ஃப்ரீடா மெக்ஃபேடன், “நியூயார்க் டைம்ஸ்”, “யுஎஸ்ஏ டுடே”, “சன்டே டைம்ஸ்” என்ற பிரபல பத்திரிகைகளினால், “சிறந்த விற்பனையுள்ள எழுத்தாளர்” என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார். “இன்டர்னேஷனல் த்ரில்லர் ரைட்டர் அவார்ட்”, “பெஸ்ட் த்ரில்லர்” என்ற பட்டங்களை அவருடைய த்ரில்லர் புத்தகங்களுக்காகப் பெற்றவர். இவருடைய புத்தகங்கள் 40 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பெண்மணி, மூளைக் காயத்திற்கான மருத்துவர்.
கதைச் சுருக்கம் – ஒற்றைத் தாய் டெகன், எட்டு மாதக் கர்ப்பிணி. மைனே நகரத்தில் மளிகை கடையில் பணி புரிகிறாள். நகருக்கு வெளியே, ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறாள். அவளுக்கு ஒரே சொந்தம் அவளுடைய அண்ணன் டென்னிஸ். அவன் பனிச்சருக்கு ரிசார்ட் ஒன்றில் பயிற்சியாளராக வேலை செய்கிறான். ஒற்றைத் தாயாக குழந்தையை வளர்ப்பதற்கு அவளுக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்கு அவள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும். அவளின் அந்த ஒரு கையெழுத்து அவளின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். அதற்கு ஆவலுடன் காத்திருக்கிறாள் டெகன். கையெழுத்திட வேண்டிய நாளன்று, அவள் மனசாட்சி குறுக்கிட, கையெழுத்திட மறுத்து, பணத்தை ஒதுக்கித் தள்ளுகிறாள் டெகன்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், நிம்மதி தேடி, அண்ணன் டென்னிஸ் வசிக்கும் இடத்திற்கு, கடும் பனிப்புயலையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய காரை ஓட்டிச் செல்கிறாள் டெகன். செல்லும் வழியில் மைனே கிராமப்புறத்தில் கடுமையான பனிப்புயலில் சிக்கி, டெகனுடைய கார் மரத்தில் மோதுகிறது. அதனால், கணுக்கால் உடைந்து வண்டியிலிருந்து இறங்க முடியாமல் தவிக்கிறாள் டெகன். அருகிலிருந்த கிராமத்தில் வசிக்கும் தம்பதி, அவளை எடுத்துச் சென்று தங்கள் வீட்டில் தங்க வைக்கின்றனர். பனிப்புயல் ஓய்ந்து, சாலையில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டவுடன், அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்வதாக அவர்கள் வாக்களிக்கிறார்கள். இவர்களால், தனக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்று அவள் உள்ளுணர்வு எச்சரிக்கிறது. நடக்க முடியாத காரணத்தால் டெகனால் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முடியாது. டெகன் காப்பாற்றப்பட்டாளா? என்பதை திடுக்கிடும் திருப்பங்களுடன் எடுத்துச் செல்கிறது இந்த நாவல்.
ஃப்ரீடா நாவல்கள் எல்லாம் “சைகலாஜிகல் த்ரில்லர்” வகையைச் சேர்ந்தது. கதையின் முடிவை யூகிப்பது சற்று சிரமம். இந்த நாவலிலும் கடைசி வரை சஸ்பென்சைக் காப்பாற்றி எதிர் பாராத முடிவை கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
கதையின் ஆரம்பத்திலே ஒரு கொலையைப் பற்றிய வர்ணனை. கொலையாளி யார், கொலை செய்யப்பட்டவர் யார் என்ற விவரங்கள், அவர்கள் ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாது. கொலையாளி செய்யும் முதல் கொலை என்பது மட்டும் புரிகிறது. இதனால் கதையைப் படிக்கும் போது, டெகன் கொலை செய்யப்படுவாளா, எதற்காக? இல்லை தன்னைக் காத்துக் கொள்ள டெகன் கொலை செய்கிறாளா? யாரை? என்ற கேள்விகள் எழுகின்றன. இதை நினைத்துக் கொண்டே முடிவிற்கு வந்தால் ஒரு எதிர்பாராத திருப்பம். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று எண்ணினாலும், பணத்தின் மேலுள்ள ஆசை மனிதனை எதையும் செய்யத் தூண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது.
இந்தக் கதை சொல்லும் முக்கிய நீதி. ஒருவரின் உருவத்தைக் கொண்டு அவருடைய குணத்தை எடை போட முடியாது. சில இடங்களில், கதை சற்றே தொய்வது போலத் தோன்றினாலும், முடிவை அறிந்து கொள்ளும் ஆர்வம் படிக்கத் தூண்டுகிறது.
த்ரில்லர் பிரியர்களுக்கு ஏற்ற நாவல்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | தி க்ராஷ் (The Crash) |
| ஆசிரியர்: | ஃப்ரீடா மெக்ஃபேடன் (Freida McFadden) |
| வெளியீடு: | Poisoned Pen Press |
| விலை: | ₹.348 |
| அறிமுகம் எழுதியவர்: |
கே.என்.சுவாமிநாதன்
|
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
