ஃப்ரீடா மெக்ஃபேடன் (Freida McFadden) எழுதிய “நெவர் லை” (Never Lie) திரில்லர், “நியூயார்க் டைம்ஸ்”, “யுஎஸ்ஏ டுடே”, “அமேசான் சார்ட்ஸ்” ஆகியவற்றில் முதில் இடத்தைக் கைப்பற்றியது. இவருடைய புத்தகங்கள், “இன்டர்னேஷனல் த்ரில்லர் ரைட்டர் அவார்ட்”, “குட் ரீட்ஸ் சாய்ஸ் அவார்ட்” என்று பல பட்டங்களைப் பெற்றிருக்கிறது. இவருடைய புத்தகங்கள் 40 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பெண்மணி, மூளைக் காயத்திற்கான மருத்துவர்.
கதைச் சுருக்கம் – புதிதாக மணமான ட்ரிசியா மற்றும் ஈதன் தங்கள் மணவாழ்வைத் தொடங்க கனவு இல்லம் ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நகருக்கு வெளியே, மிகப் பெரிய பண்ணை வீடு விற்பனைக்கு இருப்பதாக அறிந்து அங்கு செல்கிறார்கள். அந்த வீடு புகழ் பெற்ற மனநல மருத்துவர் அட்ரியன் ஹேல் அவர்களுக்குச் சொந்தமானது. அவர் அந்த இல்லத்தில் தன்னைத் தேடி வரும் நோயாளிகளின் குறைகளைக் கேட்டு, ஆலோசனை சொல்வது வழக்கம். சில வருடங்களுக்கு முன்னால், டாக்டர் ஹேல் மாயமாக மறைந்து விட்டார். அவர் எங்கு சென்றார், கொலை செய்யப்பட்டாரா என்ற விவரமும் தெரியவில்லை. அவருடைய ஆண் நண்பர் லூக்காவையும் காணவில்லை.
ட்ரிசியா, ஈதன் அந்த வீட்டிற்குச் சென்ற அன்று மிகக் கடுமையான பனிப் புயல் ஏற்பட்டது. சாலைகள் பனிப் போர்வையில் மூழ்கியதால், அவர்களால் திரும்பிச் செல்ல முடியவில்லை. கைபேசிகள், சிக்னல் கிடைக்காமல் வேலை செய்யவில்லை. மிகப் பெரிய அந்தப் பங்களாவில் இருப்பது ட்ரிசியாவிற்குப் பயமாக இருந்தது. அவர்களைத் தவிர மற்றொரு நபர் அங்கிருப்பதாக ட்ரிசியா சந்தேகப்பட்டாள். ஆனால், ஈதன் அதை நம்பவில்லை.
ட்ரிசியா வீட்டைச் சுற்றிப் பார்த்த போது ஒரு ரகசிய அறையைக் கண்டு பிடித்தாள். அந்த அறை முழுவதும், டாக்டர் ஹேல், தன்னிடம் ஆலோசனைக்கு வரும் நோயாளிகளிடம் உரையாடியதை பதிவு செய்த ஆடியோ டேப்கள் இருந்தன. ஆர்வ மிகுதியில், ட்ரிசியா, அந்த ஆடியோ டேப்கள் சிலவற்றை, ஈதனுக்குத் தெரியாமல் கேட்கத் தொடங்கினாள். டாக்டரைப் பற்றி, அவருடைய நோயாளிகள் குறித்து பல விவரங்கள் அந்த டேப்பிலிருந்து கிடைத்தன. டாக்டர் காணாமல் போன சமயத்தில் நடந்த பல திடுக்கிடும் விஷயங்களை அறிந்து கொண்டாள்.
அந்த வீட்டில் ஒளிந்து கொண்டிருந்த மனிதரையும் அவர்கள் கண்டு பிடித்தார்கள். அது மட்டுமா? கதையின் சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை.
ஃப்ரீடா நாவல்கள் எல்லாம் “சைகலாஜிகல் த்ரில்லர்” வகையைச் சேர்ந்தது. கதையின் முடிவை யூகிப்பது சற்று சிரமம். இந்த நாவலில் கடைசியில், கதையின் ஒரு முடிச்சை அவிழ்த்தாலும், கடைசி பகுதிகளில் மற்றுமொரு எதிர்பாராத திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
தோற்றம், பேசுகின்ற விதம் ஆகியவற்றைக் கொண்டு எந்த நபரையும் நல்லவர், கெட்டவர் என்று எடை போட முடியாது. யாரையும் நம்ப முடியாது என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது இந்த திரில்லர். இந்தக் கதை சொல்லுகின்ற ஒரு நீதி, “இரண்டு மனிதர்கள் தங்களிடையே ஒரு இரகசியத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதில் ஒரு மனிதர் இறக்க வேண்டும்.”
மனநல மருத்துவர் ஹேல் நடந்தவற்றை சொல்வது, ட்ரிசியா ஆடியோ டேப்பைக் கேட்பது என்று கதையை இரு வழிகளில் கொண்டு செல்கிறார் ஆசிரியர். கதை வேகமாகச் செல்கிறது. ஒரே வருத்தம், குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறாமல் தப்பிப்பது.
த்ரில்லர் பிரியர்களுக்கு ஏற்ற நாவல்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “நெவர் லை” (Never Lie) |
| ஆசிரியர்: | ஃப்ரீடா மெக்ஃபேடன் (Freida McFadden) |
| வெளியீடு: | Penguin Random House India |
| விலை: | ₹.499 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 கே.என்.சுவாமிநாதன், |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

