும் பங்கெடுத்தனர். ஜமால் மொய்தீனும், குலாம் மொய்தீனும் உத்தமபாளையத்தின் மிகப்பெரிய நிலக்கிழாரான ஹாஜி கருத்தா ராவுத்தரின் புதல்வர்கள். இந்த ஹாஜியார்தான் பின்னாட்களில், உத்தமபாளையத்தில் அவர் பெயரில் கல்லூரி ஒன்றை நிறுவினார். இன்றும் அது நடைபெற்று வருகிறது.

சங்கரய்யாவின் துவக்க உரைக்குப்பின், அதே இடத்தில் ‘உத்தமபாளையம் மாணவர் சங்கம்’ உருவாக்கப்பட்டது. ஜமால் மொய்தீன் பின்னாட்களில் பிரபல கம்யூனிஸ்ட் தலைவராகவும் விளங்கினார்.

இக்கூட்டத்திற்குப் பின் சங்கரய்யா திண்டுக்கல்லுக்குச் சென்று அங்கே மாணவர் சங்கத்தைத் துவக்கி வைத்தார். தோட்டம் ஒன்றில் நடைபெற்ற இந்தத் துவக்கக் கூட்டத்தில் கே.டி.அரசு, சி.பி.ராஜன் உள்ளிட்டு 60 மாணவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் ‘திண்டுக்கல் மாணவர் சங்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டது.

அமெரிக்கன் கல்லூரி நிர்வாகமும் குறிப்பாக அதன் முதல்வர் பிளிண்டும் ஆத்திரம் கொண்டனர். இப்படியே சென்றால் மாணவர் சங்கத்தின் செல்வாக்குப் பரவுமென்று அச்சம் கொண்டார். எனவே சங்கரய்யாவை கல்லூரியிலிருந்து வெளியே அனுப்பத் திட்டமிட்டனர். அதன்படி கல்லூரி முதல்வர், சங்கரய்யாவை அழைத்து கல்லூரி மாற்றுச் சான்றிதழ் கொடுத்து விடுவதாகவும் அவர் வேறு கல்லூரிக்குப் போய்விட வேண்டுமென்றும் கூறினார். சங்கரய்யா, உடனே கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், தங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தவருமான சுப்பிரமணிய சர்மாவைச் சந்தித்து யோசனை கேட்டார். கல்லூரி நிர்வாகம் இந்த உத்தரவை திரும்பப் பெறாவிடில் வேலைநிறுத்தம் நடக்கும் என்று எச்சரிக்கும்படி சர்மா கூறினார். சங்கரய்யாவும் அதன்படியே செய்தார்.

வேலை நிறுத்தம் நடந்தால் கல்லூரி முழுவதும் பாதிக்கப்பட்டு விடுமென்று அஞ்சிய நிர்வாகம், சங்கரய்யாவை வெளியேற்றும் உத்தரவை திரும்பப்பெற்றது.

1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

அந்த செப்டம்பர் முதல் தேதியன்று இங்கிலாந்து நாடு ஜெர்மனி மீது தாக்குதல் தொடுத்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் மூண்டது. தலைமறைவாகச் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி இந்த யுத்தம் என்பது ஏகாதிபத்திய நாடுகள், உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்கான யுத்தம் எனக்கூறி அதை எதிர்க்கும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. லட்சக்கணக்கான பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

இந்த யுத்தத்தை எதிர்த்து அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். கல்லூரிக்குள் காவல் துறையினர் வர ஆரம்பித்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு பின் நிற்பது பூவண்ணன், சங்கரய்யா மற்றும் சிவகங்கை ராமச்சந்திரன் என்று புரிந்துகொண்ட கல்லூரி நிர்வாகம் அம்மூவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியது.

இதைக்கண்ட சங்கரய்யா ஆங்கிலத்தில் ஒரு துண்டு பிரசுரம் எழுதினார். அது ஒரு அச்சகத்தில் ரகசியமாக அச்சிடப்பட்டு யாருக்கும் தெரியாமல் கல்லூரி விடுதியில் உணவருந்தும் இடத்தில் வைக்கப்பட்டது. சிலமணி நேரத்திற்குள் அது கல்லூரி முழுவதிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரி முதல்வர் எப்.எம்.பிலிண்ட், ரகசிய காவல்துறையின் மூலம் அதைச் செய்தது சங்கரய்யா என தெரிந்து கொண்டு அவரை வரவழைத்தார். இனி இவ்வாறு செய்தால் கல்லூரியை விட்டு வெளியேற்றி விடுவேன் என மிரட்டினார். அத்துடன் மாணவர் சங்கத்தலைவர்களையும் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தார்.

செப்டம்பர் மாதத்தின் மற்றொரு நிகழ்ச்சிபோக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மதுரை வருகையாகும்.

செப்டம்பர் முதல் தேதியன்று சென்னையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் பேச வந்த பிரபல காங்கிரஸ் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு இரண்டாவது உலக யுத்தம் அன்று துவங்கிய தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அவர் கூட்டத்தில் உரையாற்றியதும் கல்கத்தா திரும்ப விரும்பினார். ஆனால் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் மதுரைக்கு வரச் சம்மதித்தார்.

செப்டம்பர் 4 ஆம் தேதி காலையில் ரயில் மூலம் மதுரைக்கு வந்த நேதாஜி போஸூக்கு ரயில் நிலையத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மதுரை நகர் காங்கிரஸ் குழு சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சங்கரய்யா உள்ளிட்டு ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர். பகலில் சென்ட்ரல் திரையரங்கில் சங்கரய்யா ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் கூட்டத்தில் நேதாஜி போஸ் உரையாற்றினார்.

அவர் சிறிது காலத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து பார்வர்டு பிளாக் (முன்னேற்ற கட்சி) கட்சியை துவக்கியிருந்ததால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அவரது வருகையைப் புறக்கணிக்க வேண்டுமென்று அறிக்கை விட்டிருந்தது. ஆனால் ஏ. செல்லையா, கே.பி.ஜானகி ஆகியோர் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த மதுரை நகர் காங்கிரஸ் குழு இந்த அறிக்கையை நிராகரித்து நேதாஜி போஸூக்குப் பெரும் வரவேற்பளித்தது.

அன்று பகலில் நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேசியக்கொடி ஏற்றுவித்த சுபாஷ் போஸூக்கு ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். அன்று மாலை நடைபெற்ற மிகப்பெரும் கூட்டத்திலும் அவர் உரையாற்றினார்.

இதுவே மதுரைக்கு அவருடைய கடைசி வருகையாக முடிந்துவிட்டது.

9. கட்சி உறுப்பினர்

தமிழகத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி விறுவிறுப்பாகச் செயல்பட்டு வந்த 1937ஆம் ஆண்டில் அது ‘ஜனசக்தி’ ஏட்டைத் துவங்கியது. ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தொடங்கிய அந்த ஏட்டில் மக்கள் பிரச்சனைகள் குறித்தும், மார்க்சியம்-லெனினியம் குறித்தும் பல கட்டுரைகள் வெளிவரலாயின. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரால் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட்டுகளால் இது நடத்தப்பட்டது.

சென்னையிலிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு, அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களான பி.சுந்தரய்யா மற்றும் எஸ்.வி. காட்டே ஆகியோர் வழிகாண்பித்து வந்தனர். அதேசமயத்தில் கோவை, மதுரை மற்றும் நெல்லையிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு ஏ.கே. கோபாலன், சுப்ரமணிய சர்மா, என்.சி. சேகர் மற்றும் ராமச்சந்திர நெடுங்காடி போன்ற கேரள கம்யூனிஸ்டுகள் வழிகாட்டி வந்தனர். குறிப்பாக ஏ.கே.கோபாலனும், சுப்ரமணிய சர்மாவும் அண்ணாமலை, திருச்சி மற்றும் மதுரை போன்ற இடங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் தீவிர மனோபாவங்கொண்ட மாணவர்களை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈர்ப்பதில் முனைப்பாக இருந்தனர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
1944 ஆம் ஆண்டில் சங்கரய்யா மதுரை மாவட்டச் செயலாளராக ஆனபோது ‘ஜனசத்தி’ இதழின் புகைப்படக்கலைஞர் ஜே.எம். கல்யாணம் எடுத்த நிழற்படம். இது ‘ஜனசக்தி’யிலும் வெளிவந்தது.

இந்த முயற்சிகளைத் தொடர்ந்து 1939 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளை உருவாக்கும் பணி தொடங்கியது.

இதன்படி 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அது தேசபக்தர்களும், காங்கிரஸ் சோசலிஸ்டுகளான வி.ராமனாதன், ஏ.செல்லையா, எஸ்.குருசாமி, கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், மாணவர் என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது.

சமூக சீர்திருத்தம், கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளைக் கொண்டிருந்த சுயமரியாதை இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டிருந்த சங்கரய்யா 1937 ஆம் ஆண்டிலிருந்து ‘‘தேச விடுதலை’’ என்ற லட்சியத்தைக் கொண்டிருந்த தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த திட்டம் எது அனைத்து மக்களையும் பசி, பட்டினியிலிருந்து விடுவிக்கும் வழி எது போன்றவை குறித்து சக மாணவர்களிடம் நடத்திய விவாதங்கள் பேச்சுப்போட்டிகள் விளைவாக சங்கரய்யா ஒரு முடிவிற்கு வந்தார். மேலும்  அக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே பூரண சுதந்திர தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அனைவருக்கும் பயனளிக்கும் தீவிரமான திட்டம் தேவை என்று அவர் கருதினார். இத்தருணத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு அவருக்கு புதிய வழியைக் காண்பித்தது. மார்க்சியம் மட்டுமே மனித குலத்திற்கு வழிகாட்டும் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

இந்தப் புரிதல் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராவதற்கு இட்டுச் சென்றது. கட்சி மீது தடை விதிக்கப்பட்டிருந்ததால் இந்தக் கிளையின் செயல்பாடுகள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு புனைப்பெயர் கொடுக்கப்பட்டிருந்தது.

10. மொட்டையரசு பயிற்சி முகாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள தனது ஊழியர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கும் பொருட்டு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஒரு அரசியல் வகுப்பை நடத்தியது. 15 நாட்கள் நடைபெற்ற இந்த வகுப்பு திருப்பரங்குன்றம் அருகே உள்ள மொட்டையரசு என்ற இடத்தில் நடைபெற்றது.

மதுரை நகர காங்கிரஸ் குழுவின் பொறுப்பில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி முகாமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான குமாரசாமி ராஜா திறந்து வைத்தார். இந்த அரசியல் வகுப்பில் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எஸ்.குருசாமி, சங்கரய்யா, காங்கிரஸ் தலைவர் சீனிவாசவரதன், திண்டுக்கல் இளம் கம்யூனிஸ்ட் ஏ.சின்னச்சாமி உள்ளிட்டு 60 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஏ.கே.கோபாலன், சுப்ரமணிய சர்மா மற்றும் ராமச்சந்திர நெடுங்காடி ஆகிய மூவரும் அரசியல் வகுப்புகள் நடத்தினர்.

இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு ராகவ மாரார் என்ற மலபார் தோழர் தொண்டர்படை பயிற்சி அளித்தார். இந்த அரசியல் வகுப்பின் உணவுக்காக கே.பி.ஜானகி தனது நகைகள் சிலவற்றை விற்று பணம் கொடுத்தார்.

அச்சமயத்தில் பொன்மலையிலிருந்து மதுரைக்கு மாற்றலாகி வந்திருந்த ரயில்வே ஊழியர் கே.அனந்த நம்பியாரையும் இதில் பங்கேற்க சங்கரய்யா அழைத்து வந்தார்.

இந்த அரசியல் வகுப்பின் உள்ளார்ந்த நோக்கம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் நாட்டின் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளோடு சேர்ந்து விவரித்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதுதான்.

இந்த மாநாட்டில் ஏ.கே.கோபாலனின் உரையை தமிழாக்கம் செய்யும் பொறுப்பு சங்கரய்யாவிற்குத் தரப்பட்டது.

இந்த வகுப்புகள் நடைபெற்று வரும்பொழுது ஒரு நாள் மாணவர் சங்க விலாசத்திற்கு ஏ.கே.கோபாலன் பெயருக்கு தந்தி வந்தது. ‘மனைவிக்குப் பிரசவமாகிவிட்டது. மாமனார் வருகிறார்’ என்று அந்த தந்திச் செய்தி கூறியது. சங்கரய்யா அந்தத் தந்தியை ஏ.கே.கோபாலனிடம் கொடுத்தார். அதைப்படித்த கோபாலன், தன்னைக் கைது செய்ய கைது உத்தரவு (வாரண்ட்) பிறப்பிக்கப் பட்டுள்ளதென்றும், தன்னைக் கைது செய்ய காவலர்கள் வருகிறார்கள் என்றும் கூறினார். எனவே அவர் உடனடியாக ஒரு காரில் கடமலைக்குண்டு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் கூறியது போலவே காவல்துறையினர் அடுத்த நாள் அந்த முகாமை சுற்றி வளைத்து ஏ.கே.கோபாலனைத் தேடினர். அவர் அகப்படாததால் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர். ஆனால் முகாம் தொடர்ந்து நடந்தது.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
2002ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது மாநாடு (இடமிருந்து வலம்) ஆர். நல்லகண்ணு, ஆர்.வெங்கிடு, என். வரதராஜன், சங்கரய்யா மற்றும் ஆர். உமாநாத்.

இந்த அரசியல் பயிற்சி முகாமைக் குறித்த தன் மனப்பதிவை ஏ.கே.கோபாலன் பின்னாட்களில் தான் எழுதிய ‘நான் என்றும் மக்கள் ஊழியனே’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்:

“மதுரை மாநகரம் காங்கிரசின் கேந்திர மையமாக விளங்கியது. ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் ஹார்வி மில்லில் வேலை செய்து வந்தனர். யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்சி அங்கே தொழிலாளர் மத்தியில் செயலாற்றி வந்தது. ஆகவே, விரிவானதோர் முகாமை அங்கே நடத்த எல்லாவிதமான வசதிகளும் இருந்தன. மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றம் என்ற இடத்தில் முகாமைத் துவக்கினோம். ஆனால் பயிற்சி பூர்த்தி செய்வதற்குள் தலைமறைவாகப் போக வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டது. கைது செய்யப்படுவேன் என்று தெளிவான தகவல் கிடைத்தது.

“இந்தப் பயிற்சி முகாம்கள், நடைபெறவிருக்கும் சுதந்திரப் போராட்டத்திற்குத் தேச பக்தர்களைப் பக்குவமடையச் செய்தன என்பது மட்டுமின்றி அதுவரையிலும் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தும், ஒருவரோடு ஒருவர் ஒத்துழையாமலும் இருந்து வந்த காங்கிரஸ்காரர்களையும், காங்கிரஸ் சோசலிஸ்டுகளையும் ஒருங்கிணைந்து செயலாற்ற வைக்கும்படியான ஓர் சூழ்நிலையைச் சிருஷ்டிக்கவும் பயன்பட்டது.

“காந்தியவாதியான வைத்தியநாதய்யர், ஜில்லா போர்டு தலைவர் குமாரசாமி ராஜா, காமராஜ் நாடார், ராமமூர்த்தி, செல்லையா ஆகியோரை ஒரே அரங்கில் செயல்படுத்த இந்த முகாம் உதவி புரிந்தது…!’’

சிறிது காலத்திற்குப் பிறகு நாகமலை புல்லூற்றில் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ரகசியமாக நடத்தப்பட்ட இந்த முகாமில் ஏ.கே.கோபாலன், சுப்ரமணிய சர்மா ஆகிய இருவரும் வகுப்புகள் நடத்தினர். ஒருநாள் மட்டுமே நடைபெற்ற இந்த வகுப்பில் கே.பி.ஜானகியம்மாள், பங்கஜத்தம்மாள், முத்துச்சாமி, சங்கரய்யா உள்ளிட்டு 70 பேர் வரை பங்கேற்றனர்.

11. அண்ணாமலை போராட்டமும் மதுரையில் பிரதிபலிப்பும்

1941 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர்களின் பெரும் கொந்தளிப்பைக் கண்டது. ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்கெதிராக அங்கே மாணவர்கள் கொதித்தெழுந்தனர். இதைக்கண்டு ஆங்கிலேய அரசாங்கம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி எஸ்.ராமகிருஷ்ணன், மீனாட்சி உள்ளிட்டு ஆறு மாணவ, மாணவிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இதைக் கண்டித்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன.

இந்தக் கொடூரமான ஒடுக்குமுறையைக் கண்டித்து தமிழகத்தின் நகரங்களில் மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அப்பொழுது மதுரையில் தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், இந்த அடக்குமுறைக்கெதிராக மதுரையில் பெரும் இயக்கத்தை நடத்தும்படிக் கூறி சங்கரய்யாவிற்கு தகவல் அனுப்பினார்.

அண்ணாமலை ஒடுக்குமுறையைக் கண்டித்து மதுரையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முனகால பட்டாபி சீத்தாராமய்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்படி சங்கரய்யாவும் அழைக்கப்பட்டார். அவரும் அதில் கலந்து கொண்டு ஆவேசமான உரை நிகழ்த்தினார்.

பின்னர் சங்கரய்யா பின்வரும் துண்டுப் பிரசுரத்தை ஆங்கிலத்தில் எழுதினார்.

“மண்டைகள் உடைகின்றன எலும்புகள் நொறுங்குகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தம் ஆறாக ஓடுகிறது.’’

இந்தத் துண்டுப்பி ரசுரமானது ஆங்கிலேய அரசாங்கத்தை கடுமையாகச் சாடியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்திய இந்தப்பிரசுரம் ரகசியமாக அச்சிடப்பட்டு மதுரை மாணவர்களிடையே பரவலாக விநியோகிக்கப்பட்டது.

இதைக் கண்ட காவல் துறையினர் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் விடுதியைச் சோதனையிட்டனர். மாணவர் சங்கத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான நாராயணசாமியின் அறையில் தட்டச்சு செய்யப்பட்ட இந்த துண்டுப் பிரசுரப்பிரதி கைப்பற்றப்பட்டது. அவர் உடனே கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் உடனே வேலைநிறுத்தம் செய்தனர். கல்லூரியின் கால்பந்து மைதானத்தில் பெரும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பெருந்திரளான மாணவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு மகாலெட்சுமி பாரதி தலைமை வகித்தார். இவர் பிரபல காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பாரதியின் மகளாவார். நாராயணசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும். அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் சங்கரய்யாவும், குலாம் மொய்தீனும் பேசினர். இந்தக் கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் காவல் துறையினர் பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட நாராயணசாமி மதுரை சிறைச்சாலைக்குள்ளேயே விசாரிக்கப்பட்டார். சட்டவிரோதப் பிரசுரம் வைத்திருந்ததற்காக அவருக்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.  நாராயணசாமி கைது செய்யப்பட்டது, தன் மீது காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது ஆகியவற்றைக் கண்ட சங்கரய்யா, தான் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்பதை உணர்ந்தார். பி.ஏ. தேர்வை அவர் முடித்ததும், அவரது  தந்தையார் அவரை வழக்கறிஞர் படிப்பிற்காக அனுப்ப வேண்டுமென்று கருதி வந்ததையும் சங்கரய்யா நன்கறிவார். எனினும் தேச விடுதலை என்ற லட்சியம்தான் அவரது உந்து சக்தியாக இருந்தது. தான் கைது செய்யப்படுவதையும் எதிர்நோக்க அவர் தயாராகிவிட்டார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
கே. பி. ஜானகியம்மாள்

18 மாத சிறைவாசம்

அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தைத் தொடர்ந்து மதுரை நகரில் மாணவர்களின் பெரும் ஊர்வலம் நடைபெற்றது. இவற்றையெல்லாம் கண்ட ஆங்கிலேய அரசாங்கம், சங்கரய்யாவை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவெடுத்தது.

அதன்படி பிப்ரவரி 28 ஆம் தேதியன்று காலையில் காவல்துறை ஆய்வாளர் தீச்சட்டி கோவிந்தன், சங்கரய்யாவைக் கைது செய்தார். அரசமரம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரிடம் அங்கிருந்த ரகசிய காவல்துறை உயர் அதிகாரி, சங்கரய்யா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அன்று மாலை மாரியம்மன் தெப்பக்குளம் சிறப்பு நீதிபதியிடம் கொண்டு செல்லப்பட்ட சங்கரய்யா, பின்னர் மதுரை மத்திய சிறையில் ரிமாண்ட் கைதியாக வைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு விசேஷ வகுப்பு அளிக்கப்பட்டது. அங்கே அவர் மாணவர் தலைவர் ஏ.நாராயணசாமி, தனிநபர் மறியலில் பங்கேற்று கைதான எஸ்.டி.ஆதித்தன், சிவசுப்பிரமணிய அய்யர் மற்றும் மதுரை ராமசாமி ஆகியோரைச் சந்தித்தார்.

சங்கரய்யா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அடுத்த நாள் மதுரையில் மாணவர்களின் பெரும் ஊர்வலம் நடைபெற்றது. மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய இந்தக் கண்டன ஊர்வலத்தில் சேதுபதி உயர்நிலைப் பள்ளி மற்றும் இதர பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சங்கரய்யாவை விடுதலை செய்யக்கோரியும், ஆங்கிலேய அரசாங்கத்தைக் கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இறுதியில் இந்த ஊர்வலம் அமெரிக்கன் கல்லூரியில் முடிவுற்று அங்கே கண்டனப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதேபோன்று மதுரை மாவட்டம் முழுவதிலும் மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

15 நாட்களுக்குப் பின்னர் சங்கரய்யா மதுரையிலிருந்து வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மதுரை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பி அவரை வழியனுப்பி வைத்தனர்.

அவர் பி. ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் அவர் தேர்வு எழுத முடியாமல் போனது மட்டுமல்ல, அவர் படிப்பிற்கே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

13. வேலூர் சிறை

வேலூர் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட சங்கரய்யா, முதலில் அச்சிறையின் வெளிகுவாரண்டைன் பகுதியில் வைக்கப்பட்டார். அங்கே அவருக்கு காலரா, பிளேக் நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டது.

அச்சமயத்தில் வேலூர் சிறையில் மலபார், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தவிர, காங்கிரஸ்காரர்கள் பலரும் அங்கே வைக்கப்பட்டிருந்தனர்.

கம்யூனிஸ்டுகளில் புதுவை வ.சுப்பையா, பி.ஜீவானந்தம், சி.பி.இளங்கோ கே.முருகேசன், பி.பாலச்சந்திமேனன், கேரளாவைச் சேர்ந்த கே.தாமோதரன், சர்தார் சந்திரோத் குன்ஹிராமன் நம்பியார், இம்பிச்சிபாவா, வி.பி.சிந்தன், ஆந்திராவைச் சேர்ந்த கம்மம்பாடி சத்யநாராயணா (சீனியர்) போன்றோரும் உள்ளடங்குவர். அன்னபூர்ணய்யா, பி.சீனிவாசராவ், விருதுநகர் உலகநாதன் பரிபேக் மாரியப்பா, கே.ஆர்.ஜமதக்னி, பஞ்சாப் காக்ஸர் தொண்டர் படைத் தலைவர் அல்லாமா மஸ்ருகி இனாயட்கான் போன்றோரும் உள்ளடங்குவர்.

பழைய பெண்கள் பகுதியில் காங்கிரஸ் தலைவர் காமராஜர், கே.மாதவமேனன், பட்டாபி சீத்தாராமய்யா, கேரள காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் வைக்கப்பட்டிருந்தனர்.

அனைத்து கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கைதிகளும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ‘ஏ‘ பிரிவினருக்கு கட்டில் மெத்தை, நல்ல உணவு அளிக்கப்பட்டது, ‘பி‘ பிரிவினருக்கு ‘சி’ வகுப்பு தண்டனைக் கைதிகள் போல் உணவு தரப்பட்டது.

இந்தப் பாகுபாட்டை எதிர்த்தும் அனைவருக்கும் ‘ஏ’ பிரிவு அளிக்கக் கோரியும், ஏப்ரல் மாதத்தில் கம்யூனிஸ்ட் கைதிகள் உண்ணாவிரதமிருந்தனர். காங்கிரஸ்காரர்கள் இதில் பங்கேற்கவில்லை.

சங்கரய்யா உள்ளிட்ட அனைத்து கம்யூனிஸ்ட் கைதிகளும் தலையை மொட்டை அடித்துக் கொண்டு உண்ணாவிரதத்தில் இறங்கினர். உண்ணாவிரதம் துவங்கி 10 நாட்களுக்குப் பின்னர் சிறைச்சாலைகளின் ஐ.ஜியான லெப்டினென்ட் கர்னல் கண்ட்ராக்டர் என்பவர் வேலூர் சிறைச்சாலைக்கு வந்து உண்ணாவிரதமிருந்த கம்யூனிஸ்ட் கைதிகள் ஒவ்வொருவர் அறைக்கும் வந்து பார்த்தார். சங்கரய்யாவின் அறைக்கு அவர் வந்தபோது சங்கரய்யா ‘தாய்’ நாவலைப் படித்துக் கொண்டிருந்தார். அது கண்ட்ராக்டருக்கு வியப்பாக இருந்தது. அவர் சங்கரய்யாவைப் பார்த்து ’10 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின்பும் எப்படி படிக்க முடிகிறது’ என்று கேட்டார். ‘நான் நன்றாயிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரி மாணவன்’ என்று அவர் பதிலளித்தார். அதற்குப்பின் கண்ட்ராக்டர் ஏ.கே.கோபாலன் தங்கியிருந்த அடுத்த அறைக்குள் நுழைந்தார்.

சிறைச்சாலைக்கு வந்து சென்ற கண்ட்ராக்டர் அந்த உண்ணாவிரதம் குறித்து சென்னை அரசாங்கத்திற்கு ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். இதற்கிடையில் முற்போக்கு சிந்தனையோட்டம் கொண்ட தேசிய வழக்கறிஞர் ஜெகன்னாததாஸ், உண்ணா விரதமிருப்பவர்களின் கோரிக்கையை ஏற்கும்படி மாகாண அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
பி. சீனிவாசராவ்

இவை அனைத்தின் விளைவாக மாகாண அரசாங்கம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி சிறையில் ஏ, பி, பிரிவுகள் இருக்கும். ஆனால் அந்த இரு பிரிவினரும் தங்களுக்குரிய உணவுப் பொருட்களை வாங்கி சேர்த்து சமையல் செய்து பொதுவாக உண்ணலாம் என்று அறிவிப்பு செய்தது.

இதனைத் தொடர்ந்து 19வது நாளில் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இந்த உண்ணாவிரதத்திற்குப் பிறகு சில நாட்கள் ஆரஞ்சுச்சாறும், கஞ்சியும்தான் உணவாகக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக உணவு வழங்கப்பட்டது.

இந்த உண்ணாவிரதம் முடிவுற்ற பின்னர், சங்கரய்யாவின் தந்தையார் வேலூர் சிறைச்சாலைக்கு வந்து அவரை பார்த்துச் சென்றார்.

இந்த உண்ணாவிரதம் முடிவுற்ற பிறகு, வெளிகுவாரண்டைன் பகுதியிலிருந்து சங்கரய்யா உள்ளிட்ட ‘ஏ’ வகுப்புக் கைதிகள் பழைய பெண்கள் பகுதிக்கு மாற்றப்பட்டனர். அங்கே காமராஜர், மதுரை வி.ராமநாதன், சிந்துபூந்துறை சண்முகம், என்.சஞ்சீவரெட்டி சென்னை கத்தே ரங்கைய்யா நாயுடு, பாலச்சந்திர மேனன், டாக்டர் கே.பி.கிருஷ்ணா, முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த அன்னபூர்ணய்யா, நாராயணராவ், காளேஸ்வரராவ், பட்டாபி சீத்தாராமய்யா, அப்துல் ரஹ்மான் போன்றோருடன் சங்கரய்யாவும் வைக்கப்பட்டார். இங்குதான் அவருக்கு காமராஜருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

வேலூர் சிறையில் இருந்த சுமார் 200 கம்யூனிஸ்டுகளைக் கொண்டு  சிறைக்குள்ளேயே பல கிளைகள் அமைக்கப்பட்டன. இந்த அனைத்து கிளைகளையும் கொண்ட கட்சிக்குழு ஒன்று  உருவாக்கப்பட்டது. அது சிறைக்குள் செய்யவேண்டிய அனைத்து பணிகளுக்கும் வழிகாட்டியது. சிறையில் இருந்தவர்கள் அனைவரும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பிரிவுக்கு அன்னபூர்ணய்யா என்ற பார்வாட் பிளாக் கட்சிக்காரர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றொரு பிரிவுக்கு கம்யூனிஸ்ட் தலைவர் பாலச்சந்திர மேனன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவ்விருதலைவர்களும் ‘மேயர்’ என அழைக்கப்பட்டனர். கட்சியின் ஆலோசனைப் படி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு வெளியில் இருந்த கட்சி அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கும்.

சிறையில் இருந்தவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி வேலைகள் ஒதுக்கப்பட்டன. உணவுக் குழு, ஸ்டோர்ஸ் குழு, மருத்துவக் குழு, சுகாதாரக் குழு சலவை ஏற்பாட்டுக் குழு, பஜார் குழு, நூலகக் குழு, விளையாட்டுக் குழு தகவல் தொடர்புக் குழு (தபால்) போன்று பல குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து வேலைகளும் செய்யப்பட்டன.

மூன்று பேர் கொண்ட குழுவினர்  வாரம் ஒருமுறை ஒருவாரத்துச் செய்திகளை சேகரித்து நோட்டுப் புத்தகத்தில் எழுதி அதை அறிக்கையாக படிப்பார்கள் இது அனைவரும் அனைத்துச் செய்திகளையும் அறிந்து கொள்ள உதவியது.

காலையில் உடற்பயிற்சி நடக்கும் காலை உணவுக்குப் பின் இரண்டு மணிநேரம் அரசியல் வகுப்புகள் நடக்கும். இதில் மார்க்சிய தத்துவம், மார்க்சிய பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் குறித்து வகுப்புகள் நடத்தப்படும் இந்த வகுப்புகளை மார்க்சிய அறிஞர் கே.ஆர். ஜமதக்னி, மார்க்சிய பொருளாதார அறிஞர் கே.பி.கிருஷ்ணா மற்றும் கட்சித் தலைவர் எம்.ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் நடத்தினர். கே.பி.கிருஷ்ணா அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.

பின்னர் மதிய உணவு தரப்படும். மூன்று நாளைக்கு உணவு சமைக்க ஒரு குழு தேர்ந்தெடுக்கப்படும் அந்தக்குழுவின் தலைவருக்கு பிரதமர் என்று பெயர் அந்தக்குழுவில் 10 முதல் 12 பேர் இருப்பார்கள். உணவு தயாரிப்பதில் இருந்து உணவு பரிமாறும் வரையிலான வேலையை அவர்கள் செய்ய வேண்டும். இதர அனைவரும் காய்கறி நறுக்குவது போன்ற சிறிய வேலைகளைச் செய்ய வேண்டும். இதில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

மாலையில் மொழிப்பயிற்சி வகுப்புகள் நடக்கும். தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழ் மொழி கற்றுத்தரப்படும். தமிழ் மட்டும் அறிந்திருந்தவர்களுக்கு ஆங்கிலம் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகள் கற்றுத்தரப்பட்டன. இந்தப் படிப்பு முடித்த பின் மாலையில் விளையாட்டு. முக்கிய தினங்களில் அதாவது மே தினம், நவம்பர் புரட்சி தினம் போன்ற நாட்களில் கூட்டங்கள் நடக்கும். குரல் வளம் கொண்டவர்கள் பாடுவார்கள். சிறு நாடகங்களும் நடத்தப்படும்.

சிறைக்குள் கட்சி கிளைவாரியாக அரசியல் விவாதங்கள் நடக்கும். அவர்கள் கருத்து சிறையின் கட்சிக்குழுவிற்கு தெரிவிக்கப்படும். சில சமயங்களில் அனைத்து உறுப்பினர்களையும் கொண்ட பேரவையும் நடக்கும்.

சுருங்கக்கூறின் இந்த சிறைவாசம் என்பது ஒரு அரசியல் பள்ளியாகவே விளங்கியது எனக்கூறலாம்.

சங்கரய்யா இந்த அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் பங்கேற்று குறிப்புகளை தயாரித்துக் கொண்டார்.

அச்சமயத்தில் சங்கரய்யாவுடன் வேலூர் சிறையிலிருந்த விக்ரமசிங்கபுரம் பெ.சீனிவாசன், சங்கரய்யாவைக் குறித்து தன் வாழ்க்கை வரலாறு நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“வேலூர் சிறையில் மதுரை மாணவர்களின் மிகச்சிறந்த தலைவராக விளங்கிய அமெரிக்கன் கல்லூரி மாணவரான தோழர் என்.சங்கரய்யாவும் இருந்தார். ரொம்பவும் கெடுபிடியான ஆள் போலத் தோன்றினாலும், வெள்ளை மனம் படைத்த சிறந்த தோழர். அமைதியானவர், படாபடோமில்லாதவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாகப் பேசும் ஆற்றல் படைத்தவர்…’’

கம்யூனிஸ்ட் மாணவர்கள் இந்த வகுப்புகளில் ஆர்வத்துடன் பங்கேற்பதைக் கண்ட சிறைச்சாலை அதிகாரிகள் அது குறித்து மாகாண அரசாங்கத்திற்குத் தகவல் அனுப்பினர். இதைத்தொடர்ந்து மாகாண அரசாங்கம் கம்யூனிஸ்ட் மாணவர்களைப் பிரித்து ராஜமஹேந்திரபுரம் (ராஜமுந்திரி) சிறையில் அடைக்க முடிவு செய்தது.

இதன்படி சங்கரய்யா, தூத்துக்குடி கணேசன், ஆந்திர கம்யூனிஸ்ட் மாணவர்களான டாக்டர் ராம கோடீஸ்வரராவ், ஜே.பி.கே.வல்லபராவ், சூரிய நாராயண மூர்த்தி, ரங்கனாயகலு, கேரளாவைச் சேர்ந்த அச்சுதன் முதலியோர் ஜூலை மாதத்தில் ராஜமஹேந்திரபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

அச்சிறையிலிருந்த கடன்பட்டவர்களை அடைக்கும் பகுதியில் இவர்கள்அனைவரும் வைக்கப்பட்டனர். அங்கே இரவில் இவர்கள் தங்கும் அறைகளைப் பூட்டுவதில்லை. விளையாடுவதற்கு வேறு பகுதிக்கு கொண்டு செல்வார்கள்.

மதுரையைச் சேர்ந்த சீனிவாசவரதன், ரங்கனாதன், வாடிப்பட்டி கோவிந்தராஜன், சாத்தூர் ராமவித்வான், திருக்கோவிலூர் தெய்வசிகாமணி போன்றோரும் அங்கே கொண்டு வரப்பட்டனர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கூட்டத்தில் தோழர்கள் உடன் ஏ.கே. கோபாலன், ஹரி கிஷன் சிங் சுர்ஜித், உமாநாத், வி. பி. சிந்தன் மற்றும் சங்கரய்யா.

இவர்கள் நீங்கலாக தியோலி முகாம் சிறையிலிருந்து என்.ராஜசேகர ரெட்டி, எஸ்.கிருஷ்ணசாமி மற்றும் கேரளாவைச் சேர்ந்த குஞ்சன் சாஸ்திரி ஆகிய மூன்று கம்யூனிஸ்டுகளும் அங்கே கொண்டுவரப்பட்டிருந்தனர்.

அவர்களில் எஸ்.கிருஷ்ணசாமியைக் குறித்து குறிப்பிடுவது அவசியம். மதுரையைச் சேர்ந்த அவர் பள்ளி மாணவராக இருக்கும் பொழுதே தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். வயது குறைவாக இருந்ததால் அவர் தஞ்சாவூர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும்பொழுது அவருக்கு பின்னாட்களில் பிரபல கம்யூனிஸ்ட் தலைவரான பி.சுந்தரய்யாவிடம் தொடர்பு ஏற்பட்டது. சுந்தரய்யாவும் அந்த சிறையில் இருந்தார்.

விடுதலையான பின் காசி வித்யாபீடத்தில் படித்த கிருஷ்ணசாமிக்கு கம்யூனிஸ்டுகளின் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டான அவர், அன்றைய கட்சியின் பொதுச்செயலாளரான பி.சி.ஜோஷியின் தனிச் செயலாளராகப் பணியாற்றினார். 1940களின் துவக்கத்தில் ஆங்கிலேய அரசாங்கம் கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் தொடுத்தபோது கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டு ராஜஸ்தானத்து தியோலியில் அமைக்கப்பட்டிருந்த முகாம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ராஜ மகேந்திரபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார். இப்பொழுது சங்கரய்யாவுடன் கிருஷ்ணசாமிக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

சங்கரய்யா வேலூர் சிறையிலிருந்து மாற்றப்பட்ட சில மாத காலத்திற்குப்பின், அங்கிருந்த ஏ.கே.கோபாலன், சி.கண்ணன் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கைதிகள் சிறையில் ஓட்டைபோட்டு தப்பிவிட்டனர். இதைத்தொடர்ந்து ராஜமகேந்திரபுரம் சிறையில் அரசியல் கைதிகள் அனைவரும் இரவில் அறைக்குள் பூட்டி வைக்கப்படுவது ஆரம்பமாயிற்று.

பல மாதங்களுக்குப் பின் ஒருநாள் மாலையில் சிறையின் தலைமை வார்டர் சங்கரய்யா இருந்த பகுதிக்குள் வந்தார். “சங்கரய்யா யார்’’ எனக் கேட்டார். சங்கரய்யா “நான்தான்’’ என்றார். உடனே தலைமை வார்டர் ‘உங்களைத் தவிர அனைவரும் விடுதலை’என்று அறிவித்தார். சங்கரய்யா உடனே மதுரை கம்யூனிஸ்ட் தலைவர் செல்லையாவிற்கு கிருஷ்ணசாமி குறித்து அறிமுகம் செய்து ஒரு கடிதம் கொடுத்தார். அதில் கிருஷ்ணசாமியை கட்சிப் பணிக்கு பயன்படுத்திக்  கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணசாமியும், இதரர்களும் ராஜமஹேந்திரபுரம் ரயில் நிலையத்திற்கு வந்தனர். கல்கத்தாவில் இருந்து சென்னை வரும் ரயிலும் வந்தது. அந்த ரயிலில் வந்த காமராஜர் விடுதலையானவர்களைப் பார்த்து விசாரித்தார். அதில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் அவருக்குத் தெரிந்தவர்கள். அவர்கள் சங்கரய்யா மட்டும் சிறைக்குள் இருப்பதை அவரிடம் கூறினர்.

சென்னைக்கு வந்த காமராஜர், மாகாண அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் சங்கரய்யாவை மட்டும் தனிமைச் சிறையில் வைக்கக்கூடாதென்றும் அவரை உடனே வேலூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார். தான் கடிதம் அனுப்பியுள்ளதை தபால்கார்டு மூலம் சங்கரய்யாவுக்கும் தெரியப்படுத்தினார்.

இதன் விளைவாக ஒரு மாதத்திற்குப் பின்னர் சங்கரய்யா மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இச்சமயத்தில் வேலூர் சிறையில் பி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன், மாயாண்டிபாரதி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, கே.பாலதண்டாயுதம், எஸ்.குருசாமி, கே.எஸ்.நரசிம்மம் போன்ற கம்யூனிஸ்டுகளும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், ஏ.பி.சி. வீரபாகு போன்ற காங்கிரஸ் தலைவர்களும் இருந்தனர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது காங்கிரஸ் துவக்க விழா ஜோதிபாசு, சங்கரய்யா, சுசிலா கோபாலன் மற்றும் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்

14. மக்கள் யுத்தம்

1939ஆம் ஆண்டில் துவங்கி நடைபெற்று வந்த இரண்டாம் உலகப்போரில் 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதுவரை ஒருபுறம் ஜெர்மனியின் பாசிஸ்ட் ஹிட்லரின் படைகளுக்கும் மறுபுறம் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்குமிடையில் யுத்தம் நடைபெற்று வந்தது. ஆனால் சோவியத் நாட்டுடன் அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் (ஆக்கிரமிப்பு இல்லை என்ற ஒப்பந்தம்) செய்திருந்த ஹிட்லர், அந்த ஜூன் மாதத்தில் ஒப்பந்தத்தை மீறி சோவியத் நாட்டின் மீது தாக்குதலைத் தொடங்கினான்.

சோவியத் மக்கள் இந்த பாசிச சவாலைச் சந்திக்க தீரமுடன் ஆர்த்தெழுந்தனர். ஜே.வி.ஸ்டாலினை உயர் தளபதியாகக் கொண்ட செஞ்சேனையின் தலைமையின் கீழ் பாசிஸ்ட் படைகளை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர். ஹிட்லரின் நோக்கம் முழுவதும் சோவியத் நாட்டைப் பிடித்து பின்பு ஈரான் வழியாகச் சென்று இந்தியாவைக் கைப்பற்ற வேண்டுமென்பதாகவே இருந்தது.

யுத்தத்தின் மாறியபோக்கு ஒரு புதிய உலகச் சூழ்நிலையை தோற்றுவித்தது. சோவியத் நாட்டு மக்கள் தங்கள் தாயகத்தைக் காப்பதற்காக மட்டுமல்ல, உலகம் முழுவதையும் பாசிச அபாயம் கவ்வி விடாமல் தடுப்பதற்காக நடத்தும் யுத்தம் மக்கள் யுத்தமாக மாறிவிட்டது. எனவே மக்கள் யுத்தத்திற்கு ஆதரவாக உதவ உலகத் தொழிலாளி வர்க்கம் முன்வர வேண்டும் என்று இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கம்யூனிஸ்ட் கட்சிகள் கருதின.

முதலில் சோவியத் நாட்டை ஒழிப்பதற்காக ஹிட்லரை வளர்த்து விட்ட இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் யுத்தத்தில் ஜெர்மனியினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. எனவே அவ்விரண்டு நாடுகளும் சோவியத் நாட்டுடன் கூட்டுச்சேர்ந்து ஹிட்லரை எதிர்த்துப் போரிட சம்மதித்து அவ்வாறே உடன்பாடும் கண்டன. சோவியத் நாடு, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் நேச நாடுகள் என்றறியப்பட்டன.

இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை தலைமறைவாகச் செயல்பட்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் ஏற்றுக் கொண்டது. இரண்டாம் உலக யுத்தம் என்பது இனியும் ஏகாதிபத்திய யுத்தமல்ல, அது மக்கள் யுத்தம், அதற்கு தொழிலாளி வர்க்கம் உதவிட வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்தது.

இதைத்தொடர்ந்து, ஆங்கிலேய அரசாங்கம், 1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று கம்யூனிஸ்ட்டுகளை விடுதலை செய்யத் துவங்கியது. வேலூர் சிறையிலிருந்து வி.சுப்பையா, எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.சீனிவாசராவ், பி.விருத்தகிரி, எம்.கல்யாணசுந்தரம், தூத்துக்குடி அண்ணாச்சி சங்கரநாராயணன், என்.சங்கரய்யா, ஐ.மாயாண்டி பாரதி உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர்.

சங்கரய்யா சிறையிலிருந்து வெளியே வரும் முன்பு முத்துராமலிங்கத் தேவரைச் சந்தித்து விடைபெற்றார்.

வேலூரிலிருந்து விழுப்புரம் வந்து தங்கிய எம்.கல்யாணசுந்தரம், என்.சங்கரய்யா,  ஐ.மாயாண்டி பாரதி மூவரும் அடுத்த நாள் ரயிலில் மதுரைக்குப் புறப்பட்டனர். திருச்சி ரயில் நிலையத்தில் கல்யாண சுந்தரத்திற்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அன்று இரவு மதுரைக்கு வந்த சங்கரய்யாவிற்கும், மாயாண்டி பாரதிக்கும் மதுரை ரயில் நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இந்த வரவேற்பில் பங்கேற்றனர். வரவேற்பு ஊர்வலம் சங்கரய்யா வீடுவரை வந்து கலைந்தது.

ஆங்கிலேய அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடையை ஜூலை மாதம் விலக்கிக் கொண்டது.

மாணவர் சங்க மாநிலச் செயலாளர்

அவ்வாண்டு ஜூலை மாதத்தில் தென் பிராந்திய மாணவர் சம்மேளனத்தின் சிறப்பு மாநாடு சேலம் நகரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் எஸ்.ராமகிருஷ்ணனும், பார்வதி கிருஷ்ணனும் முக்கியப்பங்கு வகித்தனர். அவ்விருவரும் பல கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று நடக்கவிருக்கும் மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கி உரையாற்றினர். மாநாட்டை நடத்துவதற்காக நிதியும் வசூலித்தனர்.

பார்வதி கிருஷ்ணன் நினைவுபடுத்திக் கூறுகிறார்:

“அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் தென் பிராந்திய மாநாடான சேலம் மாநாடு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களும் அச்சமயத்தில் விடுதலையானது மாநாட்டிற்கு ஒரு பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. கே.பாலதண்டயுதம், மோகன் குமாரமங்கலம், என்.சங்கரய்யா போன்ற தலைவர்களுக்கு ஒரு மாபெரும் உற்சாகமான வரவேற்பளிக்க முடிந்தது. இந்த மாநாடு சிரமமான நிலைமைகளில் நடத்தப்பட்டாலும், எவ்வித கடனுமின்றி இந்த மாநாட்டை நாங்கள் நடத்த முடிந்தது. நிதி வசூல் இலக்கை பூர்த்தி செய்ய எஸ்.ராமகிருஷ்ணன் அவருக்கே உரித்தான பங்கைச் செய்தார்…’

இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.கே.கிருஷ்ணன், கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மோகன் குமாரமங்கலம், பி.ராமமூர்த்தி, கே.பாலதண்டாயுதம், என்.சங்கரய்யா, பார்வதி கிருஷ்ணன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் மாணவர் சங்கம் மாநில வாரியாக பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு பிரதிநிதிகளுக்கென்று தனி மாநாடு நடைபெற்றது. அதில் கட்சியின் முடிவுப்படி சங்கரய்யா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை நெல்லை வழக்கறிஞர் கணபதியப்பன் தமிழ்நாட்டிற்கு செயலாளராக இருந்தார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு நாளன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. பேரணியில், மோகன் குமாரமங்கலம், சங்கரய்யா, பார்வதி கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றியபின் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி நிறைவாக சிறப்புரையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் யுத்தக் கொள்கையை எடுத்துரைத்து அவர் பேசினார்.

பி.ராமமூர்த்தியை சங்கரய்யா முதன்முதலில் இங்கேதான் சந்தித்தார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகைத் தந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினருடன் டி.கே.ரங்கராஜன், சங்கரய்யா, ஜி.ராமகிருஷ்ணன், ஏ.கே.பத்மநாபன், இரா. ஜவஹர் மற்றும் என். குணசேகரன்.

இந்த மாநாடு முடிந்த பின்பு சங்கரய்யா தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். அவர் முதலாவதாகக் கலந்து கொண்ட கூட்டம், கய்யூர் தியாகிகளின் தூக்குத் தண்டனையை மாற்றக் கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி மைதானத்தில் நடத்தப்பட்ட கூட்டமாகும். “கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடத்தப்பட்ட இந்தக்கூட்டத்தை கட்சித்தலைவர் எம்.ஆர்.வெங்கட்ராமன் ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்தில் கையூர் தோழர்களின் தண்டனையை மாற்றக்கோரி சங்கரய்யா ஆவேசமான உரை நிகழ்த்தினார்.

அதன்பின், அவர் தஞ்சை மாவட்டத்திற்குச் சென்று பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றினார். அச்சமயத்தில் இஸ்மத்பாஷா, தஞ்சை மாவட்ட மாணவர் சங்கச் செயலாளராக இருந்தார். தஞ்சையில் சங்கரய்யா காங்கிரஸ் தலைவர் பூவராக அய்யங்காரைச் சந்தித்துப்பேசினார்.

திருச்சியில் மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் சங்கரய்யா பேசினார். பெருந்திரளான மாணவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியோரும் பேசினர்.

இந்தக்கூட்டம் நடைபெறும் பொழுது கம்யூனிஸ்டுக் கட்சியின் மக்கள் யுத்தக் கொள்கையை எதிர்த்து தேசிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் மேடை மீது முட்டைகளை வீசி கலவரம் செய்தனர். இதிலிருந்து காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் மோதல் என்பது துவங்கியது.

16. பகிரங்கச் செயல்பாடு

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதிலிருந்தே இந்திய அரசியல் அரங்கில் பல்வேறு கருத்தோட்டங்கள் தோன்ற ஆரம்பித்தன. இது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் பிரதிபலித்தது. சோசலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து செயல்பட்ட அக்கட்சியில், தலைமைப் பொறுப்பில் இருந்த ராம் மனோஹர் லோஹியா, அச்சுதபட்டவர்த்தன், மினு மசானி மற்றும் அசோக் மேத்தா போன்றோர் கம்யூனிசத்தை வெறுப்பவர்களாகவும், சோவியத் நாட்டை எதிர்ப்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு எதிரான சோசலிஸ்ட் அகிலத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

இவர்கள் சோவியத் நாட்டிற்கெதிராக சோசலிஸ்ட் அகிலம் பரப்பும் பொய்களையும், கட்டுக்கதைகளையும் பரப்பி வந்தனர். கம்யூனிசத்தைக் குறித்தும் விமர்சித்து வந்தனர்.

எனவே, இந்தப் பின்னணியில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் பெரும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் உயர் தலைவராயிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், தன் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகளை வெளியேற்றுவதாக அறிவித்தார்.

கம்யூனிஸ்டுகளும் பதிலடி கொடுத்தனர். தாங்கள் பலமாகயிருந்த ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை அப்படியே கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றுவதாக பிரகடனம் செய்தனர். சென்னை பிராட்வேயில் இருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அலுவலகம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாயிற்று.

1940ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று மே தினம் மதுரையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ராக்கப்பன் சாவடியிலிருந்து ஆரம்பித்த ஊர்வலம், வைகை ஆற்றின் மைய மண்டபத்திற்கு வந்து சேர்ந்தது. ஊர்வலத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், எஸ்.குருசாமி, கே.பி.ஜானகி, என். சங்கரய்யா ஆகியோர் தலைமை தாங்கினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், தேவர் மட்டும் பேசினார். அவர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆவேசமான உரை நிகழ்த்தினார்.

பகிரங்கச் செயல்பாட்டைத் துவக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, யுத்த-எதிர்ப்புப் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தும்படி தனது உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அறைகூவல் விடுத்தது. இதை அடுத்து தமிழகம் முழுவதிலும் கம்யூனிஸ்டுகள் யுத்த – எதிர்ப்பு பிரச்சாரத்தில் இறங்கினர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசாங்கம் தன் கோபத்தைக் காண்பித்தது. இளம் கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி, அவரது கிராமமான வேப்பத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். மற்றொரு இளம் தலைவர் ஜீவாவை சென்னை மாகாணத்திலிருந்து வெளியேற்றும்படி ஆங்கிலேய அரசாங்கம் உத்தரவிட்டது.

ஜூன் மாதத்தில் இந்திய பாதுகாப்புச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதிலும் 700 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 480 பேர் கம்யூனிஸ்டுகள்  இந்த 480 கம்யூனிஸ்டுகளில் 150 பேர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

மதுரையில் கே.பி.ஜானகியும், அவர் கணவர் எஸ்.குருசாமியும் பொன்மலைக்குச் சென்று தங்கியிருக்க வேண்டுமென்று ஆங்கிலேய அரசாங்கம் உத்தரவிட்டது. பொன்மலைக்குச் சென்ற அவர்கள் இருவரும் அங்கே நடைபெற்ற கூட்டத்தில் யுத்த-எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தனர். உடனே அவ்விருவரும் கைது செய்யப்பட்டு, ஆறுமாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.

இதைக்கண்டித்து மதுரை திலகர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் எஸ்.என்.சோமயாஜூலு, சங்கரய்யா ஆகியோர் பேசினர்.

இதற்குப்பின் யுத்த-எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகளான எம்.என்.ஆதிநாராயணன், எம்.எஸ்.எஸ். மணி, ஐ.மாயாண்டிபாரதி, பெரியகுளம் வழிவிட்டான், அவர் துணைவியார் லட்சுமி, ஆர்.வி.சித்தா போன்றோர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். விடுதலையானவர்கள் மீண்டும் யுத்த-எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர்.

இதைக்கண்டு ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் எம்.ஆர்.எஸ்.மணி, எஸ்.குருசாமி, ஐ.மாயாண்டி பாரதி, கே.ஆர்.தங்கமுத்து, கே.ஆர்.முனியாண்டி, ஆர்.வி.சித்தா, ஆர்.கே.சாந்துலால், கே.டி.ராமலிங்கம், கே.பி.பிள்ளை, சங்க முத்து ஆகியோரை பாதுகாப்புச் சட்டப்படி, விசாரணையின்றி சிறையில் அடைத்தது. இதே காலகட்டத்தில் சுப்ரமணிய சர்மா, எம்.ரத்தினம், கே.பி.ஜானகி, வீராச்சாமி, தங்கவேல் சேர்வை, தத்துவம் பிள்ளை, ஜட்கா ராமய்யா, பி.நாராயணன், சக்கணன் ஆகியோரும் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
மார்க்சிய அறிஞர் ம.சிங்காரவேலரின் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் சங்கரய்யா. அருகில் வி. மீனாட்சி சுந்தரம், பா.கருணாநிதி மற்றும் வீர அருண்.

17. பாளையங்கோட்டை தடியடி

அவ்வாண்டு (1942) ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதியன்று பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு “வெள்ளையனே வெளியேறு’’ இயக்கத்தை துவங்க முடிவு செய்தது. மகாத்மா காந்தி ‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்தைக் கொடுத்தார்.

இந்த முடிவைக் கவனித்த ஆங்கிலேய அரசாங்கம் அன்று நள்ளிரவிலேயே மகாத்மா காந்தி, நேரு, மௌலானா அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியினர் தந்திக்கம்பங்களை பிடுங்கி எறிந்தனர். அரசாங்க அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன. நாடெங்கும் கலவரம் வெடித்தது.

அதே 9ஆம் தேதியன்று மதுரைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி முதல்வரின் எச்சரிக்கையையும் மீறி ஊர்வலமாகச் சென்றனர். சங்கரய்யா இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிச் சென்றதோடு, தலைவர்களைக் கைது செய்ததைக் கண்டித்தும் அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரியும் முழங்கினர்.

செப்டம்பர் மாதத்தில் மாணவர் சங்க அமைப்புப் பணிகளுக்காக சங்கரய்யா திருநெல்வேலிக்குச் சென்றார். அங்கே கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், தேசியத் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி ஆவேசகரமான செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அதைக் கண்ட சங்கரய்யா அந்த எதிர்ப்பை ஒருமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

அந்த நிகழ்ச்சிப் போக்கை, நெல்லை மாவட்ட மாணவர் சங்கத்தலைவர்களில் ஒருவரான விக்ரமசிங்கபுரம் பி.சீனிவாசன் தன் சுயசரிதையில் விவரிக்கிறார்.

“நெல்லையிலுள்ள இந்துக் கல்லூரி, செயிண்ட் சேவியர் கல்லூரி, செயிண்ட் ஜான் கல்லூரி மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்துக் கல்லூயில் ஒரு  கொட்டகைக்குத் தீ வைக்கப்பட்டது. மூன்று கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டம் நடத்துவது, ஊர்வலம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

இந்தக் கொந்தளிப்பான நிலைமையில், தமிழ்நாடு மாணவர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர் என்.சங்கரய்யா, தற்செயலாக நெல்லை வந்திருந்தார். அவர் செயிண்ட் ஜான். செயிண்ட் சேவியர் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, நிலைமையை சமாதானமாக சமாளிப்பது என்றும், நான் இந்துக்கல்லூரியின் நிலைமையை சமாளிப்பது என்றும் எங்களுக்குள் முடிவெடுத்துக்கொண்டோம். நகரில் 144 தடையுத்தரவு போடப்பட்டிருந்தது. மூன்று கல்லூரிகள் முன்பும் நூற்றுக்கணக்கான போலீசார் குழுமி நின்றனர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம். பசவபுன்னையாவுடன் சங்கரய்யா.

“செயிண்ட் ஜான், செயிண்ட் சேவியர் கல்லூரிகளின் நிர்வாகத்தினர் மாணவர்களை எப்படியும் அடக்கிவிடுவது என்று கடுமையாக இருந்தனர். செயிண்ட் சேவியர் கல்லூரி முதல்வர் மாணவர்களை மிரட்டினார். தோழர் சங்கரய்யா அவரைச் சந்தித்து நிலைமையை நிதானமாகச் சமாளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் முதல்வர் இதற்கு ஒப்பவில்லை. இதனால் மாணவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. மாணவர்கள், கல்லூரிக் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியே ஊர்வலமாகக்கிளம்பினர். குறைந்தபட்சம் ஊர்வலத்தினர் அமைதியான முறையில் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று சங்கரய்யாவும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு மாவட்டக் கலெக்டரிடம் சென்று கண்டனத்தைத் தெரிவித்து விட்டு அமைதியாகக் கலைந்து செல்லலாம் என்று மாணவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார்.

“கலெக்டர் பங்களாவை நோக்கி ஊர்வலம் சென்றது. கலெக்டர் பங்களாவின் அருகாமையில் வந்தவுடன் போலீசார் தோழர் சங்கரய்யா எடுத்துக்கூறியும் பயனில்லாமல் மாணவர் மீது தடியடிப்பிரயோகம் செய்து தோழர் சங்கரய்யாவையும் கடுமையாகக் குண்டாந்தடியால் தாக்கி காயப்படுத்தினர். பல மாணவர்களின் மண்டைகள் நொறுக்கப்பட்டன’’

இந்தத் தடியடியில் சங்கரய்யாவிற்கு வயிற்றிலும், விலா எலும்புகள் மீதும் பலத்த அடி விழுந்தது. அங்கிருந்த கட்சித் தோழர்கள் அவரை சிந்து பூந்துறையிலுள்ள சித்தவைத்தியரிடம் அழைத்துச் சென்று மருந்துகள் வாங்கிக் கொடுத்தனர். அதன்பின் அவர் மதுரைக்குத்திரும்பினார்.

மாணவர்கள் மீதும், சங்கரய்யா மீதும் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதற்கெதிராக நெல்லை மாவட்டம் முழுவதிலும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. சில கூட்டங்களில், பெ.சீனிவாசனும், விக்ரமசிங்கபுரம் ஆர்.வி.அனந்தகிருஷ்ணனும் பேசினார். இதனால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

பெ.சீனிவாசனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ஆர்.வி.அனந்த கிருஷ்ணனுக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டு அவர்கள் இருவரும் பெல்லாரியில் இருந்த அலிப்புரம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.

18. கண்ணனூர் சிறை…

திருநெல்வேலி மாணவர்கள் கிளர்ச்சியையும், அதில் சங்கரய்யா பங்கேற்றதையும் குறித்து மாவட்ட காவல்துறை சென்னை அரசாங்கத்திற்கு தகவல் அனுப்பியது. அது, சங்கரய்யாவை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க முடிவு செய்தது.

இந்தத் தகவலை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயாளர் மோகன் குமாரமங்கலம், தமிழ்நாடு அரசாங்கத்தின் பிரதம செயலாளரைச் சந்தித்து சங்கரய்யாவை கைது செய்யக் கூடாதென கூறினார். ஆனால் பிரதம செயலாளர் அதை ஏற்கவில்லை.

அக்டோபர் மாதத்தில் சங்கரய்யா மதுரையில் கைது செய்யப்பட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கே அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர்களான முனகால பட்டாபி சீத்தாராமய்யா, பி.எஸ்.கே. லட்சுமிபதி ராஜூ, தேவகோட்டை திருநாவுக்கரசு ஆகியோரை சந்தித்துப் பேசினார். சங்கரய்யாவிற்க சிறையில் சிறப்பு வகுப்பு அளிக்கப்பட்டது.

15 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். முன்பு போலவே வெளிகுவாரண்டைனில் வைக்கப்பட்ட சங்கரய்யா, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற  “வெள்ளையனே வெளியேறு’’ போராட்டத்தில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார். திண்டுக்கல் அப்துல் சத்தார், இந்திப்பிரச்சார சபைத்தலைவர் மோட்டூர் சத்ய நாராயணா, காசா சுப்பாராவ், காரைக்குடி டாக்டர் சுப்ரமணியம், (சேஷசாயி பேப்பர்மில்) எஸ்.விஸ்வநாதன், டாக்டர் திருமலை சூரிய பிரகாஷ், எச்.டி.ராஜா, மவுண்ட் பார்மசி பாலு உள்ளிட்டு கேரளா, ஆந்திரா தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார்.

அத்துடன், அங்கே வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டுகள் எஸ்.குருசாமி, மிருத்யஞ்சுடு, குப்பம் ஏ.பி. வஜ்ரவேல், பெரியகுளம் எஸ்.வழிவிட்டான், மதுரை வீரபத்திரன் மற்றும் சங்க முத்துப்பிள்ளை ஆகியோரையும் சங்கரய்யா சந்தித்தார்.

வேலூர் சிறையில் சங்கரய்யா அதிக காலம் இருக்கவில்லை. அவர் சிறை மாற்றத்திற்கு தயாராக வேண்டியிருந்தது. அதற்குக் காரணம் ரகசியக் காவல்துறையினர் அரசாங்கத்திற்கு அனுப்பிய ஒரு எச்சரிக்கைக் கடிதமாகும். காங்கிரஸ்காரர்களை கம்யூனிஸ்டுகளுடன் சேர்த்து வைப்பது ஆபத்தானதென்றும், அவர்கள் காங்கிரஸ்காரர்களையும் மாற்றி விடுவார்கள் என்றும் அந்த காவல்துறை அறிக்கை கூறியது.

எனவே சென்னை மாகாண அரசாங்கமானது சங்கரய்யா குருசாமி உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளை கண்ணனூர் சிறைச் சாலைக்கு மாற்றியது. சிறிது காலத்திற்குப்பின் அப்துல் சத்தார் உள்ளிட்ட சில காங்கிரஸ்காரர்களை கண்ணனூர் சிறையில் வேறொரு பகுதிக்கு மாற்றியது.

சங்கரய்யா, கண்ணனூருக்கு கொண்டு செல்லப்படும் தகவல் பரவியதால் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், கட்சித் தலைவர்கள் அவரைச் சந்தித்தனர். ஈரோட்டில் கட்சித் தலைவர் கே.டி.ராஜூ அவரைச் சந்தித்தார். கோயம்புத்தூரில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.கே.ராமசாமி, சங்கரய்யாவை சந்தித்துப் பேசினார். சங்கரய்யா ரயிலில் கொண்டு வரப்படும் தகவலை பி.கே.ராமசாமி, கோழிக்கோடு கட்சித் தலைவர்களுக்கு தந்தி மூலம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கோழிக்கோடு ரயில் நிலையத்தில் கட்சித் தலைவர்கள் பி.கே.பாலன் மற்றும் மஞ்சுநாதராவ் தலைமையில் ஏராளமானோர் திரண்டிருந்து சங்கரய்யாவையும், இதர தோழர்களையும் வாழ்த்தினார்கள் அவர்கள் சங்கரய்யா வரும் தகவலை கண்ணனூருக்கு தெரிவித்தனர். கண்ணனூர் ரயில் நிலையத்தில் 300க்கும் மேற்பட்டோர் கூடி நின்று சங்கரய்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். பாலர் சங்கத்தலைவர் குன்ஹி ஆனந்தன் பேசினார்.

கண்ணனூர் தோழர்கள் கட்சிப் பத்திரிக்கைகளை தொடர்ந்து சிறைச்சாலைக்கு அனுப்புவதாக சங்கரய்யாவிடம் கூறினர். கண்ணனூர் ரயில் நிலையத்திலிருந்து சங்கரய்யாவும், தோழர்களும் அங்கிருந்த மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கண்ணனூர் சிறையில் சென்னை காங்கிரஸ் தலைவர் அருள்மரிநாதன் உட்பட 30 காங்கிரஸ்காரர்களும், 15 கம்யூனிஸ்டுகளும் வைக்கப்பட்டிருந்தனர்.

19. கையூர் தியாகிகள்

சங்கரய்யாவும், சக தோழர்களும் கண்ணனூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது, அங்கே கண்ணனூர் மாவட்டம் கையூரைச் சேர்ந்த நான்கு தோழர்கள் தூக்குக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்தனர். மடத்தில் அப்பு, குன்ஹாம்பு நாயர், சிறுகண்டன் மற்றும் அபுபக்கர் ஆகிய நால்வரும் 25 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள் நால்வரும் அவர்களுடைய கிராமத்தில் மக்கள் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்களான அவர்கள் அங்கே விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினர். விவசாயிகள் இயக்கத்தை அவர்கள் உருவாக்கியதால் நிலப்பிரபுக்கள் மற்றும் காவல்துறையின் கோபத்திற்கு ஆளானவர்கள்.

சிறப்புக் காவல் படையினர் அடிக்கடி அந்தக் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வார்கள். விவசாயிகள் சங்க, கட்சி ஊழியர்களை அடித்து உதைப்பார்கள்.

ஒரு நாள் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்கையில், ஒரு போலீஸ்காரர் அங்கே வந்தார். அவர் ஒரு மோசமான ஆள். ஒரு இஸ்லாமிய பெண்ணிடம் ஏற்கெனவே தவறாக நடந்து கொண்டவர். அந்த நபரைக் கண்டதும், ஆத்திரங்கொண்ட மக்கள் அவர் மீது கற்களை வீசினர். அதில் அவர் இறந்து போனார். கிராமத்திற்குள் கொண்டுவரப்பட்ட காவல்படை, இந்த நான்கு தோழர்களையும் பிடித்து அவர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தியது.

நீதிமன்றம் அவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. அவர்கள் விடுதலையைக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதிலும் பெரும் இயக்கம் நடத்தியது.

சங்கரய்யாவும், இதர தோழர்களும் இந்த நால்வரையும் சந்திக்க விரும்பினார். சிறை அதிகாரிகளை பலமுறை வற்புறுத்தினார். ஆனால் அதிகாரிகள் அனுமதி தர பிடிவாதமாக மறுத்துவிட்டனர்.

அவர்கள் தூக்கிலிடப்படும் நாளும் நெருங்கி வந்தது. அந்த நால்வரும் கடைசி முறையாக கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷியை சந்திக்க விரும்பினர். எனவே ஜோஷியும், கட்சியின் கேரளத் தலைவர் பி.கிருஷ்ணபிள்ளையும் சிறைச்சாலைக்கு வந்து தோழர்கள் நால்வரையும் சந்தித்தனர். அவர்களைக் கண்டதும் ஜோஷி துயரம் தாங்காமல் அழுதுவிட்டார்.

கையூர் தோழர்கள் நால்வரும் மிகுந்த வீரத்துடன் ஜோஷிக்கு கரம் உயர்த்தி செவ்வணக்கம் செய்தனர். ஜோஷி அவர்கள் வீரத்தைப் புகழ்ந்து அவர்கள் தியாகம் என்றென்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நினைவில் பதிந்திருக்கும் என்று கூறி அவர்கள் குடும்பங்களை, கட்சி தன் குடும்பமாகக் கருதி பாதுகாக்கும் என்று உறுதியளித்தார். நாடு முழுவதிலுமிருந்து கையூர் தியாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பல மொழிகளில் வந்திருந்த கடிதங்கள் கட்டை அவர்களுக்குக் கொடுத்தார்.

கையூர் தோழர்கள் நால்வரும், பலத்த பாதுகாப்பிற்கிடையே 1943ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். சோகத்தில் மூழ்கிய சங்கரய்யாவும், இதர தோழர்களும் அன்று உண்ணாவிரதமிருந்து கையூர் தியாகிகளுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

கையூர் தியாகிகளை தான் சந்தித்தது குறித்து, பி.சி.ஜோஷி. மனித குலத்தின் மலர்கள் ஒருபோதும் கருகாது” என்று ஒரு உருக்கமான பிரசுரம் எழுதினார். அது பல மொழிகளில் வெளிவந்தது. கையூர் தியாகிகளை மையமாகக் கெண்டு எழுதப்பட்ட நாவல்தான் “நினைவுகள் அழிவதில்லை”. கன்னட மொழியில் எழுத்தாளர் நிரஞ்சனா எழுதிய அந்த நாவல் மார்க்சிஸ்ட் தலைவர் பி.ஆர்.பரமேஸ்வரனால் மலையாள மொழியிலிருந்து அற்புதமாக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலத்தில் நடத்திய அரசியல் மாநாட்டின் பேரணியை பார்வையிடும் தலைவர்கள். (இடமிருந்து வலம்) ஆர்.உமாநாத், இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், பி.ராமமூர்த்தி, கே.முத்தையா, சங்கரய்யா, பி.ராமச்சந்திரன்.

20. தஞ்சாவூர் சிறைச்சாலை

கைய்யூர் தியாகிகள் தூக்கிலிடப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு சங்கரய்யாவும், இதர கம்யூனிஸ்ட்களும் தஞ்சாவூர் விசேஷ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் கண்ணனூரிலிருந்து மாற்றப்படும் தகவல் வெளியிலிருந்த கட்சித் தோழர்களுக்கு தெரிந்ததால், இவர்கள் கண்ணனூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பொழுது அந்த ரயில் நிலையத்தில் 300க்கும் மேற்பட்டோர் கூடியிருந்து வழியனுப்பினர். அவர்கள் இது குறித்து தகவல் கொடுத்ததால், கோழிக்கோட்டிலும் ஏராளமான தோழர்கள் ரயில்நிலையத்திற்கு வந்து வாழ்த்துக் கூறி வழியனுப்பினர். அதேபோல் கோவை ரயில் நிலையத்திலும் ஏராளமான தோழர்கள் கூடியிருந்து வாழ்த்துக் கூறினர்.

சங்கரய்யா, குருசாமி உள்ளிட்ட தோழர்கள் தஞ்சை விசேஷ சிறைக்கு கொண்டுவரப்பட்ட போது அங்கே காங்கிரஸ் தலைவர்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஏ.வைத்தியநாதய்யர், ஆர்.வெங்கட்ராமன், என்.எம்.ஆர்.சுப்பராமன், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, திருநெல்வேலி வேலுசாமித்தேவர், ராகவமேனன், அப்துல் சத்தார், கே.திரவியம் போன்றோர் இருந்தனர். கம்யூனிஸ்டுகளான ஏ.எஸ்.கே. அய்யங்கார், கே.முருகேசன், மதுரை ஐ.வி.சுப்பையா, கே.டி.ராமலிங்கம், ஆர்.கே.சாந்துலால், கே.ஆர்.தங்கமுத்து, கே.ஆர்.முனியாண்டி, திண்டுக்கல் ராமசாமி, முனுசாமி ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் ஆந்திராவைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் புல்லா ரெட்டி, வஜ்ரவேலு மற்றும் மிருத்யஞ்சுடு ஆகியோரும் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தச் சிறையிலிருந்த காங்கிரஸ் சோசலிஸ்டான கே.வி.எஸ்.மேனன் என்பவரும் வேறு சிலரும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களாக இருந்தனர். கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களான சுமார் 10 பேர் சிறைக்குள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஊர்வலம் நடத்துவார்கள். இதை எதிர்த்து அந்தச் சிறையிலிருந்த 50 கம்யூனிஸ்ட்டுகள் ஊர்வலம் நடத்தி கூட்டம் போடுவார்கள். மேலும் மகாத்மா காந்தி மற்றும் லெனின் பிறந்த நாட்களை கம்யூனிஸ்டுகள் கொண்டாடினார்கள். நிதானமான காங்கிரஸ்காரர்களாகிய ஓமந்தூரார், வைத்தியநாதய்யர் மற்றும் ஆர்.வெங்கட்ராமன் போன்றோர் கம்யூனிஸ்டுகள் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டு லெனினையும், காந்தியையும் ஒப்பிட்டுப்பேசினர். படங்களைத்திறந்து வைத்தனர். சிறையில் கம்யூனிஸ்டுகள் ஜனவரி 26ஆம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடினர்.

கம்யூனிஸ்டுகளின் இந்த அணுகுமுறையானது காங்கிரஸ்காரர்களான கே.எஸ்.பார்த்தசாரதி, வடாற்காடு சம்பந்தம் மற்றும் நெல்லை வேலுச்சாமித் தேவர் ஆகியோரை கம்யூனிஸ்டுகளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சிறையில் கம்யூனிஸ்டுகள் ஒரு கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியிருந்தனர். அதில் காங்கிரஸ் தலைவர் ஆர்.வெங்கட்ராமனும் பங்கேற்றார். ‘நான் விடுதலையானவுடன் எம்.ஆர்.வெங்கட்ராமனைச் சந்திப்பேன். கட்சியின் முழுநேர ஊழியனாவேன்’ என்று அவர் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை. பின்னாட்களில் மாநில, மத்திய அமைச்சராகப் பணியாற்றிய அவர் இறுதியில் குடியரசுத் தலைவராகவும் ஆனார்.

கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமனும், ஆர்.வெங்கட்ராமனும் பல வருடங்களுக்கு முன்பு, பிரபல வழக்கறிஞர் துரைசாமி அய்யரிடம் இளநிலை வழக்கறிஞர்களாக ஒன்றாகப் பணியாற்றியவர்கள்.

1944 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடெங்கிலும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மே மாதத்தில் சங்கரய்யா, எம்.எம்.ஆர்.சுப்புராமன், ஆர்.கே.சாந்துலால், கே.டி.ராமலிங்கம், மதுரை காங்கிரஸ்காரர் ராமமூர்த்தி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். என்.எம்.ஆர்.சுப்புராமனும் சங்கரய்யாவும் மதுரைக்கு சேர்ந்தே வந்தனர்.

21. மாவட்டச் செயலாளர்

சங்கரய்யா விடுதலையாகி வந்த சில வார காலத்திற்குள், கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி.ராமமூர்த்தி பங்கேற்றார்.

இந்தக் கூட்டமானது, சங்கரய்யாவை கட்சியின் மாவட்டக்குழு செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. எஸ்.கிருஷ்ணசாமியை பஞ்சாலை சங்க செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. ஏ.பி. பழனிச்சாமி, வி. கார்மேகம், எஸ். பாலு ஆகியோர் மில்சங்கத்தை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மோட்டார் தொழிலாளர் சங்கத்தை வி.கருப்பையா, பி.தண்டபாணி மற்றும் சேதுராமன் கவனித்துக் கொண்டனர். ஜட்கா தொழிலாளர் சங்கத்தை பிரதானமாக எம்.என்.ஆதிநாராயணன் கவனித்துக் கொண்டார். கை நெசவுத் தொழிலாளர் சங்கம் கிருஷ்ணாபுரம் குறுக்குத் தெருவில் பெரிய அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அதன் முக்கியத் தலைவர்களாக ஆர்.கே.சாந்துலால், கே.பி.ராமுடு, ஆர்.வி,சித்தா, கே.ஆர்.சுந்தரராமன், கே.டி.ராமலிங்கம் மற்றும் எஸ்.டி.கே.குப்புசாமி ஆகியோர் விளங்கினர்.

1943 முதல் 1947 வரைப்பட்ட காலகட்டமானது, கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். யுத்த கால நெருக்கடி காரணமாக மண்ணெண்ணெய், விறகு, சாதாரண துணி, அரிசி போன்றவை கிடைக்காத சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி பெரும் போராட்டங்களை நடத்திய காலகட்டமாகும். மதுரை ஆர்வி மில்லின் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கூலி உயர்விற்கும், தொழிற்சங்க உரிமைகளுக்கும் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றி கண்ட காலகட்டமாகும். காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்டுகள் மீது கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களை முறியடித்த காலமாகும் அது. கலை, இலக்கியம், ஆடல், பாடல் என்பதைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களை கிளர்ந்தெழச் செய்த காலமாகும். அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக காணும் பொழுதுதான் அதன் பரிமாணம் நன்கு விளங்கும்.

22. மக்கள் சேவையில் புதிய உத்திகள்

மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு கலையும், இசையும் பெரும் உதவி புரிந்தன. கட்சியின் பிரச்சாரமும், கொள்கையும் பரந்துபட்ட மக்கட்பகுதிகளைச் சென்றடைவதில் இவை அரும்பணி ஆற்றின.

கம்யூனிஸ்ட் கட்சி பல புதிய உத்திகளை பிரச்சார முறையில் கையாண்டது. அவைகளில் ஒன்று தெருமுனைப்பிரச்சாரம். அதற்கு மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்தது. 70 ஆண்டுகளுக்கு முன் தகவல் தொடர்பு சாதனங்கள் பெருமளவு வளராத அக்காலத்தில் இந்தப் பிரச்சாரம் பெரும்பயன் அளித்தது.

காலை 10 மணிக்கு கட்சி உறுப்பினரும் கரகாட்டக் கலைஞருமான பொன்னுத்தேவர் ஒரு தெருமுனையில் தலையில் கும்பம் வைத்து தனது கரகாட்டத்தைத் தொடங்குவார். கும்பத்தின் உச்சியில் செங்கொடி சொருகப்பட்டிருக்கும். 10 நிமிடங்கள் கழித்து சங்கரய்யா அங்கே சைக்கிளில் செல்வார். சங்கரய்யா அங்கே வந்தவுடன், பொன்னுத்தேவர் சற்று தூரத்தில் வேறொரு தெருமுனைக்குச் சென்று தனது ஆட்டத்தைத் தொடங்குவார். சங்கரய்யா 15 நிமிடங்கள் அங்கே திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்திடையே அரசியல் நிலைமைகள் குறித்தும், அவற்றில் கட்சியின் நிலைபாடு குறித்தும் விளக்குவார். அதன்பின் அவர் பொன்னுத்தேவர் ஆடிக்கொண்டிருக்கும் இடத்திற்குச் செல்வார். பொன்னுத்தேவர் வேறொரு இடம் செல்வார்.

இவ்வாறு மாலைக்குள் 10 முதல் 15 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும். இந்தக் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் 200 முதல் 300 பேர் வரை குழுமியிருப்பார்கள். அந்த இடங்களிலும் கட்சி நிதிக்கு உண்டியல் வசூல் செய்யப்படும். இந்த தெருமுனைப் பிரச்சாரம் அடிக்கடி நடந்து கொண்டேயிருக்கும்.

மற்றொரு வகை தெருமுனைப் பிரச்சாரமும் மதுரையில் பிரபலமாக விளங்கியது. மதுரையில் கட்சியின் இளம் தலைவர்களாக விளங்கிய ஜானகியம்மா, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எம்.மாணிக்கம் மற்றும் ஐ.வி.சுப்பையா போன்றவர்கள் சிறந்த பாடகர்கள் ஆவர். அவர்கள் பாடல்கள் இல்லாத கட்சிக் கூட்டங்களே கிடையாது. அவர்களுடன் 1944 ஆம் ஆண்டில் பல புதிய பாடகர்களும் கட்சிக்குக் கிடைத்தனர். இந்தி மொழி ஆசிரியரும், சிறந்த குரல்வளம் கொண்டவரும், பாடலாசிரியருமான டி.மணவாளன், அவர் தம்பியும் பாடகருமான டி.தெய்வநாயகம், ஐ.வி.சுப்பையாவின் துணைவியார் கமலம், எஸ்.குருசாமியின் மகள் சுப்புலட்சுமி, மதுரைக் கல்லூரி மாணவர் சங்கரராஜூ, அவர் தம்பி ஆனந்தராஜூ, ராஜம்மாள் போன்ற பாடகர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

இந்த பாடகர் பட்டாளம் மதுரையைக் கலக்கியது என்றால் மிகையல்ல. எம்.ஆர்.எஸ்.மணி எழுதிய “செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா அது எம் கொடி என்றதுமே’’ என்ற பாடலும்,

மணவாளன் எழுதிய “புவிதனில் புகழ்வளர் இந்திய நாடே பிறிதொன்று எமக்கில்லை ஈடே’’ என்று தொடங்கும் பாடலும், அவர் எழுதிய  “இமயத்தின் சிகரத்தே இருந்து எச்சரிக்கின்றோம்” “இங்கே எவர்க்கும் இந்துஸ்தான் எங்கள் நாடு’’ என்ற பாடலும், ஜீவா இயற்றிய “காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை’’ என்ற பாடலும் கூட்டங்களில் பிரபலமாக பாடப்பட்டன.

முறைப்படி சங்கீதம் கற்ற ஐ.வி.சுப்பையா நாட்டியமும் தெரிந்தவர். அவர், கட்சிக் குடும்பங்களைச் சேர்ந்த சுப்புலட்சுமி, நாகம்மாள், தனமணி போன்ற சிறுமிகளுக்கு பாரதியார் பாடல்கள், இயக்கப் பாடல்களுக்கேற்ப நடனமாட பயிற்சி அளித்தார். அதுவும் தெருமுனைப் பிரச்சாரத்திற்குப் பயன்பட்டது. முக்கியத் தெருமுனைகளில் இந்தச் சிறுமிகள், பாரதியாரின் ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே’ என்ற பாடலுக்கும், மணவாளன் எழுதிய “புவிதனில் புகழ்வளர் இந்திய நாடே பிறிதொன்று எமக்கில்லை ஈடே’’ என்ற பாடலுக்கும், வேறு பல பாடல்களுக்கும் ஏற்ப நடனமாடுவார்கள். இதைக்காண பெரும் கூட்டம் கூடிவிடும். நடன நிகழ்ச்சி முடிந்ததும் சங்கரய்யா, ஜானகியம்மா, செல்லையா போன்றோர் உரையாற்றுவார்கள்.

1943-44 ஆம் ஆண்டுகளில் கொடிய வங்காளப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக ‘வங்கப் பஞ்சம்’ என்ற நாடகம் நடத்தப்பட்டது. இதில் பிரதான பங்கு ஜானகியம்மாவுடையது. அவருடன் அவர் கணவர் எஸ்.குருசாமி, கே.பாலதண்டாயுதம், சங்கரய்யா போன்றோரும் அதில் நடித்தனர். பஞ்சத்தில் கணவனை இழந்த பெண்ணாக ஜானகியம்மா பாடும் ஒப்பாரிப்பாடல், அந்த நாடகத்தைக் காணும் ஆயிரக்கணக்கான மக்களை கண்கலங்க வைக்கும். நாடக முடிவில் வங்கப்பஞ்ச நிவாரண நிதி வசூலிக்கப்படும். உணர்ச்சிவசப்பட்ட மக்கள், தங்கள் கையிலிருந்த காசுகளை அப்படியே வழங்கினர். அந்த நிதி கட்சியின் வங்க மாநிலக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.

மணவாளனை மையமாகக் கொண்ட மதுரை புதுமைக் கலாமன்றம் “கூண்டுக்கிளி’’ உள்ளிட்டு பல நாடகங்களை நடத்தியது. இவை 30 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை நடக்கும். இவையும் தெருமுனைகளில் நடத்தப்பட்டன.

தாழ்த்தப்பட்ட மக்களின் துயர வாழ்வையும், சமூக கொடுமைகளையும் விளக்கி, மணவாளன் ஒரு ஓரங்க நாடகம் எழுதி அதற்கான பாடல்களையும் தயாரித்தார்.

“எங்கள் மக்கள் ஏன் அடைந்தார் தாழ்வையே எவரறிவார் யாம் வாழும் இவ்வாழ்வையே’’ என்று அவர் பாடும் உருக்கமான பாடல் கேட்போரை சோகத்தில் ஆழ்த்திவிடும்.

இந்த நாடகங்கள், பாடல்கள் தயாரிப்பின்போது சங்கரய்யா, ஜானகியம்மா, குருசாமி உள்ளிட்டோர் பார்வையாளர்களாக அமர்ந்திருப்பார்கள். தங்கள் ஆலோசனைகளைக் கூறுவார்கள். அத்தகையதொரு சந்தர்ப்பத்தில், சங்கரய்யா, மணவாளனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் குறித்து மணவாளன் பாடல் ஒன்று இயற்றிப் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மணவாளன் அதை ஏற்றுக் கொண்டார்.

சிறிது காலத்திற்குப் பிறகு மாணவர் சங்கத் தலைவர்களில் ஒருவரும் சிறந்த பாடலாசிரியருமான எம்.பி., சீனிவாசன் மதுரைக்கு வந்தார். அவரும், மணவாளனும் சேர்ந்து இரண்டு பாடல்கள் எழுதினர். அவற்றில் ஒன்றுதான் பிரபலப்பாடலான “விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா! தோழா! என்பதாகும். மற்றொரு பாடல் “புது உலகம் பூத்தது பாராய்’’ என்ற தொடங்கும்
பாடலாகும். “விடுதலைப் போரினில் வீழ்ந்த மலர்’’ வெகு விரைவில் தமிழகமெங்கும் பிரபலமாயிற்று.

அது சங்கரய்யாவுக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இன்றும் அப்பாடலைக் கேட்கும் பொழுது அவர் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்துவிடுவார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
இடமிருந்து வலமாக: கோ.வீரய்யன், டி.கே.ரெங்கராஜன், என். வரதராஜன், என்.சங்கரய்யா, பி.ராமச்சந்திரன், பாப்பாஉமாநாத், உமாநாத், மேல் வரிசை: அ.சவுந்தராஜன், வி.மீனாட்சிசுந்தரம், கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத், கே.வரதராஜன், கே. தங்கவேல், தே. லட்சுமணன், ஏ.கே. பத்மநாபன், ஜி.ராமகிருஷ்ணன், எம்.என்.எஸ். வெங்கட்ராமன், ப.செல்வசிங்.

23. ஒரு அடிக்குப் பத்து அடி

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் பொழுது, வன்முறைச் சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் கடுமையான அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. ஏராளமான காங்கிரஸ் ஊழியர்களையும், தலைவர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது.

இந்தத் தாக்குதல் காரணமாக ஒரு சில வாரங்களுக்குள் “வெள்ளையனே வெளியேறு’’ இயக்கம் மதுரையில் சோர்ந்து விட்டது. இத்தருணத்தில் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கொடிகளையும், செங்கொடிகளையும் கையில் ஏந்தி “அடக்கு முறையை நிறுத்து’’ தேசியத் தலைவர்களை விடுதலை செய்’’ என முழக்கமிட்டனர். இது மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், 1944 ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் விடுதலையாகத் தொடங்கிய பின் கம்யூனிஸ்டுகள் மீது வசைபாடுவது தொடங்கியது. கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் யுத்தக் கொள்கையானது தேசத் துரோகமானது என்றும், கம்யூனிஸ்டுகள் தேசத்துரோகிகள் என்றும் காங்கிரஸ்காரர்கள் நிந்தனை செய்ய ஆரம்பித்தனர். பின்னர், அது தாக்குதலாகவும் மாறியது.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் தாக்கப்படலாயின. கம்யூனிஸ்டுகளை அடிப்பது, அவர்கள் மீது கல்லெறிவது என்பது தொடங்கியது. இந்த ஆத்திரமூட்டல்களுக்கு பலியாகிவிடக் கூடாதென்று கூறி கம்யூனிஸ்டு தலைமை பொறுமை காண்பித்தது. ஆனால், நிலைமை நாளுக்கு நாள் மோசமடையவும் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி ‘ஒரு அடி கொடுத்தால் 10 அடி திருப்பிக்கொடுங்கள்’ என்று கட்சி ஊழியர்களுக்கு கட்டளையிட்டார். இந்த அறைகூவல் வெளியானவுடன் நாடு முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் கம்யூனிஸ்டுகள் திருப்பி அடிக்கத் தொடங்கினர்.

“ஓங்கிப் பிடித்தால் செங்கொடி
திருப்பி அடித்தால் தடியடி’’

என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது.

மதுரையில் கம்யூனிஸ்டுகள் பலவித அவமரியாதைகளுக்கு ஆளாயினர். மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது. ஒருமுறை அணுகுண்டு அய்யாவு போன்றோர் தலைமையில் சமூக விரோதக் கும்பல் கட்சி அலுவலகத்தைச் சூழ்ந்து தாக்குதல் தொடங்கியது. இதை அறிந்த, அப்பகுதி மக்கள் ஓடோடி வந்து காங்கிரஸ் கும்பலுக்கு அடி, உதை கொடுத்து விரட்டினர்.

மற்றொரு முறை இதே நபர்கள் தலைமைதாங்க, ஒரு பெரும் கும்பல் கத்திகள், கம்பிகளுடன் கட்சி அலுவலகத்தைச் சுற்றி வளைத்தது. அச்சமயத்தில் அலுவலகத்திற்குள் கூத்தக்குடி சண்முகம், ஜானகியம்மா, எம்.முனியாண்டி, சங்கர்ராஜூ, ஆர்.சுந்தரம் உள்ளிட்டு ஐந்தாறு தோழர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கினர். கூத்தங்குடி சண்முகமும், முனியாண்டியும் மாடிக்குச் சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த செங்கற்கள், ஓடுகளை எடுத்து மேலிருந்து ரவுடிக்கும்பல் மீது வீசி விரட்டியடித்தனர். இதற்குள் சுற்றுவட்டாரத்தில் தகவல் பரவி, ஏராளமான தோழர்கள் வந்து இந்தக் கும்பலை ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கில வார ஏடு ‘பீப்பிள்ஸ் ஏஜ்’ மதுரை தாக்குதல்கள் குறித்து பின்வரும் செய்தியைத் தருகிறது.

“1945 ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவில் மதுரை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் வீடுதிரும்பும் பொழுது அய்யாவு கும்பலால் தாக்கப்பட்டார். மோட்டார் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த மற்றொரு தோழரும் தாக்கப்பட்டார். அதற்குச் சில தினங்களுக்கு முன்பாக இந்தி பண்டிட் மணவாளனும், மற்றிருவரும் இரவில் தாக்கப்பட்டனர். தாக்கியவர்களே போலீசில் போலி புகார் கொடுத்தனர். கம்யூனிஸ்டுகள் தங்கள் மீது கல்லெறிந்து தாக்கினர் என்று புகார் செய்தனர். நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.”

“நகரில் இது பெரும் பதட்டத்தையும், ஆத்திரத்தையும் உண்டாக்கியது. ஆனால் பி.ராமமூர்த்தி மிகுந்த சிரமப்பட்டுத் தோழர்களைக் கட்டுப்படுத்தினார். கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள், போலீஸ் மற்றும் அதிகார வர்க்கத்தின் கைப்பாவைகள். “எனவே, கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களின் இந்த சீர்குலைவுக் கொள்கைக்கெதிராக நேர்மையான அனைத்து காங்கிரஸ்காரர்களின், அனைத்து நேர்மையான மக்களின் ஜனநாயக உணர்வுகளைத் தட்டி எழுப்புவது முறையானதாகும் என்று கூறினார்.

“அதே இரவில் மோட்டார் தொழிலாளர் சங்கச் செயலாளரான கருப்பையாவின் தம்பி அவருடைய வீட்டெதிரிலேயே தாக்கப்பட்டார். கம்யூனிஸ்டுகள் தலையீட்டின் காரணமாக பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. அடுத்த நாள் 12 ஆயிரம் பேருக்குமேல் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் மாவட்டச் செயலாளர் சங்கரய்யா, சீர்குலைவாளர்களின் பெயர்களைக் கூறி அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருந்த மக்களைக் கேட்டுக்கொண்டார்.

“இவையனைத்தின் பிரதிபலிப்பு உடனே தெரிந்தது. அடுத்தநாள் அய்யாவு தன்னுடைய குண்டர் கும்பலுடன் வந்து கைத்தறி தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் உள்ள வாசகசாலையில், பறந்துகொண்டிருந்த செங்கொடியை இறக்க முயன்றபொழுது அப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமாக 500க்கும் மேற்பட்டோர் அங்கே விரைந்து போய் அய்யாவு கும்பலை ஓட ஓட விரட்டியடித்தனர். கம்யூனிஸ்டுகள் தலையீடு இல்லையென்றால், இவ்வாண்டு காந்தி ஜெயந்தி ரத்தக்களறி ஆகியிருக்கும்..’’

24. தந்தையார் மறைவு

1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-25 தேதிகளில் தமிழ்நாடு தொழிற்சங்கக் காங்கிரசின் (டி.என்.டி.யு.சி) மாநில மாநாடு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பிரபல தொழிற்சங்கத் தலைவரும் கட்சித் தலைவருமான எஸ்.ஏ.டாங்கே, பி.ராமமூர்த்தி, பாலச்சந்திரமேனன் போன்றோர் பங்கெடுத்தனர்.

இம்மாநாட்டில் கிருஷ்ணபிள்ளை தலைமையில் கேரள பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். கட்சி அலுவலகத்திற்கு வந்த கிருஷ்ணபிள்ளை சங்கரய்யாவைச் சந்தித்துப் பேசினார்.

அந்த மாநாட்டு ஏற்பாடுகளை சங்கரய்யா கவனித்துக் கொண்டிருக்கும்பொழுது டிசம்பர் 25 ஆம் தேதியன்று அவருக்கு பெரும் அதிர்ச்சி தரும் தகவல் வந்தது. அலுவலகத்திலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த அவருடைய தந்தையார். நரசிம்மலு மாரடைப்பால் உயிர்நீத்தார் என்ற தகவல் அவருக்கு கிடைத்தது. இது சங்கரய்யாவிற்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அன்று காலையில் மதுரை ரயில் நிலையத்தில் எஸ்.ஏ.டாங்கேக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்ட நரசிம்மலு, மாலையில் நடைபெறும் டாங்கேயின் கூட்டத்திற்கும் வருவதாக சங்கரய்யாவிடம் கூறியிருந்தார். ஆனால் சில மணி நேரத்திற்குள் அவர் மறைந்துவிட்டார். அவர் அச்சமயத்தில் கோச்சடை நீரேற்றும் நிலையத்தில் பொறியாளராக இருந்தார்.

உடனடியாக வீட்டிற்குத் திரும்பிய சங்கரய்யா, தந்தையாரின் இறுதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார். அன்று மாலை நடைபெற்ற பேரணியில் நரசிம்மலுவின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

நரசிம்மலுவின் மறைவு செய்தி பரவியதும், அன்றும், அடுத்த நாளும் ஏராளமான மக்கள் கோச்சடையிலிருந்த அவரது வீட்டிற்கு வந்து அஞ்சலி செய்தனர். எம்.ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்டு ஏராளமான தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலம் மிகப்பெரிதாக இருந்தது. ஏராளமான மக்கள் பங்கெடுத்தனர் என்று மாநாட்டுப் பிரதிநிதிகளில் ஒருவரும், கம்யூனிஸ்ட் தலைவருமான ஏ.எம்.கோபு நினைவு கூர்கிறார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5ஆவது சிறப்பு மாநாடு 1958ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமிர்தசரஸ் நகரில் நடந்தபோது தமிழக பிரதிநிதிகள் (சங்கரய்யா வலதுபுறம் கடைசியில் நிற்பவர். அவருக்கு வலதுபுறத்தில் ஆர். நல்லகன்னு, வா. சுப்பையா

25. மதுரையில் பி.சி.ஜோஷி

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி 1946 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகம் மற்றும் மலபாரில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு அனைத்து இடங்களிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அவருடன், கட்சியின் வார ஏடான “பீப்பிள்ஸ் ஏஜ்’’ (மக்கள் யுகம்) ஏட்டின் சிறப்புச் செய்தியாளர் ஏ.எஸ்.ஆர்.சாரியும் பயணம் செய்தார். பின்னாட்களில் இந்திய உச்சநீதிமன்றத்தின் பிரபலமான வழக்கறிஞராக விளங்கிய சாரி, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.கே. அய்யங்காரின் சகோதரராவார்.

ஜோஷி மதுரைக்கு வந்த தினத்தன்று மதுரை நகரமே விழாக்கோலம் கொண்டு அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தது. பெரிய கூட்டத்தை நடத்த மதுரை நகரில் இடமில்லாததால், கம்யூனிஸ்ட் கட்சி மதுரை வைகை ஆற்றின் நடுவில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இக்கூட்டத்திற்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர். ஒரு லட்சம் மக்கள் திரண்டிருந்த அக்கூட்டத்தில் ஜோஷி நெடிய உரையாற்றினார். சங்கரய்யா அந்த உரையை தமிழாக்கம் செய்தார். ஜோஷியின் உரையும், தமிழாக்கமும் சேர்ந்து 3 மணி நேரத்திற்கும் அதிகமானது.

அடுத்த நாள் ஜோஷி மன்னார்குடிக்குச் சென்றார். அங்கேயும் அவர் உரையை சங்கரய்யா தமிழாக்கம் செய்தார். பின்னர் ஜோஷி, திருச்சி மற்றும் கோவையில் பேசியபின் கண்ணனூருக்குச் சென்றார்.

ஜோஷியின் மதுரை விஜயம் குறித்து “பீப்பிள்ஸ் ஏஜ்’’ ஏட்டில் விவரமாக எழுதிய ஏ.எஸ்.ஆர்.சாரி, அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால் நகரைச் சுற்றிப் பார்த்தபொழுது நமது இளம் கட்சித் தோழர்களான சங்கரய்யா, சாந்துலால், கிருஷ்ணசாமி மற்றும் மதுரைத் தோழர்கள் மூன்றாண்டு காலத்திற்குள் பஞ்சாலைத் தொழிலாளர்கள், பஸ் தொழிலாளர்கள், குதிரை வண்டிக்காரர்கள், வர்த்தக சிப்பந்திகள் மற்றும் கை நெசவுத் தொழிலாளர்களின் பலமான தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டியுள்ளனர் என்பதைக் காண முடிந்தது.’’

ஜோஷியின் ஒருவார கால சுற்றுப்பயணத்தில் மதுரையில் நடைபெற்ற கூட்டம்தான் மிகப்பெரிய கூட்டமாக இருந்தது என்பதை “பீப்பிள்ஸ் ஏஜ்’’ தரும்விபரம் மூலம் அறியலாம்.

‘தமிழ்நாடு மற்றும் கேரளா’

ஜோஷியின் எட்டுக் கூட்டங்களில் 3 லட்சம் மக்கள்

தேதி                      இடம்                                   பங்கேற்றோர்

3.4.46                      சென்னை                            15,000

4.4.46                      மதுரை                                 1,00,000

5.4.46                      மன்னார்குடி                      30,000

6.4.46                      திருச்சி                                  40,000

7.4.46                      கோவை                              50,000

கேரளா

8.4.46                      கண்ணனூர்                        30,000

9.4.46                      தலைச்சேரி                        12,000

10.4.46                    கள்ளிக்கோட்டை           30,000

மொத்தம்                            3,07,000

இதே 1946 ஆம் ஆண்டில் இந்தியாவையே உலுக்கிய கடற்படை எழுச்சி பம்பாயில் துவங்கி கல்கத்தா. சென்னை என்று அனைத்திடங்களுக்கும் பரவியது. ஆங்கிலேய கடற்படையிலிருந்த  இந்திய வீரர்கள் ஆங்கிலேய வீரர்களுக்கு சமமான ஊதியம் கோரியும், மரியாதையாக நடத்தக் கோரியும் பெரும் கிளர்ச்சியில் இறங்கினர். அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவைக் கோரினார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் அவர்களுக்கு முழுஆதரவு அளித்தது. ஆங்கிலேய அரசாங்கம் அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவியது. இதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை நடத்தும்படி அறைகூவல் விடுத்தது.

இதன்படி மதுரையில் வேலைநிறுத்தமும், மாலையில் பெரும் ஊர்வலமும் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் தலைமை தாங்கி நடத்திச் சென்றனர். பொதுக் கூட்டம் நடைபெறவிருந்த மணல்மேடு  பகுதியை நோக்கி ஊர்வலம் செல்லும் போது ஆங்கிலேய காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியைக் காட்டி ஊர்வலத்தை நிறுத்த முயற்சித்தார். இதைக்கண்ட சங்கரய்யா, “சுடுவதானால் சுட்டுக்கொள்” என்று கூறினார். அந்த அதிகாரி தன் பயமுறுத்தல் பலிக்காது என்று நின்று விட்டார்.  நடைபெற்ற கூட்டத்தில் கடற்படை வீரர்களுக்கு மதுரை மக்களின் ஆதரவைத் தெரிவித்து சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் முழங்கினர்.

26. மதுரை சதி வழக்கு

மதுரை ஹார்விமில் தொழிலாளர்களின் பெருவாரியான வாக்குகள் பெற்று பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் அங்கீகாரம் பெற்றதையும்,  உணவுதானிய பதுக்கல் விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் தலையிட்டு பதுக்கலை கைப்பற்றி விநியோகிக்கச் செய்ததையும் கண்ட சென்னை மாகாண அரசாங்கம் ஒரு சதித் திட்டத்தில் இறங்கியது. முக்கியமான கம்யூனிஸ்டு தலைவர்களையும், ஊழியர்களையும் மதுரையில் கைது செய்து ஒரு சதி வழக்கை நடத்த அதுமுடிவு செய்தது.

இதன் விளைவாக போடப்பட்டதுதான் மதுரை சதி வழக்கு, இத்திட்டத்தின்படி பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஏ.பாலசுப்பிரமணியம், பி.பாலச்சந்திர மேனன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் எஸ்.கிருஷ்ணசாமி, எஸ்.பாலு, டி.மணவாளன் ஆர்.கே.சாந்துலால், ஆர்.வி.சித்தா, ப.மாணிக்கம், தத்துவம் பிள்ளை, எம்.முனியாண்டி உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்டு. இவர்கள் அனைவரும் 1946 டிசம்பர் மாத இறுதியில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமணியம் மற்றும் பாலச்சந்திரமேனன் ஆகிய மூவரையும் இந்த வழக்கில் சேர்க்க வழியில்லை என்பதால் அவர்களை காவல்துறையினர் இந்த வழக்கிலிருந்து எடுத்துவிட்டு பாதுகாப்புக் கைதிகளாக வேலூர் சிறையில் அடைத்தனர்.

எனவே பி.ராமமூர்த்தியை முதல் எதிரியாகவும், சங்கரய்யாவை இரண்டாவது எதிரியாகவும், இதரர்களை பிற எதிரிகளாகவும் சேர்த்து மதுரை சதி வழக்கு தொடங்கப்பட்டது.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
பி.ராமமூர்த்தி

சுமத்தப்பட்ட குற்றம் என்ன? ஒரு நாள் மாலையில் ராமமூர்த்தியும், வேறு சிலரும் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இதர தொழிற்சங்கத்  தலைவர்களை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டதாகவும், இதை முனியாண்டி என்ற ஜட்கா வண்டிக்காரர் கேட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சுமார் 8 மாதங்கள் நடைபெற்றது. அதுவரை அனைவரும் ரிமாண்ட் கைதிகளாகவே வைக்கப்பட்டிருந்தனர். வழக்கு விசாரணைக்கு கொண்டு செல்லும்போது ராமமூர்த்தி, சங்கரய்யா மற்றும் தங்கமணி நீங்கலாக இதர அனைவருக்கும் கைவிலங்கு போடப்போவதாக காவல்துறையினர் கூறினர். ராமமூர்த்தி அதை கடுமையாக எதிர்த்தார். ‘யாருக்கும் கைவிலங்கு போடக்கூடாது, போடுவதானால் அனைவருக்கும் போடுங்கள்’ என்று ஆவேசமாகக் கூறவும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். எவருக்கும் கைவிலங்கு போடவில்லை.

இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்பொழுதும் திருப்பிக் கொண்டுவரும்பொழுதும் மக்கள் ஆங்காங்கே கூடிநின்று வாழ்த்து முழக்கங்கள் எழுப்புவார்கள். காவலர்கள் பலரைக் கொண்ட ஒரு காவல்படையே இவர்களை அழைத்துச் செல்லும். அந்தக் காவலர்களில் பாலுச்சாமியும்  உண்டு. அவர் இந்த கம்யூனிஸ்ட் கைதிகளிடம் மரியாதையாக இருப்பார். புன்னகை செய்தவாறு இருப்பார். அவர்தான் பின்னாட்களில் கம்யூனிஸ்டாகி தூக்குமேடை ஏறிய தியாகி பாலு!

இந்த வழக்கு விபரங்களைப் படித்த ராமமூர்த்தி, இந்த வழக்கின் பிரதான சாட்சியான ஜட்கா வண்டி ஓட்டுநர் முனியாண்டி குறித்த விபரங்களைச் சேகரிக்கும்படி வெளியில் இருந்த தோழர்களைக் கேட்டுக் கொண்டார். அவர்களும் விபரங்கைளச் சேகரித்து இந்த முனியாண்டி என்பவன் சிறு திருடன் என்றும், ஏற்கனவேயே மதுரை சிறையில் இருந்துள்ளான் என்றும் தகவல் கூறினர்.

இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் நாள் மாலையில் பி.ராமமூர்த்தியும், இதர சில தோழர்களும் சொக்கி குளத்திலிருந்த பதுக்கல் ஒழிப்பு அதிகாரி வெங்கடரமணியைச் சந்தித்து பதுக்கல்களை கைப்பற்றும்படி கோரியுள்ளனர். தேசிய மனப்பான்மை கொண்ட அந்த அதிகாரி ராமமூர்த்திக்கு மிகவும் அறிமுகமானவர். இப்பொழுது ராமமூர்த்தி அவருக்குத் தகவல் அனுப்பி, அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தான் அவரைச் சந்தித்து விவாதித்ததை நீதிமன்றத்திற்கு வந்து கூறமுடியுமா என கேட்டார். அவரும் அதற்கிசைந்தார்.

விசாரணையின் பொழுது ஜட்கா ஓட்டுநர் முனியாண்டியை ராமமூர்த்தி குறுக்கு விசாரணை செய்தார். சிறை அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்த ராமமூர்த்தி அவர்களைக் கொண்டே இந்த முனியாண்டி திருடன் என்பதை நிரூபித்தார். அந்த முனியாண்டி நீதிமன்றத்தில் கதறி அழுது, தான் பொய்ச்சாட்சி என்பதை ஒத்துக் கொண்டான். காவல்துறை அதிகாரி வெங்கடரமணி சாட்சிக் கூண்டில் ஏறி சம்பவம் நடந்த நாள் மாலையில் ராமமூர்த்தியும் வேறுசிலரும் தனது அலுவலகத்தில் தன்னை சந்தித்துப் பேசியதை குறிப்பிட்டார். இது காவல்துறையினரை கலங்கச் செய்துவிட்டது.

வழக்கு விசாரணை முடிந்து சிறப்பு நீதிபதி ஹசீம், நாடு விடுதலையடைவதற்கு முதல்நாள் அதாவது 1947 ஆகஸ்ட் 14ம் தேதி இரவு மதுரை மத்திய சிறைக்கு வந்து அனைவரையும் விடுதலை செய்தார். பிரபலமான மக்கள் ஊழியர்களுக்கெதிராக ஒரு கிரிமினல் குற்றவாளியை பொய்ச்சாட்சியாக வைத்து இந்த வழக்கை புனைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி அனைவரையும் விடுதலை செய்தார்.

அனைவரும் விடுதலையாகி வெளிவரும் தகவல் மதுரைக்குள் பரவியதும் ஏராளமானோர் செங்கொடிகளுடன் சிறை வளாகத்தில் கூடிவிட்டனர். அனைவரும் விடுதலையாகி வெளியே வந்ததும், வாழ்த்து முழக்கங்கள் விண்ணைப் பிளக்குமளவிற்கு எதிரொலித்தன.

தலைவர்கள் முன்வர பெரும் ஊர்வலம் அங்கிருந்து கிளம்பி, இரவில் மதுரை திலகர் திடலை வந்தடைந்தது.

அங்கே நடைபெற்ற பெரும் கூட்டத்தில் பி.ராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி ஆகியோர் உரையாற்றினர். நள்ளிரவு 12 மணிக்கு எங்கும் வெடிச்சத்தம் முழங்கியது. நாடு விடுதலையடைந்ததைக் குறிக்கும் விதத்தில் கூட்டத்தில் வாழ்த்து முழக்கங்கள் எதிரொலித்தன.

பொதுக்கூட்டம் முடிந்து தலைவர்கள் கட்சி அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆங்காங்கே சுதந்திரதினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள், தலைவர்களையும் தங்கள் விழாவிற்கு அழைத்தனர். அனைத்துத் தலைவர்களும் அவற்றில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
சிரியா நாட்டின் சுற்றுப்பயணத்தில் சங்கரய்யாவும் சிரியா விவசாய சங்க தூதுக்குழுவினரும்.

27. திருமணம்

மதுரை சதி வழக்கிலிருந்து சங்கரய்யா விடுதலையான சில நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 18 ஆம் தேதியன்று அவருக்கும், ஆசிரியை நவமணிக்கும் மதுரையில் திருமணம் நடைபெற்றது. மதுரை கட்சி அலுவலகத்தில் பி.ராமமூர்த்தி தலைமையில் இந்தத்திருமணம் நடைபெற்றது. பொன்னுச்சாமி-அன்பம்மாள் தம்பதியரின் புதல்வியான நவமணி ஆசிரியை பயிற்சி முடித்திருந்தார்.

அவருடைய அண்ணன் நல்லதம்பி, மதுரையின் ஆரம்பகால கட்சி உறுப்பினர்களுள் ஒருவராவார். அவர் மூலமாக நவமணிக்கு கட்சியுடன் தொடர்பேற்பட்டது. அண்ணன் நல்லதம்பியும், அவரது சகோதரி ஜெயமணியும் ‘வங்கப்பஞ்சம்’ நாடகத்தில் நடித்துள்ளனர். நவமணியைப் போலவே அவரது மூத்த சகோதரி ஜெயமணியும்,  இளைய சகோதரி தனமணியும் கட்சி ஆதரவாளர்கள் ஆவர். தனமணி கட்சி உருவாக்கிய கலைக்குழுவில் பங்கேற்று நடனமாடுவதுண்டு.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
சங்கரய்யாவின் குடும்பம் (1963)

நவமணி, மதுரையில் நடந்த சோவியத் கண்காட்சியில் விளக்கிக்கூறும் தொண்டராகச் செயல்பட்டுள்ளார். தவிர, மதுரையில் மாதர் சங்கம் நடத்திய புதுமைக்கொலுவில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். புதுமைக்கொலு என்பது பொம்மைகளுக்குப் பதிலாக அரசியல் தலைவர்கள் படங்கள் நாடுகளின் வரைபடங்கள் போன்றவற்றைச் சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்டு நடத்தப்பட்டதாகும். இதை ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கண்டுகளித்துள்ளனர்.

சங்கரய்யா ஒரு கிறித்தவப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தது அவருடைய குடும்பத்துப் பெரியவர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சங்கரய்யா அதில் உறுதியாக இருந்தார். எனவே சங்கரய்யாவின் அண்ணன் ராஜமாணிக்கம் அவர்களுடன் பல நாட்கள் தொடர்ந்து பேசி அந்த தயக்கத்தைப் போக்கினார். அதேபோல நவமணியின் குடும்பத்திலும் இந்தத் திருமணத்திற்கு அவர் பெற்றோர் தயங்கினர். நவமணியின் அண்ணனும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான நல்லதம்பி தங்கள் பெற்றோருடன் பேசி அவர்கள் தயக்கத்தைப் போக்கினார்.

சங்கரய்யா-நவமணி திருமணமானது கலப்பு திருமணமாகும். வெவ்வேறு சாதிகள் மட்டுமல்ல, வெவ்வேறு மதங்களுமாகும். நவமணியின் குடும்பம் பிராடெஸ்டண்ட் கிறித்தவ குடும்பமாகும்.

சங்கரய்யா-நவமணி தம்பதியின் மூத்த புதல்வர் சந்திரசேகர் 1948 ஆம் ஆண்டிலும், புதல்வி  சித்ரா 1952 ஆம் ஆண்டிலும், இரண்டாவது புதல்வர் நரசிம்மன் 1960 ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.

28. கல்கத்தா மாநாடும் கட்சி மீது தாக்குதலும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் (அகில இந்திய மாநாடு) 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியன்று கல்கத்தாவில் உள்ள முகமதலி பூங்காவில் துவங்கியது.இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து எம்.ஆர்.வெங்கட்ராமன், சங்கரய்யா, பாலதண்டாயுதம், சி.கோவிந்தராஜன், எம்.வி.சுந்தரம், லலிதா அண்ணாஜி, எம்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டு பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 632 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாடு ஒரு அதிதீவிர வழியைப் பின்பற்றப்போகிறது என்றுணர்ந்த இந்திய அரசாங்கம் மாநாட்டு அரங்கை தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்தது.

இந்த மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானமானது இந்திய சுதந்திரம் போலியானதென்றும், நேரு அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டுமென்றும் கூறியது.

மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானம் எவ்வாறிருந்தது என்பதை முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் விளக்குகிறார்.

“தெலுங்கானா வழியே நமது வழி என்பதுதான் அந்த முழக்கமாகும். வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால் கட்சியின் முயற்சியானது தெலுங்கானாவிலிருந்து படிப்பினையைப் பெறுவது என்பது மட்டுமல்ல, ஆனால் நாடு முழுவதிலும் தெலுங்கானாவில் செய்ததைப் போல செய்வதாகும். தெலுங்கானா மாதிரி அரசாங்க அமைப்புகளை ஒவ்வொரு இடத்திலும் ஏற்படுத்துவது, அதன்மூலம் நேரு அரசாங்கத்தைத் தூக்கி எறிவதாகும்…’’

இந்த மாநாடு பி.டி.ரணதிவேவை கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது.இந்த மாநாடு நடைபெறும் நேரத்திலேயே,  தமிழகத்தலைவர்களை கைது செய்யும் நோக்குடன் தமிழகத்திலிருந்து சிறப்புக் காவல்படை கல்கத்தாவிற்கு வந்தது. இந்த விபரத்தை அறிந்த கட்சியின் மத்தியத் தலைமை, உடனே தமிழகப் பிரதிநிதிகளை பல்வேறு இடங்களுக்கு மாற்றி அங்கிருந்து வெவ்வேறு ரயில் நிலையங்களுக்கு கொண்டு சென்று ரயிலில் தமிழகத்திற்கு அனுப்பச் செய்தது. தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவரான எம்.வி.சுந்தரம் கூறுகிறார்.

“அவ்வாறு தலைமறைவாக வைக்கப்பட்டவர்களில் தோழர்கள் ஏ.எஸ்.கே.அய்யங்கார், பாலதண்டாயுதம், சங்கரய்யா, எம்.வி.சுந்தரம் ஆகிய நால்வரும் கல்கத்தாவில் அமல்சாட்டர்ஜி என்ற அரசு அதிகாரி ஒருவர் வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

“கட்சிக் காங்கிரஸ் முடிந்து சென்னை திரும்பும்பொழுது தலைமறைவாக வைக்கப்பட்டிருந்தவர்கள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டனர். நாங்கள் நால்வரும் தனியாக கல்கத்தாவிலிருந்து வேறு ரயில்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை திரும்புகிறோம்.

“ரயிலில் வரும்பொழுது போலீஸ் கண்காணிப்பு இருப்பது தெரிந்து நாங்கள் நால்வரும் இடையில் ஒரிஸ்ஸா மாநிலத்தில் கட்டாக்கில் இறங்கி தனித்தனியாகப் பிரிந்துவிட்டோம்.

நானும் தோழர் என்.சங்கரய்யாவும் கட்டாக்கில் தோழர் பி.என்.பி.கபூருக்குச் சொந்தமான தோல்பைகள் தயாரிக்கும் கடையில் தங்கியிருந்து மறுநாள் தனித்தனியாக சென்னைக்குப் புறப்பட்டோம்..’’

 

29. கட்சி மீது தடையும் தலைமறைவும்

கட்சியின் இரண்டாவது மாநாடு மார்ச் மாதம் 3ஆம் தேதியன்று முடிவுற்றது. கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் முடிவுகளுக்காக காத்திருந்த நேருவின் மத்திய காங்கிரஸ் அரசாங்கம் கட்சி மீது ஒடுக்குமுறையை ஏவியது. மேற்குவங்காள அரசாங்கம் மார்ச் 28 ஆம் தேதியன்று கட்சியை சட்டவிரோதக்கட்சி என்று பிரகடனம் செய்தது. மாநிலம் முழுவதும் கட்சி மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று தில்லி, பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் இதர மாகாணங்களில் அவ்வாறே நடைபெற்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை கட்சி தடை செய்யப்படும் முன்னரே இங்கே கைது நடவடிக்கை துவங்கிவிட்டது. சீர்காழி, மானாமதுரை, மதுரை போன்ற இடங்களில் கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படலாயினர். மதுரையில் பிரபல தொழிற்சங்கத் தலைவர் கே.டி.கே.தங்கமணி, டி.வி.எஸ். தொழிலாளர் சங்க பொருளாளர் சாமிநாதன் போன்றோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நீங்கலாக ஏராளமான தலைவர்களும், ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பின்னணியில் மதுரை திரும்பிய சங்கரய்யா பல இடங்களில் தலைமறைவாக இருக்க நேர்ந்தது. காவல்துறையினர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி வந்தனர். அவரது வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்பு இருந்தது. எனவே அவர் பொதும்பு, அதலை போன்ற கிராமங்களிலிருந்த தோழர்கள் ஏற்பாடு செய்த இடங்களில் தங்கினார். சில வார காலம் அவர் மதுரை சலவைத் தொழிலாளி மருதை வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அழுக்குத்துணி மூட்டைகள் நடுவில் அவர் தங்கவேண்டியிருந்தது. இதன் விளைவாக அவருக்கு கடுமையான சொறிசிரங்கு தொல்லை ஏற்பட்டது. வெளியில் எந்த மருத்துவரிடமும் செல்லமுடியாத நிலை. மதுரை மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட அவர் சுலபமாக கண்டுகொள்ளப்படுவார். எனவே மிகுந்த வேதனையுடன் இருக்க வேண்டியிருந்தது.

இந்த நிலைமை சென்னையில் தலைமறைவாக இருந்த கட்சித் தலைமைக்கு எட்டியதும் அவர்கள் ஒரு ஏற்பாட்டைச் செய்து சங்கரய்யாவை சென்னைக்கு கொண்டு சென்றனர். அங்கேயிருந்த டாக்டர் பி.கே.ஆர். வாரியாரிடம் சங்கரய்யா அழைத்துச் செல்லப்பட்டார். டாக்டர் வாரியார், மருத்துவக் கல்லூரியில் படிக்கும்பொழுது மாணவர் சங்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பலவார கால சிகிச்சைக்குப் பிறகு சங்கரய்யா ரகசியமாக மதுரைக்குத் திருப்பி தலைமறைவாகத் தன் பணியைத் தொடங்கினார்.

தலைமறைவு வாழ்க்கை என்பது மிகக் கடினமானது. ஒருபுறம் காவல்துறையின் தேடுதல் வேட்டையில் பிடிபட்டுவிடாமல் அதே நேரத்தில் ரகசிய தலைமறைவு மையங்களில் இருந்து கட்சியின் ஸ்தாபனப் பணிகளை கவனிக்க வேண்டும். பொதுவாக அனைத்து செயல்பாடுகளும் இரவு நேரங்களில்தான் செய்ய வேண்டியிருக்கும். சைக்கிளிலேயே பல இடங்களுக்குச் சென்று ஆங்காங்கே உள்ள கட்சி உறுப்பினர்களை, ஊழியர்களைச் சந்தித்து விவாதிப்பது, கட்சியின் அரசியல் ஸ்தாபன முடிவுகளை விளக்கிக்கூறுவது அவர்களின் செயல்பாட்டை குறித்து விவாதிப்பது போன்றவற்றை இரவில்தான் செய்ய வேண்டிருக்கும். அவர்களுக்கு கட்சியின் ரகசியப் பிரசுரங்களை விநியோகிப்பது பல அரங்கங்களின் வேலைகளை நிச்சயப்பது போன்றவற்றையும் செய்யவேண்டியிருக்கும்.

சங்கரய்யா சுமார் இரண்டு ஆண்டுக் காலம் மதுரையை மையமாக கொண்டு மாவட்டம் முழுவதும் சென்று இந்தப் பணியைச் செய்யவேண்டியிருந்தது. அவர் பெரியகுளம் உத்தமபாளையம், மேலூர், திருமங்கலம், சோழவந்தான், ஒத்தக்கடை, பழனி,  திண்டுக்கல், அலங்காநல்லூர் கோட்டைமேடு, மற்றும் பொதும்பு போன்ற இடங்களுக்குச் சென்று அங்கே சில நாட்கள் தங்கி கட்சி அமைப்பு பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது.

சில சமயங்களில் கூட்டங்கள் நடைபெறும் இடங்களை காவல்துறையினர் தெரிந்து கொண்டு அந்த இடங்களை சுற்றிவளைக்க முயற்சிப்பார்கள். ஆனால் இந்தக் கூட்டம் நடக்கும் இடங்களைச் சுற்றி தோழர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்ததால் காவல்துறையினர் வரும் தகவல் அறிந்து கூட்டத்தினர் அனைவரும் விரைவில் கலைந்து சென்று விடுவர். ஒருமுறை திண்டுக்கல் வட்டம் லந்திக்கோட்டையிலும் மற்றொரு முறை பழனி வட்டம் அத்திக்கோம்பையிலும் இவ்வாறு தப்பவேண்டியிருந்தது.

லந்திக்கோட்டையில் காவலர்கள் வரும் தகவல் அறிந்து ஆளுக்கொரு பக்கம் விரைந்து சென்று  தப்பித்தனர். சங்கரய்யா அங்கிருந்து மாயனூர் வழியாக கரூருக்கு நடந்தே சென்று தப்பித்தார். வெளியில் செல்லும் போது மாறுவேடத்துடன்தான் செல்ல வேண்டியிருந்தது. வெவ்வேறு பெயர்களில் செயல்படவேண்டியிருந்தது. இக்காலகட்டத்தில் ஒவ்வொரு கூட்டமும் சிறு எண்ணிக்கையிலான தோழர்களைக் கொண்டதாகவே இருக்கும். பெரிய கூட்டமாக இருந்தால் பலருக்கு ஐயத்தை ஏற்படுத்திவிடும்.இக்கூட்டங்களில் அரங்கங்களின் வேலைகள் நிச்சயிக்கப்படும்.

சங்கரய்யா நெசவுத்தொழிலாளர் கூட்டங்களுக்கு, ரயில்வே தொழிலாளர் கூட்டங்களுக்கு, தொடர்ந்து சென்று கட்சியின் நிலைப்பாட்டை விளக்குவார். சிறிய சிறிய அரசியல் வகுப்புகளை நடத்தினார். சில நேரங்களில் நகரக் குழுவின் கூட்டமும் மாவட்டக்குழுவின் கூட்டமும் கூட்டப்படும். அவற்றிலும் சங்கரய்யா பங்கேற்பார். அத்துடன் யார் மீது கைது உத்தரவு இல்லையோ அவர்களையும் சங்கரய்யா இரவு நேரங்களில் சந்தித்துப் பேசுவார்.

கட்சியின் மாநிலத் தலைமை இக்காலக்கட்டங்களில் நடத்தும் ரகசிய மாநில அளவிலான ஊழியர் கூட்டங்களுக்கும் சங்கரய்யா சென்று வருவார். உடல் நலம் இல்லாதவர்கள் வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். சிறையில் உள்ள கட்சியின் முழுநேர ஊழியர்கள் குடுபத்தினரையும் சந்தித்துப் பேசி அவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்யப்பட்டது.

சுமார் இரண்டு ஆண்டுக்காலம் சங்கரய்யா இவ்வாறு செயல்படவேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் அவரை காவல் துறையினர் தேடும் பணி அதிகரித்ததால் மாநில கட்சித் தலைமை அவரை சென்னையில் இருந்த தலைமறைவு மையத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே அவர் துண்டு பிரசுரங்களை எழுதுவது சிறு பிரசுரங்களை எழுதுவது போன்ற பணிகளைச் செய்தார். மாவட்டக் குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் வேலையையும் அவர் செய்யவேண்டியிருந்தது. அனைத்து இடங்களுக்கும் தோழர்கள் மூலமே தகவல்கள் அனுப்பப்பட்டன.

1948-51 காலகட்டமானது கட்சிக்கு மிகவும் சிரமமான காலகட்டமாக அமைந்தது. மதுரை மாவட்டத்தில் மாரி, மணவாளன், தில்லைவனம் ஆகிய மூன்று தோழர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தியாகி பாலு தூக்கிலிடப்பட்டார். ஐ.வி.சுப்பையா வேலூர் சிறையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். தஞ்சை மாவட்டத்தில் சிவராமன், இரணியன் போன்ற தோழர்கள் சுட்டுக்கொல்லப் பட்டனர். சேலம் சிறையில் துப்பாக்கிச்சூட்டில் 22 கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். கடலூர் சிறையில் நால்வர் கொல்லப்பட்டனர். கடலூர், சேலம், வேலூர், திருச்சி, சென்னை சிறைச்சாலைகளுக்குள் கடுமையான தடியடி என அனைத்து இடங்களிலும் அடக்குமுறைச் சூழ்நிலைமை நிலவியது. பல நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகள் இந்தச்சிறைச்சாலைகளில் கடுமையான தடியடிக்கு ஆளாக்கப் பட்டனர். மிகவும் இழிவாக நடத்தப்பட்டனர். எனவே இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து அனைத்து இடங்களிலும் கம்யூனிஸ்டுகள் நெடிய உண்ணாவிரதப் போராட்டங்களில் இறங்கினர். வெளியிலோ கம்யூனிஸ்டுகளும் அவர்கள் குடும்பத்தினரும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாயினர்.

1950ஆம் ஆண்டின் இறுதியில் சென்னையில் உமாநாத் இருந்த தலைமறைவு மையம் பிடிபட்டு உமாநாத், பாப்பா, எம்.கல்யாணசுந்தரம், அன்னை லட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மூன்றாண்டு தலைமறைவுக்குப்பின் 1951ஆம் ஆண்டின் துவக்கத்தில் சங்கரய்யா கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் கட்சியில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்லும்பாதை தவறானதென்று கூறி சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தகவல் அறிவிப்பு (கோமிண்பார்ம்) ஏடான “நிரந்தர சமாதானத்திற்காக’’ என்ற ஏட்டில் கட்டுரை ஒன்று வெளியானது. இது,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு விவாதத்தைக் கிளப்பியது. ‘இதனைத் தொடர்ந்து மத்தியக்குழுவை கூட்டும்படி கட்சித் தலைமை நிர்ப்பந்திக்கப்பட்டது.

எனவே மத்தியக்குழு கூட்டம் கூட்டப்பட்டு அது பல வாரங்கள் விவாதித்து பி.டி.ரணதிவேவை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றி சி.ராஜேஸ்வர் ராவை பொதுச் செயலாளராக்கியது. பின்னர் அவரும் மாற்றப்பட்டு அஜய்கோஷ் பொதுச் செயலாளரானார். அரசாங்கத்தை ஆயுதம் மூலம் தூக்கி எறிவது  என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடும் கைவிடப்பட்டது. இதே காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை அளித்தது. கம்யூனிஸ்ட் தலைவர்

ஏ.கே.கோபாலன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்று அவரை விடுதலைசெய்தது. தான் கைது செய்யப்பட்டபோது இருந்த அரசியல் சட்டம் 1950ஆம் ஆண்டில் இந்தியா குடியரசாகி புதிய அரசியல் சட்டம் வந்தபின் காலாவதி ஆகிவிட்டது என்ற அவரது வாதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று அவரை விடுவித்தது. இதேபோன்றதொரு தீர்ப்பை கல்கத்தா உயர்நீதிமன்றமும் வழங்கியது.

எனவே நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்த கம்யூனிஸ்டுகள் நீதிமன்றத்தை அணுகி விடுதலை பெறலாயினர்.

எனவே சிறையிலிருந்த கம்யூனிஸ்டுகள் விடுதலை செய்யப்படலாயினர். 6 மாத சிறைவாசத்திற்குப் பின் சங்கரய்யா விடுதலை செய்யப்பட்டார். தொழிற்சங்கம் மற்றும் கட்சி அலுவலகங்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டு செயல்படலாயின. ஏஐடியுசியின் அகில இந்தியத் தலைவர் சக்கரைச் செட்டியார் திருச்சி-திண்டுக்கல் மற்றும் மதுரையிலிருந்த தொழிற்சங்க அலுவலகங்களைத் திறந்து வைத்தார்.

தலைமறைவாகயிருந்த மத்திய கட்சித்தலைமை தமிழ்நாட்டில் சிதறிக்கிடந்த கட்சி அமைப்பை சீர்படுத்தி கட்சிப்பணியை துவக்கும் பொறுப்பை பி.ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தது. அவர் மீதும் கைது உத்தரவு இருந்ததால் அவர் திருப்பெரும்புதூரில் ஒருவர் வீட்டில் தங்கி மாவட்ட வாரியாக கட்சியை மீண்டும் கட்டும் பணியை பொருத்தமான தோழர்களைத் தேர்ந்தெடுத்து ஒப்படைத்தார். பி.ராமச்சந் திரனை திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கே.டி.கே.தங்கமணியை மதுரைக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை புனரமைக்கும் பணியை பி.ராமமூர்த்தி துவக்கிவைத்தார்.

சங்கரய்யா மதுரைக்குத் திரும்பியதும் சிறையிலிருந்து மீண்ட தோழர்கள் தலைமறைவிலிருந்து வெளிவந்த தோழர்களைக் கொண்ட கூட்டம் நடத்தப்பட்டது. பணிகள் திட்டமிடப்பட்டன. தமிழகத்தில் அனைத்துக் கம்யூனிஸ்டுகள் முன்பும் ஒரு அவசரப் பணி காத்திருந்தது. அந்த 1951ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் துவங்கி 1952ஆம் ஆண்டின் துவக்க காலத்தில் முடிவடைவதாக இருந்தது. அதற்கான தயாரிப்புப் பணியில் அனைவரும் உடனடியாக இறங்க வேண்டியிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தலைமறைவாக இருந்த தலைவர் பி.ராமமூர்த்தியை வேட்பாளராக நிறுத்துவதென்றும், திண்டுக்கல்லில் கட்சித் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியத்தையும், வேடசந்தூரில் இளம் தலைவர் வி.மதனகோபாலையும் நிறுத்துவதென்றும் முடிவு செய்தது. எனவே கம்யூனிஸ்டுகள் உற்சாகமாக இந்தப் பணியில் இறங்கினர்.

30. மகத்தான வெற்றி

முதலாவது பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பி.ராமமூர்த்தி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் சேலம் சதி வழக்கு புதுக்கோட்டை சதிவழக்கு போன்றவற்றில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்ததால் அவர் வெளிவர இயலவில்லை.

எனவே மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு அவர் பெயர் வேறு தோழர்களால் முன்மொழியப்பட்டது. அவரை எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் பாரிஸ்டருமான பி.டி.ராஜன், காங்கிரஸ் வேட்பாளர் சிதம்பரபாரதி, சுயேட்சையாக எஸ்.ஆர்.வி.நாயுடு, ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஜி.ராமானுஜம் உள்ளிட்டு பலர் போட்டியிட்டனர். ராமமூர்த்தியின் பிரதம தேர்தல் முகவராக வி.கார்மேகம் நிச்சயிக்கப்பட்டார். மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக கே.டி.கே.தங்கமணி போட்டியிட்டார்.

மதுரையில் பி.ராமமூர்த்தி போட்டியிட்டது, ஹார்விமில் தொழிலாளிகளிடமும் இதர உழைக்கும் மக்களிடமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. நான்காண்டு கால கொடிய அடக்குமுறையிலிருந்து மீண்ட தொழிலாளி மக்கள் தேர்தல் பணிக்கு நிதியளித்து உதவினர். இத்தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் கட்சித் தலைவர்கள் ஏ.பாலசுப்பிரமணியமும், வேடசந்தூரில் வி.மதனகோபாலும் போட்டியிட்டனர்.

சங்கரய்யா மூன்று தொகுதிகளுக்கும் மாறி மாறிச் சென்று தேர்தல் பணிகளை துரிதப்படுத்தினார். மதுரை வடக்கு தொகுதிக்கு இயல்பாகவே அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

இத்தேர்தல் பணியில் அவர் மற்றொரு வேலையையும் செய்ய வேண்டியிருந்தது. இத்தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தலைவராகக் கொண்ட பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பி.ராமமூர்த்திக்கு பார்வர்ட் பிளாக் கட்சி ஆதரவளிப்பதென்றும், திருவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும் பசும்பொன் தேவருக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிப்பதென்றும் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இதற்குள் திருவில்லிபுத்தூரிலிருந்த தோழர்கள் கட்சித் தலைவர் அழகர்சாமியை அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு நிறுத்துவதென்று முடிவு செய்துவிட்டனர். எனவே சங்கரய்யா உடனே அங்கு சென்று பொன்னையா உள்ளிட்ட தோழர்களனைவரையும் சந்தித்து தேர்தல் உடன்பாடு குறித்து விளக்கினார். இதனால் அழகர்சாமி போட்டியிடவில்லை.

நடைபெற்ற தேர்தலில் பி.ராமமூர்த்தி மகத்தான வெற்றி பெற்றார். அதேபோல் வேடசந்தூர் தொகுதியில் வி.மதனகோபாலும் வெற்றி பெற்றார். திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியம் குறைவான வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். அதேபோல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.டி.கே.தங்கமணியும் வெற்றிபெற முடியவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார்.

ராமமூர்த்தி வெற்றி பெற்ற செய்தி பரவியதும் பழநெடுமாறன் உள்ளிட்டு 300 கல்லூரி மாணவர்கள் மதுரை மத்திய சிறைச்சாலைக்குச் சென்று ராமமூர்த்தியை விடுதலை செய் என முழக்கமிட்டனர். சிறை கண்காணிப்பாளரோ ராமமூர்த்தியை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினார். ஆனால் மாணவர்களோ போவதாக இல்லை. இந்தத் தகவலை அறிந்ததும் கட்சித் தலைவர்கள் கேடிகே தங்கமணியும் சங்கரய்யாவும் சிறைச்சாலைக்கு வந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர். ராமமூர்த்தி நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வந்துவிடுவார் எனக் கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

ராமமூர்த்தியின் வெற்றி தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் களிடையே பெரும் உற்சாகத்தைக் கிளறிவிட்டது. இந்த வெற்றிக்குப்பின் ராமமூர்த்தி சேலம் சதி வழக்கிற்காக சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்பின் அவர் சென்னை சென்று பின்பு மதுரைக்கு வந்தார். அந்தத் தினத்தன்று மதுரை நகரம் அவருக்கு மாபெரும் வரவேற்பளித்தது. தெருக்களில் பல்லாயிரம் மக்கள் கூடி நின்று அவரை வரவேற்று மாலை அணிவித்தனர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
டி.கே.ரங்கராஜன் மற்றும் ஜோதிபாசுவுடன் சங்கரய்யா.

31. செயற்குழு உறுப்பினர்

கட்சி மீது தடை நீங்கியபின் கட்சியின் தமிழக சிறப்பு மாநாடு (பிளீனம்) தஞ்சை மாவட்டம் வள்ளுவக்குடியில் நடைபெற்றது. இதில் தலைவர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், சி.ராஜேஸ்வர் ராவ் உள்ளிட்டு 100க்கும் மேற்பட்டார் பங்கேற்றனர், இந்த சிறப்பு மாநாட்டில் சங்கரய்யா கட்சியின் மாநிலக்குழுவிற்கும், செயற்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமை, கட்சியின் 3 வது காங்கிரசை (அகில இந்திய மாநாட்டை) 1953ஆம் ஆண்டு இறுதியில் மதுரையில் நடத்துவதென்று முடிவு செய்தது. எனவே இதற்கு முன்பாக தமிழ்நாடு மாநில மாநாட்டை கோவை மாவட்டம் பேரூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் கொடிய அடக்குமுறையைச் சந்தித்த கோவை மாவட்டத் தொழிலாளி மக்களும், இதர உழைக்கும் பகுதியினரும் மிக்க உற்சாகத்துடன் இந்தப் பணியில் இறங்கினர்.

பேரூர் மாநாடு அவ்வாண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதியன்று துவங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. துவக்க நாளான 22ஆம் தேதி காலையில் ரயில் மூலம் கோவைக்கு வந்த கட்சித் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.சீனிவாசராவ், எம்.ரத்தினம், மணலி கந்தசாமி, என்.சங்கரய்யா போன்றோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். இந்த வரவேற்பை கோவை நகரமே வியப்புடன் கண்டது.

மாநாடு துவங்கியதும் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய வரவேற்புக் கவிதை படிக்கப்பட்டது. “வாருங்கள் தோழர்களே! வருக நல்லரவு! என்று தொடங்கும் கவிதை கொல்லப்பட்ட ஸ்டேன்ஸ் மில் தியாகிகள், அனைவரையும் வரவேற்பது போல் இருந்தது. பின்னர் கட்சியின் திட்டம், கொள்கை அறிக்கை போன்றவை விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டன.

மாநாட்டின் இறுதி நாளன்று புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது. 21 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு எம்.ஆர்.வெங்கட்ராமனை செயலாளராகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்னர் புதிய மாநிலக்குழு மாநில செயற்குழுவை தேர்ந்தெடுத்தது. சங்கரய்யா  மாநிலக்குழுவிற்கும், மாநில செயற்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில செயற்குழு எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.ராமமூர்த்தி, ஜீவா, பி.ஸ்ரீனிவாசராவ், மணலி கந்தசாமி, சுப்பிரமணியசர்மா மற்றும் சங்கரய்யாவைக் கொண்டிருந்தது.

மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். நாட்டின் அரசியல் நிலைமை குறித்து, பி.ராமமூர்த்தி விளக்க உரையாற்றினார். ஐக்கிய தமிழகம் அமைக்க அனைவரும் முன்வரவேண்டுமென்று ஜீவா முழக்கமிட்டார்.

32. மகத்தான மதுரை  மாநாடு

பேரூர் மாநாடு முடிந்தபின்னர் 3வது  காங்கிரசை நடத்துவதற்கான பணி முழு வீச்சில் துவங்கியது. இதற்கான தயாரிப்பில் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவும், மதுரை மாவட்டக்குழுவும் முழு வேகத்தில் ஈடுபட்டன. மூன்றாவது காங்கிரஸ் மதுரையில் நடைபெறப் போகிறது என்பதை அறிந்ததும் மதுரை மாவட்டம் முழுவதும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகம் பெருகியது. சங்கரய்யாவை செயலாளராகக் கொண்ட மதுரை மாவட்டக் குழு அதற்கான பணிகளைத் திட்டமிட்டு செய்தது. திட்டமிட்டபடி 3 வது காங்கிரஸ் 1957ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி துவங்கியது.

டிசம்பர் 25 ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து ரயில் மூலம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய்கோஷ், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரிபாலிட், கம்யூனிஸ்ட் தலைவர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத், முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, எஸ்.வி.காட்டே, பி.சுந்தரய்யா, சோகன் சிங்ஜோஷ் பி.ராமமூர்த்தி ஆகியோருக்கு ஆயிரக்கணக்கானோர் கூடி ரயில் நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளித்தனர். 500க்கும் மேற்பட்ட பயிற்சியளிக்கப்பட்ட இளம் செந்தொண்டர்கள் செஞ்சட்டை அணிந்து அணிவகுத்து தலைவர்களுக்கு வரவேற்பு நல்கினர்.

அங்கே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் அனைத்து தலைவர்களையும் பி.ராமமூர்த்தி பலத்த கர முழக்கங்களுக்கிடையே அறிமுகப்படுத்தி வைத்தார். தலைவர்களை வரவேற்று மாநிலச் செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமனும், மாவட்டச் செயலாளர் சங்கரய்யாவும் உரை ஆற்றினார். தியாகி மணவாளனின் இளம் புதல்வர்கள் ரவீந்திரனும், யதீந்திரனும் ஹாரிபாலிட்டிற்கும், அஜய் கோஷிற்கும் மாலை அணிவித்தனர். தூக்குமேடை தியாகி பாலுவின் புதல்வி சரோஜா, முசாபர் அகமதுவுக்கு மாலை அணிவித்தார்.

வரவேற்புக்கு நன்றி தெரிவித்து ஹாரிபாலிட் பேசினார். அதன்பின் பலத்த கரமுழக்கத்திற்கிடையே அஜய்கோஷ் நன்றி தெரிவித்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 299 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இலங்கையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் விக்ரமசிங்கா, உதவிச் செயலாளர் பீட்டர் கெனமன், மத்தியக்குழு உறுப்பினர் கே.ராமநாதன் மற்றும் யாழ்ப்பாணம் குழு உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் அப்பொழுது கட்டப்பட்டு வந்த ‘காலேஜ் ஹவுஸ்’ உணவு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். மாநாடு ஆரப்பாளையத்தில் இருந்த சுந்தரம் தியேட்டரில் நடைபெற்றது. மாநாட்டு அரங்கிற்கு அன்னை லட்சுமி பெயர் சூட்டப்பட்டது. முகப்பு வாயிலுக்கும், ஒவ்வொரு வாயிலுக்கும் தியாகிகள் பெயர் சூட்டப்பட்டிருந்தன.

மாநாடு டிசம்பர் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு மூத்த தலைவர் முசாபர் அகமது செங்கொடி ஏற்றிவைக்க துவங்கியது. தியாகிகளுக்கும், மறைந்த தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியபின் பொதுச் செயலாளர் அஜய்கோஷ் உரையுடன் மாநாடு துவங்கியது. மாநாடு ஜனவரி 3 ஆம் தேதி முடிய நடைபெற்றது.

இந்த மாநாட்டை சிறப்பாக்கும் விதத்தில் ஜனவரி முதல்  தேதியன்று மதுரை திலகர் திடலில் மாபெரும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அருணா ஆசப் அலி தலைமை தாங்கினார். இந்த கலை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இசை அமைப்பாளர் எம்.பி. சீனிவாசன் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்திப் பாடியதோடு பாரதியார் வேடமிட்டு ‘பாரதி வாக்கு’ என்ற இசை நாடகத்தையும் நடத்தினார். சாத்தூர் பிச்சைக் குட்டியின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாநாடு தன் நிறைவு நாளன்று அஜய் கோஷை செயலாளராகக் கொண்ட 39 உறுப்பினர் மத்தியக்குழுவை தேர்ந்தெடுத்தது. அது அஜய்கோஷ், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத், எஸ்.ஏ.டாங்கே, பி.சுந்தரய்யா, சி.ராஜேஸ்வர்ராவ், பி.ராமமூர்த்தி, ரனேன் சென், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மற்றும் இஸட், ஏ. அகமது ஆகியோரைக் கொண்ட அரசியல் தலைமைக் குழுவைத் தேர்ந்தெடுத்தது.

ஜனவரி 3 ஆம் தேதியன்று மதுரையை உலுக்கிய மாபெரும் செம்படைப் பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற அந்தப் பேரணி இறுதியில் தமுக்கம் மைதானத்தில் முடிவுற்றது.

மாநிலச் செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற அந்த மாபெரும் கூட்டத்தில் வரவேற்புக்குழு சார்பாக என்.சங்கரய்யா உரையாற்றினார். பின்னர் பி.ராமமூர்த்தி மத்தியக்குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஹாரிபாலிட், டாக்டர் விக்ரமசிங்கே மற்றும் அஜய் கோஷ் பேசியபின் நிறைவாக பி.ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

ஹர்கிசன்சிங் சுர்ஜித் இந்த மாநாட்டின் சிறப்பு குறித்து கூறுகிறார்:

“இந்த மதுரை மாநாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் 1951ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்கத்தாவில் கூடிய விசேஷ கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கட்சித் திட்டத்தையும் கொள்கை அறிக்கையையும் ஆமோதித்தது என்பதுதான். இது அச்சமயத்தில் கட்சியை ஒன்றுபடுத்துவதில் உதவியாக இருந்தது…’’

அன்று திருச்சி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஊழியராக இருந்தவரும், பின்னாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவுமிருந்த பி.ராமச்சந்திரன் இந்த மாநாட்டைக் குறித்து தன் சுயசரிதையில் பின்வருமாறு கூறுகிறார்:

“இந்த மாநாட்டில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் முதன்முறையாக மத்தியக் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். மூன்றாவது கட்சிக் காங்கிரசின் மிகச்சிறந்த ஏற்பாடுகளுக்கும், அதன் வெற்றிக்கும் தோழர் என்.சங்கரய்யா அவர்களைச் செயலாளராகக் கொண்ட மதுரை மாவட்டக் குழுவின் செயல்திறன் முக்கியக் காரணமாக இருந்ததாக அன்றே அனைவரும் பாராட்டினார்கள்……’’

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் அலுவலகத்தை சங்கரய்யா திறந்து வைக்கிறார். வலதுபுறம்: ஆர்.வெங்கிடு

33. தலைமை நிலையத்தில்

மதுரை கட்சி மாநாடு முடிவுற்ற பிறகு 1954 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சங்கரய்யா கட்சியின் செயற்குழு பணிகளுக்காக சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். ஏ.பாலசுப்பிரமணியம், கட்சியின் மாவட்டச் செயலாளராகக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே ஆண்டில் டெல்லியில் கம்யூனிஸ்ட் கட்சி தனது மாநிலத் தலைவர்களுக்காக ஒரு அரசியல் பயிற்சிப் பள்ளியை நடத்தியது. இந்தப் பள்ளியில் தமிழகத்திலிருந்து சங்கரய்யா, பி.மாணிக்கம், பி.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். ஏ.எம். கோபு மீது  சில வழக்குகள் இருந்ததால் அவர் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. 15 நாட்கள் நடைபெற்ற இந்தப் பள்ளியில் அரசியல் வகுப்புகளை இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், பி.சுந்தரய்யா, எஸ்.ஏ.டாங்கே மற்றும் பி.ராமமூர்த்தி ஆகிய நால்வர் நடத்தினர். இந்த அரசியல் வகுப்புகள் சங்கரய்யாவுக்கும் இதர தோழர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் அவர் இரண்டு சிறு பிரசுரங்களை எழுதினார். `காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும்’ என்ற பிரசுரத்தில் காங்கிரசின் தவறான பொருளாதார அரசியல் கொள்கைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு சரியான நிலைபாட்டைக் கொண்டுள்ளது என்பதை அதில் விளக்கியிருந்தார். `ஹைட்ரஜன் குண்டுகளைத் தடை செய்வோம்’ என்ற பிரசுரத்தில் எவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹைட்ரஜன் குண்டுகளை உற்பத்தி செய்து உலகை அச்சுறுத்தி வருகிறது என்பதையும், அதை தடுத்து நிறுத்த வேண்டியதன் தேவையையும் அவர் விளக்கியிருந்தார்.

1956 ஆம் ஆண்டில் நெடிய போராட்டத்திற்குப் பின் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டக்குழு இந்த வெற்றியை இரண்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடியது. கட்சியின் மாநிலக்குழு சார்பில் சங்கரய்யா இந்த இரண்டு நாட்கள் விழாவிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

1957 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் மதுரை கிழக்குத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். திருப்பரங்குன்றம் தொகுதியில் கே.பி.ஜானகியம்மாளும், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் கே.டி.கே.தங்கமணியும் கட்சி வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.  இந்தத் தேர்தலில் கே.டி.கே. தங்கமணி வெற்றி பெற்றார். ஆனால் சங்கரய்யாவும், ஜானகியம்மாளும் வெற்றி பெற முடியவில்லை.

34. தேசியக் கவுன்சில் உறுப்பினர்

1956 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது காங்கிரஸ் (அகில இந்திய மாநாடு) கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்றது. இதில் சங்கரய்யா பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.

1957ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் ஆட்சியைப் பிடித்தது. இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார். சில மாதங்களுக்குப் பின் அவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். ராஜபாளையம், மதுரை, காரைக்குடி போன்ற இடங்களில் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்த மூன்று நாள் பயணத்தில் சங்கரய்யா அவரோடு சுற்றுப்பயணம் செய்து அவரது உரையை தமிழாக்கம் செய்தார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கும்பகோணம் பள்ளியின் குழந்தைகளுடன் சங்கரய்யா.

1958 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது விசேஷ காங்கிரஸ்(மாநாடு) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அதுவரை மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு (பொலிட்பீரோ) என்றிருந்த இரண்டடுக்கு முறைக்குப் பதிலாக தேசிய கவுன்சில், மத்திய நிர்வாகக்குழு, மத்திய செயற்குழு என்று மூன்றடுக்கு முறை உருவாக்கப்பட்டது. தேசியக் கவுன்சில் என்பது 110 உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது. தமிழகத்திலிருந்து பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், சீனிவாசராவ், சங்கரய்யா,  ஜீவா, பார்வதி கிருஷ்ணன், என்.கே.கிருஷ்ணன், கே.ரமணி மற்றும் எம்.கல்யாணசுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி.ராமமூர்த்தி மத்திய செயற்குழு உறுப்பினராகவும், எம்.ஆர். வெங்கட்ராமன் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் தத்துவார்த்த மாத ஏடு ஒன்றைத் துவங்கியது. `ஜனசக்தி’ மாத இதழ் என்ற பெயரில் வெளிவந்த அந்த ஏட்டின் ஆசிரியராக எம்.ஆர்.வெங்கட்ராமனும், பொறுப்பாசிரியராக சங்கரய்யாவும் செயல்பட்டனர்.  இந்த ஏடானது, மார்க்சியம்-லெனினியம் குறித்தும், தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்தும், பொருளாதார மற்றும்  தொழில்துறை கொள்கைகளை விமர்சித்துமான பல கட்டுரைகளை வெளியிட்டது. கட்சி அணிகளுக்கு தத்துவார்த்த போதனை தரும் ஏடாக இது விளங்கியது.

1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற 3வது பொதுத்தேர்தலில் சங்கரய்யா, ஜானகியம்மாள் மற்றும் கே.டி.கே. தங்கமணி ஆகிய மூவரும் பழைய தொகுதிகளிலேயே போட்டியிட்டனர். இவர்கள் கடந்த தேர்தலை விட மிக அதிக வாக்குகள் வாங்கியபோதும் வெற்றி பெற இயலவில்லை.

35. ஆறு மாத சிறைவாசம்

1962 ஆம் ஆண்டு தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இரண்டு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. திமுக முதன்முறையாக 50 இடங்களைப் பெற்றது. இந்த நிகழ்ச்சிப்போக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கருத்து மாறுபாட்டை ஏற்படுத்தியது.

திமுக வளர்ச்சிக்குக் காரணம் மாநில கட்சித் தலைமை கடைப்பிடித்த வழிதான் என்று ஒரு பகுதியினர் கருதி சிறப்பு மாநில மாநாட்டை நடத்த வேண்டுமெனக் கோரினர். கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசுடன் கூட்டு சேர வேண்டும் என்ற நிலைபாட்டை வலியுறுத்திவந்த அந்தப் பகுதியினர், இப்பொழுது கட்சித்  தலைமையை மாற்ற வேண்டுமென்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். கட்சி விதிகளின் படி இந்த சிறப்பு மாநாடு 1962 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கூட்டப்பட்டது. இதில் காங்கிரசுடன் கூட்டு சேர வேண்டும், திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற போக்கைக் கொண்டோர் பெரும்பான்மை பெற்றனர். மாநில கட்சித் தலைமைக்கான தேர்தலில் இந்தப் பகுதியினர் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து மணலி கந்தசாமியை செயலாளராகக் கொண்ட புதிய தலைமை உருவானது. முந்தைய செயற்குழுவில் இருந்த சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், கே.ரமணி ஆகியோரும், எம்.ஆர்.வெங்கட்ராமனும் மாநில செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். எம்.ஆர்.வெங்கட்ராமன் மட்டும் மாநில நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற மூவரும் நூறு பேர் கொண்ட மாநிலக் கவுன்சிலுக்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, இந்திய – சீன மோதல் துவங்கியது. இது நாடு முழுவதிலும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ஒரு வெறியைக் கிளப்பிவிட்டது. இந்தப் பின்னணியில் தமிழக மாநாடு முடிவுற்ற ஒரு வாரத்தில் தமிழகத்திலும் இதர மாநிலங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் அனைவரும் பாதுகாப்புச் சட்டப்படி வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் எம்.ஆர்.வெங்கட்ராமன், சங்கரய்யா, வி.பி.சிந்தன், ஏ.பாலசுப்ரமணியன், கே.ரமணி, ஜானகியம்மாள், ராமராஜ், கல்யாணசுந்தரம், கே.டி,கே.தங்கமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். எம்.ஆர்.வெங்கட்ராமன், சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, வி.பி.சிந்தன்,  கே.எஸ்.அர்த்தனாரி போன்ற தோழர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பி.ராமமூர்த்தி, சில நாட்களுக்குப் பின் சென்னையில் கைதானார். அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலடைக்கப்பட்ட ஆறாவது மாதத்தில் சங்கரய்யாவும் இதர தோழர்களும்  உச்சநீதிமன்றத்திற்கு ஆள் கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) மனு அனுப்பினர். அதற்காக அவர்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நாளில் விடுதலை செய்யப்பட்டனர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சங்கரய்யா, அருகில் இரா. ஜவஹர், தே. லட்சுமணன் மற்றும் க. நாகராஜன்.

36. கருத்து மாறுபாடும் ‘தீக்கதிர்’ துவக்கமும்

1956 ஆம் ஆண்டில் பாலக்காட்டில் நடைபெற்ற மாநாட்டு சமயத்திலேயே கட்சிக்குள் இருவித கருத்து மாறுபாடுகள் உருவெடுத்தன. பி.சி.ஜோஷி, எஸ்.ஏ.டாங்கே உள்ளிட்ட பகுதியினர்  கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசுடன் கூட்டு சேர வேண்டும். இந்திய முதலாளி வர்க்கத்துடன் தொழிலாளி வர்க்கம் ஆட்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்தை முன்வைத்தனர். இதற்கு மாநாட்டில் 25 சதவிகித ஆதரவு மட்டுமே இருந்தது. காங்கிரசுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டு சேரக் கூடாது. முதலாளி வர்க்கத்துடன் தொழிலாளி வர்க்கம் வர்க்க சமரசம் செய்து கொள்ளக் கூடாது. அந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகப் போராடி, அது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற சரியான நிலைபாட்டை 75 சதவிகித பிரதிநிதிகள் ஆதரித்தனர். பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி, சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத், முசாபர் அகமது, ஜோதிபாசு மற்றும் சுர்ஜித் போன்றோர் இந்த அணியில் இருந்தனர்.

தமிழ்நாட்டிலும், இவ்விரு போக்குகளின் பிரதிபலிப்புகள் தெளிவாக இருந்தன. மணலி கந்தசாமி,  எம்.கல்யாணசுந்தரம், கே.பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், ஏ.எஸ்.கே., பார்வதி கிருஷ்ணன் போன்றோர் முதலாவதாகச் சொல்லப்பட்ட காங்கிரஸ் ஆதரவு அணியில் இருந்தனர். இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அணியில் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், வி.பி. சிந்தன், ஜானகியம்மாள், கே.ரமணி, ராமராஜ், கோ.வீரய்யன், கே.ஆர். ஞானசம்பந்தம் போன்றோர் இருந்தனர்.

1963 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட தலைவர்கள் சிறையில் இருந்தபோது, மார்க்சிய- லெனினியத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்கோடு, ‘தீக்கதிர்’ வார ஏடு வெளிவரத் துவங்கியது.  இது துவக்கத்தில் அப்பு என்ற அற்புதசாமியை ஆசிரியராகக் கொண்டிருந்தது. சில மாத காலத்திற்குப் பிறகு இந்தத் தலைவர்கள் வெளிவந்த பின் இதன் வேகம் அதிகரித்தது. பி.ராமமூர்த்தி, சங்கரய்யா, மற்றும் வி.பி.சிந்தன் ஆகியோரது கட்டுரைகள் புனைப்பெயர்களில் வெளிவரத் துவங்கின. இது வர்க்க சமரசக் கொள்கையை உறுதியாக எதிர்த்து தொழிலாளி வர்க்க லட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் போக்கை வெளிப்படுத்தியது.

தமிழகத்தில் கட்சியின் அதிகாரபூர்வ தலைமை திமுகவுக்கு எதிராக காங்கிரசுடன் கூட்டு சேரும் கொள்கையை கடைப்பிடித்தது. திருவண்ணாமலை உபதேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் போக்கை கடைப் பிடிக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக  கட்சியின் மாநிலக் கவுன்சில் அமைப்புக்குள் கடும் கருத்து வேறுபாடு உருவெடுக்க ஆரம்பித்தது. பி.ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்டோர் இந்தப் போக்கு தவறானது என்று சுட்டிக்காட்டினர். ஆனால் பெரும் பான்மை பெற்றிருந்த அதிகாரபூர்வ தலைமை இந்தக் கருத்தை நிராகரித்தது.

37. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கருத்து மாறுபாடு அகில இந்திய அளவில் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில், 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் கூடிய தேசிய கவுன்சில் கூட்டத்தில், இந்த கருத்து மாறுபாடு முற்றி கட்சி உடைந்தது. பி.சுந்தரய்யா,  பி.ராமமூர்த்தி, சுர்ஜித், ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு,  பிரமோத்தாஸ் குப்தா, எம்.ஆர்.வெங்கட்ராமன், சங்கரய்யா, கே.ரமணி, இ.கே.நாயனார் மற்றும் வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்ட 32 தேசியக் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். கட்சி இரண்டாக பிளவுபட்டது.

பிரிந்துவந்த 32 உறுப்பினர்களும் நாட்டிலுள்ள கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர். மார்க்சிய-லெனினிய தத்துவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். வர்க்க சமரசக் கோட்பாட்டை நிராகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்த 32 பேரும் தங்களை ஒரு குழுவாக உருவாக்கிக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். அதன் முதல்படியாக ஒரு சிறப்புக் கூட்டத்தை (பிளீனம்) ஆந்திராவில் நடத்துவதென்றும், கட்சியின் 7வது காங்கிரசை கல்கத்தாவில் நடத்துவதென்றும் முடிவு செய்தனர்.  புதிய கட்சியின் திட்டத்தை உருவாக்குவதற்காக பி.ராமமூர்த்தி, சுர்ஜித் மற்றும் எம்.பசவபுன்னையா ஆகிய மூவரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினர்.

இந்தக் கூட்டம் முடிந்து சென்னை திரும்பிய பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன் மற்றும் சங்கரய்யா ஆகியோருக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி கட்சியின் சிறப்பு மாநாடு ஆந்திர மாநிலம் தெனாலி நகரில் சிறப்பாக நடைபெற்றது. இது கட்சியின் 7வது காங்கிரசை அக்டோபர் 30ந் தேதியிலிருந்து நவம்பர் 7ந் தேதி வரை கல்கத்தாவில் நடத்துவதென்று முடிவு செய்தது.

இதற்குப் பின் தமிழகத்தில் கட்சிக் கிளைகள் முதல் மாநில அமைப்புவரை மாநாடுகள் நடைபெற்றன. அக்டோபர் மாதத்தில் மதுரையில் கட்சியின் மாநில மாநாடு தமுக்கம் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கட்சியின் புதிய மாநிலக்குழுவும் செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.ராமமூர்த்தி, சங்கரய்யா, ஏ.பாலசுப்ரமணியம், கே.ரமணி, வி.பி.சிந்தன் உள்ளிட்டோரைக் கொண்ட மாநில செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. எம்.ஆர்.வெங்கட்ராமன் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி அக்டோபர் 30ந் தேதியன்று 7வது காங்கிரஸ் கல்கத்தாவில் தியாகராஜா அரங்கில் சீரும் சிறப்புமாகத் தொடங்கி நவம்பர் 7ந் தேதியன்று முடிவுற்றது. இந்த மாநாடு ஒரு புதிய மத்தியக்குழுவையும் அரசியல் தலைமைக் குழுவையும் தேர்ந்தெடுத்தது. மத்தியக்குழுவிற்கு தமிழகத்திலிருந்து பி.ராமமுர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், சங்கரய்யா மற்றும்   ஏ.பாலசுப்பிரமணியம் ஆகிய நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி.ராமமூர்த்தி அரசியல் தலைமைக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.சுந்தரய்யா கட்சியின் பொதுச் செயலாளராக ஆனார்.

38. 16 மாத சிறைவாசம்

தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியிருப்பதைக் கண்ட இந்திய அரசாங்கம் அதை ஒடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிடத் தொடங்கியது. அதற்கு ஒரு பிரதான காரணமும் இருந்தது. 1965 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கேரளத்தில் மாநிலத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சி அதில் தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பும், மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றும் வாய்ப்பும்  உள்ளது என்று உணர்ந்த மத்திய காங்கிரஸ் அரசாங்கம், கேரளத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் கட்சியின் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும் தலைவர்களையும் கைது செய்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க முடிவு செய்தது.

அதற்காக அது தேர்ந்தெடுத்த நாள் டிசம்பர் 29ம் தேதியாகும். ஏனென்றால் டிசம்பர் 30ம் தேதியன்று 7வது மாநாடு புதிதாகத் தேர்ந்தெடுத்த மத்தியக்குழுவின் முதல் கூட்டம் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறுவதாக இருந்தது. அதை முன்னிட்டு அனைத்துத் தலைவர்களும் அங்கே வருவார்கள். அவர்களை அங்கேயே கைது செய்வது, அதே நாளில் நாடு முழுவதிலும் ஒடுக்குமுறையை ஏவி, அனைத்து மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் தலைவர்களைக் கைது செய்வது என்று மத்திய அரசாங்கம் திட்டமிட்டது.

அதன்படி மத்திய அரசாங்கம் டிசம்பர் 29ம் தேதியன்று நள்ளிரவில் திருச்சூரில் தங்கியிருந்த பி.ராமமூர்த்தி, சுர்ஜித், சுந்தரய்யா, பசவபுன்னையா உள்ளிட்ட தலைவர்களையும்,  கேரளத் தலைவர்களையும் கைது செய்து திருச்சூருக்கு அருகில் உள்ள விய்யூர் சிறையில் அடைத்தது. அதே நாளில் நாடு முழுவதும் கைது செய்யும் போக்கு துவங்கியது.

தமிழகத்தில் அதே நாளில் எம்.ஆர். வெங்கட்ராமன், சங்கரய்யா, வி.பி. சிந்தன், ஏ. பாலசுப்ரமணியம், கே.ரமணி, ராமராஜ், ஜானகியம்மாள், பாப்பா உமாநாத், உமாநாத், கோ. வீரய்யன், கே.அனந்தநம்பியார் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட

தலைவர்களைக் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தது. பின்னர் பி. ராமமூர்த்தி திருச்சூரிலிருந்து கடலூருக்குக் கொண்டுவரப்பட்டார். கடலூர் சிறையில் கம்யூனிஸ்டுகள் கட்டுப்பாடான வாழ்க்கையினை நடத்தினர். பல்வேறு மொழிகள் கற்றுத்தரப் பட்டன. மார்க்சிய-லெனினியம் குறித்து பல்வேறு தலைப்புகளில் தினசரி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. சங்கரய்யா, உமாநாத் ஆகியோர் இங்கே பல நாட்கள் தொடர்ந்து வகுப்புகளை நடத்தினர். கம்யூனிஸ்டுகள் சிறைக்கூடத்தை கல்விக்கூடமாக மாற்றினர்.

கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் 13 மாத காலத்திற்குப் பின் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். கடைசிப் பகுதியாக பி. ராமமூர்த்தி, சங்கரய்யா, வி.பி. சிந்தன் உள்ளிட்டோர் 16 மாத காலத்திற்குப் பின் 1966 ஆம் ஆண்டின் நடுவில் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட தலைவர்கள் முன்பு ஏராளமான பிரச்சனைகள் குவிந்திருந்தன. கடும் உணவுப் பற்றாக்குறை, மக்களிடையே கொந்தளிப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் கொந்தளித்துக் கிடந்தனர். எனவே விடுதலையான கம்யூனிஸ்டுகள் மக்கள் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தவேண்டியிருந்தது.

தலைவர்கள் அனைவரும் விடுதலையாகி வந்த பின், `தீக்கதிர்’ வார ஏடு கட்சியின் அதிகாரபூர்வ ஏடாக அறிவிக்கப்பட்டு என்.சங்கரய்யா அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர்.நிலைய திறப்பு விழாவில் சங்கரய்யா பேசுகிறார். அருகில் கே.வரதராஜன் ப.மாணிக்கம், ஆர்.உமாநாத், மற்றும் ஏ.நல்லசிவம்

39. சட்டமன்றத்தில்…

சங்கரய்யா 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து அண்ணா தலைமையில் திமுக அமைச்சரவை அமைந்தது.

தமிழக சட்டமன்றத்தில் 12 உறுப்பினர் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுவின் தலைவராக ஏ.பாலசுப்ரமணியமும், துணைத் தலைவராக சங்கரய்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழக சட்டமன்றத்தில் முதன்முதலாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குழு சார்பாக சங்கரய்யா பேசினார். புதிதாக அமைந்துள்ள திமுக அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவித்த அவர் தனது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாகச் செயல்படுமென்றும், மக்கள் நலனை உரைகல்லாகக் கொண்டு அது எதையும் தீர்மானிக்கும் என்பதையும் விரிவாகக்கூறினார். தமிழகத்தில் இந்தித்திணிப்பை எதிர்த்து 1965 ஆம் ஆண்டில் நடந்த மொழிப்போரின்போது ஏராளமானோர் கொல்லப் பட்டது பற்றியும். கடும் ஒடுக்குமுறை ஏவிவிடப்பட்டது குறித்தும் தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இரண்டாவது முறையாக சங்கரய்யா 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் அதைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விரு முறையும்  அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர் பணி என்பது பன்முகப்பட்டது. உறுப்பினர்கள் கூட்டங்கள் நடத்தி சட்டமன்றத்தில் வரவிருக்கும் விஷயங்கள் குறித்து விவாதித்து வழிகாட்டுவது, பேச வேண்டிய விஷயங்களை நிர்ணயிப்பது, சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் பேசும்பொழுது பிறர் எழுப்பும் குறுக்கீடுகளில் தலையிட்டு பதில் அளிப்பது, பிரதான விஷயங்களில் உரையாற்றுவது, வாதப்பிரதிவாதங்களில் தலையிட்டு கட்சியின் நிலைபாட்டை நிலைநிறுத்துவது, கட்சி மீது, பொழியப்படும் அவதூறுகளுக்கும் விமர்சனங்களுக்கும் உடனுக்குடன் பதில் கொடுப்பது போன்றவை அடங்கும். சங்கரய்யா தன்னை முழுமூச்சுடன் இந்தப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.

மேலும் சட்டமன்றம் கூடும் நாட்களில் பல்வேறு தரப்பு மக்களும், அமைப்புகளும் தங்கள் குறைகளை அமைச்சர்களிடம் முறையிட சென்னைக்கு வந்து கொண்டே இருப்பார்கள். அந்தத் தூதுக்குழுக்கள் சிலவற்றுடன் தலைவர் என்ற முறையில் சங்கரய்யாவே உடன் செல்ல வேண்டியிருக்கும். பல குழுக்களுக்கு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.

மேலும் சட்டமன்றம் கூடும் நாட்களில் பல்வேறு தரப்பு மக்களும், அமைப்புகளும் தங்கள் குறைகளை அமைச்சர்களிடம் முறையிட சென்னைக்கு வந்து கொண்டே இருப்பார்கள். அந்தத் தூதுக்குழுக்கள் சிலவற்றுடன் தலைவர் என்ற முறையில் சங்கரய்யாவே உடன் செல்ல வேண்டியிருக்கும். பல குழுக்களுக்கு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.

ஒருமுறை மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுவின் உ.ப- தலைவர் ஆர்.உமாநாத் பெரும் உரை நிகழ்த்துகையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை விமர்சித்தார். அதைக்கேட்ட காங்கிரஸ் உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன், “காங்கிரஸ் ஆட்சிக்காலம் பொற்காலம்” என்று குறுக்கிட்டுப் பேசினார். இதைக்கேட்ட சங்கரய்யா “அப்படியானால் மக்கள் ஏன் 1967 ஆம் ஆண்டிலிருந்து காங்கிரசை தோற்கடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்” என்று எதிர் கேள்வி கேட்டார்.

தனது தொகுதி மக்கள், மதுரை மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளோடு தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் பிரச்சனைகள் அனைத்தையும் அவர் எழுப்பினார். திமுக அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது அதிமுக அரசாங்கமாக இருந்தாலும் சரி, அவற்றின் மக்கள், விரோதப்போக்கை அவர் கடுமையாகச் சாடினார்.

11 ஆண்டு காலத்தில் சட்ட மன்றத்தில் அவர் நிகழ்த்திய உரைகள் அனைத்தையும், இங்கே விவரிக்க இயலாது. எனவே ஒரு சில உரைகளின் சில பகுதிகளை மட்டும் இங்கே காண்போம். 1982ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக அரசின் நிதிநிலை மீதான அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் சங்கரய்யா பேசும்பொழுது மத்திய அரசை எதிர்க்கும் மாற்றுப்பாதைக்கு வாருங்கள், நுழைவு வரியை ரத்து செய்யுங்கள், உணவுப்பண்டங்களை சீராக விநியோகியுங்கள், தொழிலாளர்-விரோதக் கொள்கைகளைக் கைவிடுங்கள் என்று வற்புறுத்தினார். அவர் உரையின் முக்கிய அம்சங்கள்

பின்வருமாறு:-

“இந்த நிதிநிலை அறிக்கையில் முதலில் குறிப்பிட்டபடி, குடிநீர்ப் பிரச்சனையும் அரிசிப் பிரச்சனையும்தான் இன்று பெரும் பிரச்சனைகளாக உள்ளன. குடிநீருக்காக குடங்களுடன் தாய்மார்கள் நீண்ட வரிசையில் நிற்பதையும் ரேஷன் கடைகளில் மக்கள் கடும் வெயிலில் காத்து நிற்பதையும் தினமும் காண்கிறோம். இதற்குச் சரியான தீர்வு காணாவிட்டால் அது பூதாகரமாக மாறிவிடும். கூடுதல் செலவானாலும் சரி, குடிநீர்ப் பிரச்சனையை போர்க்கால நடவடிக்கை போல நடவடிக்கை எடுத்து தீர்க்க வேண்டும்.

சென்னை நகரில் குடிநீர்ப் பிரச்சனை எப்படி இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த நகரமான மதுரையிலும் பெரும் பிரச்சனை குடிநீர்ப் பிரச்சனைதான். அங்கு  5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதால் மக்கள் கழிப்பிடங்களின் தொட்டிகளில் உள்ள தண்ணீரை குடிக்கவும் அதனால் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவும் ஆபத்தும் பத்திரிகைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே மதுரைக்கு குடிநீர் வழங்கும் ஆற்றுப் படுகைகளை மேலும் ஆழப்படுத்தினால் ஓரளவுக்காவது பிரச்சனையைத் தீர்க்க முடியும். இது சம்பந்தமாக மாநகராட்சி கமிஷனருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் உத்தரவிட வேண்டும் உலகத்தமிழ் மாநாட்டுக்காகப் போடப்பட்ட குழாய் கிணறுகளை செப்பனிடுவது, வீடுகளிலுள்ள கிணறுகளை ஆழப்படுத்துவதன் மூலம் இதற்குத் தீர்வு காணலாம். இல்லையேல் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது மாநிலம் முழுவதும் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க அரசு துரிதமு யற்சிகளை எடுத்தால் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்புத் தரும் என்று உறுதி அளிக்கிறேன்.

தமிழகத்தில் ஒரு கோடியே 17 ஆயிரம் குடும்பக்கார்டுகள் உள்ளன. ஒரே கடையில் 4 ஆயிரம் கார்டுகள் பதிவு செய்யப்பட்ட இடங்களும் உண்டு. பல்லாவரத்தில் இப்படி ஒரு கடையில் பதிவாகியிருப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகி போலீஸ் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க இந்த நாளில் இன்னன்ன குடும்பங்களுக்கு இன்னன்ன பண்டம் கிடைக்கும் என்று கடைகளில் அறிவிக்க வேண்டும். அதற்கான கண்டிப்பான உத்தரவை இந்த அரசு பிறப்பிக்க வேண்டும். இந்தப் பண்டங்கள் முறைப்படி விநியோகிக்கப்படுகிறதா என்பதை ரெவின்யூ அதிகாரிகளும் சிவில் சப்ளை அதிகாரிகளும் நேரடியாகச் சோதனைகள் நடத்தி கண்காணிக்க வேண்டும்.

ஆயிரம் ரூபாய்க்குக் கூடுதலாக வருவாய் உள்ளவர்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய் கொடுக்கக்கூடாது என்று இந்த அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதை 750 ஆகக் குறைக்கப் போவதாகவும் தகவல் இருக்கிறது. நடுத்தர குடும்பங்களும், சிறு தொழில் செய்பவர்களும் சாதாரணமாக ஆயிரம் ரூபாய் வருவாய் பெறுவார்கள். அவர்கள் தலையில் இந்த நெருக்கடியைச் சுமத்துவது சரியல்ல இன்று ரூபாயின் மதிப்பு என்ன? படி அரிசி வெளியில் 7 ரூபாய், 8 ரூபாய்க்கு விற்கிறது வெளி மார்க்கெட்டின் விலை அதிகம் என்பதால்தான் நியாய விலைக்கடைகளில் அரிசி விற்கிறோம் அதை நிறுத்தினால் மக்களை அது பெரிதும் பாதிக்கும் எனவே வருமான வரம்பைப் பார்க்காமல் அனைவருக்கும் அரிசி, தரவேண்டும்.

சென்னை நகரில் அடையாறுக்குத் தெற்கேயும் துரிதப் போக்குவரத்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்குத் தேவையான நிலத்தை இப்போதே ஒதுக்கிவிட வேண்டும். இல்லாவிடில் பிறகு அங்கு கட்டிடங்கள் வந்தால் சிக்கல்கள் எழும்.

இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் நம் மாநிலத்தையும் பாதிக்கும் அணிசேரா நாடுகள் மாநாட்டிற்காக இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே டில்லி வந்திருக்கிறார். அவர் ஒரு முக்கிய கருத்தைச் சொல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது உலக வங்கி, சர்வதேச நிதிக்கழகத்தின் வாசலுக்குள் ஒருமுறை ஒரு நாடு கடனுக்காக நுழைந்துவிட்டால் பிறகு நம்பிக்கையே இல்லை என்கிறார் அவர் மக்கள் பயன்படுத்தும் பண்டங்களின் விலையை உயர்த்தும்படி இந்த அமைப்புகள் கட்டாயப்படுத்துகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்திய அரசு இந்த அமைப்பிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியது அவர்கள் சொல்படி ரயில் கட்டணத்தை உயர்த்துகிறது. விலைகளை ஏற்றுகிறது, மக்கள் நிவாரணத்தை நிறுத்துகிறது. திமுகவும் அதிமுகவும் இங்கு மாநில சுயாட்சி, கூடுதல் அதிகாரம் கோருகிறீர்கள் இது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் இப்படி கடன் வாங்கி நம்மை அடிமைப்படுத்தும் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்காமல் மாநிலத்தின் உரிமைகளைக் காப்பது எப்படி? உலக வங்கியிடம் நாம் வாங்கிய கடனுக்கு வட்டியும் அசலும் செலுத்தத்தான் நமது நிதி உதவுமே தவிர, ஒருபோதும் முன்னேற முடியாது. இன்று நிலை என்ன? 714 கோடி ரூபாய்க்கு புது வரிகள், எழுபது ஏகபோகக் குடும்பங்கள் சுரண்டுகின்றன, போதாது என்று 40 ஆயிரம் கோடி கறுப்புப் பணம். எனவேதான் இந்தப் பிற்போக்குக் கொள்கைகளைப் பின்னுக்குத் தள்ளி மாற்றுப் பாதை ஒன்றுக்கு போராட முன்வர வேண்டும் என்று அதிமுக, திமுக கட்சிகளை இடதுசாரி ஜனநாயக சக்திகள் அழைக்கின்றன. கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் இந்த வரி விதிப்பை நீங்கள் ஆதரித்தீர்கள். இனி அவ்வாறின்றி அவற்றை நாடாளுமன்றத்தில் மற்ற இடதுசாரி ஜனநாயகக் கட்சிகளுடன் சேர்ந்து எதிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் என்ற கொள்கையை இந்திரா காங்கிரஸ் நீங்கலாக அனைத்துக் கட்சிகளுமே தமிழகத்தில் ஆதரிக்கின்றன தமிழக மக்களில் பெரும்பாலோர் விருப்பம் அது என்றுதானே அர்த்தம்? இந்தப்பிரச்சனையை காங்கிரஸ் அல்லாத மற்ற மாநில அரசுகளுடன் சேர்ந்து தமிழகத்தை ஆளுகின்ற கட்சி நடவடிக்கை எடுப்பதுதானே பலன் தரத்தக்கதாக இருக்கும்? இந்திய மக்கள் அனைவருமே சேர்ந்து போராடியதால்தான் சுதந்திரம் பெற்றோம் அதுபோல அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதன் மூலம்தான் மக்கள் மீது வரும் தாக்குதல்களை முறியடிக்க முடியும்!

இந்திய அரசின் 8வது நிதிக்கமிஷனுக்கு மாநில அரசு அறிக்கை அளிக்கும் முன்னதாக மற்ற கட்சிகளையும் கலந்து விவாதிக்க வேண்டும் அதன் மூலம் தான் அதிக நிதி ஆதாரங்களை நாம் கோர முடியும். அதற்கு ஒரு சக்தி கிடைக்கும்…

அதே ஆண்டில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில், பங்கேற்றுப் பேசிய சங்கரய்யா தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி, மின்வெட்டு, குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இதனைச் சமாளிக்க எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி இன்றுவரை ஆலோசிக்காதது ஏன் என்று கேட்டார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டக்குழு அலுவலகத் திறப்பு விழாவில் ஆர்.உமாநாத், சங்கரய்யா, பி.ராமச்சந்திரன்.

அவர் பேசியதாவது:-

“வறட்சி காரணமாக தமிழகத்தில் சுமார் ஐந்து கோடி மக்களின் வாழ்க்கை அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டுள்ளது எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி போர்க்கால அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இன்றைய தினம் மிகப்பெரிய பிரச்சனையாக உணவுப் பிரச்சனை இருக்கிறது. திருச்செங்கோட்டில் அரிசி கிலோ ரூ 5க்கு விற்கிறது. மதுரையில் ஏற்கெனவே பெரிய அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் ஓட்டல்களில் வாங்கிச் சாப்பிடும் மக்கள் பெரிய அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் குவிண்டாலுக்கு ரூ.150 கொடுத்து நெல்லை ஏகபோகமாக கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு மாநில அரசுக்கு உள்ள வருமானம், ஆற்றல் பற்றி எங்களுக்கு தெரியும். இதனை பல்லாயிரக்கணக்கான முதலீட்டில் மத்திய அரசே செய்ய முடியும்.

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். மக்களுக்கு நியாயமான விலையில் அதை விநியோகம் செய்ய வேண்டும். இடையில் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க முடியாது. இதனை, மத்திய அரசு சரிக்கட்டவேண்டும்.

சோசலிச நாடுகளில் அறுவடைக்கு முன்பே விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விலை அறிவிக்கப்பட்டு அந்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பதால் ஏற்படும் நஷ்டத்தை அரசாங்க வருமானத்திலிருந்து சரிக்கட்டுகின்றனர்.

இங்கேயும் இதைச் செய்யாவிட்டால் விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாது விவசாயிகளுக்கு நியாயவிலை கிடைக்கவும், சீரான விநியோகம் கிடைக்கவும் இதுதேவை. அதுமட்டுமல்ல வேறுவிதமான உணவு தானியங்களையும் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்குவதுதான் கடமையாகும். இதற்கு தமிழக அரசு மக்களைத் திரட்டி வற்புறுத்த வேண்டும்.

இதேபோன்று கைத்தறி பிரச்சனை அபாயகரமானதாகி உள்ளது. லட்சக்கணக்கான கைத்தறிகள் தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன நூல்விலை உயர்வால் அவர்கள் தொழில் நடத்த முடியவில்லை. உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் வேலையின்றித் தவிக்கிறார்கள். நூல் கட்டுபடியாகும் விலையில் கொடுக்க வேண்டுமானால் மத்திய அரசு குறுக்கிட வேண்டியுள்ளது. நூல் விலையை கட்டுப்படுத்தியாக வேண்டும்.

பருத்தி விலை இந்தியா முழுவதும் வீழ்ந்துவிட்டது. பருத்திக்குச் சென்ற ஆண்டு கிடைத்த விலை கூட இந்த ஆண்டு கிடைக்கவில்லை. பருத்தி விலை ரூ 100க்கு மேல்  குறைந்திருக்கும்போது நூல் விலையை எப்படி அதிகரிக்கிறார்கள். ஆகவே, இதனை கட்டுப்படுத்தி தமிழகத்திலுள்ள லட்சக்கணக்கான நெசவாளர்களுக்கு மத்திய அரசு மூலம் நூல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில அரசு பொறுப்பிலுள்ள கூட்டுறவு நூற்பாலைகள் மூலமாக நூல் விநியோகிக்க வேண்டும்.

தமிழகத்தில் 2.49 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள். இதில் 57.48 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள் என்று கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறினார். இதைப் போக்க மத்திய அரசிடமுள்ள சில தொழில்கள் இங்கே வருவதால் மட்டுமே தீர்க்க முடியாது.

கிராமப்புற வறுமைக்குக் காரணம் நிலக்குவியல்தான். தமிழகத்தில் அந்தக் காலத்திலே இருந்து இதுவரையிலும் கொண்டு வரப்பட்டுள்ள உச்சவரம்புச் சட்டம் பயனளித்ததா? 150 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலம் உள்ள தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் கூட உபரி நிலம் விநியோகிக்கப்படவில்லை. அதற்காக கொண்டு வரப்பட்ட சாதாரண சட்டத்தைக் கூட மத்தியஅரசு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. அப்போது வருவாய்த்துறை அமைச்சர் அதை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறினார். ஆனால் இன்னும் கொண்டு வரவில்லை.

சாகுபடி செய்ய முடியாத நிலையிலே காடுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் ஏழை, எளியவர்கள் உழைத்து பயிர் செய்து கொண்டிருந்தால் அந்த நிலங்களை எடுத்துக் கொண்டு வெளியேற்றுவது கூடாது. அவர்களை இங்கிருந்து விரட்டிவிட்டு சில தானியங்களைப் பயிர் செய்யும் வாய்ப்பைப் பறிப்பது நாட்டுக்கு செய்யும் சேவையா?

தமிழகத்தில் 75 சதவீதம் குத்தகை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டுமென்று சம்பிரதாயமாக ஒரு சட்டம் இருக்கிறது. கூலிச்சட்டம் அமலில் இல்லை. இதேபோல, வீட்டுமனை விலை கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் உயர்ந்து வருகின்றன. ஆகவே, சாகுபடிக்கு போக மீதமுள்ள நிலங்களை உடனடியாக கையகப்படுத்தி சாதாரண மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமே வறுமையைப் போக்க முடியும்.

தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் வரவில்லை என்று சிலர் கூறினர். தொழிற்சாலை வந்திருந்தால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? இப்போது மத்திய அரசுக்கே ஆபத்து வந்துவிட்டது 6வது திட்டம் பாதி நிறைவேறுவதே பெரிய விஷயம் இதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். மத்திய சர்க்காருடைய தவறான கொள்கையால் விலைவாசி உயர்ந்து கொண்டு போகிறது. இதனால் அவர்கள் திட்டமே தோல்வியடையும் நிலையில் இருக்கும்போது, தமிழகத்திற்கு மட்டும் எப்படி ஏராளமான தொழில்கள் வந்து விடும்?. இந்தியா வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதே சிரமமாக இருக்கிறது. ஏனெனில் இந்தியா ஏற்றுமதி செய்யும் மூலப்பொருட்களின் விலை வீழ்ந்துவிட்டது. அங்கே பெரிய போட்டி ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்வதேச நிதி நிறுவனம் கட்டளையிடுகிறது. அவர்களின் கட்டளையில் தான் இடுபொருள் மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டது அவர்களின் கட்டளையால்தான், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். ஆகவே இப்படி சர்வதேச நிறுவனத்தின் கட்டளைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றுவதால் இந்தியாவின் சுதந்திரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படும். இதை காஷ்மீர், மேற்குவங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள் எதிர்த்தன. என்ன காரணத்தாலோ, தமிழக அரசு அதை எதிர்க்கவில்லை. இன்றைக்கு இந்த அளவுக்கு பேசும் மாண்புமிகு உறுப்பினர்கள் அன்றைக்கு அந்த முதலமைச்சர்கள் கூட்டத்தில் இந்த 5 பொருட்களுக்குமான வரி விதிப்பு அதிகாரத்தை மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இ.காங். கட்சியோடும் அவர்களுடைய ஆட்சியோடும் நீங்கள் கையாண்டு வரும் நட்புக் கொள்கை காரணமாக அதை அன்றைக்கு நீங்கள் செய்யவில்லை. இப்போது அவர்களுடைய குறைகளை எடுத்துப் பேசி என்ன பிரயோசனம். இப்போது இந்த 5 பொருட்கள் மீது மாநில சர்க்கார் விதிக்கும் வரிக்குப் பதிலாக மத்திய அரசு எக்சைஸ் வரி விதிக்கும் அதிகாரம் வரவிருக்கிறது. ஆகவே மாநில சர்க்கார் இதில் முழுமையாக கவனம் செலுத்தி அனைத்து சர்க்கார்களோடும் கலந்து பேசி இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவதற்கான அறிகுறியாகும்.

திட்ட மதிப்பு 716 கோடியிலிருந்து 845 கோடி என்று நீங்கள் திருப்தியடையலாம். ஆனால் பணவீக்கம், சிமெண்ட் விலை கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்துவிட்டது. ஆகவே நடைமுறைத்திட்ட மதிப்பு சென்ற ஆண்டை விட குறைவாகவே இருக்கும். கூடுதலாக திட்ட ஒதுக்கீடு செய்திருக்கிறோம் என்று வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், கூடுதலான பணிகள் எதுவும் நடைபெறாது.

அயல்நாட்டுப் பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தை வேரறுக்காமல் எந்தவொரு மாநிலத்திற்கும் நிதி உதவி கிடைக்காது. அவர்களுடைய கேந்திரமான தொழில்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற மாற்றுப் பாதைக்கு தமிழக சர்க்கார், மத்திய சர்க்காரை வற்புறுத்த முன்வர வேண்டும்…”

எம்.ஜி.ஆரின் அரசாங்கம் தமிழகத்தில் நுழைவு வரியைப் புகுத்தியபோது அதை கடுமையாக எதிர்த்து சங்கரய்யா பேசினார். அந்த வரியால் தொழில்கள் முடங்கும், வேலைவாய்ப்பு பறிபோகும் என்று எச்சரித்தார். எனவே அதை மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே கூட இடமில்லாமல் முற்றிலும் வாபஸ்பெற வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

அவர் பேசியதாவது:-

“தமிழக அரசின் புதிய நுழைவு வரி நகரங்களில் வாழும் சுமார் 1 கோடி மக்கள் தலையில் விழும். இந்த நுழைவு வரியால் தொழில்கள் முடங்கும். வேலைவாய்ப்பு பறிபோகும் தொழில் வளர்ச்சியின் குரல்வளை நெரிக்கப்படும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 13 பண்டங்களின் மீது இந்த நிதிநிலை அறிக்கையில் நுழைவு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. சில காலத்துக்கு முன் மத்திய அரசு மாநில அரசுகளை அழைத்து, நாங்கள் 5 பொருட்கள் மீது கூடுதல் சுங்க வரி விதிக்கிறோம்.

நீங்கள் அவற்றின் மீது விற்பனை வரி விதிக்காதீர்கள் என்று கூறியது. இதை மேற்குவங்க-கேரள மாநிலங்களில் ஆட்சியில் இருந்த இடது முன்னணி அரசாங்கங்கள் எதிர்த்தன. ஆனால் அந்த ஐந்து பொருட்களும் இந்த நுழைவு வரியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் மீது இரட்டிப்பு வரி விதிக்கப்படும். நமது காலத்தில் நகரங்களில் வாழும் சுமார் ஒரு கோடி மக்கள் தலையில்தான் இந்த நுழைவு வரி விழும்.

ஒருபுறம் கைத்தறித் துணிகள் விற்காமல் நெசவாளர்கள் அவதி. மறுபுறம் விவசாயிகள் வறட்சியால் வாடுகிறார்கள். தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கிறார்கள். மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. இந்த நிலையில் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பண்டங்களின் மீது நுழைவு வரி விதித்தால் மக்கள் எப்படித் தாங்குவார்கள்?

ஒரே பொருள் பல நகரங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்போது மாறி மாறி வரிவிதிக்கப்படும். இதனால் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள 26 கோடி ரூபாயை விடப் பலமடங்கு வரி மக்கள் தலையில் திணிக்கப்படும். இதனால் வியாபாரம் பாதிக்கப்படும். விளைவு தொழில்கள் முடங்கும். வேலைவாய்ப்பு பறிபோகும். தொழில் வளர்ச்சியின் குரல்வளை நெரிக்கப்படும்.

எனவே இந்த நுழைவு வரியைப் பொருத்தவரை மறுபரிசீலனை என்ற பேச்சுக்குக் கூட இடமின்றி முற்றிலுமாக வாபஸ் பெறப்பட வேண்டும். சினிமா தியேட்டரில் போடப்பட்ட சிலைடுக்கு காட்சிக்கு 30 காசு வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுவும் மக்கள் மீதுதானே சுமத்தப்படும்? அரசு நல்ல காரியங்களுக்காக செய்யும் விளம்பரங்களைக் கூட இது பாதிக்கும். வாழ வழியின்றி பொழுது போக்குக்கு சினிமாவுக்குச் செல்லும் மக்களைத்தானே இது பாதிக்கும். இந்த வரியும் நீக்கப்பட வேண்டும். மோட்டார் வாகனத்துக்கு வரி என்றால் மக்கள் தலையில்தானே அதுவிழும்! இரு சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவது நடுத்தர மக்களும் தொழிலாளரும்தானே! அவர்கள் மீது வரி போடுவது சரியா? இந்த வரிகளை ரத்து செய்ய வேண்டும்…”

சங்கரய்யா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒருமுறை ‘இந்து’ ஆங்கில நாளேடு வாரம் ஒருமுறை சிறந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து எழுதியது. அதில் சங்கரய்யாவைப் பற்றி குறிப்பிடும்போது அவர் ஆதாரங்களோடுதான் பேசுவார். அதற்காதரவாக ஏராளமான புள்ளி விவரங்களை முன்வைப்பார் என்று சிறப்பாகக் குறிப்பிட்டிருந்தது.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
திருப்பூர் தியாகி பன்னீர் செல்வத்தின் துணைவியாரிடம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்குகிறார். சங்கரய்யா. அருகில் கே.தங்கவேல்.

40. மாநிலச் செயலாளர்

சங்கரய்யாவின் அரசியல் பணிகளில் குறிப்பிடத்தக்க காலகட்டம் 1995ம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரைப்பட்ட காலமாகும். 1995 ஆம் ஆண்டின் கடலூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் அவர் கட்சியின் 15வது மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது தொடங்கி 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவர் அப்பொறுப்பிலிருந்தார்.

இந்த காலகட்டமானது தமிழகத்து அரசியல் வாழ்வு மிகப் பல பிரச்சனைகளைச் சந்தித்த காலகட்டமாகும். மக்கள் மீது மத்திய, மாநில அரசாங்கங்களின் பொருளாதாரத் தாக்குதல், கூர்மையடைந்த சமூக முரண்பாடுகள், காவல்துறை தாக்குதல் தீண்டாமை, தென் தமிழகத்தில் சாதிய மோதல்கள், மதவாத சக்திகளின் தாக்குதல் என்று எண்ணற்ற பிரச்சனைகள் எழுந்தன. கட்சியின் செயலாளர் என்ற முறையில் ஒவ்வொரு பிரச்சனையையும் ஆராய்ந்து கட்சியின் நிலைபாட்டை அவர் முன்வைக்க வேண்டியிருந்தது.

தலித் மக்கள் மீதான தாக்குதலைத் தடுத்திட, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்கால கட்டத்தில் ஏராளமான போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தியது. பல மாநாடுகளை நடத்தியது. தமிழக அரசும் தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளை நடத்த அது வலியுறுத்தியது.

அதை ஏற்று தமிழக அரசு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதியன்று மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தியது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், சங்கரய்யா பேசினார். அப்பொழுது, தீண்டாமை முற்றாக ஒழிய தீவிர நிலச்சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.

அவர் பேசியதாவது:-

தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டுமானால், கிராமப்புற சமூக-பொருளாதார நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதற்கு தீவிர நிலச்சீர்திருத்தத்தை அமலாக்க வேண்டும்.

தமிழக முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர் சந்தித்துப் பேசினோம். தென் மாவட்டங்களில் கலவரங்கள் நடந்து வந்த பின்னணியில், சுதந்திரதின பொன்விழாவினையொட்டி தீண்டாமை ஒழிப்பு மாநாடு ஒன்றினை தமிழக அரசு நடத்த வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக் கொண்டோம். தீண்டாமை ஒழிப்பிற்கான பல்வேறு யோசனைகள் அடங்கிய மனுவினையும் அளித்தோம். மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ள முதல்வரையும், தமிழக அரசையும் மனமார பாராட்டுகிறோம்.

இந்த மாநாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களும், சமயத் தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை எடுத்தரைத்தனர். இது ஒரு தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம் போலவே நடந்துள்ளது. தமிழகத்தின் அரசியல் கேந்திரமான மதுரையில் நடைபெற்றுள்ள இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் 95 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.அவரை குடியரசுத் தலைவராக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் மேலூருக்கு அருகில் மேலவளவு ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அந்த ஊராட்சியில், போட்டியிட்டு வெற்றிபெற்று பொறுப்பேற்ற முருகேசனும் அவருடன் ஐந்து பேரும் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவரை ஊராட்சி தலைவராக ஏற்க மறுத்த ஆதிக்க சக்திகள் அவரை படுகொலை செய்துள்ளன.

நான் அந்த கிராமத்திற்குச் சென்றிருந்தேன். முருகேசனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அந்த கிராம மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர். என்ன கொடுமை இது? சுதந்திர பொன்விழாவினை கொண்டாடும் இந்த தருணத்திலும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை தொடரவே செய்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் காலில் செருப்பு போட்டு நடக்க முடியவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி கிளாசில் டீ தரப்படுகிறது. இந்தக் கொடுமைக்கு எதிராக வலுவான மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி கிளாசில் டீ தரும் கடைகளின் முன்பு மக்களே சத்தியாகிரகம் நடத்த வேண்டும். இத்தகைய தீண்டாமை உள்ள இடங்களைக் கண்டறிந்து தமிழக அரசும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்ட காலத்திலேயே ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. ஆனால் கோவில்பட்டியில் அண்மையில் நடந்த கலவரத்திற்கு என்ன காரணம்? ஒரு கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் விழா நடத்த இன்னமும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரச்சனை எழுகிறது.

இப்போது ஏற்படுகிற கலவரங்களுக்கு என்ன காரணம்? கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு ‘சமூக அங்கீகாரம்’ கிடைக்கவில்லை என்று குமுறுகின்றனர். டீக்கடைகளில் தனிக்கிளாஸ், பொதுப்பணித்துறையினர் பராமரிக்கப்படும் குளங்களில் கூட தண்ணீர் எடுக்க, குளிக்க அனுமதி மறுப்பு போன்றவைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேதனையடைகின்றனர். இது என்ன நியாயம்? தீண்டாமை சட்டப்படி குற்றம். ஆனால் அது அமலாகிறதா?

மதுரை மாவட்டம் மேலவளவு, பஞ்சாயத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் சுடுகாடு பிரச்சனை உள்ளது. உயர்நீதிமன்ற ஆணை கூட நிறைவேற்ற மறுக்கப்படுகிறது. அதேபோன்று மற்றொரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் 300 பேருக்கு குடிமனைப்பட்டா வழங்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்க முயற்சிகள், நடைபெறு கின்றன. இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். சுடுகாடு, இடுகாடு போன்றவை உள்ளாட்சி, நகராட்சி போன்ற அமைப்புகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அனைவருக்கும் ஒரே சுடுகாடு, இடுகாடு என்று அறிவித்து தைரியமாக அமலாக்க வேண்டும்.

இந்த மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் வாசிக்க மாநாட்டில் அனைவரும் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டோம். இந்த உறுதி மொழியை பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான அரசாணை வெளியிட முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இத்தகைய தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளையும், மனிதநேய, மனித சங்கிலிகளையும் மாவட்டம்தோறும் நடத்த வேண்டும். ஒரு தீவிரமான கருத்து பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும். தீண்டாமைக்  கொடுமையை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். தீண்டாமைக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதுணையாக நிற்கும்…”

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திண்டுக்கல் நகரில் நடந்த நிதியளிப்புக் கூட்டத்தில் பேசும்பொழுது சங்கரய்யா கூறினார்:

தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதிய மோதல்கள் நாட்டுக்கு நல்லதல்ல. இதன்மூலம் மனிதர்கள் மோதிக்கொள்வது மனவேதனை அளிக்கிறது. யாரோ சில பேர் தூண்டிவிட்டு இந்த ரத்தக்களறி நடைபெறுகிறது. ஒரு பாவமும் அறியாத ஏழை அப்பாவிகள் இதில் பலியாகிறார்கள். இது நியாயம்தானா? தேச விடுதலைப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும்போது ஜாதிக் கொடுமை நடைபெறுவதும், கொலைவெறியைத் தூண்டிவிடுவதும் தேசத்துரோகமாகும்.

திமுகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும், எந்தக்கட்சியாக இருந்தாலும் அனைவரும் ஒருமித்த குரலில் தீண்டாமையை ஒழிப்போம், சாதித் தீயை அணைப்போம், சாதிப் பிரச்சனையை கிளப்புவோரை அடையாளம் காட்டுவோம் என்ற முடிவில் பின் வாங்கக் கூடாது…”

கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது சங்கரய்யா பின்வருமாறு குறிப்பிட்டார்:

“குருட்டுத்தனமாக இந்த அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்காது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜாதி மோதல்களுக்கு யார் காரணம் என்று அறிய தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு மாநாடும் நடத்தியது. அதற்காக நான் இந்த அரசைப் பாராட்டுகிறேன். மாணவர்கள் மத்தியில் தீண்டாமை ஒழிப்பு போதிக்கப்பட வேண்டும். பள்ளிகளிலேயே உறுதிமொழி எடுத்துக் கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

‘‘சமூக ஒற்றுமையைத் தகர்க்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே மோதல்களை ஏற்படுத்த பெரும் முயற்சி நடக்கிறது. நமது நாடு பலமடையக் கூடாது என்று தொழிலாளர்களை, விவசாயிகளைத் திசை திருப்ப அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் முயற்சி செய்கின்றன. அவை முறியடிக்கப்பட வேண்டும்…”

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மாணவர்கள் போராட முன் வரவேண்டுமென்று சங்கரய்யா திருச்சி பெரியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். திருச்சி பெரியார் கல்லூரியின் ஆண்டு நிறைவு விழா 1997ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சங்கரய்யா 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பலத்த கரவொலிக்கிடையே வரவேற்கப்பட்டார். அவர் தீண்டாமை, வரதட்சணைக் கொடுமைகள் குறித்து உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
சென்னையில் 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற சி.ஐ.டியுவின் 9ஆவது அகில இந்திய மாநாட்டின் துவக்கமாக தியாக ஜோதியை பெறுகிறார் சங்கரய்யா. அருகில் இ.பாலானந்தன், டாக்டர் எம்.கே.பாந்தே, ஆர். உமாநாத், டி.கே.ரங்கராஜன், தபன்சென் மற்றும் தலைவர்கள்.

“சிறந்த தமிழர்களாக சிறந்த தேசபக்தர்களாக மாணவர்கள் திகழ வேண்டும். தீண்டாமை, சாதிக் கொடுமை, வரதட்சணைக் கொடுமை இவற்றிக்கு எதிராகப் போராட மாணவர் சமுதாயம் முன்வர வேண்டும். வைக்கம் வீரர் எனப் புகழப்படும் பெரியார் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கும், பெண் விடுதலைக்காகவும், போராடியவர். அவரது பெயரால் இயங்கும் கல்லூரியில் பயிலும் மாணவர்களாகிய நீங்கள், அவரது லட்சியத்தை நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

‘‘1938ல் வைதீகர்களின் எதிர்ப்பு பலமாக இருந்த சூழ்நிலையில் ஆலயப்பிரவேச சட்டம் நிறைவேற்றப்பட்டது. சுயமரியாதை இயக்கம், கம்யூனிச இயக்கம் ஆகியவற்றின் சார்பில் பெரியார், பி.ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இதற்காகப் பாடுபட்டனர். ‘‘தற்போது கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிப்பது வேதனையோடு கவனிக்க வேண்டிய விசயங்கள் ஆகும்.

ஈ.வெ.ரா.பெரியாரின் சமூக சீர்திருத்த இயக்கம், தேச விடுதலை இயக்கத்தின் பேரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி கிளாஸ் வைப்பதை எதிர்த்து, சுடுகாட்டுப்பாதை இல்லாததை எதிர்த்து, ஜனநாயக சக்திகளோடு இணைந்து பாடுபட வேண்டும். (கைதட்டல்) இதற்காக மார்க்சிஸ்ட் கட்சி சென்னையில் தீண்டாமை எதிர்ப்பு மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துகிறது (கைத்தட்டல்). பட்டிதொட்டிகளில் எல்லாம் இவ்விசயத்தைக் கொண்டு செல்வோம்.

‘‘பெரியார் மாண்பை பேசும் இவ்வேளையில், வரதட்சணைக் கொடுமை நீடிக்கிறது என்பது கவலைக்குரிய விசயமாகும். இது தமிழர்களின் பாரம்பரியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும்.

‘‘இங்குள்ள மாணவர்கள் யாரும் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சபதமேற்க வேண்டும். பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாகக் கூட வரதட்சணை வாங்கமாட்டோம் என்ற சபதம் ஏற்க வேண்டும்.

‘‘பாரத தேசம் என்ற பெரிய குடும்பத்தைப் பாதுகாக்க, கல்வியை தூக்கி எறிந்துவிட்டு சிறை சென்றதால்தான் விடுதலை கிடைத்தது. அதுபோல் முற்போக்குவாதிகள், கம்யூனிஸ்டுகள்,  சோசலிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள் இணைந்து தீண்டாமைக்கு எதிராக போராட வேண்டும்.

‘‘பெரியார் ஈ.வெ.ராவின் லட்சியங்களுக்கு விரோதமாக இன்றைக்கு மதவெறி சக்திகள் தலைதூக்கி உள்ளன. தமிழக மக்கள் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் மசூதிக்கும், தஞ்சை பெரியகோவிலுக்கும் சென்று வருகிறார்கள். சகோதரர்களாக இருக்கும் இந்தத் தன்மையை சீர்குலைந்து கலவரத்தை ஏற்படுத்த மதவாத சக்திகள் முயற்சிகின்றன. மதவெறியர்கள் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததில் இருந்து இந்த நிலை ஏற்பட்டது.

‘‘இந்திய சுதந்திரம் என்பது பல்வேறு இனம், பல்வேறு மொழி, பேசும் மக்களால் சேர்ந்து பெற்றது ஆகும். மதவெறி கலவரம் தூண்டுபவர்களை பெரியார் மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. மதவெறியர்களை முறியடிப்போம்.

‘‘கிராமத்திலிருந்து விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறையினராக நீங்கள் படிக்க வந்துள்ளீர்கள். ஆனால் வேலை கிடைக்கிறதா? (இல்லை, இல்லை என்று மாணவர்கள் குரல்)

‘‘இன்றைக்கு 39 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். முற்போக்கு, ஜனநாயகவாதிகளுக்கு இன்று மிகப்பெரிய சவால் உள்ளது. வீடில்லை, வேலையில்லை, வறுமை நிலவுகிறது. நாட்டின் அடிப்படை செல்வங்கள் மக்களுக்கு உடமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் வறுமை ஒழியும்…”

சென்னையில் 1997 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதியன்று பத்திரிகையாளரிடையே சங்கரய்யா பேசினார்.

அவர் பேசியதாவது: “சாதிய மோதல்களில் மக்கள் தாங்களாகவே ஈடுபடவில்லை. அவர்கள் அமைதியையே விரும்புகிறார்கள். ஆனால் சில சுயநலக் கும்பல்கள் தமது சொந்த ஆதாயத்துக்காகத் தூண்டிவிட்டு வருவதாலேயே கலவரங்கள் நடக்கின்றன என எங்களுக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து தெரிய வருகிறது. இதைத் தடுக்கவும் அமைதியை நிலைநாட்டவும் அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் உருவாகும் பொதுக்கருத்து அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சி மறுபடியும் வலியுறுத்துகிறது.’’

சங்கரய்யா தனது கூட்டங்களில் மதவெறியர்களை கடுமையாகச் சாடுவார். அதுவும் 1992 பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் நாடெங்கிலும் வகுப்புவாத மோதல்கள் வெடித்தபோது, கோவை நகரில் பெரும் கலவரம் வெடித்தது. பலர் கொல்லப்பட்டனர். அங்கே அரசாங்கச் செயல்பாடுகளே முடங்கிப்போயின. இத்தருணத்தில் அங்கே அமைதிப் பேரணி நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சி கோரியது. அதைத் தொடர்ந்து பேரணி நடத்தப்பட்டு மக்கள் மனதில் நம்பிக்கை உருவாக்கப்பட்டது.

மீண்டும் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். நிலைமையைச் சீராக்க மார்க்சிஸ்ட் கட்சி பல ஆலோசனைகளை அரசாங்கம் முன்பு வைத்தது. பிப்ரவரி 25ம் தேதியன்று அங்கே அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.

அவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் மதநல்லிணக்கப் பேரணி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுர்ஜித், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், சங்கரய்யா மற்றும் நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

அதன்பின் கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சங்கரய்யா மதவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள், தேசபக்தர்கள் ஆற்ற வேண்டிய கடமையை சுட்டிக் காண்பித்தார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
மதுரையில் நடைபெற்ற மத நல்லிணக்க மனித உரிமை மாநாட்டில் முதல்வர் கருணாநிதி உரையாற்றுகிறார். மேடையில் (வலமிருந்து இடம்) ஜி.கே.மூப்பனார் சங்கரய்யா, நல்லகண்ணு மற்றும் தலைவர்கள்.

“கோவையில் சமீப காலமாக நடைபெற்று வரும் வகுப்புக் கலவரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரிதும் கவலைகொள்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் கேந்திரமான இடம் கோயம்புத்தூர். நாட்டு மக்கள் நல்வாழ்வு நடத்த வழிகாட்ட வேண்டிய கோவையில் மதவாத சக்திகள், பழமைவாத சக்திகள், இரு பக்கமும் உள்ள மிகப்பிற்போக்குவாத சக்திகள் மக்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட முயற்சிக்கின்றன. அவற்றை தமிழக அரசு சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியோடு திராவிடக் கட்சிகளும் இணைந்து இந்த வகுப்புக் கலவரத் தீயை அணைக்க முன்வர வேண்டும்.

“தமிழ்நாட்டில் சாதிய, மத மோதல்களை உருவாக்குவோர் யாராக இருந்தாலும் அவர்கள் தொழிலாளி வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்யும் கும்பல் என்பதை அடையாளம் கண்டு அவர்களது முயற்சிகளை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு தேசபக்தனின் கடமை, ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமை, ஒவ்வொரு மனிதாபிமானியின் கடமை, ஒவ்வொரு இடதுசாரியின் கடமை, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமை, ஒவ்வொரு மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரின் கடமை என்று கூற விரும்புகிறேன்…”

சங்கரய்யா தனது உரைகளில் காவல்நிலையக் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், காவல்துறையினருக்கு பயிற்சியும், மறுபயிற்சியும் அளிக்க வேண்டுமென்பதை பெரிதும் வலியுறுத்துவார். கடலூர் கூட்டத்தில் பேசுகையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“காவல்துறை முழுவதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை. காவல்துறையில் இருக்கக் கூடிய பல நல்ல அதிகாரிகள், பல நல்ல ஊழியர்கள், செய்யக் கூடிய சில நல்ல காரியங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டியுள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், மனித உரிமை ஒன்று உள்ளது.

ஒரு மனிதன், ஒரு பிரஜை, ஒரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டால் அவருடைய உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு பெண்ணையும் காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது. சட்டத்திற்கு விரோதமாக யாரையும் கைது செய்யக் கூடாது என்று மனித உரிமை கமிஷன் கூறுகிறது. தமிழக முதல்வர் கூறுகிறார். இது குறித்து மனித உரிமை கமிஷன் தலைவர் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

“தமிழ்நாட்டில், இதர மாநிலங்களில் காவல்நிலையங்களில் என்ன நடக்கிறது என்பதை நேரில் கண்டறிய மனித உரிமை கமிஷனை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். அதுபோன்ற சோதனைகள் நடந்திருந்தால், காவல்நிலைய கொடுமைகள் நடந்திருக்குமா? பத்மினி தாக்கப்பட்டது போன்ற நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் மட்டுமா பொறுப்பு? சங்கிலித் தொடர் போல் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் பொறுப்பு இல்லையா? சமீபத்தில் சென்னையில் இரண்டு பேர் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டனர். ஜெயங்கொண்டத்தில் நக்சலைட்டுகளை அடக்குகிறேன் என்ற பெயரால் ஒருவர் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது ஏதோ காவல்துறைக்கு எதிராகவோ, தமிழக அரசுக்கு எதிராகவோ நடத்தும் விமர்சனம் என்று பாராமல், உண்மையான விவரங்களை தமிழக அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘‘காவல்நிலையத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றங்களின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்ற செய்தி நாட்டு மக்களிடம் செல்லும்போது, ஓரளவு பாதுகாப்பு கிடைக்கிறது.

‘‘காவல்துறையில் பணிபுரியக்கூடியவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபயிற்சி அளிக்க வேண்டும் என்று பலமுறை மாநில அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். தார்மீக நெறிமுறை களை, விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். மற்ற நாடுகளில் இது செய்யப்படுகிறது.

‘‘இந்தியாவிலேயே முதன்முதலில் மனித உரிமை கமிஷனை அமைத்த ஒரே மாநிலம் மேற்குவங்கம்தான். யாரும் கேட்காமலேயே ஜோதிபாசு ஏற்படுத்தினார். மக்கள் உரிமைகளைப் பாதுகாக்க, போலீஸ் நிலையங்களில் ஏற்படக்கூடிய தவறுகளை கண்காணிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மக்கள் உரிமை கமிஷன் அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதை நிச்சயம் என்று ஏற்றுக் கொண்டு தமிழக அரசு இங்கேயும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைந்திருக்கிறது. அந்த மனித உரிமை கமிஷன் இந்தக்காவல் நிலைய கொடுமைகளில் தலையிட்டு தீர்வுகாண  வேண்டும்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
கோவில்பட்டியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவையில் பி.ஆர்.பரமேஸ்வரன் உரையாற்றுகிறார். அருகில் ஆர்.கிருஷ்ணன், பி.சொர்ணம் மற்றும் சங்கரய்யா.

41. விவசாயிகள் சங்கத் தலைவர்

சங்கரய்யா கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பணியாற்றி வரும்பொழுது, விவசாயிகள் சங்க இயக்கத்திலும் பங்கெடுத்தார். மதுரை மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் ஏழை விவசாயிகள் மற்றும் குத்தகையாளர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. கம்பம் வட்டத்திலும் பழனி வட்டத்திலும் வெவ்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் சங்கம் சமாளிக்க வேண்டியிருந்தது. இப்பகுதிகளில் விவசாய சங்கத்திற்கு ஆர். ராமராஜ், கே.பி. ஜானகிஅம்மாள், வி. மதனகோபால், போன்றோர் தலைமை தாங்கி நடத்தி வந்தார்கள். கட்சியில் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் சங்ரய்யாவும் இந்தப் போராட்டங்களுக்கு தன் பங்களிப்பைச் செய்தார்.

விவசாய சங்கத்தின் தலைவர் பி.சீனிவாசராவுடன் சேர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, விவசாயிகள் இயக்கத்தை உருவாக்குவதற்கு அவர் பெரிதும் பாடுபட்டார்.

1945-1946 ஆம் ஆண்டுகளில் இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பாகமான வத்திராயிருப்புப் பகுதியில் இருந்த குத்தகை விவசாயிகள் விளைச்சலில் சமபங்கு கேட்டு நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராடினர். இந்த சமவீத பங்கு வேண்டும் என்ற கோரிக்கையானது ‘சுத்தவாரக்’ கோரிக்கை என்று அழைக்கப்பட்டது. பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து 1946 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு வத்திராயிருப்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏ.கே. கோபாலன், பி.சீனிவாசராவ், மணலி கந்தசாமி, ஜீவா ஆகியோருடன் சங்கரய்யாவும் பங்கேற்றார். இந்த மாநாடானது ஜமீன்தார்கள், இனாம்தார்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் மடாதிபதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட விவசாயிகளைத் திரண்டெழும்படி அறைகூவல் விடுத்தது. இந்த மாநாடுதான் ‘‘சுத்தவாரத்திலிருந்து சுதந்திர வாரத்தை நோக்கி’’ என்ற முழக்கத்தைக் கொடுத்தது.

இந்த மாநாட்டின் நிறைவாக பெரும் ஊர்வலம்  நடைபெற்றது. சீனிவாசராவ், ஏ.கே. கோபாலன், மணலி கந்தசாமி மற்றும் சங்கரய்யா ஆகியோர் இதற்குத் தலைமை தாங்கினர். இந்த ஊர்வலம் வரும்போது காவல்துறையினர் இடையூறு செய்தனர். அவற்றை யெல்லாம் மீறி ஊர்வலம் ஆவேசத்துடன் நடைபெற்றது. சங்கரய்யா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் உரையாற்றினர்.

1948-1951 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் மீது காங்கிரஸ் அரசாங்கம் பெரும் தாக்குதல் தொடுத்தது. விவசாய சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களும் ஊழியர்களும் பெரும் தாக்குதல்களுக்குள்ளாயினர். பலர் கொல்லப்பட்டனர். 1952 ஆம் ஆண்டில் கட்சியும் இதர அமைப்புகளும் பகீரங்கமாக செயல்படத் தொடங்கிய பின்னர்தான் விவசாயிகள் சங்கம் தன் பணியை மீண்டும் துவங்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து 1953 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தில் 5வது மாநில மாநாடு மன்னார்குடியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கட்சித் தலைவர் கே.ரமணி சங்கக்கொடியினை ஏற்றிவைத்தார். மணலி கந்தசாமி மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் பி.சீனிவாசராவ், எம்.கே.எம்.மீரான், எம்.காத்தமுத்து போன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் துவக்கி வைத்து சங்கரய்யா ஆவேசமிக்கதொரு உரையாற்றினார். சங்கரய்யாவின் உரை எவ்வாறு இருந்தது என்பதை அந்த மாநாட்டில் பங்கேற்றவரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவருமான கோ.வீரய்யன் சுட்டி காண்பிக்கிறார் :

‘‘சங்கரய்யாவின் கம்பீரமான குரலை மன்னார்குடி நகரம் ஒலிபெருக்கியின் மூலம் கேட்டது. அவரது உரத்தக்குரலிலான எழுச்சிகர பேச்சைக் கேட்டு ஏராளமான மக்கள் மைதானத்திற்குள் நுழைந்தனர். அந்தக் கூட்டத்தில், சங்கரய்யா சங்கத்தின் வெற்றிகள் பற்றியும் காங்கிரஸ் ஆட்சியின் நாம் அனுபவித்த அடக்குமுறை மற்றும் துன்பதுயரங்களை தியாகங்களைப் பற்றி உணர்ச்சி ததும்ப பேசினார்…..’’

விவசாய சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக அவர் பல ஆண்டுகள் செயல்பட்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்கத்தில், அவர் சீனிவாச ராவ், மணலி கந்தசாமி, ஆர்.ராமராஜ், எம்.கே.எம்.மீரான், எஸ்.அழகர்சாமி, ஆர்.நல்லக்கண்ணு, எம்.ஆதிமூலம், கோ.வீரய்யன், போன்ற விவசாயிகள் இயக்கத் தலைவர்களோடு இணைந்து செயல்பட்டுள்ளார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
திருப்பூர் வாலிபர் சங்கப் பேரணியில் சங்கரய்யா பேசுகிறார்.

1967 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் சங்கரய்யா மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.கே.கோபாலனும் கலந்து கொண்டார். 1969 ஆம் ஆண்டில் சங்கரய்யா மாநிலத் தலைவராகவும், ஆர்.ராமராஜ் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் 1974 ஆம் ஆண்டில் பழனியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் சங்கரய்யா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்.ராமராஜ் மாநிலத் தலைவராகவும், கோ. வீரய்யன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1982 ஆம் ஆண்டில் கருரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் சங்கரய்யா மாநிலத் தலைவராகவும் கோ. வீரய்யன் மாநிலச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1991 ஆம் ஆண்டில் விழுப்புரத்தில் நடைபெற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டில் சங்கரய்யா மாநிலத்தலைவராகவும், கே. வரதராஜன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு முக்கிய விஷயத்தை கோ. வீரய்யன் விவரித்துக் கூறுகிறார். ‘‘1977 ஆம் ஆண்டில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெற்றது. இக் கூட்டமானது கிராமப்புற மக்கள் அனைத்து பொருட்களையும் வாங்க நகரங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமமான நிலையைச் சுட்டிக்காட்டியது. இதைப் போக்கும் விதத்தில் அனைத்து கிராமங்களிலும் தமிழக அரசாங்கம் நியாயவிலைக் கடைகளை திறக்க வேண்டும்மென்று கோருவதென்றும் முடிவு செய்யப்படுகிறது. அப்பொழுது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுவின் தலைவரான தோழர் சங்கரய்யா இப்பிரச்சனையை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.ரிடம் இத்தீர்மானத்தை விளக்கிக் கூறி  நியாய விலைக் கடைகளை திறக்க வேண்டும் என இந்த கூட்டம் தீர்மானித்தது. அதன்படி, தோழர் சங்கரய்யா முதல்வர் எம்.ஜி.ஆரையும் வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரனையும் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.  அப்போது நாஞ்சில் மனோகரன் ஆளுநரின் உரை ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளதால், இக்கோரிக்கையை சேர்க்க இயலாது என்றார். அதற்குப் பதிலளித்த சங்கரய்யா இந்த விஷயத்தை தட்டச்சு செய்து ஆளுநரின் அறிக்கையின் கீழே ஒட்டிவிடலாம் என்று சொன்னார். அதை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அதன்படி, செய்ய ஏற்பாடு செய்தார். இதனால் இந்த கோரிக்கை ஆளுநரின் உரையில் இடம்பெற்று நிறைவேற்றப்பட்டது. அனைத்து கிராமங்களிலும் நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டன. தோழர் சங்கரய்யாவின் முயற்சி வெற்றிபெற்றது.’’

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தில் சங்கரய்யா முதன் முறையாக 1966 ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாயிகளின் சங்கத்தின் மத்திய கிசான் குழு உறுப்பினராக்கப்பட்டார். பின்னர் 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டிலும் அவர் மத்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டின் நிறைவு நாளன்று, நடைபெற்ற பேரணியில் சங்கரய்யா உரையாற்றும்பொழுது பூந்தாழங்குடி கொலைவழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 200 பேர் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் வாங்கு என முழக்கம் எழுப்பினார். இந்த விஷயத்தில், அடுத்த நாள் மாநிலம் முழுவதும் போராட்டம் என இந்த மாநாடு அறிவித்தது. ஆனால் தமிழக அரசாங்கம் அந்த கொலை வழக்கில் கைதான 200 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என அன்றிரவிலேயே அறிவித்து

அந்தச் செய்தி அடுத்த நாள், காலையிலேயே பத்திரிகைகளில் வெளிவந்தது. இது விவசாயிகளின் சங்கத்தின் இடைவிடாது போராட்டத்தின் வெற்றியாகும். பல ஆண்டுகள் மத்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும், செயலாளர்களில் ஒருவராகவும், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் பணியாற்றிய சங்கரய்யா பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொன்விழா மாநாட்டில் அதன் பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்தாற்போல், அரியானா மாநிலம் ஹிஸ்ஸாரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் சங்கரய்யா விவசாயிகள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் அவர் ஒரு விரிவான நிறைவுரை ஆற்றினார்.

மத்திய அரசாங்கத்தின் நாசகர புதிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை விரிவுபடுத்தும்படியும், ஆழப்படுத்தும்படியும் அவர் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார். பல்வேறு விவசாய அமைப்புகளின் ஒற்றுமைக்கு அவர் அறைகூவல் விடுத்தார். விவசாயிகள் விவசாய தொழிலாளர் ஒற்றுமைக்கும் தொழிலாளி  வர்க்கம் மற்றும் விவசாய மக்களின் ஒற்றுமைக்கும் அவர் அறைகூவல் விடுத்தார்.

பல்வேறு மாநிலங்களிலுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் கிளைகள் தங்களுடைய மாநிலங்களிலுள்ள விவசாய நிலைமையை திட்டவட்டமாக ஆய்வு செய்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கொள்கை வடிவத்துக்குள் நின்று, அதற்கேற்ற நடைமுறை முழக்கங்களை உருவாக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். கிராமங்களில் உள்ள பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்கும் விதத்தில் ஸ்தலப்பிரச்சனைகள் மீது ஸ்தலப்போராட்டங்கள் நடத்துவதன் தேவையை சங்கரய்யா வலியுறுத்தினார். அத்துடன் விவசாயிகள் சங்கத்துக்கும் விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும் வர்க்க செயல்பாட்டு ஒற்றுமையின் தேவையை அவர் வலியுறுத்தினார்.

ஏழை விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளிகளையும் அடிப்படையாகக் கொண்டு விவசாயிகளின் சங்க இயக்கத்தைக் கட்டவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அதே சமயத்தில் விவசாயிகள் இயக்கத்திற்கு ஒரு பலம் வாய்ந்த வளர்ச்சியை உத்திரவாதம் செய்யும் பொருட்டு நடுத்தர விவசாயிகளை பாதிக்கும் பிரச்சனைகளில் அவர்களையும் அணுக வேண்டும் என்று அவர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆதிவாசி மக்களுக்கான இயக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். விவசாய சங்கத்தின் சம்மந்தப்பட்ட மாநிலக் குழுக்கள் இதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். மாநிலக் குழுக்கள் விவசாயப் பெண்களை ஏராளமாக விவசாயிகள் சங்கத்துக்குள் கொண்டுவர வேண்டுமென்றும் அவர்களிடையே இருந்து சிறந்த ஊழியர்களைப் தேர்வு செய்து பல்வேறு குழுக்களில் அவர்கள் இடம் பெறச் செய்ய மாநில குழுக்கள் பாடுபட வேண்டும் என்றும் சங்கரய்யா கேட்டுக் கொண்டார்.

விவசாய மக்களிடையே எழுத்தறிவு மற்றும் கலாச்சார இயக்கத்தை உருவாக்க வேண்டியதின் பெரும் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்; கிராமப்புற இயக்கத்தை உருவாக்குவதற்கு அவற்றைச் சக்திவாய்ந்த கருவிகளாகப் பயன்படுத்த வேண்டுமென்று அவர் கூறினார்.

நிறைவாக அவர் பேசும்பொழுது விவசாயிகள் சங்க கிளைகள் இதர அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்து பிளவுவாத மற்றும் வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் நாட்டின் எதிர்கால வாழ்வில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கு ஒரு பிரகாசமான பங்கை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சங்கரய்யா அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றிய ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விவசாயிகள் பேரணிகளில் பங்கேற்றுள்ளார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
விவசாயிகள் சங்கத்தலைவர்கள் மணலி கந்தசாமி, ஏ.கே.கோபாலன், என். பிரசாதராவ் மற்றும் பி. சீனிவாசராவ்வுடன் சங்கரய்யா (இடதுபுறம்) முதலில் நிற்பவர்.

42. அயல்நாட்டுப் பயணங்கள்

சங்கரய்யா மூன்று முறை அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதன்முறை சோவியத் நாட்டிற்கும், இரண்டாவது முறை சீன நாட்டிற்கும், மூன்றாம் முறை சிரியா நாட்டிற்கும் சென்று வந்துள்ளார்.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டு உறுப்பினர் தூதுக்குழுவிற்கு அவர் தலைமை தாங்கி சோவியத் நாட்டிற்குச் சென்றார். தோழர்கள், கே.எல் ஓக்,கோபு, சுசீல்பட்டாச்சாரியா, சர்மா, ஜனார்த்தன் பதி, ஜீவன்லால்ஜெயராம் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

இந்த குழுவினர், ஒரு மாத காலம் அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தனர்.  மாஸ்கோவில் லெனின் நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து அவருக்கு அஞ்சலி செய்தனர்.

லெனின் கடைசியாக வாழ்ந்த கோர்க்கி என்ற இடத்திற்குச் சென்று நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள அவர் வாழ்ந்த வீட்டைக் கண்டனர். லெனின் பயன்படுத்திய பொருட்கள், அவருடைய நூலகம் போன்றவை பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் கண்டனர்.  இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட சோவியத் மக்களின் நினைவிடங்களுக்கும் சென்று இக் குழுவினர் அஞ்சலி செய்தனர்.

தூதுக்குழுவினர் இரண்டாம் உலகப்போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட லெனின் கிராட் நகரத்திற்கும் சென்றனர். லெனின் கிராட் கட்சிக் குழுவினர் தூதுக்குழுவினரை நேசத்தோடு வரவேற்றனர். அங்கே இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்ட ஜந்து லட்சம்பேர் புதைக்கப்பட்டுள்ள சமாதிக்குச் சென்று தூதுக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.

சோவியத் நாட்டின் பல நகரங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தனர். நவம்பர் மாதம் 6ந்தேதி அன்று கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டத்தில் தூதுக்குழுவினர் பங்கேற்றனர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
1986ஆம் ஆண்டு மே மாதம் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொன்விழா மாநாட்டில் சுர்ஜித், கோதாவரி பருலேக்கர் பினாய்சௌதிரி மற்றும் தலைவர்களுடன் சங்கரய்யா.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் செர்னன்கோ தலைமையில், கட்சியின் அரசியல் தலைமைகுழு உறுப்பினர்கள் அனைவரும் வந்தனர். கூட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் குரோமிக்கோ உரையாற்றினார். அவரது உரைக்குப்பின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ரஷ்யப் புரட்சி தினமான நவம்பர் 7-ந்தேதி காலையில் கிரெம்ளின் மாளிகையின் முன்பிருந்து பேரணி துவங்கியது. முதலில் இராணுவத்தினர் அணிவகுத்து சென்றனர். அதன்பின் லட்சக்கணக்கான மக்கள், பலூன்கள் பூச்செண்டுகள் ஏந்தி உற்சாகமாக அணிவகுத்துச் சென்றனர்.

ஒரு மாத காலம் சோவியத் நாட்டில் மிக விரிவாக சுற்றுப்பயணம் செய்த குழுவினர் நவம்பர் 21ம் அன்று மாஸ்கோவிலிருந்து இந்தியாவுக்கு பயணம் ஆயினர்.

இரண்டாவதாக சங்கரய்யா மக்கள் சீனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூதுக்குழு ஒன்றுக்கு தலைமை தாங்கிச் சென்றார். சீனக்கட்சி அழைப்பின் பேரில் அனுப்பப்பட்ட இந்தக் தூதுக்குழுவில் ஜனார்தன்பதி உள்ளிட்டு ஜந்து பேர் இருந்தனர்.

இந்த தூதுக் குழுவினர் பெய்ஜிங்கில் சீனத் தலைவர் மாவோவின் நினைவிடத்திற்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செய்தனர். சீனக் கம்யூனிஸ் கட்சியின்  சர்வதேச துறை பிரிவு செயலாளரை தூதுக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். அவர் சர்வதேச மற்றும் சீன தேசிய நிலைமைகளை இந்திய தூதுக் குழுவினருக்கு விளக்கினார். இந்திய தூதுக் குழுவினர் அவருக்கு இந்திய நிலைமைகளை எடுத்துரைத்தனர்.

அதன்பின் தூதுக்குழுவினர் ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களின் வாழ்க்கை நிலைமைகளைக் கண்டறிந்தனர். ஷாங்காயில் கட்சிப் பள்ளி ஒன்றையும் கண்டனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு நடைபெற்ற இடத்தையும் அவர்கள் கண்டனர். ஒரு கடிகார தொழிற்சாலைக்கும் அவர்கள் சென்று வந்தனர். விவசாய தொழில் வர்த்தக அமைப்பையும், விவசாயிகள் இயக்க கழகத்தையும், விவசாய பொருள் உற்பத்தி சந்தையையும் அவர்கள் கண்டனர்.

15 நாட்கள் நீடித்த இந்த சுற்றுப் பயணத்திற்குப் பின் தூதுக்குழுவினர் காண்டன் வழியாக தாயகம் திரும்பினர்.

சிரியா நாட்டின் விவசாயிகள் அமைப்பு அந்நாட்டின் தலைநகரான டெமாஸ்கஸ் நகரில் நடத்திய மாநாட்டில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக சங்கரய்யா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இம்மாநாட்டில் சிரியாவின் குடியரசு தலைவர் அஸ்ஸாது கலந்து கொண்டார். பொதுமாநாட்டிலும் சங்கரய்யா பங்கேற்றார்.

சங்கரய்யா சிரியா – இஸ்ரேல் எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு சிரியா நாட்டின் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அங்குள்ள பிரச்சனைகளை விளக்கிக் கூறினர். சங்கரய்யா டெமாஸ்கஸில் இருக்கும்போது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னணி தலைவர்களையும் சந்தித்து உரையாடினார். அவருடைய சுற்றுப்பயணம் ஒருவார காலம் நீடித்தது.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
இந்தியக் குழுவை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர் வரவேற்கின்றனர்.

43. ஒரு அரசியல்வாதியின் இலக்கியக்கனவுகள்

(‘செம்மலர்’ இதழுக்கு சங்கரய்யா அளித்த நேர்காணல், கண்டவர் பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன்)

கேள்வி : கலை இலக்கியத் துறையில் தீவிர ஆர்வமுள்ள அரசியல் தலைவர் நீங்கள் – எனவே பழங்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய தங்களின் கருத்துக்களோடு இந்தப் பேட்டியைத் தொடங்கலாம்.

பதில்: ஏராளமான மனித உண்மைகள் அடங்கியுள்ள மாபெரும் பொக்கிஷம் சங்க இலக்கியம். அதை நாம் ஆழ்ந்து கற்றுத் தேற வேண்டும். சங்ககால இலக்கியங்கள்தான் இன்றைக்கும் ஒரு பெரிய ஊற்றுக் கண்ணாக இருந்து கொண்டே இருக்கின்றன. ஒருவன் சிறந்த இலக்கியவாதியாக ஆக வேண்டும் என்றால் தொல்காப்பியம் முதல் இன்றுள்ள இலக்கியங்கள் வரை ஆழமாகப் படித்து விமர்சன ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் சாராம்சத்தை உள்வாங்கிக்கொண்டு நவீன இலக்கியங்களைப் படைக்க வேண்டும். இவையெல்லாம் படிக்காமல் இருக்கின்ற கவிஞனுக்கு சொல்லின் வல்லமை கைகூடாது. சமுதாய அமைப்புகள் தொடர்ந்து மாறிவந்தாலும் சில குறிப்பிட்ட மனிதப் பண்புகள் ஒரு நூலைப்போல அறுந்துவிடாமல் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. இதுதான் இலக்கியத்தின் ஜீவநாடியாக இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த அடிப்படையான மனிதப் பண்புகளை இன்றைக்கும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். உதாரணமாக செய்குத்தம்பி பாவலரிடம் புதிய தம்பதிகள் வந்து வாழ்த்துக் கேட்டபொழுது அவர் சொன்னார். “இளைஞனே உன் மனைவியுடைய கருநீலக் கூந்தலை எவ்வளவு அன்போடு பார்க்கிறாயோ அவருடைய அழகிய விழிகளை எவ்வளவு பூரித்து வர்ணிக்கிறாயோ அவருடைய வசீகரங்களுக்குள் எப்படி மெய்மறந்து திளைக்கிறாயோ, அதேபோல நீண்ட காலத்திற்குப் பிறகு, அவருடைய கூந்தல் நரைத்தப் பின்பும், கண்கள் குழிவிழுந்த பின்பும், தேகத்தில் உள்ள தோல் முழுவதும், சுருக்கம் விழுந்த பிறகும், அதே அன்பும், ஆதரவும் காட்ட வேண்டும்” என்றார்.

முதியவர்களை ஆதரவாக கனிவாக கவனித்துக் கொள்கிற மனிதப் பண்புகளை இலக்கியங்கள் பதிவு செய்து கொண்டே வருகின்றன. இந்த அடிப்படையான மனிதப் பண்புகளை, குடும்பம் என்ற இந்த அமைப்பையெல்லாம் தூக்கியெறிய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படிச் செய்த முதலாளித்துவ நாடுகள் எல்லாம் இன்று மீண்டும் ‘குடும்பத்திற்குள் செல்’ என்று சொல்ல ஆரம்பித்திருக்கின்றன. உறவுகள் அறுந்து நிராதரவாக நிற்கின்ற மனிதனை முதலாளித்துவ சமூகம் உருவாக்கி இருக்கிறது. இது அடிப்படை குணாம்சத்திற்கே எதிரானது. இது நிலைத்து நிற்காது.

கேள்வி: சங்க இலக்கியம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டம் என்று தாங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: எந்த ஒரு மொழியின் பழங்கால இலக்கியமும், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத்தான் இருந்திருக்கின்றது. அதில் அடங்கி இருக்கிற செய்தியை இன்றைய கண்ணோட்டத்தோடு பரிசீலிக்கக் கூடாது. அந்தக்காலத்து தன்மைகளை அந்தப்புலவர்கள் பிரதிபலித்திருக்கிறார்களா என்ற உரைக்கல்லை வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும். இன்றுள்ள தன்மைகளை ஏற்றிவைத்து அதை விமர்சிக்கக் கூடாது.

மார்க்சும், ஏங்கெல்சும் கிரேக்க இலக்கியங்களை ஆழமாகப் படித்தவர்கள். அதில் தங்களின் மனதை பறிகொடுத்து நின்றவர்கள். அந்த இலக்கியச் செல்வங்களிலிருந்து பல உதாரணங்களை தங்களின் எழுத்துக்களில் மேற்கோள் காட்டினார்கள். அதேபோல்தான், லெனின், மாவோ, ஹோசிமின், ஸ்டாலின் போன்றோரும் சிறந்த இலக்கிய ஞானத்துடனேதான் இருந்திருக்கின்றனர்.

இந்தப் பாரம்பரியத்தில் வந்த முற்போக்காளர்கள் ஒவ்வொரு மண்ணுக்கும் உரிய பாரம்பரியமான கலை இலக்கியங்களை ஆழ்ந்து பயில வேண்டும். சமயத் தலைவர்களுக்கோ, மற்ற பண்டிதர்களுக்கோ இருப்பதை விட முற்போக்காளர்களுக்குத்தான் இந்த ஆழ்ந்த புலமை வேண்டும். அப்பொழுதுதான், நம் சொல்லை நாடு கேட்கும். இந்த இலக்கியத்தின் கீற்றுக்களை நாம் போராட்டத்திற்கு கொண்டுவர வேண்டும்.

இன்னொரு முக்கிய விஷயம். பழங்காலப் படைப்பாளிகள் மாபெரும் மொழி வல்லுநர்களாக இருந்திருக்கின்றனர். சொல், மொழி குறித்த அவர்களது ஞானம், அளப்பரியதாய் இருந்திருக்கிறது. இதையெல்லாம் இன்றுள்ள முற்போக்கு இலக்கியவாதிகள் மனதில் கொள்ள வேண்டும்.

கேள்வி: இந்த நூற்றாண்டில் தோன்றிய கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று தாங்கள் யார் யாரைக் கருதுகிறீர்கள்? என்ன காரணத்தால்?

பதில்: முதலில் எனது நெஞ்சில் எழுவது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த மகாகவிஞன் சுப்பிரமணியபாரதிதான். தேசபக்தி, சோஷலிஸத்தை வரவேற்ற மாபெரும் புதுமை, மாயாவாதத்தை ஏற்காத கடவுள் பக்தி, இது மூன்றுங்கலந்த மிகச்சிறந்த கலவை பாரதி. அன்றைய காலத்தில் இதைவிட புதுமையாக வேறென்ன இருந்திருக்க முடியும்.

அவன் தேசபக்தியைப் பாடியது இயற்கை. சோஷலிசத்தைப் பாடியது மிகவும் முற்போக்கான புதுமை. அநேகமாக இந்தியாவில் அக்காலத்தில் 1917 ரஷ்யப்புரட்சி பற்றி பாடியது பாரதியைத் தவிர வேறு யாரும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

அந்த அளவுக்கு புதுமையின் மீது தீவிர வேட்கையும், அதேசமயத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தீவிரமாகக் குரல் கொடுத்த மனவலிமையையும் பாரதியிடமிருந்து இன்றைய கவிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்.

கேள்வி: பாரதியை ‘பிராமணக் கவிஞன்’ என்று கூறுகிற குரல் இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கிறதே!

பதில்: இளம் வயதிலேயே காலமான ஒரு கவிஞன். அதுவும் பிராமணக் குடும்பத்தில் பிறந்த கவிஞன் “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்று எழுதினான் என்றால், இதைவிட ஒரு ஜாதிய எதிர்ப்புக்குரல் அன்றைக்கு வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஜாதிய ஒழிப்பில் அவரது கண்ணோட்டம் தீவிரத்தன்மை வாய்ந்ததாக இருந்தது. பாரதியைப் போய் பிராமணக் கவிஞன் என்று சொன்னால் அதைவிட ஒரு மிகப்பெரிய அபத்தம் ஏதுமில்லை.

பாரதியைத் தொடர்ந்து சமூக சீர்திருத்தத்திற்கும், ஜாதியக் கொடுமைக்கும் எதிராக நின்றவர், செயல்பட்டவர் பாரதிதாசன். அவருடைய ‘உலகப்பன்’ பாடலும், புரட்சிக்கவியும் எவ்வளவு சிறந்த சிந்தனையோடு எழுதப்பட்டது என்பது படிக்கிறவர்களுக்கு நன்கு தெரியும்.

பாரதி பற்றி பாரதிதாசன் வைத்திருந்த மதிப்பீடுதான் மிகச்சரியானது. அதை விடுத்து பாரதிதாசன் திராவிடக்கவிஞன், பாரதி பார்ப்பனக்கவிஞன் என்று கூறுகிற வேலையெல்லாம் இனி எடுபடாது.

பாரதிதாசனிடம் சில குறைபாடுகள் இருந்தால் அதையே பெரிதுபடுத்தத் தேவையில்லை. அவரிடமிருந்த சிறந்த அம்சங்களை நாம் எடுத்துக் கொள்வோம். பாரதி, பாரதிதாசன் இவர்களின் பரிணாம வளர்ச்சியால் பொதுவுடமைக்காக உரக்கக்குரல் கொடுத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருடைய கவிதையின் எளிமையும், உள்ளடக்கமும் காலத்தை விஞ்சி பாட்டாளி மக்களுக்காக என்றென்றும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்.

கேள்வி: இந்த மூன்று கவிஞர்களுக்குப் பிறகு திரை உலகிலும், தமிழக மக்கள் மத்தியிலும் குறிப்பிடும்படியான  செல்வாக்கினை தன் பாடல்கள் மூலமாக ஏற்படுத்திய கவிஞர் கண்ணதாசன் பற்றி?

பதில்: கண்ணதாசன் ஒரு மாபெரும் கவிஞர். அவரைப் பற்றி ஒரு சரியான மதிப்பீடு தேவை. அதை நாம் செய்ய வேண்டும். அவருடைய பாடல்கள் கோடிக்கணக்கான மக்களின் நாவில் இன்றும் அசைந்துகொண்டிருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம் அவருடைய பண்டைய இலக்கியம் பற்றிய ஞானம். அதையெல்லாம் திரைப்பாடலுக்கு சாதகமாக அவர் மாற்றிக்கொண்டார். உதாரணத்திற்கு ‘வாராயோ தோழி வாராயோ’ பாடல் இருக்கிறது. இது வைஷ்ணவ இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டது. எனவேதான், நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் சங்க இலக்கியங்களைப் படிக்காவிட்டால் நாம் வற்றிப்போய்விடுவோம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், நம்மால் முன்னேற முடியாது. அதைவிட முக்கியம் அந்த எளிமை என்பது இன்றைய நவீன இலக்கியத்திற்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது.

கேள்வி : சுதந்திரப் போராட்டத்தில் கலை இலக்கியத்தின் பங்கு என்ன?

பதில்: சுதந்திரப் போராட்டத்தில் கலை இலக்கியத்தின் பங்கு மிக முக்கியமானது. தமிழகத்தில் பாரதியார் பாடல்கள் மாபெரும் சுதந்திர எழுச்சியை ஊட்டின. இரவீந்திரநாத் தாகூரின் குரல் வங்காளம் முழுமையும் அசைத்தது. இதுபோல, ஒவ்வொரு மாநிலத்திலும் இலக்கியவாதிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.

தமிழகத்தில் குறிப்பாக நாடகத்துறையின் பங்கு மிகவும் பிரம்மாண்டமானதாக இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் கொடுக்காத நாடகக் கலைஞனே இல்லையென்று சொல்லுமளவுக்கு ஒரு காலம் இருந்தது. போடப்படுவது புராண நாடகமாக இருக்கும். அதில் எதிரியை வர்ணிப்பது போல பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வர்ணித்துக்கொண்டிருப்பார் விஸ்வநாததாஸ். இதேபோலத்தான் கே.பி.ஜானகியம்மாள், கே.பி.சுந்தரம்பாள், டி.கே.சண்முகம், என்.எஸ்.கிருஷ்ணன் இன்னும் எத்தனையோ நாடகக்கலைஞர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உக்கிரத்தோடு கலைச்சேவை செய்துவந்தார்கள். அநேகமாக எல்லோரும் தேசிய இயக்கத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். கதர்தான் அணிவார்கள்.

கேள்வி: நாடகம், சினிமாத்துறைகளில் பிற அரசியல் இயக்கத்தினர் நுழைந்த அளவுக்கு இன்னும் கம்யூனிஸ்டுகள் நுழையவில்லையே?

பதில்: நாடகம், சினிமாத்துறைகளில் முற்போக்குவாதிகள் திட்டமிட்டு உள்ளே நுழைய வேண்டும். அது மிகப்பெரிய தேவை.

“நீ என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி” என்ற நாடகம் கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு செய்த சேவை அளப்பரியது. அப்படிப்பட்ட முழு நீள நாடகம் இங்கு உருவாகவில்லையே என்பதுதான் என்னுடைய கவலை.

இரண்டாவது, நாடகம் சினிமாத்துறையில் ஏற்கெனவே இருக்கக்கூடிய கலைஞர்களை அரசியல்படுத்த வேண்டும். அவர்களை ஒரு சரியான கொள்கைக்கு கொண்டுவர வேண்டும்.

கேள்வி : தேசிய இயக்கத்திலும், கம்யூனிச இயக்கத்திலும் ஒரு காலத்தில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. குறிப்பிடத்தக்க பல தலைவர்களை நாட்டுக்கு அளித்தது மாணவர் சமூகம். ஆனால் இன்று அப்படி இல்லையே ஏன்?

பதில்: தேசிய விடுதலை இயக்கத்தில் மாணவர்களின் பங்கு மகத்தானதாகும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் நகரந்தோறும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து களத்தில் இறங்கினர். அன்று மாணவர்கள் மத்தியிலிருந்து ஒரு முக்கிய முழக்கம் நாடெங்கும் வலம் வந்தது.

“நாங்கள் வேலைக்காக போராடுபவர்கள் அல்ல; சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள்” என்பதுதான் அந்த முழக்கம்.

1940களில் மதுரை, அண்ணாமலை, சென்னை ஆகிய நகரங்களில் மட்டுமே 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் “பாதுகாப்புக் கைதி”யாக இருந்தார்கள் என்பது மிக முக்கியமான வரலாற்றுச் செய்தியாகும்.

அன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, இன்று தமிழ்நாட்டில் மாணவர் இயக்கம் மிக பலவீனமாகவே இருக்கிறது. இதனைக் களைய முயல வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் பல நச்சுக் கருத்துக்களுக்கு இரையாவார்கள்.

தங்கள் சொந்த நலனைவிட தேச நலனை முக்கியமாக நினைப்பவர்களை “படி! போராடு!” என்ற கொள்கையை மையமாகக் கொண்டு திரட்ட வேண்டும்.

கேள்வி: இலக்கியவாதிகளிடம் இன்று மார்க்சிஸ்ட் கட்சி என்ன எதிர்பார்க்கிறது?

பதில்: இலக்கியவாதிகள் அற்புதமான படைப்புகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென்று முதலில் எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில், அத்தோடு நின்றுவிடக்கூடாது. மக்கள் போராட்டத்தில் அவரவர்களின் சக்திக்கேற்ப பங்கேற்க வேண்டும். இதுவரை நடந்த வரலாறு நமக்கு என்ன சொல்லியிருக்கிறது? எத்தனையோ நாடுகளில் எண்ணற்ற கவிஞர்கள் ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் ஆயுதந்தாங்கி போராடி இருக்கிறார்கள். பாசிசத்தை எதிர்த்து மகத்தான குரல் கொடுத்த சார்லி சாப்ளினில் தொடங்கி, “நைட்டிங்கேள் ஆப் இந்தியா” என்று அழைக்கப்பட்ட சரோஜினி தேவி வரை போராட்டத்தில் களம் கண்ட இலக்கியவாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்தப் பட்டியலில் தமிழக இலக்கியவாதிகளின் பெயர்களும் இடம்பெற வேண்டும் ஒரு ‘தந்தக்கோபுரத்தில்’ உட்கார்ந்து கொண்டு கனவில் மிதந்தால் மட்டும் போதாது. எதார்த்த வாழ்க்கைக்காக குரல் கொடுக்க வீதியில் இறங்கும் துணிச்சலுடனும் இலக்கியவாதிகள் திகழவேண்டும்.

கேள்வி: தியாகம், தூய்மை, போராட்டம் என்பவற்றை மூலதனமாக வைத்து நடத்தப்படுகிற அரசியலை, கவர்ச்சியை மூலதனமாக வைத்து நடத்தப்படும் அரசியல் அடித்துக்கொண்டு போய்விடும்போல் தெரிகிறதே…? அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இதே கவர்ச்சியும், போலித்தனங்களும் இருந்த கேரளாவில் எப்படி நாம் ஜெயித்தோம்? திரிபுராவில், மேற்குவங்காளத்தில் எப்படி நாம் வெற்றிபெற்றோம்? அடிப்படை வர்க்கங்களை எப்படி நாம் திரட்டினோம். அதுபோல தமிழகத்திலும் தொழிலாளிகளையும், விவசாயிகளையும் அமைப்பு ரீதியாக சித்தாந்த ரீதியாகத் திரட்டினால் அது ஒரு மாபெரும் புயல் காற்றாகும். அதற்கு முன் இந்த கவர்ச்சியெல்லாம் நிற்காது.

கேள்வி: உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதர்சமாக இருந்த சோவியத் யூனியன் தகர்ந்தபொழுது, அதை தத்துவார்த்தமாகப் புரிந்து கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டாலும், தனி மனிதன் என்ற முறையில் அந்த இழப்பை எப்படி நீங்கள் உள்வாங்கிக் கொண்டீர்கள்?

பதில்: சோவியத் வீழ்ச்சியைப் பொறுத்தவரை கொஞ்சம் கூட பாதிப்பு கிடையாது. எனக்கு மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கட்சிக்கே அது கிடையாது. ஏனென்றால், அங்கு ஏற்பட்ட கோளாறு நடைமுறையில் ஏற்பட்ட தவறுதானேயொழிய சோசலிசம் என்கிற தத்துவத்தின் தவறு கிடையாது. எனவே சோவியத் வீழ்ச்சி என்ற விஷயத்தில் “தனி மனிதன்” என்ற பிரச்சனையே கிடையாது. வறுமை இல்லாமல் இருப்பதுதான் அடிப்படை மனித உரிமை. அதை மனிதன் என்றும் விட்டுக்கொடுக்க மாட்டான். அதற்காக அவன் போராடுவான். அந்தப் போராட்டம் இன்று அங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கேள்வி: மாணவப் பருவத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அரசியல் அனுபவங்கள் பற்றி…!

பதில்: நதியை அறிய வேண்டுமென்றால் உள்ளே குதித்து விட வேண்டியதுதான். வெறுமனே கரையில் நின்று கொண்டு போகிறவன் வருகின்றவனிடம் கேட்டுக் கொண்டே இருந்தால் ஆயிரம் வருடமானாலும், நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. விடுதலைப் போராட்டம் என்பதும் அப்படித்தான். எனவே அதில் தீவிரமாக ஈடுபட்டேன். அமெரிக்கன் கல்லூரியில் என்னையும், சுதந்திரப்போராட்டத்தில் இறங்கிய மற்றும் சிலரையும் நீக்குவதாக கல்லூரி முதல்வர் அறிவித்தார். உடனடியாக நாங்கள், மாணவர்களைத் திரட்டி ஸ்டிரைக் செய்வோம் என்று அறிவித்தவுடன் பயந்துபோய் உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தோம். அப்பொழுது பத்தாவது நாளில் கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். இந்தக்காலத்தில்தான் புதுமைப்பித்தனின் கதைகளை நான் விரும்பிப் படித்தேன். அந்தக்கதைகள் எனக்குள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. புதுமைப்பித்தன் கதைகளின் எளிமையும், வெளிப்பாடும் மிக உயரியது.

சிறையில் இருந்தபொழுது என்னோடு இருந்த மாணவர் ஒருவருக்கு பைத்தியமே பிடித்துவிட்டது. புதிய மாணவர் அவர், அவரை கைது செய்துகொண்டு வந்துவிட்டார்கள்.

இதுபோல பல சம்பவங்கள் சிறையில் இருந்தபொழுது நடைபெற்றன. சக மாணவர்களும் சோர்வடையாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். போருக்கும், இயக்கத்திற்கும் ஏறக்குறைய ஒரே வகையான தலைமைப் பண்புகளே தேவைப்படுகிறது. அதை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நான் மதுரை சிறையில் இருந்தபொழுது, என் அம்மா வந்து பார்த்த நாட்கள் மிகவும் கஷ்டத்தை உண்டு பண்ணியவை. ஆனால் அதையெல்லாம் தாண்டி மனிதனுக்கு தெளிவு வேண்டும். இல்லையென்றால் இடையிலேயே நின்றுவிடுவோம்.

கேள்வி: தமிழகத்தில் மார்க்சிய சிந்தனையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

பதில்: “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின். வாக்கினிலே ஒளி உண்டாம்”நான் மிக ஆழமாக நம்புகிற வரிகள் இவை. உள்ளத்தில் உண்மையும், தெளிவும் இருந்தால்தான் வாக்கினில் அது வெளிப்படும். இது மார்க்சிஸ்டுகளுக்கு மிகவும் பொருந்தும். ஏன் என்றால், உண்மையான தத்துவத்தின்பால் உள்ளத்தை பறிகொடுத்தவர்கள் மார்க்சிஸ்டுகள் அவர்களால்தான் ஈடு இணையற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். அவர்களுடைய வாக்கின் ஒளியில் நம் தேசத்தின் இருட்டு மறையும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
குடும்பத்தினருடன் சங்கரய்யா.

44. முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

சங்கரய்யாவின் முக்கியமான பணிகளுள் ஒன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்திலும், அதன் வளர்ச்சியிலும் பங்கெடுத்ததாகும்.

1964ம்ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட பின் அக்கட்சியிலிருந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உருவானது.

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதியின் முன் முயற்சியினால் ‘செம்மலர்’ கலை இலக்கிய ஏடு 1972 ஆம் ஆண்டில் உருவானது. மாத இதழாக வெளிவந்த அதைச் சுற்றி எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்று உருவாகத் தொடங்கியது. பின்னர் கே.முத்தையா ‘செம்மலர்’ ஆசிரியரானார்.

புதிய எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவதற்கும் கலை இலக்கியத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதற்குமான அமைப்புக்கூட்டம் 1974ம் ஆண்டு நவம்பர் மாதம் 23, 24 தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. மதுரை திடீர்நகரில் உள்ள மின் ஊழியர் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்க அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.பாலசுப்ரமணியம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.நல்லசிவன், என்.சங்கரய்யா, கே.முத்தையா ஆகியோர் பங்கேற்றனர். எழுத்தாளர்கள் கு.சின்னப்பபாரதி, த.ச.இராசாமணி, டி.செல்வராஜ், ஐ.மாயாண்டிபாரதி, எஸ்.ஏ.பெருமாள், மேலாண்மை பொன்னுச்சாமி, தி.வரதராஜன், காஸ்யபன், ப.ரத்தினம், அஸ்வகோஷ், நெல்லைச்செல்வன், தணிகைச் செல்வன், வேல.ராமமூர்த்தி, ச.மாதவன், நாமக்கல் சுப்பிரமணியன் உள்ளிட்டு 34 பேர் பங்கேற்றனர்.

இந்த அமைப்புக் கூட்டத்தை துவக்கி வைத்து சங்கரய்யா சிறப்புரையாற்றினார். அவரது உரையின் சுருக்கத்தை அருணன், தான் எழுதிய ‘இலக்கியவானில் வெள்ளி விழா- தமுஎச வரலாறு” என்னும் நூலில் கொடுத்துள்ளார். ‘செம்மலர்’ ஏட்டின் ஆசிரியர் கே.முத்தையா கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்திருந்தார். அருணன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“1974ம் ஆண்டு நவம்பர் திங்கள் 23, 24 தேதிகளில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில்தான் தொழிலாளி வர்க்கத்தலைவரும், சிறந்த இலக்கிய விமர்சகருமான என்.சங்கரய்யா முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றினை அமைக்கிற ஆலோசனையை முன்வைத்தார். அப்போதே இலக்கியம் குறித்து எவ்வளவு சரியான, எவ்வளவு பரந்த கண்ணோட்டத்தை முற்போக்காளர்கள் கொண்டிருந்தனர் என்பதை அவரின் இந்தப்பேச்சு உணர்த்தும், இதோ அதில் சில பகுதிகள்-

1. “கடந்த கால இலக்கியம் பற்றிய நமது கண்ணோட்டம் என்ன? இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு சிருஷ்டிக்கப்பட்ட கலை- இலக்கியத்திற்கும் நாம்தான் வாரிசு. அதை நாம் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும்

2. “உண்மையின் ஆதாரத்தில் இலக்கியம் படைக்க வேண்டும். தஞ்சை, கோவை போன்ற இடங்களில் நடக்கும் போராட்டங்களைப் புரிந்துகொள்ளாமல் எப்படி ஒரு நல்ல இலக்கியம் படைக்க முடியும்?

3. ‘வாழ்க்கையை வர்ணிக்கும்போது கொடுமையை அம்பலப்படுத்த வேண்டும். எதிரி வர்க்கங்களை அடையாளங்காட்ட வேண்டும். அதன் மூலம் அவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்த வேண்டும்

4. “தற்கால வாழ்வை படம் பிடித்துக் காட்டினால் மட்டும் போதாது. அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வழிகாட்டவும் வேண்டும்”

5. “மதப்பிரச்சாரம், சுரண்டல் என்பவை எவ்வளவு நாசூக்காகப் போகிறது. அதைப்புரிந்து இலக்கியம் படைக்க வேண்டும். யதார்த்தம் என்னும் போது துல்லியமாயிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் மார்க்சிம் கார்க்கி

6. “வார்த்தைகளை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது கலை நயத்தைக் கெடுக்கிறது. வாசகன் புரிந்து கொள்ள விட்டுவிட வேண்டும். நாம் போய் விளக்கிக் கொண்டிருக்கக்கூடாது.

7. “புதுக்கவிதையில் நமது உள்ளடக்கம் இருக்க வேண்டும். புதுக்கவிதையை மக்கள் ரசிக்கிறார்களா, இல்லையா என்பதே உரைகல்

8. தமிழ்நாட்டில் முற்போக்கு இலக்கிய ஸ்தாபனத்தை உருவாக்குவது நமது கடமையாக வந்துள்ளது. முற்போக்கு இடதுசாரி ஜனநாயகத் தன்மை கொண்ட அத்தனை எழுத்தாளர்களையும் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்படுத்த வேண்டிய கட்டம் வந்துவிட்டது.”

‘சங்கரய்யா நிகழ்த்திய உரை மீதும், கே.முத்தையா முன்வைத்த ‘செம்மலர்’ ஏட்டினைப் பற்றிய திறனாய்வு மீதும் கூட்டத்தில் பங்கேற்றோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். முடிவில் சங்கரய்யா தொகுப்புரை வழங்கினார். அதுவும் வரலாற்று முக்கியத்துவமுடையதே இதோ அது:

1. “இன்றைய இலக்கியத்தில் மனிதாபிமானத்தை ஒதுக்கிவிடும் நிலைக்கு நாம் போய்விடவில்லை. மனிதாபிமான இலக்கியம் பிற்போக்கானதுமல்ல, காலம் கடந்ததுமல்ல.

2. “யதார்த்தவாத இலக்கியமும் வேண்டும். சோசலிச யதார்த்த இலக்கியமும் வேண்டும்.

3. ‘நம்மால் ஒன்றும் செய்ய முடியாது போலிருக்கிறதே என்கிற நிராசைக் கதைகள் வேண்டாம்.

4. “வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்கிறது. அதையும் சித்தரிக்க வேண்டும். மகிழ்ச்சியோடு முடிகிற கதையும் சரியானதுதான். இல்லையெனில் விரிவான இலக்கியமாக இருக்காது.

5. “விரசம் கூடாது. ஆனால், காதல் வாழ்வோடு சம்பந்தப்பட்டது. அதுவும் இலக்கியத்தில் வர வேண்டும்.

6. “பழைய பாணியில் எழுதப்பட்டாலும் புதிய பாணியில் எழுதப்பட்டாலும் கவிதை வடிவம் வேண்டும். பொருளும் முக்கியம், வடிவமும் முக்கியம், வடிவம் இல்லையெனில் அது கவிதை இல்லை…’’

இந்த அமைப்புக்கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கும் பொருட்டு, அதற்கென கொள்கை அறிக்கை தயாரிக்க கே.முத்தையாவை தலைவராகக் கொண்டு 14 உறுப்பினர் குழுவை நியமித்தது.

அதைத் தொடர்ந்து தமுஎசவின் முதல் மாநாடு 1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12, 13 தேதிகளில் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் சங்கரய்யா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அது குறித்து அருணன் குறிப்பிடுகிறார்.

“மாநாட்டை வாழ்த்திப் பேசிய என்.சங்கரய்யா கூறியது, தீர்க்க தரிசன மொழியாய் ஒலித்தது. கடந்த காலத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் அழிந்ததுபோல் இது அழிந்துவிடக் கூடாது என்றார்கள். இது அப்படி அழியாது. ஏனென்றால் இதற்கு தெளிவான கொள்கை அடிப்படை உண்டு.”

தமுஎசவின் பல மாநாடுகளில் சங்கரய்யா பங்கேற்று வாழ்த்தியுள்ளார்.

தமுஎசவின் மூன்றாவது மாநாட்டில் சங்கரய்யா பேசுகையில், அங்கே வைக்கப்பட்டிருந்த பாரதியார், பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை ஆகியோர் படங்களை சுட்டிக்காட்டி பேசினார். அதையும் அருணன் குறிப்பிடுகிறார்.

“தேசியம், சமுதாயச் சீர்திருத்தம், சோஷலிசம் ஆகிய முப்பெரும் லட்சியங்களைத் தாங்கிய முப்பெருங்கவிஞர்கள் இவர்கள்… எவராலும் குறை சொல்ல முடியாத, எவராலும் குற்றம்சாட்ட முடியாத, எவராலும் வெல்ல முடியாத முப்பெரும் தத்துவங்களைக் கூறும் இந்த முப்பெருங்கவிஞர்கள் விட்டுச்சென்ற பணிகளைச் சிறப்பான முறையில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நான் உங்கள் நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன் என்றார் என்.சங்கரய்யா.”

ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ள படி பழைய பாணி நாடகமா? புது நாடகமா? மரபுக் கவிதையா? புதுக் கவிதையா? எனும் விவாதம் உச்சகட்டத்திலிருந்த வேளையது. அது மாநாட்டு விவாதத்திலும் எதிரொலித்தது. அதனைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு வாழ்த்துரை வழங்க வந்திருந்தார் என்.சங்கரய்யா அவர் கூறினார்:

“சோவியத் நாட்டில் அப்போது புரட்சி நடந்து முடிந்திருந்தது. தானிய வயல்கள் எதிர்ப்புரட்சியாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. ஒரு துண்டு ரொட்டி என்பது அபூர்வமாயிருந்தது. மக்கள் பசியால் வாடினார்கள். அப்போது ஜெர்மனி தூதரகத்திலிருந்து ஒரு தகவல் வந்தது. “நாங்கள் கோதுமை தருகிறோம்” அவர்கள் சொல்லியனுப்பிய வேறொரு தகவல் நன்றாயில்லை. கோதுமை பற்றி பேசவரும் புரட்சி சபை அங்கத்தினர்கள் ஈவினிங் சூட் அணிந்து வரவேண்டும் எனறு சொல்லிவிட்டிருந்தார்கள். ‘நாம் எந்த உடை அணிந்து வர வேண்டுமென்று சொல்ல இவர்கள் யார்? நாம் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளாகப் பதவி ஏற்றிருக்கிறோம். ஆடம்பர உடையணிந்து வரச் சொல்கிறார்கள் ஜெர்மானியர்கள். நமக்கு கோதுமையே தேவையில்லை என்று சொல்லிவிடலாம்’ என்றார்கள் புரட்சி சபை அங்கத்தினர்கள். அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு லெனின் கூறினார். “நம் மக்கள் பட்டினியில் கிடக்கிறார்கள். நாம் பாவாடை கட்டிக்கொண்டு வந்தால்தான் கோதுமை தருவார்கள் என்றால் பாவாடைகளைக் கட்டிக்கொண்டுபோய் கோதுமை வாங்கிவருவோம். பசி முக்கியம். மக்கள் முக்கியம்.

“இப்படிச் சொல்லி சங்கரய்யா சற்று நேரம் பேசாமல் நின்றார். பிரதிநிதிகள் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தபோது சொன்னார்: “நான் கலை – இலக்கிய வடிவங்களைப்பற்றி தான் இவ்வளவு நேரமும் பேசினேன்.”

அரங்கில் எழுந்த பெரும் ஆரவாரம் நிற்க வெகுநேரம் ஆனது. நோக்கத்தை எட்ட எவ்வித வடிவத்தையும் மேற்கொள்ளலாம் எனும் இந்தச்சுதந்திரம் படைப்பாளிக்கு இயல்பான ஒன்றே. விஷயம் என்னவென்றால் வடிவம் அந்த இலக்கை எட்ட உதவியிருக்கிறதா என்பதுதான். அதற்குள் இது உள்ளுறையாக அமைந்தே இருக்கிறது. அதனை சோதித்து அறிந்துகொள்ள வேண்டியது படைப்பாளியின் பொறுப்பு. அவ்வளவே. இதில் எவ்விதக் கட்டுப்பாட்டையும் தமுஎச விதிக்கவில்லை.

சங்கரய்யா ‘செம்மலர்’ உள்ளிட்டு வார, மாத ஏடுகள் அனைத்தையும் தவறாது படிப்பார். ‘செம்மலர்’ ஏட்டில் வரும் கதைகள், கவிதைகள் குறித்து எழுத்தாளர்களுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார். எழுத்தாளர்களை அவர்கள் படைப்புக்காக உற்சாகப்படுத்தியே பேசுவார். குறிப்பாக மனிதநேயக் கருத்துக்களை வலியுறுத்தும் கதைகளையும், படைப்புகளையும் மிகவும் பாராட்டுவார்.

அவரது தொடர் அரசியல் பணியின் காரணமாக அவர் இலக்கியப்பணிக்கு அதிக நேரம் அளிக்க முடியவில்லை என்ற போதிலும்கூட முக்கியமான இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அது சம்பந்தமான குறிப்புகளை முன்கூட்டியே தயாரித்துக் கொள்வார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிய இயக்கம் சார்ந்த பேராசிரியர்கள் சிலர் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை குறித்த ஒரு கருத்தரங்கை நடத்தினர். அதில் பங்கேற்று உரையாற்றும்படி சங்கரய்யாவைக் கேட்டுக் கொண்டனர். வையாபுரிப்பிள்ளையின் நூல்களைத் தரும்படி அவர்களை சங்கரய்யா கேட்டுக்கொண்டார். அவர்களும் கொடுத்தனர். சங்கரய்யா அனைத்தையும் கவனத்துடன் படித்தார்.

கருத்தரங்கு நடைபெற்ற நாளில் சங்கரய்யா அங்கே வந்தபொழுது அதை ஏற்பாடு செய்த பேராசிரியர்களுக்கு அவர் எப்படி பேசப்போகிறாரோ என்ற ஐயப்பாடு இருந்தது. ஆனால் வையாபுரிப்பிள்ளையின் இலக்கியப் பங்களிப்பை சங்கரய்யா மார்க்சிய நோக்கு நிலையிலிருந்து ஆய்வு செய்தார். “சங்கரய்யா எப்படி பேசப்போகிறாரோ என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று பேசிய அனைவரிலும் சங்கரய்யாவின் பேச்சுதான் மிகச்சிறப்பானதாக இருந்தது” என்று ஒரு பேராசிரியர் தன்னிடம் கூறியதாக” தீக்கதிர் நாளேட்டின் பொறுப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் தெரிவிக்கிறார்.

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தான் எழுதிய ‘தாய்’ கவிதை நூலுக்கு சங்கரய்யா முன்னுரை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது சங்கரய்யா மகிழ்ச்சியுடன் அதை எழுதிக்கொடுத்தார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
துணைவியார் நவமணியுடன் சங்கரய்யா.

45. குடும்ப வாழ்க்கை

சங்கரய்யா 1953ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரானபின் 1954 ஆம் ஆண்டில் அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. மாதத்தில் 10 முதல் 15 நாட்கள் அவர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு அவர் துணைவியார் நவமணி மீதே விழுந்தது. எனவே அவர் தங்கள் இரண்டு புதல்வர்களையும், ஒரு புதல்வியையும் கவனித்து அவர்களைப் படிக்க வைக்க வேண்டியிருந்தது.

அவர்களின் மூத்த புதல்வர் சந்திரசேகர் பாலிடெக்னிக்கில் எலக்ட்ரீஷியன் பட்டயம் பெற்று ஒரு தொழில் கூடத்தில் தொழிலாளியானார். இரண்டாவது புதல்வர் நரசிம்மன், பாலிடெக்னிக்கில் படித்து சிவில் பொறியாளர் பட்டயம் பெற்று பொறியாளராக பணியாற்றி வருகிறார். சங்கரய்யா-நவமணியின் ஒரே புதல்வி சித்ரா-ராம் மனோகர் திருமணம் 1972 ஆம் ஆண்டிலும் சந்திரசேகர்- உஷா திருமணம் 1975 ஆம் ஆண்டிலும் நரசிம்மன் – கல்யாணி திருமணம் 1989 ஆம் ஆண்டிலும் நடைபெற்றது. சங்கரய்யா தம்பதியருக்கு நான்கு பேரன்களும், மூன்று பேத்திளும் உள்ளனர். அவர்களில் பலருக்கு திருமணமாகிவிட்டது.

சங்கரய்யாவின் தாயார் ராமானுஜம் தனது வாழ்வின் கடைசி 25 ஆண்டுகளை தன் மகன் குடும்பத்தினருடன் கழித்தார். சங்கரய்யாவும், நவமணியும் அவரை எவ்விதக் குறையுமின்றி கவனித்துக் கெண்டனர்.

சங்கரய்யா தன் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டது போலவே தன் சகோதர, சகோதரி குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார். அவர்கள் குடும்பங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி தன்னால் இயன்றளவு உதவிகள் செய்தார். இப்பணிகளைச் செய்வதில் அவர் துணைவியார் நவமணியும் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

1962-63 மற்றும் 1964-66 காலகட்டங்களில் சங்கரய்யா நெடிய சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தபொழுது, நவமணி மிகுந்த சிரமத்துடன் தங்கள் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியிருந்தது. நவமணியின் சகோதர, சகோதரிகளும் அவர் குடும்பத்திற்கு மிகவும் உதவினர்.

46. “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்…”

(பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போது நான்கு ஆண்டுகள், சுதந்திர இந்தியாவில் நான்கு ஆண்டுகள் என எட்டு ஆண்டுகள் சிறைவாசம். மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. தாய்நாட்டுக்காகவும், பொதுவுடமைச் சித்தாந்த வழி சென்றதற்காகவும் இதுபோன்ற எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்தவர் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.சங்கரய்யா (74). இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த நெடிய வரலாற்றில் அவருக்கு ஏற்பட்ட துன்பங்களைக்கூட வாழ்வின் ஒரு பகுதியாகவே காண்கிறார். போராட்ட கால அனுபவங்கள் தொடங்கி இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் சிக்கல்கள் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து தினமணிக்கு அவர் அளித்த நேர் காணல்.

பேட்டி கண்டவர் ஆர்.சோமசுந்தரம். (தினமணி)

* சுதந்திரப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்றதற்கு உங்கள் குடும்பத்தினர் எந்த அளவுக்கு ஆதரவு அளித்தனர்?

முழு ஆதரவு கொடுத்தனர். என் தந்தை மதுரை நகராட்சியில் பொறியாளராகப் பணியாற்றினார். பெரிதும் ஊக்கம் கொடுத்தார். என்னைச் சிறையில் வந்து பார்த்துவிட்டுப்போவார். குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு தந்தனர்.

* இன்றைய இளைஞர்கள் பற்றி உங்கள் கருத்து?

அன்று ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய வேளையில் விடுதலை எண்ணம் கொழுந்துவிட்டு எரிந்ததைப்போன்று, இன்றைய இளைஞர்கள் மத்தியில் சாதி, மதவெறிகளுக்கு எதிரான எண்ணம் கொழுந்துவிட்டு எரியவேண்டும். இன்று மக்கள் ஒற்றுமை தேவைப்படுகிறது. நாட்டின் சாதாரண மக்களுக்குப் புதிய வாழ்க்கை அளித்தாக வேண்டும். குறுகிய, பிளவுவாத எண்ணங்கள் இளைஞர்களிடம் இருக்கவே கூடாது.

அன்று சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் ஈடுபட்டனர். சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அளிக்கப்படும் பென்சனை வாங்குவதில்லை. என்று எங்கள் கட்சி முடிவெடுத்தது. சுதந்திரத்திற்காக ஜெயிலுக்குப் போனதே பரிசுதான்.

* உங்கள் தலைமைப்பண்பை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

தலைமைப்பண்பு என்பது அதுவாக உருப்பெறுவது. பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, இயக்கம் நடத்தி, சிறை சென்றுபெறும் அனுபவங்கள் மூலம்தான் தலைமைப்பண்பை பெற முடியும்.

* வாழ்வில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்.

கசப்பான அனுபவம் என்று ஒன்றில்லை. சிறை அனுபவங்களை கசப்பானது என்று சொல்ல முடியாது. அது வாழ்க்கையின் ஒரு பகுதி.

*              கொள்கை மாறுபாடுகள் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும்போது உங்களுடைய உணர்வு என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை நாட்டின் ஒட்டுமொத்தமான நலனை எண்ணிப்பார்த்து கொள்கைகளைத் தீர்மானிக்கிறது. நாட்டில் மூன்று மாநிலங்களில் மட்டுமே திட்டத்தின் அடிப்படையிலான கூட்டணி உள்ளது. மற்ற இடங்களில் தொகுதி உடன்பாடு மட்டுமே. தேர்தல் முடிந்தவுடன் ஆட்சியை விமர்சனம் செய்யும் உரிமையை விட்டுக்கொடுத்துவிட மாட்டோம்.

*              பொதுவாழ்வில் முழுநேரப் பணியாளராக இருக்கும்போது குடும்பப்பணியை எப்படி ஆற்றுகிறீர்கள்?

குடும்பத்தினர் அனைவருமே கட்சியில் இருக்கின்றோம். முதலில் பெண்களைக் கட்சியின் கொள்கைக்குள் கொண்டுவர வேண்டும். முழுநேர ஊழியருக்குக் கட்சி அளிக்கும் சம்பளத்தை ஏற்று, தியாக மனப்பான்மையுடன் உழைக்க இதுதான் சரியான வழி.

*              நீங்கள் சாதித்ததாக நினைப்பது…

நாட்டுக்குச் செய்த ஊழியம், அதுதான் மனதிருப்தி அளிப்பது. இப்போதும் நாட்டுக்கு ஊழியம் செய்ய இளைஞர்கள் முன்வரவேண்டும். சிரமங்களை ஏற்க முன்வரவேண்டும். எதையும் குறுக்கு வழியில் அடைந்துவிட முடியாது. எந்த வகையிலும் பணம் சம்பாதிக்கலாம். பணக்காரனாகிவிட்டால் எல்லா தவறுகளும் மறக்கப்பட்டுவிடும் என்கிற மனப்பான்மை இன்றைய இளைஞர்களிடம் உள்ளது. இதை மாற்ற வேண்டும்.

*              கம்யூனிஸ்டுகள் கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவராக இருக்க வேண்டுமா?

கட்சித் தலைவர்கள் நாத்திகக்கொள்கையைப் பின்பற்ற வேண்டும். ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள அவகாசம் தரப்படுகிறது.

*              இலக்கியத்தில் முற்போக்கு, பிற்போக்கு எனப்பிரிப்பது சரியா?

சரிதான். அழகியலை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன். இலக்கியத்தில் சரியான பொருளும், சரியான அழகியலும் இருக்க வேண்டும். ஊழல், சாதி, மதக்கலவரம் செய்வோரை எதிர்ப்பதற்கு இலக்கியம் தேவை. நூறு பூக்கள் மலரட்டும். எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. ஆனால், எதுவும் விஷமாக இருக்கக்கூடாது.

*  கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வாய்ப்பு உண்டா? அதன் வளர்ச்சி துரிதப்படுமா?

இரண்டும் ஒன்றாதல் என்பது அடிப்படைத் திட்டத்தில் ஒற்றுமை இருந்தால் மட்டும்தான் முடியும். மற்ற சமயங்களில், ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயங்களில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவோம். கூட்டு நடவடிக்கை துரிதப்பட வேண்டும் என்றுதான் செயல்படுகிறோம்.

*              பேச்சுவன்மையை எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

பேச்சுவன்மை தானே வருவது, உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளிஉண்டாகும். பள்ளி, கல்லூரிகளில் நிறைய மேடைகளில் பேசியுள்ளேன். அமெரிக்கன் கல்லூரியில் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தில் செயலாளராக இருந்துள்ளேன். அரசியல், தமிழ் இலக்கியங்களைத் தொடர்ந்து படித்துவந்தேன்.

*              சாட்டிலைட் டிவி தாக்கத்தினால் கனமான சிந்தனைகளை இளைஞர்கள் தவிர்த்துவருவது பற்றி…

மேலைநாடுகளின் கேடுகள் இங்கே வராமல் தடுக்க வேண்டியது நம் கடமை. தனியார் டி.வி. நிறுவனங்கள் நாட்டுப்பற்றையும், எது நல்லது எது தீமையானது என்பதையும் கற்பிக்க வேண்டும். சாதி, மதக்கொடுமைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்த வேண்டும். மக்களை நேசிக்கும் உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இப்பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கும் இருக்கிறது.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
சங்கரய்யாவின் 90வது பிறந்த நாள் இடமிருந்து வலம் க.பீம்ராவ், ஜி.ராமகிருஷ்ணன், என். வரதராஜன், சங்கரய்யா, நவமணி, அ.சவுந்திரராசன், பல்லாவரம் ஜீவா மற்றும் மயிலை கபாலி.

47. மத்தியக்குழு உறுப்பினர்

1986ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் அவர் கட்சியின் மத்தியக்குழுவிற்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அது முதல் தொடர்ந்து மத்தியக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

2004ம் ஆண்டில் புதுதில்லியில் நடைபெற்ற கட்சியின் 18வது மாநாட்டில் அவர் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19வது மாநாட்டில் அவர் மீண்டும் அதே பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்.

1943ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரை நடைபெற்ற 19 மாநாடுகளில் அவர் 18 மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். முதல் மாநாடு 1943ஆம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற பொழுது அவர் சிறையில் இருந்தார். எனவே கலந்துகொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு அகில இந்திய மாநாடுகளிலும் அவர் முக்கியப் பங்கேற்றுள்ளா. 1953-54ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மூன்றாவது மாநாடு சமயத்தில் அவர் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக இருந்து மாநாட்டு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தார்.

1972ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கட்சியின் மாநில செயற்குழு சார்பில் மேற்பார்வையிட்டு உதவினார்.

1996 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டு வரவேற்புக் குழுவின் உதவித்தலைவராக பணியாற்றினார். மாநாட்டின் துவக்கத்தில் மாநாட்டு வரவேற்புக்குழு சார்பில் அனைவரையும் வரவேற்றுப் பேசியபோடு மாநாட்டிற்கு தலைமை தாங்கி நடத்தும் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டிலும் அவர் மாநாட்டு தலைமைக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார். சங்கரய்யா 2008 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மாநாட்டில் மாநாட்டின் துவக்கமாக செங்கொடி ஏற்றிவைத்தார். இந்த மாநாட்டிலும் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நான்கு மாநாடுகளிலும் நடைபெற்ற மாபெரும் பேரணிகளிலும் அவர் பங்கேற்று உரையாற்றி உள்ளார். கட்சி மாநாடுகள் நீங்கலாக, வேறு பல மாநாடுகளும் சங்கரய்யா பங்கேற்று உரையாற்றியுள்ளார். தி.மு.க.விலிருந்தது வெளியேறி வைகோ திருச்சியில் நடத்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துடன் சங்கரய்யாவும் கலந்து கொண்டு பேசினார்.

2003ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.ஐ.டி.யூ.வின் 11வது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் வரவேற்புக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யா மாநாட்டின் துவக்கத்தில்  வரவேற்புரையாற்றியதோடு மாநாட்டின் நிறைவு நாளன்று நடைபெற்ற மாபெரும் பேரணியிலும் உரையாற்றினார்.

48. வள்ளுவர் கூறியதை நிறைவேற்ற ஒன்றுபட்டுப் போராடுவோம்

வள்ளுவர் கூறியதுபோல் வறுமையை, கல்லாமையை மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளை ஒழித்திட தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என்று சங்கரய்யா வேண்டுகோள் விடுத்தார்.

2000ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் சங்கரய்யா பேசினார். விழாவில் அவர் பேசியதாவது:-

“திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் தலைசிறந்த புலவனுக்குச் சிலை எழுப்புவதில் பல இடையூறுகள் ஏற்பட்டு, அந்தச் சிலை இப்போது திறந்து வைக்கப்பட்டிருப்பதை இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.

நமது திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் அன்றைய சமுதாயத்தையே பிரதிபலிக்கிறார். அவர் இன்றைய நிலைபற்றி கனவு கண்டிருக்க முடியாது. அதே நேரத்தில் மனிதகுலம் முழுவதற்கும் உள்ள யதார்த்த நிலைமை பற்றி எழுதியிருக்கிறார். அது இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கிறது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் வள்ளுவர்.

அவரது அந்தக் கருத்து இன்று அமலில் இருக்கிறதா? நடைமுறையிலிருக்கிறதா? சாதிக் கலவரங்களினால் சுமார் 200 பேர் இறந்திருக்கிறார்கள். சாதிக்கலவரங்களுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று தீண்டாமை. அந்தத் தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் மாநாடு நடத்தினோம். அதில் முதல்வர் கருணாநிதி, தமாகா தலைவர் மூப்பனார், சிபிஐ மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, ஜனதா தள தலைவர் வடிவேலு, மனித உரிமை கட்சி தலைவர் இளைய பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதுபோல, நெய்வேலியிலும் மாநாடு நடத்தினோம்.

இங்கே பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி கூட குறிப்பிட்டார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உறுதிகூற விரும்புகிறேன். தீண்டாமைக்கொடுமை எங்கு இருந்தாலும் அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.

வள்ளுவர் கூறியது போல கல்லாமை இருளைப்போக்கிட வேண்டும். இல்லாமையைப் போக்கிட வேண்டும். அறியாமையை அறவே-ஒழித்திட வேண்டும். மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் போக்கிட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இப்போது என்ன பார்க்கிறோம். அதை மாற்ற வேண்டாமா?

அறம், பொருள், இன்பம், வீடு என்று தமிழ் இலக்கியத்தில் மற்றவர்கள் எழுதுவார்கள். வீடு என்றால் மோட்சம். ஆனால் வள்ளுவர் அறம், பொருள், இன்பம் மூன்றை மட்டும்தான் எழுதினார். நான் கூறுகிறேன். திருக்குறளில் மட்டும்தான் வீடு என்ற பகுதியே கிடையாது. வள்ளுவர், தான் பார்த்ததைத்தான் எழுதினார். உலகியல் தத்துவ அடிப்படையில் எழுதினார்.

‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்றார். எப்பொருள் எத்தன்மையத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றார்.

மக்கள் யாருடைய பேச்சையும் குருட்டுத்தனமாக நம்பிச் செயல்பட வேண்டாம். ஆராய்ந்துதான் செயல்படவேண்டும் என்றார் வள்ளுவர்.

வள்ளுவர் பெண்களின் பெருமைபற்றி எழுதியிருக்கிறார். ஆனால் இன்றோ பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள். பெண்கள் வன்முறைக்குள்ளா கிறார்கள். அண்மையில் நாகர்கோவிலில் கல்லூரி பெண் லெட்சுமிப்பிரியா என்பவரை சிலர் கொடுமைப்படுத்தினார்கள். அவர்களுக்குப் பயந்துகொண்டு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார் அந்தப்பெண். இறந்த பின்னர் கூட அவரது பெற்றோர்கள் போலீசுக்குச் செல்லவில்லை. மற்றவர்கள்தான் தகவல் கொடுத்தனர். அன்று நான் நாகர்கோவிலில் இருந்தேன். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும், காவல்துறைக்கும் வேண்டுகோள் விடுத்தேன். இன்றும் கூறுகிறேன். அந்தக் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிட வேண்டுமென முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்புவரை தமிழ்பயிற்றுமொழியாக இருக்க வேண்டுமென தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை சிலர் எதிர்க்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் பயிற்றுமொழி ஆணையை ஆதரிக்கிறது.

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமல்ல. அனைத்து மட்டங்களிலும் தமிழ் மொழி இருக்க வேண்டும் என்கிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக்க வேண்டும். தாய்மொழியில் கல்வி கொடுக்க வேண்டும். கற்பிக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலை.

சிறுபான்மை மக்களுக்கு அவர்களது தாய்மொழியில் கல்வி கற்பிக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்றுக்கொடுக்க வேண்டும். உயர்கல்விக்கு அனுமதிக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் என்ற அமைப்பு தமிழில் பொறியியல் பாட வகுப்பு துவங்க அனுமதி மறுத்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். அது உண்மையானால் மிகக்கொடுமையானது. அதை எதிர்த்து, இந்த மொழிக் கொடுமையை எதிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கட்சிகள், இயக்கங்கள் போராட வேண்டும்.

மருத்துவம், பொறியியல் உள்பட அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் அவரவர் தாய்மொழியிலே கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.

சட்டத்துறையிலும், நீதிமன்றங்களிலும் தமிழே ஆட்சி மொழியாக விளங்கிட வேண்டும். அதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கும்.

திருவள்ளுவருக்கு 133 அடி சிலை திறந்திருக்கும். இந்த மகிழ்ச்சியான நாளில் வறுமையை ஒழித்திட கல்லாமையை ஒழித்திட தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டுப் போராடுவோம்.

தமிழகத்தில் பகுத்தறிவு வளரட்டும். விஞ்ஞானம் செழிக்கட்டும். நன்றி, வணக்கம்

49. தனிப் பண்புகள்

சங்கரய்யா தனது 70 ஆண்டு கால அரசியல் வாழ்வில் ஏராளமான சமூக சீர்திருத்தத் திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். திருமணங்கள் எந்த முறையில் நடத்தப்பட்டாலும் மணமக்களுக்கு வாழ்த்துரை கூறும்பொழுது தனது கருத்தை அவர் தெளிவாகக் கூறுவார். மணமக்கள் தங்கள் தாய், தந்தையர் உற்றம், சுற்றம் ஆகியோருக்கு சேவை செய்ய வேண்டும். அதேநேரத்தில் தாங்கள் வாழும் சமுதாயம், தங்கள் தாய்நாடு ஆகியவற்றுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதை மிகவும்  வலியுறுத்திக் கூறுவார். மனித சமுதாயக் கடமை என்பதை மணமக்கள் மறக்கக் கூடாதென்பதையும் சுட்டிக்காட்டுவார். மணமக்கள் வயதான தங்கள் பெற்றோரைப் பாதுகாக்க வேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்திக் கூறுவார்.

அவர் பங்கேற்கும் திருமணத்தில் மணமக்களையும் அவர்களது பெற்றோரையும் மேடைக்கு அழைத்து அனைவருடனும் நிழற்படம் எடுத்துக்கொள்வார்.சங்கரய்யா கலப்பு திருமணங்களைப் பாராட்டுவார். உற்சாகப்படுத்துவார். தனது குடும்பத்தில் மட்டுமல்ல, தனது சகோதர, சகோதரிகள் குடும்பங்களிலும் பல கலப்புத் திருமணங்களை அவர் நடத்தி வைத்துள்ளார்.  சங்கரய்யா சில, குடும்பங்களில் மூன்று தலைமுறையினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என்பதும் சிறப்பான செய்தியாகும்.

சங்கரய்யாவின் தவறாத பணிகளுள் ஒன்று, தோழர்களைச் சந்திக்கும் போது அவர்களுடைய குடும்பத்தினர் நலம் குறித்து விசாரிப்பதாகும். ஒருவரைச் சந்திக்கும்பொழுது அவருடைய பெற்றோர், பிள்ளைகள் படிப்பு, உடல் நலம் குறித்து விரிவாகக் கேட்பார். தான் சென்ற முறை அந்தத் தோழரைச் சந்தித்தபொழுது கேட்டறிந்த விபரங்களை நினைவில் வைத்து மேலும் விசாரிப்பார்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
2002 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17ஆவது மாநில மாநாட்டில் சங்கரய்யா உரையாற்றுகிறார்.

50. நூறு பூக்களும் நூறு கனிகளும்

(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1997 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சி வாரமாக சிறப்பாகக் கொண்டாடியது. அதையொட்டி கட்சியின் மாநிலச் செயலாளர் என்.சங்கரய்யா “தீக்கதிர்” நாளிதழுக்கு அளித்தசிறப்புப் பேட்டி பின்வருமாறு:-

– நேர்காணல் அ.குமரேசன்

விடுதலைப் போராட்ட காலத்திலேயே மொழிவாரி மாநிலங்கள் என்பதை வலியுறுத்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தாம். ஏன், அன்றைய இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்திலேயே மொழிவழி மாநிலங்கள் மொழிவழி மாநில அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை காங்கிரசுக்குள் இருந்த கம்யூனிஸ்டுகள் வலியுறுத்தி வந்தார்கள். அதனால்தான் மதராஸ் மாகாணம் என்றுதான்இருந்தது என்ற போதிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திரா காங்கிரஸ் கமிட்டி, கேரளா காங்கிரஸ் கமிட்டி என்று அழைக்கப்பட்டது. பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கமும் மதராஸ் மாகாண கமிட்டி என்று வைத்துக்கொள்ளாமல் தமிழ் மாநிலக்குழு, கேரளக்குழு, ஆந்திரக்குழு என்றுதான் பிரித்துக்கொண்டு செயல்பட்டது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அந்தந்த மாநில மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றால், இப்படி மொழி வாரியான மாநிலங்களாக அவர்களைத் திரட்டினால்தான் முடியும் என்ற உணர்வோடு அவ்வாறு செய்யப்பட்டது.

தமிழ் மக்களிடையே மார்க்சிசம், சோசலிசம் முதலிய சிந்தனைகளைத் தமிழ்மொழியில் எடுத்துச் செல்வதற்காகத் தான் அப்போது ‘ஜனசக்தி’ கொண்டுவரப்பட்டது. தெளிவான முறையில் தமிழக மக்களிடையே மார்க்சிய சிந்தனைகளை, அரசியல் பொருளாதார கொள்கைகளைப் பரப்பிச் சென்றதில் அன்றைக்கு ஜனசக்தியின் பங்களிப்பு முக்கியமானது.

அதேபோல் கம்யூனிஸ்டுகள் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டங்களில் எல்லாம் தொழிலாளர்களிடையே சோசலிசம் கம்யூனிசம் முதலிய அறிவியல் ரீதியான புதிய சிந்தனைகள் பேசப்பட்டன. ஏற்கெனவே இருந்து கொண்டிருப்பதையே சொல்லிக்கொண்டு இருப்பதல்ல. தொழிலாளி வர்க்கம், சுரண்டல் வர்க்கம், மார்க்சியம், லெனினியம்… என புதுப்புது சமூக அறிவியல் கருத்துக்களைத் தமிழில் அறிமுகப்படுத்தியதே கம்யூனிஸ்டுகளின் அத்தகைய பொதுக்கூட்டங்கள்தாம்.

ஆக மொழிவழியில் குழுக்கள் அமைக்கப்பட்டதும், அவற்றின் பிரச்சாரமும்தான் சாதாரண மக்கள் அரசியல் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ள வழி வகுத்தது. அதையொட்டித் தான் கலை-பண்பாட்டு வளர்ச்சிகள், மொழி வளர்ச்சி… அதையொட்டித்தான் தமிழ்ப்பத்திரிகைகளின் வளர்ச்சி…மொழி அடிப்படையில் மாநிலங்களில், தாய்மொழியில் கல்வி, அந்தந்த மாநிலத்தில் தாய்மொழியே பயிற்றுமொழி, ஆட்சிமொழி, நீதிமன்ற மொழி… என்பதுதான் கம்யூனிஸ்டுகள் அடிப்படையாக வலியுறுத்தியது. தாய்மொழி மூலமாகவே மக்கள் வளர்ச்சியடைந்த கல்வியைப் பெற முடியும்- இன்னொரு மொழியின் மூலமாக அல்ல என்ற புரிதலோடு வலியுறுத்தப்பட்ட கொள்கைகள் இவை. குறிப்பாக கிராமப்புற மக்கள் தாய்மொழி மூலமாகவே எளிதில், இயல்பாக கல்வியறிவைப்பெற முடியும். இந்த அடிப்படையில்தான் தமிழகத்திலும் இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை இருந்து வருகிறது.

அந்தந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி தருவதற்கும் திட்டமிட்ட ஏற்பாடுகள் தேவை என்பதையும் கம்யூனிஸ்ட்டுகள் வலியுறுத்துகிறார்கள்.

ஆங்கிலத்தால் தான் தமிழ்மொழி வளர்ச்சி  தடைப்பட்டிருக்கிறது. அதற்கு முன் இங்கே கணிதம், கட்டிடக்கலை,  மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ்மொழி மூலமாகவே கற்பிக்கப்பட்டது. புரிந்துகொள்ளப்பட்டது. சாதிக்கப்பட்டது எடுத்துக்காட்டாகத் தஞ்சை, பெரிய கோயில், மதுரைக்கோயில், கல்லணை முதலிய உலக சாதனைகள் எல்லாம் ஆங்கில அறிவு இல்லாத தமிழக உழைப்பாளிகளின் படைப்புகள், தமிழ் மூலமாகவே நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அவை. மற்றமொழிகளைக் கற்கிற ஆர்வத்துடன் ஒருவர் ஆங்கிலம் உட்பட எந்த மொழியையும் கற்பது என்பது வேறு. ஆனால்  பாடங்களைக் கற்பது தமிழில்தான், தாய்மொழியில்தான் இருக்க வேண்டும். திறனும் நூறு சதவீதம் முழு வளர்ச்சி பெற்று மேலோங்க இது அவசியம். எனவேதான் தமிழக அரசு தனது கல்வித்துறை மூலமாக அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்கள் மூலமாக, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சிறப்பான மழலையர் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்மொழி மூலமாக அறிவியல், வரலாறு, கணிதம் போன்ற அனைத்துத் துறைக்கல்வியையும் உயர் தரத்தில் வழங்க வகை செய்யவேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயமாகப் பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலத்தின் மூலமே அறிவு வளர்ச்சி சாத்தியம் என்கிற பிரமை நீங்கும் கிராமங்களில் தாழ்த்தப் பட்டோர்,  பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பெரும் வெற்றியும் முன்னேற்றமும் காண்பார்கள். இதில் அரசுக்கும், ஆசிரியர் சமூகத்தினருக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது.

பாடப்புத்தகங்களை இதற்கேற்ற முறையில் தயாரிக்க முறையான குழுக்கள் அமைத்துச் செயல்பட்டால் நிச்சயமாகப் பெரும் வளர்ச்சி ஏற்படும். அதையொட்டி உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விக்கு விரிவான, நம்பகமான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

மருத்துவக் கல்வியை எடுத்துக் கொண்டால் சித்த மருத்துவத்தில் ஏற்கெனவே உடற்கூறு இயல், நோய்களின் பெயர்கள் தொடர்பாக ஏராளமாகத் தமிழ்ச்சொற்கள் உள்ளன. மாணவர்கள் அவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடியும்- அந்தச் சொற்கள் பொதுமைப்படுத்தப்படலாம். அதே நேரத்தில் புதிய அறிவியல் சொற்கள் வருகிற போது அவை எந்த மொழியை மூலமாகக் கொண்டு வருகிறதோ அதையே தயக்கமின்றி ஏற்கலாம். ஆங்கிலத்தின் அகன்ற வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம்.

ஆட்சிமொழி என வருகிறபோது மாநிலத்தில் எல்லாத்துறை களிலும் எல்லா மட்டங்களிலும் அரசின் சுற்றறிக்கைகள், ஆணைகள், அறிவிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். நீதிமன்ற மொழி என வருகிறபோது கீழ்நிலை நீதிமன்றத்திலிருந்து எல்லா மட்டங்களிலும் தமிழில்தான் விசாரணை, தமிழில்தான் வாதப் பிரதிவாதங்கள், தமிழில் தான் தீர்ப்பு என அமைய வேண்டும்.

அடுத்து அத்தனை மொழிகளுக்கும் சமத்துவம் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்திலிருந்து இது தொடங்க வேண்டும். உறுப்பினர்கள் தமது தாய்மொழியிலேயே பேசவும் பதில் பெறவும் நாடாளுமன்றத்தில் விரிவான, ஒருங்கிணைந்த மொழி பெயர்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இது மிக எளிதாகச் செய்யக் கூடியதாகும். தமிழ் மட்டுமே தெரிந்த உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தயக்கமின்றி தமிழில் பேசமுடியும் என்ற நிலை உருவாக வேண்டும்.

அதேபோல் மத்திய அரசின் ஆணைகள், அறிவிப்புகள் முதலியவை அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வேண்டும்.  தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கான கடிதங்கள், தகவல் தொடர்புகள் தமிழிலேயே நடக்க வேண்டும். மத்திய அரசின் பதில்கள் தமிழகத்திற்குத் தமிழிலேயே வரவேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசுத்துறைகளின் அலுவலகங்களில் பணிகள் தமிழில் நடைபெற வேண்டும் – மையத்துடனான தகவல் போக்குவரத்துக்கள் தமிழிலேயே இருக்க வேண்டும். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைந்திருக்க வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்டுகளின் கொள்கை. அரசாங்கத்தை மக்களிடம் கொண்டு செல்லுதல் என்பதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்தாலே போதும் அதற்கு மத்திய ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்.

அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு, மைய நிதியில் இருந்தே, சரிசமமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதில் பாகுபாடு கிடையாது. மொழிவளர்ச்சி மட்டுமல்ல, பண்பாட்டுத்துறை வளர்ச்சியிலும் இத்தகைய அணுகுமுறையும் அக்கறையும் தேவை.

நாடகம், கூத்து, கிராமிய இசை, என நாட்டுப்புறக் கலைகளின் பாதுகாப்பு, வளர்ச்சி இவற்றில் கவனம் செலுத்துவது என்பது மேற்கத்திய சீரழிவுக் கலாச்சாரத் தாக்குதலுக்கும் மீடியா ஆதிக்கத்துக்கும் எதிரான சரியான மாற்றாக அமையும். நாட்டுப்புறக் கலைகளுக்காக ஒரு தனி பல்கலைக்கழகமே ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். தொடர்ச்சியான  விரிவான வாய்ப்புகள், விருது பரிசு முதலிய ஊக்குவிப்புகள் அளித்து எந்தவொரு கிராமியக் கலையும் கரைந்து அழிந்து போய் விடாமல் வளர்த்தெடுக்கப்படவேண்டும். அதே நேரத்தில், இவை காலத்துக்கு ஏற்ற புதிய செய்திகளோடு, புதிய உள்ளடக்கங்க ளோடும் பரிணமிக்க வேண்டும். நாடு முழுவதும் பாரம்பரிய செல்வமாகப் பரவியுள்ள நாட்டுப்புறக் கலைகளிடையே, இத்தகைய வளர்ச்சி, உறவு, பரிமாற்றம், ஒன்றிலிருந்து இன்னொன்று கற்றுக்கொள்ளுதல் ஆகியவை வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட பிரிக்க முடியாத அம்சங்கள்.

தமிழின் மீது பற்று என்றால், அது பிற மொழிகள் மீது வெறுப்பு என்றாகிவிடக்கூடாது. பற்றும், வெறியும் ஒன்றல்ல, பற்று வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வெறி வளர்ச்சிக்குக் குழி பறிக்கும். இன உரிமை, மொழி உரிமைக்காகப் போராடுவது என்பது மற்ற இனங்கள், மொழிகள் மீது பகைமையைத் தூண்டுவதாக மாறிவிடக்கூடாது.

தேசப்பற்று, ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றுக்கு எதிரானதாக மொழிப்பற்று முன் நிறுத்தப்படுமானால் அது பிற்போக்குத் தனமானதாகும், செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று பாரதி கூறியது போல், அன்று தேச விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்க உதவியது மொழி வாரியாக மக்கள் அணி திரட்டப்பட்டதுதான். இன்று, தேச ஒற்றுமையை, சாதி-மத வெறியற்ற நல்லிணக்கத்தை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும் அதே மொழிவாரி உணர்வுகள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். நாட்டு விடுதலைப் போராட்டமே அகில இந்தியப் போராட்டம்தான் அதைப் பாதுகாப்பது, முன்னேறிச்செல்வது என்பது அகில இந்தியப் போராட்டமாகவே நடைபெற முடியும்.

தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி இவற்றுக்காகத் தமிழக அரசு ஒரு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத் தக்கது. அந்த அமைச்சகம் இத்தகைய பார்வையோடும் உள்ளடக்கத் தோடும் செயல்பட வேண்டும். மொழி வளர்ச்சிக்கென சில குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பது நல்ல அம்சம். அத்தகைய குழுக்களில் அரசியல் பாகுபாடின்றி தமுஎச போன்ற முற்போக்குக் கலை-இலக்கிய அமைப்புகளுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ஜனநாயக அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் தரவேண்டும். அது தான் தேக்கமற்ற வளர்ச்சிக்கு வழியமைக்கும்.

மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்ப்புத்தாண்டு நாள் முதல் ஒருவார காலத்துக்கு (ஏப்.14-20) தமிழ் வளர்ச்சி வாரமாகக் கடைப்பிடிக்கிறது. கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சிகள் மூலமாக இதுபோன்ற சிந்தனைகள் மக்களிடையே எடுத்துச் செல்லப்படுவதற்காகவே இந்த இயக்கம், முற்போக்கான சிந்தனை கொண்ட தமிழறிஞர்களை அழைத்து விரிந்த மேடையாக நடத்திடும்படி கட்சி அமைப்புகளை மாநிலக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. செறிவுமிக்க நமது பழைய இலக்கியங்களின் தோள்மீது நின்று கொண்டு, புதிய உள்ளடக்கங்களோடும் புதிய புதிய வடிவங்களோடும் நவீன இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் பாரம்பரியத்தில் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் இவற்றை உயர்த்திப்பிடிக்கிற கலாச்சார இயக்கம் மேலோங்கிட வேண்டும். அதற்கு கட்சியின் இந்த இயக்கம் ஒரு உந்துசக்தியாய்த் திகழும் என நம்புகிறேன்.

இதில் ‘செம்மலர்’ தீக்கதிரின் ‘வண்ணக்கதிர்’ தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடுகள், தமுஎச முயற்சிகள்… இவைபோன்ற இதர முற்போக்கு-ஜனநாயக அமைப்புகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இது இன்னும் ஆழமாக வேர்விட்டு இன்னும் பரவலாகக் கிளை பரப்பி அதன் கனிகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே எனது பேரவா.

குறுகிய வட்டத்தில் சுருங்கி நின்று விடாமல், மற்ற பல்வேறு சிந்தனைப்போக்குகள் உள்ளோரையும் நமது மேடைகளுக்கு அழைத்து, அவர்களோடு கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தி, அவர்களிடம் இருக்கக்கூடிய புதிய செய்திகளைப் பெற்று… இந்த முறையில் இப்படிப்பட்ட முயற்சிகள் தொடர வேண்டும்.

‘நூறு பூக்கள் பூக்கட்டும்’ என்பது இந்த வகையில் செயலாக வேண்டும். அந்தப்பூக்கள் அழகாக இருக்கும். நல்ல மணம் தரும்… மக்களுக்கு நல்ல கனிகளையும் தரும்.”

51. சேவைக்குப் பாராட்டு

சங்கரய்யா மாநிலச் செயலாளராகப் பணியாற்றிவரும்பொழுது 2000ஆம் ஆண்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டில்லியில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்திற்கு அவர் சென்றிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ராம் மனோஹர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரு நாட்களுக்குப்பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் சுர்ஜித் செய்த ஏற்பாட்டின்படி, டில்லியில் உள்ள ‘எஸ்கார்ட்ஸ்’ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவருக்கு இதயத்தில் அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்குப்பிறகு சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில வார கால ஓய்வுக்குப்பின் அவர் தன் பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.

2002ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தமிழ்நாடு மாநில மாநாடு கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் செயலாளர் அறிக்கையை முன்வைத்து சங்கரய்யா விளக்க உரையாற்றினார். அதேபோல், பின்னர் நடைபெற்ற விவாதங்களுக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.

இந்த மாநாடு புதிய மாநிலக்குழுவைத் தேர்ந்தெடுத்தது. ஆனால், உடல்நிலை காரணமாக தன்னை செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி சங்கரய்யா கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மாநிலக்குழு புதிய மாநிலச் செயலாளராக என்.வரதராஜனைத் தேர்ந்தெடுத்தது.

பின்னர் மாநாடு சங்கரய்யாவின் 7 ஆண்டுகால செயல்பாட்டைப் பாராட்டி பலத்த கர முழக்கத்திற்கிடையே பின்வரும் தீர்மானத்தை இயற்றியது. “தமிழகத்தின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் என்.சங்கரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் 7 ஆண்டுகள் ஆற்றிய பணிகளை இந்த மாநாடு பெருமையோடு நினைவு கூர்ந்து பாராட்டுகிறது.

“உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி, அவர் வலியுறுத்தியதை மாநிலக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், தொடர்ந்து தனது கட்சிப்பணிகளை அவர் ஆற்றுவார்.ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவப் பருவத்திலிருந்தே ஈடுபட்ட தோழர் என்.சங்கரய்யா இன்று மத்தியக்குழு உறுப்பினர் வரை கட்சியின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, சிறப்புற ஆற்றிய பணிகளை மாநாடு நினைவு கூர்கிறது.

கட்சிக்கொள்கையின் மீது அசைக்க முடியாத பற்றுடன், கட்சி விசுவாசம், கட்சிக்  கட்டுப்பாடு என்றால் தோழர் என்.சங்கரய்யா என்று கூறும் அளவிற்கு அவர் செயல்பட்டதை மாநாடு பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறது.

பொது வாழ்க்கைக்கு முன்னுதாரணமானவர், எளிமைக்கு எடுத்துக்காட்டானவர் என்கிற பெருமைக்குரியவர் தோழர் என்.சங்கரய்யா.

கடந்த ஏழு ஆண்டுகளாக கட்சியின் மாநிலச் செயலாளர் என்ற முறையில் அவர் தமிழகத்தில் கட்சிப்பணிகளுக்கு தலைமையேற்று, பணியாற்றியது பற்றி, மாநாடு பெருமை கொள்கிறது. தோழர் என்.சங்கரய்யா அவர்களது கட்சிப்பணிகளும் பொதுவாழ்வும் மேலும் சிறப்புற தொடரட்டும் என இந்த மாநாடு அவருக்கு புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

எட்டு ஆண்டு சிறை, மூன்று ஆண்டு தலைமறைவு என பெருமிதமிக்க தியாக வாழ்வுக்கு சொந்தக்காரர் நமது தோழர் என்.சங்கரய்யா. வாழ்க தோழர் என்.சங்கரய்யா! தொடரட்டும் அவரது புரட்சிகரப்பணிகள்!”

மாநாட்டின் நிறைவு நாளன்று கோவை சிதம்பரம் பூங்காவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் சுர்ஜித், சங்கரய்யா, என்.வரதராஜன் மற்றும் ஆர்.உமாநாத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

Freedom Fighter And Communist Legend N. Sankaraiah Valkkaiyum Iyakkamum Full Book And PDF. Book Day is Branch Of Bharathi Puthakalayam.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவின் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் உள்ள நூலகத்தில் சங்கரய்யா.

நிறைவாக

கட்சிக் கட்டுப்பாடு என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார் சங்கரய்யா, அதிலிருந்து கட்சி உறுப்பினர்கள் வழுவக்கூடாது என்பதில் அவர் கறாராக இருப்பார். அதில் எவ்வித சமரசத்திற்கும் சம்மதிக்க மாட்டார்.

ஒருமுறை கட்சியின் பிரபல எழுத்தாளர் ஒருவருக்கும், அவர் சார்ந்த கட்சியின் மாவட்டக்குழுவிற்குமிடையே கருத்துமாறுபாடு ஏற்பட்டது. சங்கரய்யாவும் இதர தலைவர்களும் அவர்கள் அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து விவாதித்தனர். நடந்தவைகளை கேட்டபின்பு சங்கரய்யா இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்தினார். அந்த எழுத்தாளர் முற்போக்கு எழுத்துலகிற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வருபவரென்றும் அவருக்குரிய இடத்தை கட்சியின் மாவட்டக்குழு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதே சமயத்தில் அந்த எழுத்தாளருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினார். கட்சி என்பது தனி நபரைவிட உயர்ந்தது. கட்சித் தலைமை என்பதும், அதன் முடிவுகளும் மதிக்கப்பட வேண்டும். அவற்றை அமல்படுத்த வேண்டும்.

எவ்வளவு பிரதானமானவராக இருந்தாலும், கட்சி கட்டுப்பாட்டிற்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அந்த எழுத்தாள தோழருக்கு சுட்டிக் காண்பித்து கட்சியின் முடிவை ஏற்று அமல்நடத்த வேண்டுமென்று அவரை கேட்டுக் கொண்டார்.

கட்சிக்கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் நேர்மை ஆகியவற்றை அவர் மிகவும் வலியுறுத்தினார்.

கட்சிக்கல்வி என்பதற்கும், அரசியல் வகுப்புகளுக்கும் அவர் கணிசமான பங்கை வழங்கியுள்ளார்.  1940ம் ஆண்டுகளில் தொடங்கி 1970 ஆம் ஆண்டுகள் வரை சுமார் 40 ஆண்டு காலம் பல நூற்றுக்கணக்கான அரசியல் வகுப்புகளை அவர் நடத்தியுள்ளார்.

அவர் மார்க்சியத் தத்துவம், அரசியல் பொருளாதாரம், கட்சி அமைப்பு, வர்க்கப் போராட்டம், முரண்பாடு போன்றவை குறித்து வகுப்புகளை நடத்தியுள்ளார்.

1964-66ம் ஆண்டுகளில் அவர் கடலூர் மத்திய சிறையிலிருந்த பொழுது 100க்கும் மேற்பட்ட தனது சக தோழர்களுக்கு, அன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான ‘திரிபுவாத’ப் போக்கு குறித்து விளக்கவுரை ஆற்றியுள்ளார்.

பல நாட்கள் நீடித்த அந்த சொற்பொழிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அவரது சக தோழர்கள் நினைவுபடுத்துகின்றனர்.

அவரது நினைவாற்றால் குறிப்பிடத்தகுந்தது. செய்தித்தாள்களில் முக்கியச் செய்திகளை வாசிக்கும் பொழுதும், புத்தகங்களில் சில முக்கியப் பகுதிகளை படிக்கும் பொழுதும் சற்று உரத்த குரலில் படித்து அப்படியே மனதில் பதிந்து கொள்வார். கூட்டங்களில் பேசும்பொழுது எவ்விதக் குறிப்பும் தயாரிக்காமல் அவற்றை மேற்கோள் காட்டுவார்.

விவாதங்களில் அவர் பங்கேற்கும் பொழுது, அவற்றை கூர்ந்து கவனித்து கூட்ட முடிவில் விவாதத்தின் ஒட்டுமொத்த சாராம்சத்தையும் சுருக்கமாகக் கூறிவிடுவார். அந்தளவிற்கு உன்னிப்பாகக் கவனிப்பார். அவருடைய இந்தச் செயல்பாடு குறித்து தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் மற்றும் விவசாயிகள் இயக்கத்தின் முதுபெரும் தோழரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களுள் ஒருவருமான கோ.வீரய்யன் ‘செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்” என்ற தனது வாழ்க்கை வரலாற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்:

‘கட்சி பிரிந்தபிறகு கட்சி ஸ்தாபனத்துறையில் எனக்கு உயர்கல்வியைத் தந்தவர் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும். அருமைத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் என்பதை என்னால் மறக்கவே முடியாது. அந்தக்காலத்தில் தஞ்சை மாவட்ட கட்சிக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பு இன்னும் மனதில் நிழலாடுகிறது. குழுக்களில் ஒரு பிரச்சனையை முன்மொழிவது, அதன் மீது மற்றவர்களைப் பேசவைப்பது, அதன்பிறகு அதில் நமக்கு எதிரானது எது என்று கூறி கருத்துக் கூறியவர்களைப் புரியவைப்பது, ஏற்கனவே கூறியவைகளை முன்மொழிவுடன் இணைத்து இறுதிப்படுத்துவது, மாற்றுக்கருத்து கூறியவர்கள் கூட சரிதான் என்று ஏற்கச் செய்வதன் மூலம் கட்சி கட்டமைப்புக்குள் ஒற்றுமையை பலப்படுத்துவது என்று நடைமுறை அனுபவத்துடன் இணைத்துக் கற்றுக் கொடுத்தவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள். “கட்சி ஸ்தாபனத் துறையில் தோழர் பி.சீனிவாசராவ், தோழர் சங்கரய்யா இருவரிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டது எனது கட்சி  வாழ்க்கையில் மிகப்பெரும் பலனை அளித்தது. நான் மாவட்டப் பொறுப்புகளுக்கு சென்றபோது இது எனக்கு பெரும் உதவி புரிந்தது… இது கட்சியைக் கட்டுவது, வளர்ப்பது, பாதுகாப்பது, முன்னெடுத்துச் செல்வது என்ற லட்சியத்தை நிறைவேற்ற உதவி செய்யும் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம்…”

சங்கரய்யா மிகுந்த இரக்கமும், பரிவுணர்வும் கொண்டவர். இயக்கத்தோழர்களோ அல்லது நண்பர்களோ தங்கள் துன்பதுயரங்களைக கூறும்போது கண்கலங்குவார். அவர்களுக்கு ஆறுதல் கூறி நம்பிக்கை ஏற்படுத்துவார். பிரச்சனையைத் தீர்க்க சரியான வழிவகைகளைக் கூறி அவர்களை உற்சாகப்படுத்தி அனுப்பி வைப்பார்.

அவர் தன் பழைய தோழர்களைச் சந்திக்கும் பொழுதோ, பழைய சம்பவங்களை நினைக்கும் பொழுதோ அல்லது அவற்றைக் குறித்து பேசும் பொழுதோ, தியாகிகளை நினைக்கும் பொழுதே, உணர்ச்சி வசப்படுவார். 2000ஆம் ஆண்டில் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் துவக்கத்தில் செங்கொடி ஏற்றப்பட்டு கட்சிப் பாடகர்கள் “விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா, தோழா” என்ற பாடலை இசைத்தபொழுது சங்கரய்யாவின் கண்கள் கண்ணீரால் நனைத்தன. ஏனென்றால் அப்பாடல் அவர் 1940 ஆம் ஆண்டுகளில் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக இருந்தபோது அவரது சக தோழர் டி.மணவாளன் இயற்றிப் பாடிய பாடல். 1950 ஆம் ஆண்டில் மணவாளன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவையெல்லாம் அவர் நினைவுக்கு வரவே அவர் கண்கலங்கிவிட்டார்.

இச்சம்பவத்தை படத்துடன் வெளியிட்ட ‘தினமணி’ நாளேடு “பாடலுக்கு அழுத தலைவன்” என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிட்டது. “கோவையில் திங்கட்கிழமை தொடங்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் 17வது மாநில மாநாட்டில் தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தியபோது “விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே தோழா! தோழா! என்ற பாடல் இசைக்கப்பட்டது. அப்போது மேடையில் நின்றவாறு கண்கலங்கினார். அக்கட்சியின் மாநிலச் செயலாளர் என்.சங்கரய்யா

மார்க்சீய தத்துவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட சங்கரய்யா,  தனது கூட்டங்களில் சோசலிசம் வென்றே தீரும், அதைவிட மனிதகுல மீட்சிக்கு வேறு வழியே கிடையாது என்று சூளுரைப்பார். மக்களுக்கு நம்பிக்கையூட்டுவார்.

புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தார் ‘வாய்மொழி’ வரலாறு என்ற தலைப்பில் பிரபல சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்ட நினைவலைகளை பதிவு செய்து வைத்துள்ளனர். அதில், பி.சி. ஜோஷி, பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், எம்.பசவபுன்னையா போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் போராட்ட நினைவுகளோடு சங்கரய்யாவின் சுதந்திரப் போராட்ட நினைவுகளும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. பிரபல சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் சர்மா அவர்கள் இதைப் பதிவு செய்துள்ளார்.

மார்க்சீய-லெனினியத்தைப் பாதுகாத்து அதை வளர்த்தெடுப்பதற்காகவே, தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை நடத்தி அதை மாபெரும் சக்தியாக ஆக்குவதற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1964ல் பிரிந்து வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் ஒருவர் சங்கரய்யா அந்த 32 தலைவர்களில் இருவர் மட்டுமே இன்று உள்ளனர். ஒருவர் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன், மற்றொருவர் சங்கரய்யா.

என்.எஸ். என்று தோழர்களால் அன்புடன் அழைக்கப்படும் என்.சங்கரய்யா 100ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

தேச விடுதலைக்காகவும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும் 8 ஆண்டு சிறைவாசம், 3 ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை அனுபவித்தவர் அவர். அவரது லட்சியப்பற்று, எளிய வாழ்க்கை, தோழமைக்குப் பணிவு, பரிவு ஆகிய பண்புகள் இளைய தோழர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும்.

எழுதியவர்: என்.ராமகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாயலம்

Download Pdf



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *