விடுதலைப் போராட்ட தியாகி.. நம்ம மதுரைக்கார சொர்ணத்தம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா

விடுதலைப் போராட்ட தியாகி.. நம்ம மதுரைக்கார சொர்ணத்தம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா
” சரித்திரம் என்பது வெற்றி பெற்றவர்களாலேயே எழுதப்படுகிறது”. 

இந்தியா ஆங்கிலேயர் வசம்…

  வாஸ்கோடகாமா  1498 ம் ஆண்டில் கடல் வழியே இந்தியாவுக்கு வந்தார் . இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது டச்சு மற்றும் ஆங்கிலேய வாணிக முகாம்களை  சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.  1619 ம்ஆண்டில் பிரெஞ்சுகாரர்களும்  பின்னர்  வந்தனர். அவர்களிடையே  நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவுக்கு  வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர். எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களிடம்  இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில்,  இந்த நூற்றாண்டில் இழந்தனர். 

  விடுதலைப்போரில் பெண்கள் 

  தமிழகத்தில் 17ம்நூற்றாண்டில் தோன்றிய ஆங்கிலேயக் கம்பெனியின் ஆதிக்கம்  படிப்படியாக அதிகரித்தது.  19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில்    சில பகுதிகளைத் தவிர ஒட்டு மொத்த தமிழகமும் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1947ம் ஆண்டில் இந்தியா  விடுதலை பெறும் வரை, தமிழகம் ஆங்கிலேயரின் ஆட்சியின்வசமே இருந்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்கள் வெளியேற, ஆண்கள் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் பெண்களும் இணைந்தே  போராடினர். போராடி சிறைக்கும் சென்றனர்.தமிழகப் பெண்களும் போராடி சிறைக் கொட்டடியில் வாழ்ந்தனர்.  ஆனால் அவர்களை பற்றிய பதிவு இந்திய வரலாற்றில் மிகக் குறைவாகவே உள்ளது .

இந்தியன் திரைப்படம் -மதுரைக்கார சொர்ணத்தம்மாள் 

  இயக்குநர் சங்கரின் “இந்தியன்” திரைப்படத்தில் ஒரு காட்சி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுகன்யா (நடிகை) உள்ளிட்ட சில பெண்களை ஆங்கிலேய போலீசார் கைது செய்து, அவர்களின் ஆடைகளைக் குறைத்து ஊருக்கு வெளியே இருட்டான பகுதியில் விடுவார்கள்.  திரையில் படம் பார்ப்பவர்களை பதறவைத்தக் காட்சி . ஆனால் இந்த காட்சியின் ஒரிஜினல் ஹீரோயின் மதுரைகார  சொர்ணத்தம்மாள் என்பது  மதுரைவாசிகளுக்குக்கூட தெரியாது. சொர்ணத்தம்மாளை  அவர்கள் அறிந்திருக்க வில்லைஎன்பதே உண்மை.

காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு இயக்கம். 

  மதுரை மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், சுதந்திர போராட்டத்தின்போது  துணிச்சலின்  சிகரமாக திகழ்ந்தனர்.  சொர்ணத்தம்மாள் அந்நிய துணிகளை மிதித்து, கடைகளின் முன் மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். 1942-ம் ஆண்டு  காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவங்கினார். இதன் மூலம், அவரது வேண்டுகோளான, “செய் அல்லது செத்து மடி” என்பதை உணர்வாக கொண்டு, மதுரை புறநகர் பகுதியில் தெருத் தெருவாக இறங்கி மக்களிடையே சுதந்திரத் தீயை மூட்டினார் மதுரைக்கார சொர்ணத்தம்மாள்.. ஒவ்வொரு நாளும் கைது செய்யப்படுதும், பின்னர்  ஜெயிலில் வைக்கப்படுவதும்,பின்  விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாக, தொடர் நடவடிக்கையாக  இருந்தது.

    ஆண்களுக்கு நிகராகப் போராடிய சொர்ணத்தம்மாள் 

  நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆண்களுக்கு நிகராக அதிகமாக போராடியவர் திருமிகு சொர்ணத்தம்மாள். இவர் போராட்டத்தின்போது, அடி உதையோடு பெண் என்பதால் அதிகமான அவமானங்களையும் சந்தித்தார். போலீசார் லத்தியால் அடித்ததால் அவரின் செவிமடல் கிழிந்தது; காது கேட்கும் திறனை இழந்தது.  நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழகத்தின் விடுதலைப் போராளிகளில் மதுரைக்கார சொர்ணத்தம்மாவும் ஒருவர்.  இவர் மதுரையில் கைத்தறி நெசவுத்தொழில் செய்தவர் .

    யார் இந்த சொர்ணத்தம்மாள் 

 மதுரை கடச்சனேந்தலில் வாழ்ந்தவர் சொர்ணத்தம்மாள் . விடுதலை போரில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த அடி, உதை, சிறைவாசம், சித்ரவதை ஆகியவற்றை சொர்ணத்தம்மாளும் அனுபவித்தவர்.  சுதந்திர போராட்ட தியாகி மதுரை எஸ். ஆர். என்.சேஷ பாகவதரின் மனைவிதான்,சொர்ணத்தம்மாள். சேஷபாகவதர் உறுதிமிக்க தேசியவாதி.  இவரது கோஷமும், வீர முழக்கமும் கம்பீரம் நிறைந்ததாகும்.  சேஷபாகவதர் 1930ம் ஆண்டு நடந்த கள்ளுக்கடை மறியலிலும், 1940ம் ஆண்டு நிகழ்ந்த அந்நிய துணி பகிஷ்கரிப்பிலும், 1941ம் ஆண்டு நடைபெற்ற தனி நபர் சத்தியாக்கிரகத்திலும் பங்கேற்று சிறையில் வாடி வதங்கி, வேதனை நிறைந்த  வாழ்க்கையை  அனுபவித்தவர்.  1942 ம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்று சிறை சென்றவர். அவர் கைத்தறி நெசவுக் கம்பெனியில் வேலைபார்த்தார்.   சொர்ணத்தம்மாள், தன் கணவர் பணி புரியும் கம்பெனியில் தானும் வேலை பார்த்ததோடு,கணவரின்  சுதந்திர போராட்ட உணர்வு சொர்ணத்தம்மாளையும் தீயாய் பற்றியது. சுதந்திர உணர்வு  தொற்றிக்கொண்டது. சொர்ணத்தம்மாளும் சுதந்திரப் போராட்ட ஜோதியில் கலந்தார். அப்பொழுது அவருக்கு வயது 26 மட்டுமே.  

வந்தே மாதரம் குரலும் , கைதான சொர்ணத்தம்மாளும்

நமது தேசம் சுதந்திரம் அடைய மகாத்மா காந்தி எடுத்த கடைசி ஆயுதம தான்  “வெள்ளையனே வெளியேறு” இயக்கம். இது தொடங்கிய உடனேயே  இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பற்றிக்கொண்டு பரவியது . 1942-ம் ஆண்டில்,  தென் மாவட்டங்கள் முழுக்க சுதந்திரப் போராட்ட புயல் வீசியது.  1930-களில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட கே.பி. ஜானகியம்மாள், கேப்டன் லெட்சுமி, ருக்மணி லெட்சுமிபதி, அம்மு சுவாமிநாதன், அம்புஜம்மாள், மீனா கிருஷ்ணசாமி, என்.எஸ். ருக்மணியம்மாள், நாகம்மையார் மற்றும் பத்மாசினி அம்மையார் ஆகியோர் மிகப்பெரிய சமூக, கல்வி, ஜாதி மற்றும்  பொருளாதார பின்புலம் கொண்டவர்களாய் இருந்தனர். ஆனால் மதுரை சொர்ணத்தம்மாள் தினசரி கூலி வேலை செய்யும் சாதாரண குடும்பம். அப்போதெல்லாம் கதர் சட்டை, வேட்டி சேலை அணிந்தாலே போலீசார் லத்தியைக் கொண்டு சுழற்றி அடித்து துவைப்பார்கள்  வந்தேமாதரம் என்று முணுமுணுத்தால்  லத்தியால் அடித்து துவைத்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று விடுவார்கள். 1930ம் ஆண்டு முதல்முறையாக கணவருடன் மறியல் போராட்டத்திற்குச் சென்றார் சொர்ணத்தம்மாள். வந்தேமாதரம் எனக் கோஷமிட்டார். இவர் குரல் அங்கு வந்திருந்த கூட்டம் முழுமைக்கும் உச்சஸ்தாயியில் கேட்டது. கோஷமிட்ட சொர்ணத்தம்மாளை, போலீசார் கோபம் கொண்டு  கைது செய்து ஒரு வாரம் சிறையில் அடைத்தனர்.  

சொர்ணத்தம்மாளின் தொடர் சிறை வாழ்க்கை 

 சிறைவாழ்க்கை முடிந்து, பின்னர்   விடுதலையாகி வெளியில் வந்த சொர்ணத்தம்மாள் சேஷ பாகவதர்  ஜோடி, மீண்டும் 1940ம் ஆண்டில்,  அந்நிய துணை பகிஷ்கரிப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அவர்களை காவல்துறையினர்  மீண்டும் கைது செய்து  ஒரு மாதம் சிறையில் அடைத்தனர்.  மூன்றாவது முறையாக  சொர்ணத்தம்மாள் மட்டும் கணவர் துணையின்றி மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மதுரையில் இருந்தார். பின்னர் அங்கிருந்து வேலூர் சிறைக்கு ஆறு மாதம் மேலும் அதிக சிறைத் தண்டனைக்காக  மாற்றப்பட்டார்.   “இந்த தேசம் சுதந்திரம் அடைய வேண்டும். அதற்குரிய தருணம் இதுவே. நாம் தொடர்மறியலில் ஈடுபட வேண்டும். காந்தியடிகளின் உத்தரவே வேதவாக்கு” என்ற வெளிப்படையான, வீரமிக்க கொள்கை மட்டுமே சொர்ணத்தம்மாளின் எண்ணங்களிலும், செயல்களிலும் எப்போதும்  நிறைந்திருந்தது. ஆறுமாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்ததும், மீண்டும் தயாரானார் மறியலுக்கு. 

“தியாகி சொர்ணத்தம்மாளுக்கு தான் அணியும் கதர் சேலை என்பது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம். அதை விடுதலை இந்தியாவின் கொடியாக மதித்தார். அதை அவர் பெருமையாகவும் சொல்லிக் கொள்வார். அதை அவமதிப்பதன் மூலம் சொர்ணத்தம்மாளை அடக்கிவிடலாம் என போலீசார் கருதினர்..அதன் பின்னரே அவர்மீது போலீஸ் தாக்குதல் 

    நடந்த இந்த தகவல்களை அவரே தனது வாக்குமூலமாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் (1997ல்), ஒரு பத்திரிகை  பேட்டியில் தனது சுதந்திரப்போராட்ட வாழ்க்கை குறித்து சொர்ணத்தம்மாள் கூறினார்.. 

அவர் என்னைத் திருமணம் செய்வதற்கு முன்னரே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போய் வந்தார். அப்படி நான்கு முறை அவர் ஜெயிலுக்குப் போனார். நீங்கள் மட்டும் போகிறீர்கள். நான் ஜெயிலுக்குப் போகவேண்டாமா எனக் கேட்டேன். சிரித்துக் கொண்டே என்னையும் அழைத்துக் கொண்டு போராட்டத்துக்குப் போனார். அந்த காலத்தில் “வந்தே மாதரம்” என்று சொன்னால் போலீஸ்காரர்கள் அடிப்பார்கள்.

 நாங்கள் அப்போது மதுரை சௌராஷ்டிரா ஹைஸ்கூல் பின்புறம் உள்ள வாலண்டியர் சந்தில் குடியிருந்தோம். மறியலுக்குப் போனபோது அவரையும் என்னையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு விட்டுவிட்டார்கள். மீண்டும் மறியல் செய்தோம். மீண்டும் கைது செய்து மதுரை ஜெயிலில் ஒரு மாதம் அடைத்து விட்டார்கள். அவரும் நானும் மாறி மாறி சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போனோம்.

 மூன்றாவது முறையாக மறியல் செய்தபோது என்னை கைது செய்து வேலூர் சிறையில் ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தனர். நான்காவது முறையாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் மறியல் செய்தபோது தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி என்னை கைது செய்து ஒன்றாம் நம்பர் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் வைத்தார். சிறிது நேரத்தில் லட்சுமி பாய் அம்மாவையும் கைது செய்து கொண்டு வந்தனர்.

 தீச்சட்டி கோவிந்தன் என் கதர் சேலையைச் சுட்டிக்காட்டி “யார் வாங்கிக் கொடுத்தது?” உன்னை யார் மறியல் செய்யச் சொன்னது ” எனக் கேட்டார். “யாரும் சொல்லல்ல. வெள்ளைக்காரன் நம்ம நாட்டைவிட்டு வெளியேறவேண்டும். நமக்கு விடுதலை வேண்டும்” என்று சொன்னேன். தடியால் அடித்தார். இரவு 11 மணி வரை போலீஸ்காரர்கள் என்னை அடித்தனர்.

உண்மையைச் சொல் உனக்கு சோறு போடுகிறோம்..” என்றனர். “உங்கள் சாப்பாடு வேண்டாம் நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும்..” என்றேன். நீ கட்டியிருக்கிற சேலையைக் கொடு எனச் சொல்லி அடித்தனர். தடியால் என் காதில் அடித்தபோது காது மடல் கிழிந்து ரத்தம் வந்தது. அன்றிலிருந்து எனக்கு காது சரியாகக் கேட்காது..

காவல்துறை அடியால் காது கிழிந்த சொர்ணத்தம்மாள் 

   ஒவ்வொரு சிறை விடுதலைக்குப் பின்னும், மீண்டும் மீண்டும் மறியலில் ஈடுபட்டுக் கைதாகும் சொர்ணத்தம்மாளைச் சமாளிக்க போலீஸ் நிர்வாகம் ரொம்பவே திணறியது. பெண் கைதி என்பதால் கைது, விசாரணை, சிறை என ஒவ்வொரு கட்டத்திலும் தனித்துவமான வசதியை ஏற்படுத்தி தரவேண்டிய நிலையில் இருந்ததால், போலீஸ் சொர்ணத்தம்மாளை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியது காவல்துறை நிர்வாகம். அப்படி ஒரு முறை சொர்ணத்தம்மாள் கைதான பின்னர்,  இவரையும் இவருடன் போராட்டத்தில் ஈடுபடும் லட்சுமிபாய் அம்மையாரையும் மதுரை – விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேசனுக்கு, தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி மூலம் அழைத்து வந்தனர். சற்று வேகமான விடுதலைக் கோஷமிட்ட சொர்ணத்தம்மாளை நோக்கி, போலீசார், “உன்னை மறியலில் ஈடுபடுத்தும் தலைவர் யார்? “என்று  கேட்டு அடித்துத் துவைத்தனர். காலையிலிருந்து இரவு 10 மணி வரை தடியால், செருப்பால், பெல்ட்டால், கையால், காலால் என எவ்வித பாகுபாடும் இன்றி உடலின் எல்லா இடங்களிலும் போலீசார் அடித்துக் கொண்டேயிருந்தனர். எதற்கும் துளியும் அசரவில்லை சொர்ணத்தம்மாள். ஒரு கட்டத்தில் பெரிய தடியால் காதிலும் முகத்திலும் அடிக்க ஆரம்பித்தனர் போலீசார். வலி தாங்க மடியாமல் கதறினார் சொர்ணத்தம்மாள். அப்போதும் உண்மையை போலீசிடம் சொல்லவில்லை. ஆனால் போலீசாரின் அடியால்,  அவரின்  காது ஜவ்வு கிழிந்தது. அன்றிலிருந்து சொர்ணத்தம்மாளுக்கு ஒரு காது செவிடாகிப் போனது. 

சேலை உருவப்பட்ட சொர்ணத்தம்மாளும், லட்சுமிபாயும், 

மற்றொரு முறை மறியல நடத்தியதால், சொர்ணத்தம்மாளையும் லட்சுமியம்மாளையும் காவல் நிலையத்திற்கு அடித்து இழுத்துவந்தனர்.    மறியலைக் கைவிட மாட்டேன் என்று பிடிவாதமாகச் சொன்னதால்,,சொர்ணத்தம்மாள், லட்சுமிபாய் இருவரையும்  உடுத்தியிருந்த கைத்தறி சேலைகளை உருவி கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக்கினர் ஒரு கட்டத்தில் சேலையை பிடித்து இழுத்தனர். சொர்ணத்தம்மாள் அதைத் தடுத்ததோடு அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்தார். அவரை பெல்ட்டாலும், லத்தியாலும் செருப்பாலும் அடித்தார்கள். அவர் அடிதாங்காமல் விழுந்ததும், அவர்  அணிந்திருந்த கதர் சேலையை அவிழ்த்துவிட்டு நீளம் குறைந்த, ஆளுக்கொரு தாவணி போன்ற குட்டை  சேலையை இருவரிடமும் கொடுத்து கட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.  அதனால் உடலை முழுமையாக மறைக்கமுடியாது. குட்டை சேலை, அதை கட்டிக்கச் சொல்லி, பின்  சொர்ணத்தம்மாளையும்,லட்சுமி பாயையும் ஒரு காவல்துறை லாரியின் ஏற்றினர். லாரியில் டிரைவர் உட்பட பதிமூன்று காவல்காரர்கள் அதில் இருந்தனர். ஜெயிலில் அடைக்கப்போகிறோம் எனச் சொல்லியே சொர்ணத்தம்மாள் மற்றும் லட்சுமிபாய் இருவரையும் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஜெயிலுக்குப் போகவில்லை. போலீஸ் லாரி   பல சந்துகள்பொந்துகள் மற்றும் இருட்டான பகுதி வழியாகச் சென்றது. பயம் மற்றும் துக்கம் தாங்காமல் லட்சுமிபாய் அழுதார். சொர்ணத்தம்மாளும் பயத்தில் உறைந்து போயிருந்தார்..லாரி போய் கொண்டே இருந்தது.

நடுக்காட்டில், நடுஇரவில் இறக்கிவிடப்பட்ட விடுதலைப் போராளிகள் 

லாரியின் டிரைவர், காவல்காரர் ஒருவரிடம் “எங்க நிறுத்துவது” என்று கேட்கிறார். அதற்கு அவர் இன்னும் 15  மைல் போகட்டும் என்று சொன்னபோது நேரம் இரவு மணி ஒன்று. ஒரு காட்டுக்குள் லாரி சென்றது. அங்கேயே லாரியை போலீஸ்கார்கள் நிறுத்தினர்; நிறுத்தி சொர்ணத்தம்மாளையும், லட்சுமியம்மாளையும், இரு பெண்களையும், பெண்கள் என்றும் கூட பார்க்காமல், நட்ட நடுக்காட்டில் நள்ளிரவில்  இறக்கி விடுகிறார்கள் காவல்துறையினர். அப்போது ஒரு காவல்காரர் சொர்ணத்தம்மாளிடம், “சுயராஜ்யம் வேண்டும் சுயராஜ்யம் வேண்டும் எனக் கேட்டீர்களே .. இந்த பாதை வழியாக போ.. சுயராஜ்யம் கிடைக்கும்,” என்று கூறி  இரண்டு பெண்களையும் இறக்கிவிட்டு, “ஊரை விட்டு ஓடிப்போய் எங்காவது பிழைத்துக் கொள்ளுங்கள்” எனக் கிண்டலடித்தார். மீண்டும் மதுரை எல்லைக்குள் வந்து மறியலில் ஈடுபடக்கூடாது என்று சொர்ணத்தம்மாள் மற்றும் லட்சுமிபாய் இருவரையும் எச்சரித்தும் அனுப்பினர். அதற்கும் சொர்ணத்தம்மாள்,கொஞ்சமும் பயமின்றி  “சுதந்திரத்துக்காக எந்தப் பாதையில் போகவேண்டும் என்று என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போங்கள். உங்கள் வேலை முடிந்தது..” என்றார். அதற்கும் கூட லத்தியால் செமத்தியாக அடி வாங்கினார் சொர்ணத்தம்மாள். காவலர்கள் அவர்களை நடுராத்திரில் அநாதரவான இடத்தில் விட்டுவிட்டு புறப்பட்டு விட்டனர். 

காப்பாற்றப்பட்ட சொர்ணத்தம்மாள் &லட்சுமிபாய் 

பின்னர் மனதில் சிறிதும் பயமின்றி, அரைகுறை ஆடையுடன் சொர்ணத்தம்மாள் , லட்சுமிபாயம்மாள் இருவரும் இருட்டில் நடக்க ஆரம்பித்தனர். அருகில் ஆள் நடமாட்டம் ஏதுமில்லை; வீடுகளும் இல்லை. கும்மிருட்டு. சுமார் ஒரு மைல்(1.6 கி.மீ) தூரம் சென்றதும், ஒரு  பையனும் இரண்டு பெண்களும் அவர்கள் இருவரையும் பார்த்தனர். அவர்கள் சொர்ணத்தம்மாளிடம், ” எங்கே போகிறீர்கள்?” என்று  கேட்டார்கள்.சொர்ணத்தம்மாள், இந்த காட்டுக்கு வந்த கதையை, விடுதலைப் போராட்டத்தால், தான் போலீசிடம் பட்ட அவலத்தை, கொடுமையைச் சொன்னார்கள். அதன் பின்னர், அவர்கள் சொர்ணத்தம்மாளையும், லட்சுமிபாயையும், ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்று, சாப்பிடச் சொன்னார்கள்..  படுக்கத் தலையணையும் பாயும்  கொடுத்தார்கள். சொர்ணத்தம்மாளும் லட்சுமிபாயும் எதனையும் வாங்கவில்லை ; அவர்களிடம்  ஒன்றும் வேண்டாம் எனக் கூறிவிட்டோம். “எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.” என்று பின்னாளில் சொர்ணத்தம்மாள் சொன்னார்.  இருவரையும் ஏற்றி வந்த லாரி டிரைவர் கொஞசம் கருணை உள்ளம் கொண்டவர். அதனால் அவர், சொர்ணத்தம்மாளையும், லட்சுமி பாயையும் இறக்கிவிட்ட விஷயத்தை,  மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்கனித் தேவரிடம் போய் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர் முத்துக்கனித் தேவர், அவர் கட்சிக்காரர்கள் சிலரோடு, இரவோடு இரவாக அந்த காட்டுக்கு வந்து, சொர்ணத்தம்மாளையும்,லட்சுமிபாயையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் மதுரை கீழ்பாலத்தில் இறங்கி வைகை ஆற்றில் குளித்துவிட்டு புதிய சேலையைக் கட்டிக்கொண்டனர்.  அங்கிருந்து குதிரை வண்டியில் மதுரை புதுமண்டபத்திற்கு உடன் வந்தவர்கள் கூட்டிச் சென்றார்கள். அங்கு போட்டோகடை வைத்திருந்த ராமலிங்கம் என்பவர் அவர்களுக்கு  சாப்பாடு வாங்கிக்கொடுத்தார். அவரும் சுதந்திரப்போராட்ட தியாகி. பிறகு நடந்தது குறித்த விஷயங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வந்தது. .

சொர்ணத்தம்மாள் வாக்குமூலம் 

“போலீசார் இப்படி என்னை அவமானப்படுத்திய பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வது இன்னும் அதிகரித்தது. மேடையில் காந்தி பாட்டு பாடுவேன். ஒரு முறை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் காந்திஜி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தொண்டர்களை மேடைக்கு வருமாறு காந்திஜி சொன்னார். நான் மேடைக்குப் போய் காந்திஜி காலைத் தொட்டு கும்பிட்டேன். காந்திஜி பதறிப்போய்என்னை ஏன் தொட்டுக் கும்பிடுகிறீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்?” எனக் கேட்டார்” என்று பழைய தனது நினைவுகளை  ஒரு பேட்டியின்போது  பகிர்ந்து கொண்டார் சொர்ணத்தம்மாள்.. 

இந்திய சுதந்திர பொன் விழா மலரில் 

  இந்திய சுதந்திரப் பொன்விழா  மலரில்  1997 ம்ஆண்டு, தினசரி தீக்கதிர் வெளியிட்ட கட்டுரையில், சொர்ணத்தம்மாள் அவரது  பேட்டியில் “பஸ் பாஸ், ரயில் பாஸ், பென்சன் கிடைக்கும் என்று நாங்கள் போராடவில்லை. சுதந்திரத்திற்காகத்தான் போராடினோம், சிறை சென்றோம்” என்று வீரத்தியாகி சொர்ணத்தம்மாள் கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டுமா என்று ஒரு வேளை மத்திய அரசில் ஆளுபவர்கள் கேட்டிருந்தால் கூட இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார் பாரதத்தாயின் செல்ல  மகள் சொர்ணத்தாயம்மாள்.  அவரின் இறப்பு எங்கே, எப்படி நிகழ்ந்தது என்ற தகவல் கூட நமக்குப் பதிவாக வில்லை;தெரியவில்லை. இப்படித்தான் இருக்கிறது நிறைய விடுதலைப் போராளிப் பெண்களின் நிலை ..  

 

 

– பேரா.சோ.மோகனா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *